Friday, April 27, 2018

மறைந்திருக்கும் தங்க நகரமும் தேடிச்சென்று தொலைந்த நபர்களும்- பகுதி 3


Share/Bookmark



இந்தப் பதிவின் முதல் பகுதியைப் படிக்க இங்கே க்ளிக்கவும் இரண்டாவது பகுதியைப் படிக்க இங்கே க்ளிக்கவும் மூன்றாவது பகுதியைப் படிக்க எங்கேயும் க்ளிக்க வேண்டாம். தொடர்ந்து படிக்கவும்.

மியூஸ்கா இன மக்களின் விநோதமான வழிபாட்டு முறையும், தங்க மனிதனைப் பற்றிய செய்தியும் கொஞ்சம் கொஞ்சமாகப் பரவ, காலம் கடந்து மக்கள் விட்டு மக்கள் செல்லும் போது முதலில் தங்க மனிதனாக இருந்தது கொஞ்சம் கொஞ்சமாகத் திரிந்து தங்க நகரமாக உருவெடுத்தது

தேடுதல் வேட்டையில் ஈடுபட்டவர்களின் முதல் குறி கவுடவிடா ஏரி.. அதனைச் சல்லடை போட்டுச் சலித்தார்கள். கிடைத்தது மிகச் சொற்பமான தங்கமே. கொலம்பிய அரசு கவுடவிடா ஏரியைத் தடைசெய்யப்பட்ட பகுதியாக அறிவித்தது. ஆனாலும் தேடுதல் வேட்டை நின்றுவிடவில்லை.  மியூஸ்கா இன மக்கள் வாழ்ந்த இடமெங்கும் தேடத் தொடங்கினர். நாட்கள் செல்லச் செல்ல தங்க நகரம் இருப்பதாகக் கூறப்பட்ட பகுதியின் பரப்பளவும் அதிகரித்தது. அமேசான் காடுகள், கொலம்பியா, கயானா, வெனிசுலா, ப்ரேசிலின் வடக்குப் பகுதி என அனைத்துப் பகுதிகளிலும் தேடுதல் வேட்டை தொடங்கியது. இந்தத் தேடுதல் வேட்டையில் தங்கம் கிடைத்ததோ இல்லையோ புதுப் புது இடங்களைக் கண்டுபிடித்து மனிதர்கள் தேடியதில் வரைபடத்தில் இல்லாமல் இருந்த பல பகுதிகள் வரைபடத்தில் சேர்க்கப்பட்டன.

கிட்டத்தட்ட நானூறு ஆண்டுகளாக தங்க நகரம் என்ற ஒண்று உள்ளது எனத் தேடித் திரிந்தவர்கள், பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தங்கநகரம் என்பது ஒரு கட்டுக்கதையாகத் தான் இருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தனர்.

அந்த நிலையில் 1906இல் பிரேசில் மற்றும் பொலீவிய நாடுகளின் எல்லைகளை வரைபடமாக்கும் பணி நேஷனல் ஜாக்ரஃபிகல் சொசைட்டி எனும் நிறுவனத்திற்கு வழங்கப்படுகிறது. இரண்டு நாடுகளுக்கும் பொதுவான ஒரு நிறுவனமாக இருந்து அதன் எல்லைகளை வரைபடமாக்கிக் கொடுப்பதே இந்த நிறுவனத்தின் வேலை. இந்த நேஷனல் ஜாக்ரஃபிகல் சொசைட்டியின் சார்பாக அந்த வரைபடமாக்கும் பணியை மேற்கொண்டவர் பெர்சி பாசெட் என்பவர். சில ஆண்டுகள் ப்ரேசில் மற்றும் பொலீவிய எல்லைகளில் பயணித்து அதன் எல்லைகளை வரைபடமாக்கிக் கொடுத்தார் பாசெட்.

1906 முதல் 1924 வர மொத்தம் ஆறு முறை பயணம் மேற்கொண்டிருந்த  பாசெட், அந்தப் பயணத்தின்  போது தான் 60 அடி நீள அனகோண்டா பாம்பைக் கண்டதாகவும் அதனை சுட்டுக் கொன்றதாகவும் கூறியிருந்தார். அதேபோல் வகைபடுத்தப்படாத சில விநோதமான விலங்குகளையும், இரண்டு மூக்குகள் கொண்ட நாய்களையும்  அமேசான் காடுகளில் கண்டாதாக் கூறினார். ஆனால் பெர்சி பாசெட்டின் இந்த கூற்றுக்கள் பெரும்பாலானோரை நகைப்புக்குத்தான் உள்ளாக்கியது. பெர்சி பாசெட் கூறிய இரண்டு மூக்குகள் கொண்ட நாய் என்பது ”Double-nosed Andean tiger hound” என்பதாகத்தான் இருந்திருக்க வேண்டும் என சிலர் கருதினர்.

1910 இல் ”ஹீத்” ஆறு உருவாகுமிடத்தைக் கண்டறிய ஒரு  பயணம் மேற்கொண்டார் பெர்சி.  ஹீத் ஆரு உருவாகுமிடத்தில் மனித சமுதாயம் வாழ்ந்திருப்பதற்கான சில ஆதாரங்கள் பெர்சிக்கு கிடைத்தது. பெர்சி தனது பயணத்தின் முடிவில் இதனை சக அறிஞர்களிடம் கூற யாரும் அங்கு மனித சமுதாயம் வாழ்ந்தாக நம்பவில்லை. நம்பவும் தயாராக இல்லை.

பெர்சி தனக்கு கிடைத்த ஆதாரங்களையும், தான் பயணத்தின் போது கண்டவற்றையும் ஆதாரமாகக் கொண்டு ஒரு ஆராய்ச்சியைத் தொடங்கினார். பல நூல்குறிப்புகளில் ஆதாரங்களைத் திரட்டினார்.  தான் சேகரித்த தகவல்கள் மூலம் ஒரு மிகப்பெரிய தங்க நகரம் அமேசான் பகுதிகளில் மறைந்திருக்கிறது என்கிற முடிவுக்கு வந்தார். அதற்கு “Z” என்றும் பெயரிட்டார். மிகப்பெரிய மனித நாகரீகம் ஒண்று வாழ்ந்து மறைந்திருக்கலாம். அவர்கள் வாழ்ந்த பகுதியின் மீதமாக இந்த தங்க நகரம் இருக்ககலாம் எனவும் நம்பினார்.

மேலும் பெர்சியின் ஆய்வின் போது இன்னொரு முக்கியக் குறிப்பையும் கண்டறிந்தார். அது ஜோவா டா சில்வா க்யாமாரஸ் என்பர் எழுதிய Manuscript 512 எனும் நூற் குறிப்பு. அதில் அவர் தான் 1753ம் ஆண்டு தன்னுடைய பயணத்தின் போது பல நுழைவாயில்கள், சிலைகள், கோவிலகளைக் கொண்ட ஒரு இடிந்து போன நகரத்தைக் கண்டதாகக் குறிப்பிட்டிருந்தார். எந்தப் பகுதியில் கண்டார் என்பதைப் பற்றி எந்த விளக்கமும் இல்லை. பெர்சி தங்க நகரத்திற்குப் பிறகு பெர்சியின் அடுத்த இலக்கு இந்த நகரத்தைக் கண்டுபிடிப்பது தான்.

1920 இல் “Z” என்னும் தங்க நகரத்தைத் தேடி தனியாக ஒரு பயணத்தைத் தொடங்கினார். ஏற்கனவே பல முறை காடுகளில் வரைபடப் பணிக்காக சென்றதில் பல பழங்குடி இனத்தினரிடம் பெர்சிகு நல்லுறவு இருந்தது. ஆனால் உடல்நலம் கடுமையாகப் பாதிக்கப்பட்டதால் தங்க நகரத்தின் தேடுதல் வேட்டையை முழுமையாகத் தொடராமல் கைவிட்டார்.

அப்போது எஞ்சியிருந்த மியூஸ்கா இன மக்களைப் பொறுத்த வரை தங்கம் என்பது ஒரு விலை மதிப்பற்ற பொருளாக அவர்கள் கருதவில்லை. மாறாக அது அன்றாடம் புழங்கும், அடுத்தவர்களுக்கு வழங்கும் ஒரு பொருளாகவே அவர்களிடம் இருந்த காரணத்தினால் நிச்சயம் பெரிய அளவில் தங்கம் அவர்களிடம் புழங்கியிருக்க வாய்ப்பிருப்பதாகவும், தங்கநகரம் இருந்திருப்பதற்கான வாய்ப்புகள் அதிகமிருப்பதாக பெரும்பாலானோர் நம்பினர்.

பெர்சி தங்க நகரத்தைத் தேடி அடுத்த பயணம் செலவதற்கு தன்னை ஆயத்தப்படுத்திக் கொண்டிருந்தார். ஆனாலும் பல மாதங்கள் ஆய்வுப் பயணம் மேற்கொள்வது சாதாரண விஷயமல்ல. நிறைய பணமும், பொருட்களும் தேவை. 1925ம் ஆண்டு, லண்டனைச் சேர்ந்த ஒரு நிறுவனத்தின் உதவியுடன் தங்க நகரத்தைச் தேடும் பயணத்தை தனது மூத்த மகன் மற்றும் அவரின் நெருங்கிய நண்பர் ஒருவருடனும் தொடங்கினார்.

மேலும் ஒரு வேளை தான் இந்த பயணத்திலிருந்து திரும்பி வராவிட்டால் தன்னை தேடுவதற்காகவோ அல்லது மீட்பதற்காகவோ யாரையும் அனுப்ப வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்திருந்தார். காடுகளில் மாதக் கணக்கில் பயணம் என்பது எத்தகைய கொடூரமானது என்பதை தன்னுடைய முந்தைய பயண அனுபவங்கள் மூலம் அறிந்திருந்த பெர்சி, தான் படும் கஷ்டம் தன்னைத் தேடி வருபவர்கள் பட வேண்டாம் என நினைத்திருந்தார்.

பயணம் ஆரம்பித்த ஒரு மாதத்தில் தனது மனைவிக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். அதில் ”இதுவரை யாருமே கண்டறியாத, சென்றிருக்காத ஒரு இடத்தில் நாங்கள் மூவரும் நுழையப் போகிறோம்” என்று குறிப்பிட்டிருந்தார். கடைசியாக Dead Horse Camp எனும் இடத்தில் இருந்து தன்னுடைய இருப்பிடத்தைக் குறிப்பிட்டு ஒரு கடிதம் எழுதினார். அதுதான் பெர்சியிடமிருந்து கிடைத்த கடைசி கடிதம். அதன்பிறகு அவர்களைப் பற்றி எந்தத் தகவலும் இல்லை.  பெர்சியும் அவருடன் சென்ற இருவரும் என்ன ஆனார்கள் என்பதும் இன்று வரை மர்மமாகவே இருக்கிறது.

பெர்சி, அவர் தேடிக்கொண்டிருந்த தங்க நகரத்தை கண்டறிந்து அந்த மக்களுடனேயே தங்கிவிட்டார் என்று ஒரு கருத்து நிலவுகிறது. பெர்சியையும்  அவருடன் சென்றவர்களையும் பழங்குடியினர் கொன்றிருக்கலாம் எனவும் இன்னொரு கருத்து நிலவுகிறது. அல்லது பருவநிலை காரணமாக பயணத்தை தொடரமுடியாமல் வழியில் அவர்கள் இறந்திருக்கலாம் எனவும் ஒரு கருத்து உண்டு. அப்டியென்றால் அவர்களது உடல்கள் கிடைத்திருக்க வேண்டும். அதுவும் இல்லை. சில வருடங்கள் கழித்து கண்டெடுக்கப்பட்ட சில எலும்புத்துண்டுகள் பெர்சியுடையது என நம்பப்பட்டது. ஆனால் ஆய்வில் அது பெர்சியுடையது அல்ல என்பது நிரூபனமானது.



பெர்சி பாசெட்டின் இந்த பயணங்கள் The Lost City Of Z (2016) எனும் பெயரில் திரைப்படமாக வெளிவந்திருக்கிறது. உண்மைக்கதை என்றாலும் ஓரளவிறகு சுவாரஸ்யமாகவே படம் பிடிக்கப்பட்டிருக்கிறது. நேரமிருப்பவர்கள்  பார்க்கலாம்.

இந்த தங்க நகரத்தைப்பற்றிய ஏராளமான சுவாரஸ்ய தகவல்கள் இணையத்தில் கொட்டிக்கிடக்கிறது. El dorado எனத் தேடி அதிலிருந்து ஒவ்வொன்றாகப் படிக்க ஆரம்பித்தால் போய்க்கொண்டே இருக்கிறது. நேரமிருப்பவர்கள் ஆர்வமிருப்பவர்கள் படிக்கலாம்.
  



Monday, April 23, 2018

Bharath Ane Nenu - முதல்வன்!!!


Share/Bookmark


தெலுங்குப் படங்கள ரசித்துப் பார்த்த காலங்கள் போயி இப்பல்லாம் பொறாமைப் பட்டு பாக்குற காலம் வந்துருச்சி. இப்பல்லாம் தெலுங்கு படங்களம்ப் பாக்கும்போது தமிழ்ல இப்டியெல்லாம் எப்ப வரப்போவுதுங்குற கேள்விதான் மண்டைக்குள்ள ஓடிக்கிட்டுருக்கு. தமிழ்லயும் நல்ல ஸ்க்ரிப்டோட படங்கள் வருது.  ஒண்ணு ரொம்ப லோ பட்ஜெட்ல வந்து காணாமப் போயிருது. இல்ல தனி ஒருவன், விக்ரம் வேதான்னு ரெண்டு வருஷத்துக்கு ஒரு படம் வருது. ஆனா அங்க மூணு மாசத்துக்கு ஒரு சூப்பர் படம் ரிலீஸாகுது.

சுகுமார், கொரட்டலா சிவா, திரிவிக்ரம், போயப்பட்டி சீனுன்னு ஒரு மூணு நாலு இயக்குனர்கள் இருக்காங்க. ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு வகையில தெலுங்கு சினிமாவ அடுத்த லெவலுக்கு எடுத்துட்டு போயிட்டு இருக்காங்க. (ராஜமெளலிய அப்டியே நம்மளுக்கும் சேத்துக்குவோம்) வித்யாசமான கதைகளையும் கதைக்களங்கள்லயும் படம் எடுக்கக்கூடியவர் சுகுமார் (ரங்கஸ்தலம், ஆர்யா, நான்னக்கு ப்ரேமதோ). கொரட்டலா சிவா நச்சின்னு ஷார்ப்பான வசனங்களோட நேர்த்தியான கமர்ஷியல் சினிமா எடுக்கக்கூடியவர் (ஸ்ரீமந்துடு, ஜனதா கேரேஜ், பரத் அனி நேனு) . திரிவிக்ரம் கொஞ்சம் ஸ்டைலிஷான, மாஸ் மசாலா (அத்தாரிண்டிகி தாரெதி, S/o சத்யமூர்த்தி). போயப்பட்டி சீனுன்னா ஆக்‌ஷன் அன்லிமிட்டட். வெறித்தனமான புதுப் புதுப் புது சண்டைகளோட ரத்தக் களரியா எடுக்கக்கூடியவர். (சிம்ஹா, லெஜண்ட், சர்ராய்னோடு, ஜெய ஜானகி நாயகா).

பெரும்பாலும் இவங்க முன்னணி நாயகர்கள வச்சிதான் இயக்குறாங்க. எந்த வகைப் படங்கள் எடுத்தாலும் ஸ்க்ரிப்டையும், டெக்னிக்கலாவும் படத்த இம்ப்ரூவ் பன்றாங்களே தவிற தெலுங்குப் படங்களோட ஒரிஜினாலிட்டிய என்னிக்குமே விட்டுக்குடுக்குறதில்ல. எல்லா படங்கள்லயும் தெலுங்கு ஆடியன்ஸ் எதிர்பார்க்குற அத்தனை விஷயங்களும் இருக்கும். நம்மூர்ல மிஸ்ஸாகுறது அதுதான். மேற்கத்திய படங்கள்ல ஈர்க்கப்பட்டு படம் எடுக்க வரும் இளம் தலைமுறை இயக்குனர்கள் அத அப்டியே நமக்கு காமிக்கனும்னு எதிர்பார்க்குறாங்களே தவிற நம்முடைய ஒரிஜினாலிட்டிய எப்டி இன்னும் கொஞ்சம் இம்ப்ரூவ் பன்றதுன்னு பாக்க மாட்டேங்குறாங்க.

நம்மூர்ல நூறு கோடி நூற்றம்பது கோடின்னு படம் எடுத்து நடிகர்கள் சம்பளத்துல முக்கால்வாசி போயிட்டு மீதம் இருக்க பணத்துல ஏனோதானோன்னு எடுக்குறாங்க. தெலுங்குல வெறும் முப்பது கோடி நாப்பது கோடிம்பானுங்க. படத்துல ஒவ்வொரு ஃப்ரேமும் கண்ணுல ஒத்திக்கிற மாதிரி அப்டி இருக்கும். சரி விடுங்க. புலம்பத்தான் முடியும். ப்ரின்ஸ் மகேஷ்பாபு , ப்ரகாஷ்ராஜ், சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் எல்லாம் நடிச்சி கொரட்டலா சிவா இயக்கத்துல வந்த பரத் அனி நேனு எப்டி இருக்குன்னு பாக்கலாம்.

திண்ணையில இருந்தவனுக்கு திடுக்குன்னு வந்துச்சாம் கல்யாணம் அப்டிங்குற மாதிரி வெளிநாட்டுல படிச்சிட்டு இருக்க மகேஷ்பாவுக்கு ஓவர் நைட்டுல ஆந்திரா முதல்வர் ஆகுற வாய்ப்பு கிடைக்கிது. அந்தப் பதவிய எப்டி உபயோகிச்சி மக்களுக்கு நல்லது பன்றாருங்குறதுதான் கதை.

இன்னிக்கு இருக்க அரசியல் சூழல்ல கவனிச்சிட்டு இருக்க ஒருத்தனுக்கு, நம்ம நாட்டோட அவலங்கல பாத்து எதயாவது மாத்தனும்னு நினைக்கிற ஒரு இளைஞனுக்கு  பதவி கிடைச்சா அவன் எதயெல்லாம் மாத்தனும்னு ஆசைப்படுவானோ அதைத் தான் மகேஷ் பாபு செய்றாரு. சமுதாயத்துல இருக்க மக்கள் அனைவருக்கும் பயமும் பொறுப்புணர்ச்சியும் கட்டாயம் இருக்கனும் அப்டிங்குறதுதான் அவரோட தாரக மந்திரம்.

கொஞ்சம் ஸ்லோவா தொடங்குற படம் , மகேஷ் முதல்வரானவுனே டக்குன்னு பிக்கப்பாகுது. முதல் பாதி முழுக்க ஒரு சண்டைக்காட்சி கூட இல்ல. ஆனாலும் விறுவிறுப்புக்கு கொஞ்சம் கூட குறையல. ஒவ்வொரு சீனயும் அவ்ளோ பவர்ஃபுல்லாவும் , இண்ட்ரஸ்டிங்காவும் எடுத்துருக்காங்க.

சில வருஷங்கள் முன்னால ராணா டகுபதி நடிச்ச “லீடர்” ன்னு ஒரு படம் வந்துச்சி. கிட்டத்தட்ட அதோட அடுத்த வெர்ஷன் மாதிரிதான் இந்தப் படம. லீடர், சிவாஜி, முதல்வன்னு எல்லா படங்களையும் கலந்து பார்த்த ஒரு ஃபீல்

இன்னிக்கு சூழல்ல இருக்க அரசியல், மீடியான்னு அனைவருக்கும் இடி குடுக்குற மாதிரி காட்சிகளும் வசனங்களும். மகேஷ் மக்கள் ப்ரச்சனைகள சீக்கிரம் தீர்க்கனும்னு சொல்லும்போது ஒரு மூத்த அரசியல்வாதி சொல்வாறு “தம்பி நா 50 வருஷமா விவசாயிகளுக்காக போராடிக்கிட்டு இருக்கேன். அதனால தான் இன்னும் என்னால அரசியல்ல நல்லா வாழ முடியிது. நீ சொல்ற மாதிரி மக்களோட ப்ரச்சனைகளெல்லாம் ஒரே ராத்திர தீர்ந்துருச்சின்னா நாமல்லாம் எப்டி பொழப்பு நடத்துறது” ம்பாறு. 
  
மகேஷயும் அவரோட லவ்வரயும் பத்தி தப்பா எழுதுனதுக்கு ப்ரஸ் மொத்தத்தயும் கூப்டு வச்சி ஒரு கிழி கிழிப்பாரு பாருங்க. தரமான சம்பவம் அதெல்லாம். நம்ம விஜய்ணா இந்தப் படத்த ரீமேக் பன்றேன்னு ஃபர்னிச்சர உடைச்சிறாம இருக்கனும்னு மட்டும் வேண்டிக்குங்க. 

மொத்த ஸ்கிரிப்டையும் தூக்கி நிறுத்துறாரு மகேஷ். அந்த கலருக்கும், கெட்டப்புக்கும், அந்த ஸ்லாங்குக்கும், இங்கிலீஷ் பேசுற ஸ்டைலுக்கும் (வடிவேலு ஸ்லாங்குல படிக்காதீங்க) அள்ளுது.

மகேஷ் பாபு படத்துல மிகப்பெரிய ப்ரச்சனை என்ன்ன்னா அவருக்கு ஹீரோயின் செலெக்ட் பன்றது. எந்தப் புள்ளைய அவருக்கு ஜோடியா போட்டாலும் அவர  விட ஒரு இஞ்ச் கலரு கம்மியாவும், எவ்வளவு அழகா இருந்தாலும அவருக்கு பக்கத்துல சற்று டொம்மையாவும்தான் தெரியும். இதுலயும் புதுசா ஒரு பொண்ண போட்டுருக்காங்க. அவ்வளவு சிறப்புன்னு சொல்ல முடியாது. பரவால்ல. மூணு மணி நேரப் பட்த்துல ரொம்ப ரொம்ப சின்ன லவ் போர்ஷன் தான். அதயும் ரொம்ப சூப்பாரா எடுத்துருக்காங்க.

படத்தோட ரெண்டாவது பாதில முதல்பாதில இருந்த அந்த நேர்த்தி இல்லை. மாஸ் எலெமெண்ட்ஸ் சேர்க்கனும்னு கொஞ்சம் அப்டி இப்டி ஆயிருச்சி. அதுக்கும் மேல ஆரம்பிச்ச படத்த எப்டி முடிக்கிறதுன்னு தெரியாம சுத்தி சுத்தி எடுத்து. க்ளைமாக்ஸ் ஒரு கால் மணி நேரம் எக்ஸ்ட்ராவா ஓடுது. ப்ரகாஷ்ராஜ் எப்பவும் போல அசால்ட்டான நடிப்பு. சுப்ரீம் ஸ்டார் ஒரு சின்ன ரோல்ல நடிச்சிருக்காரு. ரவி கே சந்த்ரனோட ஒளிப்பதிவு செம.

முக்கியமான ஒரு ஆள மறந்துட்டோமே.. கபக் கபக் கப ஜல்ஸே… மகேஷ் பாபு ஒரு ஹீரோன்னா இன்னொரு ஹீரோ DSP… பாட்டும் சரி BGM உம் சரி பட்டையக் கிளப்பிருக்காரு. எனக்குத் தெரிஞ்சி DSP யோட Best BGM இந்தப் படத்துக்குதான். தெலுங்குல  கிங்கா இருந்தா DSP ய ஒரு ரெண்டு வருசம் முன்னால தமன் ஓரம்கட்டுனாரு. எங்க பாத்தாலும் தமன். அனைத்து புது ஹீரோக்களும் தமனத்தான் prefer பன்னாங்க. DSP க்கு படம்  கொஞ்சம் கம்மியாச்சு. ஆனா இப்ப திரும்ப அத்தனை முன்னணி ஹீரோக்களையும் தன் பக்கமே இழுத்துருக்காரு. முன்னடி மாதிரி ஒரே ட்யூன ஒரே படத்துல அஞ்சு மாதிரி போட்டுக்குடுக்காம இப்ப டியூன்ஸல்யும் நிறைய வேரியேஷன் காமிக்கிறாரு. பரத் அனி நேனுல வர்ற “ஒச்சாடைய்யோ சாமி” பாட்ட கடந்த பத்து நாள்ல எத்தனை தடவ திரும்பத் திரும்பக் கேட்டேன்னு எனக்கே தெரியல. கணக்கில்லாம ஓடிக்கிட்டுருக்கு.

