Tuesday, December 23, 2014

பிசாசு – ஒரு பொண்ணு உள்ள கண்ணா?!!

வர வர எனக்கு இந்த சூடு சுரனை போன்ற விஷயங்கள் கொஞ்சம் கொஞ்சமா குறைஞ்சிகிட்டே வருதுன்னு நெனைக்கிறேன். இல்லைன்னா இந்தப் படம் பாத்தே இருக்க மாட்டேன். சமீபத்துல மிஷ்கின் அவர்கள் ரசிகர்களோட கேள்விகளுக்கு பதில் சொல்ற மாதிரியான ஒரு வீடியோ ரிலீஸ் ஆச்சு. அதப் பாத்தும் ஒருத்தன் அதுக்கப்புறம் மிஷ்கின் படம் பாத்தா காரணம் நா மேல சொன்ன மேட்டர்தான். என்ன வாயிடா அது என்ன வாயி.. “வேணாம் சார்.. என் படத்த யாரும் பாக்க வேணாம் சார்” ன்னு சொல்றாரு. அப்புறம் எதுக்கு ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்த யாரும் பாக்க மாட்டேங்குறாங்க.. நானே போஸ்டர் ஒட்டுறேன்ன்னு படம் போட்டாருன்னு தெரியில. “வாயி இல்லைன்ன உன்ன நாயி தூக்கிட்டு போயிரும்” ன்னு வசனம் கேள்விப்பட்டுருப்போம். ஆனா வாயி இருக்கதால ஒருத்தன நாயி தூக்கிட்டு போகப்போகுதுன்னா அது நம்ம மிஷ்கின் சாரத்தான்.

சரி நம்ம பிசாசு படத்துக்கு வருவோம். படம் ஆரம்பிச்ச முதல் காட்சியிலிருந்தே பிசாச களத்துல இறக்கிருக்காரு மிஷ்கின். இதுவரை உலக சினிமாவில் காட்டாத ஒரு பேய். முகம் முழுக்க முடி, ஒரே ஒரு கண் என்று பிசாச காட்டுற ஒவ்வொரு சீனும் நமக்கு அடி வயித்துல பீதியக் கெளப்புது. ஒரு கட்டத்துல பயம் தாங்காம பக்கத்துல உள்ளவர்கிட்ட “அண்ணேன் என்னண்ணேன் பேய் இவ்ளோ பயங்கரமா இருக்கு..உங்களுக்கு பயமா இல்லையா?” னேன். “மூதேவி அது பேய் இல்லடா. அது தான் படத்தோட ஹீரோ.” ன்னாரு. அய்யயோ அசிங்கமா போச்சேன்னு நெனைச்சிட்டு “அப்போ பேய் எப்பன்னே வரும்?” ன்னேன். “வந்தா  பாத்துக்க” ன்னு சொல்லிட்டு படம் பாக்க ஆரம்பிச்சிட்டாரு.  
என்னய்யா ஹீரோ.. 

சரி அவனுக்கு மூஞ்சி எங்கடா இருக்கு? வடிவேலு சொல்றாமாதிரி “இருக்குன்னு எழுதிப் போடுங்கடா”.. முள்ளு புதரருக்குள்ளருந்து யாரோ ஒளிஞ்சி நின்னு பாக்குற மாதிரியே இருக்கு மூஞ்சி.

ஆக்ஸிடெண்ட்ல பலமா அடிபட்ட ஒரு பொண்ண அந்த முள்ளு புதரு காப்பத்த முயற்சி பண்றாப்ள. ஆனா on the way லயே அந்தப்புள்ள இந்த முள்ளுப் புதரு கைய்யப் புடிச்சிகிட்டே இறந்துடுது. ஃபீல் ஆயிடுறாப்ளே.. கொஞ்ச நேரம் வயலின் வாசிச்சா கூல் ஆயிடுவாப்ளே. மெண்டலி மெண்டல் ஆயி கண்ட இடத்துல நின்னு வயலின் வாசிக்கிறாரு.

