Tuesday, August 27, 2013

மாயவலை - பகுதி 2 !!!


Share/Bookmark

முதல் பகுதியை படிக்க இங்கே க்ளிக்கவும். சில நொடிகள் ரேவதியை ஆசுவாசப்படுத்திக் கொண்டிருக்க திடீரென கரண்டும் வந்தது. பட்டென ரேவதியை பிடித்திருந்த கையை விடுவித்துக் கொண்டு வேகவேகமாக வெளியே வந்து இருபுறமும் சுற்றி பார்த்து விட்டு மொட்டை மாடிக்கு விரைந்தான். சுற்றும் முற்றும் தேட எவரும் கண்ணுக்கு அகப்பட்ட பாடில்லை. அதே வேகத்துடன் படிக்கட்டில் கீழிறங்கி ground floor ருக்கு வர, சீனிவாச ஐயர் கார் பார்க்கிங்கை ஒட்டிய கிரில் கேட்டை தாழிட்டு மூடிவிட்டு திரும்ப, எதிரில் மதன் வியர்க்க விறுவிறுக்க நின்றிருந்தான்.

“என்னாச்சி… ஏன் இப்டி உங்களுக்கு வேர்த்து கொட்றது?” என்றார்

மூச்சிரைக்க மதன் பதட்டத்துடன் “சார்… சார்…. எங்க ஃப்ளாட்லருந்து யாரோ ஒருத்தர் வெளில ஓடுனாங்க சார்”

சற்றே பதட்டத்துடன் ‘அய்யயோ… என்ன சொல்றேல்… திருடனா… இந்த ஃப்ளாட்ஸ்ல இதுவரைக்கும் திருட்டு தொல்லையே இருந்ததில்லயே…” 

“சார் அவன் திருட வந்தானா எதுக்கு வந்தான்னு தெரியல சார்… ஓடிவந்தா இந்த வழியாதான் வந்துருக்கனும்.. நீங்க எவ்வளவு நேரமா இங்க இருக்கீங்க…?”

“நா ஒரு பதினைஞ்சி நிமிஷமா இங்க தான் இருக்கேன்… யாரும் அப்டி வரலியே… “

“அப்டின்னா மாடி வழியா பின் பக்கம் ரயில்வே ட்ராக்ல குதிச்சிருப்பான்னு நெனைக்கிறேன்.. என் ஒயிஃப் வேற ரொம்ப பயந்துட்டா… சாயங் காலத்துலருந்து வீட்டுக்குள்ள யாருமே வரவே இல்லை… அதுக்கு முன்னாலயே வந்து தான் வீட்டுக்குள்ள பதுங்கியிருந்துருக்கனும். பூட்டின வீட்டுக்குள்ள எப்டி வந்தான்னு தெரியலை” என்று ஒருவித பதட்டத்துடனேயே கூறிக்கொண்டிருக்க

“பக்கத்துலதான் போலீஸ் ஸ்டேஷன் இருக்கு. காலையில ஒரு கம்ப்ளைண்ட் ரிஜிஸ்டர் பண்ணிருங்கோ… அதான் சேஃப்.. “ என்று கூறிவிட்டே மெல்ல தனது வீட்டுக்குள் சென்று கதவை சாத்திக் கொள்ள, மதன் யோசனையுடன் படிக்கட்டில் ஏறி வீட்டிற்கு சென்றான். 

வீடு முழுவதையும் இன்னொரு முறை நன்றாக அலசிப்பார்த்து விட்டு தூக்கத்திற்கு செல்ல மணி 12 ஐ தாண்டியிருந்தது. ரேவதிக்கு இன்னுமும் நடுக்கம் குறையவே இல்லை.

மறுநாள் காலை க்ரோம்பேட்டை காவல் நிலையத்தில் கம்ளைண்ட் பதிவு செய்துவிட்டு அவர்கள் கேட்ட வழக்கமான சில டெம்ளேட் கேள்விகளுக்கு பதிலளித்துவிட்டு 11 மணியளவில் வீடு திரும்பினர் மதனும் ரேவதியும். போலீஸ் காரர்களுக்கு இது பத்தோடு பதினொன்று.. அவர்கள் அனுகிய தோரனையிலிருந்தே திருடனை கண்டுபிடிக்கப்போகிற எந்த அறிகுறியும் இல்லாமலிருந்ததை மதனும் ரேவதியும் நன்றாகவே அறிந்திருந்தனர்.

