Saturday, November 6, 2021

"அண்ணாத்த" ரஜினியின் பாத்திரப் படைப்பு!!



அண்ணாத்தயில் மிக அபத்தமாக நான் உணர்ந்தது தலைவரின் கதாப்பாத்திரம். ஆட்டோக்காரனாக, டாக்ஸி ட்ரைவராக, மூட்டை தூக்குபவராக, திருடனாக, ரவுடியாக அனைத்து வித அடித்தட்டுக் கதாப்பாத்திரங்களிலும் நடித்து நடித்து மக்களுடன் நெருக்கமானவர்.


ஆனால் இன்றைய சூழலுக்கு அவர் அப்படிப்பட்ட கதாப்பாத்திரங்களில் நடிக்கக் கூடாது. நடிக்கவும் முடியாது. அந்தக் காலகட்டத்தை அவர் எப்போதோ கடந்துவிட்டார்.


இன்றைய சூழலில் மக்களை வழிநடத்தும் ஒரு தலைவன்  அல்லது அதற்கு இணையான ஒரு கதாப்பாத்திரத்தில் மட்டுமே நடிக்கவேண்டும். அப்படிப்பட்ட கதாப்பாத்திரங்கள் மட்டுமே அவருடைய இமேஜூக்கு சரியாக இருக்கும். சொல்லப்போனால் விஜய், அஜித் கூட இனிமேல் அப்படிப்பட்ட கதாப்பாதிரங்களில் நடிக்க மாட்டார்கள்.


தலைவர் அந்த ஊரில் பிரெசிடெண்ட் என்று கூறுகிறார்கள். ஆனால் அவர் செய்துகொண்டிருப்பது தேவையற்ற வம்புகளை வளர்த்து கேஸ் வாங்கிக்கொண்டு காவல் நிலையத்தில் கையெழுத்து போட்டுக்கொண்டிருக்கிறார்.


அவர் எதற்காக அடித்தார் அல்லது எதற்காக அடிப்பார், அவர் போட்ட சண்டைகள் மக்கள் நலனுக்கான சண்டைகளா என்பது கூட விளக்கப்படவில்லை. மாறாக  வெங்காயம் வெட்டச் சொல்லும்,  ஓடிப்பிடித்து விளையாடும் அப்பாவி மாப்பிள்ளைகளை தூக்கிப் போட்டு பந்தாடுவதாக காண்பிக்கிறார்கள். 


அதுமட்டுமல்லாமல் தங்கைக்கு வெளியூர், வெளிநாட்டு மாப்பிள்ளைகளை பார்க்கச் சொல்லும் தன்னைவிட வயதான உறவினர்களின் கன்னங்களை பழுக்க வைக்கிறார். இவையெல்லாம் அந்தக் கதாப்பாத்திரத்தின் மதிப்பை வெகுவாகக் குறைக்கிறது.


அடுத்து பிரகாஷ்ராஜின்  கெட்டப் பார்ப்பதற்கு ஒரு வயதான, மதிப்பான ஒரு பெரியவராகக் காண்பிக்கிறார்கள். அவர் செய்யும் வில்லத்தனம் கூட ரொம்பப் பெரிய அளவில் இல்லை. சட்டப்படி பிரகாஷ்ராஜ் பக்கமே நியாயம் இருக்கிறது எனும்போது பார்க்கும் நமக்கு அவர் மீது எந்த வெறுப்பும் வரவில்லை.


ஆனால் அவரை ஊர்த்திருவிழாவில் காளையன் அனைவருக்கும் முன்னர் போட்டு அடிக்கிறார். அந்தக் காட்சியில் "நீதான் உங்க குடும்பத்துக்கு ஹீரோ" என்று வசனம் பேசி சமாளித்தாலும் பிரகாஷ் ராஜ் கதாப்பாத்திரத்துன் மீது பரிதாபமும் காளையன் கதாப்பாத்திரத்தின் மீது வெறுப்புமே எஞ்சுகிறது. 


