Friday, October 20, 2017

மெர்சல் - ஜில் ஜங் ஜக்!!!


Share/Bookmark
இத்தனை வருஷ தமிழ் சினிமா எத்தனையோ பரிணாம வளர்ச்சிகள அடைஞ்சிருக்கு. ஆனா என்ன வளர்ச்சி அடைஞ்சாலும் மாறாம இருக்கது இந்த மாஸ் ஹீரோக்களோட பழி வாங்குற கதைகள். இந்தக் கதைக்கான டெம்ளேட் ரொம்ப சிம்பிள். மூணு அல்லது நாலு வில்லன்கள். பெரும்பாலும் கவர்மெண்ட் ஆஃபீசர்களா இருப்பாங்க. ஒரு டாக்டர், ஒரு வக்கீல், ஒரு போலீஸ் மற்றும் இதுல ஒரு அரசியல்வாதியையும் சேர்த்துக்கொள்ளுதல் உசிதம்.  முதல் பாதி முழுக்க ஹீரோ போலீஸூக்கு தண்ணி காட்டி ஒவ்வொருத்தரா கடத்திக் கொல்லுவாறு. இந்த கேப்புல ஒரு நல்ல புள்ளையா பாத்து லவ்வுவாறு.  ரெண்டாவது பாதிலயோ இல்ல இண்டர்வல்லயோ ஹீரோயினுக்கு இவன் ஒரு கொலைகாரன்னு தெரிஞ்ச உடனே “ச்சீ…ரேஸ்கல்.. நீ ஒரு கொலைகாரனா”ன்னு காரித் துப்பிட்டு விலகிப் போகும்போது, ஹீரோ கூடவே சுத்துற ஒரு அள்ளக்கை அந்தப் புள்ளைய நிறுத்தி “அவன் ஏன் அவனுங்களயெல்லாம் கொல்றான் தெரியுமாம்மா?”ன்னு ஆரம்பிச்சி வலுக்கட்டாயமா அந்த புள்ளைக்கிட்ட ஒரு மொக்கை ஃப்ளாஷ்பேக்க சொல்லுவானுங்க.

ஃப்ளாஷ்பேக்குல ஹீரோவுக்கு நெருக்கமான ஒருத்தர் இறந்துருப்பாங்க. ஃப்ளாஷ் பேக் முடிஞ்ச உடனே கொல்றதுக்கு இன்னும் ஒரே ஒருத்தன் மட்டும் பாக்கியிருப்பான். அது யாருன்னு பாத்தா ஹீரோயினோட அப்பாவா இருக்கும். பத்து நிமிஷ ஃப்ளாஷ்பேக்க கேட்டுட்டு இத்தனை வருஷம் வளர்த்த அப்பாவ கொல்றதுக்கு ”நா உதவி பன்றேன்”னு வாய் கூசாம சொல்லும். அத்தோட விட மாட்டானுங்க.  அந்த இடத்துல கட் பண்ணி ஒரு குத்து சாங்க போட்டு விடுவானுங்க. இதான் காலங் காலமா பாக்குற நமக்கு சலிச்சிப் போனாலும் எடுக்குற அவங்களுக்கு சலிக்காம எடுத்து நமக்கு போட்டுக்காட்டுற பழிவாங்குற கதைகள். 

அட்லி விஜய்ய வச்சி அடுத்த படம் எடுக்க போறாருங்குற நியூஸ் வந்த உடனே எல்லார் மனசுலயும் தோணுன ஒரே கேள்வி ”இந்த தடவ எந்த படத்துலருந்து எடுக்கப் போறாரு”ன்னு தான். ஏன்னா நம்மாளு ட்ராக் ரெக்கார்டு அப்டி. அதுவும் மூணு விஜய்ன்ன உடனே தமிழ்ல ஏற்கனவே அந்த காம்பினேஷன்ல வந்தது மூன்று முகம், அபூர்வ சகோதரர்கள்ன்னு ஒரு சில படங்கள் தான். அதுலயும் ஒருத்தர் மேஜிஷியன்ங்குற செய்தி வந்த உடனே அந்த காம்பினேஷன்ல வந்துருக்க படம் ப்ரஸ்டீஜ். சரி இதையெல்லாம் கலந்து விட்டு ஒரு மாதிரியான படமா எடுக்கப்போறாருன்னு நாமல்லாம் ஒரு யூகமா வச்சிருந்தா, இந்த அட்லீ பாருங்க நம்ம மனசு கஷ்டப்படக் கூடாதுன்னு நம்ம நினைச்ச மாதிரியே எடுத்து வச்சிருக்காப்ள.  

ரெண்டு நாளுக்கு முன்னால நண்பர் ஒருத்தர்கிட்ட மெர்சல் பத்தி பேசிக்கிட்டு இருந்தேன்.  ”படம் எப்டி இருக்கப்போவுதுன்னு தெரியலஜி “ ன்னு நான் சொன்னதுக்கு அவரு சிம்பிளா ஒரு பதில் சொன்னாரு. ”ஜி.. விஜய் படத்துல ரெண்டே வகை தான். ஒண்ணு விஜய் ஃபேன்ஸ்க்கு எண்டர்டெய்ண்மெண்ட்டா இருக்கும். இல்லைன்னா நமக்கு எண்டர்டெய்ண்ட்மெண்ட்டா இருக்கும். ஆனா கண்டிப்பா எண்டர்டெய்ண்ட்மெண்ட் மட்டும் உறுதி”ன்னு. பட் அந்த டீலிங் எனக்கு ரொம்ப புடிச்சிருந்துச்சி.

பொதுவா விஜய் படங்கள்ல மேல சொன்ன மாதிரி எதாவது ஒரு பக்க எண்டர்டெய்ண்மெண்ட் தான் படம் முழுசுமே இருக்கும். ஆனா அட்லி கொஞ்சம் வித்யாசமா எல்லா ஆடியன்ஸையும் கவர் பன்ற மாதிரி ஒரு பாதி விஜய் ஃபேன்ஸூக்கும் இன்னொரு பாதிய நமக்கும் இருக்க மாதிரி சரிபாதியா பிரிச்சி வச்சி செஞ்சிருக்காரு.  

தேணாண்டாள் பிலிம்ஸ் லெட்டர் பேட்ல ப்ரிண்ட் செய்யப்பட்ட மெர்சல் படத்தோட கதைச் சுருக்கம் லீக் ஆனத நிறைய பேர் பாத்துருப்பீங்க. அச்சு பிசிறாம அதே தான் கதை. மருத்துவத் துறையைச் சேர்ந்த ஒருசிலர் முதல் பாதில கொல்லப்பட, அவங்க ஏன் கொல்லப்பட்டாங்கங்குறதுக்கான காரணத்த விளக்குறதுதான் ரெண்டாவது பாதி. 

டாக்டர் மாறனா நடிச்சிருக்க விஜய்யோட கெட்டபும், உடல்மொழியும், வசன உச்சரிப்புகளும் சூப்பர். இந்த மாதிரி அமைதியான, அலட்டல் இல்லாத விஜய்யப் பாத்தே ரொம்ப நாளாச்சி. சுருக்கமா சொன்னா நம்ம விஜய் ஆண்டனி சலீம், பிச்சைக்காரன் படங்கள்ல பேசுற மாதிரி விஜய் பேசிருக்காரு..

வேஷ்டி சட்டையோட ஏர்போர்ட்டுக்குள்ள நுழையும்போது கெத்தா இருக்காரு. கூடவே வைகைப்புயல் வடிவேலு. காமெடி பிரிக்கப் போறாங்கன்னு எதிர்பாத்தா, காமெடிங்குறதுக்கான அறிகுறியே படத்துல தென்படல. மெஜீஷியனா வர்ற விஜய் மெஜீஷியனா இல்ல மந்திரவாதியான்னு ஒரே கன்பீசனா இருக்கு. சண்டை நடந்துகிட்டு இருக்கும்போது காஜலோட Bag ல என்ன இருக்குன்னு கேக்குறாரு. அது எதோ முப்பாத்தம்மன் ஃபோட்டோன்னு சொல்லுது. உடனே நம்மாளு அது போதுமேன்னு சொல்லிட்டு அந்த சின்ன ஹேண்ட் Bag லருந்து ஆளுயர சூளாயுதம் ஒண்ண வெளிய எடுத்து சண்டை போடுறாரு.  ஏண்ணே… மேஜிக்னாலும் ஒரு நாயம் வேணாமாண்ணே.. 

முதல்பாதி முழுக்க ரொம்ப அழகாவும், சுவாரஸ்யமாவும் போகுது. ரெண்டாவது பாதி ஆரம்பிச்ச உடனே நம்ம ஆளப்போற தமிழன் உள்ள வர்றாரு. படம் படுத்துருது. சுவாரஸ்யமே இல்லாம ஏனோதானோன்னு கதை நகருது. ”மண்ண அள்ளாதீங்க, தண்ணிய உரியாதீங்க”ன்னு சும்மா வந்ததுக்கு எதயாவது பேசனுமேன்னு பேசிக்கிட்டு இருக்காரு. வில்லனால அவரும் அவரோட மனைவியும் கொல்லப்பட அந்த நீ……ண்ட ஃப்ளாஷ்பேக் முடியிது. 

மத்த பழிவாங்குற படங்களுக்கும் இந்தப் படத்துக்கும் ரெண்டு மிகப்பெரிய வித்யாசத்த இயக்குனர் அட்லி உருவாக்கிருக்காரு. என்னன்னா வழக்கமா மூணு வில்லன்கள் இருப்பானுங்க. ஆனா இந்தப் படத்துல ரெண்டு தான். அடுத்து ஃப்ளாஷ்பேக் முடிஞ்ச உடனே வர்ற குத்துப்பாட்டு இந்தப் படத்துல இல்லை. 

மூணு ஹீரோயின்கள்லயும் நித்யா மேன்ன் மட்டும்தான் கொஞ்ச நேரம் ஸ்கீரின்ல வருது. ஆனா அத ஏன் பஞ்சாபியா காமிச்சாங்க, ஏன் விஜய் பஞ்சாப்லருந்து ஆளப்போறான் தமிழன்னு பாடுனாருங்குற கேள்வியெல்லாம் நிறைய இருக்கு. (தமிழ்நாட்டுல பாடுனாதான் கழுத்தாம்பட்டையிலயே போடுறாய்ங்களே) காஜலும், சமந்தாவும் மின்னல் மாதிரி வந்துட்டு ஜொய்ங்குன்னு போயிடுறாங்க. பிரதர், சிஸ்டர்னு சொல்லிட்டு அப்புறம் அவங்கள லவ் பன்ன வைக்கிற அருவருப்பான சீக்குவன்ஸ அட்லி விடமாட்டாப்ள போல.எஸ்.ஜே.சூர்யா அவரோட கேரக்டர அசால்ட்டா பண்ணிருக்காரு. வழக்கமான வில்லன். பெரிய அளவுல ஸ்பெஷலா சொல்றதுக்கு எதுவும் இல்லை. 

சமூகக் கருத்துக்கள மசாலா கலந்து ஜனரஞ்சகமா சொல்றது ஷங்கரோட பாணி. அதே பாணிய அவரோட சிஷ்யன் அட்லியும் ஃபாலோ பன்னிருக்காரு.. பாணிய மட்டும் ஃபாலோ பன்னா பரவால்ல. ஷங்கர் படத்துல வந்த காட்சிகளையுமா அப்படியே ஃபாலோ பன்னிருக்காரு. மெர்சல் படத்துல வர்ற ஒவ்வொரு காட்சியும் ஒவ்வொரு படங்கள்ல ஏற்கனவே பார்த்தது. அதுக்காகவே தனியா ஒரு பதிவு கூட எழுதலாம். அடுத்தடுத்து வரப்போற காட்சிகளையும் ரொம்ப ஈஸியா யூகிக்க முடியுது.

லாஜிக்ல ஓட்டை இருக்கும்னு பாத்தா சத்யமா இல்லை. ஓட்டையிலதான் லாஜிக்கே இருக்கு. உதாரணமா எஸ்.ஜே.சூர்யா முதல் முதலா விஜய் முகத்த டிவில பாத்ததுமே ரமணா படத்து விஜயன் மாதிரி “நோ”ன்னு கத்துறாரு. ஆனா முதல்ல கொல்லப்படும் வில்லன் விஜய் கூட சகஜமா பேசிகிட்டு இருக்காரு. அவருக்கு எந்த ஞாபகமும் வரல. விஜய் முகத்த அடையாளமும் தெரியல. என்ன மிஸ்டர் பிள்ளைவாள்?

கடைசி வில்லனையும் கொண்ணதுக்கு அப்புறம் கத்தி படத்துல பேசுன மாதிரி, உ.பில ஆக்ஸிசன் இல்லாம இறந்த குழந்தைகள், மனைவியின் சடலத்த கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் கிடைக்காத பரிதாபம்னு சமீபத்துல நடந்த சம்பவங்களையெல்லாம் நினைவுபடுத்தி ஒரு நீண்ட வசனம் பேசுறாரு. சினிமாவுல இந்த மாதிரி current affairs பத்தியெல்லாம் பேசுனா மக்கள்ட நல்லா ரீச் ஆகலாம்னு யாரும் நம்மாளுக்கு ஐடியா சொல்லிக்குடுத்துருப்பாங்க போல. இதப் பத்தியெல்லாம் பேசனும்னு ஆசைப்பட்டா அவர் நேரடியாவே பேசலாம். சினிமாவப் பொறுத்த அளவுல ஒரு நடிகர் அவர் எடுத்துக்கிட்ட கதைக்கும், கதைக்களத்துக்கும் நியாயம் செஞ்சா போதும். 

அதுலயும் இப்ப இருக்க நடிகர்கள் பெரும்பாலானோர் மக்களோட உணர்சிகளை காசாக்க முயற்சி செஞ்சிட்டு இருக்காங்க. ஜல்லிக்கட்ட காப்பாத்துறேன், விவசாயத்த காப்பாத்துறேன்னு சமீபத்துல வந்த நிறைய படங்கள்ல கதைக்கும் வசனத்துக்கும் சம்பந்தமே இல்லாம இடைச்சொருகலா வசனங்களையும் காட்சிகளையும் உள்ள சொருகிட்டு இருக்காங்க. மக்கள் எப்போதுமே ரொம்ப தெளிவுங்க சார்.

