Tuesday, July 17, 2018

தமிழ்ப்படம் 2.0!!!!


Share/Bookmark

தமிழ்ப்படம் அப்டிங்குற படத்துல எத்தனையோ பேர் வேலை பாத்துருந்தாலும் நமக்கு ஞாபகம் வர்ற ரெண்டே பேரு  சிவாவும், இயக்குனர் சி.எஸ் அமுதனும் தான். இவங்க ரெண்டு பேருக்குமே கடைசியா ஓடுன படம் தமிழ்ப்படம் தான். சி.எஸ் . அமுதனுக்கு அதுக்கப்புறம் படமே இல்ல.. சிவாவுக்கு படம் இருந்தாலும் அது உருப்படியா இல்ல. அப்படியிருக்க சூழல்ல இவங்க ரெண்டு பேரும் மறுபடியும் இணைஞ்சி தமிழ்ப்படம் 2.0 ஆரம்பிச்சாங்க. சி.எஸ் அமுதன் தமிழ்ப்பட்த்துக்கப்புறம் ரெண்டாவது படம்னு ஒண்ணு ஆரம்பிச்சாரு. ஆக்சுவலா அதுதான் அவரோட ரெண்டாவது படமா இருந்துருக்கனும். சிலப்பல ப்ரச்சனைகளால அது ரிலீஸாகமப் போக இப்ப தமிழ்ப்படம் 2,0 அவரோட ரெண்டாவது படமா ஆயிருச்சி. ஆனாலும் நா எடுத்து ரெண்டாவது படம் என்னோட மூணாவது படமா கூடிய சீக்கிரம் ரிலீஸ் ஆகும் அப்டின்னு சமீபத்துல அமுதன் தெரிவிச்சிருக்காரு. எது பட்த்தோட பேர மூணாவதுபடம்னு மாத்துவாங்களான்னு கேக்குறீக்களா.. அது அவங்கட்டதான் கேக்கனும். இப்ப இந்த தமிழ்ப்படம் 2.0 எப்டி இருக்குன்னு பாக்கலாம்.

முதல் பாகத்துல தமிழ்சினிமாவோட டெம்ளேட் காட்சிகளயும் க்ளீஷே காட்சிகளையும் கிண்டலடிச்சவங்க இந்தப் பட்த்துல ஒவ்வொரு படம் வாரியா, ஒவ்வொரு கட்சி வாரியா இன்னும் சொல்லப்போனா ஒவ்வொரு ஆட்கள் வாரியான்னு மானாவாரியா கலாய்க்க முயற்சி பன்னிருக்காங்க. ஆனா இது முழுமையா ஒர்க்கவுட் ஆயிருக்கான்னு கேட்டா ஒரு 50% தான் ஒர்க் அவுட் ஆயிருக்கு. மீத 50% ரசிகர்களோட பொறுமைய சோதிக்கிது.

வீடியோ விமர்சனம்நம்ம நல்லா மனம் விட்டு சத்தம் போட்டு சிரிக்கிற மாதிரி நிறைய காட்சிகள் இருக்கு., நடிப்பே வராத சிவாவோட அந்த இன்னோசெண்டான நடிப்பு, அவரோட டயலாக் டெலிவரின்னு அந்த கேரக்டருக்கு அவரத் தவற கண்டிப்பா வேற யாரயும் நினைச்சி கூடப் பாக்க முடியல.  முதல் பாகத்துல வில்லன் பேரு D ன்னு இருந்தா மாதிரி ரெண்டாவது பார்ட்ல வில்லன் பேரு P. அதவச்சே கொண்ணு எடுத்துருக்கானுங்க. சில இட்த்துல டேய் அருவருப்பா வருதுடா ச்சைன்னு நினைக்கிற அளவுக்கு அந்தப் பேர வச்சி வெளுத்துருக்காங்க. அதே மாதிரி வில்லன் சதீஷ் ஒவ்வொரு சீன்லயும் ஒவ்வொரு கெட்டப்புல வர்றாரு. அதுலயும் 2.0 அக்‌ஷ்ய் குமார் கெட்டப் அல்டிமேட். அப்புடியே இருந்தாரு. 

