Saturday, August 31, 2013

மாயவலை - பகுதி 5 !!!


Share/Bookmark

முதல் பகுதி இரண்டாவது பகுதி மூன்றாவது பகுதி நான்காவது பகுதி ஒரு வருடத்திற்கும் மேலாக அடைத்து வைத்திருந்ததில் கிட்டத்தட்ட மொத்த உடலுமே உருக்குலைந்து போய் கீழ்பாகத்திலுள்ள எழும்புகளை காட்டியிருந்தன.  10 வினாடிகளுக்கு மேல் ஒருவரால் அந்த உருவத்தை பார்க்க முடியாத அளவு கொடூரமான அளவு சேதமடைந்திருந்தது. 30 விநாடிகளுக்கு பிறகே ரவிக்குமார் சற்று நிதானத்திற்கு வந்து அந்த உடலை மீண்டும் உற்று நோக்க, தலைப்பகுதி இருக்க வேண்டிய இடம் வெறுமையாக கழுத்துப்பகுதியோடு துண்டிக்கபட்டிருந்தது. 

5 நிமிடத்தில் துர்நாற்றம் வெளியே பரவ அவரவர்கள் கதவை மூடிக்கொண்டு உள்ளே சென்றனர். ரேவதிக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. கண்ணிலிருந்து தண்ணீர் தாரை தாரையாக வழிய தொண்டை வார்த்தைகளை வெளிவிடாமல் அடைத்தது. மதன் தண்ணீரை கொடுத்து ஆறுதல் படுத்திக் கொண்டிருக்க, சீனிவாச ஐயர் நின்றிருந்த இடம் தெரியாமல் மறைந்திருந்தார். 

புகைப்படங்கள் அனைத்தும் எடுக்கப் பெற்று உடலை அந்த வீட்டிலிருந்து எடுத்துச் செல்லும் போது மணி விடியற்காலை 4. தூக்கமின்மையால் ரவிக்குமாருக்கு கண்கள் கோவைப்பழமாகியிருந்து.

“சார் நீங்க போய் ரெஸ்ட் எடுத்துகிட்டு காலையில வாங்க… நா இங்க இருக்கேன்” என்றார் தங்கதுரை.

“இல்லை தங்கதுரை… பரவாயில்லை. இன்னும் கொஞ்ச நேரம் தானே முடிச்சிட்டே போயிடலாம். “ என கூறி தலையின் இரண்டு புறங்களையும் கைகளால் பிடிக்க

“சார் ஏன் சார் இவ்ளோ அப்செட்டா இருக்கீங்க… நாம இதவிட கொடூரமான எவ்வளவோ பாடிங்கள பாத்துருக்கோம்.. இதுக்கு ஏன் சார் ரொம்ப மூட் அவுட்டா இருக்கீங்க…”

“இல்ல தங்கதுரை… எனக்கு அந்த பாடிய பாத்த அந்த செகண்ட்லருந்து இப்போ வரைக்கும் நீங்க ஸ்டேஷன்ல எங்கிட்ட சொன்ன அந்த வார்த்தை தான் மனசுல ஓடிகிட்டு இருக்கு. உண்மையிலயே இந்த பேயிங்க ஆவிங்கல்லாம் இருக்கா… அந்த பொண்ணு பாத்தது ஒரு வேளை நீங்க சொன்ன அந்த பொண்ணத்தானா… எனக்கு இதுவரைக்கும் இந்த மாதிரி விஷயங்கள்லயெல்லாம் நம்பிக்கை இருந்ததே இல்லை”

“சார்… என்ன சார்…. நா எதோ சும்ம பேச்சு வாக்குல சொன்னேன்.. அதுக்கு போய் இப்புடி ஏன் சார் அப்செட் ஆகுறீங்க… “ என தங்கதுரை நெளிய
“சரி நீங்க இதுக்கு முன்னால இது மாதிரி பேய் சம்பந்தமான கேஸுங்க எதாது பாத்துருக்கீங்களா?”

