Showing posts with label ACCET. Show all posts
Showing posts with label ACCET. Show all posts

Wednesday, May 31, 2017

ஏய் நா இண்டர்வியூக்கு போறேன்.. இண்டர்வியூக்கு போறேன்-ACCET PLACEMENT!!! -2


Share/Bookmark
இந்தப்பதிவின் முதல் பகுதியைப் படிக்க இங்கே க்ளிக்கவும். காலங்கள் உருண்டோடியது. சுத்தி உள்ள எல்லாம் மாறிக்கிட்டே இருந்துச்சி. ஆனா நா இண்டர்வியூக்கு போயி மொக்கை வாங்கிட்டு வர்றது மட்டும் மாறவே இல்லை. ஒரு கட்டத்துல reject ஆகுறது கஷ்டமாக இருந்த காலம் போய் என்ன சார்.. நேத்து  இண்டர்வியூ பன்ன வர்றேன்னீங்க.. வரவே இல்லை ன்னு ஒவ்வொன்னையும் எஞ்சாய் பன்ன ஆரம்பிச்சிட்டேன். அதுவும் ஒவ்வொரு தடவ நா இண்டர்வியூக்கு போகும்போதும் எங்க பயலுக குஷியாயிருவானுங்க.. எப்புடியும் ஊத்திக்கும்னு தெரிஞ்சே நா ஃபைல துக்கிட்டு வர்றத பாத்துட்டு ஃபைனல் இயர் ஹாஸ்டல் வாசல்ல உக்காந்துக்கிட்டு என்ன தல.. இந்தத் தடவ அடி கொஞ்சம் ஓவரோ கால்லயே போட்டானுங்க போலருக்குன்னு கேட்டாத்தான் அவனுங்களுக்கு நிம்மதி.

ஒரு வேளை நாம கொண்டு போற ஃபைல்தான் ராசியில்லையோ அப்டின்னு, ஏற்கனவே வேலை கிடைச்சவன் வச்சிருந்த ஃபைல எடுத்துட்டு போவேன். அன்னிக்கும் பொடனில தட்டி அனுப்பி விட்டுருவாய்ங்க.. திரும்ப வந்து “இந்தா உன் ஃபைலு.. உன் மொகர மாதிரியே இருக்கு”ன்னு வாங்குனவன்கிட்ட விசிரி அடிச்சிருவேன்.

ப்ளேஸ்மெண்டுக்குன்னு ஒரு 2000 ரூவா வாங்குவானுங்க.. அந்த ரெண்டாயிரத்தையும் முழுசா, ஏன் அதுக்கும் அதிகமாவே யூஸ் பன்ன ஆளுகள்ல நானும் ஒருத்தன். காரைக்குடி, மதுரைன்னு லோக்கல்ல இண்டர்வியூ அண்டண்ட் பன்னிட்டு இருந்துட்டு, அடுத்த கொஞ்ச நாள்ல திண்டுக்கல், கோவைன்னு இண்டர்நேஷனல் டூர் போக ஆரம்பிச்சிட்டோம்.
Polaris ன்னு ஒரு கம்பெனி.. திண்டுக்கல் PSNA ல off-campus. எங்க காலேஜ்லருந்து பஸ் arrange பன்னிருந்தானுங்க.. காரைக்குடிலருந்து திண்டுக்கல் போற வரைக்கும் ஒரே கூத்துதான். நான் எங்க டிப்பார்ட்மெண்ட் டூர் போனப்ப கூட அப்டி எஞ்சாய் பன்னதில்லை. 

அங்க போய் பாத்தா நம்மாள மாதிரி வேலை கெடைக்காம பல ஆயிரம் பேர் இருந்துருப்பானுங்க போல. சுத்துப்பட்டி 18 சிட்டிலருந்தும் Place ஆகாத அத்தனை பயலுகலும் அங்க கூடியிருந்தாய்ங்க. 50 பேர் இருந்தாலே வேலை கெடைக்காது… 5000 பேரு இருக்கானுவ… இன்னிக்கு டண்டனக்காதான்னு நினைச்சிட்டு பசங்களோட உட்கார்ந்திருந்தேன். 

அந்த காலேஜ்ல படிக்கிற ஒருத்தன் எங்கள நோக்கி வந்தான்.

“பாஸ் நீங்கல்லாம் காரைக்குடி AC tech ah?” ன்னான்.

“ஆமா”

“என்ன டிப்பார்ட்மெண்ட்?” ன்னான்

“EEE” ன்னோம்.

“உங்க டிப்பார்ட்மெண்ட்ல கார்த்திகான்னு ஒரு பொண்ணு இருக்குல்ல?” 
(பெயர் லைட்டாக மாற்றப்பட்டுள்ளது)

“ஆமா இருக்கு... ஏன் கேக்குறீங்க”

“இல்ல சும்மா கேட்டேன்”

“உங்களுக்கு தெரிஞ்ச பொண்ணா அது?” ன்னேன்

“எனக்கு அவங்களத் தெரியும். அவங்கள எனக்குத் தெரியும்”

“டேய்…. ரெண்டும் ஒண்ணுதான்… அப்ப அந்த புள்ளைக்கு உன்னத் தெரியாது.?.”

“ஆமா..”

“இப்ப அதுக்கு நா என்னடா பன்னனும்”

“நா அவங்கள கேட்டதா சொல்லிருங்க”

அடப்பாவிகளா… பயலுகன்னா பக்கத்துல உள்ளவன் கூட கண்டுக்க மாட்றான்.. ஒரு அழகான புள்ளைன்னா அசலூர்காரன்கூட இவ்வளவு பரிவா விசாரிக்கிறீங்களேடான்னு நினைச்சிட்டு “சரி சரி சொல்லுறேன்”ன்னு சொன்னதும் வாயெல்லாம் பல்லக் காட்டிக்கிட்டு கிளம்பிப் போனான்.

