Saturday, November 20, 2021

பொன் மாணிக்கவேல்!!


Share/Bookmark

 


Caution : மொரட்டு ஸ்பாய்லர்ஸ் ahead!!


வின்னர் திரைப்படத்தில் கிரண் வீட்டிற்குள் ஏறிக் குதிக்கும்போது வடிவேலு கயிற்றை வைத்துக்கொண்டு எம்பி எம்பிக் குதித்துக் கொண்டிருப்பார். என்னடா செய்ற என்பதற்கு “நா என்னமோ பன்றேன் போடா” என்பார். கிட்டத்தட்ட பொன்மாணிக்கவேல் படத்து இயக்குனரும் இந்த வடிவேலுவின் மனநிலையில் தான் இருந்திருப்பார் போல. என்ன செய்கிறார் படம் எங்கே செல்கிறது என்பது கடைசி வரைக்குமே அவருக்கே வெளிச்சம்.


ஆரம்பக் காட்சியில் நீதிபதி ஒருவர் இரண்டு வெவ்வேறு துப்பாக்கியால் சுடப்பட்டு, தலை தனியாக வெட்டபட்டு இறந்துகிடக்கிறார். விவேக் சொல்லும் கொன்னு, கொலைபண்ணி, மர்டர் பன்னிருவேண்டா டோங்க்ரே என்பது இதுதான் போல. 


யார் கொலையாளி என்பதைக் கண்டறிய போலீஸ் திணற, துப்பாக்கி ஸ்பெசலிஸ்ட் பொன் மாணிக்கவேல் வரவழைக்கப்படுகிறார். அவர் எதையுமே வித்யாசமாகச் செய்பவர். அதாவது சீரியாக இன்வெஸ்டிகேஷன் செய்வதற்காக செல்லும் இடங்களில் கேஸைப் பற்றிப் பேசாமல் “டீ சாப்டுவோமா” வடை சாப்டுவோமா” என சம்மந்தம் இல்லாமல் பேசி தான் கேஷூவலாக இருப்பதை மற்றவர்களுக்கு காட்டுபவர். ஆரம்பக் காட்சிகளில் பொன்மாணிக்கவேலின் அதிகப் பிரசங்கித் தனம்  தாங்காமல் நமக்கே அவர் பொடனியில் பொளேர் என்று ஒன்று வைக்கவேண்டும் என்று தோன்றும் அளவுக்கு இருக்கிறது. 


நீதிபதி சுடப்பட்ட இடத்தில் புல்லட்டே கிடைக்கவில்லை என்கிறார்கள். ஆனால் ஃபோரன்ஸிக் ரிப்போர்ட்டில் சுடப்பட்டது என்ன துப்பாக்கி, எப்போது வாங்கிய துப்பாக்கி, யார் யாரிடம் அது இருக்கின்றது என்பது வரை டீட்டெய்ல் கொடுக்கிறார்கள். எப்படி என்றே தெரியவில்லை. 


இது ஒரு முறையான மர்டர் இன்வெஸ்டிகேஷன் கதையாகவும் செல்லவில்லை. ஒரு கமர்ஷியல் போலீஸ் கதையாகவும் செல்லவில்லை. ஒரு மாதிரியாகச் செல்கிறது.


பல இன்வெஸ்டிகேஷன்களுக்குப் பிறகு கொலையாளி முள்ளும் மலரும் மகேந்திரன் எனக் கண்டறிகிறார்கள். வயது முதிர்ந்த மகேந்திரனின் உடல்நிலையைப் பார்த்து நமக்கே பரிதாபமாக இருக்கிறது. ஆனால் போலீஸில் கமிஷ்னர் முதல் ஐஜி வரை அவர்தான் அந்த மூன்று கொலைகளை செய்தார் என்று நம்புக்கிறார்கள். ஹியூமன்ஸாடா நீங்கல்லாம்?


