Tuesday, July 22, 2014

பிரபல பதிவர்களுடன் கவுண்டர்!!!


Share/Bookmark
குறிப்பு : இந்தப் பதிவு வெறும் நகைச்சுவைக்கே.. யார் மனதையும் புண்படுத்தும் நோக்கத்துடன் எழுதப்பட்டது அல்ல. கவுண்டர் பதிவென்பதால் அவர் பாணி வசனங்கள் சில தவிர்க்க இயலாததாகிவிட்டது.

கவுண்டரும் செந்திலும் ஒரு வெள்ளிக்கிழமை காலையில பத்து மணிக்கு அன்னிக்கு ரிலீஸான ஒரு புதுப்படத்துக்கு

தியேட்டருக்கு போறாங்க. கவுண்டர் ஸ்லாங்குல தொடருங்க.

கவுண்டர் : டேய் மண்டையா... நீ சொன்னேங்குறதுக்காக இந்த ஆல் இன் ஆல் அழகுராஜா மொத மொறையா ஒரு படத்த மொத ஷோ பாக்க வந்துருக்கேன். மவனே இதுல எதாவது நடந்துச்சி நடு மண்டையப் புடிச்சி கடிச்சி வச்சிருவேன்.

செந்தில் : சும்மா பொலம்பாம சீக்கிரம் வாங்கன்னே... மொத ஷோ வேற கூட்டம் வேற அதிகமா இருக்கும். டிக்கெட் கிடைக்காம எதுவும் போயிடப்போவுது.

(தியேட்டர் வந்ததும் கவுண்டர் வெளியில பாக்குறாரு யாருமே இல்லை)

கவுண்டர் : டேய் படம் போட்டாங்க போலருக்கு சீக்கிரம் போய் டிக்கெட் எடுத்துட்டு வாடா...

செந்தில் : இதோ வந்துட்டேன்னே.... (இரண்டு நிமிடத்தில் செந்தில் டிக்கெட் எடுத்துட்டு வர ரெண்டு பேரும் உள்ள போறாங்க. தியேட்டர் கதவ திறந்து உள்ள போகும் போது

கவுண்டர் : டேய் மண்டையா.. என்னடா ஒரே கருங்கும்முன்னு இருக்கு (ன்னு சொல்லிட்டு கண்ண மெல்ல கசக்கிட்டு தியேட்டர் உள்ள சுத்தி சுத்தி பாக்க மொத்தமே ஒரு நாலு பேரு அங்கங்க உக்காந்துருக்காங்க)

கவுண்டர் : (செந்தில் பின்னந்தலையப் புடிச்சி) டேய் பெருச்சாளி... இந்தப் படத்துக்கு தான் கூட்டம் அலை மோதுதா? இதுல டிக்கெட் கெடைக்காதுன்னு வேகமா வேற வரச்சொல்லுற

செந்தில் : ஐ ஆம் வெரி சொரின்னே...

கவுண்டர் : வீட்டுக்குவா நாயே மம்பட்டிய எடுத்து நடுமண்டைய கொத்தி வச்சிடுறேன்.. (ஹை பிட்ச்ல) ஆமா யாருமே வராத இந்தப் படத்துக்கு காலங்காத்தால வந்து உக்காந்துருக்கானுகளே யாருடா இவனுக... வா பாக்கலாம்...

முதல்ல ஒருத்தர  பாக்குறாங்க..

கவுண்டர் : அய்யா பேர் என்னங்க?

போ.ஆ.செ : போரூர் ஆனா செந்தில் ங்க

கவுண்டர் : நீ ஆனா செந்திலா வேணாலும் இரு.. இல்லை ஆவன்னா செந்திலா வேணாலும் இரு.. அதென்ன விடியக் காலையிலயே தியேட்டர் பக்கம்?

போ.ஆ.செ : நான் இந்தத் திரைப்படத்தை சென்ற வாரமே பார்க்க வேண்டும் என்று இருந்தேன்.

கவுண்டர் : இன்னிக்குத் தான் படத்தையே ரிலீஸ் பன்னிருக்கானுக.. இதுல நீ போன வாரம் எப்புடி பாக்கனும்னு இருந்த... ?

போ.ஆ.செ : அட விடுங்கண்ணே வழக்கமா இதே டயலாக் எழுதி பழகிடுச்சி.. அதாவது இந்தப்படத்திற்கு நான் வருவது என முடிவெடுத்து ஆபீசுக்கு லீவ் போட்டுவிட்டு  வந்து கொண்டிருக்கையில் என் நண்பர் ஒருவர்....

கவுண்டர் : யப்பா.. முடியலடா சாமி...நா கெளம்புறேன் நீ ஆள விடு

போ.ஆ.செ : அண்ணே போறதுக்கு முன்னால ஒரு தத்துவம் சொல்றேன் கேட்டுட்டு போங்க..

கவுண்டர் : சொல்லு ஆனா தத்துவம் நல்லா இல்லைன்னா இவன் உன் மூக்க கடிச்சி வச்சிருவான் பரவால்லையா

போ.ஆ.செ : சரி. சொல்றேன் கேளுங்க " முன்னேற்றம் என்பது வாழ்க்கையில் நல்லவனை விட வல்லனுக்கே இயல்பாக அமைகிறது. அதனால் நீயும் வல்லவனாகவே இரு"

கவுண்டர் : எதுக்கும் நீ கொஞ்சம் தள்ளியே இரு... டேய் மண்டையா ரொம்ப நாளா யார் காதையாவது கடிக்கனும்னு சொல்லிக்கிட்டு இருந்தியல்ல... கடிச்சி வச்சிட்டு வா...

அடுத்து ரெண்டு வரிசை தள்ளி ஒருத்தர் ரெண்டு குயர் டிம்மி பேப்பர் வச்சி வேக வேகமா எழுதிகிட்டு இருக்காரு

கவுண்டர் : டேய் நாம தியேட்டருக்குள்ள வந்தோமா இல்லை எதுவும் பள்ளிக்கூடத்துக்குள்ள வந்துட்டோமா என்னடா இது? எழுதிகிட்டு இருக்கவர கூப்பிட்டு

கவுண்டர் : தம்பி படம் அங்க ஓடிகிட்டு இருக்கு நீ பாட்டுக்கு இங்க பேப்பர்ல எழுதிகிட்டு இருக்கியே அப்புறம் எதுக்கு படத்துக்கு வந்த? யாருப்பா நீ?