Aptitude முடிஞ்சி எல்லா காலேஜ்லருந்து வந்த மொத்த கும்பலும் ரிசல்ட்டுக்காக அங்கருந்த ஒரு ஆடிடோரியத்துல உக்கார்ந்திருந்தோம். பேர் கூப்ட கூப்ட செலெக்ட் ஆனவங்க ஒவ்வொருத்தரா எழுந்து முன்னால போனாங்க. ஒவ்வொரு பேரா படிச்சிட்டு வந்தாங்க…. “சிவா…”ன்னு மைக்குல பேரு வந்ததுதான் தெரியும். குடுகுடுன்னு எழுந்து நாலடி முன்னாடி போன அப்புறம்தான் தெரிஞ்சிது அது வேற எதோ ஒரு காலேஜ்லருந்து வந்த இன்னொரு சிவான்னு. அய்யய்யோ அசிங்கமாப்போச்சேன்னு பொத்துனாப்புல வந்து உக்காந்தேன். கடைசி வரைக்கும் என் பேரே கூப்டவே இல்ல.   கிட்டத்தட்ட 50 பேருக்கு மேல போயிருந்த எங்க காலேஜ்லருந்து அஷோக்குன்னு ஒரே ஒரு பையன் மட்டும்தான் Apps la செலெக்ட் ஆனான்.


பஸ்ஸுல போன மொத்த பேரும் அவன் ஒருத்தனுக்காக பஸ்ஸோட காத்திருக்க முடியாதுன்னு ”இண்டர்வியூ அட்டெண்ட் பன்னிட்டு மெல்ல வந்துருப்பா” ன்னு அவனுக்கு பஸ்ஸூக்கு காச குடுத்துட்டு, நாங்க எல்லாரும் ராவோட ராவா காரைக்குடிக்கு வந்து சேந்துட்டோம். அவன் மறுநாள்தான் வந்தான். கையில வேலையோட வந்தான். இப்ப வரைக்கும் அதே கம்பெனிலதான் இருக்கான்.

என்னடா இது சங்கத்துல ஆள் வர வர கம்மியாயிட்டே வருது? போற போக்கப் பாத்தா சங்கத்துல நம்ம ஆயுட் கால உறுப்பினராயிருவோமோன்னு அப்பப்ப உள் மனசுல ஒரு பீதி இருந்துக்கிட்டேதான் இருந்துச்சி.  

அடுத்தடுத்து  L&T E-Engineerning, Flextronics ன்னு ரெண்டு மூணு கம்பெனில மண்ணக் கவ்வ அதுக்கடுத்து வந்தானுங்க ”MANDO BRAKES” ன்னு ஒரு கம்பெனி. எல்லா கம்பெனியும் வந்த உடனே அவனுங்க கம்பெனி profile பத்தி ஒரு அரைமணி நேரம் intro குடுப்பானுங்க. நம்மதான் யாரு பேச ஆரம்பிச்சாலும் தூங்கிருவோமே… அவன் என்ன சொன்னான்னே ஞாபகம் இல்லை.

வழக்கம்போல இதுலயும் Apps க்ளியர் பன்னி உள்ள போயாச்சு. இண்டர்வியூ பேனலுக்குள்ள என் பேர கூப்ட உடனே உள்ள கையில ஃபைலோட போனேன். நா அப்ப கொஞ்சம் சிக்குன்னு சிறுத்தை குட்டியா இருப்பேன். ஒரு டைட்டான சட்டைய வேற போட்டுட்டு போயிருந்தேன். நா உள்ள போனதுமே பேனல்ல உக்கார்ந்துருந்த ஒருத்தன் “Body a ஃபிட்டா வச்சிருக்கீங்க.. எக்ஸர்சைஸ்லாம் பன்னுவீங்களா?”ன்னான்.

“ஆத்தாடி மதுரைக்காரன் எவனோல்ல இண்டர்வியூ பன்ன வந்துருக்கான்.. ஆரம்பத்துலயே வாரி விடுறானேன்னு நினைச்சிகிட்டு “ஹிஹி.. எப்பவாச்சும் பன்னுவேங்கன்னுட்டு உக்காந்தேன்,  

ஆமா பாஸ்…அவனுங்க ரெண்டு பேரு இருந்தானுங்க. (Friends Charlie slang)
Tell about yourself ல மனப்பாடம் பன்னி வச்சிருந்த ரெண்டு பாராவ ஒப்பிச்சப்புறம் ரெண்டு மூணு கேள்வி கேட்டனுங்க… ஏற்கனவே பலபேர்ட்ட வாங்கியிருந்த அடியில அதுக்கெல்லாம் தத்தி தத்தி பதில் சொல்லிட்டேன்.

அடுத்து ஓரு கேள்வி கேட்டான்.

”காக்கா கரண்டு கம்பில உக்காந்துருக்கு.. ஆனா சாக மாட்டேங்குது.. ஏன்?”

கொஞ்ச நேரம் யோசிச்சிட்டு ப்ரில்லியண்ட்டா ஒரு ஆன்சர் சொன்னேன்.

“காக்கா கரண்டு கம்பில நேரடியா கால வைக்காது சார்..அதோட நகத்துலதான் உக்காரும்… அதனால ஷாக் அடிக்காது”ன்னேன்.. ஷாக் ஆயிட்டானுங்க.

“இல்ல தம்பி… இப்ப நீ ஒரு ட்ரேயின் மேல நிக்கிற… அந்த ட்ரெயின் மேல போற கரண்டு கம்பிய நீ புடிச்சா என்ன ஆகும்?”

”ஷாக் அடிச்சி செத்துவேன்…”

“அப்ப காக்கா ஏன் சாக மாட்டேங்குது?”ன்னான்.

