Friday, August 30, 2013

மாயவலை - பகுதி 4 !!!


Share/Bookmark

முதல் பகுதி இரண்டவது பகுதி மூன்றாவது பகுதி. தங்கதுரை கூறியதை உன்னிப்பாக கேட்டுக்கொண்டிருந்த ரவிக்குமார் சிறிது நேர மெளனத்திற்குபிறகு  “அந்த ஃப்ளாட்ல ஆனந்த்த நல்லா தெரிஞ்சவங்க யாரு?”

“கீழ் ஃப்ளாட்ல இருக்க இன்னொரு ஃபேமிலி 6 மாசம் முன்னாடி தான் வந்துருக்காங்க சார். அதே மாதிரி மே ஃப்ளாட்ல நம்மகிட்ட கம்ப்ளைண்ட் பண்ணவங்களூம் வந்து ஒரு வாரம் தான் சார் ஆச்சி. அந்த ப்ளாட்லயே ஆனந்த நல்லா தெரிஞ்சவரு சீனிவாச ஐயர் தான் “

“அந்தாள இன்னும் அரை மணி நேரத்துல ஸ்டேஷனுக்கு வர சொல்லுங்க”

“ஓக்கே சார்”

காவல் நிலையத்திலிரிந்து போன் செய்த அடுத்த 20 வது நிமிடத்தில் பேந்த பேந்த விழித்தபடி சீனிவாச ஐயர் ஸ்டேஷனில் ரவிகுமாருக்கு முன்னால் இருந்தார். 

“மிஸ்டர் ஐயர்.. உங்களுக்கு எவ்ளோ நாளா ஆனந்த தெரியும்.”

“ஒரு ரெண்டு மாச பழக்கம் தான் சார். அவர் புதுசா அந்த ஃப்ளாட்ட வாங்கிட்டு போன வருஷம் தான் வந்துருந்தார். ரெண்டு வாரத்துலயே நல்லா பேசி பழகிட்டார். அவருக்கு பேரண்ட்ஸ் யாரும் கெடையாது. ஊர்ல இருக்க நிலத்தையெல்லாம் வித்துட்டு இந்த ஃப்ளாட்ட வாங்கிருக்கதா சொன்னார்” 

“அவர் U S கெளம்பிட்டதா சொன்னீங்களே.. உங்களுக்கு எப்டி தெரியும்?”

“அவர் தான் சொல்லிண்டுருதார். அவரும் அவரோட ஒயிஃபும் U S போக போறதா சொன்னார். அப்புறம் ஒரு தடவ பாக்கும் போது இன்னும் ஒன் வீக்ல கெளம்பிடுவோம்னார். ரெண்டு நாள்லயே நாங்க கும்பகோணம்  என் ஆத்துக்காரி வீட்டுக்கு போய் நவகிரக தரிசனம் முடிச்சிட்டு ten days கழிச்சி வர்றச்சே வீட்டு பூட்டியிருந்தது. அதான் அவர் கெளம்பிட்டாருன்னு சொன்னேன்”

“ஹ்ம்ம்ம்ம்… அப்போ அவர் U S போனதுக்கு எந்த சாட்சியும் இல்லை. சரி அவர் போயி ஒண் இயர் ஆயிடுச்சே அவர் பேருக்கு எதாது லெட்டர், கிரெடிட்கார்ட் பில்ஸ்…etc இதுமாதிரி எதாது வந்துருக்கா.. இல்ல அவர தேடிட்டு யாராது வந்தாங்களா?”

“நேக்கு தெரிஞ்சி அந்த மாதிரி எதும் வரலை. யாரும் தேடிண்டும் வரலை” 

“சரி நீங்க போகலாம்” என்ற உடன் தப்பித்தோம் பிழைத்தோமென காற்றாக வீட்டுக்கு பறந்தார் ஐயர். 

“தங்கதுரை… இது என்னவோ ரொம்ப க்ரிட்டிகல் கேஸ் மாதிரி தெரியிது. நீங்க இன்னும் கொஞ்சம் டீப்பா இறங்கி சில டீடெய்ல்ஸ் எடுக்கனும். அப்பதான் நாம அந்த வீட்டுக்குள்ள போக பர்மிஷன் வாங்க முடியும். நீங்க முக்கியமா பண்ண வேண்டியது ஆனந்தோட பாங்க் டீடெய்ல்ஸ், பாஸ்போட்ர்ட் ID டீடெய்ல்ஸ் எப்டியாவது அவங்க கம்பெனிலயோ இல்ல ஃப்ரண்ட்ஸ்கிட்டயோ கலெக்ட் பண்ணுங்க.  அவர் அக்கவுண்ட் வழியாவோ இல்ல ஏடிஎம் கார்டு மூலமாவோ ரீசண்ட்டா எதாவது transactions இருக்கான்னு செக் பண்ணுங்க. 