ஒரு தொழிலதிபரை இன்னும் சில மணி நேரத்தில் கொலை செய்து விடுவதாக கொலைகாரன் மிரட்டுகிறான். அந்த தொழிலதிபரின் வீட்டைச் சுற்றி நூற்றுக்கணக்கில் போலீஸ் குவிக்கப்பட,பொன் மாணிக்கவேலும் அதில் இருக்கிறார். 


ஆனால் கொலைகாரன் இவற்றையெல்லாம் தாண்டி தொழிலதிபரை கொன்றுவிட, போலீஸ் மொத்தப்படையும் அந்த இடத்திற்கு விரைகிறது. பொன்மாணிக்கவேல் துப்பாக்கியும் கையுமாக “சார் கொலைகாரன் தொழிலதிபரை சுட்டுட்டான். நான் அவனை சுட்டுட்டேன்” என்கிறார். உடனே அனைவரும் “வெல்டன் பொன்மாணிக்கவேல்” “வெல்டன் பொன்மாணிக்கவேல்”  என்கிறார்கள். ஏண்டா நீங்க யாரக் காப்பாத்தனும்னு வந்தீங்களோ அவன் பொனாமா கெடக்கான். இதுல என்ன வெல்டன்? எதுக்கு வந்தோம்னே தெரியாம சமயக்காரனாவே மாறிட்டீங்களேடா?


அதயெல்லாம் விட உச்சகட்ட காமெடி ஒன்று இருக்கிறது. மகேந்திரனை பொன்மாணிக்கவேல் ஒரு மார்ச்சுவரிக்கு அழைத்துச் சென்று, அங்கிருப்பவரிடம் மகேந்திரனைக் காட்டி “அண்ணே ‘ஓ’ பாசிடிவ் ப்ளட் குரூப்புல ஐயா மாதிரியே ஒரு பாடி வேணும்” என்று கேட்கிறார். 


டேய்… என்னடா துணிக்கடையில போய் ”அண்ணே 34 சைசுல ரெண்டு பேண்ட் குடுங்கண்ணேன்னு கேக்குற மாதிரி கேக்குறீங்க? பொணம்டா

இப்படி எக்கச்சக்கமாகப் போகும் படத்தின் படத்தின் ஒரே ஆறுதல் நிவேதா “பெத்த”ராஜ்  மட்டும்தான். இமானின் பின்னணி இசை ஓகே.  


மொத்தத்தில் பொன் மாணிக்கவேலின் முதல் அரைமணிநேரம் நம்மை பயங்கரமாக சோதிக்கும். அப்புறம் அதுவே பழகிரும். 

Saturday, November 6, 2021

"அண்ணாத்த" ரஜினியின் பாத்திரப் படைப்பு!!


Share/Bookmark


அண்ணாத்தயில் மிக அபத்தமாக நான் உணர்ந்தது தலைவரின் கதாப்பாத்திரம். ஆட்டோக்காரனாக, டாக்ஸி ட்ரைவராக, மூட்டை தூக்குபவராக, திருடனாக, ரவுடியாக அனைத்து வித அடித்தட்டுக் கதாப்பாத்திரங்களிலும் நடித்து நடித்து மக்களுடன் நெருக்கமானவர்.


ஆனால் இன்றைய சூழலுக்கு அவர் அப்படிப்பட்ட கதாப்பாத்திரங்களில் நடிக்கக் கூடாது. நடிக்கவும் முடியாது. அந்தக் காலகட்டத்தை அவர் எப்போதோ கடந்துவிட்டார்.


இன்றைய சூழலில் மக்களை வழிநடத்தும் ஒரு தலைவன்  அல்லது அதற்கு இணையான ஒரு கதாப்பாத்திரத்தில் மட்டுமே நடிக்கவேண்டும். அப்படிப்பட்ட கதாப்பாத்திரங்கள் மட்டுமே அவருடைய இமேஜூக்கு சரியாக இருக்கும். சொல்லப்போனால் விஜய், அஜித் கூட இனிமேல் அப்படிப்பட்ட கதாப்பாதிரங்களில் நடிக்க மாட்டார்கள்.


