Saturday, April 23, 2016

SARRAINODU – சரிப்பட்டு வரமாட்டான்!!!


Share/Bookmark
சில பேரு நல்ல கதைய நம்பி படம் எடுப்பாங்க. சில பேரு கருத்து சொல்லனும்னு படம் எடுப்பாங்க. சில பேரு கடுப்பேத்தனும்னு கூட படம் எடுப்பாங்க. ஆனா முதல் முறையா ரெண்டே ரெண்டு கைய மட்டுமே நம்பி ஒரு படம் எடுத்துருக்காய்ங்க. . இந்தப்படம் எப்புடி ஆரம்பிச்சிருப்பாய்ங்கன்னு யோசிச்சிப் பாத்தேன். அல்லு அர்ஜூன் போயப்பட்டி சீனுகிட்ட போய் (தலைநகரம் வடிவேலு ஸ்லான்ல படிங்க) “டேய்.. அண்ணனோட ஆர்ம்ஸ பாத்தியாடா?” ன்னுருக்காரு. அதுக்கு அவரு தொட்டுப்பாத்துட்டு “கல்லு மாதிரி இருக்கு அங்கிள்” ன்னுருக்காரு. “அப்ப இந்த ஆர்ம்ஸ்காக ஒரு படம் எடு” ன்னு சொல்லி இந்தப் படத்த ஆரம்பிச்சிருக்காய்ங்க. இது ஆடியன்ஸ்காக எடுக்கப்பட்ட படம் இல்லை. அல்லு அர்ஜுனோட ஆர்ம்ஸ காட்டுறதுக்காக மட்டுமே எடுத்த படம்.

இதுவரைக்கும் எந்த ஹீரோவுமே பன்னாத ஒரு புதுமையான கேரக்டரான “வெட்டிப்பய” ரோல்தான் நம்ம அல்லு அர்ஜூனுக்கு. வேலை வெட்டி எதுவும் இல்லாம தின்னுட்டு, அநியாயத்த கண்டா பொங்கி எழுந்து, ரவுடிங்கள தொம்சம் பன்றவர். இன்னொரு பக்கம் முதலமைச்சர் பையனான ஆதி இன்னொரு செம வித்யாசமான கேரக்டர் பன்னிருக்காரு. ஒரு பைப்லைன் ப்ராஜெக்ட்டுக்காக கிராமத்து மக்கள்கிட்டருந்து நிலத்த புடுங்க நினைக்கிற புதுமையான வில்லந்தான் ஆதி. இந்த ரெண்டு மிகப்பெரிய புதுமையப் பாத்தாலே உங்களுக்குத் தெரியும் படம் எவ்வளவு புதுமையா இருக்கும்னு. வக்காளி வந்துருக்க முக்கால்வாசி தெலுங்கு படத்துலயும் தமிழ்ப் படத்துலயும் ஹீரோவுக்கும் வில்லனுக்கும் இந்த கேரக்டர்தான். இன்னும் விடமாட்டாய்ங்க போலருக்கு.  

அல்லுவோட அப்பாவா நம்ம JP. அவரோட ஃப்ரண்டு சாய்குமாரோட பொன்ன அல்லுவுக்கு கட்டி வச்சிட்டா சும்மா திரியிற நம்ம பையன் பொறுப்பானவனா மாறிருவான்னு நினைக்கிறாரு. இப்புடி எதாவது நல்லது வீட்டுல பன்னுவாய்ங்கன்னு எதிர்பாத்துதான் நம்மூர்ல நிறைய பேரு சும்மாவே திரியிறாய்ங்க. பொண்ணு பாக்கப் போற வழியில கேத்ரின் தெரெசாவ பாத்து மனச பறிகொடுத்து, சாய்குமார் பொண்ணான ராகுல் ப்ரீத் சிங்க ரிஜெக்ட் பன்னிடுறாரு.

கேத்ரின் தெரெசா யாருன்னு பாத்தா அந்த தொகுதி எம்.எல்.ஏ. நானும் வட அமெரிக்காவுலயும் பாத்துருக்கேன் தென் அமெரிக்கவுலயும் பாத்துருக்கேன். இப்புடி ஒரு எம்.எல்.ஏவப் பாத்ததில்லைப்பா. இந்த மாதிரி கேண்டிடேட்லாம் நம்ம தொகுதில நின்னா எதிர்த்து நிக்கிற ஒரு பயலுக்கும் டெபாசிட் கூட கெடைக்காதுன்னா பாத்துக்குங்களேன். வெளில சேலையில போற MLA தெரெசா வீட்டுக்குள்ள டைட் ஃபிட்டிங் மார்டன் ட்ரெஸ்ஸோட சுத்துது. அத சேலையில பாக்கும்போதே MLA ஃபீல் வரல. இதுல மார்டன் ட்ரஸ் வேற. கொடுமை என்னன்னா அடிக்கடி அதுவே “நா MLA… நா MLA” ன்னு சொல்லி ஞாபகப்படுத்திக்கிது.

அப்புறம் வழக்கம்போல ரெண்டு மூணு பாட்டு, ரெண்டு மூணு ஃபைட்ட போட்டு தெரெசாவ உசார் பன்னி எல்லாம் கைகூடுற நேரத்துல, நம்ம டார்லிங் நம்பர் 45 ராகுல் ப்ரீத் சிங்க வில்லன்கள் தொரத்திட்டு வர்றாங்க. அப்ப போடுறோம் ஒரு கும்மாங்குத்து ஃபைட்ட. முடிச்சிட்டு ஜேஜே மாதவன் மாதிரி “அந்தப்பொண்ணத் தொட்டா மட்டும் இல்லைடா இந்தப் பொண்ண தொட்டாக்கூட எனக்கு வலிக்கும்” ன்னு பஞ்ச் டயலாக் பேசி இண்டர்வல் விடுறாய்ங்க.

அப்புறம் ராகுல் ப்ரீத் சிங்குக்க்கு என்னாச்சி? ஏன் அத வில்லன்கள் தொறத்துறாய்ங்க. அல்லு பொண்ணு பாக்கப் போகும்போது என்ன நடந்துச்சுன்னு ஃப்ளாஷ்பேக் போட்டு கிளைமாக்ஸ்ல ஒரு பெரிய ஃபைட்ட போட்டு முடிச்சா, படம் ஓவர்.

படத்தோட இயக்குனர் போயப்பட்டி சீனு. “சிம்ஹா” லெஜண்ட்” “தம்மு” போன்ற படங்களை எடுத்தவர். வழக்கமா இயக்குனர்கள் ஸ்க்ரிப்ட எழுதிட்டு தேவையான இடத்துல ஃபைட்ட வப்பாங்க. ஆனா நம்மாளு ஒரு அஞ்சி ஃபைட்ட வச்சி, அதுக்கப்புறம் அதுக்கேத்தமாதிரிதான் ஸ்க்ரிப்ட் எழுதுவாரு. உண்மையிலயே சண்டைக்காட்சிகளை ரொம்ப ரசிச்சி எடுக்கக்கூடியவர். படங்கள் ஒரே ரத்தக் களரியாதான் இருக்கும். ஆனாலும் அதுல ஒரு க்வாலிட்டி இருக்கும்.