செ.கு : என் பேரு பீப்பீ செந்தில் குமாருண்ணே.. நா படத்துக்கு விமர்சனம் எழுதிகிட்டு இருக்கேன்...

கவுண்டர் : என்னது விமர்சனம் எழுதிகிட்டு இருக்கியா? படம் ஆரம்பிச்சி இன்னும் 10 நிமிஷம் கூட ஆவல அதுக்குள்ள விமர்சனமா?

செ.கு : அட நீங்க வேற... நா எழுதிகிட்டு இருக்கது அடுத்த வாரம் ரிலீஸ் ஆகப்போற படத்துக்கு.

கவுண்டர் : என்ன அடுத்த வாரம் ரிலீஸ் ஆவப்போற படத்துக்கா.. அடப்பாவி.. அப்போ இந்தப் படத்துக்கு?

செ.கு : அதப் போன வாரமே எழுதிட்டேன்..

கவுண்டர் : எங்க குடு பாப்போம்... ன்னு சொன்னதும் செந்தில் குமார் ஒரு அம்பது பக்க நோட்டு புத்தகத்த எடுத்து குடுக்குறாரு.. கவுண்டர் அதப்பத்து ஷாக் ஆகி

கவுண்டர் : அடங்கப்பா.. இது என்னடா படத்தோட ஸ்கிரிப்ட விட பெருசா இருக்கும் போலருக்கு...  "தம்பி... அது என்ன எனக்குப் பிடித்த வசனங்கள்னு போட்டு படத்துல உள்ள எல்லா வசனத்தையும் எழுதிருக்க? ஆமா அப்புறம் இது என்ன பாட்டா செருப்புல விலை போடுறமாதிரி மார்க் 2.25, 2.35 ன்னு.. அத ரவுண்டா குடுத்தா உங்க லட்சியத்துக்கு எதாவது இழுக்கு வந்துருங்களா...

செ.கு : அதெல்லாம் விடுங்க.. டைரக்டர்கிட்ட சில கேள்விகள் கேட்ருக்கேன் பாருங்க... யாராலயும் பதில் சொல்ல முடியாது

கவுண்டர் : டைரக்டர்ட்ட நீ கேள்வி கேக்குறது இருக்கட்டும்.. நா உன்ன ஒரு கேள்வி கேக்குறேன். "நீ படம் பாக்க வந்தியா இல்லைப் பரிட்சை எழுத வந்தியா?" உன் பக்கத்துல நிக்கிறதே டேஞ்ஜர்... நா வர்றேம்ப்பா.." ன்னு அடுத்த ஆளப் பாக்க நகர்றாரு... அப்போ செந்தில்


செந்தில் : அண்ணே இதுல ஒரு ஒற்றுமையப் பாத்தீங்களா

கவுண்டர் : என்ன நாயே?

செந்தில் : மொதல்ல பாத்தோமே அவர் பேரும் செந்திலு... அடுத்து பாத்தோமே அவர் பேரும் செந்திலு.. ஏன் பேரும் செந்திலு... எப்புடி?

கவுண்டர் : அட அட அட.. என்னா ஒரு ஒற்றுமை.. நீ சொன்ன வாக்கியத்த தஞ்சாவூர் கல்வெட்டுல எழுதி வச்சிகிட்டு பக்கத்துலயே நீ உக்காந்துக்க... உனக்குப் பின்னால வர்ற சந்ததிகள் அதப் பாத்துப் படிச்சி தெரிஞ்சிக்கட்டும்.

அடுத்து ரெண்டு வரிசை தாண்டி ஒருத்தர் ரொம்ப சீரியஸா படம் பாத்துக்கிட்டு இருக்காரு... ஹீரோயின் வரும்போது மட்டும் சிரிக்கிறாரு. மத்த நேரத்துல சீரியஸா உக்காந்துருக்காரு

கவுண்டர் : டேய் மண்டையா யாருடா அது...வித்யாசமான கேரக்டரா இருக்கு. வா போய் பேசிப்பாக்கலாம்னு அவர் பக்கத்துல போய் "சார்" ங்குறாரு உடனே

அவர் : பீப் பீப் பீப்....ன்னாடா வேணும் உங்களுக்கு ( பீப் பீப் - சென்சார் செய்யப்பட்ட வார்த்தைகள்)

கவுண்டர் : ஒண்ணுமில்லீங்... அது என்னங் படத்துல லேடீஸ் வரும்போது மட்டும் வாய நாலு இஞ்ச் நல்லா தொறக்குறீங்.. மத்த நேரத்துல மொறப்பா இருக்குறீங்ன்னு தெரிஞ்சிக்கலாம்னு வந்தேங்

அவர் : பீப் பீப்... அதெல்லாம் என்ன பீப் க்கு உன்கிட்ட சொல்லனும்...பீப்..  நா யாரு தெரியுமா.. பீப் பீப் போயிடு..

கவுண்டர் செந்திலைப் பார்த்து

கவுண்டர் : டேய் சென்சார் போர்டு மண்டையா இநத அளவு காதுல தேன் வந்து பாயுற மாதிரி பேசுறாரே யாருடா அது?

செந்தில் : அது தான்னே அவரு

கவுண்டர் : அவரா? ஓ..... அவ்வுறா... சரி சரி வா போகலாம்னு திரும்புறவறரு டக்குன்னு ஷாக் அடிச்சி நிக்கிறாரு

கவுண்டர் : (ரொமான்ஸ் மூடுல) டேய் பீரங்கி வாயா.. அங்கப் பாருடா... இந்த ஷோவுக்கு கூட  ஒரு யங் கேர்ள் வந்துருக்கு... வாவ் வாட் ய பாப் கட்டிங்? பின்னாலருந்து பாக்கும் போதே  அந்த அழகு தெரியுதுடா

செந்தில் : நானும் வட இந்தியாவுலயும் பாத்துருக்கேன் தென் இந்தியாவுலயும் பாத்துருக்கேன்.. இப்புடி ஒரு ரங்கோலி கட்டிங்க நா பாத்ததே இல்லியே..

