இன்று ரஜினி மற்றும் கமல் இருவரும் அரசியல் வருகையை அறிவித்த பின்னர், ஊடகங்கள் அனைத்தும் ரஜினி மற்றும் கமலை சமதளத்தில் வைத்து பார்த்து வருகின்றனர். ரஜினி - கமல் அரசியல் மாற்றம் வருமா? ரஜினி - கமல் வருகை தமிழக அரசியலை புரட்டி போடுமா? என்று பல கேள்விகள் இன்று ஊடகங்கள் மக்கள் முன் வைக்கின்றன . ஆனால் அடிப்படையில் ரஜினி கமல் சமமான ஒப்பீடு தவறானது. அதற்கு அடிப்படையாகவே பல காரணங்கள் உள்ளன. என்னவென்று பார்க்கலாம்.
1.அடிப்படைக் கட்டமைப்பு:
ரஜினி கமல் இருவருக்கும் இருக்கும் முதல் சுற்று தொண்டர்கள் அவர்களின் திரை உலக ரசிகர்கள். இதில் இருந்து பார்த்தால் அமைப்பு ரீதியாக ரஜினி அவர்களுக்கு உலக அளவில் (ஆம், ஜப்பான், இலங்கை,மலேஷியா போன்ற நாடுகளில் கூட இவருக்கு மன்றங்கள் உள்ளன) சுமார் 50,000 மன்றங்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது. இதில் ரஜினி அவர்கள் நேரிடைய எந்த தொடர்பும் கிடையாது. இவைகளை நிர்வகிப்பது மட்டும் தான் சுதாகர் அவர்களுடைய வேலை. படங்கள் வெளியாகும் போதும், படம் சம்மந்தமாக எந்த அறிவிப்போ,ஆலோசனைகளோ இவர்களுக்கு பெரிய அளவில் இருக்காது. ஆயினும் இன்று அரசியலுக்கு வருகிறேன் என்று சொன்ன நொடி, இவர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து விட்டனர்.
இன்று தமிழ்நாட்டில் 234 தொகுதிகளில் சுமார் 55,000 வாக்கு சாவடிகள் உள்ளன. இவையனைத்திற்கும் தேர்தல் நேரத்தில், பூத் கமிட்டி என்று சொல்ல கூடியவர்கள் நியமிக்கவடுவார்கள். தமிழகம் முழுதுக்கும் பூத் கமிட்டி அமைக்கும் அளவுக்கு அமைப்பு ரீதியாக பலமாக உள்ள கட்சிகள் தி.மு.க மற்றும் அ.தி.மு.க மட்டுமே.இவை இரண்டையும் விட்டு சொல்லிக்கொள்ளும் படியாக மூன்றாவதாக தனி கட்சியாக இறங்கிய ஒரே கட்சி பா.மா.கா மட்டுமே.ஆனால் இவர்களுக்கு பூத் கமிட்டி விடுங்கள் வேட்பாளர் அறிவிப்பதே சிரமாக இருந்தது. நிலைமை இவ்வாறாக இருக்க எந்த வித அடிப்படை கட்டமைப்பு இல்லாமல் கட்சி அறிவித்த கமல், கட்சி அறிவித்த பின்னர் தொகுதி வாரியாக, அதாவது அவருக்கு திரை படங்கள் சரியாக போகாத B மற்றும் C சென்டர்களில் இன்று ஆட்களை தேடிக்கொண்டு இருக்கிறார். இந்த அமைப்பு தான் மிக மிக முக்கியம். நாளை தமிழ் நாட்டில் எந்த ஒரு மூலையில் பிரச்சனை என்றாலும் நமக்கு ஆட்கள் இருந்தால், தனிப்பட்ட முறையில் விசாரித்து தெளிவான முடிவு எடுக்க வசதியாக இருக்கும்.ஆனால் கமல் அவர்கள் ரஜினி போல் இதை முதலில் செய்யாமல் சற்று அவசரபட்டு கட்சி பெயர் மற்றும் மாவட்ட செயலாளர்கள் மட்டுமே அறிவித்து உள்ளார்.ஆனால் ரஜினி மக்கள் மன்றத்தில் இருந்து வரும் செய்தியில்,மாவட்ட செயலாளர் முட்டும் இல்லாமல், நகர,ஒன்றிய செயலாளர் வரைக்கும் அறிவிக்கப்படுகிறது. இது அடிப்படை முதல் வித்தியாசம்..