“ஊர்ல ரெண்டு மூணு பேர பாத்துருக்கேன் சார்…. சிட்டிக்கு வந்ததுக்கு அப்புறம் அந்த நம்பிக்கையெல்லாம் செல்லாம போச்சு சார்…”

“ம்ம்ம்ம்… சரி அந்த கேஸுங்கள பத்தி சொல்லுங்க எனக்கும் போர் அடிக்குது… கொஞ்ச நேரம் கேட்டுத்தான் பாக்குறேன்” என கூறி ரவிக்குமார் சிரிக்க தங்கதுரை அவர் சிறுவயதாக இருந்த போது அவர் கிராமத்தில் பேய் பிடித்து ஆடிய நபர்களின் கதைகளை ஒவ்வொன்றாக சொல்ல ஆரம்பித்தார். 

மணி அதிகாலை 6 ஐ தொட்டிருந்தது. போர்டிக்கோவில் இரண்டு ப்ளாஸ்டிக் சேர்கள் போட்டு உட்கார்ந்திருந்தனர் ரவிக்குமாரும் தங்கதுரையும். சிறிது நேரத்தில் அழுது வீங்கிய முகத்துடன் கையில் இரண்டு காஃபி டம்ளர்களுடன் ரேவதி நெருங்கினாள்.

“ ஏம்மா இதெல்லாம்… ஆமா முகம் அழுதமாதிரி இப்டி வீங்கியிருக்கு…  தூங்கவே இல்லையா” என தங்க துரை கேட்க 

“இல்லை சார்… தூக்கமே வரல.. “ என ரேவதி பதிளலிக்க அவள் வந்ததிலிருந்து அவள் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்த ரவிக்குமார்

“மேடம் கேக்குறேன்னு தப்பா நெனைச்சிக்காதீங்க… உன்மையிலேயே நீங்க அன்னிக்கு ஒரு பொண்ண படிக்கட்டுல பாதீங்களா?” என்றதுதன் தாமதம்.
பொல பொலவென கண்ணீர் கொட்டியது ரேவதியின் கண்களிலிருந்து. 10 விநாடிகளுக்கு மேல் நிற்கமுடியாமல் அந்த இடத்தை விட்டு வேகவேகமாக மாடிக்கு ஓடி கதவை தாழிட்டுக் கொண்டாள். 

கைரேகை பதிவுகள் அனைத்தும் எடுக்கப் பெற்று ஆனந்தின் ஃப்ளாட் மூடப்பட்டு சீல் வைக்கப்படும் போது காலை 8.30.

“தங்கதுரை… இன்னிக்குள்ள போஸ்ட் மார்டம் ரிப்போர்ட் வந்துடும்னு நெனைக்கிறேன். நீங்க வீட்டுக்கு போய் ரெஸ்ட் எடுத்துட்டு ஈவினிங் அத கலெக்ட் பண்ணிட்டு எனக்கு கூப்புடுங்க.. நாம எதுக்கும் ஒரு தடவ ஈவினிங் இந்த ஃப்ளட்டுக்கு வந்து எதாவ்து எவிடென்ஸ் கெடைக்கிதான்னு பாப்போம்” என்றவுடன்

“ஓக்கே சார் “ என கூறிவிட்டு தங்க துரை அரைத் தூக்கத்தில் கூறிவிட்டு வீட்டுக்கு சென்றார். 

இரண்டு வார விடுமுறை முடிந்து அன்றுதான் மதன் ஆஃபீஸுக்கு கிளம்பிக் கொண்டிருந்தான். 

