Friday, November 28, 2014

பாக்ஸர் மனோகரன்!!!


Share/Bookmark
மூன்று மாதம் முன்பு  ஷிரிடி சாய் பாபாவின் தரிசனத்திற்காக நானும் என் அலுவலக நண்பர் ஒருவரும் வரிசையில் நின்றுகொண்டிருந்தோம். வரிசை நகராமல் நிற்கவே நாங்கள் வெகுநேரம் அலுவலகக் கதைகளைப் பற்றி பேசிக்கொண்டிருந்தோம், சற்று நேரம் கழித்தே உணர்ந்தோம் எங்களை அருகிலுருக்கும் வரிசையிலிருந்த நபர் நெடுநேரமாக கவனித்துக் கொண்டிருக்கிறார் என்று. நாங்கள் பேச்சை நிறுத்திவிட்டு அவரை பார்க்க, “என்ன சார் எந்த ஊரு நீங்க?” என்று அவர் கேட்க குதூகலமானோம். அட நம்மூருதான். ”நாங்க சென்னைலருந்து வர்றோம். நீங்க எந்த ஊர்?” என்றவுடன்

நா வேலூர் சார். இப்போ பெங்களூருல செட்டில் ஆயிட்டேன். இந்திய பாக்ஸிங் டீம் கோச்சா இருக்கேன்என்று அவர் சாதாரணமாகச் சொன்னாலும் எங்களுக்கு டக்கென்று தூக்கிவாரிப்போட்டது.

இந்தியன் டீமுக்கா? ”என்று கேட்டு வியந்த எங்களுக்கு சிறிது நேரம் அவரிடம் பேசக்கூட எங்களுக்கு மனதில்லை. பிறகு அவர் அவுரங்காபாத் கேம்பிலிருந்து மாணவர்களுடன் கோவிலிற்கு வந்திருப்பதாக கூறி பின்னாலிருந்து 19 மாணவர்களை அறிமுகம் செய்தார். சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்த போது வரிசை நகர ஆரம்பித்தது. அவரின் அலைபேசி எண்ணையும், இரவில் ஒரு இருபது நிமிடம் பேச அனுமதியையும் பெற்றுக்கொண்டு நகர்ந்தேன். அன்று இரவு அவருடன் நடந்த தொலைபேசி உரையாடலின் எழுத்து வடிவம் இதோ.

முதலில் மனோகரன் அவர்களைப் பற்றிய ஒரு சிறிய முன்னுரை:

வேலூர் மாவட்டத்தில் பிறந்த மனோகரன் அவர்கள் சிறுவயதிலேயே இந்திய ராணுவத்தில் சேர்ந்தார். மனோகரன் அவர்களின் தந்தையும் ஒரு ராணுவ வீரர் என்பது குறிப்பிடத்தக்கது. ராணுவத்தில் சேர்ந்த மனோகரன், ராணுவ வீரர்களுக்கிடையே நடைபெறும் பாக்ஸிங் எனப்படும் குத்துச்சண்டை போட்டிகளில் கலந்து கொண்டு தீவிரப் பயிற்சியில் சிறந்த பாக்ஸிங் வீரரானார். பல்வேறு பதக்கங்களைக் குவித்தார். தொடர்ந்து 5 முறை பாக்ஸிங்கில் இந்திய அளவில் சாம்பியனாகத் திகழ்ந்தார். இந்திய அளவிலான போட்டிகளில் மட்டுமல்லாது, உலக அரங்கில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளிலும் கலந்து கொண்டு பதக்கத்தைக் குவித்தவர்1984ம் ஆண்டு விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதுகளில் ஒன்றான அர்ஜூனா விருதைப் குடியரசுத் தலைவர் ஜியானி ஸாயில் சிங் அவர்களிடமிருந்து பெற்றார். கிரிக்கெட் வீரர் திலீப் வெங்சர்கார் அவர்களும் அதே ஆண்டில் அர்ஜூனா விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

1987ம் ஆண்டு இந்த பாக்ஸிங் அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட மனோகரன், தொடர்ந்து 28 ஆண்டுகளாக பயிற்சியாளராகத் தொடர்கிறார். “இந்திய அணியின் சிறந்த பயிற்சியாளர்களில் ஒருவர்என பலராலும் பாராட்டப்பெற்ற மனோகரன், 2000மாவது ஆண்டில் ராணுவத்திலிருந்து ஓய்வு பெற்றார். இந்திய ஆடவர் மற்றும் மகளிரணி பயிற்சியாளராக விளங்கிய மனோகரன் கடந்த சில வருடங்களாக இந்திய அணியின் 19 வயதிற்குட்பட்ட ( under 19) வீர்ர்களின் பயிற்சியாளராக தொடர்கிறார்.
அர்ஜூனா விருது உள்ளிட்ட நான்கு உயரிய விருதுகளை வென்ற மனோகரன் இந்த வருடம் பயிற்சியாளர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதானதுரோனாச்சார்யாவிருதிற்கு பரிந்துரைக்கப் பட்டிருக்கிறார்
(பதிவின் நீளம் கருதி மனோகரன் அவர்களைப் பற்றி வெகு குறைவாகவே கூறியிருக்கின்றேன்The Hindu நாளிதழ் மனோகரன் அவர்களை பற்றி விரிவான ஒரு பக்கக் கட்டுரை ஒன்றை ஒரிரு மாதங்களுக்கு முன் வெளியிட்டுள்ளது)

மனோகரன் அவர்களிடம் கேட்கப்பட்ட சில கேள்விகளும் அதற்கு அவரின் பதிலும் இதோ.

1. பாக்ஸிங்ல உங்களுக்கு எப்படி ஆர்வம் வந்தது? பாக்ஸிங் வீரராக வேண்டும் என்ற எண்ணம் எப்போது உதித்தது?
உண்மைய சொல்லனும்னா நா ஆர்மில சேர்றதுக்கு முன்னால வரைக்கும் வாலிபால் பாத்தது கிடையாது, ஹாக்கி ஸ்டிக் பாத்தது கிடையாது  ஏன் Foot Ball கூட பாத்தது கிடையாது. எங்களுக்குத் தெரிஞ்ச ஒரே விளையாட்டு இந்த ஸ்கூல்ல ரிங் வச்சி ஆடுறது தான். ஆர்மில சேர்ந்தப்புறம் தான் ஒவ்வொன்னா கத்துகிட்டேன். அப்போ மத்த விளையாட்டுக்கள விட பாக்ஸிங் எனக்கு ரொம்ப பிடிச்சிருந்துச்சி. என் கவனத்த முழுசா பாக்ஸிங்ல திருப்பிட்டேன்.

2. உங்களுக்கு இந்திய அணிக்கு பயிற்சியாளரா ஆகுற வாய்ப்பு எப்படி கிடைத்தது?
NIS (Certificate Course in Sports Coaching) ன்னு ஒரு கோர்ஸ் இருக்கு .கோச் ஆகனும்னா கண்டிப்பா அந்த கோர்ஸ் முடிச்சாகனும்அந்த கோர்ஸ்ல நமக்கு நிறைய விஷயம் கத்துக்கொடுப்பாங்க. ஒரு ஒண்ணுமே தெரியாத புது ப்ளேயருக்கு எப்படி பயிற்சியளிக்கனும், நல்லா சீசனான ஒரு ப்ளேயருக்கு எப்படி பயிற்சியளிக்கனும், வீர்ர்களுக்கு எதாவது அடி பட்டுட்டா நாம என்ன செய்யனும், நெருக்கடியான தருணங்கள எப்படி சமாளிக்கனும்னு நிறைய சொல்லித் தருவாங்க. அது மட்டுமில்லாம நம்மோட performance, நம்மால வீர்ர்களுக்கு ஒழுங்கா பயிற்சி குடுக்க முடியுமா? நம்முடைய பழைய ரெக்கார்ட்ஸெல்லாம் என்ன? இப்படி ஒவ்வொரு விஷயத்தையும் பாத்து தான் தேர்ந்தெடுப்பாங்க. என்னைப் பொறுத்தவரைக்கும் நா அந்தக் கோர்ஸ் முடிச்ச மூணாவது நாளே நா இந்திய அணி பயிற்சியாளராக தேர்வு செய்யப்பட்டேன்

3. நீங்க இதுவரைக்கும் எந்தெந்த நாட்டுக்கு போயிருக்கீங்க? எந்த நாட்டுல பாக்ஸிங்குக்கு ஆதரவு அதிகம்?
நான் கிட்டத்தட்ட எல்லா நாடுகளுக்குமே போயிருக்கேன். பாக்ஸிங்குக்கு ஆதரவு அதிகம்னு பாத்தா க்யூபா தான். அங்க பாக்ஸிங் தான் மெயின் விளையாட்டே.

4.உங்களால பயிற்றுவிக்கப்பட்ட மாணவர்கள் இதுவரை இண்டர்நேஷனல் லெவல்ல எத்தனை பதக்கங்கள் வாங்கியிருப்பாங்க?
சார் உண்மைய சொல்லனும்னா எனக்கே கவுண்ட் மறந்து போச்சு கிட்டத்தட்ட எல்லா tournament லயும் பதங்களை ஜெயிச்சிருக்காங்க. இண்டர்நேஷனல் லெவல்ல ஒரு 150 பதக்கங்களுக்கு வாங்கிக் கொடுத்திருக்கேன் என்று அவர் கூறியதைக் கேட்டதும் எனக்கு தலை ஒரு நொடி கிர்ர்ர் என்றது.5. உங்களுடைய மாணவர்களை அதாவது இந்திய அணிக்கான வீர்ர்களை எப்படி தேர்வு செய்கிறீர்கள்?
ஒவ்வொரு வருஷமும் தேசிய அளவிலான போட்டிகள் மாநிலங்களுக்கிடையே நடக்கும். அதுல செலக்ஷன் கமிட்டில ஒரு மூணு பேர் இருப்பாங்க. அதுல நானும் ஒருவர். அந்த போட்டிக்கள்ல ஜெயிக்கிற நான்கு பேர் அதாவது தங்கம் ஒருவர், வெள்ளி ஒருவர், வெண்கலம் இருவர் என்று பதக்கங்கள் வெல்லும் நால்வரும் இந்திய அணிக்கான பயிற்சிக்கு தெரிவு செய்யப்படுவாங்க. இது மாதிரி 10 ரவுண்டுலருந்து மொத்தம் 40 மாணவர்களை பயிற்சிக்கு தேர்ந்தெடுப்போம். பதக்கம் வாங்குறவங்க மட்டுமில்லாம, எங்களுடைய பார்வையில் வேறு யாராவது சிறப்பாக விளையாடியிருந்தால் அவர்களையும் கூட பயிற்சிக்கு தெரிவு செய்வோம்

6. நீங்க பயிற்சிக்காக தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்கள் வருடத்தில் எத்தனை நாட்கள் பயிற்சி எடுத்துக் கொள்ள வேண்டும்?
அரசாங்கம் ஒரு வருஷத்துக்கு ஒரு வீர்ருக்கு 180 நாட்கள் பயிற்சி நாட்களாக ஃபிக்ஸ் பண்ணி வச்சிருக்கு. ஒரு வேளை அதிகப்படியான tournament இல் கலந்து கொள்ள வேண்டியிருந்தா, ஒரு 20 நாட்கள் அதிகமாக பயிற்சி எடுத்துக் கொள்ள அனுமதி வாங்கிக் கொள்ளலாம்.

7. பயிற்சி எடுத்துக்கொள்ளும் வீரர்களுக்கு ஏதேனும் மாதாந்திர ஊதியம் வழங்கப்படுகிறதா?

இது ஒரு நல்ல கேள்வி. சம்பளம்னு எதுவும் தனியா வீரர்களுக்கு கொடுக்கப் படுவதில்லை. ஆனால் ஒரு வீரர் Asian boxing la ஒரு மெடல் எடுத்தா ஒரு குறிப்பிட்ட தொகையை மத்திய அரசாங்கம் அந்த வீர்ருக்கு வழங்கும்அதே போல ஒலிம்பிக்ஸ்ல ஒரு மெடல் எடுத்தா ஒரு தொகை அந்த வீரருக்கு வழங்கப்படும். வீரர்கள் வெல்லும் போட்டிகளுக்கேற்ப மத்திய மாநில அரசுகளிடமிருந்து பணப்பரிசு கிடைக்கிறதுஅதுமட்டுமில்லாம அரசு வேலை வாய்ப்புகள்ல குறிப்பா ரயில்வே துறை, காவல் துறை தபால் துறைகள்ல வீரர்களுக்கு அரசாங்கம் முன்னுரிமை அளிக்கிது.

8. சரி சார். ஆனா எல்லா வீரர்களும் மெடல் எடுப்பாங்கன்னு சொல்ல முடியாது. மேலும் கிட்டத்தட்ட ஆறு முதல் எட்டு மாதங்கள் பயிற்சிக்காகவே வீர்ர்கள் செலவளிக்கிறார்கள். அந்த சமயங்கள்ல அவர்களுக்கோ அல்லது அவர்களின் குடும்பங்களைப் பார்த்துக் கொள்ளவதற்கோ எதேனும் மாதாந்திர ஊதியம் கொடுக்கப் படுகிறதா?

அப்படி எதுவும் இல்லை. வீரர்களோட உணவு, தங்கும் வசதி போக்குவரத்தை அரசாங்கம் கவனித்துக் கொள்ளும். மற்றபடி சம்பளமெல்லாம் எதுவும் இல்லை.

9. உங்களையும் வீரர்களையும் அரசாங்கம் எப்படி பார்த்துக் கொள்கிறது? அதாவது உங்கள் பயிற்சிக்கு தேவையான வசதிகளை செய்து தருகிறதா?
நாங்க பயிற்சி எடுப்பதற்காகவே மஹாராஷ்டிர மாநிலம் அவுரங்காபாத்ல அனைத்து வசதிகளுடன் கூடிய தனி இடத்தை அரசாங்கம் ஒதுக்கியிருக்கிறது. வீரர்களுக்குத் தேவையான practice kits, playing kits அனைத்தும் அரசாங்கம் கொடுத்திருக்கிறது. அதுமட்டுமில்லாம குளிர்சாதன வசதியுடன் கூடிய தங்குமிடம் மற்றும் போக்குவரத்திற்கு வீர்ர்கள் ரயிலில் 2nd AC யில் பயணம் செய்து கொள்ள அனுமதியும் அளிக்கப்பட்டிருக்கிறது..

 10. உங்களுடைய வாழ்க்கையில் மறக்க முடியாத தருணம் அல்லது நீங்கள் அடிக்கடி நினைத்து பெருமைப்படக் கூடிய தருணம் என்று எதாவது இருக்கிறதா?
1981ல் ஆஸ்திரேலியாவில் பிரிஸ்பெயின் நகரில் நடந்த போட்டியில, எனக்கு கையில பலமா அடிபட்டு இருந்தப்போ கூட நா கோல்டு மெடல் ஜெயிச்சிட்டு வந்தேன். மாஸ்கோ ஒலிம்பிக்ஸ்ல குவார்ட்டர் ஃபைனல் வரைக்கும் பொய்ட்டு லாஸ் ஆயிட்டேன். இது ரெண்டும் தான் இப்பவும் நா அடிக்கடி நினைச்சி பாக்குற சம்பவங்கள்

11. நம்ம மக்கள்கிட்ட இந்த பாக்ஸிங் அப்டிங்குற விளையாட்டு எந்த அளவு ரீச் ஆயிருக்கு சார்?
முன்னால இருந்தத விட இப்போ சவுத் சைடுல பெரும்பாலான கிராமங்கள்ல கூட பாக்ஸிங்ன்னா என்னன்னு தெரியிது. பாக்ஸிங் விளையாடுறதில்லை, அந்த விளையாட்டப் பத்தி அதிக அறிவு இல்லையின்னாலும் பாக்ஸிங்ன்னா என்னன்னு மக்களுக்கு இப்போ தெரியிது. பஞ்சாப், ஹரியானா மாதிரியான மாநிலங்கள்ல நிறைய க்ளப்புகள் (clubs) நடத்தி, நிறைய டோரணமெண்டுகள் நடத்தி நிறைய வீரர்களை உருவாக்குறாங்க. தென் மாநிலங்கள்ல இந்த மாதிரியான க்ளப்புகளெல்லாம் இல்லை. அதானல இன்னும் பெரிய அளவுல வீரர்கள் உருவாவதில்லை.

12. சார் அப்புறம் நம்ம ஊரப் பொறுத்த அளவில கிரிக்கெட்டுக்கு கொடுக்கிற முக்கியத்துவத்தை மற்ற விளையாட்டுக்களுக்கு கொடுக்கிறதில்லைன்னு ஒரு பரவலான கருத்து இருக்கு. இதப்பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க?
கிரிக்கெட்டும் ஒரு நல்ல விளையாட்டு தான். ரொம்ப டஃப்பாவும் இருக்கு ரொம்ப இண்ட்ரஸ்டிங்காவும் இருக்கு. அதானால மக்களும் அதை ரொம்ப விரும்புறாங்க. கிரிக்கெட்டுக்கு கிடைக்கிற வசதிகள் மத்த விளையாட்டுக்களுக்கும் கிடைச்சா மத்த விளையாட்டுக்களும் நல்ல ரீச் ஆகும்

13. வசதிகள்னா என்ன மாதிரி வசதிகள சொல்றீங்க?
உதாரணத்துக்கு ஸ்பான்ஸர்ஸ் (sponsors). கிரிக்கெட்டுக்கு ஸ்பான்சர்ஸ் அதிகம். அதனால அந்த விளையாட்டு அதிகமா விளம்பரமும் படுத்தப்படுது. கிரிக்கெட் வீரர்களுக்கு எதாவது அடிபட்டா கூட மருத்துவ செலவுங்களை அந்த ஸ்பான்ஸரே எடுத்துக்குவாங்க. ஆனா எங்களுக்கு அப்படி இல்லை. பாக்ஸிங் இண்டிவிஜூவல் கேம்னு சொல்லி ஸ்பான்ஸர்ஸ் எங்களுக்கு அதிகம் கிடைக்கிறதில்லை. எங்க பையன் ஒருத்தன் கை உடைஞ்சி கிடந்தா கூட அவன் சொந்த செலவுல தான் பாத்துக்கனும். இப்பதான் கொஞ்ச கொஞ்சமா எங்களுக்கு ஸ்பான்ஸர்ஸ் கிடைக்க ஆரம்பிக்குது. அதுவும் ரொம்ப நல்லா விளையாடுற வீரர்களுக்கு மட்டும் தான் கிடைக்குது. இது மேலும் வளரனும். கிரிக்கெட் மாதிரி பாக்ஸிங்கும் மக்கள் கிட்ட நல்லா ரீச் ஆகனும்கறது தான் என்னோட ஆசை


என்று முடித்து விட்டு Under 19 ஒலிம்பிக்ஸிற்காக சீனாவிற்கு புறப்பட்ட அவருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டு , அவரின் பொன்னான நேரத்தை ஒதுக்கியமைக்கு நன்றியையும் தெரிவித்துக் கொண்டு முடித்துக் கொண்டேன்


Sunday, November 23, 2014

நாய்கள் ஓக்கே - சிபிராஜ் ஜாக்ரதை!!!


Share/Bookmark
உன் லவ்வுக்கு பூரா என் மூளையத்தானே யூஸ் பண்ணிகிட்டு இருக்கேன். உன் மூளை ஃப்ரஷ்ஷ்ஷா அப்டியேத்தானே இருக்குன்னு வடிவேலு கேக்குற மாதிரி இப்போ நம்மூர் படங்களுக்கெல்லாம் வெள்ளைக்காரன் மூளைய மட்டுமே யூஸ் பண்ணிட்டு நம்ம மூளைய அப்டியே ஃப்ரஷ்ஷா வச்சிருக்கோம். எதாவது ஒரு படம் வித்யாசமா வருதேன்னு பாத்தா அத எங்கருந்தாவது சுட்டுட்டு வந்துருக்காய்ங்க. வித்யாசமான  தலைப்ப வச்சே படத்துக்கு இழுக்குற படங்களின் வரிசையில அடுத்த ஒரு படம். இந்தப்படம் பார்க்குற ஐடியாவுல இருக்கவங்க தொடர்ந்து படிப்பது உசிதமல்ல.

இந்த நாய்கள் ஜாக்ரதை படம் எடுக்குறதுக்காக டைரக்டர் பல ஆங்கில போலீஸ் படங்களை பாத்துருக்காப்டி. ஒவ்வொரு படத்துலருந்தும் கொஞ்சம் கொஞ்சம் எடுத்துப் போட்டு ரெண்டு நாய வச்சி எடுத்து முடிச்சிட்டாப்டி.

ஒரு கொலைகார கும்பல் ஒரு பில்டிங்ல பதுங்கியிருக்க விஷயம் தெரிஞ்சி ஹீரோ போலீஸ் அவரோட டீம அழைச்சிட்டு போறாரு. அங்க போனா முகமூடி போட்ட நாலு பேரு உள்ள வர்ற போலீஸயெல்லாம் வித்யாச வித்யாசமா கொண்ணு வீடியோ எடுத்துத்துட்டு ஹீரோவ மட்டும் உயிரோட விட்டுட்டு போயிடுறாங்க. போகும் போது வில்லன் குரூப்புல ஒரே ஒருத்தரோட வாட்ச் மட்டும் கீழ விழுந்துடுது. மற்ற போலீஸெல்லாம் இறந்து போனதுக்கு ஹீரோதான் காரணம்னு ஹீரோவ சஸ்பெண்ட் பண்ணிடுறாங்க. அந்த விரக்திலயே ஹீரோ பஜங்கர குடிகாரரா மாறிடுறாரு. அப்புறம் ஒரு சின்ன பையன் அவரோட வாழ்க்கையில வந்து அவர மாத்தி அந்த கொலைகார கும்பல கண்டுபுடிக்கிறாங்க. இது இப்டியே இருக்கட்டும்.

இன்னொரு டிடெக்டிவ் இருக்காரு. அவரோட பார்ட்னருக்கும் அவருக்கும் அவ்வளவா புடிச்சிக்காது. ரெண்டு பேரும் ஒரு கொலைகாரன புடிக்கப் போறாங்க. கொலைகாரன் பனிமூட்டமா இருக்க ஒரு மலைப் பாறையில ஓடுறான். ஹீரோவும் அவரோட பார்ட்னரும் தனித்தனியா தேடுறாங்க. பனிமூட்டத்தால யாரு எங்க இருக்காங்கன்னே கண்ணு தெரிய மாட்டுது. வில்லன் கையில வேற துப்பாக்கி. ஹீரோ சுத்தி சுத்தி பாக்குறாரு. திடீர்னு பனிமூட்டத்துல யாரோ ஓட, டுமீல்னு துப்பாக்கியால சுட்டுடுறாரு. அப்புறம் பக்கத்துல போய் பாத்தா தான் தெரியிது சுட்டது கொலைகாரன இல்லை அவரோட பார்ட்னரன்னு. அத யாரும் பாக்காததால கொலைகாரந்தான் பார்ட்னர சுட்டுட்டு ஓடிட்டதா எல்லார்டயும் சொல்லி நம்மவச்சிடுறாரு. ஆனா குற்ற உணர்ச்சியால தூக்கமே வராம தவிக்கிறார் டிடெக்டிவ். இன்னொரு மேட்டர் என்னன்னா டிடெக்டிவ் அவரோட பார்ட்னர சுட்டத வில்லன் பாத்துடுறான்.

அட என்னப்பா ஒரு படத்துக்கு ரெண்டு கதைய சொல்றானே.. இவன் படம் பாத்தானா இல்லையான்னு வெறிக்காதீங்க. நா மொத சொன்ன கதை ஜாக்கிசானோட “NEW POLICE STORY” ரெண்டாவதா சொன்ன கதை அல் பாச்சீனோ நடிச்ச ”INSOMNIA”. இந்த ரெண்டையும் K-9 ங்குற இன்னொரு படத்தோட மிக்ஸ் பண்ணி அடிச்சி அதுல சிபிராஜ் நடிச்சி வந்துருக்க படம் தான் இந்த நாய்கள் ஜாக்ரதை.  

சரி காப்பியடிக்கிறாய்ங்க இல்லை என்னவோ பண்றாய்ங்க. ஆனா எடுத்துருக்க கதையவே இன்னும் செமையா எடுத்துருக்கலாம். முதல்ல சத்யராஜோட சொந்த ப்ரொடக்‌ஷங்குறதால செலவுங்குற ஒண்ணே படத்துல பண்ணல. நீங்க செட்டு போடுங்க போடாதீங்க ஃபாரின் போங்க போகாதீங்க.. ஆனா casting மட்டுமாது ஒழுங்கா பண்ணிருக்கலாம்ல. நீங்க ப்ரொடியூசருங்குறதால சிபிராஜ் தான் ஹீரோ… வேற வழியில்ல நாங்க அத சகிச்சிகிட்டு தான் ஆகனும். ஆனா மத்த கேரக்டரயாது ஒழுங்கா செலக்ட் பண்ணிருக்கலாம்.

ஹீரோவோட போலீஸ் ஃப்ரண்ட்ஸா ஒரு நாலு பேர் வர்றாய்ங்க. அவனுங்க பானி பூரி விக்கிறாய்ங்கன்னு சொன்ன கூட யாரும் நம்ம மாட்டாங்க. அவனுங்க கையில ஸ்னைப்பரெல்லாம் குடுத்து கண்றாவி.. அதுவும் அவிங்க ஒரு சீன்ல “மச்சான் நா சுடல மச்சான்.. நா சுடல மச்சான்” ன்னு சொல்லும் போது.. டேய் சத்தியமா நீங்கதான் சுட்டீங்கன்னு சொன்னாலும் யாரும் நம்ப மாட்டாய்ங்கடா.. ஹோட்டல்ல வடை சுடுற மாதிரி இருந்துகிட்டு இவிங்க கையில துப்பாக்கி.

சிபிராஜோட பெரியக்கா மாதிரி இருக்கு ஹீரோயின். அந்தப்புள்ளை வந்து அரைமணி நேரம் வரைக்கும் அது சிபிராஜோட லவ்வரா இல்லை wife ahன்னு ஒரே கன்பியூசன். நிறைய இடத்துல சொல்ல வந்தத தெளிவாவே சொல்லல. படம் ஆரம்பிச்சி ஒரு அரைமணி நேரத்துல நா என்னோட படம் பாக்க வந்த நண்பர்கிட்ட “ஜி படத்துல நிறைய தப்பு இருக்குஜி..”ன்னேன் அதுக்கு அவரு ”ஆமாஜி… இந்தக் கதைய இந்த நாயிட்ட சொன்னதே பெரிய தப்புஜி…” ன்னாரு. ஆஹா நம்மளவிட கோவக்காரரா இருக்காரேன்னு விட்டுட்டேன்.  

படத்தொட பெரிய பலம் சுப்ரமணிங்குற நாய் தான். முதல் ரெண்டு காட்சிலயே சுப்ரமணி யாரு, எப்படிப்பட்டவங்குறத தெளிவா காட்டிடுறாங்க. ஆனா அதுக்கப்புறம் சுப்ரணிக்கும் சிபிராஜூக்கும் இடையில ஒரு bonding கொண்டு வர்றதுக்காக வச்சிருக்க காட்சிகள் தான் ரொம்ப அருவை ரகம். சுப்ரமணிய சிபிராஜ் வழக்கமான நாய்கள பழக்குற மாதிரி என்னென்னவோ சொல்லிப்பாக்குறாரு. ஆனா சுப்ரமணி எதுவுமே செய்யாது.

என்ன பண்றதுன்னு தெரியாம முழிக்கும் போது திடீர்ன்னு ஒரு ஆர்மி ஆஃபீஸர் “soldier sit” ன்னு சொன்னதும் சுப்ரமணி டக்குன்னு உக்காருறான். இந்த சீன ரொம்ப சாதாரணமா எடுத்துருக்காங்க. இப்ப பாக்குறப்பவே புல்லரிச்சிருச்சி. இன்னும் செம மாஸா எடுத்துருக்கலாம். அதுவும் இண்டர்வலுக்கு முன்னால வர்ற chasing la சுப்ரமணி பட்டையக் கெளப்பிருக்கும். படத்துல உருப்படியான சில விஷயங்கள்ல அதுவும் ஒண்ணு.

சிபிராஜ் wife ah வில்லன் கடத்தி ஒரு இடத்துல புதைச்சிருவான். Wife ah புதைச்ச பெட்டில ஒரு கேமரா வச்சி அதோட லைவ் வீடியோ சிபி லேப்டாப்ல டெலகாஸ்ட் ஆயிகிட்டு இருக்கும். இன்னும் ஆறு மணி நேரத்துல ஹீரோயின் செத்துருவாங்க. (Note this point : 6 மணி நேரம்) அதுக்குள்ள அவங்கள எங்க புதைச்சிருக்காங்கன்னு கண்டுபுடிக்கனும். அங்க தான் காமெடியே ஸ்டார்ட் ஆவுது. சிபிராஜ் அவர் கூட இருக்க அந்த நாலு பானிபூரி நண்பர்களோட இன்வெஸ்டிகேஷன் ஸ்டார்ட் பண்றாரு.

”தமிழ்ப்படம்” படத்துல ஹீரோயின வில்லன் துப்பாக்கியால சுடுவான். புல்லட் travelling la இருக்கும். அப்போ ஹீரோயின் “sivaaaaa” ன்னு கத்தும். உடனே ஹாஸ்பிட்டல்ல இருக்க சிவா எழுந்து exercise பண்ணுவாரு. போய் டீ குடிப்பாரு. மெதுவா ஆட்டோவுல ஏறி ஆட்டோகாரண்ட பேரம்லாம் பேசுவாறு. எல்லாம் பண்ணி கடைசில புல்லட் வர்றதுக்குள்ள ஹீரோயின காப்பாத்திருவாரு. தமிழ்ப்படத்துல சிவா காமெடியா பண்ண இந்த விஷயத்த சிபி இந்தப்படத்துல சீரியஸாவே பண்ணிருக்காரு.

ஆறுமணி நேரம்தான் அந்தப்புள்ளை உயிரோட இருக்கும்னோன நமக்கே கொஞ்சம் படபடப்பா இருக்கும். ஆனா சிபி அப்பதான் நாய ட்ரெய்ன் பண்ணுவாரு. எதுக்கு? ஆறு மணி நேரத்துக்குள்ள கண்டுபுடிக்க. டேய் இதுக்கு மேல நீ நாய ட்ரெய்ன் பண்ணி.. உன் பொண்டாட்டிய கண்டுபுடிச்சி… வெளங்கும். அந்தப்புள்ளைய புதைச்ச இடத்துலருந்து வீடியோ லைவ் டெலகாஸ்ட் ஆகும். ஆனா இவிங்களால கண்டுபுடிக்க முடியாது. அதுக்கு அவன் ஃப்ரண்டு “மாப்ள இண்டர்நெட்ல ஒருத்தன தேடுறதுங்குறது கடல்ல ஊசிய போட்டுட்டு  தேடுற மாதிரிடா” ம்பான். “டேய் பானிபூரி.. உனக்கு கண்டுபுடிக்க தெரியலன்ன தெரியலன்னு சொல்லு.. சும்மா வாயில வந்தத பேசிக்கிட்டு… “

அந்த லைவ் டெலகாஸ்ட்ல ஹீரோயின் இருக்க பொட்டிக்குள்ள தண்ணி வரும். உடனே எந்த ஏரியாவுல மழை பெய்யிதுன்னு பாப்பாங்க. “மாப்ள சென்னைய சுத்தி எந்த ஏரியாவுலயுமே மழை பெய்யல. இப்பதைக்கு தமிழ்நாட்டுலயே ஊட்டில மட்டும் தான் மழை பெய்யிது” ம்பான் ஒரு ஃப்ரண்டு. உடனே சிபி “அப்போ அவள ஊட்டிலதான் புதைச்சிருக்காங்க.. வாங்க ஊட்டிக்கு போவோம்” ம்பாரு. ஆமா ஏண்டா ஊட்டிக்கு போறீங்க. அப்டியே காஷ்மீர் வரைக்கும் பொய்ட்டு வாங்க. ஆறுமணி நேரத்துல எத்தனை ஊருக்குடா போவீங்க. 

கடைசில வில்லனுங்க அவனுங்களா வந்து மாட்டிக்க, சுப்ரமணியும் சிபியும் அவனுங்கள பிண்ணி பெடலெடுத்து அந்தப் புள்ளைய காப்பத்துறாங்க. ஹீரோயின தொலைச்சிட்டு தேடுற கதைகள் இந்த வருஷம் மட்டுமே அரிமா நம்பி, இரும்புக் குதிரைன்னு ரெண்டு வந்துருச்சி. இது மூணாவது. மொக்கை மொக்கையான லாஜிக் வச்சதுக்கு இன்னும் ரெண்டு மூணு ஆங்கிலப்படங்களப் பாத்து கொஞ்சம் ப்ரில்லியண்டான மூவ்ஸ் வச்சிருக்கலாம்.

சிபிராஜ் முன்னால இருந்தத விட இப்ப கொஞ்சம் பாக்குற மாதிரி இருக்காரு. ஆனா போலீஸ் கெட்டப் சூட் ஆகல. வசனம் பேசும்போதும் சரி நடிக்கும்போதும் சரி நிறைய இடங்கள்ல சத்யராஜ் தெரியிறாரு. “doggy style” பாட்டும் “பூமி சுற்றும் வரையே” பாட்டும் சூப்பர். BGM லாம் சுமார் தான்.

