கடந்த வெள்ளிக்கிழமை வெளியான படங்களை மூணே நாட்கள் மட்டும் ஓட்டிட்டு, அந்தப் படங்களின் தயாரிப்பாளர்கள் எக்கேடு கெட்டு வேண்டுமானாலும் போகட்டும்ன்னு நட்டாத்துல விட்டுட்டு அனைத்து திரையரங்கங்களும் வரி உயர்வைக் கண்டித்து திங்கட்கிழமை முதல் போராட்டத்தில் குதிச்சி, கலைஞர் இருந்த மூணு மணி நேர உண்ணாவிரதம் மாதிரி அடுத்த வெள்ளிக்கிழமைக்குள்ள போராட்ட்த்த வாபஸ் வாங்கியாச்சு. இது ஒருபக்கம் இருக்க திரையரங்க, டிக்கெட் விலையை ரூ.200க்கு உயர்த்திக்கொள்ள அனுமதி வேண்டி திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பா தமிழக அரசிடம் அனுமதியும் கோரப்பட்டிருக்கு.
ரெண்டு நாள் முன்னால வெளியான ஒரு செய்திக்குறிப்புல திரையரங்க உரிமையாளர்கள் சார்பா ஒருவர் தொலைக்காட்சிக்கு பேட்டியளிக்கிறாரு. “நாங்க 200 ரூபாய்க்கு டிக்கெட் விலை விற்பனை செய்துகொள்ள தமிழக அரசிடம் அனுமதி வேண்டியிருக்கோம். எல்லா திரையரங்கங்கள்லயும் இனிமே கம்ப்யூட்டர் பில்லே குடுக்க ஏற்பாடு செய்யிறோம். எந்த ஹீரோ படம் வந்தாலும் அந்த 200 ரூவாய்க்கு மேல நாங்க டிக்கெட் விலைய ஏற்ற மாட்டோம்” அப்டின்னு பேட்டி குடுக்குறாரு.
அதாவது இதுக்கு முன்னால நாங்க டிக்கெட்டுல பத்து ரூவான்னு ப்ரிண்ட் பன்னி அத நூறு ரூவாய்க்கு வித்துகிட்டு இருந்தோம்.. அத இனிமே செய்ய மாட்டோம். பெரிய ஹீரோ படங்கள்லாம் வரும்போது நாங்க டிக்கெட் விலைய ஏத்தி விப்போம். அதயும் இனிமே செய்ய மாட்டோம்னு அவங்க வாயாலயே குடுத்த மறைமுக ஒப்புதல் வாக்குமூலம்தான் இது.
இதுக்கு முன்னால பத்து ரூபா பதினைஞ்சி ரூபாய் டிக்கெட்டுன்னு அரசாங்கத்துக்கு கணக்கு காமிச்சி கம்மியா வரி கட்டிக்கிட்டு இருந்த திரையரங்க உரிமையாளர்களுக்கு, இந்த GST யின் அதிரடி வரி உயர்வின் மூலமா அதை சமாளிக்க முடியாதுன்னு முடிவு செஞ்சி களத்துல குதிச்சிட்டாங்க.
சென்னையைப் பொறுத்த அளவு திரையரங்கங்களோட நிலையே வேற. டிக்கெட் விலை நூத்தி இருபதா இருந்தாலும் சரி, இருநூறா இருந்தாலும் சரி, ஐநூறா இருந்தாலும் சரி. பாக்குறதுக்கு ஆள் இருக்கு. கண்டிப்பா இருக்கும். ஆனா “சி” செண்டர் எனப்படும் சிறு நகர திரையரங்கள் ரொம்ப பரிதாபமான நிலையிலதான் இருக்கு.
சிறு நகரத் திரையரங்குகள்ல படம் பார்ப்பவர்களோட எண்ணிக்கை நாளுக்கு நாள் கணிசமான அளவுல குறைஞ்சிக்கிட்டே வருது. உதாரணமா கடந்த ரெண்டு மாசத்துல படம் ரிலீஸான முதல் வாரக் கடைசியில பட்டுக்கோட்டையிலுள்ள திரையரங்கங்கள்ல நான் பார்த்த படங்கள் குற்றம் 23, சிவலிங்கா மற்றும் போங்கு. இந்தப் படங்களுக்கு எங்களையும் சேத்து திரையரங்கத்துல இருந்தவர்களோட எண்ணிக்கை முறையே 18, 30, 15.
