Thursday, June 29, 2017

ஏய் நா இண்டர்வியூக்கு போறேன் – THE LAST STAND!!!


Share/Bookmark
இந்தப் பதிவின் முதல் பகுதியைப் படிக்க இங்கே க்ளிக்கவும். இரண்டாவது பகுதியைப் படிக்க இங்கே படிக்கவும். மூன்றாவது பகுதியை படிக்க எங்கேயும் க்ளிக்க வேண்டாம். தொடர்ந்து படிக்கவும். நாட்கள் போயிகிட்டே இருந்துச்சி. ஆறாவது செமஸ்டர் முடிவுல ஆரம்பிச்ச ப்ளேஸ்மெண்ட் ஓட்டம் ஏழாவது செமஸ்டர் முழுசும் தொடர்ந்துச்சி. நாட்கள் போகப் போக நா சுத்திப் பாத்த ஊர்களோட எண்ணிக்கையும், காலேஜுங்களோட எண்ணிக்கையும் அதிகமாச்சே தவற வேற எந்த Improvement உம் இல்லை.


இவய்ங்க இப்புடியே சுத்திக்கிட்டு இருந்தா வேலைக்கு ஆக மாட்டாய்ங்கன்னு ப்ளேஸ்மெண்ட் co-ordinator ah இருந்த எங்க க்ளாஸ் பசங்களும் பொண்ணுங்களும் mock இண்டர்வியூல்லாம் வச்சி வசூல்ராஜா கமலுக்கு டாக்டருங்க ட்ரெயிங்க் குடுக்குற மாதிரில்லாம் குடுத்தாங்க. ”the symptoms are poly uriya, unusual thirst, frequent urination and unusual weight loss” ன்னு பசங்க ட்ரெயிங் குடுக்க குடுக்க கமல் மேறியே ப்ராக்டிஸ்லாம் பன்னுவேன். அய்யோ அது  மூணாவது கேள்விக்கு சொல்ல வேண்டிய பதிலுடாம்பானுங்க.. “நா ஒரு ஆர்டர்ல  மனப்பாடம் பன்னிட்டேன் நீ மாத்தி கேட்டியன்ன இன்னா பன்றது”ன்னு இங்க நல்லா வாயடிச்சிட்டு போவேன். உண்மையான இண்டர்வியூல ப்ரகாஷ்ராஜ் மாதிரி ஒருத்தன் வந்து மொக்கை குடுத்துருவான்.




இதுல ஒரே ஒரு நல்ல விஷயம் என்ன மாதிரியே இண்டர்வியூல மொக்கை வாங்குற ஒரு நாலஞ்சி பசங்கல்லாம் சேர்ந்து ஒரு குரூப்பா ஃபார்ம் ஆனோம். இப்பவா இருந்தா பட்டுன்னு எல்லார்கிட்டயும் நம்பர வாங்கி “வேலையில்லா வாலிபர் சங்கம்”ன்னு ஒரு வாட்ஸாப் குரூப்ப ஆரம்பிச்சி விட்டுருக்கலாம். அப்ப அதுவும் இல்லை. எல்லாரும் ஒருத்தருக்கு ஒருத்தர் பார்ட்னர் பார்ட்னர்னு கூப்டுக்க ஆரம்பிச்சோம். வேலை இல்லைன்னாலும் நம்மள மாதிரியே நாலு பேரு கூட இருந்த்து மனசுக்கு ஒரு ஆறுதலா இருந்துச்சி.

அதுக்கப்புறம் எல்லாரும் இண்டர்வியூக்கு போகும்போதெல்லாம் “பாஸ் என்கிற பாஸ்கரன்”ல சாமிநாதன் ஆர்யாவப் பாத்து சொல்ற மாதிரி “பாஸ்.. இண்டர்வியூ க்ளியர் பன்னி எதுவும் தொலைச்சிராதீங்க.. அப்புறம் எனக்கு கம்பெனியே இருக்காது” ன்னு நினைச்சிக்கிறது. எப்புடி மொத்தமா போறோமோ அதே மாதிரி மொத்தமா மொக்கை வாங்கிட்டு வருவோம். ”நல்லவேளை நீங்க எதுவும் செலெக்ட் ஆயிருவீங்களோன்னு நா பயந்தே பொய்ட்டேன்.. சங்கத்துல ஆள் கம்மி ஆயிருமா இல்லையா?”

என்னடா தொடர்ந்து ஓட ஓட அடிக்கிறானுங்களே… பையன் ஒவ்வொரு இண்டர்வியூவுக்கும் பன்னிட்டு இருந்துருப்பான்னு மட்டும் நினைக்காதீங்க.. அந்த டைம்லதான் நாங்க ஷார்ட் பிலிம் எடுக்கலாம்னு தீவிரமா வேலை பாத்துக்கிட்டு இருந்தோம். அந்த காலகட்டத்துலதான் எடுத்து ரிலீஸ் பன்னதுதான் கீழ இருக்க ட்ரெயிலர்.. இப்பவரைக்கு ட்ரெயிலர் மட்டும்தான் ரிலீஸ் பன்னிருக்கோம்.



அப்ப திடீர்னு இண்டர்வியூ வந்தா என்ன பன்னுவன்னு தானே கேக்குறீங்க? கஜினில சத்யன் அசின்கிட்ட சொல்லுவானே.. மேடம் கோட்டு ரெடியா இருக்கு.. இப்ப சொன்னா கூட சஞ்சய் ராமசாமியா மாறி வந்துருவேன்னு.. அதே தான். ஃபைல் ஆல்வேஸ் ரெடி… மறுநாள் இண்டர்வியூன்னு சொன்னீங்கன்னா மொதநாள் நைட்டு அதுக்குன்னே வச்சிருக்க பெசல் சட்டையையும் பேண்டையும் தொவைச்சி போட்டு காலைல அயன் பன்னா இண்டர்வியூக்கு நான் ரெடி.…  

இண்டர்வியூக்கு போறதுல எனக்கு இருந்த ஒரு மிகப்பெரிய ப்ரச்சனை மீசை வைக்கிறதா வைக்கிறதில்லையாங்குறது தான். எனக்கு மீசை வைச்சா கேவலமா இருக்கும். மீசைய எடுத்தா கண்றாவியா இருக்கும். அதனால இந்த கேவலத்துக்கும் கண்றாவிக்கும் இடையில இருக்கா மாதிரி எப்பவும் ட்ரிம் பன்னிக்கிட்டு தான் சுத்திக்கிட்டு இருப்பேன். இண்டர்வியூன்னா ஷேவ் பன்னனும். தாடிய ஷேவ் பன்னிட்டு மீசைய ட்ரிம் பன்னுனா பாக்க சேவிங் பன்னமாதிரியும் இருக்காது பன்னாத மாதிரியும் இருக்காது... ஒரே குஸ்டமப்பா...

அன்று ஒரு நாள்……….. பெருசா எதுவும் சம்பவம் நடக்கப்போவுதுன்னு நினைப்பீங்க.. ஆனா அதெல்லாம் ஒண்ணும் இல்லை. எப்பவும்போல மறுநாள் ஒரு கோர் கம்பெனி இண்டர்வியூக்கு வர்றாங்கன்னு தெரிஞ்சதும் எல்லாத்தையும் ரெடி பன்னி வச்சிக்கிட்டு ஷேவ் பன்னப் போகயிலதான் யோசிச்சேன். இந்த ஒருதடவ மீசைய ட்ரின்  பன்னாம மொத்தமா எடுத்துருவோம்னு எடுத்துட்டேன். காலையில மொழுக்கட்டையா இண்டர்வியூக்கு போகும்போது நம்ம பயலுகல்லாம் “இன்னா மூஞ்சி.. உலகத்து அழகுகளையெல்லாம் ஒட்டு மொத்தமா சேத்து வச்சா மாதிரி இருக்கு இந்த மூஞ்சி.. காலங்காத்தால வேலைக்கு போறவன் மொத மொத இந்த மூஞ்ச பாத்துட்டு போனாப் போதும்… துப்பூ ….வெளங்கும் ”ன்னு  கைகொட்டி சிரிக்கிறாய்ங்க.

ஆத்தாடி… போறப்பவே இப்டின்னா வர்றப்ப இன்னும் ஃபோர்சா இருக்குமேன்னு நினைச்சிக்கிட்டே போனேன். அது எனக்கு பதினெட்டாவது கம்பெனி. ஆண்டவன் புண்ணியத்துல எனக்கும் என்கூட இருந்த பார்ட்னர்கள் ரெண்டு பேருக்கும் அந்தக் கம்பெனில வேலை  கெடைச்சிது. மிக்க மகிழ்ச்சி.. ஹாஸ்டலுக்கு வந்து வீட்டுக்கு ஃபோன் பன்னி சொல்லிட்டு புள்ளையார்பட்டிக்கும் குன்றக்குடிக்கும் போய் ஒரு தரிசனத்தப் போட்டுட்டு வர 9 மணி ஆகிருச்சி. அப்புறம் வந்து காரைக்குடிலருந்து பட்டுக்கோட்டைக்கு பஸ் ஏறி வீட்டுக்கு போய் கதவத் தட்டும்போது மணி பன்னெண்டுக்கும் மேல. கதவத் தொறந்து மீசையில்லாம சேவிங் பன்ன கொரங்கு மாதிரி இருந்த என் மூஞ்சப் பாத்ததும் எங்கம்மா கேட்ட மொத கேள்வி “இந்த மொகரைக்கு எவண்டா வேலை குடுத்தது?”ன்னு. (உண்மையாவே இந்தக் கேள்விதான் கேட்டுச்சு)

அதுக்கப்புறம் கடைசி செமஸ்டர் ஆரம்பிச்சி காலேஜ் போகும்போது சில பசங்க என்ன மச்சி கோர் கம்பெனில ப்ளேஸ் ஆயிட்ட.. கோர் கம்பெனிக்காகவ் வெய்ட் பன்னியாடா?ன்னு கேப்பானுக.. பசுபதி மே/பா ராசக்காபாளையம் படத்துல DSP வந்து விவேக்கிட்ட என்ன காரியம் பன்னிருக்கீங்கன்னதும் விவேக் பதறிருவாரு.. உடனே ஊரே நடுங்குற மார்கெட் சேகர அரெஸ்ட் பன்னது சாதாரண விஷயமான்னதும் விவேக் சுதாரிச்சிக்கிட்டு “இந்த ஆப்ரேஷன நாங்க ரொம்ப நாளாவே ப்ளான் பன்னிட்டுதான் சார் இருந்தோம். கரெக்ட்டா ஸ்கெட்ச் போட்டு நேக்கா தூக்கிட்டோம்”ன்னு பீலா விடுவாரு. அந்த மாதிரி கோர் கம்பெனிக்காக வெய்ட் பன்னியா மச்சி?ன்னு கேக்குற பயலுககிட்ட “ எனக்கு சின்ன வயசுலருந்தே கோர் கம்பெனில ப்ளேஸ் ஆகனும்னுதான் மச்சி ஆசை.. சாஃப்ட்வேர்லாம் வேஸ்டு”ன்னு அடிச்சிவிட்டுக்கிட்டு இருந்தேன்.

