நம்மாட்களுக்கு எந்நேரமும் திட்டித் தீர்ப்பதற்கு யாராவது சிலர் இருந்துகொண்டே இருக்கவேண்டும். இந்த இரண்டு நாட்களாக சிக்கியிருப்பது ராகவா லாரன்ஸ், ஹிப் ஹாப் தமிழா மற்றும் RJ பாலாஜி.
இவர்கள் அரசுக்கு பணிந்துபோயும், அரசிடம் பல்க்காக ஒரு அமவுண்டை வாங்கிக் கொண்டு கூட்டத்தை கலைந்து போகச் சொன்னது போலவும், ”மறுநாள் காலையில் மெரினாவிலிருந்து கிளம்பாதவர்களை அடித்து துவைக்கப் போகிறோம். நீங்கள் மட்டும் முன்னரே கிளம்பி விடுங்கள்” என்று அரசு இவர்களுக்கு தெரிவித்ததால் இவர்கள் மட்டும் எஸ்கேப் ஆகிவிட்டது போலவும் வண்டை வண்டையாக திட்டுகின்றனர்.
.
அப்படியே வைத்துக் கொண்டால் கூட நீங்கள் அடி வாங்கக் கூடாது என்பதற்குத்தானே கலைந்து போக சொல்லியிருக்கிறார்கள். பிறகு அவரை எதற்காக திட்டுகிறீர்கள்? அரசு தடியடி நடத்தப்போகிறது என்று முடிவு செய்துவிட்ட பிறகு RJ பாலாஜியோ, ராகவா லாரன்ஸோ நினைத்திருந்தாலும் அதைத் தடுத்திருக்க முடியுமா?
.
போராட்டத்திற்கு நீங்கள் அழைக்காமல் உங்களுக்குத் தோள் கொடுக்க அவர்களாகத்தானே வந்தார்கள். உங்களின் செலவுக்கு அவராகத்தான் பணம் கொடுத்தார். இன்னும் கொடுப்பதாக அறிவித்தார். நீங்கள்தான் அவர்களை கூட்டத்தின் தலைவர்களாகவும் ஆக்கினீர்கள்.
.
மெரினா பக்கமே செல்லாமல், நியூஸ் 7 ஐயும், Facebook பதிவுகளை மட்டும் பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்கே போராட்டத்தை ஞாயிறு இரவே முடித்திருக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றி அதனைப் பதிவும் செய்திருக்கின்றனர். அப்படியிருக்க உங்களுடன் போராடிய ஒருவர் அதே கருத்தை முன் வைக்கும்போது அவர் ஏன் குற்றவாளியாக்கப் படுகிறார்?
.
அராஜகம் செய்து கூட்டத்தைக் கலைக்கும் முடிவுக்கு அரசைத் தள்ளியது ஒரு வகையில் போராட்டக்காரர்கள் தான். ஏழாம் நாள் நடத்திய தடியடியை இரண்டாம் நாள் ஒரிருவர் மீது பிரயோத்திருந்தால் கூட, கூட்டம் கூட்டமாக பிக்னிக் செல்வது போல மெரினா பீச்சிற்கு குடும்பங்கள் படையெடுத்திருக்காது. இவ்வளவு பெரிய கூட்டத்தையும் சேர்த்திருக்க முடியாது. முதல் இரண்டு நாள் போராட்டத்தில் மூலம் எந்த பாதிப்பும் இல்லை என்று உணர்ந்த பின்னரே சிறு குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
.
இப்போது என்ன நடக்கும்? அடுத்த முறை போராட்டம் என்று ஒரு சிறு கும்பல் கூடும்போதே அரசு ஆட்டத்தை கலைத்து விடும். அல்லது ஒரு சிலரைத் தவிற மற்றவர்கள் என்ன நடக்குமோ என்ற பயத்தில் போராட வெளியிலேயே வர மாட்டார்கள்.
.
போராட்டத்தில் கலந்து கொண்ட முக்கால்வாசிப் பேரின் ஊர்களில் ஜல்லிக்கட்டு நடத்தப்படுவதில்லை. போராடியவர்களில் முக்கால்வாசிப் பேர் ஜல்லிக்கட்டை தொலைக்காட்சியைத் தவிற வேறு எதிலும் பார்த்திருக்க வாய்ப்பில்லை. அப்படியிருக்க ஒரு சாரரின் உணர்வுகளுக்காக ஒன்று பட்டு போராடினீர்களோ அதே போல்தான் அந்த லாரன்ஸூம், ஆதியும், பாலாஜியும்.
.
போலீஸ் தடியடியை ஆரம்பித்து கலவரமாக்கிய பொழுது, இங்கிருந்து ஒருவர் “டேய் லாரன்ஸ் எங்கடா போனா? டேய் ஆதி எங்கடா போன?” என்று ஃபேஸ்புக்கில் ஸ்டேட்டஸ் போடுகிறார். மொதல்ல நீ எங்க நாயே இருக்க? எதோ லாரன்ஸ்தான் இந்தப் போராட்டத்டை துவக்கியது போலவும், ஹிப்ஹாப் தமிழா கூப்பிட்டதால்தான் இவர்கள் அனைவரும் போராடத் துவங்கியது போலவும்.
.
போராட்டம் நன்றாக சென்ற பொழுது அரசியல்வாதிகள் தேவையில்லை நடிகர்கள் தேவையில்லை என விரட்டியடித்துவிட்டு, கலவரமான பின்னர் மட்டும் ஏன் அவர்களைத் தேடுகிறோம்.
.
ஜல்லிக்கட்டு நடந்தாலும் நடக்காவிட்டலும் அவர்களுக்கு எந்த தாக்கமும் இருந்திருக்கப் போவதில்லை. இளைஞர்களின் இந்த போராட்டத்தை மதித்து, அவர்களுக்குத் தோள் கொடுக்க வந்தவர்களை இதைவிடக் கேவலப்படுத்த முடியாது.