மெர்சலுக்கு ஏ.ஆர். ரஹ்மான்னு இசைன்னு சொல்றாங்க. ஆனா  பிண்ணனி இசையிலயெல்லாம் எங்கடா ரஹ்மானக் காணாம்னு கரண்டி போட்டு தொழாவ வேண்டியிருக்கு. ஒண்ணும் சிறப்பா இல்லை. ஆனா ஏற்கனவே இருந்த விஜய்-ரஹ்மான் செண்டிமெண்ட்ட இந்தப் படம் கண்டிப்பா உடைக்கும். உதயா, அழகிய தமிழ்மகன் மாதிரி இந்தப் படம் கொடூர ஃப்ளாப் ஆக வாய்ப்பே இல்லை.

மொத்தத்தில் மெர்சல் முதல் பாதி அருமை. ரெண்டாவது பாதி பார்க்க தேவை நிறைய பொறுமை. விஜய் ஒருவருக்காக கட்டாயம் பார்க்கலாம். 

Monday, October 2, 2017

கருப்பன் என்கிற கடுப்பன்!!!


Share/Bookmark
நாட்டுல ரொம்ப முக்கியமான சம்பங்கள் எதாவது நடந்து முடியிறப்போ அடுத்த ஒருவாரம் பத்துநாள்ல அந்த சம்பவத்தை மையமாக வச்சி ஒரு படம் வரப்போகுதுன்னு கண்டிப்பா ஒரு அறிவிப்பு வந்தே தீரும். அப்படி இந்த வருஷம் ஜனவரில நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது போடப்பட்ட பூஜைதான் இந்த கருப்பன் போல.

ட்ரெயிலரப் பாக்குறப்போ எதோ ஜல்லிக்கட்ட மையமா வச்சி எடுக்கப்பட்ட ஒரு கிராமத்து ஆக்‌ஷன் படம் மாதிரி தோணுச்சி. ஆனா படத்தோட ஆரம்பத்துலயும் க்ளைமாக்ஸ்லயும் வர்ற வாடிவாசல் காட்சிகளத் தவற  படத்துக்கும் ஜல்லிக்கட்டுக்கும் சம்பந்தம் இல்ல.


படம் ஆரம்பிச்சி ரொம்ப நேரம் ஆகியும் படத்தோட கதை என்ன , எதை நோக்கிப் போயிட்டு இருக்கு அப்டிங்குறதயே புரிஞ்சிக்க முடியல. ”புரிஞ்சி போச்சு சார்… இண்டர்வல் ப்ளாக்குல வச்சிருக்கீங்க ட்விஸ்ட்ட” அப்டின்னு பயணம் படத்துல பிரித்திவிராஜ் ரசிகன் வெய்ட்  பன்றமாதிரி வெய்ட் பன்னா இண்டர்வலும் வந்துருச்சி. ஆனா கதைக்கான எந்த அறிகுறியும் இல்லை. “செகண்ட் ஹாஃப்ல மொத்தக் கதையும் சொல்லலாம்னு தானே வெய்ட் பன்றீங்க… தெரியும் சார்”ன்னு மறுபடியும் செகண்ட் ஹாஃப் பாத்தா படமே முடிஞ்சி போச்சு. கடைசிலதான் படத்தோட கதையே நமக்கு வெளங்குச்சி. ”கதையே இல்லாம படம் எடுக்குறது எப்படி?” அப்டிங்குறத்த்தான் இந்தப் படத்தோட கதையே.

மாடுபிடி வீரனான கருப்பனுக்கு, தன்னோட மாட்டை அடக்குனா தங்கச்சிய கல்யாணம் பன்னித்தர்றேன்னு வாக்கு குடுக்குறாரு ஊர்ல பெரிய கையான பசுபதி. கருப்பனும் மாட்ட அடக்கிட, அழகான தங்கச்சிய கருப்பனுக்கு கட்டி வச்சிடுறாங்க. ஆனா பாருங்க பசுபதியோட மச்சான் பாபி சிம்ஹா இளவு காத்த கிளி மாதிரி அந்தப் புள்ளைய கல்யாணம் பன்னிக்க மாமா வீட்டுலயே குத்த வச்சி உக்கார்ந்துருக்க, நேத்து வந்த கருப்பன் லபக்குன்னு கவ்விக்கிட்டுப் போயிட பாபி சிம்ஹாவுக்கு கோவம் வருது பாருங்க… ”அவளுக்கு எத்தனை கல்யாணம் பன்னாலும், தாலிய அறுத்துட்டு அவ கூட வாழாம விடமாட்டேண்டா”ன்னு ஒரு சபதம் போடுறாரு. வரே…வா.. இதுவல்லவா சபதம். 

அதுக்கு பல ஜால்ரா வேலைகள்லாம் பாத்து கருப்பன் ஜோடிய பிரிக்க முயற்சி செய்ய, கடைசில பிரிச்சாரா இல்லையாங்குறது தான் கதை. அவரு பிரிச்சாரோ இல்லையோ தியேட்டருக்குள்ள விட்டுக்கிட்டு நம்மள நல்லா பிரிக்கிறாங்க.

விஜய் சேதுபதி காது வரைக்கும் மீசை வச்சிக்கிட்டு கெத்தா வந்து மாட்ட அடக்கும்போது, இன்னிக்கு செம ஆக்‌ஷன் ப்ளாக் காத்துக்கிட்டு இருக்குன்னு நினைச்சேன். கடைசில சார்லி சொல்ற மாதிரி “அவரும் ஆசைப்பட்டார்”ங்குற நிலமையாயிருச்சி. அந்த மீசைக்கு ஒரு மதிப்பு குடுத்தாவது இன்னும் கொஞ்சம் நல்லா எடுத்துருக்கலாம்.

காமெடிக்கு ஒரு ஜோடி சிங்கம் புலி. சிங்கம் புலிய காமெடிக்கு சேத்துக்கிட்ட படம் எதாவது வெளங்கிருக்கா? கொடுமை என்னன்னா விஜய் சேதுபதியும், சிங்கம் புலியும் பாடி கண்டிஷன்ல ஒரே மாதிரி இருக்காங்க. ஒரே மாதிரி சட்டை வேற போட்டுருக்காங்க. மூஞ்ச மூடிட்டு பாத்தா யாரு சேதுபதி யாரு சிங்கம்புலின்னே கண்டுபுடிக்க முடியாது போல. ஒரு ஹீரோவுக்கு ரொம்ப முக்கியமே உடம்புதான். சேதுபதி சார் அதப் பத்தி கண்டுக்கிறதே இல்ல போல. டி.ஆர் மாதிரி ஆகிட்டு இருக்காரு.  

பசுபதிக்கு நல்ல கேரக்டர். ஆனா நடிக்கிறதுக்கு தான் எந்த நல்ல சீனும் இல்ல. இந்த மசாலா படங்கள்லயெல்லாம் “விஷயத்த பெருசு பன்ன வேணாம்”, “இப்ப வேணாம்… ஆறு மாசம் கழிச்சி செய்வோம்”, “எலெக்‌ஷன் வர்றதால இப்ப கை வச்சா நம்ம பேர்தான் கெட்டுப்போகும்” “அடுத்து நம்ம அடிக்கிற அடி தலையிலயா இருக்கனும்” இப்டிப்பட்ட வசனங்கள சொல்றதுக்குன்னே   வில்லனுக்கு அள்ளக்கையா பக்கத்துலயே ஒரு கேரக்டர்  வரும். அந்த மாதிரி ஒரு சூப்பர் கேரக்டர்தான் பாபி சிம்ஹா இந்தப் படத்துல பன்னிருக்காரு. பாடி சோடா ஆறு மாசமா பில்ட் அப் மட்டுமே குடுத்துக்கிட்டு இருக்க மாதிரி கடைசி வரைக்கும் அள்ளக்கையாவே நடிச்சிருக்காரு கருப்பன் படத்தோட மெயின் வில்லன் பாபி சிம்ஹா.

படத்துல ஒரே ஆறுதல் ஹீரோயின். தங்கம் மாதிரி செம அழகு. இந்த நாய்க்கு ஒரு முழு எழும்புத்துண்டு கிடைச்சிதுன்னா அது ஒரு இடத்துல இருக்காது. அத வச்சிக்கிட்டு ரோட்டுல சுத்தும், கொஞ்ச நேரத்துல எதாவது சந்துல நிக்கும், அப்புறம் அதக் கொண்டு போய் எதாவது ஒரு இடத்துல வச்சிட்டு அது பக்கத்துலயே உக்காந்துக்கும். படத்துல விஜய் சேதுபதிக்கு அந்தப் புள்ளைய கல்யாணம் பன்னிக்குடுத்த அப்புறம் நடக்குறது அதுதான். கொஞ்சுறாரு.. கொஞ்சுறாரு.. கொஞ்சிக்கிட்டே இருக்காரு. வீட்டுல ரோட்டுல, கோவில்ல, ஹாஸ்பிட்டல்லன்னு இதே தான். எடுக்குறதுக்கு சீன் இல்லாம எடுத்த சீனையே எத்தனை தடவய்யா எடுப்பீங்க. படத்துல முக்கால்வாசிக் காட்சிகள் சேதுபதியும் ஹீரோயினும் பேசிக்கிற காட்சிகள்தான்.

ஒருகட்டத்துல விஜய்சேதுபதி குரலே நமக்கு அலர்ஜியாகுற அளவுக்கு நான் ஸ்டாப்பா பேசிக்கிட்டு இருக்காரு.  ஒருசில இடங்கள்ல விஜய்சேதுபதியோட ட்ரேட் மார்க் நக்கல் ரசிக்க வைக்கிது. ஆனா ஓவராலா விஜய் சேதுபதி அலுக்கிறாரு.

படத்துல எது நடக்குதோ இல்லையோ , கால் மணி நேரத்துக்கு ஒரு பாட்டு மட்டும் கரெக்ட்டா வந்து நிக்கிது. கருவா கருவா பயலே பாட்டு மட்டும் சுமார் ரகம். மத்ததெல்லாம் கடினம். பாடல்களப் படமாக்குன விதம் அதுக்கும் மேல.  சும்மா ஹீரோ ஹீரோயின் மூஞ்ச மூஞ்ச காமிச்சா மட்டும் பாடல்களுக்கு பத்தாது. எதாவது ஒரு தீம் எடுத்துக்கிட்டு அதுல பன்னாதான்  சுவாரஸ்யமா இருக்கும்.

தொண்டன் படத்துல தோழர் சமுத்திரக்கனி சம்பந்தமே இல்லாம காளைகள் பேரெல்லாம் நாலு பக்கம் எழுதிவச்சி மனப்பாடம் பண்ணி ஒப்பிச்ச மாதிரி இங்க சம்பந்தமே இல்லாம தீடீர்னு விஜய் சேதுபதி விவசாயம் பன்றாரு. விவசாயிகளப் பத்தி பெருமையா ரெண்டு வசனம் பேசுறாரு. தியேட்டர்ல விசில். ஏன் இதெல்லாம்?

படத்தோட முக்கால்வாசி இடங்கள்ல கொம்பன், குட்டிப்புலி, மருது போன்ற படங்கள்தான் கண்ணுமுன்னால தெரியிது. முத்தையா ஒரே மாதிரி படம் எடுத்தாலும், ஒரே படத்த திரும்பத் திரும்ப எடுத்தாலும் இந்த அளவுக்கு ஜவ்விழுப்பா இழுக்க மாட்டாரு. படம் மொத்தம் ரெண்டே கால் மணி நேரம்தான் ஓடுது. ஆனா எதோ ரெண்டு நாளா படம் பாக்குற மாதிரியே ஒரு ஃபீலிங்கி. இயக்குனர் ஆர்.பன்னீர்செல்வம் இன்னும் சுவாரஸ்யமா திரைக்கதை எழுதுனா மட்டும்தான் ஜெயிக்க முடியும்.

முதல் காட்சிக்கு விஜய் சேதுபதியோட ரசிகர்கள் செம சவுண்டு. டைட்டிலுக்கெல்லம் ஒரே ஆர்ப்பாட்டம். இண்ட்ரோ சீன் முடிஞ்சோன ஆஃப் ஆனவங்கதான். அதுக்கப்புறம் படம் முடிஞ்சப்புறம் ரெண்டு மூணு பேர நாந்தான் எழுப்பி விட்டேன். அதுவும் படம் முடிஞ்சி போகும்போது அவங்கள்ள ஒருத்தர் சிங்கம்புலி வாய்ஸ்ல “நீங்கல்லாம் மாடுமுடித்தாண்டி சாகப்போறீங்க”ன்னு படம் எடுத்தவங்களத் திட்டிட்டுப் போனது ஹைலைட்.

மொத்தத்துல வந்த தடமே தெரியாமா இப்டி வந்துட்டு அப்டிப் போற விஜய் சேதுபதியின் படங்கள்ல கருப்பனும் ஒண்ணு. 


Thursday, September 28, 2017

ஸ்பைடர் – சிறப்பு!!!


Share/Bookmark

வெளிநாட்டுப் படங்கள்லருந்து மொத்த  படத்தையும் காப்பி அடிச்சி தமிழ்ல எடுக்குறது தப்பு. ஆனா வெளிநாட்டுப் படங்களோட கருவ மட்டும் எடுத்து அத வச்சி இங்க குஞ்சு பொறிச்சா தப்பில்ல. அப்டின்னு யாரு சொன்னது? முருகதாஸே சொல்லிருக்காருப்பா.. அப்ப சரியாத்தான் இருக்கும். நல்ல ஸ்க்ரிப்ட் எழுதுற எல்லாராலயும் அத நல்ல படமா எடுத்துட முடியாது. அந்த ஸ்க்ரிப்ட்ட படமாக்குற இயக்குனருக்கு திறமை இருந்தாதான் நல்ல படமா அமையும். முருகதாஸ் ஒரு நல்ல கதாசிரியரா இல்ல நல்ல ஸ்க்ரிப்ட் ரைட்டரா என்பதெல்லாம் நமக்குத் தெரியாது. ஏன்னா தீர்வாகாத கேஸுங்க பல இருக்கு அவர் மேல. ஆனா அவர் இப்ப இருக்குற நல்ல திறமை மிக்க இயக்குனர்கள்ல முருகதாஸூம் ஒருவர்ங்குறதுல எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. அத இந்த ஸ்பைடரும் உறுதிப்படுத்திருக்கு.

