Monday, November 20, 2017

தீரன் அதிகாரம் ஒண்று – மிகை!!!

சில வருடங்களுக்கு முன்னால் மக்கள் படம் பார்த்த விதத்திற்கும் இப்பொழுது மக்கள் படம் பார்க்கின்ற விதத்திற்கும் நிறைய மாற்றங்கள். முன்பு ஒரு படத்தை படமாகப் பார்த்தார்கள். இப்போது அது படம் என்பதைத் தவிற மற்ற எல்லாமுமாகப் பார்க்கிறார்கள். இயக்குனருக்கே தெரியாத குறியீடுகளைத் தேடிப்பிடிக்கிறார்கள். இன்ன அரசியலைத்தான் இந்தப் படம் பேசுகிறது என பிடித்து வைக்கிறார்கள். படம் எப்படி இருக்கிறது என்பதை விட படம் எதைப் பற்றி பேசுகிறது என்பதைக் கொண்டு படத்தின் தரத்தை நிர்ணயிக்கிறார்கள்.

இரண்டு வருடங்களுக்கு முன்னர் வந்த கத்தி படம் இதற்கு ஒரு சிறந்த உதாரணம். ஏ.ஆர்.முருகதாஸ் எடுத்த படங்களிலேயே ரொம்பவே சுமாரான திரைப்படம் என்றால் அது கத்தி தான். சுவாரஸ்யமில்லாத காட்சிகளால் உருவக்கப்பட்ட கத்தி, விவசயாயப் பிரச்சனைகளைப் பற்றி பேசியது என்ற காரணத்தினால் “விவசாயத்தை வாட்ஸாப் மூலம் காக்கும்” கும்பல்களால் மாய்ந்து மாய்ந்து விளம்பரம் செய்யப்பட்டு வெற்றி பெற வைக்கைப்பட்டது. அடுத்த நல்ல உதாரணம் சமீபத்திய மெர்சல். மிகச் சுமாரான மெர்சல் தமிழில் அதிக வசூல் சாதனை படைத்த முதல் 5 படங்களுக்குள் வரவைத்ததும் இதே காரணம்தான்.

தற்பொழுது அதே போன்றதொரு மிகைபடுத்தலுடன் ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் தீரன் அதிகாரம் ஒண்று. தமிழ்நாட்டில் இருபது வருடங்களுக்கு முன்னர் நடைபெற்ற கொலை கொள்ளை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கிறது.

”அட்டகாசம் செய்யும் அரசியல்வாதியை, எண்ணி ஏழே நாட்களில் தூக்குகிறேன் பார்” என்று  சவால்விட்டு வெற்றி பெறும் வழக்கமான தமிழ் சினிமா போலீஸ் படங்களிலிருந்து தீரன் நிச்சயம் வேறுபட்ட ஒரு திரைப்படம் என்பதில் துளி கூட சந்தேகமில்லை.

நாம் தமிழில் இதுவரை பார்க்காத, வித்யாசமான கதைக்களம். புதுமையான எதிரிகள். தனிமையில் இருக்கும் வீடுகளில் புகுந்து வீட்டில் இருப்பவர்களைக் கொன்றுவிட்டு கொள்ளையடித்துச் செல்லும் கொலையாளிகளை பற்றிய உண்மைகள் ஒவ்வொன்றாக வெளிவர, நமக்கே அடிவயிற்றில் சற்று புளியைத்தான் கரைக்கிறது. அதுவும் இடைவேளைக் காட்சியில் உச்சகட்ட பயம் கலந்த பதற்றம்.  

வேட்டையாடும் குழுக்கள் எப்படி மக்களுடன் சேர்த்துக்கொள்ளப்படமால் கொஞ்சம் கொஞ்சமாக மனிதவேட்டைக்கு மாறினார்கள் என்பதை ஆதி வரலாறுகளிலிருந்து எடுத்துக் கூறுவதெல்லாம் அருமை.