படத்துல கடுப்பேத்துற மாதிரி இருந்த விஷயங்கள் என்னான்னு பாத்தா என்னதான் இது ஒரு ஸ்ஃபூப் படம்னாலும் படம் பயணிக்கிறதுக்கு ஒரு தெளிவான கதை வேணும். அது சத்தியமா இல்ல. ஒவ்வொரு காட்சிக்கும் இடையில கண்டினியுட்டி இல்ல. எதோ பிட்டு காமெடு பாக்குற மாதிரியான ஒரு ஃபீல் தான் வருது.

அப்புறம் எல்லா விஷயத்தையும் கிண்டல் பன்ன்னும் எல்லாரையும் உள்ள கொண்டு வரனும்னு முடிவு பன்னி இவங்க சொருகிருக்க சில கேரக்டர்கள் சில காட்சிகள் ரொம்ப எரிச்சலூட்டுது. சரி எல்லாத்தையும் கலாய்க்க நினைச்சது சரி.. கலாய்க்கனும்ல.. அதப்பன்னல. பெரும்பாலன விஷயங்கள ரிப்பீட் தான் பன்னிருக்காங்க.

உதாரணமா சிவா ஒரு ஒரு சீன்ல துப்பறிவாளன் விஷால் கெட்டப்புல வருவாரு. ஆனா ஒண்ணும் பன்னமாட்டாரு. சிரிப்பும் வராது. சின்னம்மா சமாதில சத்தியம் பன்னத எடுத்து வச்சிருக்கோம். அதுல என்ன காமெடி இருக்கு? சின்னம்மா நிலாவுல போய் சத்தியம் பன்ற அளவுக்கு அத ஃபோட்டோஷாப் பன்னி  நம்ம மீம் கிரியேட்டருங்க நம்மள குலுங்க குலுங்க சிரிக்க வச்சிருக்காங்க. திரும்ப அதயே எடுக்குறோம்னா அதயும் தாண்டி அதுல சிரிக்க வைக்கிற ஒரு விஷயம் இருக்க்கனும். இல்லை.  ஒரு சினிமா அப்டிங்கயில நாம பாக்காத சில விஷயங்கள காமிக்கனுமே தவிற நாம தினமும் ஃபேஸ்புக்குலயும், டிவிலயும் பாத்த விஷயங்கள திரும்ப காமிக்கிறது எப்டி சுவாரஸ்யமா இருக்கும்.

படத்துல பெரிய சொதப்பல் மியூசிக்கு. ஒரு பாட்டு கூட நல்லால்ல. நல்லாலாட்டியும் பரவால்ல. இந்த மாதிரி படத்துல இடையில பாட்டு வர்றது பயங்கர எரிச்சலா வருது. கஸ்தூரி ஒரு ஐட்டம் சாங்குக்கு ஆடிருக்காங்க. அந்தப் பாட்டு ஆரம்பிச்ச ஒரு 30 செகண்டுல தியேட்டரே காலி.. என்ன்னு பாத்தா எல்லாம் ரெஸ்ட் ரூம்ல போய் வாந்தி எடுத்துகிட்டு இருக்காய்ங்க. அவ்வளவு கண்றாவி அது.

சிவா எந்த அளவுக்கு படத்துக்கு ப்ளஸ்ஸோ அதே அளவு மைனஸூம் கூட. ஒரு சீன்ல சொல்லுவாரு உனக்காவது நடிக்காத்தான் தெரியாது. ஆனா எனக்கு நடிப்புன்னா என்ன்ன்னே தெரியாதும்பாறு. உண்மைதான். நல்லா வரவேண்டிய ரெண்டு மூணு சீன சிவா மொக்கை பன்னிவிட்டுருவாரு. வேதாளத்துல வர்ற அந்த அஜித் அழுதுக்கிட்டுருந்து சிரிக்கிற மாதிரி ட்ரான்ஸ்ஃபார்ம் ஆகுற சீன சூப்பரா பன்னிருக்கலாம். கண்றாவியா பன்னி வச்சிருக்காங்க.

