Monday, August 6, 2012

துவாரமலை இரவுகள்


Share/Bookmark
1963, செப்டம்பர் மாதம் . குன்னூர் அருகே உள்ள துவாரமலை கிராமம்... பரப்பளவிலும், மனித எண்ணிக்கையிலும் மிக சிறியதொரு ஊர். தெருக்களோட அமைந்த வீடுகள் எதனையும் காண முடியாது.. சிறு சிறு எஸ்டேட்டுகளை ஒட்டி ஐந்தாரு வீடுகள் கொண்ட குழுக்களாகவே மக்கள் வாழ்ந்து வந்தனர்... மின்சாரம் என்னும்  வார்த்தையையே அறிந்திராதவர்கள். குளிர் என்பது புதிய விஷயமல்ல.. இருப்பினும் குளிர்காலங்களில் இரவில் வாழ்க்கையை ஓட்டுவதே பெரும் பாடுதான்.  துவாரமலையில் கல்வி கற்பதற்கான எந்த  வசதிகளும் இருப்பதாக தெரியவில்லை... கிராமத்தில் இருந்த அனைவருக்கும் அங்கிருந்த எஸ்டேட் வேலைகளே உணவளித்துக் கொண்டிந்தது... எந்த அளவு மக்கள் தொகையில் குறைந்திருந்தனரோ அதே அளவு ஒற்றுமையிலும் குறைந்தே காணப்பட்டனர்.

ஒன்று பட்டு இருப்பது வருடம் ஒருமுறை நடக்கும் குலதெய்வம் மலையம்மன் பூசைக்கு மட்டுமே.. காலம் காலமாக துவாரமலை கிராம மக்களின் குலதெய்வம் இந்த மலையம்மன்... ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள ஒரு எஸ்டேட்டை ஒட்டி அமைந்திருக்கிறது இந்த குலதெய்வகோவில். பார்ப்பதற்கு மற்ற கோவில்களை போலல்லாமல் மலையமன் நிற்பது போலான ஒரு 12 அடி சிலைக்கு சிறு மேற்கூரை அமைத்திருந்தனர்..  எதிரே சில ஈட்டிகளும் சூளாயுதங்களும் தரையில் நட்டு வைக்கப்பட்டிருந்தன. எந்த அளவு கடவுள் நம்பிக்கை இருந்ததோ அந்த அளவு மூட நம்பிக்கைகளும் பில்லி சூன்யங்களும் மிகுந்திருந்த காலம் அது.

இதுபோன்ற மூடநம்பிக்கைகளில் சிறிதும் நம்பிக்கையில்லாத கடவுள் நம்பிக்கை கொண்ட ஒருவன்  ஆறுமுகம் . திருமணமாகி இரண்டு ஆண் குழந்தைகளுக்கு தகப்பன். நிலையான வாழ்க்கை வாழாமல் வேலை கண்ட இடம் வீடாக எண்ணி, அங்கங்கே வேலை செய்யும் இடங்களுக்கெல்லாம் குடும்பத்துடன் மாறிக்கொண்டிருந்த ஆறுமுகத்திற்கு  கடந்த ஆறு மாதங்களாக ஒரு நிலையான இடத்தில் வாழும்  வரத்தை அளித்தவர் திருச்சாமி அய்யா...

எஸ்டேட்பணிகளை கவனிப்பதற்காக ஆறுமுகத்தின் குடும்பத்திற்கு ஒரு சிறிய குடிலை ஏற்படுத்திக்கொடுத்து எஸ்ட்டேட்டில் தங்க வைத்திருப்பவர்.  பக்கத்து ஊர்காரான 40 வயது திருச்சாமி  6 மாதங்களுக்கு முன்னர்  இந்த எஸ்டேட்டை, இந்த எஸ்டேட்டை வைத்திருந்த தட்சிணா மூர்த்தியிடமிருந்து  குறைந்த விலைக்கு ஏமாற்றி வாங்கிக்கொண்டதாக ஊருக்குள் பரவலான பேச்சு. தட்சிணாமூர்த்தியும்  ஊரைவிட்டு சென்று விட்டதாக ஊருக்குள் செய்தி பரவியிருந்தது.