2.விரைவு vs அவசரம் :
எல்லா விசயத்திலும் கமல் அவர்கள் சற்று அவசர படுகிறார் என்றே தெரிகிறது. இலக்கை அடைய வேகம் மற்றும் விரைவுத்தன்மை வேண்டும் ஆனால் அவசரம் கூடாது.எளிமையாக சொல்ல வேண்டும் என்றால்
பதறிய காரியம் சிதறும். அவசரம் இல்லாமல் இருந்திருந்தால் அவர் கட்சியின் கொள்கை கூட அமைக்காமல் கட்சி பெயரை மட்டும் சொல்லுவேன், கொள்கைகளை 6 மாதத்திற்கு பிறகு சொல்லுவேன் என்று கூற வேண்டிய நிர்பந்தம் கமலுக்கு இருந்திருக்காது. இவ்வளவு அவசரமாக கட்சி பெயரை மட்டும் சொல்லிவிட்டு மீதியை பின்னால் சொல்லுவேன் என்பது கண்டிப்பாக விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. இந்த அவசரம் தான் கமலின் மகளிர் தின மாநாட்டில் வெளிப்பட்டது. அக்கட்சியின் மையப்புள்ளி கமல், ஆனால் அவர் பங்கேற்ற கூட்டத்திற்கு,5 இலக்கத்தில் கூட கூட்டம் வரவில்லை என்பது கண்கூடு. கூட்டம் சேர்த்தால் மட்டும் வெற்றி கிட்டுமா? கண்டிப்பாக இல்லை. வெற்றியும் வரலாம், தோல்வியும் வரலாம். ஆனால் கூட்டமே வரவில்லை என்றால் தோல்வி தான் வரும்.
மாறாக ரஜினி நிதானமாக, இருப்பினும் துரிதமாகவும் கட்சி வேலைகள் செய்து கொண்டு இருக்கிறார். கட்சி பெயர் மற்றும் சின்னம் அறிவிக்கும் பொது கட்சிக்கான அடிப்படை கட்டமைப்பு. கொள்கைகள், தொலைநோக்கு திட்டங்கள் போன்றவைகளும் அறிவிப்பார் என்று அறியப்படுகிறது. அதற்கு அவர் எடுத்துக்கொள்ளும் நேரம் ஏற்றுக்கொள்ளக்கூடியதே. இது ஏற்றுக்கொள்ளக்கூடிய இரண்டாவது வித்யாசம்.