தலைவர் அந்த ஊரில் பிரெசிடெண்ட் என்று கூறுகிறார்கள். ஆனால் அவர் செய்துகொண்டிருப்பது தேவையற்ற வம்புகளை வளர்த்து கேஸ் வாங்கிக்கொண்டு காவல் நிலையத்தில் கையெழுத்து போட்டுக்கொண்டிருக்கிறார்.


அவர் எதற்காக அடித்தார் அல்லது எதற்காக அடிப்பார், அவர் போட்ட சண்டைகள் மக்கள் நலனுக்கான சண்டைகளா என்பது கூட விளக்கப்படவில்லை. மாறாக  வெங்காயம் வெட்டச் சொல்லும்,  ஓடிப்பிடித்து விளையாடும் அப்பாவி மாப்பிள்ளைகளை தூக்கிப் போட்டு பந்தாடுவதாக காண்பிக்கிறார்கள். 


அதுமட்டுமல்லாமல் தங்கைக்கு வெளியூர், வெளிநாட்டு மாப்பிள்ளைகளை பார்க்கச் சொல்லும் தன்னைவிட வயதான உறவினர்களின் கன்னங்களை பழுக்க வைக்கிறார். இவையெல்லாம் அந்தக் கதாப்பாத்திரத்தின் மதிப்பை வெகுவாகக் குறைக்கிறது.


அடுத்து பிரகாஷ்ராஜின்  கெட்டப் பார்ப்பதற்கு ஒரு வயதான, மதிப்பான ஒரு பெரியவராகக் காண்பிக்கிறார்கள். அவர் செய்யும் வில்லத்தனம் கூட ரொம்பப் பெரிய அளவில் இல்லை. சட்டப்படி பிரகாஷ்ராஜ் பக்கமே நியாயம் இருக்கிறது எனும்போது பார்க்கும் நமக்கு அவர் மீது எந்த வெறுப்பும் வரவில்லை.


ஆனால் அவரை ஊர்த்திருவிழாவில் காளையன் அனைவருக்கும் முன்னர் போட்டு அடிக்கிறார். அந்தக் காட்சியில் "நீதான் உங்க குடும்பத்துக்கு ஹீரோ" என்று வசனம் பேசி சமாளித்தாலும் பிரகாஷ் ராஜ் கதாப்பாத்திரத்துன் மீது பரிதாபமும் காளையன் கதாப்பாத்திரத்தின் மீது வெறுப்புமே எஞ்சுகிறது. 


அடுத்து குஷ்பூ, மீனா சம்பந்தப்பட்ட காட்சிகள். "எங்கக்காவ நீ கரும்புக் காட்டுக்குள்ள கூட்டிட்டு போனல்ல, எங்கக்காவ நீ சினிமாவுக்கு கூட்டிட்டு போனல்ல" என்பன போன்ற வசனங்களும் அதற்கு காளையன் வெட்கப்பட்டு எதோ சொல்லி சமாளிப்பதும் காளையன் கதாப்பாத்திரத்தை அதள பாதாளத்தில் தள்ளுகிறது. 


இரண்டாம் பாதியில் வில்லனைப் பழிவாங்கப் புறப்படுகிறார். கல்கத்தாவுக்கே செல்லாத ஒருவர் கல்கத்தாவில் காலூன்றியிருக்கும் ஒரு மிகப்பெரிய வில்லனை அழிக்கவேண்டும் எனும்போது அதற்கு திரைக்கதையில் படிப்படியான முன்னேற்றம் இருந்திருக்கவேண்டும்.


ஆனால் காளையன் செய்வதோ நேராக வில்லன் அலுவலகத்திற்குச் சென்று, சூரி, ஜார்ஜ் மரியான் போன்றவர்களின் உதவியோடு லாரிகளை பாம் வைத்து வெடிக்கிறார். அடுத்து வில்லனின் காரில் பெட்ரோல் ஊத்திக் கொளுத்துகிறார். வில்லனின் ஆட்களையே மிரட்டி வில்லனைக் கொல்லச்சொல்லி பயமுறுத்துகிறார். இதற்கு முதல்காட்சியிலேயே லாரியில் போட்ட பாமை அந்த பில்டிங்கின் பேஸ்மெண்டில் போட்டு விட்டிருந்தால் வில்லனின் சோலி அப்போதே முடிந்திருக்குமே. 