மலையம்மன் கோவிலுலிலிர்ந்து மிக அருகிலேயே அமைந்திருந்தது அந்த எஸ்டேட். பரப்பளவில் மிகப் பெரியது என்று சொல்ல முடியாவிட்டாலும் ஓரளவுக்கு பெரிய இடம் தான். அதன் ஒரு பகுதி சமதளமாகவும் எனைய பகுதிகள் மலைச்சரிவாகவும் இருந்தன.. சமதளப்பரப்பின் ஒரு சிறிய பகுதியில்  ஆறுமுகத்தின்  குடிசை. குளிர் தாங்குவதற்காக குடிசையின் பெரும்பகுதி தகரங்களாலும் மரங்களாலும்  உருவாக்கப்பட்டிருந்தது. குடிசைக்கு பின்புறம் 4 மாதங்களுக்கு முன் ஆறுமுகத்தின்  மனைவி பஞ்சவர்ணம்  நட்டு பராமரித்து வரும் மரவள்ளி கிழங்கு செடிகள் நன்கு அடந்து வளர்ந்திருந்தன. அவைகளுக்கு பின்னர் ஒரு 50 மீட்டர் நீளத்திற்கு நெடுநாட்களாக அழிக்காமல் வளரவிடப்பட்ட சில அடசலான காட்டு மரங்களை  தொடர்ந்து மலைச்சரிவு ஆரம்பிக்கிறது. வீட்டிற்கு பக்கவாட்டில் கோ வீட்டில்  வளர்க்கும்  கோழிகளை அடைக்க  சிறிய கோழி கூண்டு ஒன்று இருந்தது பகல் நேரங்களில் ஆறுமுகத்தின் மகன்களுக்கு அந்த கோழிகளை திறந்து விட்டு பார்த்துக்கொள்வதே வேலை. ஒவ்வொரு கோழிக்கும் அவர்களுக்கு pபிடித்தமான பெயர்களை இட்டு பார்த்துக் கொண்டிருந்தனர் 

ஆறுமுகத்தின்  குடும்பத்திற்கு வேலை அந்த சரிவுகளில் பயிரிடப்பட்டுள்ள தேயிலைகளை  பராமரிப்பது, தேவையான சமயங்களில் பணியாட்களை அழைத்து அவைகளை பறித்து குதிரை வண்டிகளில் ஏற்றி அனுப்பிவிடுவதே. திருச்சாமி மாதத்திற்கு ஒருமுறை எஸ்டேட்டுக்கு வந்து பார்த்தாலே பெரிய விஷயம். அவருக்கு இது மட்டுமே தொழில் அல்ல. ஆனால் எப்பொழுது வந்தாலும் ஆறுமுகத்தின்  மகன்களுக்காக எதேனும் வாங்கி வந்துவிடுவார். "உன் மகனுகளுக்காக  தான் உன்ன இங்க வச்சிருக்கேன் ஆறுமுகம் " என்று அவரே பலமுறை கூறியிருக்கிறார்.

அன்று மாலைவரை அனைத்தும் நன்றாகவே சென்று கொண்டிருந்தன. ஆறுமுகத்தின்  பெரிய மகனுக்கு வயது 9 இளைய மகனுக்கு வயது 6. வழக்கத்தை விட அன்று சூரியனை இருள் விரைவாகவே கவ்வி விட்டது. சாரலுடன் கலந்த பனி காற்று அடிக்கவே 6 மணிக்கெல்லாம் அனைவரும் வீட்டில் அடைந்தனர். ஆறுமுகம்  பராமரிக்கும் எஸ்டேட் மற்ற குடியிருப்பு பகுதிகளிலிருந்து தனித்தே இருந்தது. அடுத்த வீட்டை பார்க்க வேண்டுமானால் குறைந்தது 300 மீட்டர் தூரம் கடக்க வேண்டும். இரவு மனைவி  செய்திருந்த சோளக்கூழை குடித்துவிட்டு 9 மணிக்கெல்லாம் நால்வரும் நித்திரையில் ஆழ்ந்தனர்.

ஆழ்ந்த தூக்கத்திலிருந்த ஆறுமுகத்திற்கு  திடீரென விழிப்பு வந்தது. விழித்த கணத்திலேயே காரணத்தை உணர்ந்தான்.. இயற்கை அன்னை அடிவயிரை தட்டி எழுப்பியிருக்கிறாள். மெல்ல எழுந்து இடுப்பில்  இருந்த வேஷ்டியை ஒருமுறை அவிழ்த்து கட்டிக்கொண்டு இரண்டடி எடுத்து வைத்தான். வீட்டுக்குள் கும்மிருட்டு. மெல்ல கைகளை முன்னே வத்து தடவிச்சென்று கதவை மெல்ல திறக்க, பனிக்காற்று சுள்ளென உடம்புக்கு குளிரை கொடுத்தது, நிலவின் வெளிச்சம் போதுமானதாக இல்லை.

 மேகங்கள் நிலவொளியை தடுத்திருந்தன. நிலவின் இருப்பிடத்தை கண்டு மணி இரண்டை கடந்திருக்கலாம் என ஊகித்தான். மெல்ல மெல்ல அடியெடுத்து வைத்து குடிலின் பின்பகுதியில் மரவள்ளி கிழங்கு செடிகளுக்கு சென்று  சிறுநீர் கழித்துவிட்டு திரும்புகையில் காலில் :"நறுக்" என்று ஏதோ மிதிபட்டது. உடனே முழுவதும் காலை கீழேபதிக்காமல் சட்டென எடுத்தான். "அய்யோ,,, ஏதோ தவளையை மிதித்துவிட்டோம் போலருக்கே" என்று நினைத்துக் கொண்டு மறுஅடியை சற்று தள்ளி வைத்தான்,