ஆனால் அனைத்தும் அவ்வப்போது தான். முழுப்படத்தையும் அதே ஈடுபாட்டோடு நம்மால் பார்க்க முடிகிறதா என்றால் நிச்சயம் இல்லை. சில இடங்களில் கடுப்பு, சில இடங்களில் கொட்டாவி, இன்னும் சில இடங்களில் வடிவேலு போல் “போதும் போதும் லிஸ்ட் ரொம்ப லென்த்தா போயிட்டு இருக்கு” எனவும் சொல்லத் தோன்றுகிறது.

இயக்குனர் வினோத்தின் முதல் திரைப்படமனான சதுரங்க வேட்டையினை எடுத்துக்கொண்டால், திரைக்கதையில் எந்த இடத்திலும் எந்த விதத் தொய்வுமே இல்லாமல் சீராகச் சென்று முடியும், ஆனால் இந்த தீரன் திரைப்படத்தில் அது ரொம்பவே மிஸ்ஸிங்.

இயக்குனரின் முதல் குழப்பம் இந்தத் திரைப்படத்தை ஃபிக்‌ஷனாக எடுப்பதா அல்லது டாக்குமெண்டரியாக எடுப்பதா என்பது. கார்த்தி இருப்பதால் அவருக்கு ஏற்றார்போல் ஹீரோயிசத்தையும் காட்டவேண்டும், அதே போல இது உண்மைக்கதை என்பதால் அதன் உண்மைத்தன்மையும் கெட்டுவிடக்கூடாது என்ற இரண்டு மனநிலைகளுக்கு நடுவில் சிக்கி, தீரனை இரண்டு ஜான்ராவையும் கலந்த ஒரு கலவையாக்கி வைத்திருக்கிறார்.

கார்த்தியை அந்தக் கொள்ளை கொலை வழக்கை விசாரிக்கும் அதிகாரியாக அமர்த்துவதற்கு முன்பு  கார்த்தியின் காதல், கார்த்தியின் கேரியர் வளர்ச்சி என அவர்கள் காட்ட முயன்றிருக்கும் காட்சிகள்தான் படத்தின் சுவாரஸ்யத்திற்கு மிகப்பெரிய முட்டுக்கட்டை. அதுவும் கார்த்தி-ரகுல் சம்பந்தப்பட்ட காதல் காட்சிகள் அருவையின் உச்சகட்டம். காதலும் எடுபடவில்லை, காமெடியும் எடுபடவில்லை. ஒருவழியாக இடைவேளைக்கு ஒரு இருபது நிமிடங்கள் முன்பு கதை ஓட்டம் சூடு பிடிக்கிறது.

கொள்ளையடிக்கும் கும்பல் பயன்படுத்தும் ஆயுதம், அவர்கள் கொள்ளையடிக்கும் முறை என ஒவ்வொன்றாகத் திரையில் விரியும் பொழுது பயம் கலந்த சுவாரஸ்யத்துடன் நாம் திரைப்படத்திற்குள் ஒன்றுகிறோம்.  

தொடர்ந்து இரண்டாம் பாதியில் ராஜஸ்தான் மாநிலத்தின் வறண்ட கிராமங்களுக்குள் குற்றவாளிகளைத் தேடிப் பயணம் என கதை வட மாநிலங்களுக்குள் நுழைகிறது. காட்சிப்பதிவுகள் அருமையாக இருந்தாலும் காட்சிகள் ரொம்பவே சாதாரணமாக சுவாரஸ்யமில்லாமல் கடந்து செல்கின்றன. குற்றவாளையத் தேடி கிராமத்திற்கு சென்று மாட்டிகொள்ளும் போலீஸ் குழுவினரை நூற்றுக்கணக்கான கிராம மக்களிடமிருந்து ஒரு மூங்கில் கம்பை வைத்துக்கொண்டு கார்த்தி காப்பாற்றுகிறார். அதுவரை பயந்து காருக்குள் பதுங்கியிருக்கும் மற்ற போலீஸ்கார்ர்கள் கார்த்தி “லத்தி சார்ர்ர்ஜ்” என்று கூறியவுடன் எதோ அதற்கு முன்பு ஆர்டர் வராமல் இருந்தாதால்தான்  காருக்குள் பயந்து ஒளிந்திருந்தவர்கள் போல் வீறு  கொண்டு எழுந்து லத்தி சார்ஜ் செய்யும் காட்சி சிரிப்பைத்தான் வரவழைத்தது.