600 பேர் உட்காரக்கூடிய ஒரு திரையரங்கத்துல வெறும் 15 பேர உக்கார வச்சி ஒரு காட்சி ஓட்டுனா, ஒரு திரையரங்கத்துக்கு என்ன லாபம் கிடைக்கும்? அதுலயும் அந்தப் பதினைஞ்சி பேர்ல ஒருத்தன் ஏசி போடலன்னு வேற சலிச்சிக்குவாரு. ஏசிய விடுங்க… ஃபேன் போட்டுவிட்டா கூட பதினைஞ்சி பேர்கிட்டருந்து வர்ற கலெக்ஷன் அந்த கரண்ட் பில்லுக்கே கட்டாது. விஜய், அஜித் படங்களுக்கு மட்டும் நாம தியேட்டருக்குப் போய் “டேய்.. இவன் 6 ரூவான்னு டிக்கெட்டுல போட்டு நமக்கு 150 ரூவாய்க்கு வித்து லாபம் சம்பாதிக்கிறாண்டோய்”ன்னு ஆதங்கப்படுவோம். ஆனா மத்த படங்களுக்கும் போய் பாத்தாதான் தெரியிது அவங்க இன்னும் தியேட்டர் நடத்திக்கிட்டு இருக்கதே பெரிய விஷயம்னு.
உண்மைய சொல்லப்போனா ரஜினி, அஜித், விஜய் படங்கள் ரிலீஸாகும் முதல் இரண்டு மூண்று நாட்களத் தவற மற்ற எந்த நாள்லயும், எந்த ஹீரோவுக்கும் அரங்கு நிறைந்த காட்சிகள இப்பல்லாம் சி செண்டர்கள்ல பார்க்கவே முடியிறதில்லை. தமிழ்நாட்டுல எப்படா ரிலீஸாகும்னு எல்லாரும் ஆவலா காத்துக்கிட்டு இருந்த படம் விஸ்வரூபம். அந்தப் படத்தோட முதல் நாள் இரவு 10 மணி காட்சிக்கு கவுண்டர்ல நிக்கிறேன். ஒன்பதே முக்கால் வரைக்கும் என்னைத் தவற யாரயுமே காணும். அப்புறம் ஒவ்வொன்னா வந்து மொத்தம் ஒரு நாற்பது பேர் சேந்தாங்க. ரொம்ப சங்கடமா போச்சு அன்னிக்கு.
ஒரு காலத்துல தியேட்டருக்குப் போனா டிக்கெட் கிடைக்குமாங்குற கேள்வி இருக்கும். டிக்கெட் கிடைக்காம படம் பாக்காம திரும்பிப்போறவங்க எத்தனையோ பேர் இருப்பாங்க. சரத்குமார் படம், அர்ஜூன் படம், ப்ரபு படம், சத்யராஜ் படம்னு எல்லாரோட படமும் சூப்பரா ஓடுனது ஒரு காலம். ஆனா கடந்த 5 ஆண்டுகள்ல முண்ணனி நடிகர்கள் அல்லாத ஒரு நடிகரோட படம் சி செண்டர்ல சூப்பரா ஓடுனுச்சின்னு நம்மாள சொல்ல முடியுமா?
மற்ற மாநிலங்களோட ஒப்பிடும்போது தமிழ் நாட்டுலயும் ஆந்த்ராவுலயும்தான் சினிமாவ விரும்பிப் பார்க்கும் ரசிகர்கள் அதிகம். அப்படி இருந்தும் ஏன் மக்கள் இப்ப திரையரங்கங்கள நாடுறதில்லை? அதுக்கு டிக்கெட் விலைதான் காரணம்னு நினைச்சா நிச்சயம் இல்லை. டிக்கெட் விலையும் காரணாமா இருக்கலாம். ஆனா அது கடைசிக் காரணமாத்தான் இருக்கும். அதுக்கு முன்னால பல காரணங்கள அடுக்கலாம்.