”பர்சன் ஆஃப் இண்ட்ரஸ்ட்” அப்டிங்குற ஒரு ஆங்கில சீரியல்லருந்து மேல சொன்ன மாதிரி கருவ மட்டும் எடுத்துக்கிட்டு, அத நம்மூருக்கு தேவையான மாதிரி உப்பு புளி மசாலாவெல்லாம் போட்டு தயார் படுத்துனதுதான் இந்த ஸ்பைடர். மக்களை தொடர்ந்து கவனித்து வரும் சிசிடிவி வீடியோக்கள் வழியா, என்னென்ன தப்பு நடக்கப் போகுதுங்குறத முன்கூட்டியே கண்டுபிடிச்சி அத நடக்க விடாம செய்றதுதான் பர்சன் ஆஃப் இண்ட்ரெஸ்ட் சீரிஸ்ல வர்ற கான்ஸெப்ட். அந்த ஐடியாவுக்கு ஒரு மருவ வச்சி இங்க கொஞ்சம் வேற மாதிரி சொல்லிருக்காங்க.

முதல் பாதில படத்தோட கதைக்களமும், காட்சிகளையும் ரொம்பவே புதுசா ஃபீல் பன்ன முடிஞ்சிது. சாதாரணமா போயிட்டு இருக்க படம் ஒரு கட்ட்த்துல சூடு பிடிச்சி இண்டர்வல்ல வேற லெவலுக்குப் போய் ரெண்டாவது பாதிலயும் சுவாரஸ்யமா பயணிச்சி சற்று டொம்மையான க்ளைமாக்ஸோட முடியிது.

படத்தோட ப்ளஸ்ஸூன்னு பாத்தா நிறைய விஷயங்களச் சொல்லலாம். முதல்ல மேல சொன்ன மாதிரி கதைக்களம் ரொம்ப புதுசா இருக்கு. ஒரே மாதிரிப் படங்களப் பாத்துப் பாத்து போரடிச்ச நமக்கு ரொம்பவே ஒரு புது உணர்வத் தருது.

அடுத்து எஸ்.ஜே.சூர்யாவும் அவரோட பாத்திரப் படைப்பும். தமிழ்சினிமாவோட ரொம்பக் கொடூரமான, மறக்க முடியாத வில்லன்களோட லிஸ்டுல இந்த ஸ்பைடர் படத்தோட ”சுடலை”ங்குற வில்லன் கதாப்பாத்திரமும் இடம் புடிக்கும். அந்த அளவுக்கு அழுத்தமான ஒரு பாத்திரப் படைப்பு.. அந்த பாத்திரத்துக்கு தகுந்த மாதிரியே எஸ்.ஜே.சூர்யா செம்மையா நடிச்சிருக்காரு. அவர்மட்டும் இல்லை அவரோட சின்ன வயசு கேரக்டரா வர்ற பையனும் சூப்பரா நடிச்சிருக்கான்.

அடுத்து ஹாரிஸோட பிண்ணனி இசை. இது ஹாரிஸோட பெஸ்ட் இல்லைன்னாலும், இந்தப் படத்துக்கு முழுசும் சப்போர்ட் பன்ற மாதிரியான தரமான பின்ணணி இசை. ஹாரிஸோட வழக்கமான டெம்ளேட் 5 பாடல்கள அப்படியே இந்தப் படத்துக்கும் குடுக்காம கொஞ்சம் வித்யாசமா போட்டுருந்தது மிகப்பெரிய ஆச்சர்யம்.  

அடுத்து ஏ.ஆர்.முருகதாஸோட திரைக்கதை மற்றும் இயக்கம். சாதாரண ஒரு காட்சியில கூட சின்னச் சின்ன வசனங்கள் மூலமா ஆடியன்ஸூக்கு நல்ல ஒரு தாக்கத்தை ஏற்படுத்துறது முருகதாஸ் ஸ்பெஷல். இந்தப் பட்த்துலயும் ஒருசில காட்சிகள்ல ஒர்க் அவுட் ஆயிருக்கு.

அடுத்து மகேஷ் பாபுதான் படத்துக்கு மெயின் அட்ராக்‌ஷன். ஆளு செம்மையா இருக்காரு. முதல் நேரடித் தமிழ்ப்படம் அதுலயும் சொந்தக் குரல்லயே தமிழ்ப் பேசி நடிச்சிருந்தது ரொம்பவே ரசிக்கும்படியா இருந்துச்சி. என்ன ஒண்ணு அவங்க அப்பாதான் தமிழ் சொல்லிக் குடுத்துருப்பாரு போல. மகேஷ் தமிழ் பேசுறத கேக்கும்போதெல்லாம் கந்தசாமி படத்துல அவங்க அப்பா பேசுறது கண்ணு முன்னால வந்தூட்டுப்  போச்சு.  

இதே மாதிரி படத்தோட மைனஸூன்னு சில விஷயங்களச் சொல்லலாம். முதல்ல ஹீரோ மகேஷ்பாவுவோட கதாப்பாத்திர அமைப்பு. இந்தக் கதையைப் பொறுத்த அளவு அவர போலீஸாவே போட்டுருக்கலாம். மகேஷ் பாபுவ ஒரு சிஸ்டம் ஒர்க்கரா போட்டுருக்காங்க. ஆனா பாருங்க அவரே தனியா டீம் வச்சி க்ரைம தடுக்குறாரு. மொத்த கேஸையும் அவரே டீல் பன்றாரு. செகண்ட் ஹாஃப்ல கூட போலீஸெல்லாம் பாவமா வந்து ஒரு ஓரமா நின்னுக்கிட்டு இருக்கானுங்க. நம்மாளு “சார் இந்த கேஸ நானே டீல் பன்னிக்கிறேன்” ன்னு ஆர்டர் போட்டுக்கிட்டு இருக்காரு. அந்தப் போலீஸ்காரனுங்க  “டேய் நீ ஓனரா இல்ல நா ஓனராடா?”ன்னு நினைச்சி திருதிருன்னு முழிச்சிட்டு இருக்கானுங்க.

அடுத்து ரெண்டாவது பாதில வர்ற சில தேவையற்ற நீளமான காட்சிகள். எஸ்.ஜே சூர்யாவப் புடிக்கப் போறதுக்கு ப்ளான் பன்றதா சொல்லி லேடீஸ வச்சி ஒரு நீ..ளமான சீன் ஒண்ணு எடுத்து வச்சிருக்காங்க. கொஞ்சம் சுருக்கிருக்கலாம்.

அடுத்து பண்ணாறி அம்மன், ராஜகாளி அம்மன், பொட்டு அம்மன் படங்கள் ரேஞ்சுக்கு காட்டு மொக்கையான கிராஃபிக்ஸ்தான் படத்தோட மிகப்பெரிய மைனஸூன்னு சொல்லலாம். ஏ.ஆர்.முருகதாஸ் இந்த கிராஃபிக்ஸ் விஷயத்துல மட்டும் எப்பவுமே கோட்ட விடுறாரு. மொக்கையான கிராஃபிக்ஸ் மட்டும் இல்லாம நம்ப முடியாத காட்சிகளாவும் இருக்கு. பாராங்கல் ரோட்டுல ஃபுல் ஸ்பீடுல உருண்டு வர்ற காட்சி, ரோலர் ஹோஸ்டர் சண்டைக்காட்சி, ஹாஸ்பிட்டல் விபத்துன்னு நிறைய இடங்கள் நாகினி சீரியல் லெவலுக்கு இருக்கு. முதல்பாதி ரொம்பவே டீசண்ட்டா இருந்துச்சி . அதே மாதிரி ரெண்டாவது பாதிலயும் ரொம்ப கிராபிக்ஸ் ஜிம்மிக்ஸெல்லாம் முயற்சி செய்யாம நார்மலாவே எதாவது செஞ்சிருக்கலாம்

நம்ப முடியாத காட்சிகள், கான்செப்டுகள் நிறைய இருக்கு. ஹை ஸ்பீடு இண்டர்நெட்டுன்னு ஒண்ண வச்சிக்கிட்டு யார் வீட்டுல என்ன நடக்குதுங்குறது மொதக்கொண்டு உக்காந்த இடத்துலருந்தே பாக்குறதெல்லாம் ஹாலிவுட் புருடாவுக்கும் மேல.

படம் ரொம்ப சீரியஸாவே பயணிக்கிது. மகேஷ் மாதிரி பெரிய ஆளுங்க படம் பன்னும்போது அதுல எல்லாமே கலந்த மாதிரி பன்றது நல்லது. இந்தக் கதைய ஆரம்பத்துலருந்தே இவ்வளவு சீரியஸா எடுத்துட்டுப் போகனும்னு  அவசியம் இல்ல. காமெடிக்கு ஸ்கோப் இருந்தும், போராளி RJ பாலாஜி இருந்தும் நகைச்சுவைக் காட்சிகள் எதுவுமே இல்ல. RJ பாலாஜிக்கு செண்டர் ஃப்ரஷ் வாங்கிக் குடுத்துட்டாங்க போல. அதாங்க இந்த “வாய்க்குப் போடும் பூட்டு”. மனுசன் காற்று வெளியிடையில கூட சீரியஸா ரெண்டு வசனம் பேசுனாரு. இதுல அதுகூட இல்லை.

ரகுல் ப்ரீட் சிங்க ரொம்ப ஆர்டின்ரியா காமிச்சிருக்காங்க. அந்தப் புள்ளைக்கு ஒழுங்கா தலையக் கூட சீவி விடாம படத்துல சுத்த விட்டுருக்காங்க. பாடல்கள்ல செம அழகு.

மகேஷ்பாபுவுக்கு  ஏ.ஆர்.முருகதாஸோட இயக்கத்துல முதல் தமிழ் எண்ட்ரி. ஒட்டுமொத்தமா ரொம்பவே நல்ல ரெஸ்பான்ஸ்தான் இருக்கு தமிழ்நாட்டுல. அடுத்தடுத்த படங்களும் நேரடித் தமிழ்ப் படங்களா நடிப்பார்னு எதிர்பார்ப்போம்.


மொத்தத்துல ஒரு சில சின்ன மைனஸ் இருந்தாலும் மிஸ் பன்னாம பார்க்க வேண்டிய படம்,


Monday, September 25, 2017

ஜூனியர் என் டி ஆரின் ஜெய் லவகுசா!!!


Share/Bookmark
ஜனதா காரேஜ் திரைப்பத்தோட பிரம்மாண்ட வெற்றிக்குப்பிறகு, தனது சொந்த அண்ணன் நந்தமுரி கல்யான்ராம் தயாரிப்புல (மொட்டை சிவா கெட்ட சிவா ஒரிஜினர் வெர்ஷனில் நடித்தவர்) ஜூனியர் என் டி ஆர் மூன்று வேடங்கள்ல நடிச்சி வெளியாகியிருக்க படம் ஜெய் லவ குசா. ஏற்கனவே இந்தப் படத்தோட டீசர், ட்ரெயிலர், பாடல்கள்னு எல்லாமே ஹிட் ஆயிருக்க சமயத்துல படம் எப்படி இருக்குன்னு பாப்போம்.

அச்சு அசலா ஒரே மாதிரி இருக்க மூணு அண்ணன் தம்பிங்க.  சின்ன வயசுல அப்பா இறந்துட்டதால மாமாவின் துணையோட ராமாயணம் நாடகம் போட்டு பிழைப்ப ஓட்டிக்கிட்டு இருக்காங்க. மூத்தவனுக்கு நடிக்க ரொம்ப ஆசை. ஆனா அவனுக்கு திக்குவாய் இருக்கதால, அவனுக்கு நாடகத்துல முக்கியமான பாத்திரம் எதுவும் குடுக்காம ஓரம்கட்டுறாங்க. அதேசமயம் அவனோட தம்பிங்க ரெண்டு பேரும் ராம, லக்‌ஷ்மண வேஷம் போட்டு ஊரு ஃபுல்லா நல்லா ஃபேமஸ் ஆகுறாங்க. தனக்கு கிடைக்கவேண்டிய பாராட்டெல்லாம் தன்னை ஓரம்கட்டி விட்ட தம்பிகளுக்கு கிடைக்கிதேன்னு உள்ளுக்குள்ள கோபம் பொங்குது மூத்தவனுக்கு.

அந்த சமயம் சூர்ப்பனகை மூக்கை ராமன் அறுத்ததாலதான் ராமனுக்கும் ராவணனுக்கும் சண்டை வந்துச்சிங்குற விஷயம் அவனுக்கு தெரியவர, ராவணன் செஞ்சது சரிதான்ங்குற எண்ணம் மனசுல தோணுது. அப்பலருந்து ராவணனோட பக்தனாகுறான். பக்தனாகுறது மட்டும் இல்லாம, தம்பிங்க நாடகம் நடிச்சிட்டு இருக்குறப்போ சிலிண்டர கொளுத்தி விட்டு மொத்த ஸ்டேஜயும் தீக்கிரையாக்குறான். மூணு பேரும் பிரியிறாங்க. அப்டியே பெடல சுத்துனா எல்லாரும் பெரியாளாயிடுறாங்க. ஒவ்வொருத்தன் உயிரோட இருக்கது இன்னொருத்தனுக்கு தெரியல.  அப்புறம் ஒவ்வொருத்தரும் எப்படி, என்ன சந்தர்ப்பத்துல மீட் பன்னிக்குறாங்க, அதனால என்ன நடக்குதுங்குறது தான் கதை.

இரட்டையர்கள் கதைன்னா ஒரு டெம்ப்ளேட் இருக்கும். அதாவது ஒருத்தன் பயங்கர பயந்தாங்கோளியா இருப்பான். எல்லாரும் ஏமாத்துவாங்க. இன்னொருத்தன் அப்படியே நேர்மாறா இருப்பான். எல்லாரையும் அடிச்சி தொம்சம் பன்னுவான். ஒரு கட்டத்துல ரெண்டு பேரும் இடம் மாறி, முன்னால ஏமாத்துனவங்களையெல்லாம் அடிச்சி பறக்க விடுவாங்க. இதான் தொண்றுதொட்டு இருக்க வழக்கம். அத இந்தப் படத்துலயும் விடாம புடிச்சிருக்காங்க.

ரெண்டு பேருன்னா ஓக்கே.. அப்ப மூணு பேருன்னா என்ன பன்னுவாங்க? ஒரு பாதி பழைய ஃபார்முலா.. பயந்தாங்கோளிக்கு பதிலா பலசாலி மாறுறது. ரெண்டவது பாதில இதே கான்செப்ட்ட அப்படியே ரிவர்ஸூல யூஸ் பன்னிருக்காங்க. . 

ரெண்டாவது பாதில பெரும்பாலான காட்சிகள்ல மூணு என் டி ஆரும் ஒரே ஃப்ரேம்ல இருக்க மாதிரியான காட்சிகள் நிறைய இருக்கு. ஆனா எந்த வித்யாசமும் தெரியாம ரொம்பவே சூப்பரா படம் புடிச்சிருக்காங்க. மூணு பேரும் ஒரே சீன்ல இருக்க மாதிரி அதிக காட்சிகள் இடம்பெற்றது இந்தப் படத்துலதான்னு நினைக்கிறேன். க்ளைமாக்ஸ்ல முன்னால அண்ணனுக்காக தம்பிங்க போடுற நாடகத்துல நம்மள கண்ணு கலங்க விட்டுடுறாங்க.