க்ளைமாக்ஸில் ஹவேரியாஸ் கூட்டம் மறைந்திருந்து, கவனத்தை திசை திருப்பிக் கொல்லும் யுக்தியை கையாளும் போது அதை அதற்கு மெல் பிரில்லியண்டாக செயல்பட்டு அவர்களை சுட்டுத்தள்ளும் காட்சி அடுத்த சிரிப்பு.

காட்சிகள் ஓடிக்கொண்டிருக்கும் போதே “நாங்கள் அவனைப் பிடிக்கச் போனோம்.. இன்ஃபர்மேசனுக்காகக் காத்திருக்கோம்” என்பது போன்ற கவுதம் மேனன் பட வகை வாய்ஸ் ஓவர் வேறு எரிச்சலை ஏற்படுத்துகிறது. படம் கிட்டத்தட்ட முடியப்போகிற தருவாயில் ஒரு பதிமூன்று பேரை வரிசையாக பெயர் அவர்கள் செய்யும் செயல் என அறிமுகப்படுத்திவிட்டு ஒவ்வொருவரைத் துரத்தி சுட்டுப் பிடிப்பதை சலிக்காமல் காட்டுவதெல்லாம் வெறும் நேரத்தைக் கடத்துகின்றனவே தவிற வேறு எந்த ஒரு தாக்கத்தையும் நமக்குள்  ஏற்படுத்தவில்லை.

“இந்தப் படம் உண்மைச் சம்பவம் என்று சொன்ன ஒரே காரணத்திற்காகப் பிடித்தது. இல்லையென்றால் படம் செம மொக்கைதான்”  என்று நண்பர் ஒருவர் இன்று பதிவிட்டிருந்தார். உண்மைச் சம்பவம் என்கிற டேக் லைன் அந்தப் படத்தை நிச்சயம் நன்றாக இருக்கிறது என்று சொல்லியே ஆகவேண்டும் என நம்மை ஏன் கட்டாயப்படுத்துகிறது? உண்மைச் சம்பவம் என்கிற டேக் லைன் என்பது மந்தமான காட்சிகளை எழுதுவதற்கான லைசன்ஸா?

வெற்றி மாறனின் ”விசாரணை” உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது தான். காஞ்சூரிங் உண்மைச் சம்பவங்களைக் அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டதுதான். அந்தத் திரைப்படங்கள் உண்மைக்கதையைப் படமாக்குகிறோம் என்று ஏனோதானோவென்று ஸ்க்ரிப்டை எழுதவில்லையே?

படத்தின் நீளமும் பாடல்களும்  இந்தப் படத்தின் சுவாரஸ்யத்திற்கு மிகப்பெரிய தடைக்கல். காதல் காட்சிகளையும் பாடல்களையும் வெட்டியெறிந்து விட்டு வெறும் இரண்டு மணி நேரப் படைப்பாகக் கொடுத்திருந்தால் நிறைய கேள்விகளைத் தவிர்த்திருக்கலாம்.