மாலை 6 மணியானதும் இரண்டு நாட்களுக்கு முன்னரே சத்யம் திரையரங்க்கில் புக் செய்யப்பட்டிருந்த டிக்கெட் ஞாபகம் வர, அடுத்த இரண்டு மணி நேரத்தில் டின்னரை வழியில் முடித்துக் கொண்டு சத்யம் தியேட்டரை அடைந்திருந்தனர். படம் முடிய இரவு 12.30 ஆகிவிட்டது.
கொட்டும் பணியில் டூவீலரில் பயணம். குளிர் காதை அடைத்தது ரேவதிக்கு.

“என்னங்க… நீங்க இப்புடி ஒரு க்ளைமேட்ல இப்டி ஒரு அருவை படத்துக்கு அழைச்சிட்டு வந்ததுக்கு நேத்து வந்த திருடனே மேல்… வீட்டுலயே பேசாம இருந்துருக்கலாம்” என்று சொல்லி சிரித்துக்கொண்டிருந்தாள். வாகனங்கள் அற்ற GST சாலையில் 80 ல் பயணித்த யமகா சரியாக 30 நிமிடத்தில் ஃப்ளாட்ஸை அடைந்தது. 

முகப்பை அடைந்ததும், ரேவதி கீழறங்கி கேட்டை திறந்து விட்டு செல் ஃபோன் டார்ச்சை உயிர்ப்பித்துக் கொண்டு மாடிப்படிகளை நோக்கி நடக்க ஆரம்பிக்க மதன் யமகாவை மெல்ல போர்டிக்கோவில் ஏற்றி அதன் மூச்சை நிறுத்திக் கொண்டிருந்தான். 

மெயிண்டனென்ஸ் வேலைகளை செவ்வனே செய்யும் சீனிவாச ஐயர் அத்தனை மின் விளக்குகளையும் அணைத்து  மாடிப்படிகளை கும்மிருட்டுக்குள் மறைத்து வைத்திருந்தார். வீட்டின் சாவி ரேவதியிடமே இருக்க கதவை திறப்பதற்காக மாடிப்படிகளில் மெல்ல மெல்ல வெளிச்சத்தை பாய்ச்சி ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்தாள். ஒரு 7 படிகளி ஏறியதும் எதோ ஒரு வித்யாசமான துர்நாற்றம். எதையோ நெருப்பில் சுட்டதை போல. படிகளில் ஏதோ வித்யாசமாக இருப்பதை உணர்ந்து டார்ச்சை கூர்மையாக ஒரு படியின் மேல் பாய்ச்ச, தீயில் கருகியதை போன்ற ஒரு மனிதக் கால் தெரிந்தது. பக்கென தூக்கி வாரிப்போட மெல்ல டார்ச்சை மேலை உயர்த்த முக்கால் வாசி கருகிய நிலையில் ஒரு பெண் படிகளில் குத்துகாலிட்டு உட்கார்ந்து ரேவதியை கூர்மையான கண்ணால் வெறிக்க வெறிக்க பார்த்துக் கொண்டிருக்க…

“வீல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்”

மறுபடியும் அலறல் சத்தம் கேட்ட மதன் அலறியடித்து ஓடிவர வேக வேகமாக படிகளிலிருந்து கீழிறங்கிய ரேவதி இறுக்கமாக கட்டிக்கொண்டு
“என்னங்க படியில எதோ ஒரு…. ஒரு …..  பொண்ணு … பேய்….. பேய்யி…… “ நாக்கு குழறியது.

அவள் கையிலிருந்த டார்ச்சை வேகமாக பிடுங்கிக்கொண்டு விறு விறுவென மாடிப்படிகளில் தேடிக்கொண்டே ஏறி மேல் வீட்டு வாசற் படி அருகிலிருந்த சுட்சை உயிர்ப்பிக்க பளீரென மின் விளக்கு ஒன்று உயிர் பெற்று, மாடிப்படிகளை தெளிவாக கண்ணுக்கு காட்டியது. 

எவரும் இருந்ததற்கான அறிகுறி கூட மாடிப்படிகளில் தென்படவே “ ரேவதி… ரேவதி… யாரும் இல்லை பாரு… மேல வா” என கூப்பிட மெல்ல பயத்துடனே ரேவதி மேலேரி வந்து சரியாக ஒரு படிக்கட்டை சுட்டி காண்பித்து “என்னங்க சத்தியமா இங்க தாங்க பத்தேன்… எதோ நெருப்புல கருகுண மாதிரி முகத்தோட ரொம்ப கொடுரமான முகத்தோட தலைய விரிச்சி போட்டுகிட்டு ஒரு பொண்ணு இங்க இருந்துச்சிங்க… நிஜமா” என தான் கண்ணால் கண்டதை மெய்ப்பிக்க முயற்சி செய்தாள். 