கவுண்டர் : "வா முன்னால போய் பாக்கலாம்"..ன்னு ஆசையா முன்னால போய் மூஞ்ச பாக்குறாரு... முகத்த பாத்ததும் டக்குன்னு ஷாக் ஆயி

கவுண்டர் : இய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்.. அடடடா.... பேக்குலருந்து பாத்து ஏமாந்துட்டியேடா.... ய்ய்ய்யய்ய..சோ... டேய் அம்மா வாட்டர் மண்டையா அவன் பேரு என்னன்னு கேளுடா..

செந்தில் : ஹலோ அண்ணேன் கேக்குறாருல்ல.. உங்க பேரு என்னனு சொல்லுங்க..

பி.பி : யோ..யோ...தி ஈஸ் பி.பி.  ரேம்போக் மாடல்...

கவுண்டர் : டேய்.. ப்ரொஜெக்டர் மண்டையா... இந்தத் தம்பிய பொத்துனாப்புல பின் சீட்டுக்குத் தூக்கிட்டு வா... ரொம்ப நாளா ஆக்சன் படம் பாக்கனும்னு சொன்னியல்லோ... இன்னிக்கு காட்டுறேன்..

குறிப்பு: இது என்னால் வலைச்சரத்தில் எழுதப்பட்ட பதிவின் மீள்வடிவம்

Monday, July 21, 2014

வேலையில்லா பட்டதாரி- SUPER STAR - IN MAKING!!!


Share/Bookmark
படம் ஆரம்பிக்கிற நாள்லருந்து படத்தோட கதையோ இல்லை படத்தைப் பத்தின செய்தியோ இல்லை  ஏதாவது ஸ்டில்ஸோ ரிலீஸே ஆயிடக்கூடாதுன்னு ஷங்கர் பட பாணியில ரொம்ப சீக்ரெட்டா வச்சி படத்த ரிலீஸ் பண்ணி   ஹிட்டடிக்கிறது ஒரு ரகம். அதே, படத்தோட மொத்தக் கதையையும் முன்னாலயே சொல்லி,  ஆடியன்ஸ தியேட்டருக்கு வரச்சொல்லி,  சொல்லி அடிக்கிறது இன்னொரு ரகம்...இந்த வேலையில்லா பட்டதாரி சொல்லி அடிக்கிற ரெண்டாவது ரகம். இந்தப் படத்தோட ரெண்டு நிமிஷ ட்ரெயிலரே போதும்  படத்தோட மொத்தக் கதையையும் நமக்கு சொல்றதுக்கு. இருந்தாலும் எந்த சலிப்பும் இல்லாம செம  ஜாலியான ஒரு படத்த  கொடுத்துருக்காங்க.

தனுஷுக்குனே அளவெடுத்து தச்சா மாதிரியான ஒரு கேரக்டர். ஏற்கனவே பல படத்துல அவர்  பண்ணதுதான்னாலும் இதுலயும் கொஞ்சமும் குறையில்லாம பண்ணிருக்காரு. முதல் பாதி முழுசுமே செம  ஜாலியா போவுது. காமெடில பிண்ணிருக்காய்ங்க. சிவில் படிச்சிட்டு கட்டிடம் கட்டுறத தவற வேற எந்த  வேலைக்கும் போக மனசில்லாம நாலு வருஷமா வேலைதேடி அலையிறவரு தனுஷ்.  அவருக்கு பின்னால  படிக்கிற தம்பி வேலைக்கு போயி நல்லா சம்பாதிச்சி காரெல்லாம் வாங்க நம்மாளுக்கு லைட்டா பொகையிது அப்பாவும் அடிக்கடி ரெண்டு பேரையும் கம்பேர் பண்ணி பேசி நம்மாள கடுப்பேத்துறாரு. பின்னால  அவருக்கு எப்படி வேலை கெடைக்குது, அதுக்கப்புறம் அவர் ஃபேஸ் பண்ற ப்ரச்சனைகள் என்னென்னங்குறத சொல்றது தான் இந்த VIP. என்னடா சன் டிவி டாப் டென் சுரேஷ் குமார் மாதிரி  பேசுறேனேன்னு தானே வெறிக்கிறீங்க?

தமிழ் சினிமாவோட அம்மா கேரக்டர கொஞ்ச நாளுக்கு முன்னால் சுஜாதா குத்தகைக்கு எடுத்துருந்த மாதிரி  இப்போ சரண்யா. அனைத்து ஹீரோக்களுக்கும் அம்மா அவங்க தான். அப்பாவா சமுத்திரக்கனி செண்டிமெண்ட் வசனங்கள்ல மட்டும் இல்லாம காமெடி வசங்கள்லயும் டெலிவரி செம. "ஏண்டா 15  வருசத்துக்கு முன்னால இதே வீட்டுக்குள்ளருந்து ball எடுத்துத்துட்டு வந்த.. அப்போ உன்னோட 15 பேர்  விளையாண்டாய்ங்க.. எல்லாரும் வேலைக்கு பொய்ட்டாய்ங்க.. நீ இப்பவும் இங்க பால் எடுத்துகிட்டு தான்  இருக்க" ன்னு சொல்றப்போவும், "ஊதுடா ஊது என் மூஞ்சில ஊது"ன்னு சொல்லும் போதும் 7G விஜயன  ஞாபகப்படுத்துறாரு.

அடுத்த வீட்டுப் பொண்ணா அமலாப்பால்... தனுஷ் கிட்ட பக்கத்து வீட்டு அமலாப் பால ஹீரோயின் ரேஞ்சுக்கு சரண்யா பில்டப் பண்ணி சொன்னப்புறம் தனுஷ் அவளப் பாத்து "இதப்பாரு உனக்கு ஹீரோயின் அளவுக்கெல்லாம் சீன் இல்லை..  சுமாராத்தான் இருக்க" ன்னு சொன்னதும் எனக்கு  "ச்ச நம்ம மனசுல இருக்கத அப்படியே எழுதிருக்காய்ங்கையா..." ன்னு செம ஜாலியாயிருச்சி.. நல்ல வேளை அமலா பாலோட அகோர முகரைகளை  காமிக்காம ஓரளவு சுமாராவே காமிச்சிருக்காங்க. தெய்வத்திருமகளுக்கு அப்புறம் இதுல ஓரளவு பாக்குற மாதிரி இருக்கு.