பொதுவாவே தெலுங்கு படங்கள்ல ஹீரோ பக்கத்துல இருந்தா எவ்வளவு கொடூரமான வில்லனா இருந்தாலும், எத்தனை வில்லன்கள் இருந்தாலும் பயப்படவே தேவையில்லை. அதுலயும் போயப்பட்டி சீனு படங்கள்ல இன்னும் அதிகம். சும்மா தெறிக்க விடுவாய்ங்க. ”சிம்ஹா” வுல பாலகிருஷ்ணா அசால்ட்டா ரெண்டு பேரத்தூக்கி நச்சின்னு ரோட்டுல போய்ட்டு இருக்க லாரில அடிப்பாரு.

இதுலயும் அதே தான். பாரபட்சம் பாக்காம அல்லு  அள்ளி வீசுறாப்புல. அதுவும் இண்ட்ரோ ஃபைட்டு விஷூவலி செம. கீழ இருக்க ட்ரெயிலர்ல கடைசில பாருங்க. ஒருத்தன அடிச்சி பறக்க விட்டுட்டு ஸ்டைலா நடந்து போயிட்டு இருக்கும்ப்போது பின்னால ஒரு குதிரை போயிட்டு இருக்கது செமையா இருக்கும். அது மட்டும் இல்லை அந்த ஃபைட்டு மொத்தமுமே செம. அடிக்கடி அல்லு கைய முறுக்குறாரு. முறுக்க முறுக்க “மட மட ன்னு முறுக்க உடைக்கிற மாதிரி ஏதோ சத்தம் கேட்டுக்கிட்டே இருக்கு. அல்லு சீரியாஸா, கோவமா குடுக்குற சில ரியாக்‌ஷன் செம காமெடி.பாடல்கள் தமன். தெலுங்கு படங்களுக்குன்னே அவர் வச்சிருக்க அதே ட்யூன்ஸ். ஆறு பாட்டு உள்ள படமெல்லாம் லெமூரியக்கண்டத்தோட வழக்கொழிஞ்சி போயிருச்சி. இன்னும் ஆறு பாட்டு வச்சி, ஆறயுமே படத்துலயும் போட்டுருக்காய்ங்க. அடிக்கடி பாட்டு வந்துக்கிட்டே இருக்கு. அஞ்சலி ஒரு பாட்டுக்கு. சும்மா அள்ளுது. அஞ்சலிக்கு எவ்ளோ ஃபேன்ஸு.. ஸாக் ஆயிட்டேன்.

தெலுங்கு படங்கள்ல முக்கால்வாசிப்படங்கள்ல ரெண்டு ஹீரோயின்கள் தான் இருக்கும். அதுவும் க்ளைமாக்ஸ்ல ஹீரோ ரெண்டு பேரையும் கல்யாணம் பன்னிக்கிற மாதிரி கூச்சப்படாம முடிச்சிருவாய்ங்க. ஆனா இங்க ராகுல் ப்ரீட் சிங் ஃப்ளாஷ்பேக்க கேட்ட தெரெசா, “உனக்கு அவதான் கரெக்ட்… உனக்கு எப்ப என்ன உதவி வேணாலும் என்கிட்ட கேளு… எம்.எல்.ஏ நா இருக்கேன்” ன்னு அல்லுக்கிட்ட சொல்லிட்டு கடைய மூடிருது. இதான் படத்துல நா கண்டுபுடிச்ச புதுமையான சீன்.

ப்ரம்மானந்தம் ஊருகா மாதிரி அப்பப்ப வர்றாரு. ஒண்ணு ரெண்டு சீன் சிரிக்க வைக்கிறாரு. அவரு ஒரு செட்டப் வச்சிருக்கத பாத்து அல்லு அர்ஜூன் “வீட்டுல அழகான wife இருக்கும்போது ஏன்யா வெளில இன்னொன்னு?” ன்னு கேக்குறப்போ ப்ரம்மி “ வீட்டுல இருக்க டிவிலதான் படம் வருதேன்னு நம்ம தியேட்டர் போகாம இருக்கோமா? என்ன இருந்தாலும் தியேட்டர்ல படம் பாக்குற சுகமே வேற” ன்னு சொல்லி எப்புடி வீட்டுல மனைவிய சாமாளிக்கிறாருன்னு சொல்றது செம.

படத்துல செம டம்மி பீஸு  யாருன்னா நம்ம மிருகம் ஆதி தான். இவருக்கு பேர எமோஷனல் ஏகாம்பரம்னு வச்சிருக்கலாம். எப்பப்பாத்தாலும் எமோஷன் ஆகி கருக்கருவா, கத்தி, துப்பாக்கின்னு வித்யாச வித்யாசமான ஆயுதங்கள்ல பாக்குறவிங்களயெல்லாம் கொல்றாரே தவற கேரக்டர்லயோ, நடிப்புலயோ எந்த ஒரு வித்யாசமும் இல்லை. காலங்காலமா தெலுங்கு படங்கள்ல ரவுடி அல்லக்கைகள் பன்ற வேலை தான் இது.

வழக்கமா போயப்பட்டி சீனு  படங்கள்ல வசனங்கள் நல்லாருக்கும். இதுல அப்டியும் பெருசா இல்லை. பாலைய்யான்னாதான் அவருக்கு வசனம் பொங்கி வரும்போல.


ட்ரெயிலர்ல எதோ போலீஸ் கதை மாதிரி காமிச்சி ஏமாத்திட்டாய்ங்க. இருந்தாலும் படம் ரொம்பல்லாம் அருக்கல. போரடிக்காமத்தான் போகுது. ஆனா புதுசா எதையும் எதிர்பாத்துராதீங்க. நல்ல குவாலிட்டியான ஃபைட் சீன்ஸ் பாக்கனும்னு ஆசைப்படுறவங்க இந்தப் படத்த பாக்கலாம். மத்தபடி பெருசா எதுவும் இல்லை. 


Friday, April 15, 2016

தெறி – ஜெயிச்சாத்ரி!!!


Share/Bookmark
ஒரு நடிகர் ரசிகர்களை சம்பாதிக்கிறத விட அவர் சம்பாதித்த ரசிகர்களை தக்க வச்சிக்கத்தான் ரொம்ப பாடுபடனும். ஒவ்வொரு படத்தை அந்த நடிகர் தெரிவு செய்யும்போதும் இது கண்ணு முன்னால வந்து போகனும். ரெண்டு படம் சூப்பர் ஹிட்டானும் அடுத்து என்ன எடுத்தாலும் பாப்பாங்குற நினைப்பு வரும்போது தான் சரிவு ஆரம்பிக்கும். மேலும் முதல் நாள் படம்பார்க்கும் ரசிகர்களால  மட்டும் ஒரு படத்தை வெற்றிப்படமாக்கிட முடியாது. பொதுமக்களுக்கு அந்தப் படம் என்ன தாக்கத்த உண்டுபன்னுதுங்குறதப் பொறுத்துதான் வெற்றி தோல்வி அமையும். நூறு கோடி பெஞ்ச் மார்க் இப்பல்லாம் ரொம்ப சாதாரணமா போயிருச்சி. தமிழ் முன்னனி ஹீரோக்களோட படங்கள் முதல் நான்கைந்து நாட்கள்லயே நூறு கோடி வசூலை எட்டிருது. அதனால நூறு கோடி வசூல் என்பதெல்லாம் அடுத்த நடிகரோட கம்பேர் பன்னும்போது defend பன்னிக்க மட்டுமே உதவுமே தவற, ஒரு ரசிகனை படத்தோட தரம் மட்டுமே மகிழ்ச்சிபடுத்த முடியும்.

