பிரபல பதிவராவது எப்படி -சில எளிய வழிகள்
குறிப்பு: இந்த பதிவு எந்த தனிப்பட்ட நபரையும் குறிப்பிட்டு எழுதப்பட்டதல்ல. நகைச்சுவைக்காகவே....
உங்களில் பல பேருக்கு எப்படி பிரபல பதிவர் ஆவது என்பதில் பல குழப்பங்கள் இருக்கும். அதை தீர்த்து வைப்பதற்காகவே இந்த பதிவு. இது சில பிரபல பதிவர்களின்(?) பதிவுகளை படித்ததன் மூலம், அவர்களிடம் நான் கற்றுக்கொண்டது. இதை அப்படியே மூன்று மாதம் பின்பற்றினால் எண்ணி இருபத்து நான்கு மணி நேரத்தில் தாங்கள் பிரபல பதிவர் ஆகிவிடலாம் இல்லாவிட்டால் தங்கள் பணம் வாபஸ்.
இதோ அமெரிக்கன் டெக்னாலஜியில் உருவாக்கப்பட்ட சில வழிகள் உங்களுக்காக.
1. நீங்கள் ஒரு பிரபல பதிவர் ஆக வேண்டுமானால், அடுத்தவர்களை எதிர் பார்க்காமல் முதலில் நீங்களாகவே ஒரு பிரபல பதிவராக form ஆகி கொள்ள வேண்டும். உங்கள் ஆழ்மனதில் நீங்கள் ஒரு பிரபல பதிவர் என்பது நன்றாக பதிந்திருக்க வேண்டும். எவ்வளவு பெரிய கூட்டத்திலும் "பிரபல பதிவரே" என்று கூப்பிட்டால் தாங்கள் திரும்பி பார்க்கும் படி அதை தங்கள் மனதில் பொதிய வைத்துக் கொள்ள வேண்டும்.
2. நீங்கள் ஒரு சில பதிவுகளே எழுதியிருந்தாலும், உங்களுக்கு நாடெங்கிலும் ரசிகர் மன்றங்கள் இருப்பது போலவும், தங்களுக்காக உயிரை கொடுக்கும் ரசிகர்கள் இருப்பது போலவும், உங்கள் பதிவு சரியான நேரத்தில் வராவிட்டால் குடிநீருக்கு தவிப்பது போல மக்கள் பதிவுக்கு தவிப்பது போலவும், தமிழ்நாட்டின் தலையெழுத்தையே மாற்றும் சக்தி உங்கள் பதிவில் இருப்பது போலவும் கற்பனை செய்து கொள்ள வேண்டும்.
3. தங்களை ஒரு நாய் கூட கண்டு கொள்ளாவிட்டாலும் இரண்டு நாட்களுக்கு ஒருமுறை, "என்னை வம்புக்கு இழுக்கிறார்கள்", "கேலி செய்கிறார்கள்" என்று பதிவில் இடலாம்.
4. தினமும் நீங்க ஒரு 20 பேர பாலோ பண்ணனும். எந்த பதிவா இருந்தாலும் எவ்வளவு கேவலமா இருந்தாலும் "அருமை" "வாழ்த்துக்கள்" "தொடருங்கள்" "கரெக்டா சொன்னீங்க" இந்த மாதிரி கமெண்டுகளை அளித்து விட்டு வர வேண்டும். (மேலே குறிப்பிட்ட கமெண்டுகளை போட பதிவை படிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.. இவை எல்லாவற்றுக்கும் பொருந்தும்). இந்த செய்முறையை குறைந்தது ஒரு மாதம் நீங்கள் செய்ய வேண்டும். உங்களுடைய சின்சியாரிட்டியை கண்டு அவிங்களும் உங்களை பாலோ பண்ணுவாங்க. நீங்க எப்புடி அவங்க பதிவுக்கு "அருமை" "வாழ்த்துக்கள்" "தொடருங்கள்" ன்னு போட்டீங்களோ அதே போல உங்களுடைய பதிவுகளுக்கும் போடுவாய்ங்க. நாளைடைவில் உங்களுடைய பதிவின் தரத்தை உங்களாலேயே மதிப்பிட முடியாது.