”ட்ரெயின் வந்து இரும்பு சார்.. அதுனால ஷாக் அடிக்கிது… காக்காவோட நகம் வந்து Non-Conductor சார்.. அதுனால ஷாக் அடிக்காது”ன்னேன்.

இவன் கூடப் பேசி நம்ம படிச்சதெல்லாம் மறந்துடும்போலயேன்னு அவனுங்களே “தம்பி அதுக்கு பேரு ஷார்ட் சர்க்யூட்டுப்பா”ன்னு ஆன்சர சொல்லிட்டானுங்க..

அப்புறம் கேள்வியெல்லாம் கேட்டு முடிச்சப்புறம்

”ஸ்ரீபெரும்புத்தூர் தெரியுமா?”

“தெரியும் சார்”

“அந்த இடம் எதுக்கு ஃபேமஸூன்னு தெரியுமா?”

“பால்கோவாவுக்கு சார்”

யோவ் அது ஸ்ரீவில்லிப்புத்தூர்யா…” ன்னு ஒரு நிமிஷம் அந்தாளு பதறிட்டாரு, இதுக்கு மேல இவன்கூட மாறடிக்க முடியாதுன்னு சரிப்பா நீ வெளிய வெய்ட் பன்னு நாங்க சொல்லி அனுப்புறோம்னு அனுப்புனாய்ங்க.

நா  வெளிலவந்து மூடிக்கிட்டு இல்லாம கதவு ஓரமா நின்ன placement coordinator ஒருத்தன்கிட்ட “டேய் மச்சி… ஸ்ரீபெரும்புத்தூர் எதுக்குடா ஃபேமஸூ? உள்ள கேட்டானுங்க… எனக்கு தெர்யலடா?”ன்னேன்.

“அய்யய்யோ.. அங்கதாண்டா Mando Brakes கம்பெனி இருக்கு” ன்னான்.

ஆத்தாடி… company profile சொல்லும்போது தூங்குனது வெனையாப் போச்சே… இதக்கூட சொல்ல்லைன்னா வேலையே தரமாட்டாய்ங்களேன்னு “இருடா நா போய் சொல்லிட்டு வந்துடுறேன்”னு திரும்ப உள்ள போய்

“சார்… “ன்னேன். என்னடா திரும்ப வந்துருக்கான்னு ஒரு மாதிரி பாத்தானுங்க..

”நீங்க ஸ்ரீபெரம்புத்தூர் எதுக்கு ஃபேமஸுன்னு கேட்டீங்கல்ல… நம்ம Mando Brakes கம்பெனி அங்கதான்சார் இருக்கு.. அதுக்கு தான் சார் ஸ்ரீபெரம்புத்தூர் ஃபேமஸூ”ன்னேன். ரெண்டு பேரும் ஒருத்தன ஒருத்தன் பாத்து சிரிச்சிக்கிட்டு

"சரிப்பா போ" ன்னு அனுப்பி விட்டானுங்க…  ஆனா அந்தக் கம்பெனிலயும் எனக்கு வேலை குடுக்கல..

என்னடா இது.. இண்டர்வியூ முடிஞ்சி கூட திரும்ப போய் ஆன்சர் சொல்லிட்டு வந்தோம். ஆனாலும் நம்மள மதிக்கலையேன்னு ஃபீல் பன்னிட்டு இருந்தேன். அப்பதான் “ஆமா வெளில வந்துட்டு திரும்ப உள்ள போனியே எதுக்குடா?ன்னு ஒருத்தான் கேட்டான்

“இல்லடா.. ஸ்ரீபெரம்புத்தூர் எதுக்கு ஃபேமஸூன்னு கேட்டானுங்க.. மொதல்ல நா பதில் சொல்லல. வெளில வந்தப்புறம்தான் தெரிஞ்சிது அங்க மேண்டோ ப்ரேக்ஸ் இருக்குன்னு.. அதான் போய் சொல்லிட்டு வந்தேன்ன்னேன்.

“இப்பதான் தெரியிது உனக்கு ஏன் அவனுங்க வேலை குடுக்கலன்னு” ன்னான்.

“ஏண்டா?”

“அடேய் ஸ்ரீபெரம்புத்தூர்லதான் ராஜீவ் காந்திய குண்டு வச்சி வெடிச்சாய்ங்க.. அதுக்குதான் அந்த ஊரு பேமஸூ… அத சொல்லுவன்னுதான் அவனுங்க எதிர்பார்த்துருக்கானுங்க... நீ கண்டத சொன்னா எப்டி வேலை குடுப்பானுங்க”

அப்பதான் புரிஞ்சிது நா ரெண்டாவது தடவ உள்ள போய் சொன்னப்போ அவனுங்க ஏன் கெக்க புக்கன்னு சிரிச்சானுங்கன்னு. ராஜீவ் காந்தி அங்க போய் செத்தா... அதுக்கு நா என்ன பன்றது... என்கிட்ட சொல்லிட்டா செத்தாரு...

-தொடரலாம்.... 



Wednesday, April 5, 2017

ஏய் நா இண்டர்வியூக்கு போறேன்.. இண்டர்வியூக்கு போறேன்-ACCET PLACEMENT!!!


