Saturday, August 10, 2013

மாயவலை!!!


Share/Bookmark

டிசம்பர்.. நேரம் இரவு 9.45… வழக்கத்தை விட குளிர் அதிகரித்திருந்ததால் சென்னையில் முன்னிரவிலேயே ஆள் நடமாட்டம் குறைந்து முடங்கிப்போயிருந்தது. GST சாலையிலிருந்து குரோம்பேட்டையை கடந்து சிறிது தூரத்தில் பிரியும் ஒரு சிறிய சந்தில் அரை கிலோ மீட்டர் தொலைவில் அமைந்திருந்தது அந்த இரண்டடுக்கு அப்பார்ட்மெண்ட். அபார்ட்மெண்டின் ஒரு புறம் ஒரு ஒற்றை தனி வீடு இருக்க மறுபுறம் புதிதாக ஆரம்பிக்கப்பட்டு பாதி கட்டிய நிலையில் ஒரு கட்டிடம் இருந்தது. கீழிரண்டு மேலிரண்டு வீடுகளாக மொத்தம் நான்கு வீடுகள் கொண்ட அந்த அப்பார்ட்மெண்டில் கீழ்வீடுகள் இரு ப்ராமண குடும்பங்களால் ஆக்ரமிக்கப்பட்டு இருந்தது. மேலிருந்த இரண்டு வீடுகளில் ஒன்றில் பூட்டப்பட்ட பெரிய மர கதவுக்கு வெளியே இருந்த கிரில் கேட்டில் பெரிய திண்டுக்கல் பூட்டு ஒன்று தொங்கிக் கொண்டிருக்க அதற்கு அருகிலிருந்த 4 வது வீட்டினுள்ளிருந்து எதோ பேச்சு குரல் கேட்டுக்கொண்டிருந்தது. 

“என்னங்க… எனக்கு இந்த வீடு ரொம்ப புடிச்சிருக்குங்க… சிட்டில இருக்க மாதிரியே இல்ல… ரொம்ப பீஸ்ஃபுல்லா தெரியிது” என்றாள் ரேவதி.

“ஹ்ம்ம்ம்… எனக்கும் ரொம்ப  புடிச்சிருக்கு. ஆனா என்ன பின்னடியே ரயில்வே ட்ராக் இருக்கது தான் ரொம்ப டிஸ்டர்பன்ஸா இருக்கும்னு நெனைக்கிறேன்” என்றான் மதன்.


மதனுக்கும் ரேவதிக்கும் திருமணம் நடந்து மூண்று தினங்களே ஆகியிருந்தது. ரேவதிக்கு பெற்றோர் சொந்தக்காரர்கள் என எவருமில்லை. மூண்று மாத காதலுக்கு பின், மதன் வீட்டில் காதலை ஏற்க மறுத்ததால் இருவரும் குன்றத்தூர் கோவிலில் திருமணம் செய்துகொண்டு இந்த வீட்டில் இன்று காலையே குடியேறியிருந்தனர். 

“அதெல்லாம் எந்த டிஸ்டர்பன்ஸூம் இல்லீங்க. சிட் அவுட் கதவ தெறந்தா தான் ட்ரெயின் போற சத்தமே கேக்குது. அத லாக் பண்ணிட்டா கொஞ்சம் கூட டிஸ்டர்பன்ஸே இல்லை… நா வந்த உடனே செக் பண்ணி பாத்துட்டேன். மொட்டை மாடிக்கு போனா சான்ஸே இல்லை… செம view… ”

“ஹ்ம்ம்ம்… வீடு உன் செலெக்ஷனாச்சே… விட்டுக் குடுப்பியா?,,, சரி வீட்டுக்கு தேவையான எல்லாமே வாங்கியாச்சி. இன்னும் இந்த இன்வெர்ட்டர் மட்டும் வேலை செய்ய மாட்டேங்குது. அதுக்கு மட்டும் நாளைக்கு எலெக்ட்ரீசியன வர சொல்றேன்னு சொல்லிருக்காரு வீட்டு ஓனர்” என்றான் மதன்.