தேவி ஸ்ரீ ப்ரசாத் பட்டையக் கிளப்பிருக்காரு. ராவணனா வர்ற மூணாவது NTR க்கு வர்ற பின்னணி இசை தாறுமாறு. அந்த ராவணா.. ராவணா பாடலும் சூப்பர். தெலுங்கு படங்களை பொறுத்த அளவு பாடல்களை நல்லா எடுத்துருக்காங்கன்னு சொல்லவே தேவையில்லை. எத நல்லா எடுத்தாலும் எடுக்காட்டியும் பாட்டுகள மட்டும் நல்லா பளிச்சின்னு எடுத்து வச்சிருவாங்க.

சண்டைக்காட்சிகளும் வழக்கம்போல சூப்பர்.. ஒரு என் டி ஆர் இருந்தாலே வில்லன ஒண்ணுக்கு போற அளவு அடிப்பாரு.. இதுல மூணு என் டி ஆருங்கயில மோஷன் போற அளவுள்ள அடிச்சாகனுமே... வில்லன்கள் படத்துல சும்மா ஊருகா மாதிரிதான். படத்த முடிக்கிறதுக்காக மட்டும் வந்துட்டுப் போறாங்க. 

ராஷி கண்ணா மற்றும் நிவேதா தாமஸுன்னு ரெண்டு சூப்பர் ஹீரோயின்கள். அதிக வேலை எதுவும் இல்லை. ஒவ்வொரு பாட்டுதான். நிவேதா தாமஸ சைடு ஆங்கிள்ள பாக்கும்போது அதோட ஹைட்டுக்கும் அதுக்கும் மீரா ஜாஸ்மின பாக்குற மாதிரியே இருக்கு. ஒரு ஐட்டம் சாங்குக்கு தமன்னாவ கூட்டிக்கிட்டு வந்து அருவருப்பா டான்ஸ் ஆட விட்டுருக்காங்க.

இயக்குனர் பாபி என்கிற கே.எஸ்.ரவீந்திரா இதுக்கு முன்னால பவர் , சர்தார் கப்பர் சிங்குனு ஒரு சுமார் மற்றும் ஒரு காட்டு மொக்கை படத்தை மட்டும் எடுத்திருந்தாரு. ஆனா இந்தப் படத்துல முழு  வீச்சுல செயல்பட்டு சூப்பரான ஒரு அவுட்புட்ட குடுத்துருக்காரு. 

படத்தோட முதுகெழும்பே என்.டி.ஆர் தான். பட்டைய கெளப்பிருக்காரு. மூணு ரோல்லயும் கெட்டப்புல பெரிய வேரியேஷன் காமிக்கலன்னாலும், உடல்மொழிலயும், வசன உச்சரிப்புலயும் தனித்தனியே தெரியிறாரு. கண்ண மூடிக்கிட்டு கேட்டா கூட இப்ப எந்த கேரக்டர் பேசிக்கிட்டு இருக்குன்னு கண்டுபுடிச்சிடலாம். காமெடிக்கு தனி ஆள் தேவைப்படல. என் டி ஆரே காமெடிலயும் கலக்குறாரு.

ரெண்டு வகையான முன்னேற்றம் இருக்கு. ஒண்ணு Continues Improvement இன்னொன்னு continual improvement. முதல்ல சொன்னது தொடர் முன்னேற்றம். சும்மா ஜொய்ங்கின்னு முன்னேறி போயிட்டே இருப்பாங்க. ஆனா விழுந்தா ஆரம்பிச்ச இடத்துல வந்து விழுந்துருவாங்க. ரெண்டவது சொன்ன continual improvement ங்குறது சீரான மற்றும் நிலையன, படிப்படியான முன்னேற்றம். இவங்க ஒரு நிலைய அடைஞ்சப்புறம் அந்த இடத்துல தங்கள நல்லா நிலை நிறுத்திக்கிட்டு அடுத்த லெவலுக்கு போவாங்க. அதனால இவங்க சறுக்குனா கூடா அதுக்கு மொதல்ல இருந்த படிநிலைக்குப் போவாங்களே தவற ஆரம்பிச்ச இடத்துக்கு போகமாட்டாங்க.

தென்னிந்திய சினிமாவப் பொறுத்த அளவுல இந்த தொடர்ந்து, சீரான, படிப்படியான முன்னேற்றம் அடையிற நடிகர் என் டி ஆரத் தவற வேற யாரும் இல்லை. ஒவ்வொரு படத்துலயும் நடிப்புலயும், உடல் மொழியிலயும், கதைத் தெரிவுலயும் அவ்வளவு முன்னேற்றத்த காட்டிக்கிட்டு வர்றாரு.  இந்த ஜெய் லவ குசாவும் அதுக்கு ஒரு எடுத்துக்காட்டு.

கண்டிப்பா பாக்கலாம். வசூல் ரீதியாவும் பெரிய சாதனை படைக்கும்னு எதிர்பார்க்கலாம்.

Monday, September 18, 2017

துப்பறிவாளன் – A மிஷ்கின் இறக்குமதி!!!


Share/Bookmark
பூவே உனக்காக படத்துல விஜய்க்கும் சார்லிக்கும் ரூம் மேட்டா மதன் பாப் இருப்பாரு.. சார்லி அவர் கிட்ட ”நீங்கஎன்ன பன்றீங்க?”ன்னு கேட்டதும் மதன்பாப் “கதை எழுதுறேன்”ம்பாறு. உடனே சார்லி “வந்த படத்துக்கா வராதபடத்துக்கா?”ன்னு நக்கலா கேப்பாறு. அதுமாதிரி வந்தபடங்களுக்குகதை எழுதுற இயக்குனர்கள் நிறைய பேருஇருக்காங்க. அதுல ஒருத்தர் மிஷ்கின். மக்கள் பாக்க நல்ல படங்கள் எடுக்குறது இயக்குனர்கள் ஒரு வகை.அவங்க பாத்த நல்ல படங்களையே திரும்ப எடுக்குற இயக்குனர்கள் ஒருவகை.இயக்குனர் மிஷ்கின் ரெண்டாவதுவகை. அவர் பார்க்குற பிற மொழிப்படங்கள்ல அவருக்கு பிடிச்சதையெல்லாம் இறக்குமதிசெஞ்சி நம்மூர்ல படமாஎடுத்து நமக்கு போட்டுக்காட்டுவாரு.

மிஷ்கின் இதுவரை எடுத்த அனைத்து படங்களுமே வேற எதாவது ஒரு பட்த்துல இன்ஸ்பையர் ஆகி எடுத்ததுதான்.கிஹூஜூரோ, பேட் மேன், போன்ற படங்கள்ல இன்ஸ்பையர் ஆகி நந்தலாலா, முகமூடி போன்ற படங்கள நமக்குஎடுத்துக் காமிச்ச மாதிரி இந்த தடவ ஷெர்லாக் ஹோல்ம்ஸ் சீரிஸ்ல இன்ஸ்பையர் ஆகி எடுக்கப்பட்ட படம் தான்துப்பறிவாளன். டிடெக்டிவ் ஷெர்லாக்கும் அவருடைய நண்பர் டாக்டர் வாட்சனும் துப்பறியும் கதைகள் மிகசுவாரஸ்யமானவை. ஷெர்லாக் ஹோல்ம்ஸ் படங்கள் பல வந்திருந்தாலும் பெனடிக்ட் கும்பர்பேட்ச் நடித்த“ஷெர்லாக்” என்ற ஆங்கில சீரிஸ் மிகவும் பிரபலம். அதுலதான் நம்மாளு இப்ப இன்ஸ்பையர் ஆகிருக்காரு.என்னது காப்பின்னு சொல்லனுமா? அய்யய்யோ அப்டியெல்லாம் சொல்லக்கூடாது. காப்பின்னு நம்ம சொன்னாஅப்புறம் காப்பின்னா என்ன இன்ஸ்பிரேசன்னா என்ன, காப்பிக்கும் இன்ஸ்பிரேசனுக்கும் உள்ள வித்யாசம்என்னன்னு நமக்கு அரை மணி நேரம் விளக்கம்லாம் குடுப்பாங்க. ஏன் வம்பு.

எடுக்குற படம் ஒழுங்கா இருந்தா இன்ஸ்பையர் ஆனாலும் காப்பி அடிச்சாலும் நமக்கு எந்தப் பிரச்சனையும்இல்லை. சித்திரம் பேசுதடி நல்லாருந்துச்சி. நந்தலாலா நல்லாருந்துச்சி. ஆனா முகமூடிய கிரிஸ்டோஃபர்நொலனுக்கு போட்டுக்காமிச்சோம்னா அவன் நெஞ்சு வெடிச்சி செத்துருவான். அந்த அளவுக்கு இருந்துச்சி. இப்பஇந்த துப்பறிவாளன் எப்புடி இருந்துச்சின்னு பாப்போம்.

ஒண்றுக்கொண்று தொடர்பில்லாத மூணு சம்பவங்கள் ஆரம்பத்தில் நடக்க, தனியார் துப்பறிவாளரான கணியன் பூங்குன்றனும் அவரது நண்பனும் துப்பறியிறதுதான் படத்தோட கதை. துப்பறியும் கதைங்குறதால கதைக்குள்ள ரொம்ப டீப்பா உள்ள போகத் தேவையில்லை. துப்பறியும் காட்சிகள் விறுவிறுப்பை கூட்டுறதுக்கு பதிலா சொத சொதவென இழுக்குது. ஒரு க்ளூவிலிருந்து இன்னொரு க்ளூ.. அதை தொடர்ந்து போறப்போ தொடரும் கொலைகள்னு வழக்கமான அதே டெம்ப்ளேட் தான். சமீபத்துல வந்த குற்றம்  23 படத்துல வர்ற இன்வெஸ்டிகேஷன் காட்சிகள் ஏற்படுத்துன அளவு தாக்கத்துல பாதியை கூட இந்த துப்பறிவாளன் ஏற்படுத்தலன்னு சொல்லலாம்.

விஷால் பெரிய ப்ரில்லியண்டுங்க.. அவரு பயங்கரமா கேஸெல்லாம் சால்வ் பன்னிருவாருங்கன்னு படத்துல இருக்கவங்கதான் சொல்லிட்டு இருக்காங்களே தவற பாக்குற நமக்கு அப்டி ஒண்ணும் தெரியல. கடைசி வரைக்குமே அவரும் பெருசா எதுவும் பன்னல.

போக்கிரி தெலுங்கு ஒரிஜினல் வெர்ஷன்ல மகேஷ்பாபு ஒரு மாதிரி ரொம்ப கேஷூவலா இருக்க மாதிரி வசனம்பேசுவாரு. அதே மாதிரியே பன்றதா நினைச்சிக்கிட்டு விஜய் தமிழ்ல சளி புடிச்சவன் மாதிரி மூக்க உறிஞ்சி உறிஞ்சிபேசிக்கிட்டு இருந்தாரு. அந்தக்  கொடுமைதான் இந்த துப்பறிவாளன்லயும். ஷெர்லாக் சீரிஸ்ல ஷெர்லாக்காவர்றவன் ஒரு வித்யாசமான மாடுலேஷன்ல கடகடன்னு பேசிக்கிட்டே இருப்பான். அதயே விஷால பன்ன வைக்கமுயற்சி பன்னிருக்காரு மிஷ்கின். விளைவு… மேல கிரிஸ்டோஃபர் நொலனுக்கு முகமூடிய போட்டுக்காட்டுனாஎன்ன நடக்கும்னு சொன்னோமோ அதேதான் இப்ப ஷெர்லாக்குக்கும். விஷால் ஷெர்லாக் மாதிரி பேசுறேன்னு கொண்ணு எடுத்துருக்காப்ள.

அதுவும் விஷாலோட கெட்டப் இருக்கே… அபாரம். கவுண்டர் ஒரு படத்துல ”பிக்பாக்கெட் பெரியசாமி”ங்குற பேர்லகழுத்துல கர்சீஃப் கட்டிக்கிட்டு ஒரு மாதிரி சுத்துவாரு. அதே பிக்பாக்கெட் பெரியசாமி கெட்டப்ப விஷாலுக்குபோட்டுவிட்டு, ஷெர்லாக் சீரிஸ்ல நடிச்ச பெனடிக்ட் கும்பர்பேட்ச் போட்டுருக்க தொப்பிய மாட்டிவிட்டு, மிஷ்கின்நைட்டுல நடக்குற ப்ரஸ் மீட்டுலயெல்லாம் போட்டுருப்பாரே ஒரு கருப்பு கண்ணாடி.. அதயும் எடுத்து விஷாலுக்குபோட்டுவிட்டா டிடெக்டிவ் கணியன் பூங்குன்றனுக்கான கெட்டப் ரெடி. இந்த கெட்டப்பயெல்லாம் சேத்து மொத்தமாவிஷால பாக்குறப்போ ”ராஜா அண்ணாமலைபுரம் போறதுக்கு இது மூஞ்சி அல்ல.. கண்ணம்மா பேட்டை போறமூஞ்சிதான் இது”ன்னு கவுண்டர் ஒருத்தனப் பாத்து சொல்ற வசனம்தான் ஞாபகம் வந்துச்சி.


மொத்த படத்திற்கும் விஷாலின் இந்த கெட்டப்பும், அவரின் வசன உச்சரிப்புகளும் ஒரு மிகப்பெரிய மைனஸ்.அதுவும் ஹீரோயினிடம் விஷால் பேசுற விதம் ”என்ன இவன் வெறிநாய் கடிச்சமாதிரி பேசுறான்?” ன்னு நம்மகடுப்பாகுற அளவுக்கு எரிச்சல். எதோ வித்யாசமாக கூவ முயற்சி செஞ்சிருக்காங்க.

