Monday, April 28, 2014

மாயவலை II - பகுதி 2


Share/Bookmark
முந்தைய பகுதிகளைப் படிக்க இங்கே க்ளிக்கவும். ரேவதி அடையாரின் உட்புறத்தில் இருந்த அந்த வீட்டை கண்டுபிடித்துப் போவதற்குள் மணி 8 ஐ தாண்டியிருந்தது. நமக்கு ஃபோன் செய்தது யாராக இருக்கும்? பேரைக் கேட்டும் எதுவும் சொல்லவில்லை. நேரில் பேசிக் கொள்ளலாம் என்று கூறிவிட்டார். அக்காவை இவருக்கு எப்படித் தெரியும்? " என பல கேள்விகள் ரேவதியின் மனதிற்குள் ஓடின. இருப்பினும் இன்னும் 5 நிமிடத்தில் அனைத்துக்கும் பதில் தெரிந்துவிடும் என்ற நம்பிக்கையில் அந்த வீட்டை நெருங்கினாள். அருகருகே வீடுகள் இருந்தாலும் அந்தத் தெருவில் அனைத்துமே தனித் தனி வீடுகள். சற்று வசதியான குடும்பங்கள் வசிக்கும் பகுதி என்பது பார்த்த மாத்திரத்தில் தெரிந்தது. இன்று குளிர் சற்று முன்னதாகவே வேலையைத் தொடங்கியிருந்ததால் வீதியில் ஜன நடமாட்டம் எதுவும் காணப்படவில்லை. வீதியில் நடந்து வந்துகொண்டிருந்த ரேவதி சட்டென நின்றாள் வலப்பக்கம் இருந்த வீட்டின் காம்பவுண்ட் சுவற்றில் பார்வையை வீசினாள். 22/7... இதே வீடுதான். கருப்பு பெயிண்ட் அடித்த காம்பவுண்ட் கேட். கைவைத்து தள்ள திறந்துகொண்டு வழிவிட்டது. போர்டிக்கோவில் நின்றிருந்த கார் பிளாஸ்டிக் கவரில் மூடப்பட்டிருந்தது.

வீட்டு வாசற்படியை அடைய காலிங் பெல் கண்ணுக்குப் பட்டது. இரண்டு முறை விட்டு விட்டு சுவிட்சை அழுத்டினாள். உள்ளே மணி அடிக்கும் சத்தம் நன்றாகக் காதுக்கு கேட்டது. ஒரு நிமிடம்..வீட்டிற்குள்ளிலிருந்து எந்த பதிலும் இல்லை. மறுபடியும் இரண்டுமுறை அழுத்த, பதிலுக்கு உள்ளிருந்து ஒரு சிறு அசைவுகூட இல்லை. சரி கதவை திறந்தே பார்க்கலாம் என அந்த பெரிய ஒற்றைக் கதவின் கைப்பிடியை கீழே அழுத்தி திறக்க முயற்சித்தாள். ம்ஹூம்... கதவு தாழிடப்பட்டிருக்கிறது. ஒரு வேளை வெளியில் சென்றிருக்கலாம். கொஞ்ச நேரம் காத்திருக்கலாம் என முடிவு செய்தாள். கடும் மன உழைச்சல், காலையிலிருந்து ஓய்வில்லாத அலைச்சல், அசதி... கால்கள் கடுக்க வேறு வழியில்லாமல் வீட்டு வாசற்படியிலேயே உட்கார்ந்தாள்.  காலையிலிருந்து நடந்தவையெல்லாம்  கண்முன்னே ஓடியது ரேவதிக்கு. எதிர்காலம் என்னாகும் என்பது பெரிய கேள்விக்குறியாகத் தெரிந்தது.