Share/Bookmark
இந்தப் பதிவில் குறிப்பிடப்படும் சம்பவங்கள் கதாப்பாத்திரங்கள் யாவும் உண்மையே.. (சினிமா மேற்கோள்கள் மட்டும் எக்ஸ்ட்ரா)

காலேஜ் சேந்து அஞ்சி செமஸ்டர் வர்ற வரைகும் செத்த நாய் செருப்ப கடிச்ச மாதிரி கிடக்குற பயலுக குபீர்னு ஆறாவது செமஸ்டர்ல படிக்க கெளம்பிருவாய்ங்க. ஆளாளுக்கு நமீதா சைஸுல ஒரு புக்கை கைல எடுத்துக்கிட்டு அங்கிட்டும் இங்கிட்டும் திரிஞ்சிட்டு இருப்பானுங்க. இதுல லேடீஸ் ஹாஸ்டல்லருந்து வர்ற ஃபோன் கால்ல டவுட்ட வேற க்ளியர் பன்னிட்டு இருப்பானுங்க. அப்டி என்னடா கையில இவ்ளோ பெருசா வச்சிருக்காய்ங்கன்னு பாத்தா R.S.அகர்வால் எழுதுன Quantitative Aptitude புத்தகம். சப்ஜெக்டுக்கு புக் எழுதிக் கொன்னது பத்தாதுன்னு அந்த அகர்வால் நாதாரி நாயி இங்கயும் வந்துருச்சா. வக்காளி அவனக் கொல்லனும்டா மொதல்லன்னு தோணும்.

ப்ளேஸ்மெண்ட்க்கு கம்பெனிங்க வரனும்னா மொதல்ல அவனுங்க மண்டையக் கழுவி காலேஜ்க்கு அழைச்சிட்டு வரனும். நம்மல்லாம் கூப்டப் போனா மேலயும் கீழயும் பாத்துட்டு வாட்ச்மேன் ட்ரஸ்ஸ குடுத்து கேட்டுல உக்கார வச்சிருவாய்ங்க. அதனால அவனுங்கள கூப்டு வர நல்லா பேசுற ஒரு நாலு பேரு வேணும். அப்படிப்பட்ட பசங்கள செலெக்ட் பண்ணி Placement co-ordinator ah பதவி குடுத்து ஒவ்வொரு கம்பெனிக்கும் அனுப்பி, அவனுங்கள கூட்டிக்கிட்டு வரனும். ஆமா இவனுங்க வழிச்செலவுக்கு காசு வேணுமே? காலேஜ்ல கேட்டா “காலேஜே அவராதத்துலதான் ஓடுது.. நீ வேணா காலேஜுக்கு குடு” ம்பாரு ப்ரின்சிபால். வேற என்ன பன்றது.. “எவன் எவனுக்கெல்லாம் வேலை வேணுமோ அவன்லாம் 2000 ரூவா குடுன்னு எல்லார்கிட்டயும் கலெக்‌ஷனப் போட்டு இந்த மாதிரி செலவுக்கெல்லாம் யூஸ் பன்னிக்குவாய்ங்க. இப்ப இந்த ப்ளேஸ்மெண்ட்ல நம்ம கடந்து வந்த பாதையக் கொஞ்சம் திரும்பி பாக்குறதுதான் இந்தப் பதிவு.

அந்த நாளும் வந்துச்சி. மொதல்ல TCS வந்தாய்ங்க. கேலேஜே ஒரே திருவிழா மாதிரி இருந்துச்சி. பசங்க எல்லாரும் ரேமண்ட்ஸ் மாடல் மாதிரி இருந்தாய்ங்க. பொண்ணுங்க அதுக்கு மேல… “டேய் மச்சி.. யார்ரா இந்தப் பொண்ணு… இத நா சொல்லியே ஆகனும்… யாரும் இவ்வளவு அழக… இவ்வளவு அழகப் பாத்துருக்க மாட்டாங்க.. “  “டேய்… நல்லா கண்ண கழுவிட்டு பாருடா… அது நம்ம க்ளாஸ் புள்ளைதான்… ஃபுல் மேக்கப்புல வந்துருக்கு…” "அப்ப அங்க நிக்கிற பியூட்டி?” “அடேய்... நம்ம HOD மாலாடா..” “அடக் கருமத்தே…. வீட்டுக்கு போன உடனே கண்ண ஆசிட் ஊத்திக் கழுவனும்”ன்னு  இப்படி பல கண்பீசன் நடக்குற அளவுக்கு புள்ளைங்களோட கெட்டப் இருந்துச்சி.

மொதல்ல aptitude test… முக்கால்வாசிப்பேரு தேறியாச்சி. நானும் உள்ள இருந்தேன். அடுத்து  டெக்னிக்கல் இண்டர்வியூ… என்னென்னமோ கேட்டுட்டு “ஆமா வெளியூரெல்லாம் அனுப்புனா போவியா?ன்னான்… நா படக்குன்னு “நோ சார்”ன்னேன்.. “ஏன் சார்” னான்.. “என்னோட ஃபேமிய விட்டுட்டு என்னால எப்புடி சார்ர்… “ன்னு ஒரு விக்ரமன் பட பர்ஃபார்மன்ஸ போட்டேன். க்ளியர் பன்னி HR இண்டெர்வியூக்கு அனுப்பிட்டானுங்க. வெளில வந்து பயலுக்கிட்ட் சொன்னதுக்கு “அட நாசமா போற எடுபட்ட பயலே.. ஏண்டா போக மாட்டேன்னு சொன்னே.. இதுக்கெல்லாம் போவேன்னு சொல்லனும்ண்டா” ன்னானுக… “இதெல்லாம் எனக்கு எப்படா சொல்லிக்குடுத்தீங்க? திடீர்ன்னு கேட்டா நா என்னத்த சொல்றதுன்னு தெரியாம சொல்லித் தொலைஞ்சிட்டேனே… அடுத்த HR இண்டெர்வியூல எப்டி கலக்குறேன் பாரு”ன்னு உள்ள போனேன்..

சொல்லிவச்சா மாதிரி அந்தாளும் கரெக்ட்டா “வெளியூர் அனுப்புனா போவியா மாட்டியா?” ன்னான். இந்த தடவ கொஞ்சம் கூட யோசிக்கலையே “போவேன் சார்” ன்னு மண்டைய வேகமா ஆட்டுனேன். ”டெக்னிக்கல் இண்டர்வியூல போகமாட்டேன்னு சொல்லிருக்க.. இங்க வந்து போவேனு சொல்ற… ஒண்ணு மண்டைய இந்தப் பக்கம் ஆட்டு இல்லை அந்தப் பக்கம் ஆட்டு.. ஏன் இப்புடி மாத்தி மாத்தி ஒளருற”ன்னாரு அவுரு. சார் மதியாதார் தலைவாசல் மிதியாதேன்னு அவ்வையார் சொன்னாருன்னு அப்பச் சொன்னேன்.. ஆனா திருவள்ளுவர் என்ன சொல்லிருக்காருன்னா “இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்துவிடல்” ன்னு சொல்லிருக்காருன்னு கில்லி விஜய் மாதிரி மாத்தி மாத்தி பேசுனதுக்கு எதோ சொல்லி சமாளிச்சிட்டு வெளில வந்தேன்.

மொத்த குரூப்புக்கும் இண்டர்வியூ முடிய ராத்திரி ஆயிருச்சி. நைட்டு எட்டு மணியப் போல காலேஜ்குள்ள வச்சி ரிசல்டு சொல்றானுங்க. EEE அட்டெண்டன்ஸ் வாரியா செலெக்ட் ஆன பேரெல்லாம் ஒவ்வொன்னா படிக்கப் படிக்க நமக்கு உள்ளுக்குள்ள திகீர் திகீர்னு இருக்கு. கரெக்ட்டா நம்ம பேரு வரப் போறப்ப மட்டும் டக்குன்னு ஜம்ப் பன்னி அடுத்த பேருக்கு பொய்ட்டாய்ங்க. கிட்டான் போச்சா… காதுல குருவி ரிங்குன்னு சுத்துமே…. குபு குபுன்னு கண்ணுல தண்ணி வந்துருச்சி. நம்ம செலெக்ட் ஆவாத்துக்கு கூட இல்லை. நமக்கு வேண்டியவங்க… வேண்டியவங்களுக்கு வேண்டியவங்க எல்லாரும் TCS ல செலெக்ட் ஆயிட்டாங்க. அந்த சோகம் வேற..

எங்க குரூப்புல மொத்தம் எழு பேரு (பசங்க மட்டுந்தேன்..). நானு, அனந்த், ப்ரபு, ஞான சுந்தர், பரத், ராஜா, வினோத். அதுல அனந்த், ப்ரபு செலெக்ட் ஆயிட்டானுங்க. ”அள்ளிப்போடு… அள்ளிப்போடு..” ன்னு மொத்த காலேஜ் strength la பாதி பேர TCS அள்ளிக்கிட்டு பொய்ட்டனுங்க.  சரி மிச்சம் இருக்க பயலுகளாவது நமக்கு கம்பெனியா இருப்பாய்ங்கன்னு ஒரு ஆறுதல்.

அடுத்த நாலாவது நாள்லயே CTS  காம்பஸ் இண்டர்வியூ. அதுலயும் Aptitude clear. (பேசிக்கலி நா கொஞ்சம் அறிவாளிதான்.. ஆனா பேசதான் வராது). அங்கயும் இண்டர்வியூ. எனக்கு, வினோத், ராஜா மூணூ பேருக்குமே ஒரே பேனல்ல இண்டர்வியூ. அப்ப கஜினி படம் வந்த சமயம். புதுசட்டையெல்லாம் போட்டு டை எல்லாம் கட்டிக்கிட்டு இருக்கவும் கஜினில வர்ற சத்டியன் மாதிரி அங்கிட்டும் இங்கிட்டும் நடந்து “ஹாய்… ஐ ஆம் சஞ்சய் ராமசாமி”ன்னு அவன் குரல்ல காமெடி பன்னிட்டு இருந்தேன்.

ஒவ்வொருத்தனா உள்ள கூப்டானுங்க. இப்ப நம்ம டர்ன். உள்ள போனதும் ஃபைல வாங்கி டேபிள்ள வச்சிட்டு மொத கேள்வி

“what is current?”
“………………………………..”
(பதில் சொல்லல)

அடுத்த கேள்வி

“what is voltage?”
“…………………………………”
அதுக்கும் பதில் சொல்லாம பே பேன்னு உக்கார்ந்திருந்தேன்.

அடுத்து என்கிட்ட ஆன்ஸர் வரவைக்கனும்னே எதோ கேக்க அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா பேச ஆரம்பிச்சேன். பத்து நிமிஷம் இண்டர்வியூ எடுத்தப்புறம் தில்லு முல்லு தேங்காய் சீனிவாசன் மாதிரி

“What is current க்கும் Answer தெரியாது… What is Voltage க்கும் ஆன்சர் தெரியாது… ஆனா பேரு மட்டும் எலெக்ட்ரிகல் என்ஜினியர்… கெட் அவுட்ட்ட்”ன்னு சொல்ல “ஷார்ட் நேம் சுப்பி சார்”ன்னு வெளில வந்துட்டேன்.

வெளில வந்த அடுத்த செகண்ட் தோணுது “Currnet na flow of electrons ல… Voltage ன்னா potential difference ல… அட மானங்கெட்ட மைண்டே.. இத அப்பவே சொல்லிருந்தா அவய்ங்க்கிட்ட அசிங்கப்படாமயாது வந்துருக்கலாம்லன்னு நினைச்சிட்டு போனேன்… அந்த இண்டர்வியூவும் அவுட்டு. நம்ம பயலுக ராஜாவும் வினோத்தும் செலெக்ட் ஆயிட்டானுங்க. சங்கத்துல மிச்சம் நானு, பரத்து, சுந்தர் மூணு பேருதான்.