மொத்தத்துல மகேஷ்பாவுக்கு ஒரு சின்ன சறுக்கலுக்கப்புறம் இந்தப் படம் ஒரு சூப்பர் ஹிட். கொரட்டலா சிவாவுக்கு தொடர்ச்சியான நாலாவது சூப்பர் ஹிட். மிஸ் பன்னாம பார்க்க வேண்டிய படம்.  


Sunday, April 22, 2018

மெர்க்குரி!!!!


Share/Bookmark



கார்த்திக் சுப்பராஜ் எனக்கு மிகவும் பிடித்த ஒரு இயக்குனர். ஒரு படம் ஹிட் ஆயிட்டா அதே ஃபார்முலாவுல வரிசையா பத்து படம் எடுத்து நம்மள கொன்னு எடுக்குற இயக்குனர்கள் மத்தியில, எல்லா வகை படங்களும் எடுக்கனும்னு நினைக்கிற ஒருத்தர். மூணு படம் எடுத்துருக்காரு. மூணுமே வேற வேற genre. பாலா படம்னா இப்டிதான்சார் இருக்கும்.. மிஷ்கின் படம்னா இப்டிதான் சார் இருக்கும்.. மணிரத்னம் படம்னா இப்டிதான் சார் இருக்கும். இதுமாதிரி நிறைய இயக்குனர்கள் அவங்களுக்குன்னு ஒரு அடையாளத்த உருவாக்கி வச்சிக்கிட்டு அத விட்டு வெளில வரமுடியாம சிக்கிட்டு இருக்காங்க.  நீ பாலா படம் வேணா எடு இல்ல மணி ரத்னம் படம் வேணா எடுநம்மள பொறுத்த அளவு நல்லாருக்கா இல்லையா அப்டிங்குறதுதான் மேட்டரு.  

இவரு இந்த மாதிரி படம்தான் எடுப்பாருங்குற அடையாளத்த விட இவர் எந்தப் படம் எடுத்தாலும் நல்லா எடுப்பாரு அப்டிங்குறதுதான் ஒரு நல்ல இயக்குனருக்கான அடியாளம். அந்த வகையில கார்த்திக் சுப்பராஜ் ஒரு நல்ல இயக்குனர். வசன்ஙகளே இல்லாம பிரபுதேவா மற்றும் சில புதுமுகங்கள வச்சி இல்லாம எடுத்துருக்க ஒரு படம்தான் மெர்க்குரி. இந்தப் படம் எப்டி இருக்குன்னு பாக்கலாம்.





வழக்கமா இந்த ஹாரர் படங்களுக்கு ஒரே டெம்ப்ளேட் தான். ஒரு அஞ்சி பேரு. அதுல ரெண்டு புள்ளைங்கஅந்த ரெண்டு புள்ளைங்கல்ல ஒண்ணு டவுசர் போட்டு மார்டனா இருக்கும், இன்னொன்னு  ரொம்ப மார்டனா இல்லாம கொஞ்சம் ஹோம்லியா இருக்கும். . வீக் எண்ட எஞ்சாய் பன்றேன்னு இவய்ங்க அஞ்சி பேரும் ஆள் நடமாட்டமே இல்லாத ஒரு பங்களாவுல போய் தங்கி அங்கருக்க ஒரு பேய்கிட்டயோ இல்ல ஒரு கொடூர கொலைகாரண்டயோ மாட்டிக்குவானுக. வீக்கெண்டுன்னா வீட்டுல விட்ட்த்த பாத்து படுத்து தூங்கிட்டு மத்தியானம்  போய் தலப்பாகட்டில பிரியாணியப் போட்டா மறுக்கா மட்டையானோம்னா எப்டி போகுதுன்னே தெரியாம போயிரும். அதவிட்டுட்டு ஆளே இல்லாத காட்டுக்குள்ள போயி பேயிகிட்ட மாட்டிக்கிட்டுஅது ஒவ்வொருத்தனையா கொல்ல கடைசில ஒரே ஒரு பொண்ணு மட்டும் தப்பிச்சி வெளில வரும். இதுதான் காலங்காலமா யூஸ் பன்னிட்டு வர்ற டெம்ளேட்டு.