நம்ம மக்கள மைண்டுல படம் வர்றதுக்கு முன்னாலயே இது ஒரு பங்கரமான காமெடிப்படம் அப்டிங்குற எண்ணத்த விதைச்சிட்டாங்க. அதனால தியேட்டருக்கு வந்த முக்கால்வாசிப் பேரு படம் எப்டி இருந்தாலும் இன்னிக்கு சிரி சிரின்னு சிரிச்சிட்டுதான் போறதுன்னு முடிவு பண்ணி வந்துருப்பாங்க போல. சும்மா சும்மா சிரிச்சிகிட்டு இருந்தாங்க. ஸ்டேட்டஸெல்லாம் பாத்தா கூட சிரிச்சி வயிரெல்லாம் வலிக்க ஆர்மபிச்சிருச்சி. நா இந்த மாதிரி சிரிச்சதே இல்ல… அப்டி இப்டியெல்லம் நிறைய கமெண்டுகளப் பாக்க முடிஞ்சிது. அந்த அளவெல்லாம் படத்துல சீன் இல்ல. சிரிக்க வைச்சிருக்காங்க நிறைய இடங்கள்ல. அதே அளவுக்கு அறுக்கவும் செஞ்சிருக்காங்க.

தமிழ்படம் முதல் பாகத்த நீங்க எப்ப பாத்தாலும் எங்க பாத்தாலும் சிரிப்பு வரும். ஆனா இந்தப் படம் தியேட்டர்ல கூட்ட்த்தோட பாத்தா மட்டும்தான் சிரிப்பு வரும்.. தமிழ்ராக்கர்ஸ் குருப்புக்க்கு கொஞ்சம் கஷ்டம் தான்,

மொத்தத்துல தமிப்படம் 2.0 சிரிக்க வைச்சிருக்காங்க. ஆனா குடுத்த பில்ட் அப்புக்கு ஒர்த் இல்லை.

Monday, July 9, 2018

அசுரவதம்!!


Share/Bookmark

ஒரு திரைப்படத்தின் முதல் காட்சியிலிருந்து கடைசி காட்சி வரை எந்த ஒரு தேவையற்ற இடைச்சொருகல்களும் இல்லாமல், எந்த இடத்திலும் சுவாரஸ்யம் குறையாமல், ரசிகரகளை ஒரு வித பதட்ட நிலையிலேயே வைத்திருப்பது மிகவும் கடினம். தமிழில் யாவரும் நலம், டிமாண்டி காலனி , மாயா என ஒரு சில படங்களை இந்த வகையில் சேர்க்கலாம். அப்படிப்பட்ட ஒரு திரைக்கதை அமைப்போடு வந்திருப்பதுதான் சசிகுமாரின் நடிப்பில் மருதுபாண்டியன் இயக்கிய அசுரவதம்.

வழக்கமான பழிவாங்கும் கதைதான். ஆனால் பெரிய சிக்கலான கதையமைப்பு இல்லை. நிறைய கதாப்பாத்திரங்கள் இல்லை. நான்கைந்து பணக்கார வில்லன்கள் இல்லை. ஹீரோயின்களுடன் டூயட் பாடிக்கொண்டே இரண்டு பாடல்களுக்கு இடைப்பட்ட இடைவெளியில் வில்லன்களை சொல்லி வைத்துக் கொல்லும் மாஸ் ஹீரோ இல்லை. ஒரு சிறிய மளிகைக் கடை வைத்திருப்பவர்தான் கதையின் வில்லன். அவரை கொல்லத் துரத்தும் ஒரு சாதாரண மனிதர் தான் ஹீரோ.

எந்த இடத்திலும் திரைக்கதை தொய்வடையாமல் விறுவிறுப்பாகச் செல்கிறது. பெரும்பாலும் ஒரு திரைப்படம் பார்க்கும்பொழுது பார்வையாளர்கள் கதாநாயகனின் கோணத்திலிருந்தே படத்தை நோக்குவார்கள். அதாவது நாயகன் மகிழ்ச்சியாக இருந்தால் நாமும் மகிழ்ச்சியாக இருப்போம். கதையில் நாயகனுக்கு ஒரு சோகம் என்றால் நமக்கும் மனதுக்கு எதோ போல் இருக்கும். ஆனால் இந்த அசுரவதத்தில் ரசிகர்களை முழுவதும் வில்லனின் கோணத்திலிருந்து பார்க்க வைத்திருக்கிறார்கள். ”எப்போ எவன் எங்க குத்துவானோ… எப்போ எது கடிக்குமோ” என வில்லனுக்கு இருக்கும் அதே பதற்றம் பார்வையாளர்களாகிய நமக்கும் இருக்கிறது.