படத்தோட ட்ரெயிலர்லயே எப்படி மொத்தக்க தையையும் டைரக்டர் சொன்னாரோ அதே மாதிரி அனிரூத்தும்  ட்ரைலர்லயே மொத்த மீசிக்கையும் சொல்லிட்டாரு.. வக்காளி ட்ரெயிலர்ல வர்ற ரெண்டே BGM தான்  படம்  மொத்ததுக்குக்கும். ஒரு லெவல்ல BGM கடுப்பேத்த ஆரம்பிச்சிருச்சி. பாட்டும் அதே மாதிரிதான். ட்யூன்  எல்லாம் நல்லாத்தான் இருக்கு, ஆனா இவன் ஏதேதோ instruments ah போட்டு காய் மூய்னு கத்தி, கெடுத்து  வச்சிட்டான். பாட்டு ஓடும்போது காதுல காய்ச்சின எண்ணைய ஊத்தி கொடாய்ஞ்சி விட்டா  மாதிரி ஒரே  கடுப்பா இருக்கு. சில நேரத்துல மேல போஸ்டர்ல தனுஷ் என்ன பண்றாரோ அதயே பண்ணனும்னு போல தோணுச்சி.

முதல் பாதி முழுதும் தம்பி, காதலி, அம்மா அப்பான்னு வீட்டை சுத்தியே செம்ம காமெடியா படம்  நகர்ந்துகிட்டு இருக்க, இரண்டாவது பாதியில கதைக்களமே அப்படியே மாறுது. கொஞ்சம் சீரியஸா.. வில்லனா ஒரு சின்னப் பையன் நம்ம ஆர்யா மாதிரி "என்னே பாஸ்.. எப்டி இருக்கீங்கே பாஸ்"ன்னு கொழ கொழ தமிழ் பேசிக்கிட்டு வர்றான். ஆனா கடைசி வரைக்கும் தனுஷ் அவன ஒரு வில்லனாவே மதிக்காம  இருக்கதுதான் படத்துலயே ஹைலைட். அதுவும் க்ளைமாக்ஸ்ல "தம்பி உனக்கும் எனக்கும் எதாவது  ப்ரச்சனையா?" ன்னு தனுஷ் கேக்கவும் அதுக்கு அந்தப் பையன் பம்புறதும் அல்டிமேட் காமெடி. ரெண்டாவது  பாதியில காமெடிப் பொறுப்ப விவேக் எடுத்துகிட்டு செம்மையாவே செஞ்சிருக்காரு.

ரெண்டாவது பாதில "இவன் வேற மாதிரி" பட ஹீரோயினும் இருக்கு. அதப் பாத்தப்புறம் "அடப் பாவிகளா இந்தப் புள்ளைய மொதல்லையே எறக்கிருக்கலாமேடா,.,. அமலாப் பால் மூஞ்சிய பாக்குறத கொஞ்சம் கம்மி பண்ணிருக்கலாம். நல்ல வேளை தெலுங்குப் பட பாணியில கடைசியில ரெண்டு ஹீரோயினோட தனுஷ் ஆடுற மாதிரி எதும் குத்துப் பாட்டெல்லாம் வக்கல.

என்னதான் படம் கொஞ்சம் கூட போர் அடிக்கலன்னாலும் அங்கங்க சில சில லாஜிக் சொதப்பல்கள், சில  சினிமாத்தனமான காட்சிகளை தவிர்க்க முடியவே இல்லை. அதுவும் கால் செண்டர்ல முதல் மாசத்துல 50000 ரூபாய்க்கு வேலைக்கு சேர்றாரு. கன்ஸ்டரக்ஷன் கம்பெனில வேலைக்கு சேர்ந்த ஆறே மாசத்துல 200 கோடி ப்ராஜெக்ட தனுஷும் விவேக்கும் கொண்ட இரண்டு நபர் குழுவே handle பண்ணுது. நல்லா யோசிச்சி பாருங்க மக்களே இங்க  எவனாவது நம்மள ஒரு 20 லட்சரூபா ப்ராஜெக்டுக்காகவாது own ah decision எடுக்க விடுவாய்ங்களா? அதவிட பெரிய கடுப்பு VIP facebook க்ரூப்புல இவரு போஸ்ட போட்ட உடனே பஸ்ஸு,லாரின்னு ஷங்கர் படத்துல வர்றது மாதிரி ஆளுங்க வந்து குவியிறாங்க. கொஞ்சம் யோசிங்க உண்மையிலயே அதுமாதிரி ஒருத்தன் போட்டா என்ன  பண்ணுவோம்? குரூப்புல இருக்க பாவத்துக்கு கழுதைக்கு ஒரு லைக்க போட்டு விட்டுட்டு பொத்துனாப்புல வீட்டுக்குள்ளயே உக்காந்துக்குவோம். 

பாடல்கள் எடுத்த விதமும் சரி, stunt um சரி... நல்லாவே இருக்கு.  இந்த ஆல்பத்துலயே எனக்கு  ரொம்ப புடிச்ச் பாட்டு "போ இன்று நீயாக" தான். ஆனா அந்தப் பாட்டு பிக்சரைசேஷன் செம சொதப்பல். அது  மட்டும் படத்தோட தரத்துல இல்லாம, தனியாத் தெரியிது. சூப்பர் BGM ம்மோட D25 ன்னு ஆரம்பத்துல வர்ற ஸ்லைடும், வேலையில்லா பட்டதாரி டைட்டில் கார்டும் சூப்பரா பண்ணிருக்காங்க. அதுக்கும் மேல டைட்டில்ல "பாடல்கள் - "poetu" தனுஷ்" ன்னு போடுறது அல்டிமேட்

தனுஷ சைடு ஆங்கிள்ல பாத்தா மொத்த அகலமே ஒரு 30 செண்டி மீட்டர்தான் இருப்பாரு போலருக்கு.  பழைய 7up விளம்பரத்துல வர்ற குச்சி பொம்மை மாதிரி தான் இருக்காரு. அதுவும் அவரோட ஸ்பெஷல்  பைக்க மூஞ்ச பரிதாபமா வச்சிகிட்டு ஓட்டிகிட்டு வரும்போது, சிரிப்பும் வருது பாவமாவும் இருக்கு.  ஒவ்வொரு ரியாக்ஷன்லயும் செம variation. கோவப்படுப்போதும் சரி, பாவமா இருக்கும்போதும் சரி, காமெடி  பண்ணும் போதும் சரி நிறைய இடத்துல தனுஷ் ரூபத்துல சூப்பர் ஸ்டாரே தெரியிறாரு. குறிப்பா சும்மா படுத்துருக்க தனுஷ் ரவுசுக்காக தம்பிய கூப்டு "டேய் ஃபேனப் போடுறா" ன்னு சொல்ற சீன்லயும், அமுல்  பேபி சீன்லயும், ஏன் க்ளைமாக்ஸ் ஃபைட்டுல கூட அதே சாயல்.  இதுல நோட் பண்ண வேண்டிய விஷயம்  என்னன்னா 'அமுல் பேபி" சீனத் தவற வேற எந்த இடத்துலயும் தனுஷ் தலைவர imitate பண்ண முயற்சி  செய்யவே இல்ல. இயல்பாவே அவருக்கு அந்த லுக்கு வருது. 

