Saturday, April 9, 2022

டாணாக்காரன்!!



ஒரு ஃப்ரெஷ்ஷான, பார்வையாளர்களுக்கு ஒரு புதிய அனுபவத்தைக் கொடுக்கும் ஒரு கதைக்களம். பயிற்சிப்பள்ளியில் காவலர்கள் அனுபவிக்கும் கொடுமைகளைத் திரைக்குக் கொண்டு வந்திருக்கின்றனர். நேர்த்தியான உருவாக்கம்.

இரண்டு மூன்று கட்டிடங்கள், ஒரு மைதானம் இதை மட்டுமே வைத்து முழுப்படத்தையும் எடுத்து முடித்திருக்கிறார்கள். லொக்கேஷன்கள் அதிகம் இல்லை என்றாலும் படத்தில் ஒவ்வொரு ஃப்ரேமிலும் குறைந்தபட்சம் ஐம்பது பேர் இருக்கிறார்கள். அத்தனை பேரைச் சமாளித்து எடுத்ததற்கே பாராட்டவேண்டும்.

புதுமுகங்களாக இருந்தாலும் சில சிலர் நல்ல நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். லால் மற்றும் எம்.எஸ்.பாஸ்கர் படத்தின் தூண்கள் எனலாம். நன்றாக நடித்திருக்கிறார்கள்.

இந்த டாணாக்காரன் பேசுவது காவலர் பயிற்சிப்பள்ளியில் நடைபெறும் அரசியல் மற்றும் அதனால் ஏற்படும் பாதிப்புகள். ஆனால் அதில் பேசப்பட்டிருப்பது துறை பாகுபாடின்றி அனைத்து இடங்களிலும் பெரும்பாலானோர் எதிர்கொள்ளும் ஒரு சவால். அத்தனை பேரும் தங்களை கனெக்ட் செய்துகொள்ள முடியும்.

நிச்சயம் பார்க்கலாம்.

 

Spoiler Alert:

ஒரு சில விஷயங்களை இன்னும் நன்றாகச் செய்திருக்கலாம் என எனக்குத் தோன்றியவை.

படத்தின் ஆரம்பத்தில் ஆங்கிலேயர் காலத்தில் ஆரம்பித்து இந்த பயிற்சிப்பள்ளிகள் எப்படி பரிணாம வளர்ச்சி அடைந்தன என்பதை விளக்கி நிறைய போட்டிகள் நடத்தப்படுவதாகக் கூறுகின்றனர். அதே போல கதை ஆரம்பிக்கும்போதும் எதோ போட்டி, மெடல் என்றெல்லாம் பேச, பயங்கரமான போட்டிகளெல்லாம் இருக்கப்போகிறது என்று ஒரு ஆர்வத்துடன் இருந்தால் கடைசியில் பெரேடு எடுப்பதுதான் போட்டி என்கிறார்கள். புஸ் என்று ஆகிவிட்டது.

அதுமட்டுமல்லாமல் படத்தில் அதற்கு முன் பெரேடு எடுப்பதைப் பற்றிய பயிற்சியோ அல்லது அதன் நுணுக்கங்களையோ பயிற்சியாளர்கள் சொல்லிக்கொடுப்பது போன்ற காட்சியமைப்புகள் கூட இல்லை. நேரடியாகத் திடீரென நாளைக்கு பெரேடு செலெக்‌ஷன் என்கிறார்கள்.

விக்ரம் பிரபுவின் உடல் வாகும், உடல் மொழியும் சுத்தமாக ஒட்டாதது போல் இருந்தது. நிஜத்தில் அப்படித்தான் இருப்பார்கள் என வைத்துக்கொண்டாலும் ஒரு கதையின் நாயகனாக உடலைப் பாராமரிப்பது அவசியம். எனக்கென்னவோ விக்ரம் பிரபுவைவிட விஜய் ஆண்டனி இந்தப் படத்திற்கு கச்சிதமாக பொறுந்தியிருப்பார் எனத் தோன்றுகிறது.

க்ளைமாக்ஸ் கொஞ்சம் ட்ரமாட்டிக்காக இருந்திருக்கலாம். அவர்கள் காட்டியிருப்பது தான் நிஜம். மறுப்பதற்கில்லை. நிஜத்தில் யாரும் ஓவர் நைட்டிலோ, சில நிமிடங்களிலோ நல்லவர்களாக மாறப்போவதில்லை. ஆனால் அப்படி எடுத்திருந்தால் ஒரு சினிமா என்கிற கோணத்தில் பார்வையாளர்களுக்கு ஒரு நிறைவைத் தந்திருக்கும்.

 

-அதிரடிக்காரன்

No comments:

Post a Comment