எம்.ஜி.ஆர் – சிவாஜி, ரஜினி – கமல், அஜித் – விஜய் ன்னு தான் நாம மூணு தலைமுறையா கம்பேர் பன்றோம். இதுல எம்.ஜி.ஆர்-சிவாஜி, ரஜினி –கமல் ங்குற முதல் ரெண்டு காம்பினேஷனான எடுத்துக்கிட்டோம்னா இது வெறும் ரெண்டு நடிகர்களுக்கிடையே உள்ள கம்பேரிசன் மட்டும் இல்லாம, இரண்டு வேறுபட்ட ரசனையுடைய ரசிகர் கூட்டங்களுக்கிடையே உள்ள கம்பேரிசன். எம்.ஜி.ஆர் நடிக்கும் படங்கள் ஒரு வகை. சிவாஜி நடிக்கும் படங்கள் இன்னொரு வகை. ரெண்டும் மிக்ஸ் ஆகாது. அதே மாதிரி தான் ரஜினி- கமல் படங்களும். இருவரின் படங்களும் வேறு வேறு வகையானது. ஒரு ரஜினி ரசிகருக்கு ரஜினி படங்கள் எப்படி இருக்கும்ங்குற தெளிவும், ஒரு கமல் ரசிகருக்கு கமல் என்ன மாதிரியான படங்கள் குடுப்பாருங்குறதுலயும் நல்ல புரிதலும் இருந்துச்சி. வெற்றி தோல்விகளைப் பொறுத்துதான் இந்த ரெண்டு நடிகர்களை கம்பேர் பன்ன முடியுமே தவிற one to one அப்டியே கம்பேர் பன்ன முடியாது.

ஆனா இப்ப நாம கம்பேர் பன்ற அஜித், விஜய் இருவருமே ஒரே மாதிரியான படங்கள் நடிப்பவர்கள். ஒரே மாதிரியான ரசிகர்களைக் கொண்டவர்கள். எம்.ஜி.ஆர்- சிவாஜி, ரஜினி-கமல் வரிசையில இந்தத் தலைமுறையில அஜித் விஜய் ரெண்டு பேருமே ரஜினி இடத்துல தான் போட்டி போடுறாங்களே தவற, இந்த தலைமுறைக்கான கமலஹாசனோட இடம் காலியாவே இருக்கு.. எனவே அஜித்-விஜய்ங்குற கம்பேரிசன் இரண்டு நடிகர்களுக்கிடையேயான ஒப்பீடே தவிற இரண்டு ரசனைகளுக்கிடையே உள்ள ஒப்பீடு இல்லை. அதனாலதான் மாத்தி மாத்தி கொடூரமா கால வாறிக்கிறாய்ங்க.

முந்தாநேத்து அயல்நாடுகள்ல தெறி முதல் ஷோ ஆரம்பிச்சதுலருந்து பெரும்பாலும் வந்தது நெகடிவ் ரிவியூஸ் தான். படத்துக்கு பேரு வேற “தெறி” ன்னு நல்லா ஓட்டுறதுக்கு வசதியா வச்சிருக்கதால அவன் அவனும் “தெறிக்கவிட்டாய்ங்க…” “தெறிச்சி ஓடுறாய்ங்க” “த்தூத்தெறி” ன்னு ரைமிங்கா அடிச்சி விட்டுக்கிட்டு இருக்காய்ங்க. ஏன் நானே படம் பாக்குறதுக்கு முன்னால இது மாதிரி ஒரு மூணு நாலு போஸ்ட் ஷேர் பன்னி விட்டேன் நேத்து. ஏன்னா விஜய்ன்னாலே எல்லாரும் முதல்ல Trolling Mode க்கு போயிடுறாய்ங்க.

ஆனா உண்மையில படம் நல்லாதான் இருக்கு. அதுவும் இல்லாம படம் எடுத்துருட்டு இருக்கும்போதே படத்தோட கதை சத்ரியன் மாதிரியா இருக்குறதா பேசிக்கிட்டாங்க. இன்னும் சில பேரு சத்ரியனத்தான் official ah ரீமேக் பன்றாங்கன்னும் பேசிக்கிட்டாய்ங்க. உண்மைதான். படத்தோட கதைன்னு பாத்தா பாட்ஷாவையும் சத்ரியனையும் ஒண்ணா கலந்துவிட்டு அடிச்சது தான்.. ஆனா ஸ்க்ரீன் ப்ளே, விஜய் பர்ஃபார்மன்ஸ் படத்த காப்பாத்திருது.  

ட்ரெயிலரப் பாத்தாலே நமக்கு மொத்தக் கதையும் தெரிஞ்சிரும். ரெண்டு ஹீரோயின். விஜய் குழந்தையோட தனியா இருக்காரு. அப்டின்னா கதை என்ன, டுஸ்டு என்னன்னு எல்லாருக்குமே தெரியும். அதனால அந்தமாதிரி விஷயங்கள திரையில விளக்க ரொம்ப நேரம் எடுத்துக்காம காட்சிகள சுவாரஸ்யமாக்குறதுலயே ரொம்ப மெனக்கெட்டுருக்காங்க. கண்டிப்பா காட்சிகளும் நல்லா வந்துருக்கு.

மீனாவோட பொண்ணு நைனிகா நடிப்புல மீனாவ சாப்டுரும் போல. சூப்பரா பன்னிருக்கு. அந்தக் குழந்தைக்கு எழுதப்பட்டிருக்க “counter dialogues” அது வயசுக்கு கொஞ்சம் அதிகம்னு தோணுச்சி. ஆனாலும் ரசிக்கிற மாதிரி தான் இருக்கு.

குருவில்லா கேரக்டர்லயும் சரி, விஜய் குமார் கேரக்டர்லயும் சரி விஜய் பட்டையக் கெளப்பிருக்காரு. செம ஸ்க்ரீன் ப்ரசன்ஸ். அதோட ஆளும் செம ஃபிட். வழக்கமா பன்ற அதிகப்பிரசங்கித் தனங்கள் எதுவும் இல்லாம நீட்டா பன்னிருக்காரு. ஓவர் டோஸ் ஆகிடாமயும், அதே சமயம் மாஸ் சீன்ஸ் இருக்கமாதிரியும் தெளிவா பன்னிருக்காங்க.

குறிப்பா விஜய் இண்டர்வல் சீன்ல மகேந்திரன்கிட்ட அவர் பையன யார் யார் கொன்னுருக்கலாம்னு ஒரு லிஸ்டு சொல்லுறது செம. குழந்தைங்கள பிச்சையெடுக்க வைக்கிற ஒரு ரவுடிகூட சண்டை போடும்போது, அவன் பின்னால 5 பேர் நிக்கிறாங்கன்னு சொல்லிட்டூ அதுக்கு ஒரு விளக்கம் குடுப்பாரு. அதுவும் நல்லாருந்துச்சி.