முதல்ல மக்கள திரையரங்குகள்லருந்து தனிமைப் படுத்த ஆரம்பிச்சது திருட்டு விசிடி. ஒருவருக்கு 70-80 ரூபா செலவு செஞ்சி தியேட்டர்ல பாக்குறதுக்கு வெறும் 30 ரூவாய்க்கு ஒரு டிவிடி வாங்குனா மொத்தக் குடும்பமும் பாத்துடலாம்ங்குற ஒரு மனப்பாங்க மக்கள்கிட்ட ஆரம்பிச்சி வச்சது இந்த திருட்டு விசிடிக்கள்.
அடுத்த காரணம் எலெக்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் துறையின் அபாரமான வளர்ச்சி. டிவிடிக்கள் பரவலாக உலா வர ஆரம்பிச்சாலும் எல்லோர் வீட்டிலும் டிவிடி ப்ளேயர்கள் அப்பல்லாம் இருக்கல. அப்படியே இருந்தாலும் ஒரு டிவிடிய வாங்கி அத ப்ளேயர்ல போட்டு ஸ்ட்ரக் ஆகாம ஒரு படத்த பாத்து முடிக்கிறது சாதாரண விஷயம் இல்லை. ஆனா அதயும் சரி செய்ய அடுத்து வந்துச்சி பென் ட்ரைவ் கலாச்சாரம். பென் ட்ரைவ்ல படத்த ஏத்திட்டா கொஞ்சம் கூட ஸ்ட்ரக் ஆகாம எத்தனை தடவ வேணாலும் பாக்கலாம். அடுத்து ஸ்மார்ட் ஃபோன் வந்துச்சி. Android la Share it அப்ளிகேஷன் வந்துச்சி. அவ்ளோதான். பென் ட்ரைவும் தேவைய்யில்ல.. டிவிடி ப்ளேயரும் தேவையில்லை. ஒரே ஒரு ஃபோன்ல டவுன்லோட் பன்னிக்கிட்டா ஊர்ல உள்ள அத்தனை பேருக்கும் படத்த சப்ளை பன்னிடலாம். இதுல ஜியோ வேற உள்ள புகுந்து இருந்த கொஞ்ச நஞ்ச வழியையும் அடைச்சிட்டான்.
அடுத்த மிக முக்கியமான காரணம் கேபிள் டிவி லோக்கல் சேனல்கள். திரையரங்குகள் அழிஞ்சதுக்கும், இன்னும் அழியப் போறதுக்கு மிக முக்கியப் பங்கு இந்த லோக்கல் சேனல்களுக்கு உண்டு. படம் ரிலீஸாகி ஒரே மாசத்துல சில சமயங்கள்ல அதுக்கு முன்னால கூட நல்ல குவாலிட்டியான பிரிண்ட்ட அவங்க சேனல்ல ஒளிபரப்பி ஒவ்வொரு வீட்டுக்குமே கொண்டு சேர்க்குறாங்க. ஸ்மார்ட் ஃபோனும் தேவையில்ல. இண்டர்நெட்டும் தேவையில்ல. 150 ரூவாய்க்கு கேபிள் கனெக்ஷன் இருந்தா போதும். எல்லா படங்களையும் வெளியான ஒரே மாசத்துல பாத்துடலாம். இவங்களுக்கெல்லாம் படத்த ஒளிபரப்ப யார் அனுமதி கொடுக்குறது? ஏன் புதிய திரைப்படங்களை ஒளிபரப்புற லோக்கல் சேனல்கள் மேல எந்த ஆக்ஷனும் எடுக்க மாட்டேங்குறாங்கங்குறது ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம். சென்னையில திரையரங்கள் ஒழுங்கா செயல்படுறதுக்கு முக்கியக் காரணம் இங்க லோக்கல் சேனல்கள் இல்லாததே.
அடுத்த காரணம் புதிய இயக்குனர்கள் வரவால தமிழ் சினிமாவின் பாதையில் ஏற்பட்ட மாற்றம். தமிழ்சினிமாவுக்குன்னு ஒரு பாணி இருக்கு. சினிமாத்தனம் அதிகம் கலந்த சினிமாதான் நம்ம ஊரு சினிமா. அவ்வப்போது ஒண்ணு ரெண்டு படங்கள் அந்த சினிமாத்தனத்திலிருந்து தப்பிச்சி வெளிவரும். அப்படிப்பட்ட படங்களும் மக்கள் கிட்ட நல்ல வரவேற்பை பெறத்தான் செஞ்சிது. ஆனா இப்ப இருக்க இளம் தலைமுறை இயக்குனர்கள் ஒரே அயல்நாட்டுப் படங்களா பாத்து பாத்து, அதே பாணி படங்களை நம்ம மக்களுக்கும் திணிக்க முயற்சி செஞ்சிக்கிட்டு இருக்காங்க. பெருநகர மக்களிடம் அதுமாதிரி படங்கள் வரவேற்பைப் பெற்றாலும், சிறு நகரங்கள்ல மக்கள் மேலை நாட்டு பாணி படங்களுக்கு ஆதரவு நிச்சயம் கிடைக்கிறதில்லை.