ஏழாவது செமஸ்டர்ல கேம்பஸ் இண்டர்வியூ ஆரம்பிச்ச காலத்துலருந்து எவ்வளவுதான் சந்தோஷமா இருந்தாலும் திடீர்னு உள்ளுக்குள்ள வேலை கிடைக்கலங்குற குறை இருந்துக்கிட்டேதான் இருக்கும். ப்ளேஸ் ஆனதுக்கப்புறம் அந்த குறை தீர்ந்துச்சி.

மேல சொன்ன மாதிரி எனக்கு வேலை கிடைச்சது பதினெட்டாவது கம்பெனில தான். எனக்கு தெரிஞ்ச வரை அவ்வளவு கம்பெனி அட்டெண்ட் பன்னது எங்க பேட்ச்ல நாந்தான்னு நினைக்கிறேன். சும்மா அடிச்சில்லாம் விடல. உண்மையத்தான் சொல்றேன். எனக்கு Arrear எதுவும் இல்லை. படிச்சது எலெக்ட்ரிகல். அதனால ஒண்ணு ரெண்டு ப்யூர் மெக்கானிக்கல் based கம்பெனிகளத் தவற மத்த எல்லா கம்பெனிலயும் இண்டர்வியூ அட்டெண்ட் பன்னுற eligibility இருந்துச்சி.

வேலை கிடைக்காத வரைக்கும் நமக்கு ஏன் இன்னும் வேலை கிடைக்கலன்னு யோசிச்சதே இல்லை. வேலை கிடைச்சதுக்கப்புறம்தான் ஏன் நமக்கு வேலை கிடைக்க இவ்வளவுநாள் ஆச்சுங்குறத யோசிச்சிப் பார்த்திருக்கேன். இந்தக் கம்பெனில ப்ளேஸ் ஆனதுக்கு எனக்கு அசிங்கமா இருக்குனு சொன்ன நண்பருக்கெல்லாம் வேலை கிடைச்சிது. ஆனா நமக்கு ஏன் கிடைக்கல?

நான் யோசிச்ச வரைக்கும் எனக்கு கிடைச்ச பதில் நம்மோட மனநிலை. ஒருத்தனுக்கு அந்த வேலை கிடைச்சாலும் ஒக்கேதான் கிடைக்கலன்னாலும் ஓக்கேதான் அப்டின்னு நினைக்கிறவன் ரொம்ப பதட்டப் பட மாட்டான். ஆனா நமக்கு இந்த வேலை கண்டிப்பா வேணும்னு நினைக்கிறவன் எப்படியாவது வேலை வாங்கியே ஆகனும்ங்குற ஒரு நிலையில நிச்சயம் பதட்டப்படுவான். அந்தப் பதட்டம்தான் இண்டர்வியூக்கள்ல முதல் எதிரி. ”இண்டர்வியூ எடுக்குறவன் யாரோ ஒருத்தன்.. அவன் நமக்கு வேலை குடுத்தா ஓக்கே… இல்லன்னா நமக்கு ஆயிரம் வேலை கிடைக்கும்” அப்டிங்குற மனநிலை ஒருத்தனுக்கு எப்போ வருதோ அதாவது “போனால் போகட்டும் போடா” அப்டிங்குற மனநிலைக்கு ஒருத்தன் எப்ப போறானோ அப்ப நிச்சயம் பதட்டம் வராது. அந்தப் பதட்டம் எனக்கு இல்லாம இருந்துருந்தா “What is current ?”ன்னு அவன் கேட்டப்பவே பதில் சொல்லிருப்பேன்.

ஆனா அந்த ”போனால் போகட்டும் போடா” மனநிலையை உருவாக்குறது அவ்வளவு சாதாரண விஷயம் இல்லை. அது தனி ஒரு மாணவனை மட்டும் சார்ந்த விஷயமும் இல்லை. அவன் குடும்ப சூழ்நிலைகள்தான் இந்த மனநிலைய தீர்மானிக்குது.

ஒரு well settled குடும்பத்துலருந்து வரும் ஒரு மாணவர எடுத்துக்குவோம். அவர் படிச்சி முடிச்ச உடனே வேலைக்கு போகனும்ங்குற அவசியம் இல்லை. அவசியம்ன்னு சொல்றத விட அத்யாவசிய தேவைகளுக்காக அவர் வேலைக்கு போயே ஆகவேண்டும் என்கிற கட்டாயம் இருக்காது. கலேஜ்ல வேலை கிடைக்கலன்னாலும் காலேஜ் முடிச்சப்புறம் கொஞ்ச நாள் வீட்டுல  இருந்து வேலை தேடமுடியும்ங்குற நம்பிக்கை அவர்கிட்ட இருக்கும். அவருக்கு இந்த ”போனால் போகட்டும் போடா” மனநிலை ஈஸியா வந்துரும்.

ஆனா அதே ஒரு மிடில் க்ளாஸ் பையனையோ இல்லை அதற்கும் கீழ் நிதி நிலமையில இருக்க குடும்ப பசங்களையோ எடுத்துக்குங்க. அவங்க எப்படா படிச்சி முடிச்சி வேலைக்கு போவாங்க.. நம்ம குடும்ப கடனெல்லாம் எப்படா தீரும்.. அப்பாவுக்கு எப்படா கொஞ்சம் சுமை இறங்கும்னு பாத்துக்கிட்டு இருப்பாங்க. அந்த எதிர்பார்ப்ப பூர்த்தி செய்யனுமேங்குற ஒரு அழுத்தமே அந்தப் பையனுக்கு மேல சொன்ன மனநிலையக் குடுக்காது.

அப்ப அந்த தெளிவான மனநிலைய நமக்கு கொண்டு வருவதற்கு முதல்ல நம்ம மேலயே நமக்கு தன்னம்பிக்கை வரனும். அதுக்கு நாம மத்தவங்கள விட கொஞ்சம் கடினமா உழைக்கனும். நிறைய பயிற்சி எடுத்துக்கனும். நமக்கு இந்த வேலை வேணும்… அதே சமயம் இவன் இல்லைன்னா இன்னொருத்தன் நமக்கு வேலை குடுப்பான்னு தோணனும்.. வேலை குடுத்தாத்தான் அவன் நமக்கு முதலியார்.. இண்டர்வியூ எடுக்குறப்பல்லாம் அவன முதலி யாரோன்னு தான் நினைக்கனும். இதெல்லாம் நா பன்னல.. அதுனாலதான் எனக்கு 18 கம்பெனி. இதயெல்லாம் செஞ்ச, நம்ம கேட்டகிரிலயே உள்ள பல நண்பர்கள் முதல் இண்டர்வியூலயே க்ளியர் பன்னிருக்காங்க.

ஆக ஒரு இண்டர்வியூல நாம என்ன பதில் சொல்றோம்குறத விட எப்படி பதில் சொல்றோம்ங்குறதுதான் முடிவத் தீர்மானிக்குது. எதோ நா வாங்குன அடியிலருந்து நா கத்துக்கிட்ட ஒண்ணு ரெண்டு விஷயங்கள பகிர்ந்துருக்கேன். யார் மனதும் புண்பட்டிருந்தாலும், கொஞ்சம் ஓவராகப் பேசியதைப் போலத் தோண்றினாலும் மன்னிக்கவும்.

வேறு ஒரு கல்லூரிப் பதிவில் தொடரலாம்....

Saturday, June 24, 2017

அன்பானவன் அசராதவன் அடங்காதவன் – நல்லா வாயில வருது!!!


Share/Bookmark
மன்மதன் படம் வந்து ஒரு வருஷம் கழிச்சி டி.ஆர் ஒரு பேட்டில “மன்மதன் படம் ஹிட்டு.. ஆனா ஏன் A.J.முருகனக் கூப்டு யாரும் அடுத்த படம் எடுக்கல? ஏன்னா அந்தப் படத்த எடுத்தது சிம்புன்னு எல்லாருக்குமே தெரியும்” அப்டின்னு  சொன்னாரு. என்னதான் அவரு பையன்ந்தான் அந்தப் படத்த எடுத்தாருன்னு வச்சிக்கிட்டாலும், இயக்குனர்னு ஒருத்தர் வேலை பாத்துருக்காரு. அதுக்கு கொஞ்சம் கூட மரியாதையே குடுக்காம, மீடியா முன்னால பேசுறோமேங்குற ஒரு இங்கிதமும் இல்லாம அப்படி ஓப்பனா சொன்னாரு. 

அதே அடுத்து அவரோட மகனோட இயக்கத்துல வல்லவன்னு ஒரு முழு நீநீநீ………ளப் படம் வந்துச்சி. அப்ப விஜய் டிவில அந்தப் படத்த விமர்சனம் பன்ன மதன் சிம்புவ அந்த நிகழ்ச்சிக்கு கூப்டு ஒரே ஒரு கேள்வி கேட்டாரு. “இந்தப் படத்த எடுத்து முடிச்சப்புறம் நீங்க அத முழுசா ஒருதடவயாச்சும் பாத்தீங்களா?”ன்னு. ஒரு இயக்குனர இதைவிட ஒருத்தரால அசிங்கப்படுத்த முடியுமான்னு எனக்குத் தெரியல. மேல சொல்லப்பட்ட டி.ஆரோட ஆணவப் பேச்சுக்கு மதனோட இந்தக் கேள்விதான் மிகச் சரியான பதிலாக் கூட இருக்கலாம். அந்தக் கேள்விய விடுங்க. அதுக்கு சிம்பு என்ன பதில் சொல்லிருப்பாருன்னு நினைக்கிறீங்க? “ஒர்க் டென்சன்ல ஃபுல்லா பாக்குறதுக்கு எனக்கு டைம் கிடைக்கல” இதான் சிம்புவோட பதில்.

இப்ப மன்மதன் படத்து இயக்குனர் A.J.முருகன் சார்பா டி.ஆர நா ஒரு கேள்வி கேக்குறேன். உங்க பையந்தான் மன்மதன எடுத்து கிழிச்சாருன்னு நீங்க நினைச்சீங்கன்னா… வல்லவன்  படத்துக்கப்புறம் ஏன் இன்னும் ஒரு படம் கூட உங்க மகனால இயக்க முடியல? இயக்கத்த விடுங்க… இன்னும் ஏன் ஒரு சுமார் ஹிட்டு கூட குடுக்க முடியல? அடுத்தவன் நம்மளப் பத்தி பெருமையா பேசுறதுல தப்பில்லை. ஆனா நமக்கு நாமே தற்பெருமை பேசிக்கிறது கிட்டத்தட்ட ஒரு வியாதி மாதிரி. இப்படி தற்பெருமை பேசியே அழிஞ்ச, அழியப்போற குரூப்பு நம்ம டி ஆர் குரூப்புத்தான். இப்ப தவப் புதல்வர் சிலம்பரசன் டி ராஜேந்திரனோட அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படம் எப்டி இருக்குன்னு பாப்போம்.

ஸ்பாய்லர் அலர்ட்டெல்லாம் போட்டு ஸ்பாய்லர் அலர்ட்டுக்கு உண்டான மரியாதைய நா கெடுக்க விரும்பல. படத்தப் பத்தி சுருக்கமா சொல்லிடுறேன். தமிழ் சினிமாவோட ஒட்டுமொத்த சனியனுகளும் ஒண்ணா சேர்ந்து ஒரு படம் எடுத்தா எப்டி இருக்குமோ அதுதான் இந்த AAA. 

இதுல படத்துக்கு விளம்பரம் “From the director of திரிசா இல்லன்னா நயந்தாரா”ன்னு. அப்டியே 500 நாள் ஓடுன ப்ளாக் பஸ்டர எடுத்து தள்ளிட்டாய்ங்க பாருங்க. ஷகிலா படத்துல பிட்டுங்கள கட் பன்னிட்டு சென்சார் போர்டுல சர்டிஃபிகேட் வாங்கி ரிலீஸ் பன்ன மாதிரி ஒரு படத்த எடுத்துட்டு From the director of திரிசா இல்லைன்னா நயந்தாராவாம்.. மேய்ச்சது எறுமை.. இதுல என்ன பெருமை.. G.V.ப்ரகாஷையெல்லாம் ஹீரோவாக்கி விட்ட குற்றத்துக்காகவே ஆதிக் ரவிச்சந்திரனுக்கு இ.பி.கோ.302 வது செக்‌ஷன் படி அதிகபட்ச தண்டனை குடுக்கனும். இப்ப AAA வேற.. இந்த க்ரைமுக்கெல்லாம் புதுசாத்தான் தண்டனை கண்டுபுடிக்கனும். தண்டனைகள் கடுமையானாத்தான் குற்றங்கள் குறையும்

படத்தோட ஆரம்பத்துல கஸ்தூரி  மார்டன் ட்ரஸ்லாம் போட்டுக்கிட்டு துபாய்ல  ஒரு பார்ல உக்காந்து ஒருத்தனப் பாத்து ரொமாண்டிக் லுக்கு விட்டுக்கிட்டு இருக்கு. கால பின்னுது…கண்ண சுருக்குது… உதட்ட சுழிக்குது..ரொமான்ஸ் பன்ற வயசா கெழவி உனக்கு? அதுகூடப் பரவால்ல. அவன் கஸ்தூரியப் பாத்து திரும்ப ரொமாண்டிக் லுக்கு விடுறான். ரொம்ப மோசமான கண்டிஷன்ல இருப்பான் போல. கட் பன்னி ஓப்பன் பன்னா கஸ்தூரி துபாய்ல ஒரு இண்டர்போல் ஆப்பீசர். அவங்க துபாய் சிட்டியவே கலக்குன ஒரு மிகப்பெரிய தாதாவ தேடிக்கிட்டு இருக்காங்க..

அந்தப் பக்கம் கட் பன்னா மதுரை மைக்கேல்னு ஒரு ரவுடி. எல்லாரும் அவரை மதுரை மதுரைன்னு கூப்டுறாங்க. செம்மையான ஒரு இண்ட்ரோ.. சிம்பு வாழ்க்கையில இதுவரைக்கும் இப்டி ஒரு இண்ட்ரோ வந்ததில்லை. யுவன் BGM க்கும் அதுக்கும் தெறிக்குது. 

ஆளுங்கள மட்டை பன்றதுதான் (கொல்றது) மைக்கேலோட வேலை.. சிம்வுவோட கூட கொலை பன்னப் போறது யாருன்னா மங்காத்தா மஹத்தும் ,VTV கணேஷும். டேய் இவனுங்கல்லாம் கொளுக்கட்டை பன்றானுங்கன்னாலே யாரும் நம்ப மாட்டானுங்க. இதுல கொலை பன்றானுங்கன்னு பீலா விடுறீங்களே இதெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு?. VTV கணேஷும் அவர் ஹேர் ஸ்டைலும் அபாரம். தற்சமயத்துல சிம்புவப் புடிச்சிருக்க சனியன்கள்ல மெயின் சனியன் VTV கணேஷ்தான்.

சரி சிம்பு கொலை பன்றாப்ள.. அதயாச்சும் கொஞ்சம் சீரியஸா காமிக்கிறானுங்களான்னா அதுவும் இல்லை. ரொம்ப கேஸுவலா காமிக்கிறானுங்க. “நீ இனிமே இந்த மாதிரியெல்லாம் பன்னக்கூடாது”ன்னு ஸ்ரேயா சிம்புட்ட சொல்லுது. என்னம்மா இது? வீட்டுப்பாடம் எழுதிட்டு வராதா புள்ளைக்கிட்ட மிஸ்ஸு சொல்ற மாதிரி சொல்லிக்கிட்டு இருக்க? கொலை பன்னிருக்காம்மா.. கொஞ்சம் சீரியஸா பேசுங்கம்மா… அடப்பாவிகளா படம் பாக்குற எங்களுக்குள்ள சீரியஸ்னஸ் கூட உங்களுக்கு இல்லையேன்னு வருத்தமா இருந்துச்சி. 

சிம்பு அந்த கெட்டப்புல சூப்பரா இருந்தாப்ள.. வசனம் பேசாத காட்சிகள் அருமை. அவர் சிறப்புன்னு சொல்ற காட்சிக்கெல்லாம் ரைமிங்கா ”செருப்பு”ன்னு சொல்லனும்போல இருந்துச்சி. Y.G.மகேந்திரனோட ஒரு காமெடி ட்ராக் வச்சிருக்காங்க பாருங்க. சிரிப்பு வரல… வாந்தி தான் வருது. கருமம்.

யுவன் சங்கர் ராஜாவ வச்சி முதல் பாதிய ஓரளவுக்கு நகர்த்திருக்காங்க. ஒரே BGM தான்.. மங்காத்தா, வேல், அறிந்தும் அறியாமலும் படத்துல போட்ட தீமையெல்லாம் கலந்தா மாதிரி ஒரு செம்ம BGM போட்டுருக்காப்ள. இந்த மொக்கை குரூப்புல யுவன் மட்டும் டீ ஆத்திட்டு இருக்காரு. ஒரு வழியா இண்டர்வல் வந்துச்சி. 

இண்டர்வல்ல பக்கத்துல இருந்தவரு ”ச்ச…என்ன ஒரு துடிப்பு.. என்ன ஒரு நடிப்பு… இந்த வயசுலயும் இப்டி ஆக்டிவ்வா இருக்காரே.. டி.ஆர்… டி.ஆர் தாம்ப்பா”ன்னாரு.

"என்னது டி.ஆரா? அடப்பாவி இவ்வளவு நேரம் இவன டி.ஆருன்னு நினைச்சிதான் பாத்துக்கிட்டு இருந்தியா? இது அவரு பையன் STR ய்யா” ன்னேன். 

”அட போப்பா.. டி.ஆரா எனக்குத் தெரியாதா.. அதே தாடி.. அதே ஹேர் ஸ்டைல் நா சின்ன வயசுலருந்து டி.ஆர் ஃபேன்.. என்னை யாரும் ஏமாத்த முடியாது” அப்டின்னுட்டு எழுந்து பாத்ரூம் பக்கம் போனாரு. 

செகண்ட் ஹாஃப் ஆரம்பிச்சிது. அஷ்வின் தாத்தா வந்தாரு.. தமன்னாவ லவ் பண்றேன்னு ஒரு லவ் பாட்டுப் பாடுனாரு பாருங்க.. வடிவேலு கொசு மருந்து அடிக்கும்போது பொத்து பொத்துன்னு எல்லாம் மயங்கி விழுவாயங்களே அந்த மாதிரி தியேட்டர்ல body விழுக ஆரம்பிச்சிருச்சி. யப்பா சாமி… நாடி நரம்பு, ரத்தம், சதை புத்தி எல்லாத்துலயும் மொக்கை வெறி ஊறிப்போன ஒருத்தனாலதான் இப்படி ஒரு செகண்ட் ஹாஃப எடுக்க முடியும்.

படம் முடியப் போற சமயத்துல கெஸ்ட் அப்பியரன்ஸ் G.V.ப்ரகாஷ். சிம்புவும் ஜிவியும் மாத்தி மாத்தி “பொண்ணுங்க அப்டி பாஸ்.. பொண்ணுங்க இப்டி பாஸ்”ன்னு பேசிக்கிட்டு இருக்க, என் பக்கத்து சீட்டு ஆடுற மாதிரி இருந்துச்சி. திரும்பிப்பாத்தா பக்கத்துல உக்காந்துருக்கு வாயில நுறை தள்ளுகிட்டு இருக்கு. அவசர அவசரமா ஆம்புலன்ஸ்ல ஏத்தி ஆஸ்பிட்டல் போனா டாக்டர் பேஷண்ட் கையப் புடிச்சி பாத்துட்டு “சாரி சார்.. ஒரு ஒண்ணேகால் மணி நேரத்துக்கு முன்னால கொண்டு வந்துருந்தா காப்பாத்திருக்கலாம்.. இட்ஸ் டூ லேட்”ன்னாரு. உங்களுக்கும் புரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன். உசாரைய்யா உசாரு.. ஓரஞ்சாரம் உசாரு. 

தமிழ்ல எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி, கமல்லாம் கணக்கில்லாத ஹிட்டுங்கள குடுத்துருக்காங்க. ரஜினி கமல்லாம் மிஞ்சி மிஞ்சிப் போனா ஒண்ணு ரெண்டு படங்கள்ல அவங்களோட பழைய ஹிட் படங்களோட reference ah யூஸ் பன்னிருப்பாங்க. ஆனா ஒரே ஒரு படத்த எடுத்த இந்த ஆதிக்கு சுத்தி சுத்தி அதே படத்தப் பத்தி பேசிக்கிட்டு வெறுப்பேத்திட்டு இருக்காரு.  படம் முழுக்க திணிக்கப்பட்ட ரெட்டை அர்த்த வசனங்கள். இருக்குற தொல்லை பத்தாதுன்னு ரெண்டாவது பாதில காமெடி பன்றேங்குற பேர்ல ஓவர் ஆக்டிங்க் கோவை சரளாவ வேற உள்ள கொண்டு வந்துருக்காங்க. கேக்கவா வேணும். தமன்னாவை இந்தப் படம் அளவுக்கு எந்தப் படத்துலயும் நா வெறுத்ததில்லை. 

படத்துல நா வாய் விட்டு சிரிச்சது ரெண்டு இடத்துலதான். ஒண்ணு படம் போடுறதுக்கு முன்னால போடுற Health Advisory ல மொட்டை ராஜேந்திரன் குரல் வந்தப்போ. இன்னொன்னு சிம்பு சீரியஸா காதலப் பத்தி வசனம் பேசிக்கிட்டு இருந்தப்போ தியேட்டர்ல ஒருத்தன் சத்தமா  கெட்டவார்த்தையில திட்டுனப்போ.  உண்மையிலயே இந்தப் படத்தோட செகண்ட் ஹாஃப் பாத்தா கெட்ட வார்த்தையே இதுவரைக்கும் பேசாதவங்க கூட கெட்ட வார்த்தையில திட்டுவீங்க.

இப்ப இருக்க ஹீரோக்களெல்லாம் என்னென்னவோ புதுப் புது கான்செப்ட் புடிச்சி படம் குடுக்குறாங்க. பெரிய ஹீரோக்களெல்லாம் விவசாயத்த பேஸ் பன்ன கதைகள எடுத்து மக்கள கவர் பன்னப் பாக்குறாங்க. ஆனா சிம்பு மட்டும் இன்னும் அதே லவ், லவ் பன்ன பொண்ணு ஏமாத்திருச்சி, லவ் பெயிலியர் சாங்குன்னு குண்டுச் சட்டிக்குள்ளயே எறுமை மாடு மேய்ச்சிட்டு இருக்காரு. பொண்ணுங்களயும், லவ்வயும் தவற வேற எந்த கான்செப்டுமே தோணாது போல அவருக்கு. 

இதுல கொடுமை என்னன்னா இந்தப் படத்துக்கு ரெண்டாவது பகுதி வேற இருக்காம். அருணாச்சலம் படத்துல செந்தில ஹீரோவா வச்சி படம் எடுக்க சொல்றப்போ, “சார்.. வழக்கமா ஹீரோ போஸ்டர் மேல ஆள் விட்டுதான் சாணி அடிப்பாங்க. ஆனா இவரப் போட்டு படம் எடுத்தா மாடே வந்து சாணி அடிக்கும்”ன்னு ஒரு டைரக்டர் சொல்லுவாரு. அதே மாதிரிதான் இந்தப் படத்துக்கு ரெண்டாவது பார்ட்டுன்னு ஒண்ணு வந்துச்சின்னா மாடு இல்லை…. சாணியே போய் சாணி அடிக்கும். 

ஆக அன்பானவன் அசராதவன் அடங்காதவன் பாத்தப்புறம் நா சொல்றது என்னன்னா காற்று வெளியிடை ஒரு அருமையான படம். 

Saturday, June 17, 2017

பீச்சாங்கை – கை கொடுக்கும் கை!!!


Share/Bookmark
சில வருஷங்களுக்கு முன்னால க்ரிக்கெட் விளையாண்டுகிட்டு இருந்த ஒருத்தர் கேட்ச் புடிக்கிறேன்னு கீழ விழுந்ததால மெடுல்லா ஆப்ளங்கேட்டால அடிபட்டு, பழசையெல்லாம் மறந்து சொன்னதையே திருப்பித் திருப்பி சொல்லிக்கிட்டு இருந்தாரு. ரொம்ப புதுமையான விஷயமா இருந்ததாலும், நகைச்சுவை கலந்து சொன்னதாலயும் எல்லாரையுமே ரொம்ப கவர்ந்த படமா மாறுச்சி. அடுத்ததா போன வருஷம் Tunnel vision அப்டிங்குற இன்னொரு புதுமையான வியாதிய அறிமுகப்படுத்தி, விதார்த்தால கூட இப்டியெல்லாம் நடிக்க முடியுமானு காண்பித்த, ரொம்ப சீரியஸான கதைக்களத்துல உருவான படம் குற்றமே தண்டனை.

அந்த வரிசையில அடுத்ததா Alien Hand Syndrome அப்டிங்குற ஒரு புதுமையான குறைபாட்டப் பத்தி எங்கயோ படிச்ச இயக்குனர் அத மையமா வச்சி ஒரு கதைய ரெடி பண்ணி படமா குடுத்துருக்காரு.  முதல்ல படத்தோட விளம்பரங்கள்ல “Alien Hand Syndrome” பற்றிய இந்தியாவின் முதல் படம்னு விளம்பரம் பன்னிருந்தாங்க. ஒருவேளை படத்துக்காக இவங்களா ஒரு வியாதிய உருவாக்கிருப்பாங்களோன்னு நினைச்சா, அப்டியெல்லாம் இல்லை.  உண்மையிலயே அப்படி ஒரு குறைபாடு இருக்கு.

Spoiler Alert

S.முத்து என்கிர ஸ்மூது பிக்பாக்கெட் கில்லாடி. அவர் மட்டும் இல்லாம அவரோட நண்பர், நண்பரோட மனைவின்னு குடும்பமா சேர்ந்து டீம் ஒர்க் பண்ணி பிக்பாக்கெட் அடிக்கிறவங்க. அதுவும் அந்த குரூப்புல ஸ்மூது ஒரு நல்ல மனம் படைத்த பிக்பாக்கெட். திருடுனதுல முக்கியமான பொருட்கள் எதாவது இருந்தா எடுத்தவங்களுக்கே கொரியர் அனுப்பி விடுற அளவுக்கு நல்லவர்.

எதிர்பாராத ஒரு விபத்துல, அவருக்கு Alien Hand Syndrome அப்டிங்குற குறைபாடு வந்துட அவரோட இடது அவர் சொல்ற பேச்சை கேக்காம அதுவா தனியா செயல்படுது. எவ்வளவோ முயற்சி செஞ்சும் அவரோட பீச்சாங்கைய அவரால கண்ட்ரோல பன்ன முடியல. அந்த சமயம்னு பாத்து ஒரு மிகப் பெரிய பிக்பாக்கெட் ஆர்டர் ஸ்மூதுக்கு கிடைக்க, சொல் பேச்சு கேக்காத கைய வச்சிக்கிட்டே அத எப்படி செஞ்சி முடிக்கிறாரு, அத செஞ்சதால என்னென்ன விளைவுகள்லாம் வருதுங்குறதுதான் படம்.

படத்துக்கு மிகப் பெரிய ப்ளஸ் ஹீரோ. ஆளு சூப்பரா இருக்காரு. நல்ல ஸ்கிரீன் ப்ரசன்ஸ். சிரிக்கும்போதெல்லாம் நம்ம விமல் மாதிரி இருக்காரு. இவன் ரூபத்துல ஒருத்தன ஊமையா பாக்குறது எவ்வளவு சந்தோஷமா இருக்குன்னு பார்த்திபனப் பாத்து வடிவேலு சொல்ற மாதிரி விமல் ரூபத்துல ஒருத்தன் நல்லா நடிக்கிறதப் பாக்க மனசுக்கு ரொம்ப சந்தோஷமா இருந்துச்சி.

அதுவும் அந்த Alien Hand Syndrome வந்தப்புறம் ஒரு பத்து நிமிஷம் அந்தக் கைய வச்சிக்கிட்டு அவர் படுற பாடும், அந்தக் கை பன்னுற அட்டகாசங்களும் செமை. ஆனா தொடர்ந்து அதயே பாக்க கொஞ்சம் போர் அடிக்கத்தான் செய்யிது. ரெண்டாவது பாதில கை சொல் பேச்சு கேக்காம இவரு அதுகூட மல்லுக்கட்டும் போதெல்லாம் “போதும்ப்பா”ன்னு ஆயிருச்சி.


புருஷன் பொண்டாட்டி, நண்பன்னு மூணு பேரும் சேர்ந்து பிக்பாக்கெட் அடிக்கிற ஒரு வித்யாசமான காம்பினேஷனோடவும்,  ஜாலியான, சூப்பரான ஒரு முதல் பாடலோட ஆரம்பிக்கிது படம்.

ஆனா முதல் பதினைஞ்சி இருபது நிமிஷத்துல கிடைக்கிற அந்த ஜாலி ஃபீல் போகப் போக கம்மியாக ஆரம்பிக்கிது. அதை கெடுக்கிறது யாருன்னா நாலு பேர் கொண்ட வில்லன் குரூப்பு.. ப்ளாக் காமெடிங்குற பேர்ல கழுத்துல கத்தி போடுறாங்க.

பக்கத்துல இருந்தவரு என்ன தம்பி ஒரு மாதிரி கவ்வுதுன்னாருப்ளாக் காமெடின்னா அப்டித்தான்னே இருக்கும்ன்ணேன். அதுக்கில்ல தம்பி ப்ளாக்கோ ஒயிட்டோ காமெடின்னா சிரிப்பு வரனுமேன்னாருசாரி சார்.. உங்களுக்கு அப்டின்னா ப்ளாக் காமெடி புரியல.. திஸ் ஈஸ் உலக சினிமா பாக்குறவங்களுக்குதான் புரியும்ன்னேன். மேலருந்து கீழ வரைக்கும் பாத்துட்டு எழுந்து போய் நாலு சீட் தள்ளி உக்கார்ந்துட்டாரு.

மனைவிக்கு பயப்படுற வில்லன். அத சொல்லியே மிரட்டுற ஆர்வக்கோளாறு மச்சான். நகரவே கஷ்டப்படுற அதிக எடையுள்ள ஒருத்தர். சீரியஸான ஒருத்தர்ன்னு அந்த வில்லன் குரூப் செட்டப்பெல்லாம் நல்லாதான் இருந்துச்சி. ஆனா அந்த மச்சான் கேரக்டர்தான் கடுப்பு. அந்த கேரக்டர் அப்டியே கலகலப்பு கருணாகரன் செஞ்ச கேரக்டர். ஈரோடு, திருப்பூர் பேச்சு வழக்குல ”இல்லீங்க மாம்ஸ் சொல்லுங்க மாம்ஸ்”ன்னு அவரு பேசுறதும் அவரோட கெட்டப்புமே கொஞ்சம் கடுப்பா இருக்கு பாக்க.

காட்சிகள் எடுக்கப்படுற லொக்கேஷன் ரொம்ப முக்கியம். ஒரே லொக்கேஷன், ஒரே லைட்டிங் போன்றவற்ற முடிஞ்ச அளவு தவிர்த்தா நல்லது. ஏன்னா இப்பல்லாம் பெரிய ஹீரோ படங்கள்லயே ஒரே லொக்கேஷன் ரெண்டு மூணு தடவ வந்தா கடுப்பாகுறாங்க நம்மாளுக. தூங்காவனம் படத்துல சுத்தி சுத்தி அண்ட கிச்சனுக்குள்ளயே எடுக்கப்பட்ட காட்சிகள் எரிச்சலாக்குச்சி. அதே மாதிரி சர்தார் கப்பர் சிங் படத்துல ஒரு அருவி லொக்கேஷன்ல பவனும், காஜலும் சந்திக்கிற மாதிரி காட்சி ஒரு அஞ்சி ஆறு இருக்கும். திரும்பத் திரும்ப அதே இடத்துல காட்சிகளக் காட்டி ஒரு கட்டத்துல அருவியக் காட்டுனாலே கடுப்பாகி  ஆடியன்ஸ் கத்துற  அளவுக்கு ஆச்சு அதுல.

இங்க வில்லன் சம்பந்தப்பட்ட காட்சிகள் மொத்தமுமே ஒரு குடோனுக்குள்ள எடுத்துருக்காங்க. அதே லைட்டிங்க். ஒரே மாதிரியான வசன உச்சரிப்பு. முதல் பட இயக்குனர்கள் பெரும்பாலனவங்களுக்கு இருக்க ப்ரச்சனை இது. பட்ஜெட்டுக்குள்ள முடிக்கனும்னு ஒரு சின்ன வட்டத்துக்குள்ள படத்த அடக்கிடுறாங்க. ஒரே ரூமுக்குள்ள எடுத்து வெற்றி பெற்ற படங்கள்லாம் இருக்கு. ஆனா அந்த அளவு அழுத்தமான ஸ்கிரிப்டு நம்மாளுங்க யாரும் பன்றதில்ல. இந்த வில்லன் செட்டப்புல ஒரு சில காட்சிகள் மட்டும் சிரிப்ப வரவழைச்சது. மொத்த படத்துக்கும் இந்த வில்லன் சம்பந்தப் பட்ட காட்சிகள் மட்டும் கொஞ்சம் மைனஸ்.

ப்ளேடு போட்டு பிக்பாக்கெட் அடிக்கிறது கிட்டத்தட்ட வழக்கொழிந்து போன ஒரு தொழிலாயிருச்சி. அதே மாதிரிதான் STD பூத்தும். இப்பல்லாம் STD பூத்துக்கு யாரும் போய் ஃபோன் பன்றாங்களாங்குறதே டவுட்டுதான். இவை சம்பந்தப்பட்ட காட்சிகள தற்போதைய சூழலுக்கு மாறுபட்டு இருக்கதால கொஞ்சம் நெருடலா இருக்கு.

காமெடி படங்கள்னாலும் சில விஷயங்கள சீரியஸாத்தான் காமிக்கனும். ஆரம்பத்தில “குஜக” கட்சின்னு சொல்லிட்டு “நல்லவங்களோட்தான் கூட்டணி”ன்னு விஜயகாந்த் பேட்டிய கிண்டலடிக்கிறாங்க. ஒருவேளை இது ஸ்பூஃப் வகைப் படமோன்னு பாத்தா அதெல்லாம் இல்ல. திரும்ப இடையில TRP TV ன்னு ஒரு சேனல்ல நியூஸ் வாசிக்கிறத காமிக்கிறாங்க. அந்த நியூஸ் வாசிக்கிற பொண்ணு என்னன்னா கிரிஜா ஸ்ரீ மாதிரி பேசிக்கிட்டு இருக்கு. கதைக் களத்துக்கு ஏத்த மாதிரிதான் காமெடி வைக்கனுமே தவிற சும்மா எதை வைச்சாலும் மக்கள் சிரிக்க மாட்டங்க.

ஹீரோயின் சுமார் ரகம். ஆனா கதையில ஹீரோயினுக்கு ரொம்ப முக்கியத்துவம் இல்லைங்குறதால ஒண்ணும் பெருசா தெரியல. பாடல்கள் வித்யாசமா இருக்கு. பிண்ணனி இசையும் ஓக்கே.

இயக்குனர் அஷோக்கு முதல் படம். ரொம்பவே வித்யாசமான கான்செப்ட். கதை திரைக்கதை ரெண்டுமே நல்லாதான் பன்னிருக்காரு. மேக்கிங்கும் நல்லாதான் இருக்கு. சில இடங்கள்ல short film பாத்துகிட்டு இருக்க மாதிரி இருந்துச்சி. இதே செட்டப்ப வச்சி இன்னும் சிறப்பா செஞ்சிருக்கலாம். உதாரணமா ஆரம்பத்துல காமிக்கிற குடும்பத்தோட பிக்பாக்கெட் அடிக்கிற கான்சென்ப்ட் நல்லாருக்கு. அவங்க சம்பந்தப்பட்ட காட்சிகள இன்னும் கொஞ்சம் அதிகம் வச்சிருக்கலாம். அவங்கள எதிர்மறையா காமிச்சதுக்கு பதிலா பின்னால ஸ்மூதுக்கு அவங்க உதவி செய்யிற மாதிரி வச்சிருந்தா நல்லாருந்துருக்கும்.

அதுமட்டும் இல்லாம திருடனா இருக்க ஸ்மூத பீச்சாங்கை நல்லவனா மாறச் சொல்லுது. அதயே, சரியா பிக் பாக்கெட் அடிக்கத் தெரியாம இருக்க ஸ்மூதுக்கு அந்தக் கை உதவி செஞ்சி மொக்கையா இருந்தவன செமை பிக்பாக்கெட்டா மாத்துதுன்னு கொண்டு போயிருந்தா இன்னும் சேட்டையா இருந்துருக்கும்.

எப்டியோ, படம் ட்ரெயிலரப் பாத்து எதிர்பார்த்த அளவு ரொம்ப சிறப்புன்னு சொல்ல முடியாது. ஆனா கண்டிப்பா ஒருதடவ பாக்கலாம்.



Tuesday, June 13, 2017

பாஸ்பரஸ் கொளுத்தியும் ப்ளாஸ்டிக் அரிசியும்!!!


Share/Bookmark
சில வருஷங்களுக்கு முன்னால வெயில் காலத்துல தமிழ்நாட்டுல அங்கங்க ஒரு சில தீ விபத்துக்கள் நடந்துச்சி. விபத்துக்கான காரணங்கள் சரியா தெரியல. ”வெள்ளை பாஸ்பரஸ்” அப்டிங்குற ஒரு வேதிப்பொருள் அறை வெப்பநிலையில தீப்பற்றி எரியும்ங்குற விஷயத்த சமீபத்துல படிச்சி தெரிஞ்சிக்கிட்ட நம்மூரு விஞ்ஞானி ஒருத்தன் தீப்பற்றி எரியிற குடிசைங்க வெள்ளை பாஸ்பரஸாலதான் எரியிதுன்னு கிளப்புனான்.  அதுமட்டும் இல்லை இத வேணும்னே ஒரு குழு செய்வதாகவும் பரப்புனான்.

அதாவது இந்த பாஸ்பரஸ் கொளுத்தி என்ன பன்னுவான்னா, வெள்ளை பாஸ்பரஸ்ஸ சாணில முக்கி அத வீட்டு கூரை மேல எரிஞ்சிட்டு போயிருவானாம். வெயில் அடிச்சி சாணி காஞ்சப்புறம் அதுக்குள்ள இருக்க பாஸ்பரஸ் எரிய ஆரம்பிக்குமாம். இந்த டெக்கினிக்க யூஸ் பன்னிதான் தமிழ்நாட்டுல பல குடிசைகள் எரிக்கப்பட்டதா செய்தி தீயா பரவுச்சி. வெள்ளை பாஸ்பரஸ் எப்டி இருக்கும்னே நமக்குத் தெரியாது. வெள்ளை பாஸ்பரஸ் எப்டி இருக்கும்..? வெள்ளையா இருக்கும் அவ்வளவுதான்.

ஏண்டா குடிசைய கொளுத்துரவன் போற போக்குல ஒரு பீடிய பத்தவச்சி கூரை மேல தூக்கிப் போட்டுட்டு போறான்னு சொன்னாலாவது ஒரு லாஜிக் இருந்துருக்கும். இல்ல வெள்ளை பாஸ்பரஸ் வச்சி கொளுத்துறவன் இப்ப எரிஞ்சிதே சென்னை சில்க்ஸ் அந்த மாதிரி ஒரு பெரிய ஆப்ரேஷனுக்கு அத யூஸ் பன்னான்னு அடிச்சி விட்டாலாவது கதைல ஒரு நியாயம் இருந்துருக்கும்.

அதயெல்லாம் விட்டுப்புட்டு அவன் கைக்காசயெல்லாம் போட்டு வெள்ளை பாஸ்பரஸ் வாங்கி, அத சாணியில முக்கி, அந்த சாணி காயிற வரைக்கும் காத்திருந்து கொளுத்தி… ஸ்ஸ்ஸப்பா… இப்பவே கண்ணக் கட்டுதே.... சரி யாராவது அந்த பாஸ்பரஸ் கொளுத்திய பாத்திருக்கீங்களான்னா அதுவும் இல்லை.. அவன் எப்டிடா இருந்தான்னா “ஹைட்டு சார்.. வெய்ட்டு சார்… ஒய்ட்டு சார்”ன்னு அளந்து விட வேண்டியது. இல்லன்னா இருட்டுல என் பக்கத்துலதான் சார் ஓடுனான்.. புடிக்க கை நீட்டுனேன்.. ஜஸ்டு எஸ்கேப் ஆகி ஓடிட்டான் சார்.. அதுலயும் அவன் கால்ல ஸ்பிரிங் வச்சி செம்ம ஸ்பீடா ஓடுனான்னு எங்க ஊர்ல ஒண்ணு கெளப்புனாய்ங்க பாருங்க அதெல்லாம் உச்சகட்டம்.

இந்த பாஸ்பரஸ் கொளுத்திக்கு கொஞ்சமும் சளைக்காத, இன்னும் சொல்லப்போனா அத விட பல மடங்கு வீரியமுள்ள ஒரு புரளிதான் ப்ளாஸ்டிக் அரிசி.

போன வாரம் அலுலகத்துல நண்பர் ஒருத்தர் இந்த ப்ளாஸ்டிக் அரிசைப் பத்தி பேசிக்கிட்டு இருந்தாரு. ப்ளாஸ்டிக்ல் அரிசியா? அது எப்டிங்க? எதும் கலப்பட அரியா?ன்னேன்…. இல்லங்க.. ப்ளாஸ்டிக்லயே அரிசி வந்துருக்குன்னாரு. அவர் சொன்ன இந்த பதில்லருந்தே, ப்ளாஸ்டிக் அரிசின்னு அவர் என்கிட்ட சொன்னப்போ எனக்கு என்னென்ன கேள்விங்கல்லாம் தோணுச்சோ, அதெல்லாம் அவர்கிட்ட யாரோ ப்ளாஸ்டிக் அரிசியப் பத்தி சொன்னப்போ அவருக்குத்  தோணலன்னு தெரிஞ்சிது.

சரி இப்ப ப்ளாஸ்டிக் அரிசின்னா, ப்ளாஸ்டிக்ல உருவாக்கப்பட்ட போலி அரிசிகள்.. அப்டின்னா ப்ளாஸ்டிக்க கொதிகிற தண்ணில போட்டா அது எப்புடி வெந்து சோறு மாதிரி ஆகும்? அப்படியே அதிக வெப்பநிலையில சோறு மாதிரி ஆனாலும் திரும்ப வெப்பநிலை கம்மியான உடனே இறுகிய நிலைக்கு போயிருமே? அப்படியே சோறு மாதிரி பதமா இருந்தாக் கூட அத சாப்டா எப்படி ஜீரணம் ஆகும்? பல வருஷங்கள் ஆனா கூட மண்ணாலயே மக்க வைக்க முடியாத ப்ளாஸ்டிக்க நம்ம உடம்புல உள்ள அமிலங்கள் எப்படி ஜீரணிக்குது? இதெல்லாம்தான் எனக்கு தோணுன அடிப்படை கேள்விகள்.

சரி என்ன மேட்டர்னு இண்டர்நெட்டுல தேடிப் பாத்தா, இப்ப இந்த வதந்தி ஆரம்பிச்சது ஆந்திராவுலன்னு தெரிஞ்சிது. எவனோ ஒருத்தான் பாய் கடையில பிரியாணிய நல்லா ஃபுல் கட்டு கட்டிருக்கான். வயித்துல ஜலபுலஜங்ஸ் ஆயி ரெண்டு நாள் வயித்தப் புடிச்சிட்டே யோசிச்சிருக்கான். அப்பதான் பாய் கடையில திண்ண பிரியாணிலதான் பிரச்சனைன்னு தோணிருக்கு. இந்த ப்ளாஸ்டிக் முட்டை ப்ளாஸ்டிக் அரிசி மேட்டர எங்கயோ கேட்ட ஞாபகம் இருந்திருக்க, உடனே அந்த பிரியாணி கடையில போய் நீ ப்ளாஸ்டிக் அரிசில சமைச்சி போடுறன்னு சண்டை கட்டிருக்கான். அங்க ஆரம்பிச்ச வசந்தி தான் இப்புடி கொழுந்து விட்டு எரியிது.

சரி ப்ளாஸ்டிக் அரிசின்னு எதாவது கண்டுபுடிச்சிருக்காங்களான்னு  தேடிப்பாத்தா எல்லாமே நம்ம பாஸ்பரஸ் கொளுத்திய பாத்த கதைதான். புரளியக் கிளப்பிருக்கானுங்களே தவற எங்கயும் ஆதாரப்பூர்வமா புடிக்கல.

ப்ளாஸ்டிக் அரிசி இல்லாம செயற்கை அரிசி தயாரிப்புகள் இருக்கு. அதாவது அரிசி அரைக்கும்போது வர்ற உடைஞ்ச அரிசிக்கள (குருனை) வச்சி, அதுகூட சில பொருட்கள சேத்து அத மறுபடியும் முழு அரிசியா மாத்துற செய்முறைகள் இருக்காம். அப்படி உருவாக்கப்படுற அரிசிக்கள் உண்மையான முழு அரிசிக்களை விட பண்புகளில் கொஞ்சம் மாறுபாடு இருக்குமாம். அவ்வளவுதான்.

இப்ப வாட்ஸாப், முகப்பக்கங்கள்ல உலவுல வீடியோ ஆதாரங்கள் என்னன்னா வடிச்ச சோத்த உருண்டையா உருட்டி அத பந்து மாதிரி அடிச்சி ஜம்ப் பன்ன வச்சி இதான் ப்ளாஸ்டிக் அரிசிங்குறாங்க. எனக்கு அதப் பாத்து உள்ளத்தை அள்ளித்தா காமெடிதான் ஞாபகம் வந்துச்சி. ”ஐ இவரு துள்றாரு இவருதான் காசிநாதன்.. ஐ அவரும் துள்றாரு அவருதான் காசிநாதன். ஐ நானும் துள்றேன் நாந்தான் காசிநாதன்”ங்குற மாதிரி ஐ இதுவும் ஜம்ப் பன்னுது இதான் ப்ளாஸ்டிக் அரிசி.. ஐ அதுவும் ஜம்ப் பன்னுது அதுவும் ப்ளாஸ்டிக் அரிசின்னு அள்ளி விடுறானுங்க. கடந்த ஒரு வாரமா சோத்த எவனும் திங்கிறதுல்ல. உருட்டி தரையில அடிச்சி விளையாண்டுக்கிட்டு இருக்கானுங்க.

இவனுங்களாச்சும் பரவால்ல. இவங்களுக்கு விழிப்புணர்வக் குடுக்கவேண்டிய மீடியா இன்னும் ஒருபடி மேல போய் எரியிற தீயில எண்ணைய ஊத்தி அவங்க கொஞ்சம் ப்ரச்சனைய பெருசாக்கிட்டு இருக்காங்க.

அதயெல்லாம் விட மீடியாக்கள்ல வர்ற “ப்ளாஸ்டிக் அரிசியைக் கண்டறிய வழிகள்தான்” தாறுமாறு. யாருமே ப்ளாஸ்டிக் அரிசியப் பாத்ததில்லை. இப்படித்தான் இருக்கும்னு ஒரு உத்தேசமா ”ப்ளாஸ்டிக்” அப்டிங்குற வார்த்தைய மட்டும் மனசுல வச்சிக்கிட்டு ஸ்க்ரிப்ட் எழுதிருக்கானுங்க.

சோற வடிச்சி மூணு நாள் வச்சிருங்க.. அது கெட்டுப்போகலன்னா ப்ளாஸ்டிக் அரிசி.. கெட்டுப்போச்சுன்னா நல்ல அரிசியாம். அப்ப மூணு நாள் கண்டுபுடிக்கிற வரைக்கும் சோறு திங்காம பீஸா பர்கர்ன்னு திங்கிறதா?

அப்புறம் தண்ணில போட்டா நல்ல அரிசி கீழ போயிருமாம்..ப்ளாஸ்டிக் அரிசி மேல மிதக்குமாம். அடேய்… நல்ல அரிய தண்ணில போட்டாலே எடை கம்மியா இருக்க அரிசிங்க மேல மிதக்கத்தாண்டா செய்யும்…

அப்புறம் கொதிக்கிற தண்ணில போட்டா ஒரு லேயரா ஃபார்ம் ஆகுமாம்.. அரிசிய சூடு பன்னா ப்ளாஸ்டிக் அரிசி கருப்புக் கலர்ல கருகிருமாம். அதாவது பாலிதீன் பை, ப்ளாஸ்டிக் ஐட்டத்தையெலாம் எரிச்சா உருகி கருப்பாகுதுல்ல.. அத மைண்டுல வச்சி எழுதப்பட்ட பாய்ண்டு இது.



அதவிட உச்சகட்ட சிரிப்பு வந்தது ஒரு ஃபோட்டோவப் பாத்து. அதுல ஒருபக்கம் வெள்ளையா கொஞ்சம் அரிசி.. இன்னொரு பக்கம் மங்கலா பழுப்பு நிறத்துல கொஞ்சம் அரிசி. மங்கலா இருக்க அரிசி நல்ல அரிசின்னும், வெள்ளையா இருக்க அரிசிய ப்ளாஸ்டிக் அரிசின்னும் குறியிட்டுக் காட்டிருந்தானுங்க. அட லூசு நாயிங்களா.. இந்தப் பக்கம் வெள்ளையா இருக்கது பச்சரிசி.. அந்தப்பக்கம் மங்களா இருக்கது புழுங்கரிசி.. பச்சரிசிக்கும் புழுங்கலரிசிக்கும் வித்யாசம் தெரியாதவன்லாம் ப்ளாஸ்டிக் அரிசியக் கண்டுபிடிக்க வழிசொல்றானே ஆண்டவா..

இதெயெல்லாம் விடுங்கப்பா.. ப்ளாஸ்டிக் அரிசியக் கண்டுபுடிக்க இதவிட  இன்னொரு ஈஸியான வழி இருக்கு. அத யாருமே சொல்லலியே.. நீங்க சாப்ட சாப்பாடு, எப்புடி சாப்பிட்டீங்களோ அப்புடியே டிஸ்போஸ் ஆச்சுன்னா அது ப்ளாஸ்டிக் அரிசி.  எப்பவும் போல போச்சுன்னா அது நல்ல அரிசி . அம்புட்டுதேன் மேட்டர்.

ஆனா ஒண்ணு… நெருப்பில்லாம புகையாது. நாம வழக்கமா வாங்கி சாப்புடுற அரிசிகள்ல கலப்பட அரிசிகள் வந்திருக்கலாம். இப்போதுதான் வந்திருக்கவேண்டும் என்ற அவசியம் இல்லை. நெடு நாட்களுக்கு முன்னரே வந்திருக்கலாம். இப்பதான் ப்ரச்சனை வந்திருக்குங்குறதால நாம எல்லாருமே சாதத்த உருட்டி உருட்டிப் பாக்குறோம். அப்படி பந்து போல உருளும் அரிசிவகை வெளிநாடுகளில் உபயோக்கிக்கப்படும் Glutinous riceஎனப்படும் ஒருவித ஒட்டும் தண்மையுடைய அரிசி வகையாக இருக்கக்கூடும் என நண்பர் ஒருவர் எழுதியிருந்தார். அப்படியும் இருக்கலாம். அல்லது பாஸ்பரஸ் கொளுத்திகளைப் போல இது முழுவதும் மிகைபடுத்தப்பட்ட ஒரு வசந்தியாகவே இருக்கலாம்.

எது எப்படி இருந்தாலும் புதுசா வந்திருக்குற அரிசி ப்ளாஸ்டிக்கால் ஆனதல்ல என்பது மட்டும் உறுதி. கிளப்பி விடுறதுதான் விடுறீங்க.. தயவு செய்து “ப்ளாஸ்டிக் அரிசி” ங்குறதுக்கு பதில் “கலப்பட அரிசி”ன்னாவது சொல்லுங்க. மனசுக்கு கொஞ்சம் ஆறுதலாவாச்சும் இருக்கும்.



Saturday, June 10, 2017

அசத்தும் அமெரிக்க ரஜினி ரசிகர்!!!


Share/Bookmark


தான் எந்த விதமான ரசனையுடையவன் என்பதை ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதாமாகக் வெளிக்காட்டிக் கொண்டுதான் இருக்கின்றனர். இது சினிமா ரசிகர்களுக்கு மட்டுமில்லை மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரும் தான் ரசிக்கும் ஒரு விஷயத்தை மற்றவர்களும் அறிய வேண்டும் என விரும்பி அதை ஒவ்வொரு விதத்தில் வெளிக் காட்டுகின்றனர். தான் ரசிப்பவரைப் போல ஆடை அணிவது, அவரைப் போல நடந்து பார்ப்பது, அவர்களைப் போல சிகையலங்காரம் செய்துகொள்வது என இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம். 

அரசியல் ஆர்வமிருப்பவர்கள் அவர்கள் விரும்பும் கட்சிக் கொடிகளை வாகனங்களில் பறக்க விடுகின்றனர். சேகுவேரா போன்ற புரட்சியாளர்களை விரும்புபவர்கள் அவர்களின் படம் போட்ட ஆடைகளை அணிகின்றனர். கால்பந்தாட்டத்தில் ரொனால்டோவோ, மெஸ்ஸியோ ஒரு புதிய வடிவில் முடிவெட்டிக் கொண்டு களமிரங்கினால் அது உலகம் முழுவதும் பிரபலமடைகிறது. மறுநாள் அவர்களின் ரசிகர்களும் அதே போல் முடிவெட்டிக்கொண்டு கிளம்புகின்றனர். ஆக ரசிப்பவர்களும் ரசனையும் மாறினாலும் வெளிப்பாடு எப்போதும் ஒன்றுதான்.

சினிமா நட்சத்திரங்களைப் பொறுத்த மட்டில் இது இன்னும் ஒருபடி மேல் அதிக ரசிகர் பட்டாளங்களை வைத்திருக்கும் முன்னனி நடிகர்கள் எது செய்தாலும் அதை பின் தொடர லட்சக் கணக்கிலான ரசிகர்கள் உண்டு. அதுவும் ரஜினி என்றால் சொல்லவா வேண்டும்.



படையப்பா திரைப்படத்தில் முட்டிக்கு அருகில் பாக்கெட் வைத்த கார்கோ பேண்ட் அணிந்து நடித்திருந்தார். அது மிகப் பிரபலமடைந்தது. அதன்பின் நலிவடைந்து வரும் தொழில் செய்து வரும் சிலர், ரஜினி அடுத்த படத்தில் எங்களது பொருட்களை உபயோகித்து நடிக்க வேண்டும் என்ற வேண்டுகோள் விடுத்த பேட்டிகளெல்லாம் வார இதழ்களில் வந்தது.

சிவாஜி- த பாஸ் ரீலீஸான சமயத்தில் 8055 என்ற எண்ணை தனது வாகனங்களுக்கு வாங்க ரசிகர்கள் எத்தனை போட்டி போட்டார்கள் என்பது பலர் அறிந்தது. (8055= BOSS)

தற்போது அதற்கும் ஒரு படி மேலாக, வெங்கட்  என்ற அமெரிக்க வாழ் ரஜினி ரசிகர், ரஜினியின் பெயர் வரும்படியான நம்பர் பலகையை தனது நான்கு சக்கர வாகனத்திற்கு பெற்றிருக்கிறார். இது முதல்முறை அல்ல. ஏற்கனவே கனடாவில் சில ஆண்டுகள் வசித்த பொழுதும்   இதே நம்பர் பலகையைத்தான் தனது வாகனத்திற்குப் பெற்றிருந்தார்.



நம்பர் பலகையிலிருக்கும் RAJNI 01 என்ற எண் ரஜினிதான் என்றும் நம்பர் 1 என்பதைக் குறிப்பதற்காக வாங்கினாராம்.

இவை பரவாயில்லை. அவராக அமைத்துக்கொண்டது. ஆனால் தானாக அமைந்த ஒரு விஷயம் இருக்கிறது. அதில்தான் ஆச்சர்யம். அவர் மனைவியின் பெயரும் ரஜினிதான்.


அடிமட்டத்தில் மட்டும் இல்லை அனைத்து மட்டத்திலும் தீவிர ரசிகர்களைக் கொண்டவர் ரஜினி என்றால் அது மிகையில்லை.


Friday, June 9, 2017

THE MUMMY!!! (2017)


Share/Bookmark
ஹாலிவுட்டைப் பொறுத்தவரைக்கும் ஒரு படம் மிகப் பெரிய வெற்றியடைஞ்சிட்டா  மக்கள் சலிச்சிப் போயி போதும்ப்பா சொல்ற அளவுக்கு  அடுத்தடுத்த பாகங்கள் எடுத்து எடுத்தே கொண்ணுருவானுங்க. அந்த வியாதிதான் இப்ப கொஞ்சம் கொஞ்சமா நம்மூர்லயும் பரவி சிங்கங்களையும் முனிக்களையும் பாத்து யப்பா சாமி ஓட்டுனது போதும்டா ரீலு அந்து போச்சுங்குற அளவுக்கு சொல்ல வச்சிருக்கு.

ஏற்கனவே மம்மிக்களை வைச்சி நிறைய படங்கள் வந்திருந்தாலும், 1999 ல ஸ்டீஃபன் சம்மர்ஸால் எடுக்கப்பட்ட ”தி மம்மி” மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. ”ஹமுனாபுத்ரா”ங்குறா ஒரு நகரைக் கண்டுபிடிச்சி அதுல சில ஆயிரம் வருஷங்களாக தூங்கிட்டி இருந்த மம்மிய இவனுங்க தண்ணி தெளிச்சி எழுப்பி விட்டுட, அடுத்து அது என்னென்ன அட்டகாங்கள் பன்னுதுங்குறதுதான் 1999ல வெளிவந்த தி மம்மி.

மணல் புயல், ஒரு முழு மனிதனை ஒரு நொடியில கடிச்சித் திங்கிற பூச்சிகள், பாதி உடலோடு சண்டை போடுற மம்மிக்கள், மொட்டைத் தலை வில்லன்னு நிறைய விஷயங்கள் மக்களை கவர்ந்துச்சி. வெளியிடப்பட்ட அனைத்து மொழிகளிலுமே அந்தப் படம் மிகப்பெரிய வெற்றியடைஞ்சிது. அதைத் தொடர்ந்து எடுக்கப்பட்ட, ராக் நடித்த “தி மம்மி ரிட்டர்ன்ஸ்”, ஜெட்லி வில்லனாக நடித்த “ட்ராகன் எம்பயர்” போன்ற அடுத்தடுத்த பாகங்கள் முதல் பாகத்தின் அளவுவுக்கு வரவேற்பைப் பெறல.

அப்படியிருக்க ஆக்‌ஷன் கிங் டாம் க்ரூஸ் மற்றும் ரசல் க்ரோவ் நடிப்பில வெளிவந்துருக்கு ஒரு புது மம்மி. ஏம்பா டாம் குரூஸூக்கும் மம்மிக்கும் என்னப்பா சம்பந்தம்னு கேப்பீங்க.. சம்பந்தம் இல்லைதான்… ஆனா சம்பந்தப் படுத்திக்கிட்டதன் சோறு போடுவாய்ங்க.. 

பழைய மம்மிக்கும் இப்ப வந்திருக்க புது மம்மிலயும் கதையில ஒண்ணும் பெருசா வித்யாசமெல்லாம் இல்லை. 5000 வருஷத்துக்கு முன்னால ஆஹ்மெட்ன்னு ஒரு இளவரசி, அவங்க அப்பாவுக்கு ரெண்டாந் தாரம் வழியா ஒரு குழந்தை பிறந்த உடனே, எங்க ஆட்சி நமக்கு கிடைக்காதோங்குற பயத்துல அப்பா, சித்தி அவங்க கொழந்தை எல்லாரையும் மட்டை பன்னிடுறா. ஆஹ்மெட் தன்னோட லவ்வரையும் பலி கொடுத்துட்டா, தீய சக்திகளோட கடவுள் மூலமா அழிக்கமுடியாத மாபெரும் சக்தியா மாறிடலாம்னு முடிவு செஞ்சி அவன பலி கொடுக்கப் போகும்போது, ஜஸ்ட் மிஸ்ஸு.. அதுக்குள்ள அரண்மனை காவலாளிகள் வந்து இவளப் புடிச்சி மம்மி ஆக்கிடுறானுங்க. சார் தப்பா புரிஞ்சிக்கிட்டீங்க.. நீங்க நினைக்கிற மம்மி இல்லை. இது எகிப்து மம்மி. 

அவ ஒரு தீயசக்திங்குறதால சனியன ஊருக்குள்ளயே வச்சிருக்கக் கூடாதுன்னு, எகிப்துலருந்து ஆயிரம் கிலோமீட்டருக்கு அப்புறம் உள்ள மெசபடோமியால, வெளிலயே வரமுடியாதபடி பாதுகாப்பா பொதைச்சிடுறானுங்க. 

அப்புறம் என்ன, நிகழ்காலத்துல நம்ம டாம் குரூஸூம் அவரோட லவ்வரும் அந்தப் புள்ளைய பொதைச்ச இடத்தத் தோண்டி அத எழுப்பி விட்டுருவானுங்க. அது போறவன் வர்றவனையெல்லாம் புடிச்சி கடிச்சி வைக்கும். கடைசில அத எப்புடி அழிக்கிறானுங்கன்னுதான் முக்கியம். 

திமிங்கலம்.. செத்துப்போன ஆஹ்மெட்ட மம்மியாக்கி நீ பொதைச்சி வைய்யி… மண்டை கசாயம் பொதைச்சி வச்ச மம்மிய நீ தோண்டி வெளில எடுத்து வய்யி… பேயி.. நீ தோண்டி எடுத்த மம்மிய மறுபடியும் கொண்ணு பூமிக்குள்ளயே பொதைச்சி வெய்யி.. ஏன் சார் பேசாம அந்த மம்மி பொதைச்ச எடத்துலயே இருந்துருக்கலாமே.. இருந்துருக்கலாம்தான்.. அப்புறம் புரோடியூசர்கிட்ட வாங்குன காசுக்கு எப்புடி படம் எடுக்குறது?

மம்மி பொட்டிக்குள்ளருந்து வெளில வந்தப்புறம் திடீர்னு கை தனியா கால் தனியா ஆட்டி ஒரு மைக்கல் ஜாக்சன் ஸ்டெப்பு ஒண்ணு போட்டுச்சி.  நான்கூட ஓ பேயி மைக்கேல் ஜாக்சன் ஃபேன் போலன்னு நினைச்சிட்டேன். அப்புறம்தான் தெரியிது பேயோட நடக்குற ஸ்டைலே அப்புடித்தான்னு.

படத்துல ஒரு ஃப்ளைட் க்ராஷ் ஆகுற சீன் ஒண்ணு எடுத்துருக்கானுங்க. சூப்பரா எடுத்துருந்தாங்க. 3Dக்கும் அதுக்கும் பாக்கும்போது நமக்கே அடிவயிறு கலங்கிருச்சி ஒரு நிமிஷம் நம்ம மம்மி பாக்குறோமா இல்லை மிஷன் இம்பாஸிபிள் பாக்குறோமான்னு கொயப்பமாயிருச்சி. 

அதுவும் ஆங்கிலப் படங்கள்னா நம்ம ஆட்கள் தியேட்டர்ல அடிக்கிற கூத்துக்கு அளவே இருக்காது. ஒரு காட்சில “சார் இங்க ஒரு பாடி இருக்கு”ன்னு ஒருத்தன் சொல்லுவான். உடனே தியேட்டர்ல இருந்த ஒருத்தன் “அப்டியே என்ன சைஸுன்னு பாத்து சொல்லுப்பா” ன்னு கமெண்ட் அடிக்க தியேட்டரே சிரிச்சிது.

கதையிலயும் பெரிய மாற்றம் இல்லை. பழைய மம்மில ஆம்பளை மம்மி. இங்க லேடீஸ் மம்மி. அதுவும் அந்தப் பொண்ணு பாக்க அப்டியே நம்ம ஓவியா சாயல்ல இருக்கு. டாம் குரூஸ் எத்தனை படத்துல எத்தனை பேர போட்டு வெளுத்து எடுத்துருப்பாரு. எல்லாத்துக்கும் சேத்து இந்தப் படத்துல மம்மி அவரப் போட்டு வெளுக்குது. தூக்கிப் போட்டு பந்தாடுது. எல்லாத்தையும் வாங்கிட்டு நம்மாளு வலிக்குதா? ப்ச் ப்ச்.. லைட்டான்னு தொடைச்சிட்டு போய்ட்டே இருக்காப்ள.  ரசல் க்ரோவ் ரொம்ப சாதாரண ஒரு பாத்திரத்தில் வந்துட்டு போறாரு. 

மம்மியைக் கண்டறியும் குகைக் காட்சி, மம்மி உயிர்த்தெழும் காட்சி, விமான விபத்துக் காட்சின்னு அங்கங்க ஒண்ணு ரெண்டு விஷங்கள் நல்லா இருக்கு. மத்தபடி பெருசா சுவாரஸ்யப் படுத்துற அளவு சிறப்பா எதுவும் இல்ல


Tuesday, June 6, 2017

போங்கு – ஒரு ரேர் பீஸின் ஆர்டினரி திரைப்படம்!!


Share/Bookmark
கதை திரைக்கதையைத் தாண்டி கதாப்பாத்திர அமைப்புங்குறது ஒரு படத்தோட வெற்றிக்கு மிகவும் முக்கியமான ஒண்ணு. கதாப்பாத்திரங்களோட அமைப்புதான் ஒரு திரைக்கதைக்கு உயிர் கொடுக்குற முக்கியமான விஷயம். ஒரு படத்துல ஒரு நடிகர் நடிக்கிறாருன்னா அந்தப் படத்தப் பத்தி பேசும்போதெல்லாம் அவர் நடிச்ச கதாப்பாத்திரம்தான் முன்னால வந்து நிக்கனும். ரொம்பப் பெரிய உதாரணம்லாம் வேணாம்.. பாகுபலிய எடுத்துக்குங்க.. பாகுபலியப் பத்திப் பேசும்போது நமக்கு கட்டப்பாங்குற பேர்தான் மொதல்ல வருமே தவற சத்யராஜ்ங்குற பேர் முன்னால வந்து நிக்காது. அதே மாதிரிதான் அந்தப் படத்துல ஒவ்வொரு பாத்திரப் படைப்பும்.

ஒரு கதாப்பாத்திரம் எவ்வளவு நேரம் திரையில வருதுங்குறது முக்கியம் இல்லை. அது அந்தக் கதையில ஏற்படுத்துற தாக்கமும், பார்வையாளர்கள் மனதுல ஏற்படுத்துற தாக்கமும்தான் முக்கியம். ரெய்டு-2 ன்னு இந்தோநேஷியன் ஆக்‌ஷன் படம் ஒண்ணு இருக்கு. பெரும்பாலானோர் பார்த்திருக்கக் கூடும். அதுல paid கில்லர் ஒருத்தன் இருப்பான். மொத்தமா அந்த கேரக்டர் படத்துல நாலு சீன் தான் வரும். முதல் காட்சில ஒருத்தன அவன் கொடூரமா கொலை பன்னுவான். அடுத்த காட்சில அவனோட ஃபேமிலி எப்படி.. அவனோட மனைவி அவன எப்படி நட்த்துறாங்குறத காமிப்பாங்க.. அதுக்கு அடுத்த சீன்ல அவன இன்னொரு கேங் கொலை பன்னிரும்.  இவ்வளவுதான் அவனோட சீன்ஸ் அந்தப்  படத்துல. அதிகபட்சம் பத்து நிமிஷம். அவன் நல்லவன்லாம் கெடையாது. கொடூரமான கொலைகாரன். ஆனாலும் அவன் சாகும்போது நமக்கு கஷ்டமா இருக்கும். அந்த குறுகிய நேரத்துல நம்ம மனசுல அவன ஆழமா பதிக்கிறாங்க. அதுதான் ஒரு சிறந்த பாத்திரப்படைப்பு.

அட போங்கப்பா.. பாத்திரப் படைப்பாவது.. மன்னாங்கட்டியாவது.. நாங்க அதெல்லாம் கண்டுக்க மாட்டோம். ஹீரோன்னா பஞ்ச் பேசனும். வில்லன்னா ஹை பிட்ச “வண்டிய எடுங்கடாஆஆ”ன்னு கத்தனும் அவ்ளோதான் நம்ம லாஜிக் அப்டின்னு மனசுல வச்சிக்கிட்டு எடுக்கப்பட்ட ஒரு படம் தான் நம்ம போங்கு.

Spoiler Alert

ஜெயில்லருந்து வந்த நட்ராஜ் & co (ஒரு பொண்ணு +ரெணுடு பசங்க) எல்லா கார் கெம்பெனிகள்லயும் வேலை தேடுறாங்க. ஆனா இவங்களோட profile blacklist பன்னப்பட்டிருக்கதால யாரும் இவங்களுக்கு வேலை  குடுக்க மாட்டேங்குறாங்க. அந்த விரக்தில, ஒரு அண்ணாச்சிக்கிட்ட வேலைக்கு சேருறாங்க. அவரு இவங்களுக்கு கார் திருடுற அசைண்மெண்ட்ட குடுக்குறாரு. ரெண்டு கார் திருட்டுகள வெற்றிகரமா முடிச்ச பிறகு மதுரையில பல்க்கா பத்து கார் திருடுறதுக்கான ஆர்டர நட்ராஜ்கிட்ட குடுக்குறாரு.

நட்ராஜ் கார் திருடப்போறது யாருன்னா மதுரை முத்துப்பாண்டியோட கசின் பிரதர் மதுரை சாதா பாண்டி வீட்டுல. அங்க போனப்புறம்தான் மதுரைப் பாண்டி ஏற்கனவே நட்ராஜோட வாழ்க்கையில விளையாண்டுருக்கது தெரியவர, அவர நட்ராஜ் எப்படி சுத்தவிட்டு, பழி வாங்குறாருங்குறது தான் படத்தோட கதைச் சுருக்கம்,  

கதாநாயகன் நட்ராஜ் உட்பட படத்துல எந்த கேரக்டருக்குமே ஒரு டீட்டெய்லிங் இல்லை. அவங்க சொல்லிருக்க ஒருசில விஷயங்களையும் நம்ம மனசுல நிக்கிற மாதிரி சொல்லல. ரொம்ப லைட்டா கேஷூவலா எடுத்துருக்காங்க.

முதல்ல நட்ராஜ் ஒருத்தர்கிட்ட வேலை பாக்குறாரு.. அவர் யாரு? அவர் ஏன் கார தூக்க சொல்றாரு? அவரோட தொழில் என்ன? சரி நட்ராஜ் காரக் கடத்துனப்புறம் அந்தக் கார்ல பத்துகோடி பணம் இருக்கத கண்டுபுடிக்கிறாரு. (sneak peak இல் ரிலீஸ் செய்யப்பட்ட காட்சி) அந்தப் பணத்த நட்டியே வச்சிக்கிட்டாரா இல்லை கார் கடத்த சொன்னவர்கிட்ட குடுத்தாரா?

நட்ராஜ் கூட இருக்க பொண்ணு யாரு? நட்ராஜோட லவ்வரா இல்ல ஃப்ரண்டு மட்டுமா? வில்லன்னு ஒருத்தர்.. மதுரையிலயே பெரிய தாதா.. அவருக்கு காருன்னா ரொம்ப இஷ்டம். எந்தக் காரா இருந்தாலும் அத வாங்குறதுக்கு எங்க வேணாலும் போவாரு.. என்ன வேணாலும் செய்வாறுன்னு பில்ட் அப் பன்றாங்க. ஆனா அவருக்கு கார் புடிக்கும் அடுத்தவங்க சொல்லிக்கிட்டே இருக்காங்களே தவற, அவருக்கு கார் பிடிக்கும்னு காட்ட அவருக்கு எதாவது ஒரு சீன் இருக்கா? இல்லை ஏன் புடிக்கும்ங்குறதுக்கு காரணமாவது இருக்கா? அட்லீஸ்ட் ஒரு சீன்ல அவர் கார் ஓட்டுற மாதிரியாவது வைக்க வேண்டாமா? மதுரைல பெரிய ஆளுன்னு அவன நெருங்கவே முடியாதுன்னு சொல்றாங்க. ஆனா ஒரு வருஷம் முன்னாலதான் ஒரு மினிஸ்டருக்கு அள்ளக்கையா இருக்க மாதிரி காமிக்கிறாங்க.

இப்டி இன்னும் அடுக்கிட்டே போகலாம். பவர்ஃபுல்லான காட்சின்னு எதையுமே சொல்ல முடியல. இடைவேளைல என்ன நடக்கப்போகுதுன்னு நமக்கே தெரியிது. அதுவும் ஆங்கிலப் படங்கள்ல வர்ற மாதிரி ஒரு காருக்குள்ள ஒரு சிஸ்ட்த்த வச்சிக்கிட்டு, சிசிடிவி கேமராவயெல்லாம் ஹேக் பன்னி “ஆல் CCTV cameras under control” ன்னு சொல்றதெல்லாம் சிரிப்பு.

படத்துல சொல்லிக்கிற மாதிரி இருந்த ஒரே போர்ஷன் ஜாவா சுந்தரேசன் கார் திருடு போகாம பாத்துக்க வந்து செய்யிற சில அளப்பரைகள்தான். முனீஸ்காந்த்தப் பாக்க பாவமா இருக்கு.. நச நசன்னு பேசிக்கிட்டே இருக்காரு. ஆனா எதுக்குமே சிரிப்பு வரமாட்டுது. ஒரே ஒரு காட்சில வந்த மயில்சாமியும் ஏமாத்திட்டார். 

நட்ராஜ் டீம்ல கூடவே குண்டா ஒருத்தர் இருக்காரு. ஒண்ணு ரெண்டு காட்சிகள்னா ஓக்கே. ஒரு முழுப் படத்துக்கும் சப்போர்ட்டிங் ரோல் பன்ற அளவு அவருக்கு ஸ்க்ரீன் ப்ரசன்ஸ்லாம் இல்லை. டீம் செலெக்‌ஷன்லயும் கொஞ்சம் கோட்ட விட்டுருக்காங்க.

இதுல தவால் குல்கர்னி சுண்ணாம்பு சட்டித் தலையோட, போலீஸ் ஆஃபீசரா வந்து  தனியா ஒரு ரூட்டுல போயிட்டு இருக்காரு. “யாரு பெத்த புள்ளையோ தனியே இப்புடி சுத்திக்கிட்டு இருக்கே” ன்னு பாக்க நமக்கே பாவமா இருக்கு.

நட்டி நல்ல ஸ்க்ரீன் பிரசன்ஸ் உள்ள ஆளுதான். ஆனா கதை செலெக்‌ஷன்ல ரொம்ப கோட்ட விடுறாரு. டைட்டில்ல “ரேர் பீஸ் நட்டி”ன்னு போடுறாங்க. ஆனா அந்த ரேர் பீஸ வச்சி ரொம்ப ஆர்டினரியா படம் எடுத்துருக்காங்க.

இயக்குனர் தாஜ் மேக்கிங்குலயும் சரி, ஸ்க்ரிப்ட்டும் சரி இன்னும் நிறையா இம்ப்ரூவ் பன்னிக்கனும். ஒரு படத்துல காட்சிகள் நகர்றது முக்கியமில்லை. சுவாரஸ்யமா நகரனும் அதுதான் ரொம்ப முக்கியம். ”லோக்கல் நாயகன்” ஸ்ரீகாந்த் தேவாவோட இசை ஓக்கே. பாட்டுலாம் ரொம்ப சுமார் ரகம். BGM ல தனுஷ் நடிச்ச பொல்லாதவன் தீம் மியூசிக் ஓடிக்கிட்டு இருக்கு. கேமரா ஓக்கே.

மொத்தத்துல கதை, திரைக்கதை, பாத்திரப்படைப்பு, வசங்கள்னு அனைத்திலுமே சுமார் ரகம் தான் இந்த போங்கு.


LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...