5. தினசரி பதிவு மிக அவசியம். பதிவு நல்லா இருக்கனும்னு அவசியம் இல்லை. நீங்க காலைல பாத்ரூம் போனது, டாய்லெட்ல தண்ணி வராதது இத பத்தியெல்ல்லாம் எழுதலாம். அதற்கும் உங்களுக்கு "கலக்கிட்டீங்க தலைவா"ன்னு கமெண்டு போடுறதுக்கு நம்ம பதிவுலகத்துல ஆள் இருக்காங்க. அட எதுவுமே தோணலையா, அன்னிக்கு காலைல வந்த நியூஸ் பேப்பர்ல உள்ள நியூஸ் அப்புடியே டைப் பண்ணி போஸ்ட் பண்ணிடலாம். சமூக பற்று உள்ளவர் என்ற பெயரும் சேர்ந்து தங்களுக்கு கிடைக்கும்.
6. இந்த பாயிண்டு தான் மிக முக்கியம். பதினெட்டு ப்ளஸ் சமாசாரங்கள் கண்டிப்பாக பதிவில் இடம்பெற வேண்டும். (உதாரணமாக தாங்கள் காலையில் ரோட்டில் பார்த்த பெண் என்ன கலர் உள்ளாடை அணிந்திருந்தார், அவரை பார்க்கும் போது தங்களுக்கு என்ன பீலிங் வந்தது என்பது போலான சமாசாரங்கள்) எவ்வளவுக்கெவ்வளவு ஆபாசம் அதிகமாகிறதோ அந்த அளவுக்கு பாலோயர்களும், ஹிட்ஸ்களும் கிடைக்கும்.
7. அளவுக்கு அதிகமாக ஆபாசங்களை எழுதி, சில சமயங்களில் அனைவரிடமும் வசமாக மாட்டிக்கொள்ள நேரலாம். அம்மாதிரியான சமயங்களில் சில செண்டிமென்ட் பதிவுகளை, (உதாரணமாக பெண்களை கவர் செய்வது போலான "தாய்குலத்துக்கு நேர்ந்த அவலம்", "தாய்குலத்துக்கு எச்சரிக்கை")பதிவுகளை அள்ளிவிட்டால் மக்கள் பழசை மறந்து விடுவார்கள்.
8. உங்களுடைய பதிவுகளுக்கு ஓட்டு போடும்படி தங்கள் பதிவிலையே, அனைவரிடமும் காலில் விழுந்து கேட்கலாம். "பிடிச்சிருந்தாலும் சரி பிடிக்காவிட்டாலும் சரி.. தயவு செஞ்சி ஓட்டு போடுங்க.. இப்படிக்கு தங்கள் காலில் விழுந்த நண்பன்" என்று எல்லா பதிவுகளுக்கும் default வரிகளை சேர்த்து கொள்ளலாம்.
9. தங்களை ஒத்த ஒரு பத்து வலைப்பதிவர்களுடன் சேர்ந்து வலைக்குழுமம் ஆரம்பிக்கலாம். அந்த பத்து பேருக்கு இருக்கும் நண்பர்களும் உங்களுக்கு ஓட்டு அளிப்பர். குறிப்பு: அவர்கள் அனைவரும் நாடோடிகள் படம் பார்த்தவர்களாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் தங்கள் முயற்சி வீணாகிவிடும் (நண்பனின் நண்பன் எனக்கும் நண்பனே)
சரி ஏன்பா இவ்வளவு வக்கனையா பேசுறியே நீ ஏன் இன்னும் பிரபல பதிவரா ஆகலன்னு கேப்பீங்க.. நான் எப்பவும் கடைநிலை ஊழியனாக இருக்கவே ஆசைப்படுகிறேன் (அவ்வ்வ்வ்வ்வ்வ்)