அந்த பாஸ்போர்ட் டீடெய்ல வச்சி கடைசியா எந்த கண்ட்ரில செக் இன் ஆயிருக்குன்னு பாருங்க. சீனிவாச ஐயர்கிட்ட அவங்க கும்பகோணம் போன டேட்ஸ வாங்கிட்டு அந்த டைம் பீரியட்ல US க்கு ஆனந்த் ட்ராவல் பண்ணிருக்காரான்னு பாருங்க. எவ்ளோ சீக்கிரம் நீங்க டீட்டெய்ல் கலெக்ட் பண்றீங்களோ அவ்ளோ நல்லது. இந்த டீடெய்ல்ஸ் கலெக்ட் பண்றதுல எதாவது ப்ராப்ளம் இருந்தா உடனே என்ன காண்டாக்ட் பண்ணுங்க.” என மூச்சுவிடாமல் ரவிகுமார் பேசி முடிக்க

“ஓக்கே சார்… ஒரு ரெண்டு நாள்ல மொத்த டீட்டெய்ல்ஸும் கலெக்ட் பண்ணிடுறேன் சார். “ என கூறி விட்டு தங்கதுரை வேலையை ஆரம்பித்தார்.

ஒரு வழியாக மதனும் ரேவதியும் ஒரு நாள் ஊடலுக்கு பிறகு சமாதானம் ஆகியிருந்தனர். ரேவதி இன்னும் ஒரு வித பயத்திலேயே இருக்க அவ்வப்போது மதன் எதாவது பேசி டைவர்ட் செய்து கொண்டிருந்தான். 

சரியாக இரண்டு தினங்கள்.. மதியம் இரண்டு மணிக்கு தங்க திரை நெத்தி வியர்வையை துடைத்துக் கொண்டே ஸ்டேஷனுக்குள் வந்தார்.
எதிர்பார்த்து காத்திருந்த ரவிகுமார்

 “என்ன சார்… எதாவ்து டீடெய்ல்ஸ் கலெக்ட் பண்ணீங்களா? எனிதிங் யூஸ் ஃபுல்?”

“கிட்டத்தட்ட எல்லா டீடெய்லுமே கலெக்ட் பண்ணிட்டேன் சார். “
“ம்ம்… சொல்லுங்க”

“சார் முதல் விஷயம் ஆனந்தோட பாஸ்போர்ட் டீடெய்ல்ஸ் செக் பண்ணி பாத்தப்போ இதுவரைக்கும் ஒரு தடவ கூட எந்த ஃபாரின் எண்ட்ரிஸூம் இல்லை… அதனால அவரு US பொய்ட்டாருங்கரது முதல் பொய்… கண்டிப்பா இந்தியாவ கடந்து அவரு எங்கயுமே போகல.. அவர் ஒயிஃபோட டீடெய்ல்ஸ் எதுவும் கிடைக்கல…

“ம்ம்ம்”

“அப்புறம் கடந்த ஒரு வருஷமா அவரோட பேங்ல எந்த ட்ரான்ஸாக்ஷனுமே நடக்கல. ஆனா அதுக்கு முன்னால அவரோட ட்ரான்ஸாக்ஷன கொஞ்சம் செக் பண்ணி பாக்கும் போது ஒரு விஷயம் நெருடலா இருக்குது சார். அவர் US கெளம்புனதா சொல்லப்பட்ட அந்த நாட்களுக்கு சுமார் ஆறு மாசத்துகு முன்னாலருந்து அவரோட அக்கவுண்ட்ல ஒவ்வொரு மாசமும் கம்பெனி சம்பளம் இல்லாம பத்து பத்து லட்ச ரூபாயா 50 லட்ச ரூபா 5 மாசத்துல கிரெடிட் ஆயிருக்கு. ஆனா அது கிரெடிட் ஆன 2 மூணு நாள்லயே அப்படியே வித்ட்ராவலும் பண்ணப்பட்டுருக்கு.” 

