சில வருடங்களுக்கு முன்னர் அஜித் மற்றும் விஜய்யின் படங்களை பார்க்கும் பொழுது, அஜித்தின் படங்கள் பெரும்பாலும் பார்வையாளர்களை எந்த வகையிலும் திருப்தி படுத்தாத திரைப்படங்களாக வரும். கதை, திரைக்கதை, காமெடி பாடல்கள் என எல்லாமே சுமார் ரகமாகவே அமையும்.நட்புக்காக படம் நடித்தேன், இளம் இயக்குனர்களை ஊக்கப்படுத்துவதற்காக படம் நடித்தேன் என அஜித் தரப்பில் ஏதேதோ காரணங்கள் இருக்கும். அதே நேரத்தில் வந்த விஜய் படங்களில் இவை அனைத்துமே நன்றாக அமைந்திருக்கும். வணிக ரீதியாகத் தோல்வியடைந்த படங்களில் கூட பாடல்களிலோ, சண்டைக்காட்சிகளிலோ அல்லது காமெடிக் காட்சிக்களிலோ எதோ ஒரு வகையில் பார்வையாளர்களை ஓரவிற்காவது திருப்திப் படுத்தும் படங்களாக விஜய் படங்கள் அமையும்.
ஆனால் கடந்த ஓரிரு வருடங்களை பார்க்கும்போது அந்த சூழல் அப்படியே உல்டாவக நடந்து கொண்டிருப்பது போலத் தோன்றுகிறது. இப்போது அஜித் வருடத்திற்கு ஒரு படம் என்றாலும் கொஞ்சம் ரசிகர்களை மனதில் கொண்டு கதைகளையும் காட்சிகளையும் தெரிவு செய்து நடிக்கிறார்.இப்போது அஜித் படத்தில் பாடல்கள் கூட நன்றாக இருக்கிறது. ஆனால் விஜய் இப்போது ரிவர்ஸில் போய்க் கொண்டிருக்கிறார்.
கடந்த சில வருடங்களில் வெளிவந்த விஜய் படங்களில் மிக மிக மோசமான, தரமில்லாத ஒரு படைப்பு என்றால் இந்த பைரவாதான். இது கொஞ்சம் மிகைப் படுத்தல் போலத்தோன்றினாலும் உண்மை இதுவே. பாடல்கள், காமெடி, ஆக்ஷன் எந்த வகையிலும் கொஞ்சம் கூட திருப்தியளிக்காத ஒரு படம்.
SPOILER ALERT : மேலும் படிச்சா படம் பாக்கலாம்னு இருந்தவங்க மூடு வேண ஸ்பாயில் ஆக வாய்ப்பு இருக்கு. மத்தபடி படம் பாக்குறப்போ இந்த விமர்சனத்தால எந்த பாதிப்பும் இல்லை
மைம் கோபிக்கிட்ட பேங்கு மேனேஜரு Y.G.மகேந்திரன் 60 லட்ச ரூவா லோன் குடுத்துட்டு, திருப்பி வாங்க முடியாம கஷ்டப்பட்டுக்கிட்டு இருக்காரு. கொஞ்ச நாள் கழிச்சி மைம் கோபி பணம் தர்றேன்னு சொன்னதும் லோன் document எல்லாம் எடுத்துக்கிட்டு மைம் கோபி இடத்துக்கு போறாரு. அவரு ஒரு பையில பணத்த காமிச்சதும், உடனே ஒய்.ஜி கையில வச்சிருந்த லோன் பத்தரத்துலயெல்லாம்ம் “loan closed” ன்னு சீல் போட்டு ஸ்பாட்டுலயே குடுக்குறாரு.அத வாங்கி வச்சிக்கிட்டு மைம் கோபி பணம் குடுக்காம ஏமாத்த,. அந்த ரவுடிங்ககிட்டருந்து பணத்த வசூல் பன்ற வசூல் மன்னன் நம்ம பைரவா வர்றாப்ள.
நியாயமா பாத்தா “உனக்கு யாரு நாயே பேங்க் மேனேஜர் வேலை குடுத்தது”ன்னு YG மகேந்திரனத்தான் நாலு சாத்து சாத்தனும்.லோன் டாக்குமெண்ட்ட எடுத்துக்கிட்டு, அதுவும் லோன் வாங்குனவன் இடத்துக்கே போயி, முக்கு கடையில ரெடி பன்ன ஒரு ரப்பர் ஸ்டாம்புல சீல் வச்சா loan closed ஆம். எந்த காலத்துல இருக்காய்ங்கன்னே தெரியல. லோன் வாங்கி அதுக்கு காச கட்டி க்ளோஸ் பன்னவனுக்குதான் தெரியும் அதுல எத்தனை சிக்கல், எத்தனை டென்ஷன், எத்தனை கையெழுத்து, எத்தனை No dueன்னு.