“மதன் இந்த சிட்சுவேஷன்ல நீ என்ன தனியா விட்டுட்டு போகனுமா… எனக்கு உண்மையிலயே ரொம்ப பயமா இருக்கு. அந்த வீட்ட பாக்கும் போதே எனக்கு எதோ மாதிரி இருக்கு”

“ரேவதி உனக்கே தெரியும் இந்த ரெண்டு வாரம் லீவ் எடுத்ததுக்கே ஆஃபீஸ்லருந்து எவ்வளவு ஃபோன்கால்ஸ் வந்துச்சின்னு. இன்னிக்கும் லீவ் எடுத்தேன்னா அப்புறம் நாளையிலருந்து நா வீட்லயே இருக்க வேண்டியதான். எதுக்கும் பயப்படாத.. கொஞ்ச நேரம் கழிச்சி உனக்கு எதோ மாதிரி இருந்தா கீழ் வீட்டு ஆண்டி கூட பேசிகிட்டு இரு… எல்லாம் சரியாயிடும்” என கூறி நெற்றியில் ஒரு முத்ததையிட்டு வேலைக்கு கிளம்பினான்.

மணி சரியாக மாலை 4 ஐ தொட்டது. தூக்கம் வராமல் வெகுநேரம் புறண்டு புறண்டு படுத்துக் கொண்டிருந்த ரவிக்குமாரின் செல்ஃபோன் அழைக்க மறுமுனையில் தங்கதுரை.

உடம்பை நெட்டி முறித்தபடி “ம்ம்ம்ம்ம்… சொல்லுங்க தங்க துரை… “
“சார் போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் கைக்கு கெடைச்சிருச்சி சார்.. ஆனா”

“சொல்லுங்க… என்ன ஆனா….”

“நீங்க தான் சார் கரெக்ட்….. “ என தங்க துரை மெல்லிய குரலில் இழுக்க
“நான் தான் கரெக்டா.. என்ன சொல்றீங்க தங்கதுரை… எனக்கு ஒண்ணும் புரியல”

“பேய் பிசாசு மேலயெல்லாம் நம்பிக்கையில்லைன்னு சொன்னீங்களே சார் அதுக்கு சொன்னேன்… “

“அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்?  கொஞ்சம் தெளிவா சொல்லுங்க“ என ரவிக்குமார் கேட்டதும்

“செத்தது லேடி இல்லசார்.. 30 வயசுக்குள்ள உள்ள ஒரு ஆண்”
இதயத்திலிருந்த மொத்த ராத்தமும் சட்டென மூளையை நோக்கி பாய ரவிக்குமாருக்கு தூக்கம் பறந்து போனது. விறுவிறுவென கிளம்பி 5 மணிக்கு ப்ளாட்டை அடைய தங்கதுரை ஏற்கனவே அங்கு நின்றிருந்தார்.

“என்ன தங்கதுரை… நா இத கொஞ்சம் கூட எதிர்பார்க்கல… நீங்க சொன்ன அந்த கான்செப்ட் உண்மையா இருந்தா இங்க இன்னொரு லேடி பிணம் எங்கயாது இருக்கனும் தானே”

“சார்… நா தெரியாம சொல்லிட்டேன் சார்… அத மறந்துடுங்க….” என கெஞ்சாத குறையாக தங்கதுரை ரவிக்குமாரை கேட்க, சிரித்தபடி இருவரும் மேலே சென்றனர்.

அரைமணி நேரம் ஃப்ளாட்டினில் சல்லடை போட்டு சலித்ததில் உருப்படியாக எந்த ஒரு ஆதாரமுமே சிக்கவில்லை. ஆனந்தும் அவரது மனைவியும் சேர்ந்திருந்தபடி ஒரே ஒரு கார்ட் சைஸ் ஃபோட்டோ மட்டுமே சிக்கியது. 

