Tuesday, August 2, 2022

D Block (2022)


Share/Bookmark


அருள்நிதி ஏன் அனைத்துப் படங்களிலும் ஒரு மாதிரி சைக்கோ கேரக்டர்களில் சிரிக்காமலேயே நடிக்கிறார் என்கிற கேள்வி அடிக்கடி எனக்கு எழுவதுண்டு. அதற்கான விடை  D block இல் கிடைத்தது. முதல் பாதியில் முதலாமாண்டு கல்லூரி மாணவராக அடிக்கடி சிரிப்பவராக நடித்திருந்தார். அவர் சிரிக்காமல் நடிப்பது தான் படம் பார்க்கும் நமக்கு நல்லது என்பதை அதன் பின்னர் புரிந்து கொண்டேன். 


சிறுபிள்ளைத் தனமான கதை. அமெச்சூரான மேக்கிங்.  காட்டுக்குள் கட்டப்பட்டிருக்கும் காலேஜ். ஒன்பது மணிக்கு மேல் யாரும் வெளியே வரக்கூடாது, மொட்டை மாடிக்கு போகக்கூடாது என என்னென்னவோ சொல்கிறார்கள். ஆனால் கொஞ்சம் கூட லாஜிக்கிற்கு மெனக்கெடவில்லை. எதயாவது எடுத்து வைப்போம் என்பதைப் போல எடுத்திருக்கிறார்கள்.


மொட்டை மாடிக்கு போகக் கூடாது என்றால் கண்டிப்பாக அங்கே ஒரு பெண் போக வேண்டும் என்பது தானே உலக வழக்கம். அப்படி ஹாஸ்டல் மொட்டை மாடிக்கு செல்லும் ஒரு பெண் மறு நாள் வேறு ஒரு இடத்தில் முகத்தில் காயங்களுடன் இறந்து கிடக்கிறாள். சிறுத்தை அடித்துவிட்டது என்கிறார்கள்.


பிரின்சிபாலிடம் பெண் மரணத்திற்கு நியாயம் கேட்கச் செல்கிறார்கள் அருள்நிதி குழுவினர். அதற்கு பிரின்சிபால்


“மொட்டை மாடிக்கு போகக்கூடாதுன்னு நாங்க எவ்வளவு சொல்லியும் அந்தப் பொண்ணு அங்க போச்சுல்ல. அதான் சிறுத்தை அடிச்சிருச்சி” என்கிறார்.


”ஏண்டா கொன்னப்பயலே மொட்டை மாடிய என்ன சிறுத்தைக்கு வாடகைக்காடா விட்டுருக்கீங்க? மொட்டை மாடிக்கு எப்டிடா சிறுத்தை வரும்?” என படம் பார்க்கும் நமக்கே கேட்கத் தோன்றும். ஆனால் துப்பறியும் புலி அருள்நிதிக்கோ அல்லது அந்த கல்லூரியில் படிக்கும் எந்த மாணவ மாணவியருக்கோ இந்த சந்தேகம் வரவே இல்லை. இதைப்போல இன்னும் பலப் பல அபத்தங்கள்.


பெரியார் பேரன் கரு பழனியப்பன் படத்தின் ஆரம்பம் முதல் கடைசிவரை கல்லூரியில் படமாகத் தொங்குகிறார். பின் ஒரே ஒரு காட்சியில் எண்ட்ரி கொடுத்து சந்திரமுகி பாம்பை ஒரு கோல் வித்யாசத்தில் வெற்றி பெறுகிறார். 


மொத்ததில் எருமைச்சாணி விஜய்யின் இயக்கத்தில் உருவான இப்படமும் அவர்கள் சேனலின் பெயரைப் போலத்தான் இருக்கிறது.