எனக்கு படத்துல irritating ah இருந்தது ஒரு சில விஷயங்கள். ஒண்ணு பாட்ஷாவுல வர்ற போலீஸ் ஸ்டேஷன் பில்ட் அப் சீன மனசாட்சி இல்லாம அப்புடியே திரும்ப எடுத்துருந்தது. இன்னொன்னு மேனரிசம்ங்குற பேர்ல ரெண்டு bubble gum ah வாய்க்குள்ள போடுறமதிரி எடுத்து வச்சிருக்கது. அப்புறம் விஜய் மூஞ்சிக்கு கருப்பு கண்ணாடி ரொம்ப கேவலாம இருக்கு. அத நம்ம தலைவாவுலயே பாத்தோம். ஆனா திரும்ப இதுலயும் ரெண்டு மூணு சீன்ல அதே கண்ணாடிய போட்டுக்கிட்டு கண்றாவியா வர்றாரு. வரலன்னா விட்டுற வேண்டியது தான.

படத்துல விஜய்- எமிஜாக்சன் காம்போவுக்கு பெருசா ஒண்ணும் இடமில்லை. ஆனாலும் எமிஜாக்சனுக்கு பதிலா வேற ஒரு நல்ல டீச்சரா போட்டுருக்கலாம். அந்த விக்குக்கும் அதுக்கும் எமி ஜாக்சன் சற்று டொம்மை போல் இருக்கு. சமந்தா- விஜய் காதல் காட்சிகள் சூப்பர். குறிப்பா முதல் முதல்ல ரெண்டு பேரும் மீட் பன்ற சீன்ல சமந்தா பேசுற வசனமும், அதுக்கு விஜய் பதில் சொல்றதும் நல்லாருந்துச்சி.

“The departed” ங்குற படத்துல நம்ம டிக்காப்ரியோவும் ஒரு ஹீரோ. வில்லன் ஒருத்தன புடிச்சிக்கிட்டு லிஃப்டுல கீழ வந்துட்டு இருப்பாரு. கீழ லிஃப்ட் தொறந்து வெளில வந்த அடுத்த செகண்ட் வில்லனோட ஒரு ஆள் அவர் தலையில சுடுவான். ஒரு செகண்ட்ல ஸ்பாட்லயே மண்டை செதறி கீழ விழுந்து செத்துருவாரு. நமக்கு ஒரு மாதிரி ஆயிரும். டேய் அவரு ஹீரோடா..  ஹீரோன்னா சாகும்போது எதாவது சொல்லிட்டு தாண்டா சாகனும். இப்புடி பொசுக்குன்னு போட்டீங்களேடான்னு தோணும். அந்த மாதிரி இங்க சமந்தா சாகுற சீன் வச்சிருக்காய்ங்க. தியேட்டர்ல சத்தம் போட்டுக்கிட்டு இருந்தவியிங்க ஒரு செகண்ட் ஸ்டண் ஆயிட்டாய்ங்க.


முதல் பாதி வில்லன்கள் யாரும் பெருசா இல்லாததால எந்த குடிக்கிற சீனோ தம் அடிக்கிற சீனோ படத்துல இல்லை. செகண்ட் ஹாஃப்ல மட்டும் ஒண்ணு ரெண்டு சீன் வருது. வில்லன் மகேந்திரன் தாடியோட பாக்க ரவிச்சந்திரன் மாதிரி இருக்காரு. மகன கொன்னதுக்காக பொறுமையா பழிவாங்குற அப்பா. நல்லா பன்னிருக்காரு.

இப்ப இந்த தெறில கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட பொண்ணுக்காக போராடும் போலீஸ் தான் விஜய்.  இது வெறும் ஆரம்பம் தான். அடுத்த ரெண்டு வருஷதுக்கு கற்பழிப்புக்காக பழிவாங்குற போலீஸ் கதைகளால தமிழ் சினிமா ரொம்பி வழியப்போகுது.  இப்ப ராகவா லாரன்ஸ் நடிக்கிற ”மொட்டை சிவா கெட்ட சிவா” படத்தோட மெயின் தீமும் அதுதான். அடுத்து “Temper” படத்த ரீமேக் பன்னப்போறாய்க்களாம். அந்தப் படத்தோட தீமும் இதுதான். உசார் மக்களே.

பாட்டு எல்லாமே ஓக்கே தான். ஜித்து ஜில்லாடி ஆரம்பிக்கும்போது பாக்க ரொம்ப சூப்பரா இருக்கு. ஆனா போக போக சற்று டொம்மை ஆயிருது. மத்த பாட்டுங்களும், picturization உம் ஓக்கே ரகம். தியேட்டருக்குள்ள விசில் சத்தம் ஓவரா இருந்ததால் நிறைய இடங்கள்ல BGM கேக்கல.

படம் ஆரம்பிச்சி கொஞ்ச நேரத்துல விஜய் நைனிகா காட்சிகள் வரும்போது அவங்க கூட ஒரு நாயும் கூட இருக்கும். என் பக்கத்துல உக்காந்திருந்த ரெண்டு பேரு பேசிக்கிட்டய்ங்க. “ டேய் இது துப்பாக்கில நடிச்ச நாயாடா?” னான் ஒருத்தன். அதுக்கு இன்னொருத்தன் “டேய் அந்த நாயி எப்பவோ செத்துட்டுருக்கும்டா” ன்னான். எனக்கு ஒரு டவுட் ஆகிப்போச்சி. இவனுங்க எந்த நாயப் பத்தி பேசிக்கிட்டு இருக்கானுங்கன்னு (படித்தவுடன் கிழித்து விடவும்).  சரி கேட்டா கும்மிருவானுங்கன்னு அந்தக் கேள்விய என் மனசுக்குள்ளயே போட்டு புதைச்சிட்டேன்.

படம் ரிலீஸ் ஆகுறதுக்கு முன்னாலயே இணையங்களில் கொடுக்கப்பட்ட பில்ட் அப்புகளால ராஜா ராணி படத்த இப்ப வரைக்கும் பாக்கனும்னே எனக்கு தோணல. அந்தப் படம் எப்டியோ. இந்தப்படத்துல அட்லீ ரொம்ப தெளிவா, விஜய்க்கு ஏத்த மாதிரி காட்சிகளும் வசங்களையும் வச்சிருக்காரு. “அட்லீ செஞ்சிட்டாரு” அள்ளி விடுறதெல்லாம் சும்மா.


முதல் நாள் “ஆ… ஊ” ன்னு கத்துற ரசிகர்களுக்கு வேணா படம் கொஞ்சம் ஏமாற்றம் அளிக்கிற மாதிரி இருக்கலாம். ஆனா நிச்சயம் பொதுமக்களுக்கு பிடிச்ச மாதிரியான படமா இருக்கும். என்னைப் பொறுத்த வரைக்கும் தலைவா, கத்தி, ஜில்லா படங்களையெல்லாம் விட ”தெறி” பல மடங்கு நல்ல எண்டர்டெய்னர். 


Saturday, April 9, 2016

SARDAR GABBAR SINGH – ஆபத்தான மிருகம்!!!!