தங்கை மீது பாசம் கொண்டவர் என்கிற ஒரு விஷயத்தை பெரிதுபடுத்த காளையனை எக்கச்சக்கமாக சேதப் படுத்தியிருக்கிறார்கள். அதுவும் போகிற வருகிறவர்களை அடித்து அளப்பறை செய்கிறாரே தவிற அண்ணன் தங்கை பாசத்தை விளக்கும் உணர்ச்சிகரமான ஒரு காட்சி கூட இல்லை. 


எழுபது வயதில் ஒருவர் இதை செய்வதே பெரிது என்கிற வரிகளை நிறைய இடங்களில் பார்க்கமுடிகிறது. எழுபது வயதுக்காரர் ஒழுங்காக நடிக்கவில்லை, ஆட முடியவில்லை, ஓடமுயவில்லை அதனால் படம் சரியில்லை என்கிற பொழுது அந்த வாதம் சரியானது.


ஆனால் எழுபது வயதில் அவரால் மூன்று பாடல்களுக்கு நடனம் ஆட முடிகிறது. ஐந்து ஆறு சண்டைக் காட்சிகளை செய்ய முடிகிறது. முன்பு இருந்த படங்கள் அனைத்தையும் விட சுறுசுறுப்பாக இந்தத் திரைப்படத்தில் இருக்கமுடிகிறது எனும்போது அது ஏன் சரியாகப் பயன்படுத்தப்படவில்லை என்பதே கேள்வி.


மோகன்லாலின் லூசிஃபர் திரைப்படத்தைப் பார்க்கும்போது பொறாமையாக இருந்தது. மோகன்லால் பாடல்களுக்கு ஆடிக் கஷ்டப்படவில்லை. சண்டைக் காட்சிகளுக்கு மெனக்கெடவில்லை. ஆனால் அந்தக் கதாப்பாத்திரம் காண்பிக்கப்பட்ட விதம், அந்தக் கதாப்பாதிரத்தின் மதிப்பை எங்கோ கொண்டு சென்றது.


நடிகர் மகேஷ்பாபு கடந்த சில படங்களில் நடித்த கதாப்பாத்திரங்கள் ஒரு ஊரைத் தத்தெடுத்து முன்னேற்றும் செல்வந்தனின் மகன், நாட்டைத் திருத்தும் முதலமைச்சர், மக்களுக்காகப் போராடும் ஒரு மிகப்பெரிய கம்பெனியின் CEO, சக வீரனின் குடும்பத்துக்காகப் போராடும் ஒரு ஆர்மி ஆஃபீசர்.  


நாற்பதுகளில் இருக்கும் ஒரு நபரே இப்படிப்பட்ட கதாப்பாத்திரங்களைத் தெரிவு செய்யும்போது எழுபதுகளில் இருக்கும் நம்முடைய கதாப்பாத்திரங்கள் எப்படி இருக்க வேண்டும்?


அண்ணாத்தயின் காளையன் கதாப்பாத்திரம் ரஜினியின் இமேஜிற்கு இம்மியளவாவது உதவுகிறதா என்பதை உங்கள் யூகத்திற்கே விடுகிறேன்.


இதில் சோகம் என்னவென்றால், இந்தத் திரைப்படத்திற்குப் பிறகுதான் ரஜினி அரசியல் பிரவேசம் செய்யவிருந்தார். 

Wednesday, November 3, 2021

ஒரு இனிய தீபாவளிப் பயணம்!!


Share/Bookmark





வழக்கமாக தீபாவளி பொங்கலுக்கு பேருந்தில் தான் ஊருக்குச் செல்வது வழக்கம். என்னுடைய ஆஸ்தான ராஹத் ட்ராவல்ஸ் சென்ற மாதம் எதோ சிக்கலில் சிக்கியதால் மொத்த பேருந்து சேவையும் முடங்கியிருக்கிறது. இந்த முறை வித்யாசமாக இருக்கட்டுமே என்று இரண்டு வாரம் முன்பு ரயிலில் முன்பதிவு செய்து வைத்திருந்தேன்.வேறு பேருந்துகளில் முன்பதிவு செய்யவில்லை.

வெய்டிங் லிஸ்ட் 50 க்கு மேல் இருந்தது. சரி எதற்கும் நம்முடைய அதிர்ஷ்டம் எப்படி இருக்கிறது எனப் பார்க்கலாம் என்று காத்திருந்தேன். 


நமக்குத்தான் அதிர்ஷ்டம் கிளு கிளுன்னு இருக்குமே. சார்ட் வந்த பிறகு வெய்ட்டிங் லிஸ்ட் 33 இல் வந்து நின்று "வெளியே போங்கடா அயோக்ய ராஸ்கல்களா" என்றது IRCTC.


சரி ரெட் பஸ்ஸில் பேருந்துகளை தேடினேன். வழக்கமாக 500 ரூபாய் டிக்கெட் 1300, 1600, 1900 என ஒவ்வொரு ட்ராவல்ஸூம் அவரவர்களுக்கு ராசியான எண்களை டிக்கெட் தொகையாக நிர்ணயித்திருந்தனர். அதுவும் அனைத்து பேருந்துகளிலும் மீதமிருந்தது கடைசி வரிசையில் நடுவில் இருந்த சீட் மட்டுமே.


அந்த சீட்டில் பிரச்சனை என்னவென்றால் சாயவும் முடியாது முன்னால் கால் வைக்கவும் முடியாது. அசந்து தூங்கிக் கொண்டிருக்கும் போது ஓட்டுனர் கொஞ்சம் அழுத்தி பிரேக்கை மிதித்தால் மாயி வடிவேலுவைப் போல் முன்னால் போய் விழுந்து மூக்கட்டை பெயர்வதற்கான வாய்ப்புகள் மிக அதிகம். அதனாலேயே அந்த சீட்டை பெரும்பாலும் தெரிவு செய்வதில்லை.


ஒரு சில SETC சிறப்புப் பேருந்துகளும் ரெட் பஸ்ஸில் காண்பித்தது. ஆனால் அத்தனையும் ஊர்ப்பக்கம் ஓடும் (3+2) சீட்டர்கள். அதில் செல்லலாம். ஆனால் பத்து மணி நேரம் பயணித்து சென்றால் மறுநால் முதுகை கம்பி கட்டித்தான் நிமிர்த்த வேண்டியிருக்கும் என்பதால் அவற்றைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.


மேலும் தேடியபோது கண்ணில் பட்டது "ஜோதி லட்சுமி ட்ராவல்ஸ்"


"எலே.. என்னது ஜோதி லச்சுமியா... யாரு இவா.. இப்டி ஒரு பஸ்ஸ நாம பாத்ததே இல்லையே" என எனக்குள் இருந்த GP முத்து ஒரு நிமிடம் வெளிப்பட்டார்.


டிக்கெட் விலை 900 ரூபாய். நடுவில் கூட காலி சீட்டுகள் இருந்தது. அதைவிட முக்கியமாக இந்தப் பேருந்தில் சென்றால் வேறு பேருந்திற்கு மாறாமல் வீட்டிற்கு அருகிலேயே இறங்கிக்கொள்ளலாம். ஆனால் 10:15 க்குத்தான் கோயம்பேடில் பேருந்து கிளம்புகிறது.


10:15 க்கு கிளம்பி எப்போ வீட்டுக்குப் போறது. சரி இந்த மழையில் வேறு ஆப்ஷன் இல்லை. ஒரு மணி நேரம் முன் பின் இருந்தாலும் தொல்லையில்லாமல் வீடு போய்ச் சேரலாம் என்று டிக்கெட்டை புக் செய்தேன். போர்டிங் பாய்ண்டாக ஆலந்தூர் மெட்ரோ ஸ்டேஷனை தெரிவு செய்திருந்தேன். 10.40 க்கு ஆல்ந்தூரில் பேருந்து.


இன்னும் மூன்று மணி நேரத்திற்கு மேல் இருந்தது. ஆசுவாசமாகக் ஒன்பது மணிக்கு மேல் கிளம்பி, இரவு உணவை முடித்துவிட்டு மெட்ரோவில் ஏறினேன். சுமார் 50 நிமிடப் பயணத்தில் ஆலந்தூர் வந்தடைந்தேன்.


ஸ்டேஷனுக்கு வெளியில் வந்து மெயின் ரோட்டில் பேருந்துக்காகக் காத்திருந்தேன். "ஈஸ் திஸ் சென்னை? தீபாவளியும் அதுவுமா ரோடு கொஞ்சம் கூட கூட்டமே இல்லாம இவ்வளவு ஃப்ரீயா இருக்கு.. ரிமார்க்கபிள் சேஞ்ச்" என சிவாஜி வசனத்தை நினைத்துக் கொண்டு நின்றிருந்தேன்.


பத்து நிமிடத்திற்கு மேல் ஆனது. எதோ பிசிறு தட்டியது. எனக்கு அருகில் முதுகில் ஆமை ஓடு போல் பையை மாட்டிக்கொண்டு சிலர் நின்றிருந்தாலும் அந்த பத்து நிமிடத்தில் வெளியூர் செல்லும் ஒரு பேருந்து கூட அந்த வழியாக வரவில்லை. 


"ரைட்டு.. இன்னிக்கு நம்மை அலைக்கழிக்கப் போகிறார்கள் " என்பதை போதி தர்மன் உணர்கிறார்.


அந்த ட்ராவல்ஸை தொடர்பு கொள்ளவும் ஓட்டுனர் நம்பர் எதுவும் SMS வரவில்லை. அடுத்த 5 நிமிடத்தில் ஒரு எண்ணிலிருந்து அழைப்பு வந்தது. 


"அண்ணே எங்கியன்ணே இருக்கிய?"


"ஆலந்தூர் மெட்ரோவுக்கு வெளில நம்ம பஸ்ஸூக்காகத்தான் காத்துட்டு இருக்கேன்ணே" என்றேன்.


"அண்ணே ஒரு பிரச்சனை ஆயிப்போச்சு.. பஸ்ஸ மடக்கிட்டாங்க. சிட்டிக்குள்ள போகக்கூடாதம். கோச்சிக்கிடாம கொஞ்சம் கோயம்பேடுக்கு வந்தர்ரியலா?" என்றார்.


"கோயம்பேடா.. என்னண்ணே?!! இப்பதான் இங்க வந்தேன்..."


"அப்ப இன்னொன்னு பன்னுங்க.. வண்டலூருக்கு அடுத்து உள்ள ஊரப்பாக்கத்துக்கு வந்துருங்க"


"டேய் ஊரப்பாக்கத்துக்கு அங்குட்டு பத்து நிமிஷம் நடந்தா எங்க ஊரே வந்துரும்டா.." என நினைத்துக்கொண்டு பரவால்லண்ணே நா கோயம்பேடுகே வந்துடுறேன். விட்டுட்டு மட்டும் போயிடாதீங்க என்றேன்.


"நீங்க வந்தா தாண்ணே பஸ்ஸ எடுப்போம். மெதுவா வாங்க" என்றார்.


"எது மெதுவா வாங்கவா? இன்னிக்கு பஸ் எடுக்கிற ஐடியா இருக்கா இல்லையா இவனுங்களுக்கு" என நினைத்துக் கொண்டே மறுபடி மெட்ரோ ஸ்டேஷனுக்குள்ளே சென்றேன்.