-அதிரடிக்காரன்


#Dblock #Athiradikkaran

Wednesday, July 27, 2022

ராக்கெட்ரி - நம்பி விளைவு:


Share/Bookmark


ஷங்கரின் சிவாஜி திரைப்படத்தில் ரஜினி கருப்புப் பணத்தைப் பற்றி தகவல் கேட்டுக் கொண்டிருக்கும் போது கூட்டத்திலிருக்கும் முத்துக்காளை எழுந்து “அய்யா கருப்புப் பணம்னா என்னங்க? கருப்பா இருக்கும்ங்களா?” என்றதும் அத்தனை பேரும் சிரிப்பார்கள். ரஜினி பிறகு கருப்புப் பணம் என்றால் என்ன எனக் கூறுவார்.  படம் பார்க்கும் பலருக்கும் அது ஒரு மொக்கைக் காமெடியாகவும், கொஞ்சம் எரிச்சலூட்டும் படியும் இருக்கும். ஆனால் உண்மையில் கருப்புப்பணம் என்றால் என்ன எனத் தெரியாத சிலருக்கு சிறு விளக்கம் கொடுத்து அவர்களையும் படத்துடன் ஒன்ற வைப்பதற்கான ஒரு காட்சி அது. 


ராக்கெட்டரிக்கு வருவோம். இஸ்ரோ விஞ்ஞானிகள் சிலர் ராக்கெட் சயின்ஸைப் பற்றி விவாதித்துக் கொண்டிருக்கும் பொழுது நாம் இடையில் மாட்டிக்கொண்டால் எப்படி இருக்குமோ அப்படித்தான் இருக்கிறது படத்தின் பெரும்பான்மையான பகுதி. Solid Fuel, Liquid fuel, cryogenic engines என்று மக்கள் அதிகம் பழக்கப்பட்டிராத  விஷயத்தைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.  ஆனால் அவை என்னென்ன, அவற்றை ஏன் பயன்படுத்துகிறோம் என ஒரு குறைந்தபட்ச விளக்கம் கூட பார்வையாளர்களுக்கு கொடுக்கப்படவில்லை.  கொஞ்சம் கூட ஈவு இரக்கம்  இல்லாமல் நாடு முழுவதும் சயிண்டிஸ்டுகள் மட்டுமே பார்க்கப்போவது போல ஒரு திரைப்படத்தை எடுத்திருக்கிறார்கள். 


நம்பியை நேர்காணல் செய்பவராக வருகிறார் சூர்யா. நேர்காணலிலேயே சூர்யா, நம்பியிடம் அவர்கள் பயன்படுத்தும் அறிவியல் வார்த்தைகளை விளக்கச் சொல்லிக் கேட்டு, எளிய பதில்கள் மூலம் பார்வையாளர்களுக்கு புரியும்படி செய்திருந்தால் நிறையவே கனெக்ட் ஆகியிருக்கும். ஆனால் தற்போது எதோ ஒரு தனி உலகத்தில் கதை நடந்து கொண்டிருப்பது போல எட்ட நின்று நாம் வேடிக்கை மட்டுமே பார்க்க முடிகிறது. 


நம்பியின் கதையை பாமர மக்களுக்கும் கொண்டு சேர்ப்பது தான் படத்தின் நோக்கமென்றால் அதைச் செய்திருக்க வேண்டும். அல்லது படம் ISRO வில் பணி செய்பவர்கள் பார்ப்பதற்க்கு மட்டும் எடுக்கப்பட்டது என்றால் இது ஓக்கே. 


சூர்யாவைக் கவுரவ வேடத்தில் நடிக்கக் கூப்பிட்டதற்காக, நம்பியுடைய நேர்காணலில் நம்பியைப் பற்றிய பல விஷயங்களை நம்பி வாயால் கூற விடாமல் சூர்யாவே ஒப்புவிக்கிறார். 


மற்றபடி மாதவன் சிறப்பாக நடித்திருக்கிறார். நிறைய காட்சிகள் நன்றாக வந்திருக்கிறது. க்ளைமாக்ஸில் மாதவன் கதை சொல்லி முடிக்கும்போது ஸ்டூடியோவில் இருக்கும் அனைவரும் அழுகிறார்கள். ஆனால் அது நமக்கு அந்த அளவிற்கு ஒரு தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. அவற்றை இன்னும் சிறப்பாகக் காட்சிப்படுத்தியிருக்க வேண்டும். ஒரு இயக்குனராக மாதவனுக்கு இன்னும்  நிறைய பயிற்சி வேண்டும். 


மோசமில்லை. ஆனால் இன்னும் சிறப்பாக செய்திருக்கலாம். 


-அதிரடிக்காரன்


#RocketryTheNambiEffect #Athiradikkaran

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...