Share/Bookmark
ஒரு நடிகர் வளர்ந்து வரும்போது, அவருக்கான ஒரு அடையாளத்த தேடிக்கிட்டு இருக்கும்போது எந்த அளவு கதையில கவனம் செலுத்துறாங்களோ அதே அளவு கவனத்த அவங்களுக்குன்னு ஒரு அடையாளம் ஒரு ரசிகர் கூட்டம் கிடைச்சப்புறம் செய்யிறதில்லைன்னு தான் சொல்லனும். நம்ம ரசிகர்கள் நாம எதை எடுத்து விட்டாலும் பாப்பாங்கங்குற ஒரு ஆணவம் அவங்களுக்குள்ளாகவே வந்துரும் போல. எப்பவுமே ஒரு படத்துக்கு ஹீரோ நிறைய மக்களுக்கு அந்தப் படத்த கொண்டு சேர்க்குறதுக்காக மட்டுமே பயன்படுறாரே ஒழிய உண்மையான ஹீரோ எப்பவும் இயக்குனரும், கதையும் திரைக்கதையும் தான். இதை அத்தனை நடிகர்களுக்கும் மக்கள் அப்பப்ப உணர்த்தியிருக்காங்க. இப்ப பவன் கல்யாணுக்கும் இத புரிய வைக்க வேண்டிய நேரம்னு நினைக்கிறேன்.

குறுகிய காலத்துல மிகப்பெரிய ஃபேன் பேஸ க்ரியேட் பன்னிக்கிட்டவரு பவன் கல்யான். அதுவும் சாதாரண ஃபேன்ஸ் இல்ல வெறித்தனமான ஃபேன்ஸ். அவரோட Body language க்கும், ஸ்டைலுக்கும் , டயலாக் டெலிவரிக்கும் நிச்சயமா அத்தனை பேரும் ஃபேன் ஆகிடுவாங்கங்குறதுல சந்தேகமே இல்லை. சமீபத்துல வந்த பெங்கால் டைகர்ங்குற ரவிதேஜா படத்துல வர்ற வசனம்

வில்லன் : என்னய்யா என்னோட ஜாதகம் மாதிரி உலகத்துல வேற யாருக்குமே இல்லைன்னு சொன்ன.. இப்ப இவனுக்கு (ரவிதேஜா) இருக்குன்னு சொல்ற.. 

அள்ளக்கை: சார் சவுத் இந்தியாவுல சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்த அடிச்சிக்க வேற ஆளே வரமாட்டாங்கன்னு நாம நினைச்சிட்டு இருந்தோம்.. ஆனா நம்ம பவர் ஸ்டார் பவன் கல்யாண் வந்தாருல்ல..  அப்டிம்பான் அந்த அளவுக்கு பவன் கல்யாண தூக்கி வச்சிருந்தாய்ங்க. அதுமட்டும் இல்லாம அவரோட கடந்த ரெண்டு படங்களான “அத்தாரிண்டிக்கி தாரெதி” யும் “கப்பர் சிங்” கும் அந்தந்த வருஷத்துல தெலுகுல அதிக கலெக்‌ஷன் எடுத்த படங்கள். அப்படி இருக்க 3 வருஷம் கழிச்சி பவனோட படம்.. அதுவும் மெகா ஹிட்டான கப்பர் சிங்கோட அடுத்த பார்ட்.. எதிர் பார்ப்பு எப்புடி இருக்கும்னு பாருங்க.. ஆனா என்ன நடந்துச்சி… பாப்போம்.

”என்னய்யா சும்மா கப்பர் சிங் கப்பர் சிங்குங்குறீங்க.. அதானே நம்ம ஊர்ல ”ஒஸ்தி”ன்னு வந்துச்சி.. அதோட லட்சனத்த தான் பாத்தோமே” உங்களுக்கு தோணும். ஆனா நீங்க நினைக்கிற மாதிரி இல்லை. கப்பர் சிங்க பாத்தாதான் ஒஸ்தி கதையக் கூட இவ்வளவு சூப்பரா எடுக்க முடியுமான்னு நமக்கு ஆச்சர்யாமா இருக்கும். நாம ஒஸ்தில என்னவெல்லாம் கடுப்புன்னு நினைக்கிறமோ அதயெல்லாம் தூக்கிருப்பாய்ங்க இல்ல மாத்தி நல்லா எடுத்துருப்பாய்ங்க. 

உதாரணத்துக்கு சிம்பு அடிக்கடி “எலேய்.. திருடன்னு சொன்ன உடனே தான் ஞாபகம் வருது.. உன் மச்சான் எங்கலே இருக்கான்?” ன்னு அடிக்கடி சம்பந்தம் சம்பந்தம் இல்லாம எரிச்சலக் கெளப்பிட்டு இருப்பான். அத அப்டியே தூக்கிட்டு வேற மாதிரி மாத்தி காமெடி வச்சிருப்பாய்ங்க. அதுக்கும் மேல ஒஸ்தில ரொம்ப கேவலமான ஒரு சீன் ஜித்தன் ரமேஷுக்கு கல்யாணம் நடக்க போகும்போது அங்க சிம்பு போய் அந்த மேடையில அவன் கல்யாணம் பன்னிட்டு வருவான். இது ரொம்ப பாடாதியா இருக்கும் பாக்க. அதல்லாத்தயும் மாத்திருப்பானுங்க. கிட்டத்தட்ட அந்தப் படத்த ரீமேக்னு சொல்லாம சும்மாவே எடுத்துருக்கலாம்.

இடையில தீவிர அரசியல்லயெல்லாம் ஈடுபட்டுட்டு “கோபாலா கோபாலா” வுல (Remake of Oh my God) ஒரு கெஸ்ட் அப்பியரன்ஸ குடுத்துட்டு இப்ப சர்தார் கப்பர் சிங். ட்ரெயிலரப் பாக்கும்போதே கதை என்னன்னு தெரிஞ்சிரும். இல்லைன்னாலும் ஒண்ணும் பெருசா புது கதையெல்லாம் எடுத்துர மாட்டாய்ங்க. இந்திய திரைப்பட வரலாற்றுல கிட்டத்தட்ட ரெண்டு லட்சத்து இருபத்தஞ்சாயிரமாவது முறையா வில்லன்கிட்ட மாட்டிக்கிட்டு முழிக்கிற ஒரு கிராமத்த ஹீரோ ஒத்த ஆளா காப்பாத்துற கதைதான் இந்த சர்தார் கப்பர் சிங்.

ரொம்ப நாளுக்கப்புறம் ஹீரோவுக்கு ஒரு செமையான இண்ட்ரோ சீன். ”பாபா” படத்துல, தலைவருக்காக எல்லாரும் வெய்ட் பன்னிட்டு இருக்கும்போது, பாபாஜி படத்துலருந்து ஒரு பூ கீழ விழ ,சுஜாதா ஸ்லோமோஷன்ல திரும்பி “பாபா வந்துட்டு இருக்கான்” ம்பாங்க. எனக்கு ரொம்ப புடிச்ச இண்ட்ரோ அது. இதுல வில்லன் ஊரயே அடிச்சி நாசம் பன்னிட்டு இருப்பான். அப்ப இவங்ககிட்டருந்து காப்பாத்த யார் வரப்போறான்னு கத்தும்போது, ஒரு முள் வேலில ஒரு துண்டு (பவன் கழுத்துல போட்டுருக்க துண்டு) காத்துல ஆடிக்கிட்டு இருக்கும். அப்டியே கட் பன்னா பவனோட இண்ட்ரோ… ப்ப்பா.. புல்லரிச்சிருச்சி.