இப்போ இந்த இடம் தான் ரொம்ப பயங்கராமான இடம். மனச தேத்திக்குங்க.. பயந்துடாதீங்க. செத்துப்போன புள்ள பேயா மாறி இவரு வீட்டுக்கே வந்துடுது. வந்த பேயி இவன் மொகரைய பாக்க பயந்துகிட்டு கிச்சன்ல இருக்க ஒரு சிம்னில போய்  ஒளிஞ்சிக்கிது. அப்புறம் அதுகிட்ட பேச்சுவார்த்தையெல்லாம் நடத்தி ஃப்ரண்ட் ஆயிடுறாங்க.

இதற்கிடையில மகளைக் கொன்னவன பழிவாங்கியே ஆகனும்னு வெறியோட கையில கத்தியோட சுத்துற அப்பா ராதாரவிக்கு நம்ம முள்ளுப் புதரு ஹெல்ப் பண்ணி எப்படி கொலைகாரன கண்டுபுடிக்கிறாருன்னு ஒரு ட்விஸ்ட வச்சி சொல்லிருக்க படம் தான் இந்தப் பிசாசு. .

எண்ணி ஒரு 15 பேர மட்டும் வச்சி, ஒவ்வொருத்தருக்கும் கரெக்டான ரோல வச்சி படம் எடுத்துருக்கது சூப்பர். ஆனா ஏன் மிஷ்கின் பட ஹீரோக்கள் எல்லாம் பிதாமகன் விக்ரம் மாதிரியே இருக்காங்கன்னு தான் புரியல. நேரா நடக்க மாட்டாய்ங்க. நிமிந்து பாக்க மாட்டாய்ங்க. எப்பவும் காலைக்கடன அடக்கி வச்சிருக்க மாதிரியே மூஞ்ச வச்சிருப்பாய்ங்க.

வழக்கமா மிஷ்கின் படங்கள்ல தூரமா ஒரு இடத்துல கேமராவ வேற எதயோ ஃபோகஸ் பண்ணி வச்சிட்டு, பின்னால கேரக்டர்கள் எதோ பண்ணிட்டு இருக்கும். அது இந்தப் படத்துலயும் தொடருது. முதல் பாதில நிறைய இடத்துல இதே மாதிரி பொறுமைய சோதிக்கும் காட்சிகள். முதல் பாதில பல இடங்களில் சில பேர் பொறுமை இழந்த comedy mode க்கு மாறி படத்த ஓட்ட ஆரம்பிச்சிடுறாய்ங்க.

முதல் பாதில எந்த அளவு கேலி கிண்டலுக்கு இடம் குடுத்துருக்காரோ அதுக்கு நேர் மாறா ரெண்டாவது பாதில வாயத்திறக்க விடாம படத்துக்குள்ள இழுத்து வச்சிடுறாரு. அதுக்கு முக்கிய காரணம் ராதாரவி கேரக்டர். மகள பறி குடுத்துட்டு தவிக்கிற அப்பாவா பின்னி பெடல் எடுத்துருக்குறாரு.

கொஞ்ச நாளுக்கு முன்னால “இருக்கு ஆனா இல்லை”ன்னு ஒரு  பேய் படம் வந்துச்சி. அந்தப் படத்தோட முதல் பாதியும் இந்தப் படத்தோட முதல் பாதியும் அப்படியே ஒண்ணு தான். இதச் சொன்னா அந்தாளு “வேணாம் சார்.. நீங்க படம் பாக்க வேணாம் சார்” ம்பாறு. நம்ம யாரு வம்புக்கும் போறதில்ல தும்புக்கும் போறதில்ல. நாம உண்டு நம்ம வேலை உண்டுன்னு இருந்துடுறது. “இருக்கு ஆனா இல்லை” ஏற்கனவே பாத்திருந்ததால பிசாசின் முதல் பாதி எனக்கு அவ்ளோ பெரிய impact ah குடுக்கல. புதிதாக பார்ப்பவர்களுக்கு ஓரளவுக்கு பிடிக்கலாம்.

பிசாசு மிஷ்கினோட முந்தைய படங்களின் அளவுக்கு தரமானதா இல்லைன்னாலும் ஒதுக்கிவிட முடியாத ஒரு படமே.


1 comment: