Showing posts with label PAN INDIA MOVIES. Show all posts
Showing posts with label PAN INDIA MOVIES. Show all posts

Friday, April 1, 2022

ஆடியன்ஸ திட்டாதீங்க ப்ரோ!!


Share/Bookmark

 


RRR புகழ்ச்சிப்பதிவுகள் ஒரு புறம் சென்றுக்கொண்டிருக்க, “அந்தப் படத்த ஏன் கொண்டாடல? இந்தப் படத்த ஏன் ஃப்ளாப் ஆக்குனீங்க?” என சில படங்களைத் தூக்கிக் கொண்டு ஒரு கும்பல் குறுக்கயும் மறுக்கையும் ஓடிக் கொண்டிருக்கிறார்கள்.

அதில் குறிப்பாக அவர்கள் கையில் வைத்திருக்கும் படம் 2.0 அதைக் கொண்டாடாமல் ஒழித்துவிட்ட பாவம் தான் நமக்கு நல்ல படமே கிடைக்கவில்லையாம். ஏம்பா.. கொஞ்சம் மனதைத் தொட்டு சொல்லுங்கள்.. 2.0 அதற்குத் தகுதியான படமா? எந்திரனின் தரத்தில் பத்தில் ஒரு பங்கு கூட இல்லாத 2.0, ரஜினி படமாகவும் இல்லாமல் ஷங்கர் படமாகவும் இல்லாமல் ஹீரோ யார் வில்லன் யார் என்கிற தெளிவும் இல்லாமல் ஒரு மாதிரி எடுக்கப்பட்டது. அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம், 3D படம் என்பது மட்டும் வெற்றி பெற வைப்பதற்குப் போதுமானதா?

காலாவ ஏன் ஓட விடல? ஊடகங்கள் திட்டமிட்டு சதி செஞ்சிருச்சி. ஆமா… அது அவர் அரசியலில் ஈடுபடுவதாகச் சொன்னதற்கான எதிர்வினை. ஏற்றுக்கொண்டு தான் ஆக வேண்டும். அதுதான் அரசியல். சொல்லப்போனால் திராவிடக் கூட்டங்கள் மாய்ந்து மாய்ந்து படத்தைப் பற்றி புகந்து தான் எழுதின. உண்மையில் படத்திற்கு பெரிய ஓப்பனிங் இல்லாததற்குக் காரணம் கபாலி எஃபெக்ட் தான்.

ஸ்டாலின் திரைப்படத்தில் சிரஞ்சீவி அனைவருக்கும் உதவுவார். அவர்கள் நன்றி சொல்லும்போது நன்றி வேண்டாம் மூன்று பேருக்கு உதவுங்கள் என்று சொல்லுவார். உடனே அவரது நண்பன் சுனில் ஒருவருக்கு உதவி செய்ய அவர் பதிலுக்கு நன்றி கூறமாட்டார். சுனில் ஏன் எனக்கு நன்றி சொல்லவில்லை என அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட  ”அவங்க உனக்கு நன்றி சொல்லலைன்னா, அவங்க நன்றி சொல்ற அளவுக்கு நீ இன்னும் உதவி செய்யலன்னு அர்த்தம்” என்பார்.

அதேபோலத்தான் ரசிகர்கள் ஒரு திரைப்படத்தைக் கொண்டாட வில்லையென்றால், அவர்கள் கொண்டாடும் அளவுக்கு நம்ம படம் இல்லை என்று தான் எடுத்துக்கொள்ள வேண்டும்.  ஒரு ரசிகன் எதைக் கொண்டாட வேண்டும், எதை நிராகரிக்க வேண்டும் என்பது அவனுடைய ரசனை மற்றும் சூழல் தீர்மானிக்கும். இயக்குனர்கள் என்ன வேண்டுமானாலும் எடுக்கலாம். ஆனால் ரசிகர்களுக்கு பிடித்தால் மட்டுமே அவர்கள் கொண்டாடுவார்கள்.

”புதுப்பேட்டையெல்லாம் எப்டி ஃப்ளாப் ஆச்சு.. இதெல்லாம் தியேட்டர்ல பாக்க எப்டி இருந்துருக்கும்?” என சிலாகிப்பவர்களைப் பார்க்க முடிகிறது. புதுப்பேட்டை முதல் காட்சி பார்த்துவிட்டு நொந்து போய் வந்த நண்பர்களின் முகம் இன்னும் எனக்கு ஞாபகம் இருக்கிறது.

ஆயிரத்தில் ஒருவன் எப்டி ஃப்ளாப் ஆச்சின்னு இன்னும் ஆர்டின் விட்டுக் கொண்டிருக்கிறார்கள். “என்ன நடந்துச்சி.. ஏன் இப்ப படம் முடிஞ்சிது” என கமலா திரையரங்கில் புலம்பிக்கொண்டே எழுந்து சென்றவர்களை இன்னும் ஞாபகம் இருக்கிறது. சில விஷயங்கள் அப்படித்தான். வீட்டில் சாவுகாசமாக உட்கார்ந்து கொண்டு தேவைப்பட்டால் பாஸ் செய்து விட்டு கொஞ்சம் ப்ரேக் எடுத்து பார்க்கும் பொழுது நிறைய திராபையான திரைப்படங்கள் கூட நன்றாகத்தான் இருக்கும்.  திரையரங்க அனுபவம் முற்றிலும் வேறு.