கலெக்ஷன் ஏஜெண்டு வந்துட்டாப்ள. அவரு பாடிக்கும் கெட்டப்புக்கும் கொஞ்சம் கூட சம்பந்தமே இல்லாத Royan Enfield. அண்ணாவ அப்டிப் பாத்தவுடனேயே பாதிபேரு “பைரவா... நாங்க அப்டியே எந்திரிச்சி போயிறவா?”ங்குற ரேஞ்சில ரியாக்ஷன் விட ஆரம்பிச்சிட்டாங்க. அஜித்து ஆளு பல்க்கா இருக்காரு. புல்லட்டுல உக்காந்தா பாக்க நல்லாருக்கும். ஸ்லிம்மா இருக்க விஜய்க்கு இதெல்லாம் தேவையா?ராஜா ராணி சத்யராஜ் சொல்றமாதிரி அடுத்தவன் ஓட்டுறாங்குறாதுக்காக நாமளும் அதயே ஓட்டனும்னு இல்லை. மூடிக்கிட்டு நமக்கு செட் ஆகுற வண்டிய வாங்கி ஓட்டலாம். ஆளு வந்துட்டாப்ள. ஆனா எதோ ஒண்ணு குறையிதேன்னு பாத்தா விஜய் வந்து ரெண்டு நிமிஷம் கழிச்சி அவரோட விக்கு பின்னால வந்துக்கிட்டு இருக்கு. அதுவும் ஸ்லோமோஷன் காட்சிகள்னா அஞ்சி நிமிஷம் கழிச்சிதான் வருது.
வழக்கமா சவ சவன்னு போயிட்டு இருக்க வசனக் காட்சிகளுக்கு நடுவுல ஒரு fight வந்துச்சின்னா பாக்குறவங்களுக்கு ஒரு உற்சாகம் வரும். ஆனா ஒரு ஃபைட்டயே சீரியல் மாதிரி சவசவன்னு எடுத்துருக்கத நா முதல் தடவையா இப்பத்தான் பாக்குறேன். எப்படா அந்த கிரிக்கெட் ஃபைட்டு முடியும்னு ஆயிருச்சி.
இண்ட்ரோ சாங்கெல்லம் பாடி முடிச்சி கொஞ்ச நேரம் கழிச்சி வருது கீர்த்தி சுரேஷ். தொடரில வந்த மாதிரி கண்ட்ராவி ரியாக்ஷன்லாம் குடுக்காம இருக்கதால ஆளு சூப்பரா இருக்கு. திருநெல்வேலிலருந்து சென்னைக்கு கல்யாணத்துக்கு வந்த கீர்த்தி சுரேஷ விஜய் கரெக்ட் பன்ன முயற்சி பன்ன, இடையில ரவுடிங்க சில பேரு புகுந்து ஆட்டையக் கலைக்கிறாங்க.
விஜய்க்கு எதுவும் புரியாம, “நீ யாரு.. உனக்கும் இவங்களுக்கும் என்ன சம்பந்தம்?”ன்னு கேக்குறாரு. அந்தப் புள்ள சொல்லமாட்டேன்னு சொல்லுது. அப்பவே விஜய் விட்டுருக்கலாம். அதெல்லாம் முடியாது நீ சொல்லித்தான் ஆகனும்னு விஜய் அடம் புடிக்க, “காலைல ஒரு ஆறு மணி இருக்கும்…. கோழி கொக்கரக்கோன்னு கூவுச்சி”ன்னு கீர்த்தி சுரேஷ் ஆரம்பிக்க, ப்ளாஷ்பேக் ஆரம்பம். அரை மணி நேரமா அந்தப் புள்ளையும் ”அந்த மரம் இல்ல.. அந்த மரம்னு” தெய்வத்திருமகள் விக்ரம் மாதிரி அதே ப்ளாஷ் பேக்க சொல்லிக்கிட்டு இருக்க நமக்கு “இஹ்ஹ்ஹ்ஹ்…அப்ப சொன்ன அதே மரமா ”ன்னு வெறுத்துருது. ஏன்யா ஃப்ளாஷ்பேக்குக்கு ஒரு வரைமுறை வேணாமா.. எவ்வளவு நேரம்? தியேட்டர்ல எல்லாரும் இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமரா பசுபதி மாதிரி “யப்ப்பா.. போதும்டா டேய்”ன்னு ஆயிட்டானுங்க. ஒரு வழியா முக்கா மணி நேரம் ஓடுன ஃப்ளாஷ்பேக் முடிஞ்சதும் படக்குன்னு இண்டர்வல் விட்டுட்டாய்ங்க. டேய் என்னடா 1st half ல பத்தே நிமிஷம் மட்டும் விஜய்ய காமிச்சிட்டு இண்டர்வல் போட்டுட்டீங்க?