சூப்பர் ஸ்டார்ங்குற பட்டத்த எவன் வேணாலும் எவண்டயாது காச குடுத்து வாங்கி போட்டுக்கலாம். ஆனா  அதுக்கு பின்னால இருக்க ரஜினிங்குற பேருக்கான  இடத்தை பிடிக்க யாராலையும் முடியாது. ஏன்னா அது  ஒரு சிலருக்கு பிடிச்சமாதிரி படங்களைக் கொடுக்குறதால கிடைக்கிறது இல்லை. சின்ன பசங்கல்லருந்து  பெரிய ஆளுங்க வரை அனைவருக்கும் பிடிச்ச படங்களை கொடுத்தா மட்டுமே முடியும். நகைச்சுவை  ஆக்சன், காமெடி, செண்டிமெண்ட்டுன்னு எல்லாமே செய்க்கூடிய ஒருத்தரால தான் முடியும். இதுவரை சூப்பர் ஸ்டார்  இடத்துக்கு ஆசைப்பட்ட ஆளுங்கள கொஞ்சம் பாருங்க. முதல் மூணு நாள் பாக்குற ரசிகர்களோட  சப்போர்ட்ல மட்டுமே வாழ்ந்து கொண்டிருக்கவங்க. ஒருத்தருக்கு செண்டிமெண்ட்டும் வராது. காமெடியும்   வராது. இன்னொருத்தர் எதப் பண்ணாலும் காமெடியாத்தான் இருக்கும்.  (யார் யார சொல்றேன்னு நீங்களே  புரிஞ்சிக்குங்க)

இப்படிப்பட்டவிங்க போட்டி போட்டுகிட்டு இருக்குற  இங்க, ஓரளவு இலக்கை நோக்கி சரியான பாதையில  போய்கிட்டு இருக்கவர் தனுஷ் மட்டுமே. அதுக்கு இந்த வேலையில்லா பட்டதாரி ஒரு சிறந்த உதாரணம்.  நிச்சயம் பாருங்க. இந்த வருஷத்தோட சிறந்த பொழுதுபோக்குப் படம். 

Tuesday, July 8, 2014

என்னது செமஸ்டர் ரிசல்ட் வந்துடுச்சா!!!


Share/Bookmark
காலேஜ் படிக்கும் போது ஒரு மனுஷனுக்கு புடிக்காத ஒரு விஷயம் இருக்கும்னா அது இந்த செமஸ்டர் ரிசல்ட்டு தான்.  ரிசல்ட்டு வர்றது கூட பரவால்லை. ஆனா அது வர்றதுக்கு முன்னால திடீர் திடீர்னு "ரிசல்ட் வந்துருச்சி" "ரிசல்ட்  வந்துருச்சி"ன்னு அப்பப்போ எவனாவது டைம் பாசாகலன்னா கெளப்பி விட்டுட்டு போயிடுவாய்ங்க. அவன் அவனுக்கு ரிசல்ட்டுங்குறத வார்த்தையக் கேட்டாலே பேதி ஆவும். எனக்கெல்லாம் ரிசல்ட் வந்துருச்சின்னு எவனாவது சொன்னா  உடனே ஜூரம் வந்துரும். ஆல் க்ளியர் பண்ணிட்டோம்னு  தெரிஞ்சாதான் உசுறே வரும். அப்புறம் ஒரு ஆறு மாசத்துக்கு 'ஆங்.. ஆங்.. சூனாப்பானா ரெகுலரா போய்ட்டே இரு... உன்ன யாரும் அசைக்க முடியாது"ன்னு நாக்க  துருத்திட்டே அலையிவோம்.

அதுவும் இந்த செமஸ்டருக்கு படிக்கிறது இருக்கே. அது ஒரு தனி கலை. ஒவ்வொருத்தன் ஒவ்வொரு மாதிரி  படிப்பாய்ங்க. சில பேரு கையில புத்தகத்த வச்சிகிட்டு வராண்டாவோட இந்த கடைசிலருந்து அந்தக் கடைசிவரைக்கும்  மாத்தி மாத்தி நடப்பாய்ங்க. என்னடா சுகர் வந்தவியிங்க பீச்சுல நடக்குற மாதிரி இவ்வளவு வேகமா நடந்துகிட்டு  இருக்காய்ங்க. இங்க நடந்தத நேரா நடந்தா இந்நேரம் ஊருக்கே பொய்ட்டு வந்துருக்கலாமேன்னு கேட்டா, அவனுக்கு  நடந்தாதான் படிப்பு வருதாம்.
 

இன்னும் சில பேரு ரூம்ல பாட்டு ஓடிகிட்டு இருக்கும். நாளைக்கு பரிட்சைய வச்சிக்கிட்டு  இவியிங்க படிக்காம என்ன பண்ணிட்டு  இருக்காய்ங்கன்னு பாத்தா ஸ்பீக்கருக்கு பக்கத்துலயே சாய்ஞ்சிகிட்டு புத்தகத்த  திருப்பிக்கிட்டு இருப்பான். அதாவது  relaxed ah படிக்கிறாராம். திடீர்னு ஒருத்தன் ரூமுக்குள்ள நுழைஞ்சா எதோ தியான மண்டபத்துக்குள்ள நுழைஞ்ச மாதிரி அவ்வளவு அமைதியா இருக்கும். நாலு பேரும் ஆளுக்கு ஒரு  மூலையில அமைதியா உக்காந்துருப்பாய்ங்க. நம்ம உள்ள நுழைஞ்சதும் நம்மகிட்ட வாயத்தொறந்து கூட பேசாம தூர்தர்ஷன் நியூஸ் மாதிரி சைகையிலயே பேசி அனுப்பி விட்டுருவாய்ங்க.


எங்க ரூம்ப ரெண்டு பேரு இருந்தாய்ங்க. ஒண்ணு ACP KPB என்று எல்லோராலும் அன்போடு அழைக்கப்படும் பரத்  குமார். பெரும்பாலும் செமஸ்டர் அன்னிக்கு மொதநாள் தூங்க மாட்டோம். அப்படியே தூங்குனாலும் ஒரு மணி  நேரத்துக்கு மேல தூங்குறதில்லை. ஏன்னா கேக்குறீங்க? அட பீதில தூக்கம் வராதுங்க. ஆனா இவன் என்ன பண்ணுவான் நைட்டு ஒன்பது மணிக்கெல்லாம் நல்லா கட்டில்ல மெத்தையெல்லாம் போட்டு போர்வைய விரிச்சி சின்னக் கவுண்டர்ல செந்தில்  ஆராய்ச்சி பண்ண படுத்துருக்க மாதிரி குப்புற கண்ணத்துல கைய வச்சா மாதிரி படுத்துருவான்.  "டேய் ஏண்டா  இவ்வளவு சீக்கிரம் தூங்கப்போற.. அதுக்குள்ள படிச்சி முடிச்சிட்டியா?" ன்னு கேட்டா "யாருடா  தூங்கப்போறா... நா  இனிமே தான் படிக்கப்போறேன்" ம்பான். 

 ஒரு செகண்ட்ல நம்ம நண்பன பத்தி தப்பா  நெனைச்சிட்டோமே.. என்  இனமடா நீ" ன்னு நெனைச்சிட்டு இருக்கும் போது ஒரு பத்து  நிமிசத்துல ரூமுக்குள்ள  லைட்டா ட்ராக்டர் ஓடுற  சத்தம் கேக்கும். எங்கருந்துடா வருதுன்னு பாத்தா, நம்மாளு வாயப் பொளந்துருவான். டேய்  குடையப்பா அது  எப்புடிடா கொடை புடிச்ச மாதிரியே செத்துருக்கங்குற மாதிரி "அது எப்புடிடா படிக்கிற  போஸுலயே தூங்கிட்ட" ன்னு  எழுப்புனோம் அவ்வளவுதான்.

இவன எழுப்புறதும் அஞ்சலிப் பாப்பாவ எழுப்புறதும் ஒண்ணு. சனியனுங்க எழுந்தே தொலையாது. கொஞ்ச  நேரத்துக்கப்புறம் முழிச்சி பாப்பான். "டேய்.. எழுந்து படிடா' ன்னா "நா எங்கருக்கேன்" ன்னு கேக்குற எஃபெக்ட்ல  சுத்தி சுத்தி ரெண்டு தடவ பாப்பான். இவனுக்குன்னே தயாரிக்கப்பட்ட ஒரு ஸ்பெஷல் அலாரம் இருக்கு. இவன் அதுல  அலாரம் செட் பண்ணுவான். ஆனா அது அடிச்சி இவன் வாழ்க்கையிலயே எழுந்ததில்லை. உடனே அத எடுத்து  நைட்டு பன்னண்டு மணிக்கு அலாரம் செட் பண்ணுவான்.

 "டேய் ஏண்டா நைட்டு பன்னண்டு மணிக்கு செட் பண்ற..  அதுக்கு இப்பவே படிச்சிட்டு நைட்டு தூங்கலாம்லன்னா "இல்லைடா இப்போ லைட்டா கண்ண கட்டுது... பன்னன்னு  மணிக்கு எழுந்து படிக்கிறேன் பாரு... "ன்னு அவன் சொல்லும் போது கோயம்பத்தூர் மாப்ளே படத்துல கவுண்டர்  சொல்ற டயலாக் தான் ஞாபகம் வரும். "காலையில ஒன்பது மணிக்கு படுத்து தூங்குற நாயி சாய்ங்காலம் 5 மணிக்கு  எழுந்து போய் என்ன நாட்ட காப்பாத்த போறியா...". எப்புடியோ தொலைன்னு விட்டுருவோம்.

அப்டியே கட் பண்ணி ஓப்பன் பண்ணா காலையில 6 மணிக்கு "அலமேலு காப்பி கொண்டுவா"ன்னு சொல்லிட்டே சாவுகாசமா எழுந்திரிப்பான்.  எழுந்து அவன் அலாரம் செட் பண்ண அந்த டைம் பீஸுல மணியப்பாத்து ஷாக் ஆயி எங்கள்ப்பாத்து "டேய் எழுப்பி  விட்டுருக்கலாம்ல" ன்னு பத்தட்டத்தோட கேப்பான். உடனே நாங்க கழட்டி கெடக்குற செருப்ப பாப்போம். பதில்  சொல்லாம பக்கெட்ட எடுத்துகிட்டு குளிக்க போயிருவான்.

இதே மாதிரி பக்கத்து ரூம் இன்னொருத்தன் இருக்கான். "தோம் தாத்தா"என எல்லோராலும் அன்போடு அழைக்கப்  படும் நரேந்திரன். இவன் படிக்கிறது இன்னொரு டைப். நல்லா சம்மனக்கால் போட்டு புத்தகத்த  விரிச்சி முன்னால வச்சி புத்தர் போஸுல உக்கார்ந்துருவான். கொஞ்சம் கொஞ்சமா தியான நிலைய அடைஞ்சி மிஞ்சி மிஞ்சி  போனா கால் மணி நேரத்துல தூக்க நிலைய அடைஞ்சிருவான். "டேய்.. டேய் எழுந்திரிடா"ன்னு நாலு தடவ எழுப்புனதுக்கப்புறம் தான் முழிப்பான். தூங்குனது தெரியக் கூடாதுங்குறதுக்காக ஒரு சமாளிப்பு சமாளிப்பான் பாருங்க..