கேமராவ நேராப் பாத்து பேசுனா அவன் சாதா பூபதி… கேமராவுக்கு சைடுல பாத்து பேசுறவந்தான் ஆல்தோட்டபூபதி… படத்துல யாருமே கேமராவப் பாத்து பேசமாட்டேங்குறாங்க.  கலகலப்புபடத்துல இளவரசுவஓங்கிக் குத்திஅவரோட கழுத்த ஒருபக்கமா திருப்பிருவானுங்க. அதுக்கப்புறம் ஒரு சைடாவே பாத்துக்கிட்டு இருப்பாரு. விஷால்கழுத்தயும் எவனோ ஒருத்தன் அந்த மாதிரி திருப்பி விட்டுருக்கான்னு நினைக்கிறேன். பாடி நேரா இருக்கு கழுத்துமட்டும் எல்லா சீன்லயுமே சைடு வாங்கியிருக்கு. எந்த வசனம் பேசுறதா இருந்தாலும் “இரும்மா ஒரு பொசிசன்லபோய் நின்னுக்குறேன்”ன்னு ஒரு சுவத்து ஓரமாவோ இல்லை ஜன்னல் ஓரமாவோ போய் நின்னுட்டுதான்பேசுறாரு. மத்தவங்கள விடுங்க. ஒரு சின்னப்பையன் விஷாலப் பாக்க வருவான். அவன் கூட அப்டித்தான் எங்கயோ பாத்துபேசிக்கிட்டு இருக்காரு.

உன்னருகே நானிருந்தால் படத்து காமெடில விவேக் ரம்பாகிட்ட கோழி புடிக்கிற சீன விளக்கிட்டு இருக்கும்போதுரம்பா கடுப்பாகி “போன படத்துலயும் இதே சீன் தானே சார் இருந்துச்சி”ன்னுசொல்லும். உடனே விவேக் “அதுகோழி.. இது அதோட குஞ்சு… எனக்கு கோழி செண்டிமெண்டுங்குறது ரொம்ப முக்கியம்”ன்னுவாரு. அதே மாதிரிநம்ம மிஷ்கினுக்கு “மொட்டை” செண்டிமெண்டுங்குறது ரொம்ப முக்கியம் போல. ஒவ்வொரு படத்துலயும் வில்லன்குரூப்புல ஒரு மொட்டை வெட்டியா இங்கிட்டும் அங்கிட்டும் சுத்திகினு இருக்கான்.

ஒரு பதினைஞ்சி இருவது வருஷத்துக்கு முன்னால ஹீரோ கேஷூவலா சண்டை போடுற மாதிரி காட்ட ஃபைட்டுக்கு இடையில அவரு வேற எதாவது ஒண்ணு பண்ணிக்கிட்டு இருக்க மாதிரி காமிப்பாங்க. உதாரணமா ஜெமினி படத்துல காலேஜ் க்ளாஸ் ரூம்ல நடக்குற ஃபைட்டு ஒண்ணுல ரெண்டு பேர அடிச்சி வீசிட்டு மூணாவது ஆள் வர்ற கேப்புல விக்ரம் கைல வச்சிருக்க புத்தகத்த திறந்து படிப்பாரு. பழைய ரஜினி, ப்ரபு படங்கள்லயெல்லாம் இது மாதிரி காட்சிகள் நிறைய இருக்கும்.

அந்த மாதிரி வழக்கொழிஞ்சி போன சண்டைக்காட்சி ஒண்ணு இதுலயும். மவுத்தார்கண் வாசிச்சிக்கிட்டே விஷால் சண்டை போடுறாப்ள.. ஒவ்வொருத்தனையும் அடிச்சிட்டு கிடைக்கிற கேப்புல மவுத்தார்கன் வாசிக்கிறாரு. மவுத்தார்கன் வாசிச்சிக்கிட்டே ஒருத்தன் மவுத் ஆவப் போறான்னு நினைச்சி சிரிச்சிட்டு இருந்தேன். அதுக்கும் மேல க்ளைமாக்ஸ பெரிய துப்பாக்கி வச்சிருந்த வில்லன்கிட்ட ஒரு சின்ன செடியப் புடுங்கி சண்டை போடுவாரு பாருங்க… உலக அரங்கிலேயே இப்படி ஒரு சண்டையை ஒருவன் கூட வைத்ததில்லைன்னு மார்தட்டிச் சொல்லலாம். வாழப்பழத்த வச்சி வெட்டுன பர்னிங் ஸ்டார் சம்பூர்ணேஷயெல்லாம் தூக்கி கடாசிட்டாப்ள.

இப்பல்லாம் கிரீன் டீ குடிக்கிறத ரொம்பப் பெருமையா பல பேரு சொல்லிக்கிட்டு இருக்காங்க. அத கிண்டல் பன்றதுக்காகவா என்னனு தெரியல படத்துல ரெண்டு சீன்ல ஹீரோயின் குடுக்குற கிரீன் டீய குடிச்சிட்டு “இது கழுதை மூத்தரம் மாதிரி இருக்கு” “இது காண்டாமிருக மூத்தரம் மாதிரி இருக்கு”ன்னு விஷால் கமெண்ட் அடிக்கிறாரு.  ஒரு வேள ஹீரோயின் பதிலுக்கு “அது மாதிரி இல்ல சார்… அதேதான்”ன்னு சொல்லிருந்துச்சின்னா நிலமை என்னாயிருக்கும்?

”அஞ்சாதே” படத்து வில்லன் குரூப் டெம்ப்ளேட்ல ஆள மட்டும் மாத்தி துப்பறிவாளன்ல நடிக்கவச்சிருக்காரு.அதாவது பாண்டியராஜனுக்கு பதிலா பாக்கியராஜ்.. ப்ரசன்னாவுக்கு பதிலா வினய்.. மொட்டைக்கு பதிலா இன்னொருபுது மொட்டை. பாக்யராஜ் ஆளும் கெட்டப்பும் சிறப்பு. ஆனா ரெண்டு வார்த்தைக்கு மேல பேசுனா அவரு பழக்கதோஷத்துல “அய்யய்யோ”…. ”முருங்கக்கா” “கசமுசா” போன்ற வார்த்தைகள எதுவும் சொல்லிடப்போறாருன்னுபயந்து மணிரத்னம் பட ஹீரோக்கள் மாதிரி ஒரே ஒருவார்த்தை வசங்களத்தான் வச்சிருக்காங்க. அதே மாதிரிவினய்யும் ரெண்டு வார்த்தைக்கு மேல பேசுனா சவுக்கார்பேட்டை சேட்டு பசங்க வாடை அடிக்கும்னு அவருக்கும்அதே ஓரிரு வார்த்தை வசனங்கள்தான். எனக்குத் தெரிஞ்சி படத்துல அவரு பேசுன லென்த்தியான வசனம் “ஒருகாஃபி”

ஷெர்லாக் அருகிலிருக்கும் டாக்டர் வாட்சன் கேரக்டரில் ப்ரசன்னா. அனைத்து காட்சிகள்லயும் இருக்குறாருங்குறத் தவற வேற எதுவும் சொல்றதுக்கில்ல. என்னப் பொறுத்த அளவு விஷால் கேரக்டர்ல அவரு நடிச்சிருந்தா படம் நல்லா இருந்துருக்கும். விஷால் கேரக்டர்ல அவரு நடிச்சிருந்தா படத்த யாரு புரடியூஸ் பன்றதுன்னு நீங்க கேக்குறது எனக்கு கேக்குது

மிஷ்கினோட அனைத்து படங்கள்லயும் ஒரே மாதிரியான காட்சிப்பதிவுகள் அலுக்குது. கதைக்களத்துக்கு கொஞ்சமும் சம்பந்தம் இல்லாத வெளிநாட்டு பாணி சண்டைக்காட்சிகள வைக்கிறது இந்தப் படத்துலயும் தொடருது.   முட்டிக்கு கீழ காலமட்டுமே காட்டிக்கிட்டு இருக்க காட்சிகள் இந்தப் படத்துல கொஞ்சம் கம்மி. பாடல்கள் இல்லாதது நிம்மதி. படத்துக்கு ப்ளஸ்ஸூன்னு பாத்த வெகு சில காட்சிகள சொல்லலாம்.

கதை அளவுல பெரிய குறை இல்லன்னாலும் ஒரு துப்பறியும் படத்துக்கு உண்டான விறுவிறுப்பை இந்தப் படம் நமக்குத் தர மறுக்குது. விஷாலோட பாத்திரப்படைப்பும் அவரோட வசன உச்சரிப்பும்தான் இதுக்கு முக்கியக் காரணம். மொத்தத்துல நம்ம மனசு ஆறுதலுக்கு ஒரு தடவ பாக்கலாம்னு வேணா சொல்லிக்கலாம்.

மிஷ்கின் சார் கிட்ட ஏன் இந்த மாதிரி வெளிநாட்டுப்படங்கள பாத்து அதயே இங்க எடுக்குறீங்கன்னு கேட்டா “நான் பார்த்த நல்ல படங்கள் நம் மக்களையும் போய் சேர வேண்டும்”னு கதை விடுவாரு. மிஷ்கின் சார்.. இனிமே உங்களுக்கு எதாவது வெளிநாட்டுப்படங்கள் புடிச்சிதுன்னு வைங்க… அந்தப் படத்துப் பேர மட்டும் சொல்லுங்க.. நேரடியா நாங்களே பாத்துக்குறோம்… கழுதைய ஏன் நீங்க வேற அதயே திரும்ப எடுத்துக்கிட்டு… உங்களுக்கும் நேரம் மிச்சம் எங்களுக்கும் நேரம் மிச்சம்… !!!


Tuesday, September 12, 2017

நெருப்புடா - ஆமாடா!!!


Share/Bookmark
தற்போது இருக்கும் இளம் தலைமுறை ஹீரோக்களில் ஓரளவிற்கு நல்ல கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்து வருபவர் விக்ரம் பிரபு என்பதில் சந்தேகமே இல்லை. கும்கிக்கு  பிறகு மிகப்பெரிய வெற்றிப்படங்கள் எதுவும் இவருக்கு இல்லை என்றாலும், இவர் படங்கள் கழுத்தில் கத்தி வைத்து கரகரவென அறுக்காமல் ஓரளவிற்கு பார்க்கும் வகையிலேயே இருக்கிறது. கபாலியின் ”நெருப்புடா” பாடல் வெளியாகி பட்டையைக் கிளப்பிக்கொண்டிருந்த பொழுது சூட்டோடு சூடாக இந்தப் படத்திற்கு ”நெருப்புடா” என பெயர் சூட்டினர். விக்ரம் பிரபுவின் சொந்தத் தயாரிப்பில் உருவான இந்த நெருப்புடா எப்படி இருக்கிறது என பார்ப்போம்.

தீயணைப்புப் படை வீரனாக வேண்டும் என்கிற வித்யாசமான கனவுடன் சுற்றும் ஐந்து இளைஞர்கள், சென்னை அம்பத்தூர் சுற்று வட்டாரப் பகுதியில் எங்கு தீப்பிடித்தாலும் முதல் ஆளாகச் சென்று தீயை அணைத்து உயிரைக் காப்பவர்கள்.  இன்னும் ஒரு தேர்வு மட்டும் எழுதிவிட்டால் தீயணைப்புப் படை வீரனாகவேண்டும் என்கிற அவர்களது கனவு நிறைவேறிவிடும் என்கிற தருணத்தில் சென்னையையே ஆட்டிப்படைக்கும் அந்த மிகப்பெரிய ரவுடியுடன் எதிர்பாராத விதமாக மோதல் ஏற்பட அதனால் ஏற்படும்  விளைவுகளே மீதிப் படம். கிட்டத்தட்ட விக்ரம் நடித்த “தில்” திரைப்படத்தின் ஒன் லைன் தான் இந்தப் படத்தின் ஒன்லைனும் கூட.

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல ஒரு திரைப்படம் எப்படியிருக்கும் என்பதைக் கணிக்க நமக்கு நீண்ட நேரம் தேவைப்படுவதில்லை .முதல் ஓரிரு காட்சிகளே உணர்த்திவிடும். இந்தப் படத்திலும் முதல் காட்சியிலேயே ஓரிடத்தில் தீப்பிடிக்கும்போது ஏற்படும் பரபரப்பை நம்மிடம் கொண்டு வந்திருக்கிறார். முதல் காட்சிக்குப் பிறகு அவர்கள் ஏன் தீயணைப்பு வீரனாக ஆக ஆசைப்படுகிறார்கள் என்பதை விளக்கும்போது இன்னும் கதையில் ஆர்வம் அதிகமாகிறது.

ஆனால் போகப் போக சென்னையிலேயே பெத்த ரவுடியுடன் சண்டை என ஆரம்பிக்கும்போது நெருப்புடாவும் தமிழ்சினிமாவின் வழக்கமான கமர்சியல் மசாலாப் படங்களின் வரிசையில் சேர்ந்து விடுகிறது. ஆனாலும் எந்த இடத்திலுமே போர் அடிக்காமல், ஆங்காங்கு சிறு சிறு நகைச்சுவை, ஓரிரு எதிர்பாராதா திருப்பங்கள் என நம்மை முகம் சுழிக்க வைக்காமல் இடைவேளை வரை கொண்டு செல்கிறார்கள். இரண்டவது பாதியில் ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லராம மாற்றி கடைசியில் சற்று டொம்மையாக முடித்திருக்கிறார்கள்.

படத்தின் மிகப்பெரிய பலம் R.D.ராஜசேகரின் ஒளிப்பதிவும் , சீன் ரோல்டனின் பிண்ணனி இசையும். வியாசர்பாடி பகுதிகளில் ’ஐ’ திரைப்படத்தின் மெரசலாயிட்டேன் பாடல் படமாக்கப்பட்ட பின் பல படங்களில் அதே லொக்கேஷனைக் காண முடிகிறது. படத்தில் விக்ரம் பிரபு வசிக்கும் ,லேட்டர்புரம் எனும் பகுதியை ரொம்பவே அழகாகக் காட்டியிருக்கிறார். அதுமட்டுமில்லாமல் தீ விபத்து காட்சிகளும் மிகவும் தத்ரூபமாகப் படம் பிடிக்கப்பட்டிருக்கிறது.
மொட்டை ராஜேந்திரன் வழக்கம்போல காண்டாமிருகக் குரலில் கத்திக்கொண்டிருக்கிறார். ஒரு சில இடங்களில் சிரிப்பு வருகிறது. அவர் வைத்திருக்கும் பைக் பார்த்தவுடன் சிரிப்பு வரவைக்கும் ரகம்.   

நிக்கி கல்ராணி வழக்கத்தை விட இந்த படத்தில் சற்று குண்டாகியிருக்கிறார். இரண்டு பாடலுக்கு மட்டும் வரும்  டிபிகல் மசாலா பட ஹீரோயின் ரோல். வில்லன்களால் கத்திகுத்து பட்டு சாவதற்கென்றே அளவெடுத்து தைத்த கதாப்பாத்திரமான ஹீரோவின் அப்பாவாக பொன்வண்ணன். 