அடுத்து குஷ்பூ, மீனா சம்பந்தப்பட்ட காட்சிகள். "எங்கக்காவ நீ கரும்புக் காட்டுக்குள்ள கூட்டிட்டு போனல்ல, எங்கக்காவ நீ சினிமாவுக்கு கூட்டிட்டு போனல்ல" என்பன போன்ற வசனங்களும் அதற்கு காளையன் வெட்கப்பட்டு எதோ சொல்லி சமாளிப்பதும் காளையன் கதாப்பாத்திரத்தை அதள பாதாளத்தில் தள்ளுகிறது. 


இரண்டாம் பாதியில் வில்லனைப் பழிவாங்கப் புறப்படுகிறார். கல்கத்தாவுக்கே செல்லாத ஒருவர் கல்கத்தாவில் காலூன்றியிருக்கும் ஒரு மிகப்பெரிய வில்லனை அழிக்கவேண்டும் எனும்போது அதற்கு திரைக்கதையில் படிப்படியான முன்னேற்றம் இருந்திருக்கவேண்டும்.


ஆனால் காளையன் செய்வதோ நேராக வில்லன் அலுவலகத்திற்குச் சென்று, சூரி, ஜார்ஜ் மரியான் போன்றவர்களின் உதவியோடு லாரிகளை பாம் வைத்து வெடிக்கிறார். அடுத்து வில்லனின் காரில் பெட்ரோல் ஊத்திக் கொளுத்துகிறார். வில்லனின் ஆட்களையே மிரட்டி வில்லனைக் கொல்லச்சொல்லி பயமுறுத்துகிறார். இதற்கு முதல்காட்சியிலேயே லாரியில் போட்ட பாமை அந்த பில்டிங்கின் பேஸ்மெண்டில் போட்டு விட்டிருந்தால் வில்லனின் சோலி அப்போதே முடிந்திருக்குமே. 


தங்கை மீது பாசம் கொண்டவர் என்கிற ஒரு விஷயத்தை பெரிதுபடுத்த காளையனை எக்கச்சக்கமாக சேதப் படுத்தியிருக்கிறார்கள். அதுவும் போகிற வருகிறவர்களை அடித்து அளப்பறை செய்கிறாரே தவிற அண்ணன் தங்கை பாசத்தை விளக்கும் உணர்ச்சிகரமான ஒரு காட்சி கூட இல்லை. 


எழுபது வயதில் ஒருவர் இதை செய்வதே பெரிது என்கிற வரிகளை நிறைய இடங்களில் பார்க்கமுடிகிறது. எழுபது வயதுக்காரர் ஒழுங்காக நடிக்கவில்லை, ஆட முடியவில்லை, ஓடமுயவில்லை அதனால் படம் சரியில்லை என்கிற பொழுது அந்த வாதம் சரியானது.


ஆனால் எழுபது வயதில் அவரால் மூன்று பாடல்களுக்கு நடனம் ஆட முடிகிறது. ஐந்து ஆறு சண்டைக் காட்சிகளை செய்ய முடிகிறது. முன்பு இருந்த படங்கள் அனைத்தையும் விட சுறுசுறுப்பாக இந்தத் திரைப்படத்தில் இருக்கமுடிகிறது எனும்போது அது ஏன் சரியாகப் பயன்படுத்தப்படவில்லை என்பதே கேள்வி.


மோகன்லாலின் லூசிஃபர் திரைப்படத்தைப் பார்க்கும்போது பொறாமையாக இருந்தது. மோகன்லால் பாடல்களுக்கு ஆடிக் கஷ்டப்படவில்லை. சண்டைக் காட்சிகளுக்கு மெனக்கெடவில்லை. ஆனால் அந்தக் கதாப்பாத்திரம் காண்பிக்கப்பட்ட விதம், அந்தக் கதாப்பாதிரத்தின் மதிப்பை எங்கோ கொண்டு சென்றது.