மூணு வருசமும் arrears எதுவும் வைக்காத்தால பாரபட்சம் பாக்காம எல்லா கம்பெனியும் அட்டெண்ட் பன்ற eligibility இருந்துச்சி. அடுத்த நாலு நாள்ல WIPRO off campus interview. மதுரை K.L.N காலேஜ்ல. பஸ் எடுத்து காரைக்குடிலருந்து மதுரைக்கு அழைச்சிட்டு போனாய்ங்க. என்னா ஜாலி பஸ்ல. வேலை கிடைக்கலங்குற ஒரு குறையத் தவற வாய்க்கு மட்டும் நமக்கு குறைச்சலே இல்லை அப்ப.

இதே மாதிரி Aptitude க்ளியர் பன்னிட்டேன். நம்ம கூட பஸ்ல வந்த முக்கால்வாசிப்பேரு Apps லயே மட்டை ஆயிட்ட்டால அவியிங்களல்லாம் பேக் அப் பன்னி அந்த பஸ்லயே திரும்ப அனுப்பிட்டானுங்க. அடுத்து டெக்னிக்கல் இண்டர்வியூ. அதுலயும் க்ளியர் பன்னியாச்சு. நூறு பேருக்கும் மேல வந்த பசங்கள்ள 12 பேரு மட்டும் டெக்னிக்கல் க்ளியர் பன்னி HR interview க்கு செலெக்ட் ஆனோம். HR இண்டர்வியூம் முடிஞ்சி அந்த 12 பேர்ல 9 பேர் செலெக் பன்னானுங்க… சோகம் என்ன்ன்னா முகேஷ எங்களால இந்த தடவையும் காப்பாத்த முடியல. இந்த தடவயும் ஊத்திக்கிச்சி.  

மணி ராத்திரி 11க்கு மேல… நாங்க பன்னண்டு பேரும் மதுரைக்கு வந்து பஸ்ஸு புடிச்சிதான் வரனும். அதெல்லாம் ப்ரச்சனை இல்லை. வர்ற 12 பேர்ல 9 பேர் குஜால்ஸ் மூடுல இருப்பாங்க. மித்த 3 பேரு நாங்க சோக மூடுல இருக்கோம். (இல்லைன்னாலும் வரவச்சிக்கனுமே). போற வழிலயே செலெக்ட் ஆன ரெண்டு பயலுக சரக்கடிக்கப் போறேன்னு கிளம்பிட்டானுங்க. ரிஜெக்ட் ஆன பீஸூல நானும் SM சரவணன்னு ஒரு பையனும் இருக்கோம். இன்னொருத்தன் யாருன்னு மறந்து போச்சு. நம்ம SM சரவணன் எப்டின்னா, ஓங்கி அடிச்சான்னா ஒண்ணரை டன் இல்லை நாலு டன் வெய்ட்டு. அப்டி இருப்பான் ஆளு.

நடந்து வந்துக்கிட்டு இருக்கும்போது செலெக்ட் ஆகாத நாங்களே சும்மா வந்துகிட்டு இருக்கோம். செலெக்ட் ஆன ஒருத்தன் ரொம்ப ஃபீல் பன்னிட்டு வந்துக்கிட்டு இருந்தான். “ச்ச… போச்சுடா.. அவ்ளொதாண்டா… ச்ச போச்சுடா…”ன்னுட்டே வந்தான்.

என்னடா செலெக்ட் ஆனவன் ஏன் போச்சுடா போச்சுடான்னு பொலம்புறான்னு என்னடான்னு கேட்டா

“ச்ச… இந்த கம்பெனிலல்லாம் Place ஆனதே அசிங்கம் மச்சி… எங்கப்பாவுக்கெல்லாம் தெரிஞ்சா அசிங்கமா திட்டப்போறாரு… ச்ச…. அசிங்கமா இருக்கும்”ன்னான்.

இய்ய்ய்ய்…. அடடடாடா. ஆஆஆ…. டேய்ய்ய்ய்ய்

இதக் கேட்ட்தும் எனக்கு தேவிக்குமார் ஞாபகம் வந்துருச்சி.. (தேவிக்குமார் மேட்டர மைண்டுல வச்சிக்குங்க. பின்னால சொல்றேன்.) திடீர்னு என்னோட உடம்புல எதோ ஒண்ணு இடிச்சிது. என்ன நமக்கு இங்க கொஞ்சம் muscle extraவா வளர்ந்துருக்கேன்னு தொட்டுப் பாத்தா அது SM சரவணனோட ஆர்ம்ஸூ… முறுக்கிட்டு அடிக்கிற லெவல்ல நிக்கிறான். பின்ன கடுப்பாகுமா ஆவாதா… அவன் இருந்த கோவத்துக்கு நம்ம பயல அடிச்சி பூமிக்குள்ள இறக்கிருப்பான்.

அப்புறம் அவன சாந்திப் படுத்தி, மதுரை டவுனுக்கு வந்து ஆளுக்கு நாளு பொரோட்டாவ பிச்சிப் போட்டுக்கிட்டு விடியக் காலமா காரைக்குடி வந்து சேந்தோம்.

இந்த தேவிக்குமார பத்தி சொன்னேணே…. ஏற்கனவே ஒரு பதிவுல சொல்லிருக்கேன். இருந்தாலும் இன்னொருதபா…

ஃப்ரஸ்ட் இயர்ல எங்களுக்கு பக்கத்து ரூமுதான் தேவிக்குமார். காலேஜ் சேர்ந்து மொத series test நடத்தி, பேப்பர்லாம் திருத்தி குடுத்துருந்தானுங்க. கணக்கு பேப்பர்ல நா 50க்கு 37ன்னு நினைக்கிறேன். நம்ம ரூம் பசங்க எல்லாமே ஓரளவு டீசண்டான மார்க்குதான் எடுத்துருந்தாய்ங்க. சாப்ட மதியம் ரூமுக்கு வந்தப்ப தேவிக்குமார் ஹாஸ்டல் காரிடார்ல நின்னு பெனாத்திக்கிட்டு இருந்தான்.