செகண்ட் “ஆப்பு”ல கீர்த்தி சுரேஷோட பகைய தன்னோட பகையா நினைச்சி திருநெல்வேலிக்கு போயி வில்லனோட சவால்லாம் விட்டு, நிறைய காமெடிகள்லாம் பன்னி வில்லன ஜெயிக்கிறாரு. திருப்பாச்சில கிராமத்துல இருக்க விஜய் இண்டர்வலுக்கப்புறம் சென்னைக்கு வந்து வில்லன் கூட சண்டை போடுறாரு. பைரவாவுல சென்னைல இருக்க விஜய் இண்டர்வலுக்கப்புறம் கிராமத்துக்கு போயி வில்லன்கூட சண்டை போடுறாரு. யார்ரா அது விஜய் ஒரே மாதிரி கதையில நடிக்கிறாருனு சொன்னது? பாத்தியல்ல change ah.
சதீஷ் மற்றும் தம்பி ராமைய்யா இருக்கிறார்கள். ரெண்டு பேருக்கும் சேத்தே ரெண்டு இடத்துல சிரிச்ச ஞாபகம். மருந்துக்கும் காமெடி இல்லை. தம்பி ராமைய்யா மூக்குல நைட்ரஸ் ஆக்ஸைட (N2O) வச்சி அவருக்கு சிரிப்பு காமிக்கிறாங்க. அதே நைட்ரஸ் ஆக்ஸைட தியேட்டர் ஏசிலயும் கொஞ்சம் கலந்து விட்டுருந்தா நாங்களும் கொஞ்ச நேரம் சிரிச்சிக்கிட்டு இருந்துருப்போம்.
சந்தோஷ் நாராயணன் இருக்க ஒரே பாட்ட அனைத்து ஃபைட்டுக்கும் போட்டு விட்டுருக்காப்ள. ”வேற ஸ்டாக் இல்லைய்யா.. வச்சிக்கிட்டா இல்லைங்குறாரு”. கமர்ஷியல் மசாலா படங்களுக்கு இசையமைக்க சந்தோஷ் நாராயணன் பொருத்தமான ஆள் இல்லை. இன்னும் பயிற்சி வேண்டும். குறிப்பா விஜய் படங்களுக்கு மியூசிக் போட.
கத்தி படத்துல அந்த டைம்ல இருந்த issues ah படத்துல பேசியிருந்தாரு விஜய். அந்தப் படம் வசூல் ரீதியா வெற்றி பெற்றதனாலயா என்னனு தெரில இதுலயும் இப்ப மெடிகல் ஸ்டூடண்ஸுக்காக போராடுராப்ள. ஒரே கருத்து தான். கத்தி படத்துல விஜய்யும் ஒரு விவசாயியாக, அந்த சூழல்லயே வாழ்க்கை நடத்தும் கேரக்ட்ராக இருந்ததால் அவர் உருக்கமா பேசும்போது வசனங்கள்லயும், காட்சிகள்லயும் ஒரு உயிரோட்டம் இருக்கும். ஆனா இங்க அண்ணனுக்கே கீர்த்தி சுரேஷ்தான் ஃப்ளாஷ்பேக் சொல்லுது. அதக் கேட்டு ஃபீல் ஆகி இவர் கோர்ட்டுல பீல் பன்னி பேசுறதுக்கெல்லாம் எந்த ரியாக்ஷனுமே வரமாட்டேங்குது. ”அம்மாவை பார்த்தவர்களைப் பார்த்தேன்” காமெடிதான் ஞாபகத்துக்கு வந்துச்சி.