3. உணர்ச்சிபூர்வமாக அனுகுதல்:
அரசியல் என்று வந்து விட்டால் நல்லது கெட்டது என அனைத்திற்கும் பதில் சொல்ல வேண்டி இருக்கும். ஆனால் அதை உணர்வு பூர்வமாக அணுகாமல் பிரச்னையின் சாராம்சம் தெரிந்து அனுகுதல் தான் தேர்ந்த அரசியல்வாதியின் பண்பு.ஒரு சிறு எடுத்துக்காட்டு : நமது சகோதரி காவலர் எட்டி உதைத்ததால் இரண்டு சக்கர வாகனத்தில் இருந்து விழுந்து அகால மரணம் அடைந்தார். மிக மிக துயரமான துக்கமான நிகழ்வு - மாற்று கருத்து இல்லை. கமல் அவர்கள் இதை பற்றி சொல்லும்பொது அனுதாபத்தை தெரிவித்ததோடு மட்டும் அல்லாமல் 10 லட்சம் ருபாய் நிவாரண நிதி அறிவித்தார். வரவேற்கத்தக்க ஒன்று. அப்படியே இரண்டு நாட்கள் கழித்து குரங்கனி காட்டுத்தீயில் சிக்கி 20 பேர் மரணம் அடைத்தார்கள். செய்தியாளர்கள் இப்பொழுது கேட்டது எவ்வளவு நிவாரணம் என்று ? கமல் கூறியது - எனக்கு அவ்வளவு வசதி இல்லை என்று. உண்மையில் இங்கு வசதியோ, மனமோ தவறு செய்யவில்லை மாறாக ஒரு நிகழ்வை உணர்வுபூர்வமாக மட்டும் அணுகும்போது ஏற்படும் தவறுகள் இவைகள். ரஜினி இதில் எந்த விஷயத்திலும் எப்பொழுதும் உணர்வு பூர்வமாக மட்டும் அணுகுவதில்லை.கடந்த கால நிகழ்வுகள் இதற்கு சாட்சி. இது உள்ளப்பூர்வமான மூன்றாவது வித்தியாசம்
4. வசீகர மேடை பேச்சு:
மேடை பேச்சு என்பது ஒரு கலை, ஓவியம்,நடனம் போன்றது. என்னதான் சிறப்பாக எழுதி வைத்து, எழுதிக்கொடுத்து பேசினாலும் சரியாக புரிதல் இல்லாமல் பேசினால் கேட்பவர்களுக்கும் நமக்கும் இடையே இடைவெளி இருக்கும். மறைத்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் பேச்சு இதற்கு ஒரு எடுத்துக்காட்டு. அவர் மேடையில் பேசியது என்றுமே பெரிய ஸ்வாரஸ்யமாகவோ மக்களை கவர்ந்து இழுபவையாகவோ இருந்தது இல்லை. ஸ்டாலின் அவர்கள் பேச்சும் இதே ராகம் தான். ஆனால் ரஜினி பிறப்பால் தமிழர் இல்லை என்றாலும் தமிழ் வார்த்தை ஜாலத்தில் வல்லவர்.
தோராயமாக ஒரு ஆண்டு ஆகப்போகிறது "போர் வரும் போது பாத்துக்கலாம்" என்று கூறி.இன்று வரை அந்த வார்த்தைகள் அனைவராலும் எளிதாக நினைவில் வைத்துக்கொள்ளும் வகையில் உள்ளது. இது தான் மேடைப் பேச்சு வசீகரம் என்பது. மேலும் "வரும் சட்டமன்ற தேர்தலில் நமது படையும் இருக்கும்" போன்ற பல உதாரணங்கள். MGR சிலை திறப்பு விழாவில் பேசிய காணொளி பதிவு 20 நாட்களில் 10 லட்சம் பார்வைகளை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது. இது போல் அவர் வரும் காலங்களில் பேசுவது மேலும் மேலும் மக்களிடத்தில் மிக அதிகமா சென்று சேரும். கமலுக்கு இருக்கும் மிகப்பெரிய குறை வசீகர மேடை பேச்சு இல்லாமை. அவர் செய்யுள் வடிவில் பேசுவதை நான் கூறவில்லை,உரைநடையில் பேசுவதே சென்றடைவதில்லை. கண்டிப்பாக வரும் காலங்களில் இது மாறும்\என்று நம்புவோம். இது முக்கியமான நான்காவது வித்தியாசம்
5.பெண்கள் செல்வாக்கு:
படங்களில் கமல் அவர்கள் எடுத்த அவதாரங்கள் அவரை எப்பொழுதும் பெண்களிடம் கொஞ்சம் தள்ளித்தான் வைத்தது. அவர் அதை பெருமையாக தான் சொல்லிவந்தார்.இப்பொழுது அரசியல் என்று வரும் பொழுது அந்த பெருமை அவருக்கு சிறுமையாக தான் உள்ளது. ஆனால் ரஜினி திரைப்படத்திற்கு எவ்வளவு பெண்கள் கூட்டம் கூடும் என்பது பொதுவாக சினிமா பார்க்கும் யாருக்குமே தெரியும்.இதுவும் ரஜினிக்கு இருக்கும் மிக பெரிய பலம். பெண்கள் வாக்குகள் தான் மறைந்த ஜெயலலிதா அவர்களுக்கு மிக பெரிய வாக்கு வாங்கிய இருந்தது என்பது உண்மை. இது ஓட்டிற்கான ஐந்தாவது வித்தியாசம்.