விவேகம் திரைப்படம் நன்றாக இல்லை என விமர்சனக்கள் எழுந்த சமயம் அஜித்தின் கடின உழைப்பிற்காகப் படத்தைப் பார்க்கலாம் என ஒரு குழு கிளம்பிய பொழுது நகைத்த அதே சிலர் இன்று வினோத் கடினமாக உழைத்திருக்கிறார் என்று தீரனுக்கு விளம்பரம் செய்கின்றனர். ஒவ்வொரு திரைப்படமும் பலரது கடின உழைப்பில் தான் உருவாகிறது. சாக்கடையை சுத்தம் செய்பவருக்கோ, அல்லது உச்சி வெயிலில் தார் வாளியைத் தூக்கிக்கொண்டு ரோடு போடுபவருக்கோ கடினமாக உழைக்கிறார் என்று ஒரு 50 ரூபாயை நாம் இலவசமாகக் கொடுக்கிறோமா? அவர்களது வேலையை அவர்கள் செய்கிறார்கள் அதற்கான ஊதியம் அவர்களுக்கு கிடைக்கும் என கடந்து சென்று விடுகிறோம். ஆனால் சினிமாவில் மட்டும்தான் கடின உழைப்பு என காரணம் காட்டி சுமாரான திரைப்படங்களை சூப்பர் ஹிட்டாக முயல்கிறோம். 

இறுதியில் தீரண்  தமிழ் சினிமாவில் வித்யாசனமான முயற்சி என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. ஆனால் சிலர் மிகைபடுத்திச் சொல்லும் அளவிற்கு ஆஹா ஓஹோ படைப்பெல்லாம் அல்ல. ஒரு முறை பார்க்கலாம் வகைப் படமே.


Friday, November 10, 2017

அவள் – ஹாலிவுட் படமானது எப்படி?!!!

அனைத்து சீசன்களிலிலும் மார்க்கெட் இருப்பது காமெடி படங்களுக்கும் பேய் படங்களுக்கும் மட்டும்தான். உள்ளூர் பேய் படங்களுக்கு மட்டுமல்லாம   டப்பிங் செய்யப்பட்ட அயல்நாட்டுப் படங்களான காஞ்ஜூரிங், இட், அனபெல் போன்ற படங்களுக்கு நம் மக்கள் கொடுத்த பேராதரவே இதற்கு சாட்சி. ஆனா சமீபகாலமா ஒரு நல்ல பேய் படம் பார்க்கலாம்னு தியேட்டருக்குப் போனா, பேய் வரப்போற நேரத்துல டக்குன்னு ஒரு கவுண்டரக் குடுத்து பொளக்குன்னு சிரிப்பை வரவச்சிடுறாங்க. காஞ்சூரிங் 2 படம் பார்த்தப்ப பேயப் பாத்து பயந்தவங்களைக் காட்டிலும் சிரிச்சவங்களே அதிகம்.  பேயே கடுப்பாகி என்னய்யா சீரியஸா பேசிக்கிட்டு இருக்கேன் சிரிச்சிக்கிட்டு இருக்கன்னு கேக்குற அளவுக்கு ஆக்கி விட்டாங்க நம்ம மக்கள்.

டிமாண்டி காலனி, மாயா போன்ற படங்களுக்கப்புறம் தமிழ்ல ஒரு பேய்படம் பெருவாரியான மக்களிகிட்டருந்து நேர்மறை விமர்சனங்களோட அதுவும் ஹாலிவுட் ஹாரர் படங்கள் அளவுக்கு இருக்குஅப்டிங்குற அடைமொழியோடவும் ஓடிக்கிட்டு இருக்கு. நிச்சயம் வெளிநாட்டுப் பேய் படங்கள் பாக்குற ஒரு உணர்வத்தான் இந்த அவள் படமும் குடுத்துருக்கு..

திரைக்கதை, ஒலி அமைப்பு இதயெல்லாம் தாண்டி ஹாலிவுட் ஹாரர் படங்கள் பயங்கர திகிலா இருக்குறதுக்கு முக்கியமான காரணம் கதை நடக்குற லொக்கேஷன். பனி, குளிர், தனியாக பல அறைகள் கொண்ட வீடு, வீட்டுக்குள்ளயே இருக்க பாதாள அறைன்னு அவங்க காட்டுற லொக்கேஷன்லயே நமக்குள்ள ஒரு அமானுஷ்யம் பரவ ஆரம்பிச்சிடும்.