“போச்சுடா.. எல்லாமே போச்சுடா… மொத டெஸ்ட்லயே இவ்ளோ கம்பியா எடுத்தா professor க்கு என் மேல impression eh போயிரும்டா” ன்னு ஃபீல் பன்னிட்டு இருந்தான்… “ஹா..ஹா. ஃபெயில் ஆயிட்டான் போலருக்கு funny boy” ன்னு நினைச்சி அவன் பேப்பர அப்டி கையில வாங்கிப் பாக்குறோம்…
டபீர்ன்னு நெஞ்சி வெடிச்சிருச்சி… 50 க்கு 49… அட நாயே.. இந்த  மார்க்க வச்சிக்கிட்டு தான் இவ்வளவு நேரம் இம்ப்ரஷன் போயிரும்… ஆப்ரேசன் ஆயிரும்னெல்லாம் பினாத்துனியா… 

ரைட்டுரா.. இன்னிலருந்து நாங்க உன் பக்கத்து ரூம் இல்லடா.. ரூமக் காலி பன்றோம்டான்னு போனதுதான். பின்னாலதான் தெரிஞ்சிது அவன் தான் 10th matriculation எக்ஸாம்ல ஸ்டேட் ஃப்ர்ஸ்டுன்னு. அவ்வளோதான். நாலு வருஷத்துலயும் அவன் எவ்வளவு மார்க் எடுத்தான்னு நாங்க கேட்டதே இல்லையே…

(இண்டர்வியூ கதை இன்னும் முடியல… மூணு கம்பெனி கதை தான் முடிஞ்சிருக்கு.. இன்னும் 15 பாக்கி இருக்கு. அடுத்த பதிவுல தொடருவோம்)


Wednesday, August 5, 2015

காரைக்குடியில் சிம்ரன் வாய்ப்பாடு!!!


Share/Bookmark
பன்னிரெண்டாவது வரைக்கும் வீட்டில இருந்தே படிச்சிட்டு, காலேஜ்ல முதல் முதலா ஹாஸ்டல்ல தங்குறப்போ இருக்க கஷ்டம் இருக்கே. ஆத்தாடி. கொஞ்ச நாளுக்கு நரகம் மாதிரி இருக்கும். பாக்குறவய்ங்கல்லாம் புதுசா இருப்பாய்ங்க. காலங்காத்தால நம்ம வீட்டுல அம்மா எழுப்பி காப்பி குடுக்குறது, போதும் போதும்னு சொன்னாலும் எக்ஸ்ட்ராவா ரெண்டு தோசை வச்சி சாப்ட சொல்றதெல்லாம் அப்போதான் ஞாபகத்துக்கு வரும். அங்க நம்மளக் கண்டுக்க ஒருத்தன் இருக்க மாட்டான். காலையில நாமாளா எழுந்தாதான் உண்டு. நமக்கா பசிச்சி போய் சாப்டாதான் உண்டு. எறுமை மாடு வயசுல வெளில அதச் சொல்லி அழுகக்கூட முடியாது. எப்படா வெள்ளிக்கிழமை சாயங்காலம் வரும்னு இருக்கும். வெள்ளிக்கிழமை சாயங்காலம் ஹாஸ்டல்லருந்து வீட்டுக்கு கிளம்புறப்போ ஒரு ஜாலி இருக்கே… ஸ்கூல் படிக்கிறப்போ கூட அப்டி ஜாலியா இருந்ததில்லை.

ஃபர்ஸ்ட் இயர் பசங்க எப்படா வெள்ளிக்கிழமை வரும் வெளில போகலாம்னு காத்திருந்தா, இந்த செகண்ட் இயர் பசங்க எப்படா வெள்ளிக்கிழமை வரும் இவியங்க வெளில வருவாய்ங்கன்னு காத்துருப்பாய்க்க. ஏன்னா மத்த நாள்ள எவனும் வெளில போகமாட்டான். ஆனா வெள்ளிக்கிழமை ஊருக்கு போகும்போது பஸ் ஸ்டாப்புக்குப் போய் தனியாதானே பஸ் ஏற வேண்டி வரும். அதுக்குன்னே மீனப்புடிக்க காத்திருக்க கொக்கு மாதிரி அங்கயே குத்த வச்சி எவனையாச்சும் கவ்வி அவன ராகிங் பண்ணி என்ஜாய் பண்ணிக்குவானுங்க.

IRCTC la தீவாளிக்கு டிக்கெட் கூட புக் பன்னிடலாம். ஆனா வெள்ளிக்கிழமை சாயங்காலம் காரைக்குடி to திருச்சி PL.A பஸ்ல சீட்டு கிடைக்கிறதுதான் ரொம்பப் கஷ்டம்.  ஃப்ர்ஸ்ட் இயர் ஹாஸ்டல் கட்டில மொதக்கொண்டு காலி பண்ணிட்டு ஊருக்கு கிளம்பிருவாய்ங்க.