அப்டி அரிச்சோன சொரிஞ்சிக்கிட்டு அப்பவே பேசாம எழுந்து  வந்துட்டா உயிர் பொழைக்கலாம். இல்லன்னா அவ்ளோதான். ஒரு சீன்கூட புதுசா இருந்துடக் கூடாதுங்குறதுல டைரக்டர் ரொம்பவே கவனமா இருந்துருக்காப்ள. கப்பர் சிங்குல வர்ற காமெடியன்கள் அத்தனை பேரும் இருக்காங்க. ஆனா காமெடிதான் ஒண்ணுமே இல்லை. முதல் பாகத்துல பவன் கல்யாணே சும்மா துரு துருன்னு இருப்பாரு. ஒவ்வொரு டயலாக் சொல்லிட்டும் “ஒரே சாம்பா.. ராஸ்கோரா” ன்னு ஆலே கிட்ட சொல்றதும் செமையா இருக்கும். ஆனா இங்க ஒண்ணு இல்லை. பவனே ரொம்ப டல்லா இருக்காப்ள. நடிப்புல அந்த பழைய துருதுருப்பு இல்லை.

வழக்கமா தெலுங்குப் படங்கள்ல பாட்டு நல்லா எடுப்பாய்ங்க. ஆனா இங்க பாட்டக் கூட ஏதோ கடனுக்கு எடுத்து வச்சிருக்காய்ங்க.  DSP ஒவ்வொரு படத்துலயும் ரெண்டு பாட்டு ”கேக்க முடியாத” மாதிரி போடுவாரு. ரெண்டு பாட்ட “ஏற்கனவே கேட்ட” மாதிரி போடுவாரு. ஒரே ஒரு பாட்ட மட்டும் கேக்குற மாதிரி போடுவாரு. என்னிக்கும் இல்லாத திருநாளாம்னு இந்தப் படத்துல எல்லா பாட்டுமே நல்லா போட்டுருந்தாப்ள. ஆனா பாருங்க மக்கழே அத நல்லா ஸ்கிரீன்ல பாக்க நமக்கு குடுத்து வைக்கல. மத்த ஹீரோக்களாவது பரவால்ல, பாட்டு நல்லா இல்லைன்னாலும் டான்ஸ வச்சி மேட்ச் பன்னிருவாய்ங்க. ஆனா பவனுக்கு டான்ஸ் சுத்தம்.

காதல் காட்சிகள்தான் படத்துல அரு அருன்னு அருக்குது. எதோ ஒரு அருவியப் புடிச்சிட்டாய்ங்க. படத்துல வர்ற அத்தனை லவ் சீனும் அதே லொக்கேஷன்ல தான். சீன் தான் மொக்கைன்னா லொக்கேஷன் அதுக்கும் மேல.

இண்ட்ரோ சீன்ல துப்பாக்கி எடுத்து சுட ஆரம்பிக்கிற பவன் கல்யான், படம் முடியிற வரைக்கும் சுட்டுக்கிட்டே இருக்காரு. காலுக்கு சைடுல ஒரு துப்பாக்கி, பெடக்ஸுக்கு பின்னால ஒரு துப்பாக்கின்னு அங்கங்கருந்து எடுத்து சுட்டுக்கிட்டே இருக்காரு. இவரு ஒரு ஆளுன்னா பரவால்ல. அந்த ஊருல அத்தனை பேரும் துப்பாக்கியோட தான் சுத்துராய்ங்க. படத்துல BGM க்கு வேலையே இல்லை. வெறும் துப்பாக்கி சவுண்டு மட்டும்தான். படம் முடிஞ்சி வீட்டுக்கு போய் படுத்த அப்புறமும் என் காதுக்குள்ள எவனோ துப்பாக்கியால டொம்மு டொம்முன்னு சுட்டுக்கிட்டே இருக்க மாதிரியே ஒரு ஃபீலிங்கி.

படத்துல நோட் பன்ன வேண்டிய விஷயம் என்னன்னா கதை திரைக்கதை நம்ம பவன் கல்யான்தான். காட்சிகள் ஒரு கோர்வையே இல்லாம ஏனோதானோன்னு கெடக்கு. எந்த காட்சியும் சுவாரஸ்யமாவும் இல்லை. ஒரே ஒரு செட்ட போட்டு அதுலயே பெரும்பாலான காட்சிகள எடுத்துருக்காய்ங்க. அதுவே முதல்ல ரொம்ப போர் அடிக்கிது.

நல்ல விஷயங்கள்னு சொல்லப்போனா கேமராவும் ஸ்டண்டும். நிறைய காட்சிகள நல்லா படம் புடிச்சிருக்காங்க. இண்ட்ரோ ஃபைட்டும் இண்டர்வல் ஃபைட்டும் செம. அதுவும் இண்டர்வல் ஃபைட்டுல ஒரு 500 பேர ஒத்த ஆளா அடிச்சி தொம்சம் பன்னுவாப்ள நம்மாளு. 500 ah ன்னு வாயப் பொளக்காதீங்க. பவன் கல்யான் நடிச்ச “கேமராமேன் கங்காதோ ராம்பாபு” ன்னு ஒரு படம். ப்ரகாஷ் ராஜ் வில்லன்.. முதல்ல பவன அடிக்க 10 பேர அனுப்புவாரு ப்ரகாஷ்ராஜ். பவன் அடிச்சி போட்டுருவாப்ள. அடுத்து 20 பேர் . அதயும் அடிச்சி போட்டுருவாப்ள.

கடுப்பாகி ப்ரகாஷ்ராஜ் “ஏண்டா பத்து பேர அடிச்சா நீ பெரிய ஆளா.. 50 பேர இறக்குறேண்டா.. பாக்குறியா?” ன்ன உடனே பவன் ஒரு பதில் சொல்லுவாரு பாருங்க. “நீ 50 பேர இறக்குனாலும் சரி 100 பேர இறக்குனாலும் சரி. At a time ல என்ன சுத்தி நிக்கப்போறது நாலு பேர்தான். அந்த நாலு பேரயும் ஸ்பாட்லயே கொன்னுருவேன்” ம்பாரு... இத ஏன் சொல்றேன்னா, எப்புடி இத்தனை பேர அடிக்க முடியும்னு நம்ம எதாவது கேட்டா இப்டிதான் பதில் சொல்லுவாங்க. அதனால அம்பதோ, ஐநூரோ… பேசாம பாத்துட்டு போயிட வேண்டியது தான்.

படத்துக்கு இன்னொரு பெரிய மைனஸ் படத்தோட நீளம். 2.45 மணி நேரம் ஓடுது. இண்டர்வல் வரும்போதே எதோ படம் முடியப்போற ஃபீல். மொக்கை சீனையெல்லாம் கட்பன்னா நல்லாருக்கும். ஆனா என்ன மொக்கை சீனையெல்லாம் கட் பன்னிட்டு பாத்தா மிச்சம் 5 பாட்டும் 6 ஃபைட்டும்தான் பேலன்ஸ் இருக்கும்.


நம்ம ராம் கோபால் வர்மா அப்பப்ப எதாவது ஒரு பெரியாள வம்பிழுத்து வாங்கிக் கட்டிக்குவாப்ள. அவர் சர்தார் கப்பர் சிங்கப் பத்தி போட்ட ட்வீட் ”Bahubali gave Tremendous sky like rise to Tollywood in the eyes of Bollywood and now SGS crashed it back into the underground” இதுக்கு பவன் ஃபேன்ஸ் அவர கயிவி கயிவி ஊத்திக்கிட்டு இருக்காய்ங்க. ஆனா அந்தாளு சொல்லிருக்கது கரெக்ட் தான். சமீப காலங்கள்ல பாத்த சில மோசமான  படங்கள்ல இதுவும் ஒண்ணு. 