"நா தூங்கலாடா இவனே... ரிவிஷன் பண்ணிகிட்டு இருந்தேன்"... "சரிங்க ப்ரொப்பசர்.. நீங்க அடுத்த தடவ ரிவிசன்  பண்ணும்போது நாங்க எழுப்புறோமா இல்லையான்னு மட்டும் பாருங்க.. பக்கி மட்டை ஆயிருச்சேன்னு எழுப்பி விட்டா  பேச்சப் பாரு"

செமஸ்டர் வந்தா நாங்க ஹார்ட் ஒர்க் பண்றோமோ இல்லியோ எங்க மெஸ்ல இருக்க அண்ணனுங்க ரொம்ப கஷ்டப்  படுவாங்க. நைட்டு ஒன்பது மணி சாப்பாடு மட்டும் இல்லாம நைட்டு பன்னண்டு மணிக்கு ஒரு ஸ்பெஷல் டீ வேற..  அட பசங்க கண்ணு முழிச்சி படிக்கிறோமல்லோ... அது மட்டும் இல்லாம நானும் என் ரூம்மேட் மொட்டையும்  "செகண்ட் ரவுண்ட்"ன்னு ஒண்ணு பாஃலோ பண்ணுவோம். நைட்டுல இந்த பரோட்டா, சப்பாத்தி, தயிர் சாதமெல்லாம்  போடும் போது சாப்புட்டு "ண்ணே.. ரூம் மேட் வெளில போயிருக்காண்ணே.. வர டைம் ஆகும்னு சாப்பாடு வாங்கி  வைக்க சொன்னான்" ன்னு சொல்லிட்டு இன்னொரு ரவுண்டு வங்கி வச்சிருவோம். அத திரும்ப நைட்டு 1 மணிக்கு  பசிக்கும் போது மேஞ்சிருவோம்.

மறுநாள் காலையில எக்ஸாம். அன்னிக்கு மெஸ்ல புளி சாதம் தயிர் சாதம் காம்பினேஷன்..  நைட்டு 12.30க்கு  செகண்ட் ரவுண்டு ஓடிக்கிட்டு இருந்துச்சி. திடீர்னு வராண்டாவுல "உவ்வே...... உவ்வே" ன்னு ஒரு சத்தம்.  congratulations... யாரோ அப்பாவாயிட்டானுக.. வா போய் பாக்கலாம்னு போய் பாத்தா... திலீப் (பெயர்  மாற்றபடவில்லை) வராண்டா wall ah சாஞ்சிருந்தான்... இவன் ஏண்டா இந்நேரத்துக்கு சுவத்துக்கு முட்டு குடுத்துட்டு  நிக்கிறான்னு  பக்கத்துல போய் பாத்தா அடி வாங்குன கவுண்டமனி மாதிரி "ஆஹ்... ஆஹ்... ஆஹ்.." ன்னு ஒரே புலம்பல்.  என்னடா ஆச்சின்னு கேட்டா  "டேய் I think something is wrong in the puli saatham daa" ன்னான். 


டேய் அவன் அவன் ரெண்டாவது ரவுண்ட போட்டு தூர் வாரிகிட்டு இருக்காய்ங்க... இப்ப போய் சம்திங் ஈஸ் ராங் இன் த  புளி சாதமான்னு நெனைச்சிகிட்டு "ஆமா மச்சி.. நாம ஒழுங்கா படிக்கக்கூடாதுன்னு புளி சாதத்துல எதோ கலந்துட்டாய்ங்க போலருக்கு. நாங்க கூட நைட்டு சாப்டவே இல்லை" ன்னு சொல்லி அவன கைத்தாங்கலா கொண்டு  போய் ரூமுல படுக்க வச்சோம்.


 First year படிக்கும் போது "அய்யய்யோ இந்த சைக்கிள் டெஸ்டுல  பாஸாகலன்னா பெரிய சாமி குத்தம்  போலருக்கே"ன்னு விழுந்து விழுந்து படிச்சிருக்கோம். ஆனா அப்டியே கொஞ்ச நாள் ஆக ஆக மேட்ச விடு straight ah ஃபைனல்ல பாத்துக்கலாம்னு சைக்கிள் டெஸ்ட்ட மதிக்கிறதே இல்லை. "நீங்க சைக்கிள் டெஸ்ட்ல என்ன  மார்க் எடுக்குறீங்களோ அதத் தான் உங்களுக்கு இண்டர்னல் மார்க்கா போடுவோம்... ஒழுங்கா எழுதுங்க" ன்னு அடிக்கடி சில கொலை மிரட்டல்களும் வரும். ஆனா "நீங்க வேணா ஊருக்கே மாஸா இருக்கலாம். ஆனா சாவுக்கு  பயப்படாத எங்க முன்னால இதெல்லாம் வெறும் தூசுடா"ன்னு அத கண்டுக்குறதே இல்லை.

சோம்பேறித் தனத்தோட உச்ச கட்டத்தை நாங்க இந்த காலேஜ்ல தான் அனுபவிச்சிருக்கோம். எங்களுக்கு  தங்கமனசுக்கார professor சில பேரு இருந்தாங்க. நாளைக்கு சைக்கிள் டெஸ்ட்ல வரப்போற ரெண்டு 16 மார்க் கேள்விகள மொத நாளே குடுத்துருவாங்க. அத நாங்க லைட்டா படிச்சும் தொலைச்சிடுவோம். ஆனா அதுல பாருங்க  அத எழுதத்தான் கடுப்பா இருக்கும். அட யாருப்பா இதெல்லாம் உக்காந்து கழுதைய எழுதுறதுன்னு ஒரே ஒரு  கேள்விய மட்டும் எழுதிட்டு அடுத்த கேள்விய எழுதாம எவண்டா மொதல்ல பேப்பர குடுப்பான்னு பாத்துட்டே இருந்து எவனாவது ஒருத்தன் குடுத்துட்டா போதும் அடுத்த அஞ்சி நிமிஷத்துல அம்புட்டு பயலுகளும் முருகப்பா ஹாலவிட்டு  வெளிய போயிருவாய்ங்க.