இப்பொழுதெல்லாம் அனிரூத்திற்கு நன்றி என்று ஸ்லைடு போடப்படாத படங்களே இல்லை எனலாம். எல்லா படத்திலும் எதேனும் ஒண்று செய்துவைக்கிறார். இந்தப் படத்திலும் ஒரு பாடல் பாடியிருக்கிறார்.

போலீஸ் ஆஃபீசராக ஆடுகளம் நரேன். நரேனும் விக்ரம் பிரபுவும் சந்திக்கும் காட்சிகளில் “உன் மூக்குக்கும் ஏன் மூக்குக்கும் சோடி போட்டுக்குருவோமா சோடி” என்பது போல ஒரே மூக்கு மயமாக இருந்தது. 

வித்யாசமான வேடம் எனக் கருதி இரண்டாவது  பாதியில் பாடகரின் மனைவியான தமிழ் சினிமாவின் ரிட்டயர்டு நடிகை ஒருவரை இறக்கி விட்டிருக்கிறார்கள். படத்தைக் கெடுத்ததே அந்த ஒரு பகுதிதான். வேறு எதாவது செய்திருக்கலாம். 

இடையிடையே இடைச் சொருகலாக வரும் பாடல்கள் படத்தின் வேகத்தைக் குறைக்கின்றன. பாடல்களைக் குறைத்திருந்தால் இன்னும் சூப்பராக வந்திருக்கும்.

மொத்தத்தில் நெருப்புடாவின் முதல் பாதி சிறப்புடா… இரண்டாவது பாதி சுமார்டா.. க்ளைமாக்ஸ் மட்டும் கடுப்புடா…  ஆனால் கண்டிப்பாக பார்க்கலாம்டா.


Monday, September 4, 2017

பாலைய்யாவின் பைசா வசூல் - யாருக்கு? யாருக்கோ!!!


Share/Bookmark
த்தனையோ இளம் இயக்குனர்கள் எவ்வளவோ நல்ல நல்ல கதைகளையெல்லாம் கையில் வைத்து வாய்ப்புக்காக தயாரிப்பாளர்களை அணுகும்போது, அது சரியில்லை இது சரியில்லை என ஆயிரம் குறைகள் கண்டுபிடிக்கப்பட்டு வெளியே அனுப்பப்படுகிறார்கள். ஆனால் சில காட்டு மொக்கை படங்களப் பார்க்கும்போது இந்தக் கதையையெல்லாம் எப்படி தயாரிப்பாளரிடம் கூறி ஒப்புதல் வாங்கியிருப்பார்கள் என்று நினைத்து வியப்படையாமல் இருக்க முடிவதில்லை.

ஒருவேளை பெரிய ஹீரோவும், ஒரு பெரிய இயக்குனரும் சேரும்போது கதைகளைப் பற்றி யாரும் கவலைப்படுவதில்லையோ என்னவோ? அவர்கள் கவலைப்படாமல் இருக்கலாம். ஆனால் இவ்வாறு அலட்சியப்போக்கில் எடுக்கப்படும் சினிமாக்களுக்கு மக்கள் அவ்வப்போது தக்க பாடம் புகட்டிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.  பாலகிருஷ்ணா, பூரி ஜகன்நாத் கூட்டணியில் உருவான பைசா வசூல் திரைப்படமும் அப்படித்தான்.

பாலகிருணாவைப் பற்றி நமக்கு அவ்வளவு அறிமுகம் தேவையில்லை. அவருடைய நடன அசைவுகளும், அதீத சக்திகளும் ரொம்பவே பிரபலம். “போக்கிரி” புகழ் பூரி ஜெகன்னாத் பற்றி ஒரு சிறிய அறிமுகம். இப்பொழுதெல்லாம் ஒரு இயக்குனர் ரெண்டு வருடத்திற்கு ஒரு படம் எடுத்து முடிக்கவே போராடிக் கொண்டிருக்கும் போது 2017 களில் கூட வருடத்திற்கு இரண்டு முதல் மூண்று படங்கள் வரை இயக்கும் ஒரே இயக்குனர் பூரி ஜகந்நாத் மட்டுமே. 2000 த்தில் முதல் படத்தை இயக்கிய பூரி, இந்தப் பதினேழு வருடத்தில் இதுவரை 32 படங்களை இயக்கியுள்ளார். அனைத்து முண்ணனி நடிகர்களையும் இயக்கியிருக்கிறார். இவரின் ஒரு படம் ப்ளாக்பஸ்டர் ஹிட் ஆகும் அதே சமயத்தில் அடுத்த படம் தரை லெவலில் அட்டர் ஃப்ளாப் ஆகும். கணிக்க முடியாத ஒரு முன்ணனி இயக்குனர் இயக்குனர்.

இப்பொழுது பாலைய்யாவின் 101வது படமான பைசா வசூலை பூரி ஜகன்னாத் இயக்க, எதிர்பார்ப்பு எகிரியிருந்தது. ஆனால் நடந்ததோ அதற்கு நேர்மாறாக. இந்தப் படத்தின் கதையை ஓரிரு வரிகளில் சொல்கிறேன். இதை இதுவரை எத்தனை படத்தில் இதற்கு முன்பாக  பார்த்திருக்கிறீர்கள் என நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள்.

பாப் மார்லி எனும் மிகப்பெரிய கேங்ஸ்டரை அழிக்க முடியாமல் தவிக்கிறது உளவுத்துறை. எனவே அவனைப் போலவே இன்னொரு ரவுடியை வைத்து பாப் மார்லியின் கதையை முடிக்க திட்டமிடுகிறார்கள். அதற்கு சரியான ஆள் ஒருவரையும் தேடிக் கொண்டிருக்கிறார்கள். 25 கொலை, 35 வெட்டு என்ற ரெக்கார்டுகளுடன் திகார் ஜெயிலிலிருந்து வெளிவந்திருப்பவர் தேடா சிங் (பாலகிருஷ்ணா). அவரையே இந்த ஸ்பெஷல் ஆப்ரேஷனுக்கு தேர்வு செய்கிறார்கள். அவரது வேலை பாப் மார்லேயின் ரவுடி கும்பலில் இணைந்து அங்கிருந்தே அவனை தீர்த்துக்கட்டுவது.

தேடா சிங் தங்கியிருக்கும் அதே ஏரியாவில் வசிக்கும் ஹாரிகா தனது அக்காவைக் இரண்டு மாதங்களாகக் காணவில்லை என பெரிய பெரிய அதிகாரிகளைப் பார்த்து விசாரித்து வருகிறார். அதே சமயம் பாலைய்யா தலைநகரம் வடிவேலு போல முகத்தை அருகில் காட்டிக் காட்டி ஹாரிகாவிற்கு லவ் டார்ச்சர் கொடுத்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் பாப் மார்லியின் ரவுடி கும்பலால் ஹாரிகாவின் குடும்பத்திற்கு எந்த ஆபத்தும் வராமல் தடுத்து வருகிறார். ஒரு கட்டத்தில் ஹாரிகாவின் அக்கா இறந்துவிட்டதும் அதற்கு காரணமான கொலையாளி தேடா சிங் எனவும் தெரியவர, தேடா சிங்கை இதயத்திற்கு சற்று அருகில் சுடுகிறார் ஹாரிகா. (இதயத்துல சுட்டாதான் செத்துருவாரே) அத்துடன் இடைவேளை.

இதன்பிறகு இரண்டாவது பாதியில் என்ன சொல்லப் போகிறார்கள் என்பது இரண்டு வயது குழந்தையைக் கேட்டால் கூட சொல்லிவிடும். கொசுவர்த்தியைச் சுற்றி ஃப்ளாஷ்பேக் ஆரம்பம்.  போர்ச்சுக்கல் நாட்டில் டாக்ஸி ஓட்டிக்கொண்டிருப்பர் தேடா சிங். (அத நம்ம ஊர்ல ஓட்டுனா ஆகாதான்னு நீங்க கேக்குறது புரியிது) டூரிஸ்ட் போல வரும் ஃஹாரிகாவின் அக்கா சாரிகாவை (ஷ்ரேயா) தேடா சிங் லவ்வுகிறார். (என்னய்யா பேரு அங்கவை சங்கவை மாதிரி இருக்கு) சாரிகா ஒரு நியூஸ் சேனலில் வேலை செய்பவர். பாப் மார்லேயைப் பற்றி ரகசியமாக ஒரு டாக்குமெண்டரி தயாரித்துக் கொண்டிருக்கிறார். இதைத் தெரிந்துகொண்ட பாப் மார்லே குழு சாரிகாவைத் தாக்க, டாக்சி ட்ரைவர் தேடா சிங் குறுக்கால புகுந்து காப்பாற்றுகிறார். அதன்பிறகு தான் தேடா சிங் உண்மையில் டாக்ஸி ட்ரைவர் அல்ல. பாப் மார்லேவைப் பிடிக்க மாறு வேடத்தில் சுற்றிக்கொண்டிருக்கும் ”ரா ஏஜெண்ட்” எனும் ரத்ததத்தை உரைய வைக்கும் அந்த ரகசியத்தை வெளியிடுகிறார்கள்.

இப்படி ஒரு கேவலாமான ட்விஸ்டால் கடுப்பாகும் பாப் மார்லே சாரிகாவை போட்டுத்தள்ளுகிறார். ஒருவேளை சாரிகா எடுத்த வீடியோ அவள் தங்கை ஹாரிகாவிடம் இருந்தாலும் இருக்கும் என்ற நோக்கில் அவளையும் டார்ச்சர் செய்ய அவர்களைக் காப்பாற்றவே தேடா சிங் ரவுடி அவதாரம் எடுக்கிறார். பிறகு க்ளைமாக்ஸில் அனைவரயும் போட்டுத்தள்ளுகிறார். இப்படி ஒரு கண்றாவியான கதையைக் கண்டதுண்ணா யுவர்ஹானர்?

இப்போது நான் சொன்ன கதையில் உங்களுக்கு என்னென்ன படங்கள் ஞாபகம் வருகின்றன? விஜய்யின் போக்கிரி மற்றும் மதுர, அர்ஜூன் நடித்த கிரி, சரத்குமாரின் ஏய்… மற்றும் பல.  அதுமட்டுமல்லாமல் இதே கதையை இதே இயக்குனர் “இத்தர் அம்மாயில்தோ” (ரெண்டு பொண்ணுங்களோட) என்ற பெயரில் சில வருடங்களுக்கு முன்னர் அல்லு அர்ஜூனை வைத்து எடுத்திருக்கிறார்.

மொத்தப் படமுமே எதோ ஏனோதானோ என்று எடுத்தது போல இருக்கிறது. பாலைய்யாவை எனர்ஜிடிக்காக காட்டுவதாக நினைத்துக் கொண்டு அனைத்து வசனங்களையுமே ஹை பிட்சில் பேச வைத்து காது ஜவ்வுகளைக் கிழிக்கிறார்கள். விவேகத்தில் விவேக் ஓபராய் அஜித்துக்கு கொடுப்பதைப் போல பல மடங்கு பில்ட் அப் தனக்குத் தானே கொடுத்துக்கொள்கிறார். மற்ற படங்களை விட டான்ஸ் மூவ்மெண்ட் இந்த படத்தில் கொஞ்சம் குறைவுதான்.

முன்பெல்லாம் ஹீரோ சப்-இன்ஸ்பெக்டர், இன்ஸ்பெக்டராக நடிப்பார்கள். அடுத்து போகப் போக ACP, DCP என்று ப்ரோமோஷன் ஆகி இப்பொழுதெல்லாம் நடித்தால் “ரா ஏஜெண்டு சார்.. நா வெய்ட் பன்றேன் சார்” என்கிறார்கள்.

பாலைய்யா ரா ஏஜெண்ட் என்பது ஒரே ஒருவரைத் தவிற யாருக்குமே தெரியாது. (யாருக்குமே தெரியாம வேலை பாக்குறதுக்கு எதுக்குடா வேலை பாக்குறீங்க). அந்த உண்மை தெரிந்த ஒருவரையும் எதிரிகள் சுட்டுவிட, இவர் ரா ஏஜெண்ட் என எப்படி உறுதிப்படுத்துவது என அனைவரும் குழம்புகிறார்கள். உடனே ஒரு வழி.. அவரை முதலில் நேர்காணல் செய்த போது கேட்கப்பட்ட கேள்விகளும் பதில்களும் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. அதே கேள்விகளை மீண்டும் கேட்டு அதே பதிலை அவர் சொல்லும் பட்சத்தில் இவர் தான் அந்த ஏஜெண்டு என உறுப்படுத்திக்கொள்ளலாம் என்கின்றனர். மறுக்கா இண்டர்வியூ. கேள்விகள் கேட்க கேட்க பாலைய்யா பிரித்து மேய்கிறார். இண்டர்வியூ முடியும் போது மொத்த போலீஸ் படையும் எழுந்து அவருக்கு சல்யூட் அடிக்க, இதுக்கு எங்கள நாலு அடி செருப்பாலயே அடிச்சிருக்கலாம் என்று தோன்றியது நமக்கு. 

இடைவேளையில் நெஞ்சுக்கு அருகில் குண்டு பாய்ந்ததும், அதைப்பற்றி கவலைப்படாமல் ஸ்டைலாக உட்கார்ந்து சிகரெட் பற்ற வைத்து பஞ்ச் டயலாக் பேசிய காட்சியில் திரையரங்கில் இருந்த அனைவரும் கண்ணில் ஜலம் வைத்துக்கொண்டனர்.

படத்தில் உருப்படியாக இருந்த ஒரே விஷயம் பாடல்கள். அனூப் ரூபன்ஸ் அனைத்து பாடல்களையுமே சிறப்பாக கொடுத்திருக்கிறார். அதுவும் முதல் பாடலில் க்ரியா தத் போட்ட ஆட்டம் இன்னும் கண்ணுக்குள்ளயே நிற்கிறது. கொடுத்த காசு அது ஒண்றுக்கு மட்டும்தான் தகும். 

மொத்தத்தில் பைசா வசூல் யாருக்கு என்றால் யாருக்கோ என்றுதான் சொல்ல வேண்டும்… நிச்சயம் தயாரிப்பாளருக்கு இல்லை.

படம் முடிந்து வெளியில் வரும்போது அருகில் வந்தவரிடம் “என்னங்க படம் இவ்வளவு கேவலமா இருக்கு?” என்றேன். ”54 வயசுலயும் எவ்வளவு கஷ்டப்பட்டு நடிக்கிறாரு. அந்த ஹார்டு ஒர்க்குக்காக படத்த பாருங்க.. பாலைய்யாடா… ஹார்டு ஒர்க்குடா” என அவர் கூறியதும் ”ஆத்தாடி அந்த குரூப்பு இங்கயும் வந்துட்டானுகடோவ்” என பின்னங்கால் பிடறியில் அடிக்க ஓட்டம் எடுத்தேன்.