6.எதிப்பு தான் மூலதனம் :
இந்த வார்த்தையும் ரஜினி அவர்கள் மேடையில் பேசியதுதான். இது தான் இன்றைய மிகப்பெரிய எதார்த்தம். லெட்டர் பேட் கட்சிகள் முதல் உதயகுமார் மற்றும், வேல்முருகன் போன்ற சிறு குழுக்கள் வைத்து உள்ளவர்கள் வரை அனைவரின் தூக்கத்தையும் ரஜினி அவர்களின் அரசியல் வருகை கெடுத்து உள்ளது. கடந்த மே மாதம் முதல், இன்று வரை அவர் எத்தனை முறை பேசி உள்ளார் என்று எண்ணிவிடலாம். ஆனால் அவரை வைத்து பேசப்படுவது இன்று வரை தொடர்கிறது (ரஜினி பெயரை வைத்து தந்தி டிவி மக்கள் மன்றம் மட்டும் 4 முறை நடத்தி விட்டது). எதிர்ப்புகள் கொஞ்சம் என்றாலும் ஊடகங்களால் ஊதி பெரிதாக காண்பிக்கப்பட்டது. உங்கள் மேல் ஆயிரம் குற்றங்கள் இருக்கலாம் ஆனால் ரஜினியை எதிர்த்து பேசினால் ஊடகத்தின் நடுவீட்டில் உங்களுக்கு இடம் உண்டு.இது தான் இன்றைய நிலை.அவ்வாறு அவர்கள் பேசும்பொழுது எழும் எதிர்மறையான எண்ணங்கள் ரஜினிக்கு ஆதரவாக மாறுகிறது. மாய்ந்து மாய்ந்து அவர்கள் பேசுகிறார்கள் ரஜினி 30 நிமிட பேச்சில் அனைத்திற்கும் பதில் கூறிவிடுகிறார்.
இவர்கள் அனைவரும் அவரையே கேள்வி கேட்கின்றனரே? அவர் என்ன தவறு செய்தார்? என்று தான் பொது மக்கள் எண்ணுகின்றனர். ஆனால் கமலை யாரும் பெரிதாக எதிர்க்க வில்லை. இதுவே பின்னாளில் கமல் அவர்களுக்கு பாதகமாக முடியும். மேலும் கமல் அவர்களுக்கும் அவருடைய தவறை சுட்டிக்காட்ட யாரும் அதாவது எதிர்க்க யாரும் இல்லாததால் அவர் தவறுகளை திருத்த சந்தர்ப்பம் கொஞ்சம் குறைவு. இது எதார்த்தமான ஆறாவது வித்தியாசம்.