Sunday, April 3, 2016

சங்கமே அபராதத்துலதான் ஓடிக்கிட்டு இருக்கு!!!


Share/Bookmark
ஒரு விஷயத்துக்கு மக்கள் எந்த அளவு முக்கியதுவம் கொடுக்குறாங்க என்பதைப் பொறுத்துதான் ஊடகங்கள் அந்த விஷயத்துக்கு கொடுக்கும் முக்கியத்துவமும் இருக்கு. ஒவ்வொரு முறை கிரிக்கெட்டை பத்தி சூடா விவாதம் பன்னிக்கிட்டு இருக்கும்போதும் “நம்மூர்ல கிரிக்கெட்டுக்கு கொடுக்குற அளவு மத்த விளையாட்டுக்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க மாட்டேங்குறாங்க” ங்குற புலம்பலும் சேர்ந்துதான் வரும். ஏன்னா இன்னிக்கு கிரிக்கெட்தான் மக்களுக்கு புடிச்சிருக்கு. அதனால எல்லாரும் கிரிக்கெட்ட தான் புரமோட் பன்ன ஆசைப்படுறாங்க. அது சம்பந்தமான வீரர்களுக்கு தான் நிறைய ஸ்பான்ஸர்ஸ் கிடைக்கிது. மற்ற விளையாட்டைச் சேர்ந்த வீரர்கள் இந்த அளவு வசதி இல்லாம இருக்காங்க.

ஒருதடவ எனக்கும் என்னோட நண்பருக்கும் இடையில ஒரு பெரிய விவாதமே நடந்துச்சி. நான் க்ரிக்கெட்ட பத்தி எதோ பேசிக்கிட்டு இருக்கும்போது அவர் “க்ரிக்கெட்லாம் பாக்க கூடாது சிவா.. அது நம்ம விளையாட்டே இல்லை. அத நம்மகிட்ட மார்கெட்டிங் பன்னிட்டாங்க” ன்னு சொன்னாரு. அதுக்கு நா “இருந்துட்டு  போகட்டும்.. அதனால என்ன? அந்த விளையாட்டு எனக்கு புடிச்சிருக்கு நா பாக்குறேன்” ன்னேன். மறுபடி மறுபடி அவரோட வாதம் முழுசும் “கிரிக்கெட் நம்ம விளையாட்டில்ல.. அத நம்மகிட்ட வெளிநாட்டுகாரர்கள் மார்க்கெட்டிங் பன்னிட்டாங்க.. அந்த விளையாட்ட பாக்க நாம மூணு மணி நேரம் ஆறு மணிநேரம்னு வேஸ்ட் பன்னக்கூடாது” என்பதாத்தான் இருந்துச்சி.

அவரோட வாதம் உண்மையா கூட இருக்கலாம். ஆனா அது இப்ப வரைக்கும் எனக்கு கன்வீன்சிங்கா இல்லை. மார்க்கெட்டிங் பன்னப்பட்டதா இருந்தாலும் அது இப்பதைக்கு நமக்கு பிடிச்ச ஒரு விஷயமா இருக்கு. அத நீ செய்யக்கூடாதுன்னு, நமக்கு பழக்கமில்லாத, பிடிக்காத ஒரு விஷயத்ததான் நீ பன்னனும்னு சொல்றத என்னால ஏத்துக்க முடியல. அத விட மூணு மணிநேரம் ஏன் வேஸ்ட் பன்றீங்கன்னு ஒண்ணு கேட்டாரு. ஒருத்தனோட நேரம் வீணடிக்கப்படுதா இல்லை முறையா பயன்படுத்தப்படுதாங்குறத அவன் அவந்தான் முடிவு பன்னனும். என்னப் பொறுத்த அளவு அந்த மூணு மணி நேரம் நா எனக்கு பிடிச்ச ஒரு விஷயத்த பன்றேன். அது அவரது பார்வையில வீணடிக்கப்படுவதா இருக்கு. இன்னிக்கு இருக்க நிலமையில நேரத்த பணமா கன்வர்ட் பன்னாலோ, அல்லது பணம் செய்வதற்கு தேவையான திறமையை வளர்த்தாலோதான் அந்த நேரம் பயனுள்ளபடி செலவழிக்கப்பட்டதாக கருதப்படுது.

எவன் என்ன மார்க்கெட்டிங் பன்னாலும் நமக்கு தேவையானதை, நமக்கு பிடித்ததைத்தான் நாம தெரிவு செய்யிறோம். டிவில போடுற அத்தனை விளம்பரங்களையும் பார்த்து நம்பி நாம எல்லாத்தையும் வாங்கிடுறதில்லை. நமக்கு ஒரு பொருள் தேவைப்படும்போது அதுல ஒண்ணத் தெரிவு செய்ய வேணும்னா இந்த விளம்பரங்கள் உதவுன்னு வச்சிக்கலாம். உயிர்வாழ அத்யாவசியம் இல்லாத ஒரு பொருளை மார்க்கெட்டிங் பன்னுறப்போ அது எப்பவுமே திணிப்பதாக எடுத்துக்க முடியாது.  நம்மதான் திணிக்கப்படுவது போல உணருரோம். அது வெறும் ஆப்ஷன் தான்.

இந்தப் பதிவு எழுத ஆரம்பிச்சதே இந்த நடிகர் சங்க கட்டிட நிதிக்காக நடத்தப்பட இருக்கிற மேடை நாடகம் மற்றும் நட்சத்திர க்ரிக்கெட் தொடர்பாத்தான். முன்னதா ஒரு நாலு மாசத்துக்கு முன்னால நடிகர் சங்கத் தேர்தலுக்கு சட்டமன்றத் தேர்தலை விட அதிக முக்கியத்துவம் கொடுத்து ஊடகங்கள் பெரிது படுத்தியும், வாக்கெடுப்பு அன்னிக்கு லைவ் டெலிகாஸ்ட்டெல்லாம் பன்னி எக்கச்சக்க பில்ட் அப் பன்னாய்ங்க.

அடுத்த ரெண்டு மாசத்துல சென்னை வெள்ளத்துல மூழ்குனப்போ நேரடியா விஷால் & co இதுக்கு நடிகர் சங்கம் எதுவும் செய்ய முடியாது அரசாங்கம்தான் உரிய நடவடிக்கை எடுக்கனும்னு ஓப்பனா சொன்னாரு. இப்ப அதுதான் நிறைய பேருக்கு உறுத்துது. சென்னை வெள்ளத்தில் தத்தளிச்சப்போ உதவ முடியாதுன்னு சொன்ன நீங்க இப்ப ஏன் மக்கள்கிட்ட பணம் வசூல பன்றீங்க? இதுக்கு பேரு என்ன தெரியும்மா… எச்சைங்குறான்  ஒருத்தான்.. இன்னொருத்தன் ஏன் அதுக்கு நிதி திரட்ட நிகழ்ச்சி நடத்தலன்னு கேக்குறான். இன்னும் என்னென்னவோ  வாய்க்கு வந்தத திட்டுறாய்ங்க.

