
முதல் பகுதியைப் படிக்க இங்கே க்ளிக்கவும். இரண்டாவது பகுதியை படிக்க இங்கே க்ளிக்கவும். இரண்டு நிமிடத்திற்கு
மேல் ரேவதியால் அங்கு நிற்க முடியவில்லை. கால்களில் லேசான நடுக்கம் வேறு தொற்றிக்கொண்டது.
மெல்ல பெட்ரூமிற்கு சென்று “மதன்…. மதன்…” என மெல்லிய குரலில் எழுப்ப மதன் “ம்ம்ம்ம்ம்ம்…”
என முனகிவிட்டு மறுதூக்கத்திற்கு சென்றுவிட்டான். உடனே அறைகதவை நன்கு தாழிட்டு போர்வையை
இறுக போர்த்திக்கொண்டு மதனுக்கு மிக அருகில் படுத்து உறங்க முயற்சி செய்தாள்.
காலை 9 மணி…. ரேவதி
நடந்ததை கூற மதன் ஒன்றும் புரியாமல் விழித்துக் கொண்டே “என்ன ரேவதி… அந்த வீட்ல இருக்கவங்க
U S போயி ஒரு வருஷம் ஆச்சாம். வெளியில தொங்குற பூட்ட நீயும் தான பாக்குற. இப்போ இதுமாதிரி
பூட்டின வீட்டுக்குள்ளருந்து சத்தம் வருதுன்னா யாரு நம்புவாங்க சொல்லு… நீ எதோ நல்லா
பயந்துருக்கன்னு நெனைக்கிறேன்”
“என்னங்க… சத்யமா
நா கேட்டேங்க… கிட்டத்தட்ட 5 நிமிஷம் நின்னு சுவத்துல காது வச்சி கேட்டேன். அது எதேச்சையா
கேட்ட சத்தமோ இல்லை வேற எங்கிருந்து வந்த சத்தமோ இல்லை… நிச்சயமா அந்த வீட்டுக்குள்ளருந்து
தான்.. எனக்கென்னவோ அந்த வீட்டுல எதோ தப்பு இருக்க மாதிரியே தோணுதுங்க”
“சரி ஒண்ணு பண்ணுவோம்…
அந்த பூட்டின வீட்டுக்கு நேர் கீழதான் சீனிவாசன் சார் வீடு இருக்கு. ஒரு வேளை அந்த
வீட்டுக்குள்ளருந்து யாராவது உடைச்சிருந்தா நமக்கு கேட்டத விட அவங்க வீட்டுக்கு தான்
அதிகமா சத்தம் கேட்டுருக்கும்.. ஏன் டவுட்டு… இரு அவரையே கேட்டுடலாம்…” என்று கூறிவிட்டு
வேக வேகமாக படியிறங்கி சீனிவாச ஐயர் வீட்டு காலிங் பெல்லை அழுத்தினான்.
மூன்று முறை
விட்டு விட்டு அழுத்திய பின்னர் அரை தூக்கத்தில் தண்ணீர் ஊற்றி எழுப்பி விட்டதை போல
கண்ணை கசக்கிக் கொண்டே கதவை திறந்து
“என்ன சார்… காலங்காத்தாலையே…
ஃப்ளாட்ல ஜலம் வர்லியா… நேத்து நைட்டே டாங் ஃபுல் பண்ணிதானே வச்சிருந்தேன்” என்க
“சார் அது இல்லை
சார்… ஒரு முக்கியமான விஷயம்… அதான்..” என்றான் மதன்.
“சத்த இருங்கோ”
என்று உள்ளே சென்றவர் சரியாக 5 நிமிடத்தில் முகம் அலம்பிவிட்டு அரைகை பணியனுக்கு மாறி
பார்க்கிங்கிற்கு வந்து “சொல்லுங்கோ சார்… என்ன சமாஜாரம்? என்றார்.