“குட்.. இது போதும் அந்த வீட்டுக்குள்ள போக… மத்த டீடெய்ல் எல்லாமே நமக்கு அங்கயே கெடைச்சிடும். உடனே இத ஒரு ஸ்டேட்மெண்ட்டா ரெடி பண்ணி உடனே அந்த வீட்டுக்குள்ள போக அப்ரூவல் வாங்குங்க. இன்னிக்கே… ”

“ஓக்கே சார்… சார் அப்புறம் என்னோட ட்வுட் என்னன்னா…”

“ம்ம்ம்… சொல்லுங்க… “

“ரேவதி மேடம் எதோ பொண்ணு படில உக்காந்துருந்தது பாத்தேன்னு சொல்றாங்க… அநேகமா ஆனந்த் அவரு ஒயிஃப் எதாது பண்ணிட்டு…. அந்த வீட்டுலருந்து எஸ்கேப் ஆயிருக்க சான்ஸ் இருக்கு சார்..”

ரவிகுமார் லேசாக சிரித்துக் கொண்டே “என்ன சார்… அப்போ அன்னிக்கு அவங்க அந்த படிக்கட்டுல பாத்தது ஆனந்த்தோட ஒயிஃப் ஆவின்னு சொல்ல வர்றீங்களா… என்ன சார்… நாமல்லாம் போலீஸ்காரங்க.. இதுமாதிரி பேசக்கூடாது… போய் அப்ரூவலுக்கு ரெடி பண்ணுங்க”

“இல்ல சார்…என் மனசுல தோணுனத சொன்னேன். “ என்று சொல்லிவிட்டு திரும்பி சீட்டுக்கு சென்று வேலையை தொடர்ந்தார்.. தங்கதுரை… 

மணி சரியாக இரவு ஒன்பது.  பொலேரோவில் வீட்டுக்கு சென்றுகொண்டிருந்த ரவிக்குமாரின் செல்போன் அழைத்தது. மறுமுனையில் தங்கதுரை.

“சொல்லுங்க தங்கதுரை”

“சார் அந்த வீட்டுக்குள்ள போய் search பண்ண ஆர்டர் வாங்கியாச்சு சார். காலையில போயிடலாம் சார்… “

“என்னது காலையிலயா… நோ நோ… உடனே… இன்னிக்கு நைட்டே கெளம்புறோம். எனக்கு எதோ தப்பா படுது நா வீட்டுல டின்னர் முடிச்சிட்டு ஒன் ஹவர்ல வந்துடுறேன்.. நீஙகளும் சாப்பிட்டு ரெடியா இருங்க… இன்னும் ரெண்டு பேர கூட ரெடி பண்ணிக்குங்க. எதுக்கும் லோக்கர் ரிப்போர்ட்டர் ஒருத்தருக்கும் இன்பார்ஃம் பண்ணிடுங்க. “

“ஓக்கே சார்” 

ரவிகுமார், தங்கதுரை மற்றும் இரண்டு போலீஸ்காரர்கள் அந்த ஃப்ளாட்ஸை அடைந்திருந்த போது மணி இரவு 10.30. ரிப்போர்ட்டர் ஒருவர் ஏற்கனவே வந்து வெளியில் காத்திருந்தார். பூட்ஸ் சத்தங்கள் சீனிவாச ஐயரையும், மதன் ரேவதியையும் வீட்டுக்குள்ளிருந்து வெளிக் கொணர்ந்தன. 

சீனிவாச ஐயர் மாடிப்படிக்கட்டில் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க மதனும் ரேவதியும் அவர்கள் வீட்டு வாசற்படியிலேயே நின்று ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டிருந்தனர்.
காவலாளி ஒருவர் கையில் வைத்திருந்த பெரிய இரும்புக்கம்பியால் அந்த ஃப்ளாட்டின் கிரில் கேட்டில் தொங்கிக் கொண்டிருந்த பூட்டின் தலையில் மடார் மடாரென நான்கு போடு போட வலி தாங்காமல் வாயை பிளந்தது. அதற்கு பின்னிருந்த ஃப்ளாட்டின் மெயின் கதவை ஒரு பெரிய கடப்பாரையை வைத்து நெம்ப பத்து நிமிட போராட்டத்திற்கு பிறகு சுவற்றின் ஒரு சிறு சில்லை பேர்த்துக் கொண்டு திறந்து கொண்டது. 