“அப்டியே அந்த ஏசியையும் கொஞ்சம் பாக்க சொல்லுங்க. சுத்தமா கூலிங்கே ஆக மாட்டேங்குது. அடிக்கடி ட்ரிப் வேற ஆகுது. ஃபர்னிஷ்டு ஹோம்னு சொல்லிதானே பன்னண்டாயிரம் ரூவா வாடகை கேக்குறாரு… இங்க பாத்தா எதுவுமே சரியில்ல…”

“ஹ்ம்ம்ம் சரி… நாளைக்கு அவர் வரும்போது எல்லா ப்ராப்ளத்தையும் அட்டெண்ட் பண்ண சொல்லிடலாம்” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே “டொக் டொக் டொக்” என கதவு தட்டப்படும் சத்தம் கேட்டது.
“இந்த நேரத்துல யாரு கதவை தட்டுறது” என முனங்கிக் கொண்டே கதவை திறக்க…. 

கருப்பான தோற்றத்துடன், ஒரு அழுக்கு வெள்ளை வேஷ்டியும் கை வைத்த பனியனும் பெரிய சோடா புட்டி கண்ணாடியையும் அணிந்த ஒரு 60 வயது மதிக்கத்தக்க பெரியவர் நின்றிருந்தார். 

“யார் நீங்…க?” என தயக்கத்துடன் மதன் கேட்க

“நான் தான் சீனிவாச ஐயர்… கீழ் ஃப்ளாட்ல தான் குடியிருக்கேன்… ஊருக்கு பொய்ட்டு இப்பதான் வந்தேன். நீங்க புதுசா குடிவந்துருக்கேள்னு ஆத்துக்காரி சொன்னா… அதான் பாத்துட்டு போவோமேன்னு வந்தேன்.” என படபடவென பொறிந்தார். 

“ஓ.. அப்டியாசார்… உள்ள வாங்க” என சொன்னதுதான் தாமதம்.. படபட வென உள்ளே வந்து ஒரு சேரில் உட்கார்ந்து கால்மேல் கால் போட்டு உட்கார்ந்து”ஆமா நீங்க என்ன பண்றேல்?” 

“என்ன சார்… புரியல”

“எங்க ஒர்க் பண்றேல்”ன்னு கேட்டேன்.

“சார் நா ஒரு ப்ரைவேட் கம்பெனில R&D division la வொர்க் பண்ணிட்டு இருக்கேன்… இவங்க என் ஒய்ஃப் ரேவதி… job க்கு ட்ரை பண்ணிகிட்டு இருக்காங்க” என மதன் கூறிக்கொண்டே இருக்க சீனிவாச ஐயர் மதன் கூறியதை காதிலேயே வாங்காதது போல் வீட்டை சுற்றி சுற்றி பார்த்து கண்ணாலேயே அளவெடுத்துக் கொண்டிருந்த ஐயர்

“ஓ சரி சரி… என் பையன் கூட ஜெர்மெனில் தான் வேல பாக்குறான். Monthly 2.5 lakhs salary… நா SBI la வேலைபாத்துட்டு மூணு வருஷத்துக்கு முன்னாடிதான் ரிடயர்ட் ஆனேன்” 

இவன் பையன் சம்பளத்தயெல்லாம் இப்ப யார் கேட்டது என நினைத்துக் கொண்டு “ஓ வெரி குட் சார் “ என மதன் வேண்டா வெறுப்பாய் தலையாட்ட ரேவதி “ஏன் அங்கிள் பக்கத்து எங்கவீட்டுக்கு அடுத்த வீட்டுல இன்னும் யாரும் குடி வர்லியா? “

“அந்த ஹவுஸ் ஓனரும் அவங்க ஒய்ஃபும் தான் இங்க இருந்தா.. அவங்க U S போயி ஒன் இயர் ஆயிடுத்து… எப்ப வருவான்னு நேக்கு தெரியலை” என்றார் ஐயர்.