இந்தக் காரணங்களையெல்லாம் தாண்டி கடைசியா வேணும்னா டிக்கெட் விலைய ஒரு காரணமா எடுத்துக்கலாம். இப்ப ”டிக்கெட் விலைய ஏத்திட்டாங்கடா.. நா தியேட்டருக்கு போகமாட்டேண்டா”ன்னு கூவுறவங்கட்ட இதுக்கு முன்னால டிக்கெட் கம்மியா இருந்தப்போ தியேட்டர்ல எத்தனை படம் பாத்த?ன்னு கேளுங்க… சைலண்ட் ஆயிருவாங்க. ”நம்ம எப்பவுமே தியேட்டருக்கு போறதில்லை பாஸ்… எவன் டைம வேஸ்ட் பன்னிக்கிட்டு.. காசு செலவு பன்னிக்கிட்டு… நமக்கு தமிழ் ராக்கர்ஸ் இருக்கு” ன்னு சொல்ற சிலரோட முகத்துல ஒரு பெருமிதம் தெரியும் பாருங்க. அதாவது மத்தவன் வீணா செலவு பன்னிட்டு இருக்கப்போ தான் மட்டும் புத்திசாலித்தனமா காச மிச்சப்படுத்திட்ட ஒரு பெருமிதம்.
சினிமாங்குறது ஒரு கலை. அந்தக் கலையை முழுமையாக உணரவும் ரசிக்கவும் திரையரங்கங்கள் தேவைப்படுது. இன்னும் சிம்பிளா சொல்லனும்னா சாமிய வீட்டுல கும்புடுறதுக்குக்கும் கோயிலுக்குப் போய் கும்புடுறதுக்கும் உள்ள வித்யாசம்தான் சினிமாவ வீட்ல பாக்குறதுக்கும் திரையரங்கத்துல பாக்குறதுக்கும் உள்ள வித்யாசம். மேலும் சினிமாங்குறது ஒரு அத்யாவசியம் இல்லை. நம்மள ரிலாக்ஸ் பன்னிக்கிற ஒரு பொழுதுபோக்குன்னு உணரனும். ”பாகுபலிய நீங்க பாக்குறதுக்கு முன்னலயே டவுன்லோட் பண்ணி நா பாத்துட்டேன் பாஸ்” ன்னு பெருமையா சொன்ன ஆட்கள் இருக்காங்க. “2.0 ரிலீஸ் ஆகும் அன்றே தமிழ் ராக்கர்ஸில் பார்ப்போம்”ன்னு சவால் விடுறானுங்க சிலர். பாத்தா பாத்துக்க. அதுனால உனக்கு என்ன கெடைக்க போவுது?
இப்படி திரைப்படங்கள் ஓடாததுக்கும், திரையரங்கிற்கு மக்கள் செல்லாத்துக்கும் எத்தனையோ முதன்மைக் காரணங்கள் இருக்கு. அப்படியிருக்க டிக்கெட் விலை 500 ஆனாலும் சென்னையில கூட்டம் குறையாது. டிக்கெட் விலை 30 க்கு வித்தாலும் சிறு நகரங்கள்ல கூட்டம் கூடாது. எதனால திரையரங்குகள் நலிவடைஞ்சி வருதுன்னு முறையான காரணங்கள அலசாம, பர்மா பஸார்ல உள்ள கடையில 50 திருட்டு டிவிடிக்கள பறிமுதல் செஞ்சிட்டா தமிழ் சினிமா வீறு கொண்டு எழுந்துரும்னு திரைத்துறையிலயே நிறைய பேர் நம்பிக்கிட்டு இருக்காங்க.