படம் முடிஞ்சி போயிட்டு இருக்கும்போது நண்பர் எண்ட ”ஜி.. படத்துல சுத்தமா செலவே இல்லஜி.. 5 லட்ச ரூவாய்ல எடுத்துருப்பாய்ங்க போல”ன்னாரு. அதுக்கு நா ”5 லட்சத்துலயெல்லாம் படம் எடுக்க முடியாதுஜி. நாய வேற வச்சி எடுத்துருக்காய்ங்கள்ள.. நிறைய டேக் வாங்கிருக்கும்ஜி” னேன். டக்குன்னு அவரு ”ஆமாஜி.. சின்ன நாய விட பெரிய நாய் நிறைய டேக் வாங்கிருக்கும்”ன்னு சொல்லி ஆஃப் பண்ணிட்டாரு.  


மொத்தத்துல அருமையா நடிக்கக்கூடிய ஒரு நாய வச்சி (இது சிபிராஜ் இல்ல) சூப்பர எடுத்துருக்க வேண்டிய ஒரு படத்த ரொம்ப சுமாராவே எடுத்துருக்காங்க. 


Thursday, November 20, 2014

கிழக்கே போகும் ரயில்!!!


Share/Bookmark
அதாவது பாத்தீங்கன்னா கடல்ல கப்பல் போகுது வானத்துல ஏரோப்ளேன் போகுது. இந்த மாதிரி பயணங்கள்ல கூட சந்திக்க முடியாத சில அரிய கேரக்டர்கள ரயில் பயணத்துல சந்திக்கலாம் சார்ன்னு பிதாமகன் சூர்யா மாதிரி நா ரம்பத்தப் போட விரும்பல. ஆனா மேட்டர் அது  தான்.  ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு ஃபீலிங்குங்குற மாதிரி ட்ரெயின்ல போற ஒவ்வொருத்தனும் ஒவ்வொரு மாதிரி. அவங்க அவங்க பண்ற ஆக்டிவிட்டிலருந்தே அவங்க யாரு.. எப்படிப்பட்டவங்க என்ன பண்ணிட்டு இருக்காங்கன்னு கண்டுபுடிச்சிடலாம். இதோ சில சாம்பிள்ஸ் உங்களுக்காக. இந்தப் பதிவு வெறும் நகைச்சுவைக்காகத்தானே தவிற யார் மனதையும் புண்படுத்தும் நோக்க்த்துடனோ அல்லது யாரையும் குறிப்பிட்டோ எழுதப்பட்டது அல்ல.

1. ட்ரெயின் கெளம்புறவரைக்கும் ஃபுல் டைட் ஜீன்ஸ், இறுக்கமா ஒரு ஷார்ட் ஷர்ட்டுன்னு போட்டுக்கிட்டு உக்காந்துருப்பாய்ங்க. ட்ரெயின் கெளம்ப ஒரு ஹார்ன் அடிச்சா போதும், உடனே  பேதி மாத்திரை திண்ண கவுண்டர் மாதிரி வேக வேகமா பாத்ரூமுள்ள போய், ஒரு கட்டம் போட்ட லுங்கியையோ இல்லை செந்தில் போடுற மாதிரி ஒரு தொள தொள ஷார்ட்ஸயோ மாத்திட்டு வந்து உக்காருவாய்ங்க. அதாவது அவரு ”கேஸுவலா” ட்ராவல் பண்றாராம். இந்த மாதிரி கேஸூவலா ட்ராவல் பண்றாய்ங்கண்ணா கண்டிப்பா அவன் அந்த ட்ரெயின் கடைசியா எந்த ஸ்டேஷனுக்குப் போகுதோ அங்க தான் இறங்கப் போறான்னு அர்த்தம்.

2. இன்னொருத்தன் நைட்டு ஏழரை மணிக்கு டெல்லிக்கு கெளம்புற தமிழ்நாடு எக்ஸ்பிரஸ்ஸுக்கு ஃபுல் ஃபார்மல்ஸ்ல வந்து உக்கந்துருப்பான். ரெண்டு நைட்டு ஒரு பகல்னு டெல்லிக்கு போய் சேருர வரைக்கும் உள்ள ஒண்ணரை நாள்லயும் அதே கெட் அப்புல உக்காந்துருந்தான்னா அவன மொத மொதலா அவன் கம்பெனிலருந்து வெளியூருக்கு  அனுப்பிருக்காங்கன்னு அர்த்தம்.

3. சென்னையிலருந்து கெளம்புன ட்ரெயினு ஆந்த்ராவ தாண்டி போயிட்டு இருக்கும் போது, குபீர்னு ஒரு புளியோதரை வாசம் அடிச்சா பக்கத்து கம்பார்ட்மெண்ட்ல ஒரு குடும்பம் ஆன்மீகச் சுற்றுலாவுக்கு போய்ட்டு இருக்குன்னு அர்த்தம். அப்டியே அவங்களுக்கு அடுத்த ஸ்டேஷன்ல இறங்கி வாட்டர் பாட்டில் வாங்கித் தர்றது, அந்த குடும்பத்துல இருக்க சின்னக் குழந்தைய உச்சாவுக்கு கூட்டிட்டு போறது மாதிரியான உதவிகளைச் செஞ்சோம்னா அடுத்த வேளைக்கு நமக்கும் அங்கருந்து புளியோதரையும் எள்ளுத் துவையலும் கன்ஃபார்ம்.

4. ”என்னாடா இப்பதான் இந்த ஸ்டேஷனே வர்றானா… ஆக்சுவலா ஒன் அவருக்கு முன்னாலயே இங்க வந்துருக்கனும்” ன்னு ஒவ்வொரு ஸ்டேஷன்லயும் எல்லாரோட காதுலயும் படுற மாதிரி ஒருத்தன் பேசிட்டு இருப்பான். அதாவது அவரு ஒரு frequent traveller ன்னு எல்லாருக்கும் தெரியனுமாம். ஆனா உண்மையிலயே நாயி நாலு வருசத்துக்கு முன்னால ஒரே ஒரு தடவ தான் அந்தப்பக்கம் ட்ரெயின்ல போயிருக்கும்.

5. ”ச்ச ச்ச… இன்டியால ட்ரெயின்லல்லாம் சாப்புடுறச்சே ரொம்ப கேர்ஃபுல்லா இருக்கனும்.. கண்ட கண்ட வாட்டர் யூஸ் பண்றா” ன்னு சொல்லிக்கிட்டே ஒரு வயசான ஜோடி சரவண பவன்ல வாங்குன அலுமினியம் foil உப்மாவையோ பொங்கலையோ பிரிச்சிக்கிட்டு சம்மணக்கால் போட்டு உக்காந்தாங்கண்ணா, அவங்க பையன் UK ல செட்டில் ஆயிட்டான்னும், பொண்ணை ஒரு அமெரிக்க மாப்பிள்ளைக்கு கட்டிக் குடுத்துட்டாங்கன்னும், இவங்க ஒரு மாசம் அயல்நாட்டுல போய் தங்கிட்டு வந்துருக்காங்கன்னும், அன்னிக்கு அவங்க கம்பார்ட்மெண்ட்ல போறவங்க காதுல ரத்தம் வரப்போகுதுன்னும் அர்த்தம். “இப்புடித்தான் US la ஒரு தடவ “ன்னு ஆரம்பிச்சா, ”அவங்க பையனுக்கு ஜஸ்ட் 5 lakhs தான் மாச சம்பளம்” ங்குற வரைக்கும் சொல்லி சேகர் சாவுறவரைக்கும் விடமாட்டங்க.

6. வாழ்க்கையிலயே என்னிக்காவது ஒரு நாள்தான் ஒரு புள்ளை நமக்கு பக்கத்து பெர்த்துக்கு வரும். ”அப்பாடா.. 36 மணி நேர ட்ராவல். இன்னிக்கு எப்புடியாவது பேசி பழகிற வேண்டியதுதான்” ன்னு நாம ஒரு form க்கு வரும் போது தான் அந்தக் குரல் கேக்கும். “சார்… if you don’t mind seat No:32 க்கு கொஞ்சம் ஷிஃப்ட் ஆயிக்க முடியுமா.. நாங்க ஃபேமிலியா வந்துருக்கோம். ஒரு சீட் மட்டும் தனியா இருக்கு அதான்” அப்டின்னு ஒருத்தர் வந்து பாவமா மூஞ்ச வச்சிக்கிட்டு கேப்பாரு. “ஏண்டா நீங்க மட்டும் தான் ஃபேமிலியா.. நாங்க என்ன ப்ளாட்பார்ம்ல பிச்சை எடுத்துக்கிட்டா இருக்கோம்” ன்னு சட்டையப் புடிச்சி கேக்கனும்னு தோணும். ஆனா ஃபிகர் முன்னால அசிங்கமா இப்டி கேட்டா நம்ம மதிப்பு என்னாவுறது… “why not… தாராளமா ஷிஃப்ட் ஆயிக்கிறேன்”ன்னு போயிருவோம்.