ஆங்கிலப் படங்கள்ல இருக்க அதே அமானுஷ்யத் தன்மைய இந்த அவள் படத்துலயும் நமக்கு கொடுக்குறதுக்கு இயக்குனர் முதல்ல தெரிவு செஞ்சது அதேமாதிரியான ஒரு லொக்கேஷன். அதாவது கதை ஹிமாச்சாலப் பிரதேச மலைப் பகுதிகளில் நடப்பது போல சித்தரிக்கப்படுது. குளிர் பிரதேசம், மலைகள் சூழ்ந்த பசுமையான இருப்பிடம், பிரம்மாண்டமான ஒரு வீடுன்னு அத்தனை அம்சங்களையும் அதுல கொண்டு வந்துட்டாங்க. அதுமட்டுமில்லாம வீட்டோட உள்பகுதியோட அலங்கரிப்பும் அமைப்பும் அப்படியே வெளிநாட்டு வீடுகள் பாணியில  இருக்கு.

Spoiler Alert

கதை, திரைக்கதைன்னு பாத்தோம்னா இயக்குனர் நிறைய உழைச்சிருக்காரு. இரவு பகல் பாராம கண்ணு முழிச்சி ஒவ்வொரு ஆங்கிலப் படமா பாத்து ஒவ்வொரு படத்துலருந்தும் ஒண்ணு ஒண்ண எடுத்து ஒரு நல்ல படத்த நமக்கு எடுத்துருக்காரு. RoseMary’s Baby அப்டிங்குற படத்துலருந்து பேஸ் லைன மட்டும் எடுத்து, The Exorcist, The Ring, Exorcism of Emiley Rose, The Conjuring, Insidious மற்றும் பல படங்கள்லருந்து ஒவ்வொன்னா பாத்து பாத்து எடுத்து அவள உருவாக்கிருக்காரு.

எப்படி இருந்தாலும் படத்தோட ஸ்க்ரிப்ட்ல ஒரு முழுமைத் தன்மையை உணர முடியிது. ரொம்பவே நேர்த்தியா உருவாக்கப்பட்டிருக்க இந்தப் படத்துல ஒரு சில விஷயங்கள இன்னும் கொஞ்சம் கவனமெடுத்து செஞ்சிருக்கலாமோன்னு தோணுச்சி. உதாரணமா சைக்கார்டிஸ்ட் சுரேஷ் வரக்கூடிய காட்சிகள். சும்மா கண்ண மூடுங்கநா இப்ப உன்னோட ஆழ் மனசுக்கு போகப்போறேன்.. ஈஸிஈஸின்னு சொன்ன உடனே பேஷண்ட் டக்குன்னு மயங்கி, அவங்களோட சப்கான்ஷியஸ் மைண்ட் கூட பேச ஆரம்பிக்கிறதெல்லாம் 1945லருந்து காமிச்சிட்டு வர்ற சீன். அதயெல்லாம் இன்னும் நல்லா பண்ணிருக்கலாம்.

அதுக்கப்புறம் சர்ச் பாதிரியார் எக்ஸார்ஸிசம் செய்யிற காட்சி. எக்ஸார்ஸிசம் அதாவது ஒருத்தரோட உடம்புக்குள்ள புகுந்துருக்க தீய சக்திய வெளியேத்த கடைபிடிக்கப்படுற ஒரு சடங்கு. அதை அவ்வளவு சீக்கிரமா எந்த பாதிரியாரும் யாரும் செய்ய ஒத்துக்க மாட்டாங்கஅந்த சடங்கை செய்யிறதுக்கு முறைப்படி சர்ச்ல பர்மிஷன் வாங்கனும்.  (இதெல்லாம் இங்க்லீஷ் பேய் படங்கள்லருந்து பாத்து தெரிஞ்சிக்கிட்டது. நம்மூர்ல இதெல்லாம் நடைமுறையில இல்லன்னு நினைக்கிறேன்.) இதுல ஃபாதர் கொஞ்சம் கூட யோசிக்காம ஒத்துக்கிறாரு. எக்ஸார்சிசம் செய்யிற முறையையும் ரொம்ப டொம்மையா காமிச்சிருக்காங்க.