“என்ன சார் இது சொதப்பலா இருக்கே… இப்போ இந்த டெட் பாடி யாரோடதுன்னு கண்டுபுடிக்கிறதே பெரிய தொல்லையா இருக்கும் போலருக்கே… அது ஆனந்தோட பாடியா இல்லை வேற யாரோடதுமா… அது ஆனந்தோடதா இருந்த ஒரு வேளை அவரோட மனைவியே கொலை பண்ணிருப்பாங்களா, இல்லை ரெண்டு பேருமே சேந்து வேற யாரையாது கொலை பண்ணிட்டு எஸ்கேப் ஆயிட்டாங்களா.. “ என ரவிக்குமார் புலம்ப

“சார் அங்க பாருங்க” என தங்க துரை கூப்பிட அந்நார்ந்து பார்த்த ரவிக்குமாரின் முகத்தில் சிறு ஒளி. 

அந்த மேசையின் மேல் வைக்கப்பட்டிருந்த ஹெல்மெட்டை நோக்கி சென்ற ரவிக்குமார் “இத பத்திரமா ஒரு டெஸ்ட் பேக்ல எடுத்துக்குங்க.. இதவச்சி கேஸ்ல ஓரளவு க்ளாரிட்டி கொண்டு வந்துடலாம்” என கூற தங்கதுரை கை ரேகை பதியாமல் அந்த ஹெல்மெட்டை ஒரு பெரிய சைஸ் பாலிதின் பைக்குள் நுழைத்தார்.
 
“டொக்… டொக்… டொக்… “ கதவு தட்டும் சத்தம் கேட்டு சுயநினைவுக்கு வந்த ரேவதி கதவை திறக்க வெளியில் ரவிக்குமாரும், தங்க துரையும் நின்றிருந்தனர். 

“உள்ள வாங்க சார்...” என அழைத்து அருகிலிருந்த சோஃபாவில் அமரச்செய்தாள். 

“என்னம்மா நார்மல் ஆயிட்டியா… புதுசா பாக்குறதால உன்னால பொறுத்துக்க முடியல… இதுலயே பழகிட்டதால எங்களுக்கு ஒண்ணும் தெரிய மாட்டேங்குது… கொஞ்சம் தண்ணி குடும்மா… “ என கேட்க
உடனே ஃப்ரிட்ஜிலிந்த ஒரு பாட்டில் தண்ணீரை எடுத்து நீட்டினாள். ரவிக்குமார் அதை வாங்கி தொண்டைக்கு கொடுக்க, “ஏம்மா கூலிங் இல்லாத தண்ணி இல்லை?” என்றார் தங்கதுரை..

“கேன் வாட்டர் தீந்து போச்சு சார்… half an hour முன்னாடி தான் கால் பண்ணி சொன்னேன். இப்போ வந்துடும் சார்.. அஞ்சே நிமிஷம் இருங்க” என கிச்சனுக்குள் நுழைந்தவள் சிறிது நேரத்தில் இரண்டு காஃபி டம்ளர்களுடன் வந்தாள்.

“எங்களால உங்களுக்கு வேற வீண் சிரமம்” என ரவிகுமார் கூட “இதுல என்ன சார் இருக்கு…பரவாலை” என்றாள் ரேவதி.

காஃபியை முழுவதும் பருகி முடிக்கையில் மறுபடியும் கதவு தட்டப்படும் சப்தம்.. ரேவதி வேக வேகமாக சென்று கதவை திறக்க கையில் ஒரு 25 லிட்டர் வாட்டர் கேனுடன் 30 வயது மதிக்கத்தக்க ஒருவர் “மேடம் கால் பண்ணிருந்தீங்களே “ என்றார் “ம்ம்… ஆமா … உள்ள வச்சிருங்க” என்றதும் கேனை கிச்சனுக்கு எடுத்துச் சென்று வைத்துவிட்டு empty கேனை எடுத்துக்கொண்டு “மேடம் 35 rupees” என்றார்.

ரேவதி டேபிளின் மேலிருந்த தனது hand bag இல் பணத்த எண்ணிக் கொண்டிருக்க, ரவிக்குமாருக்கு மூளையில் எதோ சுரண்டியது.

“தம்பி உங்க பேர் என்ன?”