7. ரயில்வே கேண்டீன்லருந்து ஆர்டர் எடுக்க ஆள் வரும்போது எல்லாரும் டின்னர் ஆர்டர் பண்ணுவாங்க. ஆனா சில பேரு அவனுங்கள மதிக்கவே மாட்டாய்ங்க. “ட்ரெயின்லயெல்லாம் மனுசன் சாப்புடுவானா”ங்குற ரேஞ்சில எஃபெக்ட்ட குடுத்துக்கிட்டு உக்காந்திருப்பாய்ங்க. ”சார் ரொம்ப ஹைஜீனிக் போலருக்கு. ட்ரெயின் சாப்பாடெல்லாம் இவரு சாப்புட மாட்டாரு”ன்னு நாம நெனைப்போம். கொஞ்ச நேரத்துல ட்ரெயின் சூளுர்பேட்டையில நிக்கிற்ப்போ படக்குன்னு இறங்கி ரெண்டு தோசைய வெறுங்கையில வாங்கி அதுக்கு நடுவுலயே சட்னியையும் சாம்பாரையும் ஊத்தி பிச்சி திண்ணுகிட்டு ”ட்ரெயின்ல சாப்பாடெல்லாம் சரியில்ல மச்சி.. ரொம்ப ஏமாத்துராய்ங்க”ன்னு பேசிக்கிட்டே உள்ள வருவாய்ங்க.

8. இன்னும் சொல்லப்போனா சிலபேர் பண்ற சில ஆக்டிவிட்டிலருந்தே அவங்க வேலைகளைக் கண்டுபுடிக்கலாம். ட்ரெயின் புறப்பட்டோன லேப்டாப்ப எடுத்து அதுல ஒரு data card ah சொருகுனான்னா அவன் சாஃப்ட்வேரு. அவரு ஊருக்கு கிளம்புன ஸ்டேட்ஸ் ஃபேஸ்புக்குல அப்டேட் பண்ணிட்டு தான் போவாரு. ஆனா பேசின் பிரிட்ஜ் தாண்டுற வரைக்கும் தான் அந்த மோடமுக்கு சிக்னல் வரும்ங்குறது வேற விஷயம். அதே ட்ரெயின் புறப்பட்டோன எதோ ஒரு motivational ஆங்கில நாவல கையில எடுத்தான்னா, எதாவது கம்பெனில மேனேஜராக இருக்காருன்னும், அதுல படிச்சதெல்லாத்தையும் மறுநாள் அவரோட subordinate கிட்ட சொல்லி அறுக்கப் போறாருன்னும் அர்த்தம். அதே நாவல கையில எடுத்த அஞ்சாவது நிமிஷம் ட்ராக்டர் மாதிரி டர்ர்ர்ன்னு கொரட்டை விட்டான்னா அந்த புத்தகம் அவனோடது இல்லைன்னும், ட்ரெயின்ல வர்ற ஃபிகருங்க முன்னால சீன் போட அவன் ஃப்ரண்டுகிட்டருந்து கடன் வாங்கிட்டு வந்துருக்கான்னும் அர்த்தம்.இந்த மாதிரி எக்ஸ்பிரஸ்ல போறவங்க மட்டும் இல்லை. லோக்கல் ட்ரெயின்ல போறவங்களோட அலும்பும் கொஞ்சம் நஞ்சம் இல்லை.

9.எல்லா சீட்டுலயும் ஆள் உக்கார்ந்துருப்பாய்ங்க. ட்ரெயின் ஃபுல்லா போயிட்டு இருக்கும். ஸ்டாண்டிங்குல வேற நிறைய பேர் நின்னுகிட்டு இருப்பாய்ங்க. மூணு பேர் உக்கார்ர சீட்டுல ஏற்கனவே 3 unlimited meals உக்கார முடியாம உக்கார்ந்துருப்பாய்ங்க. அப்ப ஒருத்தன் வந்து “சார் கொஞ்சம்… கொஞ்சம் உள்ள தள்ளி உக்காருங்க.. தம்பி கொஞ்சம் நெருக்கி உக்காரு… ஆ.. கொஞ்சம் அப்டி., அப்டி”ன்னு சொல்லி அங்க ஒரு அரை அடி சீட்ட காலி பண்ணி அதுல அவரோட 4 அடி சீட்ட உக்கார வச்சிருவாரு. உக்காந்தோன பாக்கனுமே அவரு மூஞ்சில பெருமிதத்த.. அதாவது நிக்கிற மத்தவன்லாம் கேனையன் மாதிரியும், இவரு சாமர்த்தியமா இடத்த புடிச்சிட்ட மாதிரியும் மனசுக்குள்ள நினைப்பு. நெருக்கி உக்கார்ந்துருக்க வய்ங்களுக்குத் தான் தெரியும் வலி.

10.அடிச்சி புடிச்சி ஏறி “நாலு இலை உட்டு அஞ்சாவது இலையில தான் 
எனக்கே தம்மா தூண்டு கெடைச்சிது”ன்னு கோவை சரளா சொல்றமாதிரி, அவ்வளவு கூட்டத்துலயும் ஒருத்தனுக்கு இடம் கிடைக்கும். உக்கார்ந்தோன்ன ஓப்பன் பண்ணுவாரு லேப்டாப்ப.. உடனே ஒரு excel file ah ஓப்பன் பண்ணி என்னென்னவோ அடிப்பாய்ங்க. அதாவது அவரு பயண நேரத்த கொஞ்சம் கூட வேஸ்ட் பண்ணாம வேலை பாக்குறாராம். ஆஃபீஸ்ல வேலை பாக்க குடுக்குற நேரத்துல நாயி ஓப்பி அடிச்சிட்டு இருந்துட்டு கண்ட இடத்துல வந்து சீனப்போட்டுக்கிட்டு இருக்க வேண்டியது. லேப்டாப்பையே உத்து பாத்துக்கிட்டு இருந்து, இறங்க வேண்டிய ஸ்டாப்ப விட்டுட்டு ரெண்டு ஸ்டாப் தள்ளி இறங்கி ஒரு மணி நேரம் லேட்டா ஆஃபீஸ் போற காமெடிகளும் நடக்குறதுண்டு.

11.இன்னும் சில பேர் ஒரு முணு பேர் சீட்டப் புடிச்சிட்டிக்கிட்டு நல்லா கால அகட்டி “மல்லாக்க படுத்து விட்டத்தப் பாக்குறதுல என்னா சொகம்”ங்குற மாதிரி படுத்துருப்பாய்ங்க.  அடுத்தவன் அங்க நிக்க இடமில்லாம தவழ்ந்துகிட்டு இருப்பான். ஆனா இவிங்க அதயெல்லாம் கொஞ்சம் கூட கண்டுக்காம படுத்துருப்பாய்ங்க. அவிங்க யாருண்ணு பாத்தா, அதே ட்ரெயின்ல பல வருசமா வேலைக்கு பொய்ட்டு வர்றவியிங்களா இருக்கும். ஒரு இடத்துல 12 வருஷம் வாடகைக்கு இருந்துட்டா அந்த இடம் அவனுக்கே சொந்தம்னு சட்டம் இருக்கது மாதிரி இங்க சில பேரு மைண்ட் செட்ல திரிவாய்ங்க. வழக்கமா அவன் உக்காருர இடத்துல எவனாவது உக்காந்துட்டான்னா அவனுங்க கோவத்த பாக்கனுமே.. ஆத்தாடி. 

நன்றி: நண்பன் கார்த்தி & PPS

Monday, November 3, 2014

ராமவிலாசத்தில் ரணகளம்!!!


Share/Bookmark
ஹாஸ்டலுக்கும் காலேஜுக்கும் அப்புறம் காரைக்குடியில ஒரு இடத்துல அதிக நேரம் ஸ்பெண்ட் பன்னிருக்கோம்னா அது ராமவிலாசம் தியேட்டர்ல தான். தரை மொக்கை படத்துலருந்து தரமான படம் வரைக்கும் காமிச்சி எங்களுக்கு சினிமா அறிவை ஊட்டிய  தியேட்டர். டிக்கெட் எடுத்துட்டு முதல் தடவ உள்ள போற சில பேரு அய்யோய்யோ இடம் மாறி கல்யாண மண்டபத்துக்குள்ள வந்துட்டோமே” ன்னு திரும்ப வெளில வந்து பாக்குறதும் உண்டு. குறுக்க குறுக்க தூணுங்க, ஆணியில் நம்ம தலைக்கு மேல மாட்டி தொங்குற ஸ்பீக்கருங்க, பால்கனியிலருந்து எவனாவது ஒண்ணுக்கு போறதுக்கு எழுந்தாலே, ப்ரொஜெக்டர் லைட்டு அவன் தலையில பட்டு ஸ்கிரீன்ல அவன் தலை விழுகுறமாதிரி ஆப்பரேட்டர் ரூம்னு ராமவிலாசத்தோட பெருமைய சொல்லிக்கிட்டே போகலாம். எல்லா தியேட்டர்களும் AC/Dts dolby sorround  ன்னு என்னென்னமோ சிஸ்டத்தயெல்லாம் கொண்டு வந்தாலும் அங்க மட்டும் படம் ஓடும்போது கதவெல்லாம் திறந்து வச்சி இயற்கை ஏ/சியத்தான் நமக்கு போட்டு விடுவாய்ங்க.