ஆண் குழந்தை வேணும்னா பெண் குழந்தையை பலி கொடுக்கனும்ங்குறத மட்டும் நம்ம டைரக்டரே நம்மூருக்கு செட் ஆகுற மாதிரி யோசிச்சிருப்பாரு போல.அங்கதான் கொஞ்சம் இடிக்குது. வெறும் பெண் பிள்ளைகளாகவே பெற்ற ஒருத்தர் அடுத்து கண்டிப்பா ஆண் குழ்ந்தை வேணும்ங்குற வெறியில ஒரு பெண்ணை பலி கொடுக்கிறார்ன்னா கூட ஒத்துக்கலாம். ஆனா இங்க அவருக்கு இருக்கது ஒரே பொண்ணு. அடுத்து பிறக்கப்போற குழந்தை ஆணா பிறக்கனும்னு முதல் குழந்தையை பலிகொடுக்குறார்னு கதை சொல்றதெல்லாம் இன்னா மேரி லாஜிக்னு தெரில.


பல இடங்கள்ல சவுண்ட் எஃபெக்ட்ல பயங்கரமா மிரட்டியிருக்காங்க. பொதுவா இந்த மாதிரி  எக்ஸார்ஸிசம் செய்யிற படங்கள் முதல்ல நல்லாருக்கும். ஆனா அந்தப் பொண்ணையோ பையனையோ பேய் பிடிச்சப்புறம் பெரும்பாலும் அவ்வளவு சுவாரஸ்யமா இருக்காது. தமிழ்ப் படங்கள்ல இதுக்கு நல்ல உதாரணம் மீனா, ப்ரஷாந்த் நடிச்ச ஷாக் படம். முதல் பாதி பாக்க பயமா இருக்கும். ரெண்டாவது பாதி மீனாவுக்கு பேய் ஓட்ட ஆரம்பிச்சப்புறம் அவ்வளவு சுவாரஸ்யமா இருக்காது. ஆனா இந்த அவள் படத்துல அந்த மாதிரி போர் அடிக்காம ரெண்டாவது பாதியையும் ரொம்ப சுவாரஸ்யமா எடுத்துட்டு போயிருக்காரு இயக்குனர். (கைவசம்தான் நிறைய படம் ஸ்டாக் இருக்கே.. அப்புறம் எப்புடி போரடிக்க விடுவாரு)


இந்தப் படத்த ஹாலிவுட் படம்னு சொல்ல இன்னோரு முக்கியக் காரணம் சித்தார்த் ஆண்ட்ரியா இடையே அடிக்கடி நடக்கும் ரொமான்ஸ் காட்சிகள். தமிழ்ப் படங்களில் நாசூக்காக காண்பிக்கப்படும் காட்சிகளை அப்பட்டமா காமிச்சிருக்காங்க. குடும்பம் குழந்தைகளோட படத்துக்கு போறவங்க தாவணிக் கனவுகள் பாக்யராஜ் மாதிரி சில்லறை காசோடதான் போகனும்.  

ஹாலிவுட் ஹாரர் படங்கள் அதிகம் பரிட்சையம் இல்லைன்னாஅவள்திகில் விரும்பிகள் கண்டிப்பாக தவற விடாமல் பார்க்க வேண்டிய ஒரு படம். மற்றவர்களுக்கு மெர்சல்னு ஒரு படத்துக்கு டிக்கெட் எடுத்துட்டுப் போய் உள்ள பல படத்த பாத்துட்டு வந்த மாதிரியான அனுபவம்தான் ஏற்படும்