“சேகர் சார்” லேசான பயத்துடன் கூறினார் அந்த தண்ணீர் கொண்டு வந்த இளைஞர். 

“ஆமா எல்லார் வீட்டுக்குள்ளயும் கிச்சன் வரைக்கும் தண்ணி கேனை நீ தான் எடுத்துட்டு போய் வைப்பியா?”

“அப்டியெல்லாம் இல்லை சார்… ஜெண்ட்ஸ் வீட்டுல இருந்தாங்கன்னா வெளிலயே வச்சிட சொல்லுவாங்க. லேடீஸ் மட்டும் அவங்களால கேன தூக்க முடியாதுங்கறதால எங்கள கொண்டு வந்து உள்ள வைக்க சொல்லுவாங்க”

“ம்ம்ம்… எத்தனை வருஷமா இந்த வேலை பாத்துகிட்டு இருக்க”

“4 வருஷமா இந்த ஏரியாவுக்கு நாங்க தான் வாட்டர் கேன் சப்ளை பண்றோம் சார்”

“பக்கத்துல ஒரு வீடு இருக்கே அதுக்கும் நீதான் வாட்டர் சப்ளை பண்றியா…”

“நா ஆறு மாசமா இந்த லைன்ல போட்டுகிட்டு இருக்கேன் சார்.. எனக்கு தெரிஞ்ச வரைக்கும் அந்த வீடு பூட்டியே தான் இருக்கு” 

“அதுக்கு முன்னாடி யாரு இந்த ஸ்ட்ரீட்டுக்கு வாட்டர் கேன் சப்ளை பண்ணது. “

“எங்க சித்தப்பா ஜோதிராஜன் தான் பாத்துகிட்டு இருந்தார். இப்போ அவருக்கு உடம்பு சரியில்லாததால  லைனுக்கு வர்றதில்லை. கடையிலயே தான் இருக்காரு”

“எனக்கு அவர உடனே பாக்கனும். போய் அழைச்சிட்டு வா….. தங்கதுரை நீங்களும் கூட போய் கையோட ஜோதிராஜன கூட்டிட்டு வாங்க.” என கூறிவிட்டு ரேவதி வீட்டிலிருந்து கிளம்பி கீழுள்ள போர்ட்டிகோவில் chair போட்டு அமர்ந்தார். அடுத்த 25 நிமிடத்தில் சுமார் 55 வயது மதிக்கத்தக்க கிட்டத்தட்ட பாதி நரைத்த தலையுடனும் மெலிந்த தேகத்துடனுமான ஜோதி ராஜன் முன் நின்றார்.

“ஒரு வருஷத்துக்கு முன்னால இந்த ஏரியாவுக்கெல்லாம் நீங்க தான் வாட்டர் கேன் போட்டுகிட்டு இருந்தீங்களா?”என ரவிக்குமார் கேட்க

“ஆமா சார். “

“மேல லெஃப்ட் சைடு உள்ல ஃப்ளாட்டுக்கு வாட்டர் சப்ளை 
பண்ணிருக்கீங்களா எப்பயாது?”

“பண்ணிருக்கேன் சார்… ஆனா அவங்க ஒரு ரெண்டு மாசம் தான் இருந்துருப்பாங்க.. அப்புறம் எங்கயோ வெளியூர் பொய்ட்டாங்களாம்”

“அந்த வீட்டுல இருந்தவங்கள உனக்கு தெரியுமா… கடைசியா எப்போ அந்த வீட்டுக்கு சப்ளை பண்ணீங்க” 

“அந்த வீட்டுல ஒரு ஹஸ்பண்ட் ஒய்ஃப் இருப்பாங்க சார். ரெண்டு மூணு நாளுக்கு ஒரு தடவ வாட்டர் கேன் போடுவேன்” 

“அந்த ஃப்ளாட்டுல அவங்க ரெண்டு பேர் மட்டும் தான் இருந்தாங்களா இல்லை வேற யராவது வயசானவங்க எதும் இருந்தாங்களா… “ 