அடுத்த 5 நிமிடங்கள் அப்படியே கழிய இன்னும் யாரும் வந்தபாடில்லை. சரி ஃபோன் செய்து பார்த்தால் என்ன? இது ஏன் நமக்கு முன்னாலேயே தோண்றவில்லை என ஹேண்ட் பேக்கிலிருந்த மொபைலை எடுத்து அந்த நம்பருக்கு டயல் செய்தாள். ரிங் போயிற்று. போயிற்று.. போய்க்கொண்டே இருந்தது. யாரும் எடுத்த பாடில்லை. ரிங் தானாக கட் ஆகி கம்யூட்டர் வாய்ஸ் பேச ஆரம்பித்தது. கட் செய்துவிட்டு மறுபடியும் முயற்சி செய்தாள். ரிங் போனது. போய்க்கொண்டிருக்கும் போதே ரேவதிக்கு வேறு ஏதோ ஒரு சத்தமும் கூட சேர்ந்து கேட்டது.  காதிலிருந்து ஃபோனை எடுத்துவிட்டு என்ன சத்தம் என்பதை கவனித்தாள். தூரத்தில் எதோ பாடல் ஒலிக்கும் சத்தம். எங்கே கேட்கிறது என தேடியவளுக்கு சட்டென்று புலப்பட்டது. வீட்டிற்குள்ளிலிருந்தே அந்த பாடல்  ஒலிக்கிறது. செல்ஃபோன் ரிங் டோனாக இருக்கலாம் என ஊகித்தாள். மறுபடி அதே நம்பருக்கு கால் செய்து அதை உறுதியும் செய்துகொண்டாள். "நம்மை இங்கு வரச்சொல்லிவிட்டு செல்ஃபோனையும் உள்ளே வைத்துவிட்டு எங்கே சென்றார்?" என புலம்பிக்கொண்டே அடுத்த 15 நிமிடத்தைக் கழித்தாள்.

ஒருவரும் வந்தபாடில்லை. அப்பொழுதுதான் மூக்கை லேசாகத் துளைத்தது அந்த நாற்றம். திடீரென எதோ ஒரு வித்யாசமான வாடை. எங்கிருந்து வருகிறது? வேறு எங்கிருந்தும் வர வாய்ப்பே இல்லை. கண்டிப்பாக வீட்டிற்குள்ளிருந்தே வருகிறது என்பதை உறுதி செய்துகொண்டாள். ரேவதிக்கு லேசாக பயம் எட்டிப்பார்க்க ஆரம்பித்திருந்தது.  என்ன செய்யலாம்? இங்கிருந்து கிளம்பிவிடலாமா? இல்லை இன்னும் கொஞ்ச நேரம் காத்திருக்கலாமா?  கேள்விகள் மூளையைக் குதறின. எழுந்து வேகமாக காம்பவுண்டுக்கு வெளியே வந்து வீதியை இருபுறமும் நோட்டம்  இட்டாள். யாராவது வருகிறார்களா? உதவிக்காவது அழைக்கலாம். ஆனால் யாரும் வருவதாகத் தெரியவில்லை. என்ன செய்யலாம். மறுபடி உள்ளே சென்று கதவுக்கருகில் சென்றாள். மெல்ல குனிந்து சாவி துவாரம் வழியாக உள்ளே எதாவது தெரிகிறதா எனப் பார்த்தாள். உள்ளே லேசான வெளிச்சம் மட்டும் தெரிய பொருட்கள் எதுவும் கண்ணில் படவில்லை. 

அப்பொழுது கண்ணில் பட்டது கதவிற்கு நான்கடி தள்ளி இருக்கும் அந்த ஜன்னல். சரி ஜன்னலைத் திறந்து  பார்க்கலாமா? இல்லை பார்த்து எதாவது விபரீதமாக இருந்தால் ஏடாகூடமாக மாட்டிக் கொள்வோமே என மூளையும் மனதும் சண்டைபோட்டுக் கொள்ள இறுதியில் ஜன்னலைத் திறந்து பார்க்கலாம் என்ற மூளை வெற்றிபெற்றது. ஜன்னல் தரையிலிருந்து ஒரு ஆறடி உயரத்திலிருக்க, அருகில் கிடந்த ஒரு பழைய சிறிய ஸ்டூலை எடுத்துப்போட்டு அதன் மேல் ஏறினாள். ஜன்னல் கதவு உள்தாழ் இடப்படாமல் திறந்தேயிருக்க லேசாக ஒரு கதவைத் திறந்தாள். நாற்றம் குப்பென வீச ஆரம்பித்தது. உள்ளே ஒரே ஒரு CFL விளக்கு மட்டும் எரிந்து உள்ளிருந்து பொருட்களை அடையாளம் காட்டியது. பொருட்கள் ஆங்காங்கு சிதறிக் கிடக்க, செய்தித் தாள்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக இறைந்து கிடந்தன.

பொருட்களை ஒவ்வொன்றாக அலசிவிட்டு, பார்வையை இன்னும் உள்ளே நீள விட மங்கலாக எதோ ஒன்று கண்ணுக்கு புலப்பட்டது. என்னது அது என பார்வையை இன்னும் சற்று கூர்மையாக்கி கவனத்தை உள்ளே செலுத்த

பின்னாலிருந்து ரேவதியின் தோளில் ஒரு கை விழுந்தது.

"வீல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்" என்ற சத்ததுடன் அந்த ஸ்டூலிருந்து கீழே விழ

"உள்ள என்ன அப்டி பாத்துகிட்டு இருக்கீங்க?" என்றான் தோளில் கைவைத்த அவன்.