"இறங்குன ட்ரெயின்லயே மறுக்கா எத்தி விடுறீங்களேடா" என் மறுபடி கோயம்பேடை நோக்கி புறப்பட்டு 10:50 க்கு அங்கு சென்று சேர்ந்தேன். 


மெட்ரோ ஸ்டேஷனுக்கு வெளியே ஜோதி லட்சுமி ரெடியாக நின்றது. அங்கு வரவேண்டிய கடைசி ஆள் நானும் வந்துவிட்டதால் உடனே ஜோதி லட்சுமின்புறப்பட்டது.


சரியாக 11:40 க்கெல்லாம் வண்டலூரை அடுத்த ஊரப்பாக்கம் சிறப்பு பேருந்து நிலையத்தை அடைந்தது. தீபாவளி நேரத்தில் பன்னிரெண்டு மணிக்குள் சிட்டியைத் தாண்டுவது என்பதே நல்ல அச்சீவ்மெண்ட் தான். மோசமில்லை. எப்படியும் காலை எழு மணிக்குள் வீட்டில் இருக்கலாம் என்கிற நினைபுடன் மொபைலை பாக்கெட்டில் வைத்துவிட்டு, கர்ச்சீப்பை எடுத்து கண்ணில் கட்டிக்கொண்டு நித்திரையில் ஆழ்ந்தேன்.


பஸ் தாறுமாறாக ஓடிக்கொண்டிருந்தது அரை தூக்கத்தில் தெரிந்தது. எங்கும் சூசூ போவதற்கு நிறுத்தினார்களா என்று தெரியவில்லை. நான் தூக்கத்திலேயே இருந்தேன். வழக்கமாக காலை ஆறுமணிக்கு அடிக்கும் அலாரம் வைப்ரேனுடன் அலற ஆரம்பித்தது.


கன்ணில் கட்டியிருக்கும் கர்ச்சீப்பை அவிழ்க்காமலேயே கையால் ஃபோனை அழுத்தி விட்டுவிட்டு, "மணி ஆறாகிவிட்டது.. எப்படியும் வண்டி கும்பகோணத்தைத் தாண்டி மன்னார்குடியை நெருங்கியிருக்க வேண்டும்" நினைத்துக்கொண்டேன்


எனக்கு பின் சீட்டில் இருந்தவதுக்கு ஃபோன் வந்தது. 


"ஆமா வந்துட்டுருக்கேன்.. இப்பதான் விருத்தாச்சலம் வரப்போகுது என்றார்"


 "எதேய்ய்ய்ய்? விருத்தாச்சலமே இப்பதான் வரப்போகுதா?"


அரைகுறைத் தூக்கம் முழுவதும் கலைந்தது. இருந்தாலும் மனதைத் தேற்றிக்கொண்டு, கண் மூடியபடியே இருந்தேன்.


அடுத்த அரைமணி நிமிடத்தில் பஸ்ஸின் டயர்களில் எதோ கட முட சத்தம். பஸ் இஞ்சின் நிறுத்தப்பட்டது. அப்போதுதான் பலரும் கண்ணை லேசக விழித்துப் பார்க்க ஆரம்பித்திருந்தனர். விடிந்தும் விடியாத மசண்டை இருட்டு. மழை கொட்டிக்கொண்டிருக்கிறது.


இரண்டு மூன்று நிமிடம் ஏன் பேருந்து நின்றத்உ யாருக்கும் எதுவும் தெரியவில்லை. சரி ட்ரைவரிடம் சென்று கேட்கலாம் என முன்னிருந்த ஒருவர் எழுந்து செல்ல, ட்ரைவர் இருக்கையில் ஆள் இல்லை.


மாறாக ட்ரைவரும், அட்டெண்டரும் பஸ்ஸை அம்போவென விட்டுவிட்டு வேறு திசையில் ஓடிக்கொண்டு இருந்தனர்.


ஆம். சைக்கிளில் வந்த் முதியவர் ஒருவர் ஜோதி லட்சுமியில் அடிபட்டு தூக்கியெறியப்பட்டிருக்கிறார் என்பது அப்போதுதான் அனைவருக்கும் புரிந்தது.


