Showing posts with label surya. Show all posts
Showing posts with label surya. Show all posts

Friday, January 19, 2018

தானா சேர்ந்த கூட்டம் – அவ்வளவு கூட்டமாவா தெரியிது?


Share/Bookmark
”என்னய்யா இவன் ஒரிஜினல் படத்துல தெரியாம கேமரால ஒரு ஈ க்ராஸ் ஆகி போனாக் கூட ரீமேக் பன்னும்போது அதயும் எடுத்து வைச்சிருவான் போல” ன்னு ஒரு சில வருஷங்களுக்கு முன்னால ஜெயம் ராஜாவ கிண்டல் அடிக்கிறதுண்டு. அவர் எடுத்த ரீமேக் படங்களுக்கும், அதோட ஒரிஜினல் வெர்ஷனுக்கும் ஆறு நடிகர்களத் தவற, ஆறு வித்யாசம் கண்டுபுடிக்கிறதே மிகப்பெரிய கஷ்டம். அந்த அளவுக்கு ஜெராக்ஸ் எடுத்த மாதிரி எடுத்து வைப்பாரு. நேத்து தானா சேர்ந்த கூட்டம் பாத்தப்போதான் ஜெயம் ராஜாவ நா ரொம்ப மிஸ் பண்ணேன்.அடுத்தவன் எழுதுன திரைக்கதைய அப்டியே ஏத்துக்கிட்டு தன்னுடைய தனித்தன்மைய காட்டனும்னு எதுவும் ஜில்ஃபான்ஸ் வேலைகள் பண்ணி வைக்காம படம் எடுக்கவும் ஒரு பெரிய மனசு வேணும்.

பயங்கரமான Spoiler Alert:

1987 ல மோன் சிங் அப்டிங்குறவன் டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிக்கைல “துடிப்பான, திறமையான, புத்திசாலியான ஆட்கள் உளவுத்துறைக்கும், பாதுகாப்புத் துறைக்கும் தேவை. விருப்பமுள்ளவர்கள் நாளை காலை தாஜ் ஹோட்டலூக்கு இண்டர்வியூக்கு வாங்க” அப்டின்னு ஒரு விளம்பரம் குடுக்க, மறுநாள் ஹோட்டல்ல கூட்டம் அள்ளிருக்கு. அதுலருந்து ஒரு 26 பேர தேர்வு செஞ்சி ”நாளைக்கு காலையில ஒரு Mock raid இருக்கு… எல்லாரும் பல்ல வெளக்கிட்டு பக்காவா வந்துருங்க”ன்னு சொல்லி அனுப்பிருக்கான்.

அதே மாதிரி மறுநாள் எல்லாரும் வர, Tribovandas Beemji & Sons ங்குற நகைக்கடைக்கு ரெய்டுக்கு அழைச்சிட்டு போயிருக்கான். நகைக்கடை ஓனர்கிட்ட “நா CBI லருந்து வந்துருக்கேன்.. இதப் பாருங்க search வாரண்ட்” அப்டின்னு ஒரு வாரண்ட் பேப்பர காமிக்க  அவய்ங்களும் கடைய சோதனை போட ஒத்துக்கிட்டுருக்கானுங்க. இவன் செலெக்ட் பன்ன 26 பேரும் கடைக்கு உள்ளயும் வெளியயும் யாரையும் விடாமயும், எந்த ஃபோன் காலும் வெளில போகாமயும் கடமைய செவ்வனே செஞ்ருக்கானுங்க.

நம்ம மோன் சிங் வடிவேலு அரிசி சாம்பிள் எடுக்குற மாதிரி எல்லா நகையிலயும் கொஞ்சம் சாம்பில் எடுத்து ப்ளாஸ்டிக் பைக்குள்ள எதோ எவிடென்ஸ் மாதிரி போட்டு சீல் பண்ணி எல்லாத்தையும் ஒரு பொட்டிக்குள்ள வச்சி ரெண்டு பேர மட்டும் கொண்டு போய் வண்டிய வச்சிட்டு வர சொல்லிருக்கான். மத்த எல்லார்கிட்டயும் ”கடைய பத்தரமா பாத்துக்குங்க.. கடையிலருந்து ஒரு துரும்பு கூட அசையக் கூடாது… நா இப்ப வந்துடுறேன்”ன்னு சொல்லிட்டு வெளில போனவன் இப்ப வரைக்கும் வரல.

அதுல அவன் ஆட்டையப் போட்ட நகைகளோட மதிப்பு சுமார் 30 லருந்து 35 லட்சமாம். அவனப் புடிக்க கேரளாவுக்கு ஆள் அனுப்புறேன், துபாய்க்கு ஆள் அனுப்புறேன்னு போலீஸ் தரப்புலருந்து ஆள் தான் அனுப்புனானுங்களே தவற இப்ப வரைக்கும் மோன் சிங்க புடிக்க முடியல. இந்த உண்மை சம்பவத்த அடிப்படையா வச்சி, ரொம்ப சுவாரஸ்யமான ஒரு திரைக்கதையோட அக்‌ஷய் குமார் நடிச்சி வெளிவந்த படம் தான் ஸ்பெஷல்26. பெருபாலானவங்க பாத்துருப்பீங்க. அதத் தழுவி எடுக்கப்பட்ட நம்ம தானா சேர்ந்த கூட்டத்த தான் நம்ம எல்லாரும் இப்ப கழுவி ஊத்திக்கிட்டுருக்கோம்.

ஒரிஜினல் வெர்ஷன்ல படத்தோட ஆரம்பம், கதையோட போக்கு, கதாப்பாத்திரங்கள் கதைக்குள்ள ஒவ்வொருத்தரா ஒவ்வொரு இடத்துல சேருற விதம், க்ளைமாக்ஸ் ட்விஸ்ட்ன்னு எல்லாமே ஒரு முறைபடுத்தப்பட்ட வடிவத்துல இருக்கும்.

ஆனா நம்ம விக்னேஷ் சிவன் , என் பங்குக்கு நானும் கொஞ்சம் கதைய சேர்க்குறேன்.. என்னோட திறமையும் காட்டுறேன்னு முன்னாடி பின்னாடி சேர்த்து விட்ட எக்ஸ்ட்ரா ஃபிட்டிங்குகளால தான் படம் சற்று டொம்மையாயிருச்சி.

திரைக்கதையில இருக்க சின்ன சின்ன சுவாரஸ்யங்கள்தான் ஒரு வெற்றிபடத்துக்கான வித்துகளா அமையும். உதாரணமா ஸ்பெஷல் 26 ல ஆரம்பமே ரெய்டுலதான் ஆரம்பிக்கும். ரெய்டு நடந்து முடிஞ்சி எல்லாரும் கிளம்புற வரைக்கும் அது ஒரு உண்மையான ரெய்டுன்னுதான் நமக்குத் தோணும். அந்த அளவுக்கு சீரியஸாவும், நேர்த்தியாவும் அந்த காட்சிய அமைச்சிருப்பாங்க. தமிழ்ல அந்த காட்சி செந்தில் கையில மாட்டுன மேண்டில் மாதிரி ஆகிப்போச்சு.

அதுமட்டும் இல்லாம க்ளைமாக்ஸ்ல அந்த ட்விஸ்ட்ட அவிழ்த்து அந்தப் படத்த முடிக்கிற விதம் ரொம்ப அருமையா இருக்கும். The illusionist ன்னு ஒரு படம் இருக்கு. ஹீரோ எல்லாரையும் ரொம்ப சூப்பாரா ஏமாத்திட்டு தப்பிச்சி போயிருவாரு. அவன ஃபாலோ பன்ற போலீஸுக்கு ஹீரோ ஊர விட்டு போனப்புறம்தான் அவன் நம்மள ஏமாத்திட்டாங்குறதே தெரியவரும். “அவன் எப்டியெல்லாம் நம்மள ஏமாத்திருக்கான்”ன்னு ஏற்கனவே நடந்த சம்பவங்கள கோர்வையா ஒவ்வொன்னா நினைச்சி பாத்து, ஹீரோவோட புத்திசாலித்தனத்த நினைச்சும், அவனோட வெற்றிய ஆமோதிக்கிற மாதிரியும் அந்த போலீஸ் ரயில்வே ஸ்டேஷன்லயே நின்னு தனக்குத் தானே நினைச்சி சிரிச்சிட்டு இருப்பாரு. செம சூப்பாரா இருக்கும் அந்த சீன். கிட்டத்தட்ட அதே மாதிரியான ஒரு காட்சியமைப்புதான் ஸ்பெஷல் 26 லயும் வச்சிருப்பாங்க. ஹீரோ கடைய காலிபன்னிட்டு போனப்புறம்தான் அவன புடிக்க வெய்ட் பண்ணிட்டுருக்கா போலீஸூக்கு அவன் நம்மள ஏமாத்திட்டாங்குறதே புரியும். அந்த சீனோட சுவாரஸ்யத்தையும் விக்னேஷ் சிவன் கெடுத்துட்டாரு.

ரொம்ப நாளைக்கு அப்புறம் சுரேஷ் மேனன தமிழ் சினிமாவுல பாக்க நல்லாருந்துச்சி. ஆனா பாருங்க அவருக்கு கவுதம் மேனன் குரல குடுத்து கடுப்ப்பேத்திடாங்க. ஒரு சீன்ல சுரேஷ் மேனன் சூர்யாவ எழுந்து நில்லுன்னு சொல்லுவாரு. “அவர் நின்னுக்கிட்டுதான் சார் இருக்காரு..உங்க பக்கத்துல பாக்கும்போது உக்கார்ந்திருக்க மாதிரி தெரியிது”ன்னு நினைச்சிக்கிட்டேன். இப்டியெல்லாம் ஓட்டுவானுங்கன்னு தெரிஞ்சிதான் க்ளைமாக்ஸ்ல “எவ்வளவு உயரம்ங்குறது முக்கியம் இல்ல.. எவ்வளவு உயருரோம்ங்குறதுதான் முக்கியம்” ஒரு பஞ்ச் வேற பேசிருக்காரு சூர்யா.

படத்துக்கு மிகப்பெரிய ப்ரோமோஷன் சொடக்கு மேல பாட்டு. ஆனா ஆடியோவுல இருக்க வேகம் வீடியோவுல இல்ல. இன்னும் கொஞ்சம் ஸ்பீடா எடிட்டிங் பன்னிருக்கனும். ஹரி படத்து எடிட்டர்கிட்ட குடுத்துருந்தா சிறப்பா செஞ்சு குடுத்துருப்பாரு. அந்த ஒரு பாட்டத் தவற மற்ற பாடல்கள்லாம் ஒரே இரைச்சல்.

ஸ்பெஷல் 26 ல ஒரிஜினல் CBI ஆஃபீசரா வர்ற மனோஜ் பஜ்பாயி பிரிச்சிருப்பாரு. ஆனா இங்க நம்ம நவரசம் ஒரு தேவையில்லாத ஆணி மாதிரி தான் வந்துட்டுப் போகுது. சூர்யா வழக்கம்போல ஆளு செமையா இருக்காரு.  ரம்யாகிருஷ்ணன் சிபிஐயா வர்றப்ப மட்டும் கெத்து. மத்த நேரத்துல “என்னப்பா.. என்னப்பா” ன்னு மொக்க போட்டுக்கிட்டுருக்கு. தம்பி ராமைய்யா ஒரு சீன்ல கலக்கிருக்காரு.

மொத்தப் படத்துலயும் நல்ல சீன்னு தேடி எடுத்தா ஒரு ரெண்டு மூணுதான் தேறும். க்ளைமாக்ஸ்ல சுரேஷ் மேனன நிக்க வச்சி சுத்தி சுடுற சீன் நல்லாருந்துச்சி.

மத்தபடி இன்னும் ரெண்டு படத்தையும் பாக்காதவங்க முதல்ல Special 26 ah பாத்துட்டு அப்புறம் தானா சேர்ந்த கூட்டம் பாக்கலாம்.   




Friday, August 12, 2016

சிங்கம் 3 & சாமி 2 ஸ்டோரி டிஸ்கஷன் !!!


Share/Bookmark
இயக்குனர் ஹரி சிங்கம் 3 ஐ தொடர்ந்து சாமி-2 இயக்கப்போவதாக கொஞ்ச நாள் முன்னால அறிவிச்சிருக்காரு. இந்த சூழ்நிலையில சிங்கம் 3 மற்றும் சாமி 2 படங்களோட கதை டிஸ்கஷன அந்த படத்துல ஏற்கனவே நடிச்ச ஒருசில நடிகர்களோட ஒரே அறையில வச்சிருக்காரு. இப்ப என்ன நடக்குதுன்னு பாப்போம். அந்தந்த கேரக்டர்கள் பேசுற ஸ்லாங்குல படிங்க.

(தொடர்ந்து வெறும் போலீஸ் படமா இயக்கி இயக்கி ஹரி ஒரு மாதிரி மெண்டல் டிஸ்ஸாடர் ஆகுற கண்டிஷன்ல இருக்காரு)

டிஸ்கஷன் ரூமுக்குள்ள வந்து பாக்குறாரு. சந்தானம், ஹாரிஸ் ஹெயராஜ், DSP எல்லாம் வந்து உக்கார்ந்துருக்காங்க.

ஹரி : யோவ்… என்னய்யா எல்லாரும் வந்துருக்காங்க.. வர வேண்டிய ஹீரோ ரெண்டு பேரயும்  காணும்

Asst 1: சொல்லியாச்சு சார்… இப்ப வந்துருவாங்க

ஹரி : ஆமா நீ ஏன் காக்கி கலர்ல சட்டை போட்டுருக்க?

Asst 1: சார் நல்லா பாருங்க… இது காக்கி இல்லை. பச்சை கலர்

ஹரி : (மனதிற்குள்: அய்ய்யயோ… வர வர எதப்பாத்தாலும் காக்கி கலர்லயே தெரியிதே… ) சரி சரி சும்மா தமாசுக்கு கேட்டேன் உக்காரு
எல்லாரும் உக்கார

ஹரி : சரி என்ன சீன் எழுதிருக்கீங்க.. குடுங்க பாக்கலாம்.

Asst 2 : சார்.. சிங்கம் 3 படத்துக்கு ஒரு சூப்பர் இண்ட்ரோ எழுதிருக்கோம் படிச்சி பாருங்க

ஹரி அந்த சீன வாங்கி படிச்சி மெரண்டு போய்

ஹரி : ”யோவ் இந்த சீனெல்லாம் எடுக்குறது ரொம்ப கஷ்டம்யா… டூப் போட்டு தான் எடுக்க முடியும்” ன்னு சொல்லிக்கிட்டு இருக்கும் போதே வெளில சூர்யா குரல் கேக்குது

சூர்யா : ஹாய் ஹலோ எல்லாருக்கும் வணக்கம். சாரி கொஞ்சம் லேட் ஆயிருச்சி..

சந்தானம் : யார்ரா அது?

சூர்யா : ஆத்ரேயாடா

சந்தானம் : கொஞ்சம் சாத்துருயாடா?

சூர்யா : என்னது?

சந்தானம் : இல்லை கதவ சாத்துருயாடான்னு கேட்டேன். வந்து உள்ள உக்காருங்க லில்லிபுட் அங்கிள்

(சூர்யா உள்ள வந்து உக்கார்ந்தப்புறம்)

சூர்யா: என்ன… என்ன போயிட்டு இருக்கு?….

ஹரி : உங்க இண்ட்ரோ சீனப் பத்தி தான் சார் பேசிக்கிட்டு இருந்தோம். ரொம்ப tough ah இருக்கு. அதான் டூப் போட்டு எடுக்கலாமான்னு நினைக்கிறோம்

சூர்யா : என்ன சார்… Six பேக்லாம் வச்சி எப்டி இருக்கேன். எனக்கு போய் டூப் போடனும்ங்குறீங்க… என்ன பன்னனும் சொல்லுங்க… 30 அடி உயரத்துலருந்து குதிக்கனுமா? ட்ரெயின் மேல 200 கிலொ மீட்டர் வேகத்துல ஓடனுமா? இல்லை பாம் வெடிக்கும்போது பக்கத்துல நின்னு ஸ்டைல திரும்பனுமா? எதா இருந்தாலும் சொல்லுங்க. பின்னிடுவோம்
ஹரி : கிரிக்கெட் விளையாடனும்…

சூர்யா : க்..க்…கி.கி.கி.கிரிக்கெட்டா…. பரவால்ல…  நீங்க அதுக்கு டூப்பே போட்டு எடுத்துருங்க.  

ஹரி : பரவால்ல சார்.. டூப்பு வேணாம் நீங்களே நடிங்க. ஃபுல் ஸ்பீடுல வர்ற பந்தை நீங்க மடக்கி சிக்ஸர் அடிக்கிறீங்க. அதன் இண்ட்ரோ சீன்

சூர்யா : நோ நோ.. நா கோடி ரூவா குடுத்தா கூட இனிமே கிரிக்கெட் விளையாட மாட்டேன்னு ஜோ மேல சத்தியம் பன்னிருக்கேன்.

சந்தானம் : (சைடுல திரும்பி) நீயே கோடி ரூவா குடுத்தா கூட இனிமே உன்னயும் உன் தம்பியையும் எங்கயும் விளையாட சேத்துக்க மாட்டாங்க

சூர்யா : கலாய்க்கிறீங்கன்னு நினைக்கிறேன். பரவால்ல… அடுத்த சீன சொல்லுங்க.

ஹரி : இண்ட்ரோ சீன் முடிஞ்ச உடனே அந்த கிரிக்கெட் ஸ்டம்பைய புடுங்கி அங்கருக்க ஒரு 10 ரவுடிய வெளுத்து கட்டுறீங்க. ஃபைட்டு முடிஞ்ச உடனே அதே கிரிக்கட் கிரவுண்டுல ஆடிக்கிட்டு இருந்த ச்சியர் கேர்ள்ஸோட ஒரு குத்து பாட்டுக்கு டான்ஸ் ஆடுறீங்க.

சூர்யா : வாவ்.. வாவ்…வாவ்.. சூப்பர் சூப்பர்

Asst 2 : (ஹரியின் காதுக்குள்) சார் நீங்க எடுத்த பத்து படத்துலயும் இதே சீனத்தான் மாத்தி மாத்தி வச்சிருக்கீங்க. இவர் என்ன சூப்பர் சூப்பர்ங்குறாரு?

ஹரி : கிரிக்கெட் சீன கேட்டதுல பதட்டமாயி வாவ் வாவ் ன்னு உளரிக்கிட்டு இருக்கான். அப்டியே ஓக்கே வாங்கி சீன ஃபிக்ஸ் பன்னிக்குவோம். ஆமா நீ ஏன் கையில லாட்டிய வச்சிருக்க?

Asst 2 : சார்…  லாட்டி இல்ல சார் இது.. பேனா…

ஹரி : எனக்கு தெரியாதா? சும்மா தமாசு (அவ்வ்வ்)

சூர்யா : என்ன DSP… இண்ட்ரோ சாங்குக்கு ட்யூன் ரெடியா?

சந்தானம் : இவந்தான் பத்துவருசமா நாலு  ட்யூன் போட்டு ரெடியா வச்சிருக்கானே. எந்த பாட்டு வேணும்னு கேட்டா உடனே போட்டுக்குடுத்துருவான்

சூர்யா : என்ன சொல்றீங்க..

சந்தானம் : இஹ்ஹ்.. இல்லை என்ன மாதிரி பாட்டு வேணும்னு கேட்டா சார் போட்டு குடுத்துருவாருன்னு சொன்னேன்.

ஹரி : DSP அந்த இண்ட்ரோ சாங் ட்யூன போடுங்க

DSP : எப்பவோ ரெடி… போடுறேன் கேளுங்க..  “Yo… yo… This is Dsp………………”

சந்தானம் : டேய் வான் கோழி வாயா…  சூர்யாவுக்கு இண்ட்ரோ சாங் போட சொன்னா நீ உனக்கு இண்ட்ரோ சாங் போட்டுக்குறியா

DSP : இல்ல சார்.. எனக்கு இப்புடி ஆரம்பிச்சாதான் ட்யூன் வரும்

சந்தானம் : எனக்கு வாயில நல்லா வரும்… நீ ட்யூனே போட வேணாம் பேசாம உக்காரு.

(ஹாரிஸ் உடனே இடையில பூந்து)

ஹாரிஸ் : சார் எங்கிட்ட ரெண்டு புது ட்யூன்  இருக்கு. கேக்குறீங்களா?

சந்தானம் : எங்கருந்து போட்டது?  (சுட்டது)

ஹாரிஸ் : என்ன சார்?

சந்தானம் : இ..இது எங்க இருந்துகிட்டு ட்யூன போட்டீங்கன்னு கேட்டேன் பாப் கட்டிங் அங்கிள்

ஹாரிஸ்: நானே சொந்தமா என் ஸ்டூடியோவுல போட்டேன்

சந்தானம் : அப்ப சத்தியமா நல்லாருக்காது.   



சூர்யா : சார்.. அப்புறம் இந்தப் படத்துலயும் அனுஷ்காதானே?

ஹரி : அனுஷ்கா கொஞ்சம் கஷ்டம் சார்… 5 கோடி ரூவா சம்பளம் கேக்குறாங்க

சூர்யா : என்னது அஞ்சு கோடியா? ரெண்டு பாட்டுக்கும் நாலு சீனுக்கும் வர்றதுக்கு அஞ்சு கோடியா?

ஹரி : அதுக்கில்ல சார்.. ”உங்க கூட நடிக்கும்போது அபூர்வ சகோதரர்கள்ல கமல் நடிச்ச மாதிரி காலை மடக்கியெல்லாம் ரொம்ப கஷ்டப்பட்டு நடிக்க வேண்டியிருக்காம். போன ரெண்டு பார்ட்ல நடிச்சதுக்கே முட்டி வலி வந்துருச்சி” ன்னு சொல்லி 5 கோடி குடுத்தாதான் நடிக்க வருவேன்னுட்டாங்க.

சூர்யா : 5 கோடி இல்லை… 50 கோடி குடுத்தாவது அனுஷ்காவ உள்ள கூப்டுங்க

(அப்ப திடீர்னு கதவுக்கு பக்கத்துலருந்து விஜய குமார் குரல்)

”சரியாச் சொன்னீங்க துரை சிங்கம்”

சந்தானம் : (கடுப்பாகி) யோவ் அரை போதையில இந்தாள யாருய்யா எழுப்பி விட்டது..

Asst 1: நாங்க யாரும் கூப்டல சார்… அவரே வந்துட்டாரு

விஜயகுமார் : (ஹரிய பாத்து) மாப்ள… எனக்கு இந்த படத்துல எத்தனை சீன்? என்ன வசனம்?

ஹரி : போன ரெண்டு படத்துல என்ன வசனம் பேசுனீங்க?

விஜயகுமார் : “சரியா சொன்னீங்க துரை சிங்கம்” “கலக்கிட்டீங்க துரை சிங்கம்” “ஆமா துரை சிங்கம்” “அப்புடி போடுங்க துரை சிங்கம்” “உங்கள ப்ரமோட் பன்றேன் துரை சிங்கம்” “சார்ஜ் எடுத்துக்குங்க துரை சிங்கம்”

ஹரி : அதே வசனம் தான் இந்த படத்துலயும். போய் சரக்கடிச்சிட்டு தூங்குங்க மாமா.. சும்மா சும்மா வந்து தொல்லை பன்னாதீங்க.

விஜயகுமார் : கோவப் படாதீங்க மாப்ள.. நா அப்டியே ஒரு ஓரமா உக்காந்து வேடிக்க பாத்துக்குறேன் ன்னு விஜய குமார் ஒரு ஓரமா உக்காருறாரு.

சூர்யா : சார்… போன படத்துல சவுத் ஆஃப்ரிக்கா வரைக்கும் போனோம். இந்த தடவ எதாவது புது இடத்துக்கு போகனும்

சந்தானம் : செவ்வாய் கிரகத்துக்கு வேணா போறியா?

சூர்யா : சந்தானம் நீங்க இப்டியே காலாய்ச்சீங்கன்னா உங்கள படத்துலருந்தே தூக்கிருவேன்

சந்தானம் : டேய்.. நானே இந்த படத்துலருந்து விலகுறதுக்காகத்தான் வந்ததுலருந்து உன்ன கலாய்ச்சிட்டு இருக்கேன்.. அது புரியாம நீ மண்ணு மாதிரி உக்காந்துருக்க

சூர்யா : ஹரி சார்… இவர படத்துலருந்து தூக்கிருங்க

விஜயகுமார் : சரியாச் சொன்னீங்க துரை சிங்கம்

சந்தானம் : வக்காளி நா கொலை கேஸுல உள்ள போனாலும் பரவால்ல மொதல்ல இவனப் போட்டுத்தள்ளுறேன்னு விஜய குமார் மேல பாயிறாரு.

(தொடரும்)



Saturday, May 7, 2016

24 – பூனைக்கு மணி!!!


Share/Bookmark
நடைமுறையில நடக்குறதுக்கு ஒரு சதவீதம் கூட வாய்ப்பு இல்லாத ஒரு விஷயம் டைம் ட்ராவல். ஆனா இந்த டைம் ட்ராவல் கான்செப்ட் மாதிரி இண்ட்ரெஸ்டிங்கானது எதுவுமே இல்லைன்னு சொல்லலாம். இந்த கான்செப்ட்ட ஒழுங்கா தெளிவா கையாண்டா, படம் பாக்குறவங்கள ஆச்சர்யத்தோட உச்சத்துக்கே கொண்டு போற அளவுக்கு ஸ்கிரிப்ட் எழுத முடியும். இத எத்தனையோ ஹாலிவுட் படங்கள் ப்ரூவ் பன்னிருக்கு. ஹாலிவுட்ல மூன்று நான்கு decades ah இந்த கான்செப்ட்ல படம் வந்துக்கிட்டு இருந்தாலும் தமிழ்ல இப்பதான் ஒண்ணு ரெண்டு படங்கள் எட்டிப்பாக்குது. ஏன் தமிழ்ல்ல இவ்வளவு நாள் இந்த டைம் ட்ராவல் கான்செப்ட்ட வச்சி படம் எடுக்காம இருந்தாங்கன்னு யோசிச்சா, ஒரே ஒரு முக்கியமான காரணம் என்னவா இருக்க முடியும்னா மக்களுக்கு இத எப்படி புரிய வைக்கிறதுங்குற குழப்பமாத்தான் இருந்துருக்கனும்.

முதல் முதலா போன வருஷம் “இன்று நேற்று நாளை” ன்னு ஒரு படம் வந்துச்சி. ஆனா அது எத்தனை பேருக்கு போய் சேந்துச்சின்னு தெரியல. விஷ்ணுவ எனக்கு புடிக்காதுங்குற ஒரே காரணத்துக்காக நானே இன்னும் அந்தப் படம் பாக்கல. அதுக்கப்புறம் வெகுஜனங்களுக்கு இந்த கான்செப்ட் சென்றடையிற மாதிரி முதல் முதலா ஒரு பெரிய ஹீரோவ வச்சி டைம் ட்ராவலுக்குள்ள தமிழ் சினிமா நுழைஞ்சிருக்கு. இந்தப் படம் நல்லா இருக்கோ இல்லையோ. ஆனா இது தமிழ்/தெலுங்கு சினிமாவுல  டைம் ட்ராவல் கான்செப்ட்ல நிறைய படங்கள் வர்றதுக்கு ஒரு முக்கியக் காரணமா இருக்கும்ங்குறதுல சந்தேகமே இல்லை.

மிஸ்டர் பீன் எபிசோடுகள்ல ஒரு விஷயம் நோட் பன்னிருப்பீங்க. ரோவன் அட்கின்சன் கிறிஸ்மஸ் அன்னிக்கு ஒரு கிரீட்டிங் கார்டு வாங்கி கவருக்குள்ள வச்சி  அவர் வீட்டுக்குள்ள போட்டுருவாரு. கொஞ்ச நேரம் கழிச்சி திரும்பி வீட்டுக்குள்ள வந்து அந்தக் கவர வேற யாரோ அவருக்கு அனுப்புன மாதிரி நினைச்சி ஆச்சர்யமா பிரிச்சி பாத்து அவரே சர்ப்ரைஸ் ஆகிக்குவாரு. ஆனா அந்த மாதிரி நம்மளால இருக்க முடியாது. நமக்கு ஏற்கனவே பரிட்சையமான ஒரு விஷயத்த புதுசா பாக்குற மாதிரி பாத்து ஆச்சர்யப்பட முடியாது. அதனால ஏற்கனவே ஒருசில டைம் ட்ராவல் படங்களைப் பாத்த எனக்கு இந்தப் படம் என்ன இம்பேக்ட குடுத்துச்சின்னு தான் இதுல பாக்கப்போறோம். முதல் தடவ பாக்குறவங்களுக்கு இந்தப் படம் என்ன சர்ப்ரைஸ் குடுத்துச்சின்னு என்னால யூகிக்க முடியாது. எனவே படம் பாக்குற ஐடியாவுல இருக்கவங்க அப்புடியே ஸ்கிப் பன்னி கடைசி பாராவுக்கு போயிடலாம்.

விக்ரம் கே. குமாருக்கு இந்த அமானுஷ்யம், பூர்வ ஜென்மத்து மேலயெல்லாம் ரொம்ப இண்ட்ரெஸ்ட் போல. இவர் சிம்புவ வச்சி எடுத்த அலை மட்டும் மரண மட்டை. யாவரும் நலத்துக்கு அப்புறம் தெலுங்குல நிதின் ah வச்சி எடுத்த Ishq செம ஹிட்.  யாவரும்நலம் பாத்த எக்ஸ்பீரியன்ஸ இன்னும் என்னால மறக்க முடியல. படம் ஆரம்பத்துலருந்து கடைசி வரைக்கும் கொஞ்சம் கூட பிசிறாம எங்கேஜ் பன்னிவச்சிருந்த படம். அதே மாதிரி தான் “மனம்” ஒரு மாஸ்டர் பீஸ். அப்படிப்பட்டவரு ஒரு டைம் ட்ராவல் படம் எடுக்குறாருன்னு நினைக்கிறப்போ உண்மையிலே நா ரொம்ப எதிர் பாத்தேன். ஆனா படத்துல அவர் குடுத்த ஆச்சர்யங்களை விட ஏமாற்றங்கள் தான் அதிகம்னு சொல்லலாம்.

டைம் ட்ராவல் நடைமுறையில சாத்தியமில்லைன்னாலும் அது நடந்தா எப்படி நடக்கும்குறதுக்கு தியரி நிறைய இருக்கு. அதுல ஒண்ணு ரெண்ட படிச்சிப் பாத்தாவது நம்மாளு கொஞ்சம் டைம் மிஷினப் பத்தி டீட்டெய்லிங் பன்னிருக்கலாம். ஆனா அவரு படத்துல பன்னிருக்கது என்னனா அட்டகாசம் அஜித் மாதிரி “கண்ணாடியத் திருப்புனா வண்டி ஓடும்” டைப் தான்.

ஒவ்வொரு சீனும் ஓவ்வொரு ஷாட்டும் ஒண்ணுக்கொண்ணு ரிலேஷன் இருக்க மாதிரியோ இல்லை ஸ்க்ரீன்ல காமிக்கிற ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு பர்ப்பஸ் இருக்குற மாதிரியோ சீன்ஸ் வச்சிருக்காரு. ஒண்ணு ரெண்டுன்னா பரவால்ல. எல்லா பொருளையுமே அப்டி காமிக்கிறது ரொம்ப ஆர்டிஃபீஷியலா இருக்கு.  Bubble gum துப்புறது அதுல சாவி ஒட்டிக்கிட்டு வர்றது, கரண்ட் ஷாக் அடிக்கிறது அது மூலமா வாட்ச் சார்ஜ் ஆகுறதுன்னு இந்த மாதிரி இன்னும் நிறைய.

முதல் கால் மணி நேரத்துல கதைக்கான ஆரம்பத்தையும், வில்லன் சூர்யா எவ்வளவு கொடூரமானவங்குறதையும் காமிக்கிறாங்க. லொக்கேஷனும் வில்லன் சூர்யா கெட்டப்பும் சூப்பர். சைண்டிஸ்ட் சூர்யா அப்படியே “ஹாய் மாலினி.. நா இத சொல்லியே ஆகனும்” கெட்டப்புல இருக்காரு. பேசுறது கூட அதே ஸ்லாங்கு. சகிக்கல.

வில்லன் சூர்யாவத்தவற ஆர்டினரி சூர்யாகிட்ட இருக்கது ரெண்டே வேறியேஷன் தான். ஒண்ணு “நீங்கல்லாம் பெருமையா சொல்லிக்கலாம்….” டைப். இன்னொன்னு வாரணம் ஆயிரம் படத்துல வர்ற மாதிரி “ப்பா.. I need this paa… I need this paa” டைப். அடிக்கடி சூர்யா பேசும்போது இந்த ரெண்டு வசங்களும் அதுல அவர் பேசுன ஸ்லாங்கும் தான் ஞாபகம் வருது.

டைம் மெஷின் சூர்யா கைக்கு கிடைச்சப்புறம்… ச்ச அத டைம் மிஷின்னு சொல்லவெ ஒரு மாதிரி இருக்கு. அந்த வாட்ச் சூர்யா கைக்கு கிடைச்சதும், சூர்யா டைம் ட்ராவல செக் பன்னி பாக்குறதெல்லாம் பாபா படத்துல தலைவர் பட்டம் விட்டு செக் பன்னுவாரே.. அந்த ரேஞ்சு.

படத்த பெருமளவு மொன்னையாக்குறது சமந்தா தான். தமிழ் சினிமாவும், தெலுங்கு சினிமாவும் இந்த சமந்தாவ என்னிக்கு விடப்போறாய்ங்கன்னு தெரியலயே. குருநாதா.. இதுக்கு மேலயும் என்னால இதுக்கு மேல பொறுக்க முடியாது குருநாதா… சூர்யா சமந்தா காதல் காட்சிகள் வழ வழ கொழ கொழ மட்டும் இல்லாம ரொம்ப நீளமான சீன்ஸ் எல்லாம்.

சில இடங்கள்ல படத்துல எனக்கு சிரிப்பே வந்துருச்சி. வாட்ச் ரிப்பேர் பன்றவனால டைம கன்ரோல் பன்ன முடியும்னு ஒரு புது கான்செப்ட கொண்டு வந்துருக்காய்ங்க பாருங்க.. ஸ்டன் ஆயிட்டேன். கமல் சொல்ற மாதிரி தூக்கம் வரலன்னா கொட்டாவி விட்டா தூக்கம் வந்துருமாடா? என்னங்கடா உங்க லாஜிக்கு? டைம் ட்ராவலுக்கும் வாட்ச்சுக்கும் என்னடா சம்பந்தம்? அவங்க அப்பா என்னன்னா அவர் ஒரு வாட்ச் கம்பெனில வேலை பாத்துட்டு, சயிண்டிஸ்டாயி டைம் ட்ராவல் பன்ற வாட்ச கண்டுபுடிக்கிறாரு. புள்ளை என்னடான்னா சவுக்கார் பேட்டை சந்துல வாட்ச் மெக்கானிக்..  அவரு பன்றது அதுக்கும் மேல.

உலகம் சுற்றும் வாலிபன் படத்தோட முதல் சீன். வெளில இடி பயங்கரமா  இடிச்சிட்டு இருக்கும். புரட்சி தலைவரு ரூமுக்குள்ள உக்காந்து ஜன்னல் வழியா இடி இடிக்கிறத கண்ணால பாத்துக்கிட்டே ஒண்ணாப்பு பையன் நோட்டுல வீட்டுப்பாடம் எழுதுற மாதிரி வேகவேகமா என்னவோ எழுதுவாரு. திடீர்னு கண்துபுஸ்தேன்… கண்துபுஸ்தேன்னு கத்துவாரு (கண்டுபுடிச்சிடேன் கண்டுபுடிச்சிட்டேன்). என்னத்தடா கண்டுபுடிச்சாருன்னு பாத்தா இடி இடிக்கும்போது மின்னலோட சக்தில பத்துல ஒரு பங்க புல்லட்டுல எப்புடி சேமிக்கிறதுங்குறத கண்டுபுடிச்சிட்டேன்ம்பாரு. எப்புடி? ரூமுக்குள்ள உக்காந்து கண்ணால இடியப்பாத்தே..

அதப்பாக்கும்போது எவ்வளவு சிரிப்பு வந்துச்சோ அதவிட அதிகமா இங்க ஒரு சீன்ல சிரிச்சேன். அப்பா சூர்யா கண்டுபுடிக்கிற டைம் ட்ராவல் பன்ற வாட்ச் ah வச்சிக்கிட்டு ஒரு நாள் முன்ன இல்லை பின்ன தான் டைம் ட்ராவல் பன்னலாம். ரொம்ப நாள் பின்னால போக முடியாது. இதக் கேள்விப்பட்ட சூர்ய ஒரு நாள் நைட்டு வாட்ச வச்சிட்டு உக்காருவாரு. பிரிப்பாரு. அதுக்குள்ள என்னவோ சேப்பாரு. சேத்துட்டு “ப்பா.. நீங்க மணிக்கனக்குல ட்ராவல் பன்றதுக்கான ஆப்ஷன் மட்டும் தான் குடுத்துருக்கீங்க. நா அதுல நாட்கள் ட்ராவல் பன்ற மாதிரி சின்ன மாடிஃபிகேஷன் பன்னிருக்கேன்… இப்ப நீங்க பல நாட்கள் கடந்து போகலாம்.. வருஷங்கள் கடந்து போகலாம்” ந்ன்னு சொல்லுவாரு பாருங்க. அடேய்…. என்னடா வாட்ச் கடையில பழைய பேட்டரிய கழட்டிட்டு புது பேட்டரி மாத்துற மாதிரி சாதாரணமா சொல்லிக்கிட்டு இருக்கீங்க.. இது டைம் ட்ராவல்டா… கொஞ்சமாவது மதிங்கடா.

அதுலயும் 1990 லயே அவங்க அப்பா அந்த வாட்ச்ல நம்ம ஆண்ட்ராய்டு ஃபோன் ரேஞ்சுக்கு பல அப்ளிகேஷன்கள இன்ஸ்டால் பன்னி குடுத்துருப்பாரு. Flight mode , Silent mode மாதிரி Freeze mode ன்னு ஒண்ணு….. இது ஒண்ணு ரெண்டு சீன்ல கொஞ்ச நல்லா இருந்தாலும், தோத்துப்போன க்ரிக்கெட் மேட்ச ஜெயிக்க வைக்கிறது, தோணிக்கிட்ட போய் ஃபோட்டோ எடுக்குறதெல்லாம் மிடில.

ரெண்டு விதமான டைம் ட்ராவல் கான்செப் இதுவரைக்கும் சினிமாவுல யூஸ் பன்னிருக்காங்க. ஒண்ணு நீங்க டைம் ட்ராவல் பன்னி 10 வருஷம் பின்னால போனா, பத்து வருஷம்  முன்னால நீங்க எப்டி இருந்தீங்களோ அப்டி ஆயிருவீங்க. அதாவது உங்க வாழ்க்கை பத்துவருஷம் பின்னால போகும். அவ்வளவுதான். ரெண்டாவது கான்செப்ட்ல டைம் ட்ராவல் பன்னி 10 வருஷம் பின்னால போனீங்கன்னா, அங்க நீங்களும் இருப்பீங்க.. உங்கள விட பத்து வயசு குறைவான உங்களோட younger version னும் இருப்பான். அதாவது ரெண்டு பேர் இருப்பீங்க. (புரியலன்னா இந்த பாராவ திரும்ப ஒருக்கா படிங்க… நா எழுதுனது எனக்கே புரியல) இதுல முதல் கான்செப்ட்ட விட ரெண்டாவது கான்செப்ட் தான் ரொம்ப சக்ஸஸ்ஃபுல். ரெண்டாவது கான்செப்ட்ட தான் நல்லாவும் எடுக்கலாம். ஆனா நம்ம விக்ரம் கே.குமார் 24 படத்துல உபயோகிச்சிருக்கது முதல் விதம். சற்று டொம்மையா தான் இருக்கு.

வில்லன் சூர்யா தான் படத்துக்கு பெரிய பலம். அவருக்கான காட்சிகள், கெட்டப் எல்லாமே செம. நல்லாவும் நடிச்சிருக்காரு. மத்த ரெண்டு கெட்டப்புமே மட்டை. க்ளைமாக்ஸ் பயங்கராமா எதிர்பாத்தேன்.. மொத்தம் நாலு சூர்யா க்ளைமாக்ஸ்ல இருக்க போறாங்க.. செமையா இருக்கப்போவுதுன்னு பாத்தா அல்வா தான் மிச்சம்.

பாட்டெல்லாம் ஓக்கே. “புன்னகையே” ந்ன்னு ஒரு பாட்டு சூப்பரா இருந்துச்சி.. ஆனா படத்துல அது வரல. பாட்டுக்கெல்லாம் choreographer இல்லாம இவய்ங்களே எடுத்துருப்பாய்ங்க போல.. சும்மா நடந்துக்கிட்டும் ஓடிக்கிட்டும் கப்பித்தனமா இருக்கு. அதுலயும் சமந்தாவுக்கு ட்ரெஸ் ப்ரமாதம்.. ஆம்பள மாதிரி இருக்கு.

சமீபத்துல வந்த Looper, Presdestination படத்தல்லாம் கம்பேர் பன்ன வேணாம். ரொம்ப advanced.  30 வருசம் முன்னால வந்த Back to the Future படத்துலயே பட்டைய கெளப்பிருப்பாய்ங்க. ரெண்டாவது பார்ட் க்ளைமாக்ஸ். டைம் ட்ராவல் மெஷின கண்டுபுடிச்ச சயிண்டிஸ்டும், அவரோட ட்ராவல் பன்ற ஹீரோவும் இருப்பாங்க. க்ளைமாக்ஸ்ல சயிண்டிஸ்டோட மெஷின் எதோ மால் ஃபங்ஷன் பன்னி டைம் ட்ராவல் ஆகி எங்கயோ போயிடுவாரு. ஹீரோ மட்டும் தனியா என்ன பன்றதுன்னு தெரியாம முழிச்சிட்டு இருப்பான். அப்ப ஒரு கார் அந்த இடத்துக்கு வரும். அதுலருந்து ஒருத்தன் இறங்கி வந்து ஹீரோகிட்ட ஒரு லெட்டர குடுப்பான். லெட்டர பிரிச்சி பாத்தா, கொஞ்ச நேரத்துக்கு முன்னால டைம் ட்ராவல் பன்னி காணம போன சயிண்டிஸ்ட் இவனுக்கு 1885 ல எழுதுன லெட்டர். 1885 க்கு ட்ராவல் பன்னி போன சயிண்டிஸ்ட் ஹீரோ இன்னிக்கு மாட்டிக்கிட்டு முழிப்பான்னு தெரிஞ்சி, ஒரு லெட்டர் எழுதி அத கரெக்ட்டா இந்த டைமுக்கு இவன்கிட்ட கிடைக்கிற மாதிரி செஞ்சிருப்பாரு. (இதுவும் உங்களுக்கு புரிஞ்சிருக்காது. எனக்கும் புரியல) தயவுசெஞ்சி Back to the future பாக்கதவங்க பாருங்க. புல்லரிக்கும் அந்த சீன்.

ஆனா இங்க கமர்ஷியல் ஐட்டங்களை சேர்க்குறேன்னுட்டு நிறைய இடங்கள்ல ட்ராக்குலருந்து விலகிருச்சி படம். ஒரு சில சீன்கள்ல சூர்யாவ பாக்கும்போது இது இளைய தளபதி விஜய் நடிக்க வேண்டிய படமோன்னு கூட தோணுச்சி.


மொத்தத்துல முதல் முதலா டைம் ட்ராவல் படம் பாக்குறீங்கன்னா உங்களுக்கு படம் சுவாரஸ்யமா இருக்கலாம். ஆனா ஏற்கனவே பரிட்சையமானவங்களுக்கு 24 ஒண்ணும் அவ்வளவு சுவாரஸ்யமா இருக்காது. 


LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...