Wednesday, August 30, 2017

விவேகம் - சறுக்கியது எங்கே?


Share/Bookmark
எதிர்மறை விமர்சனங்கள் ஒரு புறம் கொடிகட்டிப் பறந்தாலும் மறுபுறம் விவேகம் வசூல் சாதனை புரிந்துகொண்டுதான் இருக்கிறது. எதிர்மறை விமர்சனங்கள் பெருநடிகர்களின் முதல் வார வசூலைப் பெரும்பாலும் பாதிப்பதில்லை. இது போன்ற முண்ணனி நடிகர்களின் படங்கள் வெளியாகும்போது மட்டும் திரையரங்கிற்கு வரும் குடும்பங்கள், விமர்சனங்களைப் பற்றி கவலைப்படுவதில்லை. ஆனால் விவேகம் இயக்குனர் சிவா-அஜித் கூட்டணியில் உருவான முந்தைய இரு படங்களின் அளவு ரசிகர்களை திருப்திப்படுத்தவில்லை என்பது மறுக்க முடியாத உண்மை.

விவேகம் படத்தில் கதை இருக்கிறதா இல்லையா என்பதையே நமது நெட்டிசன்கள் மிகத் தீவிரமாக விவாதித்து வருகின்றனர். அது ஒருபுறம் இருக்கட்டும். கதை  அவ்வளவு சிறப்பாக இல்லையென்றாலும் திரைக்கதையிலும், உருவாக்கத்திலும் எந்த ஒரு படத்தையும் ரசிக்க வைத்துவிடலாம். ”பையா” திரைப்படத்தில் கதை என்ற ஒண்றே இல்லை என்பது லிங்கு பாய் அவர் வாயாலேயே ஒப்புக்கொண்டது. ஆனாலும் கார்த்தியின் முக்கியமான வெற்றிப்படங்களில் இன்று பையாவும் ஒண்று.

விவேகத்தில் அவர்கள் காட்டிய கதையில் எந்தெந்த காரணங்களால் பார்வையாளர்களுக்கு  படத்தின் மீது ஒரு ஈர்ப்பு வரவில்லை? எதை எதை இன்னும் சிறப்பாக செய்திருக்கலாம் என்பதை நம் அறிவுக்கு எட்டிய கோணத்தில் காண்போம்.
படத்தின் முக்கியமான குறைகளில் ஒண்று படத்தின் கதை ஓட்டத்தில் நம்மை பொறுத்திக்கொள்ள முடியாமை. படத்தில் அஜித்திடம் காணப்படும் அதே பரபரப்பு நம்மிடமும் இருந்திருக்க வேண்டும். ஆனால் அப்படி எதுவுமே பார்வையாளர்களான நமக்கு ஏற்படவில்லை.

வழக்கமாக நம் தமிழ் சினிமாக்களில் வில்லன் ஒரு இடத்தில் குண்டு வைத்திருப்பார். ஹீரோ அதனைத் தேடி அலைந்து  கடைசி நிமிடத்தில் கண்டுபிடிப்பார். அதில் ஓடிக்கொண்டிருக்கும் டைமர் சொற்ப நொடிகளே மிச்சமிருப்பதைக் காண்பிக்கும். சிவப்பு, நீலம் என்ற இரு ஒயர்களில் ஏதேனும் ஒன்றை நறுக்க வேண்டும். ”சிவப்பா நீலமா” என்ற குழப்பத்தில் ஹீரோவின் முகத்திலிருந்து வியர்வை வழிய, அவருக்கு இருக்கும் படபடப்பில் ஒருபகுதியாவது பார்க்கும் நமக்கும் இருக்கும். பார்க்கப்போனால் எந்தப் படத்திலுமே ஹீரோ ஒயரை நறுக்கும்போது குண்டு வெடித்ததாக சரித்திரம் இல்லை. அப்படியிருந்தும் நமக்கு லேசாக படபடக்கும். அந்த படபடப்புதான் நாம் கதைக்குள் இருக்கிறோம் என்பதற்கான ஆதாரம்.

விவேகம் திரைப்படத்தில் அப்படி எந்த இடத்திலுமே நம்மால் உணர முடியவில்லை. ஹீரோவின் அறிமுகக் காட்சிகள், பில்ட் அப் காட்சிகள் குடும்ப செண்டிமெண்ட் காட்சிகளெல்லாம் முடிந்து கதைக்குள் நுழையும் காட்சி என்பது “செயற்கை பூகம்பம்” ஒண்று ஏற்பட்டதாகவும் அதனால் பலர் உயிரிழந்ததாகவும், அடுத்து ஒரு செயற்கை பூகம்பம் ஏற்படுவதற்கு முன்னர் அதைத் தடுக்க வேண்டும் எனவும் விவேக் ஓபராய் அஜித்திடம் விவரிக்கும் காட்சிதான்.

அந்த செயற்கை பூகம்பம் ஏற்படுவதையும், அதன் தாக்கத்தையும் தனிக் காட்சியாக படம் பிடித்துக் காட்டியிருக்க வேண்டும். அப்போதுதான் அது எவ்வளவு கொடூரமானது என்பதும் , அடுத்த பூகம்பம் நிகழாமல் தடுப்பது எவ்வளவு அவசியம் என்பதும் பார்வையாளர்களால் உணர முடியும். ஆனால் உண்மையில் நமக்கு காட்டப்படுவது என்ன? பூகம்பம் ஏற்பட்டதை அஜித்தும் விவேக் ஓபராயுமே திரையில்தான் பார்க்கிறார்கள். திரையில் காட்டப்படும் காட்சிகளுக்கே தாக்கம் குறைவாக இருக்கும்போது திரைக்குள் திரையில் காட்டினால் எப்படி தாக்கம் இருக்கும்? பார்வையாளர்கள் கதையுடன் ஒண்றாமல் போனதற்கு இது ஒரு மிக முக்கியக் காரணம்.

அதேபோல அஜித் மற்றும் விவேக் ஓபராய் இடைப்பட்ட நட்பு. ”நண்பா.. நா நம்புறேன் நண்பா… நீ கலக்கு நண்பா… தெறிக்கவிடு நண்பா” இதுபோன்ற உதட்டளவு வசனங்களைத் தவிற அஜித்தும் விவேக் ஓபராயும் நல்ல நண்பர்கள் என்பதைக் காட்டும் காட்சிகள் எதுவுமில்லை. சர்வைவா பாடலோடு பாடலாக ஒருசில காட்சிகள் கடந்து செல்கிறது. ஆனாலும் பயனில்லை. அவர்கள் நண்பர்களாக இருப்பதே நமக்கு தாக்கத்தை ஏற்படுத்தாத பொழுது நண்பன் எதிரியாக மாறும் பொழுது, அவர்கள் படத்தின் ட்விஸ்ட்டாக நினைத்த அந்த காட்சி நமக்கும் ட்விஸ்டாகத் தெரியவில்லை. அதே சமயம் அவர்கள் செய்தது துரோகமாகவும் நம்மால் உணரமுடியவில்லை.  

அடுத்ததாக படத்தில் நமக்கு இருக்கும் கொஞ்ச நஞ்ச ஈடுபாட்டையும் தகர்த்ததுகதாப்பத்திரங்களின் தெரிவு எனலாம். முதலில் அஜித்தின் உதவியாளராக வரும் கருணாகரனின் தெரிவு. விவேக`ம் படத்தில் இருக்கும் அந்த கதாப்பாத்திரம் நிச்சயம் கருணாகரனுக்கானது அல்ல. உலகநாடுகள் அளவில் தேடப்படும் ஒரு பெண்ணை பிடிக்கும் உளவாளியின் உதவியாளன் வெறும் பயந்தாங்கோளியாக, காமெடி செய்ய முயற்சிக்கும் ஒருவர் மட்டும் போதாது.   காமெடிக்கென தனி ட்ராக்குகள் இல்லை. கதையின் ஒட்டத்திலேயே பார்வையாளர்களைச் சிரிக்க வைக்க வேண்டும். அதே சமயம் ஒரு போலீஸிற்கான கெத்தும் இருக்கவேண்டும் என்கிற பட்சத்தில் அந்த கதாப்பாத்திரத்திற்கு விவேக்கைத் தவிற வேறு எவரும் சிறப்பாகப் பொருந்தமுடியாது. ஏற்கனவே ஒரு படத்தில் அதே கூட்டணியில் நடித்ததால் விட்டுவிட்டார்களோ என்னவோ?  

அடுத்தது காஜல் அகர்வாலின் தெரிவு, முண்ணனி நடிகர் என்பதால் அவர்களுக்கு சமமான அந்தஸ்தில் உள்ள முன்ணனி கதாநாயகிகள் மட்டுமே நடிக்க வேண்டும் என்பது நான்கு பாடல்களுக்கு மட்டும் கதாநாயகிகளை அரைகுறை ஆடையில் ஆடவைக்கும் படங்களுக்குப் பொருந்தும். ஆனால் கதாநாயகியும் கதையின் ஒரு முக்கிய அங்கமாக இருக்கும்பொழுது, அவரைச் சுற்றியும் கதை பின்னப்பட்டிருக்கும் போது முண்ணனி நடிகை என்பதைக் காட்டிலும் கதைக்கும், நாயகனுக்கும் பொருந்துகிறாரா என்பதையும் கவனித்திருக்க வேண்டும்.

சதிலீலாவதி திரைப்படத்தில் கமல் கோவை சரளாவை தனக்கு ஜோடியாக்கி நடித்திருப்பார். கோவை சரளா கமலுக்கான ஜோடியா? கதைக்குத் தேவைப்பட்டது. நம்மாளும் ஏற்றுக்கொள்ள முடிந்தது. டங்கல் திரைபடத்தில் சாக்‌ஷி தன்வார் எனப்படும் ஒரு சாதாரண நடிகைதான் இந்தியாவிலேயே முன்னணி நடிகரான அமீர்கானின் மனைவியாக நடித்திருந்தார். “இல்லை இல்லை.. நான் நம்பர் 1 நடிகன்.. இந்தப் படத்தில் எனக்கு கேத்ரினா கெய்ஃப் தான் மனைவியாக நடிக்க வேண்டும் என்று அமீர்கான் நினைத்திருந்தால், டங்கல் டொங்கல் ஆகியிருக்கும் அல்லவா?

அதுபோல் கதைக்குத் தேவையானவற்றையும் கருத்தில்கொண்டு கதாப்பாத்திரங்களைத் தெரிவு செய்யவேண்டும். விவேகத்தில் காஜல் அகர்வாலிற்குப் பதிலாக நயன்தாரா இதே கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் பட்சத்தில் அதே காட்சிகள் இன்னும் சற்று வலுவாக இருந்திருக்கும். ஆனால் தற்பொழுது அவரின் ரேஞ்சுக்கு இதுபோன்ற டொம்மையான கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கமாட்டார் என்பது வேறு விஷயம். காஜல் எந்த விதத்திலும் அந்த கதாப்பாத்திரத்திற்கு பொருத்தமானவர் அல்ல. 

அடுத்ததாக ஆக்‌ஷனையும் செண்டிமெண்டையும் கலந்து கொடுப்பது தவறல்ல. ஆனால் இரண்டையும் ஒரே நேரத்தில் கலந்து விட்டு அடித்திருப்பதுதான் நகைப்பை வரவழைத்தது. படத்தில் உச்சகட்ட ஒரு பைக் சேசிங் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது, ஃபோனைக் காதில் வைத்து குழந்தையின் இதயத் துடிப்பைக் கேட்பது, பத்துப் பதினைந்து குண்டுகள் உடலில் பாய்ந்து மரத்தில் தொங்கிக் கொண்டிருக்கும்போது ஃபோனை எடுத்து சிவாஜியின் “கைவீசம்மா… கைவீசு” பாணியில் “வர்றேம்ம்ம்மா” என்பது போன்ற காட்சிகளை முற்றிலுமாக தவிர்த்திருக்கலாம்.

எல்லாவற்றிற்கும் மேலாக அந்த சால்ட் அண்ட் பெப்பர் சிகையழகை கொஞ்சம் மாற்றியிருக்கலாம். பெப்பர் எல்லாம் போய் தற்பொழுது வெறும் சால்ட் மட்டும் இருப்பது அஜித்தை தனியாகப் பார்க்கும்போது பெரிய விஷயமாகத் தெரியாவிட்டாலும் காஜலுடன் சேர்த்துப் பார்க்கும்போது.. சரி விடுங்க… அத ஏன் சொல்லிக்கிட்டு.. !!!

Friday, August 25, 2017

விவேகம் – ஆக மொத்தம் மூணு.. ச்சீயர்ஸ்!!!


Share/Bookmark
கொஞ்சநாள் முன்னால வரைக்கும் அஜித் விஜய் ரெண்டு பேர்ல  யார் நல்ல ஹிட்டு குடுத்து அவங்கவங்க ரசிகர்கள சந்தோஷப்படுத்துறதுங்குற போட்டி இருந்துட்டு வந்துச்சி. ஆனா இப்ப அது அப்டியே தலைகீழா மாறி, யாரு மொக்கை படம் குடுத்து மத்த ரசிகர்கள் குஷிபடுத்துறதுங்குற போட்டி போயிட்டு இருக்கும்போல. ஆறு மாசத்துக்கு முன்னால விஜய் பைரவான்னு ஒரு படத்த அஜித் ரசிகர்கள சந்தோஷப்படுத்த எடுத்தாப்ள. இப்ப அதுக்கு கைமாறா விஜய் ரசிகர்கள சந்தோஷப்படுத்த நம்ம அல்டிமேட்டு விவேகம் எடுத்துருக்காரு. 

வீரம், வேதாளம்னு இரண்டு வெற்றிப்படங்களைக் குடுத்தப்புறம் மூன்றாவதா சிவா அஜித் கூட்டணியில் அடுத்த படம். போஸ்டர், டீசர் ட்ரெயிலர் அத்தனையும் ரசிகர்களை குஷி படுத்தியிருக்க, படம் எப்டி இருக்குன்னு பாப்போம். தலை கெத்துடா, 1500 ஆப்ரேஷண்டா, ஒன் இயர் ஆப் ஹார்டு ஒர்க்குடா, சிக்ஸ் பேக்குடாஇதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும்.  அதெல்லாம் அந்தந்த சீசன்ல அவன் அவன் செய்யிறதுதான். ஒரு படமா விவேகம் எப்டி இருக்குன்னு பாக்கலாம்.