7.ரஜினி வெறியர்கள் Vs கமல் ஆதரவாளர்கள்:
ரஜினி ரசிகர்களை சந்திப்பது இல்லை, ரசிகர்களுடன் பிறந்தநாள் கொண்டாடுவது இல்லை. சுருக்கமாக சொன்னால் எந்த நேரடி தொடர்பும் வைத்து கொள்வது இல்லை.ஆனால் அவருக்கான ரசிகர் கூட்டம் என்பது ஐம்பதுகளை தாண்டி, முப்பத்தி ஜந்துக்களை தொட்டு, இருபதுகளை நெருங்கி உள்ளது. மேலும் அவரது மன்ற நிர்வாகிகள் பெயர் அறிவிக்கும் பொழுது பார்த்தால், மிக குறைவாக 2 பேராவது ''ரஜினி'' என்ற பெயரை தங்களது பெயரிற்கு முன்பாகவோ அல்லது பின்பாகவோ வைத்து உள்ளது தெரியும். அந்த அளவிற்கு தீவிர ரசிகர்கள் ரஜினியின் மிகப்பெரிய பலம். கமல் அவர்களுக்கு மன்றங்கள் உள்ளது,ரசிகர்கள் உள்ளார்கள்,ஆனால் ரஜினி போன்ற தீவிர ரசிகர்கள் உள்ளார்களா என்றால் கொஞ்சம் கம்மி தான். இது வெறித்தனமான ஏழாவது வித்தியாசம்.
8.வெகுஜன மக்கள் அங்கீகாரம்:
ரஜினிக்கும் கமலுக்கும் இருக்கும் மிகப்பெரிய வித்தியாசமாக இதை பார்க்கலாம். மேற்கூறிய அனைத்தும் சேர்ந்து ரஜினியை மக்களிடத்தில் மிக அருகில் கொண்டு போய் வைத்துஉள்ளது. அதற்கு அவருடைய கடந்த கால எளிமை முதல் காரணம். அதற்கு அடுத்த படியாக ரஜினியின் திரை உலக கடந்தகால மற்றும் தற்காலிக வெற்றிகள் இரண்டாவது காரணம். 25 ஆண்டுகளுக்கு முன்னரே ரஜினி - கமல் என்ற நேரடி போட்டி என்பது திரையுலகில் இருந்து மறைந்து விட்டது. கமல் படங்கள் இன்று விஜய்-அஜித் தாண்டி, தனுஷ் - சூர்யா கீழாக, சிவகார்த்திகேயன் அடைந்த வெற்றிகள் கூட பெறுவது கிடையாது (மிக சில படங்கள் தவிர).
ஆனால் ரஜினியின் படங்கள் இன்றும் பட்டி தொட்டிகளில் வெற்றி கொடி கட்டி வருவது கண்கூடு. சினிமா மட்டும் இன்றி பல காரணங்களால் கமல் இன்னமும் வெகு ஜன மக்கள், அதாவது கடைநிலை மக்களிடத்தில் இருந்து இன்னமும் தொலைவில் தான் உள்ளார். இது அவருக்கு தேர்தல் நேரத்தில் சில தொகுதிகளில் அதாவது கடலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், கிருஷ்ணகிரி, தருமபுரி போன்ற பின்தங்கிய மற்றும் இரண்டாம் நிலை மாவட்டங்களில் குறைவான வாக்குகள் பெறவோ, இல்லை ஆதரவு இல்லாமல் போவதற்கோ காரணமாக அமையலாம். மேலும் ரஜினி தீவிர சுற்றுப்பயணம் செய்து தமிழகம் முழுக்க வலம் வரும்பொழுது இந்த தூரம் இன்னமும் அதிகம் ஆகலாம். இதனால் கமல் அவர்கள் ஒட்டுமொத்த தமிழ்நாட்டிற்கான முகமாக இல்லாமல் ஒரு சாரர்களுக்கான முகமாக மாறலாம். இது நிதர்சனமான எட்டாவது வித்தியாசம்.
எப்படி வித்தியாசங்கள் இருக்க, எப்படியும் கமலால் எடுத்த உடன் மாபெரும் வெற்றியை பெறமுடியாது என தெரிந்தும் ஏன் ரஜினியை கமலோடு ஒப்பீடு செய்யப்படுகிறது என்றால், ரஜினியின் ஓட்டுவங்கியை குறைக்க அல்லது வெற்றியை தள்ளிப்போட செய்யும் ஒரு வேலையாக இருக்கலாம். ஆயினும் பொறுத்திருந்து பார்க்கலாம்.
- ப்ரீத்தம் ஸ்ரீ கிருஷ்ண விக்னேஷ்