கிட்டத்தட்ட காலேஜ் முடிய இன்னும் ரெண்டு மாசமோ மூணு மாசமோ இருந்த டைம். காரைக்குடி சத்தியன் தியேட்டர்ல வீராச்சாமி ரிலீஸ் ஆனதும் மொத்தமா கெளம்பி பசங்க போனாங்க.. என்னதான் டிஆர் படம்னாலும் ஒருத்தனால எவ்வளவு நேரம் சிரிக்க முடியும்? சிரிப்பு ஒரு கட்டத்துல வெறியா மாறி படம் முடிஞ்சி வெளில ஒட்டியிருந்த போஸ்டர்ல மண்ணை வாறி இறைச்சிட்டு வந்தாய்ங்க. பேச்சுக்கு சொல்லல.. உண்மையிலேயே மண்ணை வாறி இறைச்சாய்ங்க. இறைத்தவர் பெயர் கஜேந்திரன் (எ) கஜா. இன்னும் இங்க  தான் சுத்திக்கிட்டு இருக்காரு. மறு வாரமே ஜீவா நடித்த உலக மகா காவியமான பொறி ரிலீஸ் ஆக இருந்ததால நா வீராசாமிக்கு போகல.. என்ன எல்லாம் பணப்பற்றாக்குறை தான்.

அடுத்த வாரம் பொறி ராம விலாசத்துல ரிலீஸ் ஆகவும் சங்கத்த கூட்டிக்கிட்டு நைட் ஷோக்கு கிளம்புனோம். ஒரு நாலஞ்சி பேர் தான் இருந்தால சங்கத்துல ஆள் பத்தலை. எவனையாச்சும் மண்டையக் கழுவி கூப்டு போகனுமேன்னு பாத்தா எல்லாரும் உசார இருக்காய்ங்க. அப்போ பாத்து வந்தான் நம்ம ’ஆல்பஸ்’ விஜய் (Albus dumbledore மீது கொண்ட வெறியினால் தனது பெயரை அவரே அப்படி மாற்றிக்கொண்டார்) அவண்ட  போய் மச்சி வாடா படத்துக்கு போவோம்னு சொன்னதும் “இல்லை மச்சி போன வாரம் தாண்டா வீராச்சாமி போனேன். நா வரலடான்னுட்டான்.

என்னடா இவன் இப்புடி சொல்றான். இவன விட்டா வேற ஆள் இல்லையே. சரி இவனை விட்டா சரியா வராதுன்னு நா “மச்சி திருடா திருடி டைரக்டர்டா.. படம் பட்டையக் கெளப்பும் வாடா” ன்னா இல்லை மச்சி நீங்க பொய்ட்டு வாங்கடான்னுட்டான். அப்ப போட்டான் ப்ரவீன் ஒரு பிட்ட. சோகமா மூஞ்ச வச்சிக்கிட்டு “என்ன மச்சி.. நம்மலாம் காலேஜ்ல இருக்கப்போறதே இன்னும் ரெண்டு மாசம் தான்... உன்கூடல்லாம் இனிமே எப்படா சேந்து படம் பாக்கப்போறோம்.. சரி விடு மச்சி நாங்க பொய்ட்டு வர்றோம்”ன்னு சொன்னது தான் தெரியும்... லா லலலல லால்லா... ”இரு மச்சி நானும் வர்றேன்”ன்னு விஜய் உடனே ரூமுக்கு போய் சட்டை மாத்திட்டு வர, உனக்கெல்லாம் விகரமன் டெக்னிக் தாண்டா கரெக்டுன்னு நெனைச்சிக்கிட்டு ப்ரவீன பாத்து சொன்னேன் “ராஜ தந்திரங்களைக் கரைத்துக் குடித்திருக்கிறாயடா”. செருப்பால அடிச்சா திருந்தாதவன கூட செண்டிமெண்ட்டால அடிச்சா திருந்திருவாண்டா. 

நாக்கு தள்ள சைக்கிள மிதிச்சிட்டு தியேட்டருக்குப் போனா, அங்க கிட்டத்தட்ட ஒரு பத்து பதினைச்சி பேர் இருந்தாங்க. நா அப்டியே ஸ்டண் ஆயிட்டேன். படம் போடுவய்ங்களா மாட்டாய்ங்களான்னே ட்வுட்டாப் போச்சி. ஒரு வழியா இருபது பேர் ரவுண்டா வந்தொன்ன படத்த போட்டாய்ங்க. இதுல நாங்க 5 பேரும் பால்கனியில.. யாருமே இல்லாம தியேட்டர்ல படம் பாக்கவும் கொஞ்சம் பீதியாத்தான்யா இருக்குன்னு நெனைச்சிட்டு பாத்தோம். படம் ஓடும்போது தான் தெரிஞ்சிது பொறிக்கு வந்தது எங்களுக்கு நாங்களே வச்சிக்கிட்ட ”பொறி”ன்னு.

மேஜர் சுந்தர்ராஜன் மாதிரி “என்னோட இத்தனை வருச சர்வீஸ்ல இப்புடி ஒரு படத்த பாத்ததே இல்லை”ன்னு மாத்தி மாத்தி சொல்லிகிட்டோம்.  ”மச்சி இதுக்கு வீராச்சாமியையே இன்னொருதபா பாத்துருக்கலாம்டா” ன்னு நானும் பிரவீனும் பேசிட்டு இருக்க நாங்க மண்டையக் கழுவி அழைச்சிட்டு போன விஜய் லைட்டா எங்கள திரும்பிப் பாத்தான்.. உடனே நாங்க அவன் காதுல விழுற மாதிரி “படம் ஓக்கே தான் மச்சி.. கொஞ்சம் ஸ்லோ.. பட் இண்ட்ரஸ்டிங்” ன்னு சொல்லிட்டு மூஞ்சிய திருப்பிட்டோம்.

இடைவேளையில வெளில வந்து நின்னு படத்த கிண்டல்பன்னி ஓட்டிட்டு இருக்கும் போது டிக்கெட் குடுக்குறவர் சிரிச்சிகிட்டே “இப்பவே போயிருங்க தம்பி.. நா வேனா மேனஜர்ட்ட சொல்லி பாதி காச வாங்கித் தர்றேன்” ன்னு சொல்லிட்டு போனாரு. (இதுவும் உண்மை) அவர் சொன்ன பேச்சை கேட்டாவது அப்பவே வந்துருக்கலாம்.இதுவரைக்குமே ஒரே நாள்ல ரெண்டு தடவ பாத்தது ரெண்டே படங்களைத் தான். அது ரெண்டும் ராமவிலாசத்துல தான். ஒன்னு சந்திரமுகி. இன்னொன்னு அந்நியன். சந்திரமுகி பாத்தது ஒரு மறக்க முடியாத சம்பவம். தனியா படம் பாக்க ஆரம்பிச்சி முதல் முதலா ரிலீஸ் ஆகப்போற தலைவர் படம். அதுக்கு முன்னால வந்த படங்களுக்கெல்லாம் படம் வந்து பத்து பதினைஞ்சி நாள் கழிச்சி வீட்டுல அழைச்சிட்டு போறப்போ தான். சந்திரமுகி பாட்டு கேசட் வாங்க முன்பதிவு பன்னி விடிய காலமே எழுந்து கடை முன்னால நின்னு வாங்கிட்டு வந்தேன்.