சார் கேக்குறேன்னு
தப்பா நெனைச்சிக்காதீங்க… “நேத்து மிட் நைட்ல என் ஒயிஃப் கிச்சனுக்கு தண்ணி குடிக்க
போகும் போது பக்கத்து வீட்டுல எதோ சத்தம் கேட்டதா சொல்றா… அதான் உங்களுக்கு எதாவது
அப்டி கேட்டுச்சான்னு கேக்கலாம்ன்னு வந்தேன்…”
“என்ன உளருரேல்…
அந்த ஆத்துலதான் ஒரு வருஷமா மனுஷாலே இல்லையேன்னோ… பூனை கீனை எதும் உள்ள போறதுக்கு கூட எந்த
ஓப்பனிங்குமே இல்லை… எல்லா விண்டோஸுமே க்ளோஸ்டா தான் இருக்கு… “
“சார்… அது மட்டும்
இல்லை நேத்து மிட் நைட்ல நாங்க படம் பாத்துட்டு வரும்போது படில கூட யாரோ உக்கார்ந்துருந்த
மாதிரி என் ஒயிஃப் பாத்துருக்காங்க சார்… அதான் ஒரு டவுட்… “
“சார் நீங்க சொல்றதெல்லாம்
நேக்கு ரொம்ப புதுசா இருக்குறது. நான் இங்க பதினைஞ்சி வருஷமா நாங்க இந்த ஆத்துலதான்
இருக்கோம். இதுவரைக்கும் எந்த ப்ராப்ளமும் வந்ததில்லை”
“சார் நானும்
7 வருஷமா இன்னொரு ஃப்ளாட்லதான் தான் இருந்துட்டு வரேன். நானும் இது மாதிரி யார்கிட்டயும்
போய் சொல்லிகிட்டெல்லாம் இருந்ததில்லை. இங்க நாங்க வந்த டே ஒன்லருந்து எதேதோ ப்ராப்ளம்
வருது. அதான் கேட்டுட்டு போலாம்னு வந்தேன். சார்.. அந்த வீட்டோட கீ எதாவது உங்ககிட்ட
இருக்கா? ஜஸ்ட் கன்ஃபார்ம் பண்ணிக்கிரதுக்காக ஒரு தடவ ஓப்பன் பண்ணி பாக்கலாமா?” என
மதன் கேட்க
பதட்டத்துடன் “சார்…
என்ன சார் இப்டி கேக்குறேள்… என்கிட்ட அவா கீ எல்லாம் கொடுத்துட்டு போகலை… இதுமாதிரியெல்லாம்
கேட்டு என்ன வம்புல மாட்டி விட்டுடாதீங்க சார். “ என சொல்லிக் கொண்டிருக்கையில் வீட்டு
வாசலில் சயரன் வைத்த ஒரு பொலேரோ வந்து நின்றது.
உள்ளிருந்து இரண்டு காவல்துறை அதிகாரிகள்
இறங்கி வந்து
“இங்க மிஸ் ரேவதிங்கறது
யாரு?”
மதன் பயம் கலந்த
பதற்றத்துடன் ‘எ…. என்னோட ஒயிஃப் தான் சார்… என்ன விஷயம்?”
“இல்லை இன்னிக்கு
காலையில அவங்க ஸ்டேஷனுக்கு கால் பண்ணி இங்க பக்கத்து ஃப்ளாட்ல எதோ ப்ராப்ளம் இருக்கதா
சொன்னாங்க. அதான் விசாரிச்சிட்டு போகலாம்னு வந்தோம்” என்ற இன்ஸ்பெக்டர் ரவிகுமார்.
சிவப்பான தோற்றத்துடன் தொப்பையை தொலைத்து ஆரம்ப கால சரத்குமாரை ஞாபகப் படுத்தினார்
“சா… சார் … அதெல்லாம்
ஒண்ணும் பெரிய ப்ராப்ளம் இல்லை சார். இப்ப தான் புதுசா குடி வந்துருக்கோம்… கொஞ்சம்
டிஸ்டர்ப் ஆயிருக்காங்க அவ்ளோதான் “ என மதன் சமாளிக்க முயல..
“சாரி மிஸ்டர்..
உங்க நேம் என்ன?”
“மதன் சார்”
“மிஸ்டர் மதன்
உங்க மனைவி எதோ ரொம்ப நாளா ஐடிலா இருக்க ஒரு வீட்டுக்குள்ளருந்து சத்தம் கேக்குதுன்னு
கம்ப்ளைண்ட் பண்ணிருக்காங்க. போனமாசம் ஹைதராபாத்ல நடந்த டெரரிஸ்ட் அட்டாக் ஞாபகம் இருக்குல்ல.
தீவிரவாதிங்க இந்த மாதிரியான ஒரு வீட்டுக்குள்ள தான் ரொம்ப நாள பதுங்கி இருந்துருக்காங்க.