எதோ நடிகர் சங்கத்துல உள்ளவிங்க இவனுங்க ஒவ்வொருத்தன் வீட்டுக்கும் வந்து அம்மா, தாயே கட்டிடம் கட்ட காசு இல்லை எதாவது போடுங்கன்னு கேட்ட மாதிரி இவனுங்க பொங்குற பொங்கு தாங்க முடியல. நடிகர்கள் ஒரு ஷோ நடத்தி 100, 200 டிக்கெட் போட்டு வசூல் பன்றதுக்கு பேர் மக்கள்கிட்டருந்து பணம் பறிக்கிறதுன்னா, தியேட்டர்ல படத்த ரிலீஸ் பண்ணி 120 ரூவா டிக்கெட் வாங்கிட்டு படத்த மக்களுக்கு காமிக்கிறதுக்கு பேரும் பணம் பறிப்பு தானா?  ஃபாரின் ப்ளேயர்ஸ கொண்டு வந்து இங்க விளையாடவிட்டு குறைந்த பட்ச டிக்கெட் 1500, அதிகபட்ச டிக்கெட் 50000 வரைக்கும் வசூலிக்கிற IPL லுக்கு பேரெல்லாம் என்ன?

அதெல்லாம் சரி.. இப்ப நடிகர்சங்க மேட்ச்ச கட்டாயமா நீங்க பாத்தே ஆகனும்னு யாரு கட்டாயப்படுத்துனது? நடிகர்கள் விளையாடுறாங்க. உங்களுக்கு பாக்கனும்னு தோணுச்சின்னா போங்க. இல்லைன்னா பேசாம கெடங்க. எதோ உங்க பாக்கெட்டுலருந்து உங்களக் கேக்காம காச எடுத்த மாதிரி பதறுறீங்க.

இந்த கேப்புல அஜித் மக்கள்கிட்ட பணம் பறிக்கக்கூடாதுன்னு ஃபங்ஷனுக்கு வரமாட்டேன்னு சொல்லிட்டாராம். அதுக்கு கெத்துடா… மாஸுடா வேற.. ஏதோ அஜித் படங்கள்ல பணம் வாங்காம நடிக்கிற மாதிரியும், அஜித் படங்கள் தியேட்டர்ல மக்களுக்காக ஃப்ரீயா ஓடிக்கிட்டு இருக்க மாதிரியும். இவரு என்னவோ மத்த எல்லா ஃபங்ஷனுக்கும் வந்துட்ட மாதிரியும், மக்கள்கிட்ட பணம் பறிக்கிறாங்கன்னு கொதிச்சி இந்த ஒரு ஃபங்ஷனுக்கு மட்டும் வரமாட்டேன்னு சொல்லிட்ட மாதிரியும்.. எந்த ஃபங்ஷனுக்கு அது வந்துருக்கு? ஃபங்ஷனுக்கு வராம ஓபி அடிக்கிறதுக்கு  இப்டி ஒரு பில்ட் அப்பு.


நம்ம மக்கள்கிட்ட ஒரு கெட்ட பழக்கம் என்னன்னா மத்த எல்லா இடத்துலயும் காசு குடுத்து ஒண்ணு வாங்குனா அந்த டீலிங்க அப்பவே முடிச்சிக்குவாய்ங்க. ஆனா சினிமாக்காரங்ககிட்ட மட்டும் “தில் மாங்கே மோர்” ன்னு “நா காசு குடுத்து இவன் படத்த பாத்தேன்.. இவன் ஏன் எனக்கு இத செய்யல? இவன் எதுக்கு இதுக்கு காசு குடுக்கல?” ன்னு எக்ஸ்ட்ராவா எதிர் பாப்பாய்ங்க.

விஷால் நடிகர் சங்கத்தின் மூலமா எதுவும் செய்ய முடியாதுன்னு சொன்னாலும், தமிழ் நடிகர்கள் மூலமா பல கோடி ரூபாய் நிவாரண உதவி கிடைச்சிது. இரவு பகல் பாக்காம உதவிய சித்தார்த், RJ பாலாஜி லாரன்ஸ், மயில்சாமி எல்லாரும் மக்கள்கிட்ட பணம் பறிக்கக்கூடாதுன்னு நடிகர்கள்தான்.

ஆன்னா ஊண்ணா ரசிகர்கள் காசுலதான் சினிமாக்காரங்க வாழுறாங்க.. ரசிகர்கள் இல்லைன்னா சினிமாக்காரனே இல்லைன்னு ஆரம்பிச்சிருவோம். இன்னிக்கு இருக்க நிலமையில ஒரு சில ஹீரோக்களத் தவிற, மக்களுக்கும் நடிகர்களுக்கும் இடையே உள்ள தொடர்பு ஒரு கஸ்டமருக்கும் சப்ளையருக்கும் இடையில உள்ள தொடர்புதான். இதுல நம்ம பெருசா அவங்கள வாழ வைக்கிறமாதிரியெல்லாம் நினைச்சிக்கிறது நம்மோட மன ப்ராந்தி தான்.

நடிகர் சங்க கட்டிடம் இவங்க நடிகர்கள்கிட்டயே வசூல் செஞ்சி கட்டுறதோ, இல்லை ஷோ நடத்தி வசூல் பன்னி கட்டுறதோ அவங்க விருப்பம். அந்த ஷோவ காசு குடுத்து பாக்குறதோ, மூடிக்கிட்டு வீட்டுல இருக்கதோ நம்ம விருப்பம். இதுக்காகவெல்லாம் அவங்கள அசிங்கமா திட்டுறது எப்படி இருக்குன்னா, நம்ம ஏரியாவுல உள்ள பீட்சா கடை ஓனர்கிட்ட போய் “ஏண்டா நானே காசில்லாம கஷ்டத்துல இருக்கேன்.. நீ ஏண்டா உன் கடையில பீட்சா விக்கிற?” ன்னு அவன் சட்டையப் புடிச்சி கேக்குற மாதிரி.


நல்லா சம்பாதிக்கிற  நமக்கு பரிட்சையமான முன்னணி நடிகர்கள் மட்டும் இல்லாம, டெய்லி பேட்டாவுக்காக மட்டும் நடிக்கும் எத்தனையோ துணை நடிகர்களைக் கொண்டது நடிகர் சங்கம். பெரிய நடிகர்களிடம் மட்டும் லட்சக் கணக்கில் நன்கொடை பெற்று கட்டிடம் கட்டி முடிப்பது எளிதான வேலையாகத்தான் இருக்கும். ஆனால் இந்தக் கட்டிடம் இவர்களால் மட்டும் கட்டப்பட்டது என்பது போலாகிவிடலாம். இதுபோன்ற நிகழ்ச்சிகள் மூலம் பணம் வசூல் செய்து கட்டிடம் கட்டும்போது அதில் எந்த தனிப்பட்ட நடிகரின் பெயரும் முன்னிலைப் படுத்தப்படாமல் அனைத்து நடிகர்களுக்குமான சம உரிமைக் கட்டிடமாக இருக்கும் என்ற எண்ணத்திலேயே இந்த முடிவு எடுக்க்கப்பட்டிருக்கலாம்ங்குறது என்னோட ஊகம். 


LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...