ஒரு திரைப்படம் வெற்றிபெற முதலில் நல்ல கதை எழுத வேண்டும். பின் அதை நல்ல தரத்தில் படமாக்க வேண்டும். பின் அதை முறையாக விளம்பரப்படுத்த வேண்டும். சரியான நேரத்தில் வெளியிட வேண்டும். இதில் எந்த இடத்தில் தவறு நடந்தாலும் ரிசல்ட் வேறு மாதிரி ஆகிவிடும். இதையெல்லாம் தாண்டி ஒரு திரைப்படம் வெற்றி பெற ஒரு மேஜிக் நடக்க வேண்டும் என ரஜினியே கூறியிருப்பார். அந்த மேஜிக் ஒரு சில படங்களுக்குத் தான் நடக்கும்.

ஒருவர் மாததிற்கு ஒரு படம் தான் பார்ப்பார். அதற்குத்தான் அவரிடம் காசு இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். ஆனால் நீங்கள் அதே மாதத்தில் இரண்டு “கொண்டாட வேண்டிய” படங்களை ரிலீஸ் செய்கிறீர்கள் என்றால் இரண்டு படங்களில் ஒன்றைத்தான் அவர் தெரிவு செய்து பார்ப்பார். அதற்காக அவரிடம் சண்டைக்கு போகக்கூடாது அல்லவா?

மழை காலத்திலும், குழந்தைகளுக்கு பரிட்சை இருக்கும் நேரத்திலும் படத்தை ரிலீஸ் செய்து விட்டு ஏன் நீங்க தியேட்டருக்கு கொண்டாட வரவில்லை என்றால் எவ்வளவு அபத்தமாக இருக்கும்.

நல்ல திரைப்படங்களை எப்பொழுதுமே மக்கள் ஆதரிக்கத் தவறுவதில்லை. ஆனால் அந்த ஆதரவு திரையரங்கிற்கு வந்து, வசூலாகத் தரவேண்டுமென்றால் அதற்கு நிறைய விஷயங்கள் ஒத்துவரவேண்டும்.

ஆடியன்ஸ திட்டாதீங்க ப்ரோ!!

Saturday, March 26, 2022

PAN INDIA MOVIES!!


Share/Bookmark

 


RRR இந்த வாரம் வெளியாகவிருக்கிறது. தமிழ்த்திரையுலகின் ஒரு முன்னணி நாயகரின் நேரடித் தமிழ்ப்படம் எத்தனை திரையரங்குகளில் வெளியாகுமோ அதை ஒத்த அளவிலான திரையரங்குகளை தமிழகத்தில் RRR ஆக்கிரமித்திருக்கிறது.

அடுத்த இரண்டு வாரங்களில் பீஸ்டிற்குப் போட்டியாக களமிறங்குகிறது கன்னடத்து சூராவளி KGF. தமிழ்நாட்டில் பீஸ்டிற்கு KGF ஆல் பெரிதாக எந்த ஆபத்தும் இருக்கப் போவதில்லை என்றாலும் மற்ற மாநிலங்களில் பீஸ்ட் KGF இன் அருகில் கூட நிற்க முடியாது.

KGF ஐயும் சேர்த்தால் கடந்த நான்கு மாதங்களில் தென்னிந்தியாவிலிருந்து புஷ்பா, ராதே ஷியாம், RRR என தமிழ்நாட்டில் வெளியாகும் பான் இந்தியத் திரைப்படங்களின் எண்ணிக்கை மொத்தம் நான்கு.

எங்கோ இருந்த கன்னட திரைத்துரையிலிருந்து ஒரு திரைப்படம், இன்று தமிழ்நாட்டின் முன்னணி நடிகரின் படத்திற்குப் போட்டியாகக் களமிறக்கப்படுகிறது. தெலுங்கின் இரண்டாம் நிலை ஹீரோவான அல்லு அர்ஜூனின் படம் தமிழகத்தில் பட்டையைக் கிளப்புகிறது.

தென்னிந்தியாவிலேயே ஹீரோக்களுக்கு அதிக சம்பளம் கொடுக்கும் தமிழ்த் திரைத்துரையிலிருந்து எத்தனை PAN இந்தியப் படங்கள் வெளியாகியிருக்கின்றன? ரஜினியின் ஒரு சில படங்கள் அப்படிப்பட்ட அந்தஸ்தைப் பெற்றன. ஆனால் அவற்றையும் சரியன தரத்தில் கொடுக்காததால் சமீபத்தில் வெளியான அண்ணாத்தே மற்ற மொழிகளில் வெளியானது கூடத் தெரியாமல் காணாமல் போனது.