மூணாவது செமஸ்டர்ன்னு நெனைக்கிறேன். Fluid mechanics ன்னு ஒரு பேப்பரு. அதுக்கு ஒரு professor வருவாரு  பாருங்க. பாத்தாலே கலாய்ங்கனும்னு தோணுற அளவு கார்டூன் பொம்மை மாதிரியே இருப்பாரு. அவர் பேரு சரவணன்னு நா சொல்ல மாட்டேன். காலேஜ்ல எனக்கு உண்மையிலயே ஒரு லட்சியம் இருந்துச்சி. இந்த சைக்கிள்  டெஸ்ட்ல எதுலயாது ஒண்ணுல ஜீரோ மார்க் எடுக்கனும்னு. இப்புடி ஒரு லட்சியமா? இந்த லட்சியத்துக்கு நீ எதுவும் பண்ணாம இருந்தாலே நிறைவேறிடுமேன்னு தானே  கேக்குறீங்க. நடக்கல. இந்த கார்ட்டூன் பொம்மை நடக்க விடல.  ஸ்கூல்ல கம்மி மார்க் எடுத்தா வீட்ட சுத்தி சுத்தி  ஓடவிட்டு அடிப்பாய்ங்க. மார்க்க மறைச்சிடலாம்னு பாத்தா ரேங்க்  கார்டுலயெல்லாம் கையெழுத்து வேற வாங்கிட்டு  வரச் சொல்லுவாய்ங்க.

ஆனா இங்க சைக்கிள் டெஸ்ட்ல என்ன  மார்க் எடுத்தாலும் எந்தப் ப்ரச்சனையும் இல்லை. எப்டியாது ஒரு தடவ zero மார்க் எடுத்துடம்னு ஒரு தடவ ட்ரை  பண்ணேன். வெறும் பேப்பர குடுக்கக் கூடாதேன்னு  ஒரே ஒரு கேள்விய மட்டும் மொதப்பக்கம் எழுதி அந்தக்  கேள்விக்கு சம்பந்தமே இல்லாத ரெண்டு வரியையும் எழுதி  மொத பக்கத்த புல்லப் பண்ணி குடுத்துட்டு பொய்ட்டேன்.  இந்த தடவ zero கன்ஃபார்முடுங்கன்னு நெனைச்சிட்டு இருக்கும் போதுதான் நம்ம கார்ட்டூன் அவரு வேலையைக்
காட்டுனாரு.

அந்த மொதப்பக்கத்தையும் மதிச்சி அதுக்கு ரெண்டு மார்க் போட்டு குடுத்துவிட்டுருந்தாரு. அத  பாத்தோன மனசுக்குள்ள நெனைச்சிகிட்டேன்.. "ரெண்டு மார்க் போட்டுட்டேன்னு ரொம்ப பீத்திக்காதீங்க.. உங்கள  வாத்தியார் வேலைக்கு தப்பா எடுத்துருக்காய்ங்க. அடுத்த தடவ வெறும் பேப்பர குடுக்குறேன் எப்புடி மார்க்  போடுறீங்கன்னு பாக்குறேன்"

அவர ஓட்டுன பாவமோ என்னன்னு தெரியல. எங்களுக்கு fluid mechanics மட்டும் செமஸ்டர்ல கஷ்டமான பேப்பரா  வந்துருச்சி. என்னடா எதுவுமே பாத்த மாதிரி இல்லை... காட்டுப்பூச்சி காட்டுடா உன் வேலையன்னு "அசோகர் மரங்களை நட்டார்... அசோகர் சாலை ஓரங்களில் மரங்களை நட்டார். அசோகர் சாலை ஓரங்களில் வரிசையாக  மரங்களை நட்டார். அசோகர் சாலை ஓரங்களில் நிழல் தரும் மரங்களை நட்டார்"ன்னு ஒரே மேட்டர நீட்டி மொழக்கி  ஒரு நாப்பது பக்கத்துக்கு எழுதி வச்சிட்டு வந்துட்டேன். இருந்தாலும் உள்ளுக்குள்ள ஒரு பீதி. செமஸ்டர்ல fluid  mechanics புட்டுக்கிச்சின்னா? ன்னு பயத்தோடயே வெளிய வரும்போது எதிர்ல வந்தாரு கார்ட்டூன்.

என்னையும் என் ஃப்ரண்டையும் பாத்து ஒரு கேவலமான சிரிப்பு சிரிச்சிட்டு ஒண்ணு சொன்னாரு பாருங்க.. "ஹைய்யோ  ஹைய்யோ...இவ்வளவு கஷ்டமான பேப்பர நா பாத்தே இல்லை.. நீங்கல்லாம் இந்தப் பேப்பர எப்புடித்தான் பாஸ் பண்ணப்போறீங்களோ?" ன்னு திரும்பவும் சிரிச்சிட்டு பொய்ட்டாரு. என் வாழ்க்கையில பட்ட முக்கியமான அவமானங்கள்ள இதுவும் ஒண்ணு. "ஏன் கார்ட்டூன் சார்...  நீங்கல்லாம் பாஸ் பண்ணி எங்களுக்கு சொல்லிக்குடுக்குற  அளவு வந்துருக்கீங்க.. நாங்க இது பாஸ் பண்ணோ மாட்டோமாசார்" ன்னு கடுப்புல ரூமுக்கு வந்தோம். இருந்தாலும் கார்ட்டூன் சொன்ன மாதிரி ஆயிடுச்சின்னா என்ன  பண்றது... ரிசல்ட்டுக்காக வெய்ட்டிங்.. ரிசல்ட்டும் வந்துருச்சி...

என்னோட ரிசல்ட்ட எப்பவுமே நா பாக்க போக  மாட்டேன். நண்பர் பரத்குமார் தான் பாத்து சொல்லுவாரு.   ஆல்கிளியர்னு சொன்னப்புறம் நா கேட்ட மொத கேள்வி fluid mechanics la எவ்வளவுடா?   51 மார்க் மச்சி internal  13 external 38... ஜஸ்ட் பாஸூ... ஆண்டவா பெருத்த அவமானத்துலருந்து காப்பாத்திட்டன்னு அப்பத்தான் நிம்மதியா  இருந்துச்சி. யாரோ பயபுள்ளை பொழைச்சி போகட்டும்னு கரெக்டா 38 மார்க்க போட்டு விட்டு நம்ம உசுர காப்பத்திருக்காங்க. இருந்தாலும் அந்த பேப்பர கார்ட்டூனே  திருத்திருப்பாரோன்னு இன்னொரு சந்தேகமும் இன்னும்  இருந்துகிட்டே இருக்கு. எதுக்கும் சொல்லி வப்போம் "வாழ்க கார்ட்டூன்"


LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...