மெல்ல நடந்து மறுபடி குடில் கதவை அடைய, மனதில் ஏதோ உறுத்திக் கொண்டிருந்தது, எதை மிதித்தோம். தவளையா இல்லை வேறு எதுவுமா? எதும் பாம்பாக இருக்குமோ? என ஒரே குழப்பம். சரி எதற்கும் ஒரு முறை பார்த்துவிட்டு வரலாம் என முடிவு செய்து வீட்டுக்குள் சென்று அரிக்கன் விளக்கை தேடிப் பிடித்தான். மனைவி குழந்தைகளுக்கு தொந்தரவில்லாத வண்ணம் மறுபடி வெளியேறி அரிக்கன் திரியை சற்று மேலேற்றிவிட்டு, வீட்டின் பின் பகுதியை அடைந்தான், தரையில் வெளிச்சத்தை பாய்ச்சி அங்குலம் அங்குலமாக தான் முன்பு நின்ற இடத்தில் தேட சட்டென ஒரிடத்தில் பார்வை நிலைகொண்டது.  சற்று முன்னரே வெட்டப்பட்ட ஒரு சேவலின் தலை ரத்ததுடன் அங்கு கிடந்தது. சுற்றி சில மஞ்சள் நிற செவ்வந்தி பூக்கள்.

 ஆறுமுகத்திற்கு சிறிது நேரம்  உடலிலே ஒரு மாதிரியாக ஆனது. யார் இப்படி செய்தது? ஒரு வேளை கூண்டிலிருந்து ஏதேனும் கோழி வெளியில் வந்து அதனை பூனைகள் இவ்வாறு  கொன்றிருக்குமா? அப்படியாகத்தான் இருக்க வேண்டும் என நினைத்துக்கொண்டு அருகிலிருந்த கோழிக்கூண்டை நோக்கி சென்றான். விளக்கை சற்று கீழிறக்கி உள்ளே இருந்த கோழிகளை எண்ணிப் பார்க்க 7 கோழிகளும் சரியாக இருந்தன. மறுபடியும் யோசனையாக இருந்தது. சரி எதுவாக இருந்தாலும்  காலையில் பார்த்துக்கொள்ளலாம். இதனை மனைவி எதும் பார்த்துவிட்டால்  பெரிய அமர்க்களம்செய்து விடுவாள் என்று எண்ணி, அந்த சேவலின் தலையை கையால் எடுத்து தூரமாக மலைச்சரிவில்  எரிந்தான்.

குழப்பத்துடனே வீட்டுக்கதைவை திறக்க, அரிக்கன் ஒளி பட்டு ஆறுமுகத்தின்  மனைவிக்கு லேசாக விழிப்பு தட்டியது.... தூக்கக்க லக்கத்திலேயே  "ஏன்னா..ச்சிங்க" என்றவளுக்கு "ஒண்ணும் இல்லை.... சும்மா ஒண்ணுக்கு பொய்ட்டு வந்தேன்" என்று சொல்லிவிட்டு அரிக்கைனை அணைத்துவிட்டு படுத்தான். தூக்கம் வர மறுத்தது. மூளையில் பல யோசனைகள் ஓடிக்கொண்டிருந்தன.   இதனை அப்படியே விட்டுவிடலாம் என நினைத்தாலும் ஏன் இந்த தலை இங்கு கிடந்தது? என்ற கேள்வி முன் வந்து நின்றது. தலை எப்படியோ வந்திருந்தாலும் சுற்றிக்கிடந்த பூக்கள் எப்படி?

 பூக்கள் என்றவுடன் சட்டென மூளையில் உதித்தது, சிலர் வெளியூர் பயணங்கள் செல்லும் போது மலையம்மனுக்கு நள்ளிரவு  பூசைகள் செய்துவிட்டு சொல்வதுண்டு. அப்படி ஏதேனும் பலிகொடுக்கப்பட்ட சேவல் தலையை  பறவைகள் ஏதேனும் தூக்கி வந்து போட்டிருக்கவேண்டும்.. சுற்றியிருந்த பூக்கள் ஏதேனும் மாலை நாரில் ஒட்டிக்கொண்டு வந்திருக்கலாம் என ஊகித்தான், காலையில் முதல் வேலையாக மலையம்மன் கோவிலை சென்று பார்க்கவேண்டும் என்று எண்ணிக்கொண்டே தூக்கத்தில் ஆழ்ந்தான்,
 
அடுத்த பதிவில் தொடரும்..

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

சுவாரஸ்யமாக உள்ளது... (TM 1)


என் தளத்தில் : மனிதனின் உண்மையான ஊனம் எது ?

MANO நாஞ்சில் மனோ said...

தலை எப்படியோ வந்திருந்தாலும் சுற்றிக்கிடந்த பூக்கள் எப்படி?//

திரில்லான கதையாக இருக்கிறதே...? உண்மை சம்பவமா இல்லை கதையா?

ஸோ தொடருக்கு காத்திருக்கிறேன்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...