"யா.,..யா... யார் நீங்க...." என்றாள் பதற்றம் மாறாத ரேவதி.

'என் வீட்டுக்கு வந்துட்டு என்னையே யார்னு கேக்குறீங்களே இது உங்களுக்கே நியாயமா ரேவதி?" என்றான் சிரித்துக் கொண்டே..

"உள்ள... உ... உள்ள.. எதோ ஸ்மெல் வருது.. அதான் என்னனு பாத்தேன்...."

"ஹையையோ... ஸ்டவ்ல பால போட்டுட்டு நா பாட்டுக்கு மறந்து வெளிய பொய்ட்டேன்..." என்றான் தலையை சொரிந்து கொண்டே..

ரேவதிக்கு ஃபிரிட்ஜிலிருந்து ஐஸ் வாட்டரை எடுத்துக் கொடுத்தும் இன்னும் முகத்தில் தெளிவு வரவில்லை. இந்தக் குளிரிலிரும் வியர்த்து வடிந்தது.

"எனக்கு காலையில கால் பண்ணிருந்தது?...." என ரேவதி இழுக்க

"நாந்தான் உங்களுக்கு கால் பண்ணிருந்தேன் சாரி .. நீங்க இவ்ளோ பயப்படுவீங்கன்னு நா நினைக்கல.."

"ஃபோன உள்ள வச்சிட்டு எங்க போனீங்க.. "

"வழக்கமா நா நைட் ஒரு வாக் பொய்ட்டு வருவேன்... இன்னிக்கு நீங்க வர்றதுக்குள்ள கொஞ்சம் சீக்கிரமே பொய்ட்டு வரலாம்னு நெனைச்சி போனேன். ஆனா கொஞ்சம் லேட் ஆயிடுச்சி... சாரி"

"இங்க நீங்க மட்டும் தான் இருக்கீங்களா?'' என்றாள் ரேவதி

"இல்லை.. என் ஒயிஃபும் குழந்தையும் சொந்த ஊருக்கு போயிருக்காங்க.. அதான் வீடு இவ்ளோ சுத்தமா இருக்கு" என்ற அருணுக்கு வயது முப்பதி ரெண்டு. சுருட்டை முடி. கனமான உடம்பு. மாநிறம். சராசரி உயரத்தைக் காட்டிலும் சற்று அதிகம்.

"ஹ்ம்ம்ம்.. அக்காவப் பத்தி எதோ பேசனும்னு சொன்னீங்களே.. உங்களுக்கு அக்காவ எப்டி " என ஆரம்பித்தாள் ரேவதி

"உன்னால என்ன இன்னும் யார்னு கண்டுபுடிக்க முடியலையா ரேவதி?" என்றான் லேசான சிரிப்புடன்

"இ... இல்லை... யாரு..... " என்றால் நெற்றியை சுருக்கிக்கொண்டே

"உங்க அக்காவோட க்ளாஸ் மேட் அருண்... நீங்க தங்கியிருந்த ஹோம் வார்டனோட பையன்..."

"அ.... அருண்.. நீங்களா... அடையாளமே தெரியாதமாதிரி மாறிட்டீங்க.. உங்களுக்கு எப்டி நம்பர் கிடைச்சிது.. அக்காவ பத்தி எப்டி..." என ரேவதி இழுக்க

சோஃபாவிலிருந்த நியூஸ் பேப்பரை எடுத்து ரேவதி முன் வைத்தான் அருண்.

"சென்னையில் பூட்டிய வீட்டில் பயங்கரம்" என்ற தலைப்பில் ரேகாவும் ஆனந்தும் இணைந்திருக்கும் புகைப்படத்துடன் கூடிய அரைபக்க செய்தி வெளிவந்திருந்தது.


"நேத்து இந்த் நியூஸ பாத்தோன எனக்கு கையும் ஓடல காலும் ஓடல.. அப்புறம் ஹோம்ல இருந்த உன்னோட ஃப்ரண்ட்ஸ் எல்லாரையும் விசாரிச்சி உன்னோட நம்பர் வாங்குறதுக்குள்ள ரெண்டு நாளாயிடுச்சி. ஆக்சுவலா என்ன நடந்துச்சி?" என அருண் கேட்க

ஐந்து நிமிடத்தை விழுங்கி மொத்தத்தையும் கூறி முடித்தாள்.