எப்பொழுது படம் விறுவிறுப்பாகச் செல்லும் என நாம் சில படங்களில் நினைப்பதுண்டு.. ஆனால் “யப்பா விறுவிறுப்பு போதும்… கொஞ்சம் நார்மலா ரெண்டு சீனு வைங்கப்பா.. ஒரு மனுசன் எவ்வளவு நேரந்தான் பதட்டமாவே உக்காந்துருக்கது” என நினைக்கும் அளவுக்கு ஆரம்பக்காட்சி முதல் இடைவேளை வரை இடைவிடாத விறுவிறுப்பு..

ஒரு சிம்பிளான கதையை இவ்வளவு சுவாரஸ்யமாகப் படம் பிடித்த்தற்காகவே இயக்குனரை எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம். இன்னும் குறிப்பிட்டு சொல்லவேண்டிய இரண்டு விஷயங்கள் கேமராவும், லைட்டிங்கும். முதல்பாதியில் பெரும்பாலான காட்சிகள் இரவில் படமாக்கப்பட்டிருக்கின்றன. காட்சிப்பதிவும், ஒவ்வொரு காட்சிக்கான லைட்டிங்கும் அருமை.

சசிகுமாருக்கு கருத்து சொல்லவது போல பக்கம் பக்கமான வசங்கள் எதுவும் இல்லை. அவர் திரையில் தோன்றி ஒரு15 நிமிடம் கழித்துத்தான் முதல் வசனமே பேசுகிறார். பழிவாங்கத்துடிக்கும் அந்தக் குரூரத்தை முகத்தில் அப்பட்டமாகக் காட்டியிருக்கிறார்.

சசிகுமாரின் முந்தைய படங்களினால் ஏற்பட்ட தாக்கத்தில் இந்த அசுரவதம் மக்களிடத்தில் எந்த வித பெரிய தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.  முதல் இரண்டு நாட்களில் கூட மிகப்பெரிய வரவேற்பு இல்லை. சமூக வலைத்தளங்களில் கூட படத்தைப் பற்றிய விமர்சன்ங்கள் பெரிதாக எதுவும் தென்பட வில்லை.

படம் வெளியான நான்காம் நாள் சென்னையிலுள்ள ஒரு திரையரங்கில் இரவுக்காட்சியில் இந்தப் படத்தைப் பார்த்தேன். தியேட்டரின் மொத்த இருக்கைகள் 420. படம் பார்த்தவர்கள் வெறும் 15. பரிதாபமாக இருந்தது. கிராமப்புறங்களிலெல்லாம் இன்னும் மோசம். Piracy கிட்டத்தட்ட தமிழ்சினிமாவை முக்கால்வாசி கொன்று விட்டது. மீதமிருக்கும் உயிரையாவது காப்பாற்றிகொள்வது உசிதம்.  

இன்னும் இரண்டு வாரம் கழித்து அமேசன் ப்ரைமில் படம் வந்த பிறகு ஒவ்வொருவராக வந்து “ஏம்பா இந்தப் படம் நல்லாதானே இருக்கு… ஏன் ஓடல?” என்று நிச்சயம் ஆரம்பிப்பார்கள்.  தியேட்டருக்கு போய் படம் பார்த்தால் தான் படம் ஓடும்.. அமேசன் ப்ரைமுக்காகவோ டோரண்டுக்காகவோ காத்திருந்தால் எப்படி படம் ஓடும்?

நீண்ட நாட்களுக்குப் பிறகு சசிகுமார் நடித்த  நல்ல திரைப்படம். நிச்சயம் பார்க்கலாம்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...