நடிகர் மகேஷ்பாபு கடந்த சில படங்களில் நடித்த கதாப்பாத்திரங்கள் ஒரு ஊரைத் தத்தெடுத்து முன்னேற்றும் செல்வந்தனின் மகன், நாட்டைத் திருத்தும் முதலமைச்சர், மக்களுக்காகப் போராடும் ஒரு மிகப்பெரிய கம்பெனியின் CEO, சக வீரனின் குடும்பத்துக்காகப் போராடும் ஒரு ஆர்மி ஆஃபீசர்.  


நாற்பதுகளில் இருக்கும் ஒரு நபரே இப்படிப்பட்ட கதாப்பாத்திரங்களைத் தெரிவு செய்யும்போது எழுபதுகளில் இருக்கும் நம்முடைய கதாப்பாத்திரங்கள் எப்படி இருக்க வேண்டும்?


அண்ணாத்தயின் காளையன் கதாப்பாத்திரம் ரஜினியின் இமேஜிற்கு இம்மியளவாவது உதவுகிறதா என்பதை உங்கள் யூகத்திற்கே விடுகிறேன்.


இதில் சோகம் என்னவென்றால், இந்தத் திரைப்படத்திற்குப் பிறகுதான் ரஜினி அரசியல் பிரவேசம் செய்யவிருந்தார். 

4 comments:

  1. First time ரஜினி படத்துக்கு negative review கொடுக்குற

    ReplyDelete
  2. Mothaththil Jai bhim idam mandiyittadhu annaththe...

    ReplyDelete
  3. கடைசியாக ரஜினியின் பாத்திர படைப்பு நன்றாக இருந்து எந்த ஒரு ஹைப்பும் இல்லாமல் ஓஹோ என்று ஓடிய படம் சந்திரமுகி தான். அதன் பிறகு வரிசையாக சறுக்கி காலா, கபாலி என்று திசை மாறி பேட்டை தர்பாரில் முடிந்து போனது. ரஜினி இந்த படங்களில் எல்லாம் 100 கோடி ரூபாயை வாங்கி பாக்கெட்டில் போட்டு கொண்டு காமெரா முன்பு வந்ததோடு சரி.. கதை அமைப்பு, மற்ற அம்சங்கள் பற்றி துளியும் கவலை படவே இல்லை என்பது தெளிவாக தெரிகிறது. அண்ணாத்த அதில் உச்சம். உங்க விமர்சனம் மிக சரி.
    இதற்கு முன்னர் எஜமான் படத்தில் ஊருக்கே எஜமான் என்று ரஜினியை தூக்கி வைப்பார்கள் பட ஆரம்பத்தில்... ஆனால் அதற்கு பிறகு செந்திலுடன் சேர்ந்து கொண்டு சின்ன பிள்ளை தனமாக வயலில் வேலை செய்யும் ஆட்கள் சாப்பிட கொண்டு வரும் உணவை திருட்டு தனமாக தூக்கு சட்டியை திறந்து பார்த்து சாப்பிடும் ஆளாக காட்டி எஜமான் கேரக்டரை ஏ அடித்து துவம்சம் செய்து விடுவார் டைரக்டர் உதய குமார். தன் அந்தஸ்துக்கு துளியும் பொருத்தம் இல்லாத சில்லுண்டி வேலைகளை செய்து கொண்டு இருப்பார் எஜமான் படம் முழுக்க...
    இப்ப அண்ணாத்த எஜமான் 2.
    என்ன ரஜினியின் கடைசி படம் கொஞ்சம் நல்லா இருந்திருக்கலாம்.

    ReplyDelete
  4. I AGREE WITH YOUR REVIEW AS A RAJINI FAN.
    DETAIL STUDY ABOUT THIS KAALAYAN CHARACTER.

    WELL DONE MUTHU SIVA 👌👌👌👏👏👏

    ReplyDelete