“ரேவதி… நீ நேத்து நடந்த சம்பவத்தால ரொம்ப கொழம்பி போயிருக்க… வா கொஞ்ச நேரம் நிம்மதியா வந்து படுத்து தூங்கு… எல்லாம் சரியாயிடும் “ என மதன் அழைக்க கண்களின் ஓரத்தில் லேசான கண்ணீர் எட்டிப்பார்க்க மாடிப்படிகளையே திரும்ப திரும்ப பார்த்துக்கொண்டு மேலேறி வீட்டுக்குள் செல்லும் போது அருகிலிருந்த வீட்டை பார்க்க அதில் தொங்கிக் கொண்டிருந்த பெரிய பூட்டு ரேவதியை பார்த்து புன்னகைத்தது. 

படுத்த 7 வது நிமிடம் மதன் நித்திரையின் ஆழ்ந்தான். ரேவதிக்கு மட்டும் ஏனோ தூக்கம் வர மறுத்தது. நேற்று நடந்த சம்பவமும் இன்று படிக்கட்டில் பார்த்த பெண்ணின் முகமும் மாறிமாறி மனதில் வந்துபோனது. நேரம் போனதே தெரியவில்லை,. தூக்கம் கண்களில் எட்டிப்பார்க்க மறுத்த நேரத்தில் தொண்டை தாகத்தால் வறண்டிருந்து. மெதுவாக எழுந்து அருகிலுந்து டைம் பீஸை பார்க்க அது நள்ளிரவு மணி 3.20 ஐ காட்டிகொண்டிருந்தது. 

மெல்ல எழுந்து மின்விளக்குகளை உயிர்ப்பித்து விட்டு கிச்சனை நோக்கி நடந்து ஃப்ரிட்ஜினிலிருந்து பாட்டிலை எடுத்து ஜில்லென ஐஸ் வாட்டரை தொண்டைக்கு கொடுத்தாள். தாகம் அடங்கிய பின்னர் ஃப்ரிட்ஜை மூடி விட்டு திரும்ப, ப்ரிட்ஜ் கதவு மூடும் சப்தத்தை தொடர்ந்து “டொங்” என்ற சத்தமும் சேர்ந்து கேட்டது. சிறிது நேரம் அமைதியானாள். 10 வினாடி இடைவெளியில் மறுபடியும் ஒரு சத்தம்..”டொங்….” ஒரு வேளை பின்புறமிருக்கும் தண்டவாளத்தில் எவரேணும் அடிக்கின்றனரா என பார்க்க கிச்சன் கதவை திறக்க மறுபடியும் “டொங்ங்” என்ற சப்தம் கேட்டது. 

ஆனால் அது தண்டவாளத்திலிந்து வரவில்லை என்பது மட்டும் உறுதியானது. கதவை மெல்ல சாத்திவிட்டு அடுத்த ஒலிக்காக காத்திருந்தாள். சில வினாடிகளில் “டொங்ங்ங்”…….  சந்தேகம் வலுத்தது.
மெதுவாக நகர்ந்து காதை மெல்ல இரண்டு வீட்டிற்கும் பொதுவான அந்த  சுவற்றின் மேல் வைத்தாள். 

“டொங்ங்க்ங்ங்ங்ங்ங்ங்ங்” என்ற சத்தம் கணீரென கேட்க ‘நிச்சயமாக சப்தம் பூட்டப்பட்டு அருகிலிருக்கும் அந்த மூணாவது வீட்டிலிருந்துதான் வருகிறது என்பதை உறுதிப்படுத்துக் கொண்டாள். நன்றாக உன்னிப்பாக சுவற்றில் காதை வைத்து கேட்க சீரான இடைவெளியில் சப்தம் கேட்டுக் கொண்டே இருக்க, எதோ ஒரு சுவற்றையோ அல்லது தளத்தையோ உடைக்கிற சப்தம் தான் அது என்பது மட்டும் சரியாக தெரிந்தது. கூடவே அடிவயிற்றில் உச்சகட்ட பயமும் தொற்றிக்கொள்ள வியர்த்து கொட்ட ஆரம்பித்திருந்தது.

அடுத்த பதிவில் தொடரும்….

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

2 comments:

gita said...

Seekiram adutha padhiva podunga boss semmaya irukku

selvasankar said...

SUpER, WAITING FOR NEXT EpISODE THALA

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...