விஜய் ஏதேதோ மாடுலேஷன்லாம் ட்ரை பண்ணி என்னவோ மாதிரி பேசுறாரு. காஸ்ட்யூம் இருக்கதுலயே ரொம்ப ஒர்ஸ்ட்டு. அதுவும் பட்டையக் கிளப்பு பாட்டு… அந்த கோட்டுக்கும், விக்குக்கும், ரிக்ஷாவுக்கும்… செம காம்பினேஷன். ஒரு சீன்ல “நாங்க பைரவ மூர்த்தி சாமிய கும்புடுறவங்க. உங்கள பாக்க அந்த பைரவ மூர்த்தி சாமியே நேர்ல வந்த மாதிரி இருக்குன்னு ஒரு வசனம் வருது. இது பைரவ மூர்த்தி சாமிக்கு தெரிஞ்சிதுன்னா “இஹ்ஹ்... நம்ம மூஞ்சி இப்புடியா இருக்கு... உடனே அடுப்புல வச்சி கருக்கிறனும்”ன்னு நினைச்சிருப்பாரு.
பரதன் அவருக்கு கிடைச்ச ரெண்டாவது வாய்ப்பையும் சிறப்பா நழுவ விட்டுருக்காப்ள. Script எழுதுறது ஒரு பக்கம் இருந்தாலும் எழுதுற ஸ்க்ரிப்ட இண்ட்ரஸ்டிங்கா படமாக்க ஒரு தனித் திறமை வேணும். அது பரதன்கிட்ட ரொம்ப ரொம்ப கம்மியா இருக்கு. இவரு எடுத்த முழுப் படத்தையும் ஹிரிகிட்ட குடுத்தா அதுல உள்ள மேட்டர் எல்லாத்தையும் ஒரு 20 நிமிஷத்துல காமிச்சிருவாரு. ஆனா இவரு ராதிகாவோட போட்டி போட்டு வாணி ராணி சீரியல் மாதிரி எடுத்து வச்சிருக்காரு.
மொத்தத்தில் இது விஜய் ரசிகர்களுக்கான படமே அல்ல. முழுக்க முழுக்க அஜித் ரசிகர்களுக்கான திரைப்படம்.
படத்துக்கு ஒரு தீவிர விஜய் ரசிகரோட போயிருந்தேன். படம் முடிஞ்சி வெளில வரும்போது அடுத்த ஷோ பாக்க ஆவலா இருந்த ஒருத்தன் அவர்கிட்ட படம் எப்புடி இருக்குன்னான். அதுக்கு அவரு “படம் சூப்பர்”ன்னுட்டு வந்தாரு.
அந்தப் பக்கம் ஓரமா வந்தப்புறம் “என்னங்க… மனசாட்சியே இல்லாம இப்டி சொல்றீங்க? உண்மைய சொல்லுங்க படம் நல்லாவா இருந்துச்சி?” ன்னேன்.
“நல்லா இல்லைதான்… ஆனா கேக்குறவன் கிட்டல்லாம் நல்லாருக்குன்னுதான் சொல்லுவேன்” ன்னாரு.
“ஒரு வேளை நீங்க நல்லா இருக்குன்னு சொன்னவன் படம் பாத்துட்டு வந்து உங்க சட்டையப் புடிச்சான்னா?”
“அதுக்கும் ஒரு வழி இருக்கு… அப்புடி அவன் கேக்கும்போது எனக்கு படம் புடிச்சிருக்கு. உனக்கு புடிக்கலன்னா நா என்ன பன்றது. உன் டேஸ்ட்டு இவ்வளவு கேவலமா இருக்கும்னு நா நினைக்கவே இல்லை அப்டின்னு அவனப் பாத்து ஒரு கேவலாமான லுக்க விட்டோம்னா அவனும் சைலண்ட் ஆயிருவான். ஒருவேளை நம்ம டேஸ்ட்தான் சரியில்லையோன்னு அவனுக்கே சந்தேகம் வந்துரும். அதுமட்டும் இல்லாம அவனும் யாருகிட்டயும் படம் நல்லா இல்லைன்னு சொல்லமாட்டான்”ன்னு ஒரு பெரிய லாஜிக் சொல்லி முடிச்சார்.
“என்னஜி இதெல்லாம்” ன்னேன்
“Professional Ethics” ன்னு சொல்லிட்டு புன்னகையுடன் விடைபெற்றார் அந்த விஜய் ரசிகர்..