இந்த மெர்க்குரியும் இதுக்கு விதிவிலக்கு இல்ல. என்ன ஒரு மிகப்பெரிய வித்யாசம்னா வழக்கமா ரெண்டு புள்ளைங்களுக்கு பதிலா இதுல ஒரே ஒரு புள்ள மத்த நாலு பேரு பசங்க. எதிர்பாராத சில சம்பவங்களால ஒரு இடத்தல மாட்டிக்கிட்டு ஒவ்வொருத்தனா மட்டையாவுறாங்க. கடைசில யாரு தப்பிக்கிறாங்க அப்டிங்குறதுதான் இந்த மெர்க்குரி.

ஓவராலா படம் ரொம்ப நல்லாருக்கு. வசனமே இல்லாத படமா? அய்யயோ எப்டி ரெண்டு மணி நேரத்த ஓட்டுறதுங்குற பயம் இருந்துச்சி. ஆனா படம் ஆரம்பிச்சி ஒரு பத்து நிமிஷத்துல கதைக்குள்ள போனப்புறம் வசனம் இல்ல அப்டிங்குற ஒரு குறையே தெரியல. அதுக்கேத்த மாதிரி கதாப்பாத்திரங்கள வடிவமைச்சிருக்கதும் நல்லாருந்துச்சி. ரொம்பவே எங்கேஜிங்கான காட்சிகளும். ஒரு சில காட்சிகள்ல பயமுறுத்திருக்காங்க. ப்ரபு தேவா ரொம்ப நல்லா நடிச்சிருக்காரு.

படத்துல மைனஸ்ன்னு சொல்லப்போனா ஒரே ஒரு விஷயம்தான். ப்ரஸ்டீஜ் பட்த்துல சொல்ற மாதிரி புறாவ மறைய வைக்கிறது பெரிய விஷயம் இல்ல. மறைஞ்ச புறாவ திரும்ப உயிரோட கொண்டுவந்து காமிக்கிறதுதான் பெருசு. இதுல கார்த்திக் சுப்பராஜ் புறாவ நல்லா மறைய வச்சிருக்காரு. ஆனா அத திரும்ப உயிரோட கொண்டுவரும்போது புறாவுக்கு மூக்கு மொகரையெல்லாம் கொஞ்சம் பேந்துருச்சு.  இது ஒரு பேய் படமா இல்லையா அப்டிங்குற கன்பீசனே படம்பாக்குறவங்களுக்கு கடைசி வரைக்கும் இருக்கு. ஒரு வழியா நாம ஒரு முடிவுக்கு வரும்போது நாம நினைச்சதுக்கு ஆப்போசிட்டா ஒண்ணு காமிக்கிறாங்க. அது கொஞ்சம் கன்வீன்சிங்கா இல்ல.

மத்தபடி ஒவராலா படம் எங்கயுமே போர் அடிக்கல. க்ளைமாக்ஸ் நல்லாருந்துச்சி. சந்தோஷ் நாராயணனோட மியூசிக் பட்த்துக்கு இன்னொரு ப்ளஸ்.  கார்த்திக் சுப்புராஜ் மறுபடியும் தான் ஒரு நல்ல இயக்குனர்னு நிரூபிச்சிருக்காரு. கண்டிப்பா ஒரு தடவ பாக்காலாம்.

  

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...