சாலையில் மறுபுறம் கொட்டும் மழையில் புற்களுக்கு நடுவே அந்தப் பெரியவர் அசைவுகளின்றிக் கிடந்தார். சம்பவத்தைப் பார்த்த இரண்டு பேர் பெரியவர் அருகே சென்றனர்.  அவரைத் தொடவில்லை. 


அடுத்த மூண்று நிமிடத்தில் ஒரு பெண் ஓடிவந்து வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டு "அப்பா.. அப்பா.."என அழ ஆரம்பித்தார். அவர்களுக்கு இன்றைய பொழுது இப்படி விடிந்திருக்கக் கூடாது.


இருபது முப்பது பேர் கொண்ட கூட்டம் கூடியது. ஆம்புலன்ஸிற்கு அழைக்க வேண்டும் என பேசிக்கொண்டிருந்தார்கள். 


பேருந்திலிருந்த அனைவரும் பைகளை

எடுத்துக்கொண்டு கீழே இறங்கினோம்.


அதுவரையும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த ஒருவர் "ஏங்க பஸ்ஸ எடுக்கமாட்டாங்களா இப்ப?" எனப் பரிதாபமாக் கேட்டுக்கொண்டிருந்தார்.


"ஜாக்கிங் போன ட்ரைவர் வந்தோன எடுத்துருவாங்க" 


சாலையில் பெரியவரைச் சுற்றி நின்ற கூட்டத்துற்கு கொஞ்சம் தள்ளி கொட்டும் மழையில் நின்றுகொண்டிருந்தோம்.


இது எந்த ஊர் என்று தெரியவில்லை. எதாவது பேருந்து வருகிறதா எனப் பார்த்தபடி நின்றிருந்தோம். நின்ற பொழுது ஒருசிலர் அவரவர்களுக்குள் அறிமுகம் செய்துகொண்டிருந்தனர். 


" நீங்க எங்க போறீங்க?"


"பட்டுக்கோட்டை"


"அய்யோ நானும் பட்டுக்கோட்டைதாங்க போறேன்"


ஆமா.. ஜெர்மெனி ஏர்போர்ட்ல ஊர்காரங்க ரெண்டு பேரு தற்செயலா மீட் பன்னதுல எக்ஸைட் ஆயிட்டாங்க. ஏண்டா பட்டுக்கோட்டை போற பஸ்ல பட்டுக்கோட்டைகாரனுக தானடா போவானுக.. உசுற வாங்காம நில்லுங்கடா   எனத் தோன்றியது.


அடுத்த சில நிமிடங்களில் கும்பகோணம் செல்லும் தனியார் பேருந்து ஒன்று வரவும் அனைவரும் ஏறிப் புறப்பட்டோம்


பஸ்ஸில் ஏறிய பின்னர் அடிபட்ட பெரியவரை தான் பார்த்ததாகவும், லேசாக அசைவு இருந்ததாகவும் ஒருவர் கூறினார். கொஞ்சம் ஆறுதலாக இருந்தது.


நடத்துனர் வந்தார்.


"அண்ணே கும்பகோணம் இங்கருந்து எவ்வளவு தூரம்ணே..?"


"எப்புடியும் 45 கிலோமீட்டருக்கு மேல வரும்"


வெளங்கும்... எட்டு பதினைந்துக்கு கும்பகோணம். அங்கிருந்து மறுபடி மன்னார்குடி ஒரு மணி நேரம். அங்கிருந்து மறுபடி பட்டுக்கோட்டை ஒன்னே கால் மணி நேரம். 


இன்னும் பஸ்ஸில் சென்றுகொண்டு தான் இருக்கிறேன். மதிய சாப்பாட்டிற்குள் வீட்டிற்குச் சென்றுவிடுவேன் என்று நினைக்கிறேன்.


வாழ்த்துங்க ஃப்ரண்ட்ஸ்!!

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...