பாட்டு கேசட் ஈஸியா கெடைச்சிரும். படத்துக்கு டிக்கெட் எப்புடி கிடைக்கும்ன்னு நினைச்சிட்டு இருக்கப்போதான்  நம்ம நண்பன் மோகன்குமாரு ஃபோன் பண்ணான் படம் ரிலீஸ் ஆக ரெண்டு நாளுக்கு முன்னால ஃபோன் பண்ணி “மச்சி.. மொத ஷோ டிக்கெட் ரசிகர் மன்றத்துல விக்கிறாங்கடா.. 50 ரூவா.. வாங்கிடவா?” ன்னான். ”மச்சி.. இதுவரைக்கும் வாழ்க்கையில நீ பண்ண ஒரே நல்ல காரியம் இதாண்டா.. தயவு செஞ்சி வாங்கிட்டு வாடா.. ”ன்னு சொல்ல, சாயங்காலத்துக்குள்ள விஷயம் தீயா பரவி அனைவரும் 50 ரூவா டிக்கெட் மொத ஷோவுக்கு வாங்கியாச்சு..

காலையில எட்டு மணிக்கு ஷோ.. காலேஜ்ல இருந்த மொத்த சைக்கிளும் ராமவிலாசத்துக்கு போக, போற வழியில ஒரு நாலு சைக்கிளு மட்டும் சத்தியன் தியேட்டருக்கு மும்பை எக்ஸ்பிரஸூக்கும் ஒரே ஒரு சைக்கிள் பாண்டியன் தியேட்டருக்கு சச்சின் பாக்கவும் திரும்பிருச்சி. 7 மணிக்கெல்லாம் ராம விலாசம் போயாச்சி. ஹப்பாடா... மொத தடவையா தலைவர் படம் மொத ஷோ பாக்கப்போறோம்ன்னு ஐ ஆம் வெரி ஹாப்பி. கூட்டம் ஃபுல்லா சேந்தும் யாரையும் உள்ள விடவே இல்லை. டேய் மணி 7.45 ஆச்சு இன்னும் என்னடா
பண்றாய்ங்கன்னு பாத்த அங்கருந்த ஒருத்தன் “இருங்க பாஸ் இன்னும் வர வேண்டியது வரல”ன்னான். “அடப்பாவிகளா இன்னும் பொட்டி வரலாயா” ன்னு வெறிக்க “அட பொட்டியெல்லம் முன்னாலயே வந்துருச்சி. இன்னொன்னு வரவேண்டியிருக்கு... அது வந்தாத்தான் உள்ள விடுவோம்”ன்னான்

பொட்டியத்தவற வேற என்னப்பா வரவேண்டியிருக்குன்னு எதிர்பாத்துக்கிட்டு இருக்கும்போது தான் அது வந்துச்சி.. வேற ஒண்ணும் இல்லை. பக்கத்துல உள்ள கோயில்லருந்து காவடி பால்குடம் தீச்சட்டி எடுத்துக்கிட்டு தியெட்டருக்கு ஒரு குரூப்பே வந்துச்சி.. அதெல்லாம் பாத்தோன்னா அப்டியே புல்லரிச்சிருச்சி...காரைக்குடி காரவுகல்லாம் அவ்வளவு வெறியர்களாய்யா... உங்க கூட படம் பாக்கவே பெருமையா இருக்குய்யான்னு நெனைச்சிட்டு உள்ள போனோம். ஆனா அவிங்க அத விட வெறியன்கள்னு அதுக்கப்புறம்
தான் தெரிஞ்சிது.

500 சீட்ட தியேட்டர்ல வச்சிகிட்டு 5000 டிக்கெட் குடுத்துட்டாய்ங்க போல.. உள்ள போய் சீட்ட புடிக்கிறதுக்குள்ளயே நாக்கு தள்ளிருச்சி. 40 பேர் உக்கார வேண்டிய வரிசையில நம்ம பசங்கல்லாம் ஒண்ணுமேல ஒண்ணா ஒரு 60 பேர் உக்காந்துருந்தோம். எங்களுக்கு பின்னால ஃபைனல் இயர் பசங்க ஒரு 10 பேர்.. காலேஜ் முடியப்போற சமயத்த எஞ்சாய் பண்ண வந்திருந்தாங்க. படம் ஆரம்பிச்சி ‘super star" டைட்டில் போடும்போது டமால்ல்ல்ல்ல்ல்ல் டமால்ல்ல்ல்ல்ன்னு சத்தம். தூக்கி வாரிப்போட்டு அய்யய்யோ எவனோ பாம்
வச்சிட்டாய்ங்கடான்னு பாத்தா திருவிழாவுக்கு போடுற அனுகுண்டு சரத்த தியேட்டருக்கு உள்ள எவனோ வச்சி பத்தவச்சிட்டாய்ங்க.. ஆனாலும் உங்க வெறி இந்த அளவு இருக்கக் கூடாதுப்பா.. தியேட்டருக்குள்ள வெடி வச்சி நா அங்கதான்யா பாத்தேன்.

எங்களுக்கு சைடுல ஒரு நாலு செம தண்ணி வண்டிங்க.. காலையிலயே ஃபுல் மப்ப ஏத்திட்டு உள்ள வந்துட்டானுங்க போல.. அதுவும் அவனுங்க உள்ள உக்காந்துருந்தது ஃபைனல் இயர் பசங்களுக்கு முன்னாடி.டைட்டில் போடும்போதே பால்கனியிலிருந்தனுங்க மருத்துவர் அய்யாவ காது குடுத்து கேக்கமுடியாத வார்த்தைகளால அபிஷேகம் பண்ண இன்னொரு குரூப்பு கையிருப்புல இருந்த சரக்க பன்னீர் மாதிரி மேலருந்து தெளிக்க ஆரம்பிச்சிட்டாய்ங்க. டேய் நீங்க குடிக்கிறது மட்டும் இல்லாமா ஏண்டா எங்க
மேலயெல்லாம் ஊத்தி விடுறீங்க.

”நாந்தான் இஞ்ஜினியர் குமார் பேசுறேன்சார்... சீக்கிரமா வாங்க சார்” ன்னு தியாகு சொல்ல ஒரு கார் சர்ர்ர்ர்ன்னு வந்து திரும்பி தலைவரோட கால் தெரிஞ்சது தான் போதும்.. நாங்கல்லாம் எழுந்து நின்னு கத்த பக்கத்துல இருந்த தண்ணி வண்டிங்க chair மேல ஏறி நின்னு ஆட ஆரபிச்சிட்டாய்ங்க. இவிங்க மேல ஏறி ஆட ஆரம்பிச்சதால பின்னால இருந்த சீனியருங்களுக்கு மறைக்க ஆரம்பிக்க, அவனுங்க “ஹலோ .. ஹலோ உக்காருங்க”ன்னு சொல்லிருப்பாய்ங்க போல... ஆனா ”பொளேர் பொளேர்”னு சத்தம் கேட்டுதான் நாங்க திரும்புனோம். 

ஒரு சீனியரு கன்னத்துல கைய வச்சிட்டு இருந்தாப்டி. “தலைவர் படத்துக்கு வந்துருக்குறோம்.. சும்மா ஓக்காரு ஒக்காருன்னுட்டு.. மூடிட்டு பாருடா”ன்னு திட்டிட்டு அந்த தண்ணி வண்டி பாட்டுக்கு ஆட்டத்தகண்டிநியூ பண்ண ஆரம்பிக்க, அடிவாங்குன சீனியரும் அவரு குரூப்பும் மொத்தமா அப்பவே தியேட்டர விட்டு கிளம்பிட்டாங்க. எஞ்ஜாய் பண்ண வந்தவங்கள இப்புடி ஓப்பனிங்குலயே எண்டு கார்டு போட்டு அனுப்பிட்டாய்ங்க.

ஆத்தாடி மொரட்டுத் தனமாவுள்ள இருக்காய்ங்க.. அதுக்கப்புறம் எனக்குக் கூட ரெண்டு மூணு தடவ முன்னாடி இருக்கவன் மறைச்சான். “பரவால்லண்ணே.. நா அட்ஜஸ்ட் பண்ணிக்கிறேன்.. நீங்க நல்லா மேல ஏறி நின்னு ஆடுங்க.. நா அப்புறம் கூட வந்து பாத்துக்குறேன்” ன்னு நெனைச்சிட்டு பாத்துட்டு வந்தோம். மொத ரெண்டு நாள்ல சந்திரமுகி மூணு தடவ பாத்தேன். அத எதேச்சையா ஃபோன் பண்ண எங்க அண்ணன்கிட்ட சொல்ல, அவன் அப்புடியே எங்க வீட்டுல சொல்ல, அடுத்த தடவ நா ஊருக்கு போனப்போ “ஏண்டா.. குடுத்த காசுக்கெல்லம படம் தான் பாத்தியா?”ன்னு எஙக் வீட்டுல என்ன வீட்ட சுத்தி சுத்தி ஓடவிட்டு அடிச்சதெல்லாம் வேற கதை.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...