முதலில் ரவிக்குமார் வீட்டுக்குள் வலதுபக்க இடுப்போரம் இருந்த பிஸ்டலில் கை வைத்தபடி காலடி எடுத்து வைக்க, தங்க துரையும் மற்ற இரண்டு போலீஸ்காரர்களும் பின் தொடர்ந்தனர். மதன், ரேவதி ஐயர் மூவரும் கதவோரமாக நின்று எட்டி எட்டி பார்த்துக் கொண்டிருந்தனர்.
ரவிகுமார் ஒவ்வொரு அடியாக மெல்ல மெல்ல எடுத்து வைத்து கைக்கு கிடைத்த ஒரு ஸ்விட்ச் போர்டில் இரண்டை அமுக்க பளீரென வெளிச்சத்தை கக்கியது ஒரு மின்விளக்கு. 

வீடுமுழுக்க கால் வைத்தால் அச்சு பதியும் அளவிற்கு சிறு சிறு மணல் குப்பைகள். ஆங்காங்கு கலைத்து போடப்பட்ட சிறு சிறு பொருட்கள் என ஒரு வருடத்திற்கு முன்பு பயன்படுத்தப் பட்ட வீடு என்பதை சொல்லாமலேயே நிருப்பித்திருந்தது. லேசாக பழைய புத்தகதிலிருந்து வரும் வாசனையை போல நெடியேறியது. இரண்டு பெட்ரூம் மற்றும் கிச்சனுடைய அந்த வீட்டை 5 நிமிடத்தில் இன்ச் இன்சாக அளந்தனர் நால்வரும். சமீபத்தில் ஆள் நடமாட்டம் இருந்ததற்கான எந்த அறிகுறியையும் அந்த வீடு காட்டவில்லை. மேலும் ரேவதி கேட்ட அந்த சத்தம் வந்ததற்கு வீட்டின் எந்த பகுதியும் உடைக்கப் படாமல் அழகாகவே இருந்தது. 

வீடுமுழுவதும் சுற்றிவிட்டு ஏமாற்றமே மிஞ்சி மேல்நோக்கி பார்த்த ரவிக்குமாருக்கு கண்ணில் அது பட்டது. பெட்ரூமில் ப்ளைவுட் கதவுகள் போட்டு பூட்டப்பட்டிருந்த லாஃப்டே அது. வெளியூர் செல்லும் அனைவரும் லாஃப்டுகளுக்கு பூட்டு போட்டு பூட்டிச் செல்வது புதிதல்ல. சற்று பார்வையை லாஃப்ட் கதவுகள் மேல் பதியச் செய்ய சட்டென ரவிக்குமாரின் முகம் மாறியது. அந்த ப்ளைவுட் கதவுகளின் இடுக்குகள் அனைத்தும் செல்லோ டேப்புகள்ளால் காற்று புகாதவாறு அடைக்கப்பட்டிருந்தது. 

“தங்கதுரை… அந்த லாஃப்ட்ட ஒப்பன் பண்ண சொல்லுங்க” என்றவுடன் அருகிலிருந்த இருவரும் ஒரு ஸ்டுலில் ஏறி கம்பியால் லாஃப்ட் கதவுகளின் பூட்டுகளை ஒரு நிமிடத்தில் தகர்த்தனர்.

“அத ஓப்பன் பண்ணுங்க” என ரவிகுமார் சொன்னவுடன் ஒரு காவலாளி லாஃப்டின் ஒரு கதவை மெல்ல திறந்ததுதான் தாமதம்.. 

“குப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்” என வீசியது அந்த நாற்றம். கன நேரத்தில் வீடுமுழுவதும் துர்நாற்றம் பரவ மற்றொரு காவலாளி இரவு சாப்பிட்டத்தை அந்த இடத்திலேயே கக்கினார்.

வேக வேகமாக கர்சீப்பை எடுத்து மூக்கிற்கு கொடுத்து பாக்கெட்டில் வைத்திருந்த டார்ச்சை எடுத்து மெல்ல லாஃப்டின் உள்ளே அடிக்க, அவர் கண்ட காட்சி முகத்துக்கு ரத்தஓட்டத்தை நிறுத்தி வெளிர் நிறமாக்கியது.
கிட்டத்தட்ட முழுமையாக அழுகிவிட்ட ஒரு உருத்தெரியாத மனித உடல் லாஃப்டின் உள்ளே மடிந்து காணப்பட்டது. 

அடுத்த பதிவில் தொடரும்.

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

1 comment:

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...