அதனால மேலிடத்துலருந்து இந்த மாதிரி ஐடில் ஹோம்ஸ் எது இருந்தாலும் ஸ்பெஷல் இம்பார்ட்ன்ஸ்
குடுக்க சொல்லிருக்காங்க. அதான்.. உடனே வந்தோம். அந்த ஃப்ளாட் எங்க இருக்கு..” என கேட்க
“சார் என் பேர்
சீனிவாச ஐயர்… 15 வருஷமா இந்த ஃப்ளாட்ஸ்லதான் இருக்கேன்… மெயிண்டனன்ஸ் மொத்தமும் நா
தான் பாத்துண்டுருக்கேன். இவா சொல்ற ப்ராப்ளம் இதுவரைக்கும் இங்க நாங்க ஃபேஸ் பண்ணதே
இல்லை” என வழவழக்க
“சார்… அந்த ப்ளாட்
எங்கன்னு காமிங்க சார்” என்று கொஞ்சமும் அவர் பேச்சை காதில் வாங்கிக்கொள்ளாமல் ரவிகுமார்
முன்னே செல்ல காண்ஸ்டபிள் தங்கதுரை பின் தொடர்ந்தார். தங்கதுரை பார்த்த மாத்திரத்தில்
நம்மூர் போலீஸென அடையாளம் கண்டுகொள்ளும் வகையில் டிபிகல் தொப்பையுடனும் கருப்பு வெள்ளை
கலந்த நரை முடியுடனும் லேசாக வி.கே.ராமசாமியை ஞாபகப்படுத்தினார்.
மதன் விறுவிறுவென
மேலே அவர்களுக்கு முன்னரே மேலே சென்று ரவிகுமார் படியேறிக்கொண்டிருக்கும் போதே பூட்டு
தொங்கிக் கொண்டிருந்த அந்த கதவை நோக்கி கையை நீட்டி “இது தான் சார் அந்த ப்ளாட்” என்றான்.
ஒரு நிமிடம் அந்த வாயிற் கதவை மேலும் கீழுமாக பார்த்துவிட்டு “தங்கதரை…” என கூப்பிட்டு
வெளிநோக்கி ஒரு கண்ணசைவை காட்டினார்.
“ஓக்கே சார்” என
கூறிவிட்டு தங்கதுரை படியிறங்கி கீழே செல்ல இன்ஸ்பெக்டர் ரவிகுமார் ரேவதியை அழைத்து
விபரங்களை கேட்டறிந்தார். ரேவதி சுட்டிக்காட்டிய அந்த சத்தம் கேட்ட இடத்தையும் பார்வையிட்டு
வெளிப்புறமும் பார்வையை ஓடவிட்டுக் கொண்டிருந்தார். சரியாக ஐந்து நிமிடத்தில் தங்கதுரையின்
குரல் கேட்டது.
“சார் ப்ளாட்ட
சுத்தி பாத்துட்டேன் சார். ஃபுல்லா sealed சார்.. முன்பக்கத்துல இருந்தோ இல்லை சைடுலருந்தோ
இந்த ஃப்ளாட்குள்ள யாரும் போக முடியாது. பின் பக்கம் மட்டும் சிட் அவுட் மாதிரி ஒரு
இடத்துல க்ரில் போட்டு லாக் பண்ணிருக்கு. ரயில்வே ட்ராக் பக்கம் இருந்து யாராது உள்ள
போக முயற்சி பண்ணலாம். ஆனா அதும் அவ்ளவு ஈஸி இல்லை. Well trained ஆளுங்க மட்டும் தான்
முடியும். இப்ப இருக்க கண்டிஷன்ல அந்த வழியா யாரும் உள்ள போனதுக்கான எந்த தடயமும் இல்லை.
“ என ஐந்து நிமிடத்தில் தான் வெளியிலிருந்து அலசியதை ரவிகுமாரிடம் ஒப்புவித்தார்.
“குட்… so, உள்ள
ஒரு வேளை ஆளுங்க நடமாட்டம் இருந்தா அவங்க வெளியிலருந்து வர வாய்ப்பே இல்லை. இந்த மெயிண்
டோர் வழியாதான் போகனும். இந்த டோர் கீ உங்க யார் கிட்டயாது இருக்கா? இந்த ஃப்ளாட்டோட
ஓனர் யாரு? இப்போ எங்க இருக்காரு?” என மற்றவர்களை பார்த்து கேட்க
“சார் இந்த ஹவுஸ்
ஓனர் பேரு ஆனந்த். அவரும் அவரு ஒயிஃபும் இங்க இருந்தங்க. ஒன் இயர் முன்னால அவர கம்பெனிலருந்து
யு.எஸ் அனுப்பிட்டாங்க” என்றார் சீனிவாச ஐயர்.
“அவரோட இப்பவும்
டச்ல இருக்கீங்களா? உங்களுக்கு ஃபோன் பன்னுவாரா?”
“இல்ல சார். ஒருமுறை
கூட பண்ணதில்லை.. நம்பர் எதுவும் நேக்கு தெரியலை. ஒரு வேளை அவரு கம்பெனில கேட்டா தெரிய
வாய்ப்பு இருக்கு”
“அவர் எந்த கம்பெனில
ஒர்க் பன்றார்”
“ “ ன்னு ஒரு கம்பெனி
சார் என கூற
“தங்கதுரை நீங்க
உடனே அந்த கம்பெனிக்கு போய் ஆனந்த் காண்டாக்ட் டீடெய்ல்ஸ் , ஃபோன் நம்பர் எதாது கெடைக்குதான்னு
பாருங்க.” என்றார் ரவிகுமார்.
“ஓக்கே சார்”
“ஓக்கே நாங்க அவரோட
காண்டாக்ட் பண்ணி பேசிட்டு எதாது ஆப்ஷன் இருக்கானு பாக்குறோம். அவரோட பர்மிஷன் இல்லாம
வீட்டுக்குள்ள நாம போறது சட்டப்படி தப்பு… “ என கூறிக்கொண்டே ரவிகுமாரும், தங்கதுரையும்
கீழிறங்கி பொலேரோவில் புறப்பட்டது தான் தாமதம்.
“ரேவதி உனக்கு
கொஞ்சமாது அறிவு இருக்கா… உன்ன யாரு போலீஸ்க்கெல்லாம் போக சொன்னது… இப்போ பாரு அந்த
கீழ்வீட்டு ஐயரு ஓவரா பேசுறாரு” என பொறிந்தான் மதன்.
“இல்லீங்க நேத்து
ஸ்டேஷன் போகும்போது அங்க இருந்த ஒரு மேடம் தான் என்ன ப்ராஃப்ளம்னாலும் உடனே கால் பண்ணுங்கன்னு
நம்பர் குடுத்தாங்க. விஷயம் ரொம்ப சீரியசானதால தான் நான் நீங்க எழுந்திரிக்கிறதுக்கு
முன்னாலயே அவங்களுக்கு கால் பண்ணி சொல்லிருந்தேன்.
மதன் கோவமான முகத்துடன்
டவளை எடுத்துக்கொண்டு பாத்ரூமிற்குள் சென்று கதவை படார் என சாத்தினான்.
டிவிஎஸ்
எக்ஸெலை நிறுத்திவிட்டு தங்கதுரை ஸ்டேஷனுக்குள் நுழையும் போது மணி மாலை 5. நேராக இன்ஸ்பெக்டர்
ரவிகுமார் டேபிளுக்கு சென்று
“சார்
அந்த கம்பெனில விசாரிச்சிட்டு வர சொன்னீங்கல்ல சார்”
“ஆமா…
என்னாச்சி… அவர் காண்டாக்ட் நம்பர் எதாது கெடைச்சிதா?”
“சார்
ஒரு சின்ன ப்ராப்ளம்… “ என தங்கதுரை இழுக்க
“ப்ராப்ளமா
என்ன ப்ராப்ளம்?”
“சார்
ஆனந்த்த பத்தி விசாரிச்சதுல கம்பெனி மேனேஜ்மெண்லருது எந்த சரியான தகவலும் இல்லை… ஸ்டாஃப்ஸ்
சில பேருகிட்ட பர்ஸனலா விசாரிச்சி பாத்ததில ஒரு விஷயம் சொன்னாங்க… ஆனந்த்த கம்பெனிலருது
U S க்கு அனுப்பவே இல்லையாம். அவர் மேல எதோ பெரிய கம்ப்ளைண்ட் இருந்ததால அவர ஒரு வருஷத்துக்கு
முன்னாலயே கம்பெனிய விட்டு தூக்கிட்டாங்களாம் சார்” என தங்க துரை கூறிக் கொண்டிருக்க
இன்ஸ்பெக்டர் ரவிகுமாரின் முகம் மெல்ல மாறத் தொடங்கியது.
அடுத்த பதிவில் தொடரும்
4 comments:
adutha twista, super. thodarum
Enga boss pudikareenga indha pei photosa. Semma.
intresting.. waiting for next part ..
Sema interesting.. Continue..
Post a Comment