“ஓ சரி அங்கிள்..”

“சரி நா அப்புறம் கெளபறேன்.  இன்னொரு விஷயம் நா தான் இந்த ஃப்ளாட்ஸோட மெயிண்டனென்ஸ்லாம் பாத்துண்டுருக்கேன். Monthly 500 rupees…  5 தேதிக்குள்ள கொஞ்சம் லேட் பண்ணாம குடுத்துருங்கோ… “ என சொல்லிவிட்டு அவர் மாடிப்படியிலே இறங்க கதவை சாத்திவிட்டு மதன் “நாலு வீடு இருக்குற இந்த அப்பார்ட்மெண்ட்ஸ்க்கு ஒரு மெயிண்டண்ட்ஸ் வேற… அதுக்கு ஐநூறு ஓவா வேற” என சிரித்துக் கொண்டே கூறிவிட்டு மறுபடியும் ரேவதியுடன் பேச அமர்ந்தான்.

ரேவதியும் மதனும் அரைமணி நேரத்திற்கும் மேலாக ஏதேதோ பேசி சிரித்துக் கொண்டிருக்க, திடீரென பளிச்சென்றிருந்த ஹால் கும்மிருட்டானது. 

“ச்சா… என்ன பவர் கட்டா… மதன்.. உங்க மொபைல் டார்ச்ச கொஞ்சம் ஆன் பண்ணுங்க..”

“மொபைல் பெட்ரூம்ல சார்ஜ்ல இருக்கு ரேவதி” 

“அய்யோ… சரி கிச்சன்ல கேண்டில் இருக்கு.. அத கொஞ்சம் எடுத்து ஏத்திட்டு வாங்க…கும்மிருட்டா இருக்கு சுத்தமா ஒண்ணுமே தெரில”

“சரி சரி அசையாம இரு நா கிச்சனுக்கு போய் எடுத்துட்டு வர்றேன்” என்று சொல்லிவிட்டு கிச்சனை நோக்கி நடக்க ஆரம்பித்தான் மதன். சரியாக இரண்டு நிமிடம்…. ரேவதியின் கண்கள் இருளுக்கு லேசாக பழகியிருந்தன. ஹாலுக்கு மதன் வருவது ஒரு நிழல் போல தெரிந்தது. “என்ன இவரு கேண்டில் எடுக்காம சும்மா வர்றாரு” என்ற கடுப்பில்

“என்ன மதன் கேண்டில் எடுக்கலையா… “ என கையை பிடிக்க

“கொஞ்ச நேரம் இரு ரேவதி… இப்பதான் தேடிகிட்டு இருக்கேன்” 
என்று கிச்சனிலிருந்து மதன் குரல் கேட்க வெடுக்கென பிடித்த கையை உதரி தள்ளிவிட்டு “மதன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்…….” என உரக்க கத்தினாள் ரேவதி.

பதறி அடித்து மதன் ஹாலை நோக்கி வர ஒரு முறை வாசற் கதவி திறந்து மூடும் படார் என மூடும் சத்தம் கேட்டது.. இருளில் ரேவதியின் கை மதனை தொட்டதும் பயத்தில் கையை இறுக பற்றிக்கொண்டு “மதன்… ம…தன்…. யாரோ நம்ம வீட்டுக்குள்ள இருந்து வெளில ஓடுறாங்க”


அடுத்த பதிவில் தொடரும்.

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

3 comments:

Unknown said...

க்ரைம் ஸ்டோரி யா ஆரம்பமே அசத்தல் கலக்குங்க

வெங்கட் நாகராஜ் said...

க்ரைம் தொடரா.....

கலக்குங்க..... :)

Anonymous said...

Hello,

enna ithu ippadi ellam suspense vekkapadathu na padathu..

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...