“இல்லை சார் எனக்கு தெரிஞ்சி அவங்க ரெண்டு பேரு தான் இருந்தாங்க. ஆனா ஒரே ஒரு நாள் மட்டும் புதுசா ஒருத்தர் இருந்தாரு. நா கடைசியா அந்த வீட்டுல வாட்டர் கேன் போட்டதும் அன்னிக்கு தான்” என ஜோதிராஜன் கூறியதும் ரவிகுமார் சற்று நிமிரிந்து உட்கார்ந்தார்.

“புதுசா ஒருத்தரா… அவர பாத்த உங்களுக்கு அடையாளம் தெரியுமா”
“தெரியும் சார்”

“ஒரு தடவதான் பாத்தேன்னு சொல்றீங்க… எப்டி அடையாளம் கரெக்டா சொல்லுவீங்க.” 

“இல்லை சார் வழக்கமா எப்போ வாட்டர் கேன் கொண்டு வந்தாலும் நா தான் கிச்சன் வரைக்கும் கொண்டு போய் போடுவேன்… அந்த சார் எப்பவும் கம்ப்யூட்டர்ல வேலை பாத்துட்டு இருப்பாரு. அந்த மேடம் என்னையே உள்ள கொண்டு வந்து வைக்க சொல்லுவாங்க. 

அன்னிக்கு மட்டும் கதவ தட்டும் போது ஒருத்தர் திறந்து கேனை வெளிலயே வச்சிட்டு போக சொன்னார். ரெண்டு கேனுக்கு 70 ரூபா பணத்துக்க்கு 500 ரூபா குடுத்தாரு. என்கிட்ட சேஞ்ச் இல்லாததால லைன் முடிச்சிட்டு வந்து தர்றேன்னு சொல்லிட்டு போனேன். லைன் முடிச்சிட்டு திரும்பி போய் பாக்கும் போது வீடு பூட்டியிருந்துச்சி. அப்புறம் ரெண்டு மூணு தடவ போகும் போதும் வீடு பூட்டியே தான் இருந்துச்சி. அப்புறம் கீழ உள்ள சாமி தான் அவங்க வெளியூர் பொய்ட்டதா சொன்னாரு. இன்னும் நா அந்த பேலன்ஸ் குடுக்கவே இல்லை. அதான் அவர் முகம் எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு என கூறி முடிக்க ரவிக்குமார் நடு நெத்தியில் விரலை வைத்து யோசிக்க ஆரம்பித்தார்.

திடீரென பைக் சத்தம் கேட்டது. மதன் ஆஃபீஸிலிருந்து வந்துகொண்டிருந்தான். பைக்கை போர்ட்டிகோவில் நிறுத்திவிட்டு ரவிக்குமாரையும் தங்கதுரையும் பார்த்து லேசாக புண்ணகைத்துவிட்டு படியேறி மேலே செல்ல, ஜோதிராஜன் மெல்ல குனிந்து ரவிக்குமார் காதருகே

“சார்…. அன்னிக்கு அந்த வீட்டுக்குள்ள இருந்தது இப்ப மேல போறாரே அவரு தான் சார்” என்றதும் ரவிக்குமாருக்கு தூக்கி வாரிப்போட்டது. 

அடுத்த பகுதியில் முற்றும் 
 

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

3 comments:

இராஜராஜேஸ்வரி said...

சார்…. அன்னிக்கு அந்த வீட்டுக்குள்ள இருந்தது இப்ப மேல போறாரே அவரு தான் சார்” என்றதும் ரவிக்குமாருக்கு தூக்கி வாரிப்போட்டது.

எதிர்பாராத திருப்பம் ..!

gita said...

Semma twist. Nandraaga ezhudhugireer. Vazhthukkal.

Priya said...

sema thrill... seekrama iruthi paguhi podunga...aavala iruku

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...