"என்ன? உன்னோட ஹஸ்பண்ட் தான் ஆனந்த கொன்னாரா.. அவர் இப்போ எங்க இருக்கார்?" என்றான் வியப்புடன்
"க்ரோம்பேட் ஸ்டேஷன் லாக்கப்ல"

"நா அட்வோகேட்டாதான் இருக்கேன். வேன்னா அவர பெயில்ல எடுக்க ஏற்பாடு பண்றேன்"

"இல்ல அருண்.. அதெல்லாம் வேணாம். அவன் அங்கயே கிடக்கட்டும்.. அவன் ஒருத்தனால என்னோட வாழ்க்கையும் அக்காவோட வாழ்க்கையும் சேந்து வீணாயிடுச்சி... நீங்க எனக்கு உதவி பண்ணனும்னு நெனைச்சா அக்காவ
கண்டுபுடிக்க எனக்கு கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்க" என்றாள் கண்ணில் நீருடன்.

"கண்டிப்பா ரேவதி.. நாளைக்கே நாம ஸ்டேஷன் போய் கேஸ் இன்வெஸ்டிகேஷன் டீட்டெய்ல்ஸ் படிச்சிட்டு வேலையில எறங்கிடலாம்.
நீ தைரியமா வீட்டுக்கு போ... ரேகாவுக்கு எதுவும் ஆயிருக்காது"

***************
இன்னும் வியப்பு மாறாத முகத்துடன் டாக்டர் முன் அமர்ந்திருந்தனர் ரவிக்குமாரும் தங்கதுரையும்.

"டாக்டர் என்ன சொல்றீங்க... இந்த காலத்துல நரபலியா.. அதுவும் சென்னை சிட்டிலயா.. நீங்க சொல்றது எனக்கு ரொம்ப கன்ஃபியூஷனா இருக்கு... "

"இன்ஸ்பெக்டர்... இப்படித்தான் இருக்கும்னு நா கண்டிப்பா சொல்ல வரல. ஆனா நீங்க இன்னும் ஒருமுறை  மதன டீட்டெயிலா விசாரிக்கிறது நல்லதுன்னு எனக்கு தோணுது" என்றார் டாக்டர் ரங்கராஜன்.

"கண்டிப்பா டாக்டர்... ஒரு வேளை நீங்க சந்தேகப்படுற மாதிரி இருக்க வாய்ப்பிருக்கா... இதே மாதிரி வேற எதாவது கேஸ் பாத்துருக்கீங்களா டாக்டர்"

"பாத்துருக்கேன்... ஆனா இப்போ இல்லை ரொம்ப வருஷம் முன்னால... ஒருவேள மதன விசாரிச்சி கேஸ் அந்த ஆங்கிள்ல டீல் பண்ற மாதிரி இருந்தா ஒரு நாள் அதப்பத்தி டீட்டெயிலா சொல்றேன்" என சொல்லிக் கொண்டிருக்கும் போதே ரவிக்குமாரின் செல்ஃபோன் அழைத்தது. அதை எடுத்து காதில் பொருத்தி

"ரவிக்குமார் ஹியர்"

"----------------"

மறுமுனையின் குரலைக் கேட்டதும் ரவிக்குமாரின் முகம் லேசான மாற்றாத்திற்குட்பட்டது

"என்ன சொல்றீங்க... எப்போ?"

"--------------"

"ஓக்கே நா இப்போவே வர்றேன்" என பேசி முடித்தவரிடம்

"என்ன இன்ஸ்பெக்டர் எனிதிங் சீரியஸ்?" என்றார் ரங்கராஜன்

"யெஸ் டாக்டர்.... நா கொஞ்சம் அர்ஜெண்டா கெளம்பனும்... உங்ககிட்ட அப்புறம் பேசுறேன்... தங்கதுரை சீக்கிரம் வண்டிய ஸ்டேஷனுக்குவிடுங்க" என வேகமாகப் புறப்பட்டு 25 நிமிடத்தில் ஸ்டேஷனை அடைந்ததும் ரவிக்குமார் வேக வேகமா ஸ்டேஷனுக்குள் ஓடினார்.

எதிரே வந்த காத்தமுத்துவிடம்

"எப்போ பாத்தீங்க?"

"உங்களுக்கு கால்பண்றப்போ தான்சார்" என்ற பதிலை காதில் வாங்கிக் கொண்டே லாக்கப்பிற்குள் நுழைய

லாக்கப்பிற்குள் மதன் கண்கள் மேல்நோக்கி சொருகியபடி மல்லார்ந்து கீழே கிடந்தான்.

அடுத்த பதிவில் தொடரும்

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

1 comment:

selvasankar said...

HELLO BOSS..SEEKKIRAM ADUTHATHU ENNA?

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...