PAN இந்தியத் திரைப்படங்கள் என்பவை இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மக்களுக்கும் ஒத்துபோகும்படி எடுக்கப்படும் படங்கள் அல்ல. அத்தனை மக்களையும் கவர்ந்திழுக்கும் தரத்தில் எடுக்கப்படும் படங்கள். அதற்கு ஒரு சிறந்த இயக்குனரும், அதை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் ஒரு பிரபலமான நடிகரும் கட்டாயம் தேவை.

தமிழில் இருக்கும் பிரபல நடிகர்கள் தற்பொழுது ”சின்ன கல்லூ பெத்த லாபம்” என்கிற ஃபார்முலாவிற்கு அடிமையாகிவிட்டனர் அதாவது அவர்களின் சம்பளம் மட்டும் அதிகம். ஆனால் படம் ஒரு அம்பது அறுபது நாள் கால்ஷீட்டில் விரைவாக எடுத்து முடிக்கப்பட வேண்டும். படத்தில் ப்ரொடக்‌ஷன் வேல்யூ இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி. ஹீரோவின் முகத்துக்குத்தான் இங்கு மதிப்பு. அப்படியே விற்றுவிட்டு ஒன்றுக்கு இரண்டாக கல்லா கட்டிவிட்டு அடுத்த சின்ன கல்லூ பெத்த லாபத்திற்கு அடி போடச் சென்று விடுகிறார்கள்.

அடுத்து தமிழ் இயக்குனர்கள். திரையில் பிரம்மாண்டத்தைக் காட்டவும், அடுத்த கட்டத்தில் யோசிக்கவும் இருந்த ஷங்கர் போன்ற ஒருசில இயக்குனர்கள் காலாவதி ஆகிவிட, புதிதாக வந்தவர்களும் புரட்சி போராட்டம் என குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டிக்கொண்டிருக்க நல்ல வணிகத் திரைப்படத்திற்கான இயக்குனர்களுக்கு தற்பொழுது தமிழ் சினிமாவில் பஞ்சம் என்றே சொல்லலாம்.

இருநூறு கோடி பட்ஜெட்டில் உருவாவதக் கூறப்படும் தமிழ் திரைப்படத்தின் Production Value  வெறும் ஐம்பது கோடி பட்ஜெட்டில் உருவாகும் தெலுங்குத் திரைப்படத்தின் Production Value  விற்கு அருகில் கூட வருவதில்லை.

ஒரு காலத்தில் தமிழ்த்திரைப்படங்கள் ஆந்திராவில் பட்டையைக் கிளப்பிய காலங்கள் போய் கடைசியாக அண்டை மாநிலங்களில் நன்றாக ஓடிய தமிழ்ப் படம் என்ன என்பதே இப்பொழுது மறந்து விட்டது.

காரணம் சினிமாவின் அடுத்த கட்டம் என நம் இயக்குனர்கள் கொரியன் படங்களை நகலெடுத்துக் கொண்டிருந்த அதே காலத்தில் அவர்கள், அவர்கள் மொழிப்படங்களின் technical aspects இல் கவனம் செலுத்தி அதை மேம்படுத்திக் கொண்டிருந்தனர். தமிழ் சினிமாவில் அதைத் தவறவிட்டுவிட்டனர்.

ஒருசிலர் மட்டுமே இதைக் கூறிவந்த நிலையில், OTT க்களின் அசுர வளர்ச்சியால் இன்று இது வெட்ட வெளிச்சமாகிவிட்டது.  பெரும்பாலானோர் இப்பொழுது  ”நம்ம படத்த விட இவங்க படம் நல்லாருக்கேப்பா” என்கிற கருத்தைக் கூற ஆரம்பித்துவிட்டனர்.  

தமிழில் குறைந்த பட்ஜெட்டில் படு நேர்த்தியான கலைப்படங்களைக் கொடுக்க நிறைய திறமையான இயக்குனர்கள் இருக்கிறார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் வணிக ரீதியிலான தரமான படங்களைக் கொடுப்பதற்கு நிச்சயம் நம்மிடம் தரமான இயக்குனர்களை இல்லை அல்லது அவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கபடவில்லை.

சில வருடங்களுக்கு முன், தமிழ்ப்படங்கள் வெளியாவதால் கன்னடப் படங்களின் வசூல் பாதிக்கப்படுகிறது என கர்நாடகாவில்  ஒரு போராட்டம் நடந்தது. இதே நிலை தொடர்ந்தால் கூடிய விரைவில் தமிழ்நாட்டில் கூட இதே போல ஒரு போராட்டம் நடக்கலாம். அது நடைபெறாமல் இருக்க முன்னணி நடிகர்களிடமும், இயக்குனர்களிடமும் நிச்சயம் ஒரு பெரிய மாற்றமும் ஒரு பரந்த மனப்பான்மையும் தேவை.



LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...