விவேகம் டீசர் வெளியான ஓரிரு தினங்கள்ல அந்த டீசர ஃப்ரேம், பை ஃப்ரேமா அலசி ஆராஞ்சி பாத்து ஒருத்தர் விவேகம் படத்துக் கதை இப்டித்தான் இருக்கும்னு ஒரு கதை சொல்லிருந்தாரு. அதாவது டீசர்ல வர்ற ஒரு அஜித் போலீஸ்னும், பேக் சாட்ல திரும்பி நிக்கிற அஜித் உலக நாடுகள் பலவற்றில் தேடப்படுற மிகப்பெரிய கிரிமினல்னும் அவர் தான் படத்தோட வில்லன்னும் சொல்லிருந்தாங்க.. இப்ப நா என்ன சொல்றேன்னா சிவாவும் அவரோட டீமும் இந்தக் கதை எழுதுனவர தேடிக் கண்டுபுடிச்சி அவர அவங்களோட அடுத்த படத்துக்கு கதை எழுத யூஸ் பன்னிக்குங்கன்னு சொல்றேன். ஏன்னா அந்தக் கதையே நல்லாருந்துச்சி.

இந்த ஹாலிவுட் படங்கள்லதான் டாம் க்ரூஸு, மேட் டாமன், டாம் ஹாங்க்ஸெல்லாம் குறுக்கயும் மறுக்கயும் ஓடி ஓடி சண்ட போட்டுக்கிட்டு இருப்பாய்ங்க. என்னடான்னு கேட்டா உலகத்தையே அழிக்கப்போற பெரிய திட்டம் எதையோ முறியடிக்க போராடிக்கிட்டு இருக்கேன்னுவானுங்க. அந்தத் திட்டம் உலகத்துலயே இவனுங்களுக்கு மட்டுதான் தெரியும். ஒட்டுமொத்த கவர்மெண்ட்டே இவய்ங்களுக்கு எதிரா இருக்கும். ஆனாலும் இவங்க தனி ஆளா நின்னு உலகத்த காப்பாத்திருவாங்க. மிஷன் இம்பாஸிபிள், Bourne,  ஜேம்ஸ் பாண்டு படங்கள்னு பல படங்கள்ல இதான் கதை.,  இப்ப அதே கதையிலதான் தல அஜித்தும் நடிச்சிருக்காரு. யப்பா.. தல ஹாலிவுட் கதையில நடிக்கப் போறாரு ஹாலிவுட் கதையில நடிக்கப்போறாருன்னு சொன்னீங்களே.. அது இதானாடா?

மாப்ளமுப்பதாயிரம் ரூவா முழுசா குடுத்ததுக்கு அந்த நேப்பாள் கார கூர்க்கா காலையிலதான் கரெக்டா சோலி பாத்தான்ன்னு கவுண்டர் புலம்புற மாதிரி மூணு படம் வரிசையா குடுத்ததுக்கு இந்தப் படத்துலதான் சிவா சிறப்பா வேலை பாத்துருக்காரு. ஆரம்பம் படத்து கதைய ((?) லைட்டா பட்டி டிங்கரின் பாத்து விவேகம் கதையாக்கிட்டாரு.

படத்துல மிகப்பெரிய ப்ரச்சனை கேமராவும், எடிட்டிங்கும். படம் பார்ப்பவர்கள் எதையுமே ஒழுங்காவோ தெளிவவோ பாத்துறக் கூடாதுங்குறதுல இவங்க ரெண்டு பேருமே ரொம்ப கவனமா இருந்துருக்காங்க. பெரும்பால காட்சிகள்ல கேமாராவை தோளில் வைச்சிகிட்டே ஷூட் பன்னிருக்காங்க. ஆட்டி ஆடிக்கிட்டு அதுவே எரிச்சல். ரெண்டு செகண்டுக்கு மேல எந்த ஷாட்டையுமே காமிக்கிறதில்லை. டக்கு டக்குன்னு காட்சிகள் மாறிக்கிட்டே இருக்கு. ஒருவேளை இந்த மாதிரி பன்னா படம் ஸ்பீடா இருக்க மாதிரி இருக்கும்னு யாரும் எவனோ ஐடியா குடுத்துருக்கான். 

ஒரு படத்துல எந்த கேரக்டரச் சுத்தி கதை நகருதோ மக்களும் அந்த கேரக்டரா இருந்துதான் படம் பாப்பாங்க. உதாரணமா ஹீரோவச் சுற்றி நடக்குற கதைன்னா, மக்களும் தங்களை அந்த ஹீரோ இடத்துல பொறுத்திக்கிட்டு கதையில பயணிப்பாங்க. இந்தப் படத்துல அந்த மாதிரி கதையோட நம்மால பயணிக்கவே முடியல. அஜித்திடம் இருக்கும் பரபரப்போ இல்லை பதற்றமோ படத்தோட எந்த சூழல்லயும் நமக்கு வரவே இல்ல.

படத்துல சூப்பரா இருக்கது விவேக் ஓபராய் மட்டும்தான். செம கெத்தா இருக்காரு. ஆனா பாருங்க கெத்தா வேஷம் போட்டு சிங்கம் படத்து விஜயகுமார் ரோல்ல நடிக்க வச்சிருக்கானுங்க. சிங்கத்துல விஜயகுமார் சரியா சொன்னீங்க தொரைசிங்கம்” “சபாஷ் தொரைசிங்கம்ன்னு சொல்லிக்கிட்டே இருக்க மாதிரி விவேக் ஓபராய் படம்  முழுக்க அஜித்துக்கு பில்டப் மட்டுமே குடுத்துக்கிட்டு இருக்காரு. அவன் யாருக்கும் பயப்பட மாட்டான் அவன் போரடாம போவ மாட்டான் ”அவன கொன்னாலும் சாகமாட்டான்”… நீ இப்புடியே பேசிகிட்டு இருந்தியன்னா ஒரு பய தியேட்டர்ல இருக்க  மாட்டான். 

அஜித்துக்கு பில்ட் அப் குடுக்கற வசங்கள் எழுதுன கேப்புல கொஞ்சம் மற்ற வசனங்களும் படத்துல இருக்குன்னு மைண்டுல வச்சிருந்துருக்கலாம். காஜல் அகர்வால் பேசுற வசனமெல்லாம் ஒண்ணாப்பு ரெண்டாப்பு புள்ளைங்க எழுதிக்குடுத்த மாதிரி இருக்கு. இந்த ஃபீனிக்ஸ் பறவை உதாரணம் ஒண்ணு கிடைச்சி போச்சு இவங்களுக்கு. இவய்ங்க தொல்லை தாங்காம “நா இனிமே எந்திரிக்கவே மாட்டேண்டா”ன்னு சொல்லிட்டு ஃபீனிக்ஸ் பறவையே தூக்கு போட்டு சாகுற வரைக்கும் விடமாட்டாய்ங்க போல..

கதைக்கும் கெட்டப்புக்கும்  வசனத்துக்கும் சம்பந்தமே இல்லாம காமெடி பன்ன முயற்சி பன்னிருக்காரு கருணாகரன். ட்ரெயிலர்ல ”எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியல சார்” ன்னு கருணாகரன் சொன்னதும் “ஒரு டீ சொல்லுங்க”ன்னு தல சொல்லுவாரே. அதுதான் படத்துலயே செம்மையான காமெடி. அப்ப மத்ததெல்லாம் எப்டின்னு நீங்களே யோசிச்சுக்குங்க.  


அக்சரா ஹாசன் ஒரு சின்ன ரோல். அவங்க ஒரு ஹேக்கர். நானும் வட ஆப்ரிக்காவுலயும் பாத்துருக்கேன் தென் ஆப்ரிககவுலயும் பாத்துருக்கேன். இப்புடி ஒரு ஹேக்கரப் பாத்ததே இல்லை. ஒரு சின்ன ஃபோன மட்டும் வச்சிக்கிட்டு அவங்க போற இடங்கள்ல உள்ள சிசிடிவி கேமரா, டெலிஃபோனு, Road Block ன்னு கண்ணுல படுற அனைத்தையும் ஹேக் பன்றாங்க. அதும் போற வழியில சும்மா சூன்னுட்டுதான் போறாங்க. அத்தனையும் இவங்க கண்ட்ரோலுக்கு வந்துருது. யம்மா நீ ஹேக்கரா இல்ல மந்திரவாதியாம்மா? என்னதான் ஹாக்கரா இருந்தாலும் ஒரு நாயம் வேணாமாப்பா? ஹேக்கருக்கு உண்டான மரியாதை போச்சேடா உங்களால..

அஜித் ரெண்டு கடந்த ரெண்டு படத்துல கொஞ்சம் இம்ப்ரூவ் ஆன மாதிரி தெரிஞ்சாரு. இந்தப் படத்துல மறுபடி பழையபடி ஆயிட்டாரு. வசன உச்சரிப்பெல்லாம் சிலது கேக்க முடியல.. “You….. will….. see…….. my….. “ அப்டியே சொல்லிக்கிட்டே இருங்கதல.. அர்ஜெண்ட்டா வருது.. டாய்லெட் வரைக்கும் பொய்ட்டு வந்துடுறேன்னு எழுந்து போயிடலாம். நல்ல வேளை y… o…. u… w… ன்னு ஒத்த ஒத்த எழுத்தா சொல்லாம விட்டாரே. சர்வைவா பாட்டுல மட்டும் ஆளு செமை சூப்பரா இருக்காரு. இண்ட்ரோ சீன் நல்லாருக்கு. அதுலயும் பாலத்துலருந்து பல்டி அடிக்கிற சீன்ல லிங்கா க்ளைமாக்ஸ் கண்ணு முன்னால வந்து போச்சு.    

இண்டர்வல்ல வழக்கம்போல அஜித்த ஒரு பத்து பதினைஞ்சி புல்லட்ட்ல சுட்டு, ஒரு மலையிலருந்து தூக்கி வீசிடுறாய்ங்கநல்ல வேளை பங்கிமலை பாறை மேல விழுந்ததால தப்பிச்சாறு. இல்லைன்னா என்னாயிருக்கும்? கீழ விழுந்த உடனே கால்ல கையில குத்தியிருந்த குச்சியெல்லாம் புடுங்கி வீசிட்டு எக்ஸர்சைஸ் பன்ன ஆரம்பிச்சிடுறாரு. யோவ் தலஅந்த நாலஞ்சி புல்லட்டு உடம்புக்குள்ள பாய்ஞ்சத எடுக்க மறந்துட்டீயே…. நமக்கு ஞாபகம் இருக்கு கழுத அவரு மறந்துட்டாரு பாருங்க. இத்தனை புல்லட்டு, இத்தனை ஃப்ராக்சரையெல்லாம் ஹாஸ்பிட்டலுக்கு போகாம ”நடந்தே” குணப்படுத்திக்கிட்ட ஒரே ஆள் உலகத்துலயே நம்ம தலை ஒருத்தர்தான். இனிமே ”தல”க்கு Ultimate Star ங்குற மாத்திட்டு “Walking Star” ன்னு வச்சா பொறுத்தமா இருக்கும்.

நா எத வேணாலும் மன்னிச்சிருவேன்.. ஆனா அந்த சிக்ஸ் பேக்குக்கு நம்மாளுங்க சண்டை போட்டத மட்டும் நா மன்னிக்கவே மாட்டேன். ஒருத்தன் VFX ங்குறான். இன்னொருத்தன் இல்லடா அது ஒரிஜினல்டா. தலை கஷ்டப்பட்டு கொண்டு வந்துருக்காருடாங்குறான். தயவு செஞ்சி படத்துல பாருங்கப்பா.. இது சிக்ஸ் பேக்கா? இல்லை இதான் உங்க சிக்ஸ் பேக்கா?”ங்குற லெவலுக்கு ஆயிப்போச்சு. மோகன்லால் கொஞ்சம் வேகமா திரும்புனார்னா முகத்துல சதை அதிகமா இருக்கதால திரும்பும்போது கண்ணம் கொஞ்சம் ஆடும். உடனே நம்மாளுங்க பாருடா மோகன்லாலோட கண்ணம் கூட நடிக்கிதுன்னு ஆரம்பிச்சிருவானுங்க. அதே மாதிரி இந்தப் படத்துலயும் தல சட்டையக் கழட்டிட்டு திரும்பும்போது ஒவ்வொரு பகுதியும் தனித்தனியா ஆடுது. என்னென்ன சொல்லப்போறானுங்களோ….

சக்கரைப் பொங்கல் வடைகறி காம்பினேஷன விட கேவலாமான ஒரு காம்பினேஷன் இருக்குன்னா அது நம்ம அஜித் காஜல் அகர்வால் ஜோடிதான். கெமிஸ்ட்ரி, பயாலஜி, பிசிக்ஸ்னு எதுவுமே செட் ஆகல. அஜித் காஜல் சம்பந்தப்பட்ட காட்சிகள் ரொம்பவும் செயற்கைத்தனம். அதும் க்ளைமாக்ஸ்ல அஜித் சண்டை போடும்போது காஜல் வெறியேறபாட்டுப் பாடுனதும் எனக்கு தூள் படத்துல விக்ரம் அடிக்கும்போது பறவை முனிம்மா சிங்கம்போலபாட்டு பாடுனது மாதிரி இருந்துச்சி. தியேட்டர்ல ஒருசிலர் வாய்விட்டு சிரிக்கவே ஆரம்பிச்சிட்டாங்க.

படத்துல நல்ல விஷயங்கள்னு சொல்லப்போனா இண்ட்ரோ சீன், சர்வைவா பாட்டு, ஒரு சில காட்சிகளில் கேமரா மற்றும் விவேக் ஓபராய். அஜித் ஒரு சில ஆங்கிள்ல செமையா இருக்காரு. மீசையில்லாம இந்த முழு வெள்ளைத் தலையோட பாக்க கொஞ்சம் கஷ்டமாத்தான் இருக்கு. அனிரூத் குறை சொல்ற அளவுக்கு இல்லை. திரைக்கதை மற்றும் மேக்கிங் மெகா சொதப்பல்.

மொத்தத்துல அஜித் இருக்கார் அப்டிங்குற ஒரே காரணத்துக்காக  பாக்கலாம். மத்தபடி சிறப்பா எதுவும் இல்லை. படம் பாக்க உள்ள போறப்போ “சர்வைவா… சர்வைவா” ன்னு சந்தோஷமா பாட்டு பாடிட்டு போனவனுங்கள வெளில வரும்போது “தம்பி நீ survive ah?” ன்னு கேக்குற அளவுக்கு ஆக்கி விட்டுட்டாய்ங்க..!!!


-Originally posted On oneindiaLinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...