என்னோட நேரம் நா ஒருதடவ காரைக்குடியிலருந்து பட்டுக்கோட்டைக்கு ட்ரெயின்ல ஏறி உக்கார சுத்தி நாலு சீனியர் பசங்க வந்து உக்காந்தாய்ங்க. அப்புறம் என்ன? வடிவேலு சில்லரை வாங்க நாலு குடிகாரய்ங்ககிட்ட மாட்டிக்கிட்டு “ரெண்டம்பது… ரெண்டம்பது… ரெண்டம்பது… ரெண்டம்பது.. ஆகமொத்தம் முப்பது.. ச்சியேர்ஸ்” ன்னு சொல்ற மாதிரி பட்டுகோட்டை வர்ற வரைக்கும் மாத்தி மாத்தி என்னை சிம்ரன் வாய்ப்பாடு சொல்ல வச்சி என்ஜாய் பன்னிட்டுவந்தாய்ங்க.  அது என்ன சிம்ரன் வாய்ப்பாடுன்னு கேக்குறீங்களா? இந்தா சொல்றேன் கேளுங்க

ஒரு சிம்ரன் = சிம்ரன்

ரெண்டு சிம்ரன் = சிம்ரன் சிம்ரன்

மூணு சிம்ரன் = சிம்ரன் சிம்ரன் சிம்ரன்

ஈஸியா இருக்குறதுல்ல? எதோ ரெண்டு மூணுன்னா பரவால்ல. இது மாதிரி முப்பது வரைக்கும் சொல்லனும். அத விடக் கொடுமை என்னன்னா இடையில ஒரு சிம்ரனை விட்டுட்டாலும் திரும்ப மொதல்லருந்து ச்சியேர்ஸ் தான். சேகர் செத்துத்டான். அத்தனை தடவ சிம்ரன் பேர வேற எவனும் வாழ்க்கையில சொல்லிருக்க மாட்டாய்ங்க
.
இந்த வெள்ளிக்கிழமை மூட்டியைக் கட்டுறதெல்லாம் செட்டு சேருற வரைக்கும் ஒரு மூணு மாசத்துக்குத் தான். செட்டு சேந்துட்டா அப்புறம் வார வாரம்ங்குறது ரெண்டு வாரத்துக்கு ஒருதடவ மூணுவாரத்துக்கு ஒரு தடவன்னு மாறி ஃபைனல் இயர்ல ஹாஸ்டல் வார்டன் கழுத்தப் புடிச்சி வெளிய தள்ளுனாலும் ஊருக்குப் போகமாட்டாய்ங்க. அந்த ஆரம்பத்துல செட்டில் ஆக எடுக்குற மூணு மாசம் மட்டும் திங்கள் செவ்வாய் மாதிரி ரொம்ப மெதுவா போகுமே தவிற, அதத்தவிற மத்த மூணே முக்கால் வருஷமும் சனி ஞாயிறு மாதிரி சர்ர்ர்ன்னு போயிறும்.

காரைக்குடியில சீட்டு கிடைச்சப்புறம் டியூஷன் சாரயெல்லாம் போய்ப் பாக்கும்போது, ஒரு சார் “காரக்குடியா.. அட அங்க நம்மகிட்ட போன வருசம் படிச்ச பையன் இருக்காம்பா… பேரு எழில் வேந்தன். அவனப்பாரு எதாவது ஹெல்ப் வேணும்னா பண்ணுவான்” ன்னு சொன்னாரு. அப்பாடா.. எதாவது ப்ராப்ளம் வந்துச்சின்னா அவரப் புடிச்சிற வேண்டியது தான்னு நினைச்சிக்கிட்டேன்.

அட்மிஷன் போட்ட உடனே  பேரண்ட்ஸ் மீட்டிங்குல பேசுன எங்க ப்ரின்சிபாலு “தம்பிங்களா.. நம்ம காலேஜ்ல ராகிங்கெல்லாம் இல்லை. ஆனாலும் நீங்க ஆறு மணிக்கு மேல வெளில எங்கயும் சுத்தக்கூடாது. க்ளாஸ்லருந்து நேரா ஹாஸ்டலுக்குத்தான் போகனும். அங்க இங்க சுத்தக்கூடாது” ன்னு நிறைய எச்சரிக்கை மணிகள அடிச்சிவிட்டாரு. சரி நம்ம யாரு வம்புக்கும் போறதில்லை தும்புக்கும் போறதில்லை. நாம உண்டு நம்ம வேலை உண்டுன்னு இருந்துடுறது.




ஆனாலும் அந்த சீனியருங்களோட கோவம் கனலா எரியிறது. போன வருஷம் அவிங்க சீனியர்கிட்ட வாங்குனதயெல்லாம் நம்ம கிட்ட இறக்கியே ஆகனும்னு வெறியோட சுத்திக்கிட்டு இருக்காங்க. (அய்யய்யோ.. கதை வேற மாதிரி போகுதே) ஒரு நாள்… க்ளாஸ்ல காலை செஷன் தூக்கத்த முடிச்சிக்கிட்டு மத்தியான சாப்பாட்டுக்கு, ஹாஸ்டலுக்கு கிளம்புனேன். புதுசுங்குறதால தனியாத்தான் 1st floor லருந்து இறங்கி வந்தேன். க்ளாஸ்ல இருந்து காலேஜ் மெயின் கேட்டுக்கு கிட்டத்தட்ட ஒரு 200 மீட்டர் நடக்கனும்.

நடக்க ஆரம்பிச்ச கொஞ்ச நேரத்துலயே சைடுல ரெண்டு பக்கமும் அணைச்ச மாதிரி ரெண்டு சீனியருங்க வந்து, “டேய் திரும்பக் கூடாது.. பேசிக்கிட்டே நட” ன்னாய்ங்க. அய்யய்யோ… சிக்கிக்கிட்டோமேன்னு நினைச்சிக்கிட்டே “சரிண்ணேன்” ன்னு சொல்லிட்டு நடக்க ஆரம்பிச்சேன். அவனுங்களும் கூடவே நடக்க ஆரம்பிச்சாய்ங்க.

“பேர் என்னடா?”  “சிவா ண்ணே’

”எந்த டிப்பார்மெண்டு?”  “EEE ண்ணே”

“நாங்களும் EEE தான்” ன்னு அதுல ஒருத்தர் சொன்னதும்

“அப்புடியாண்ணே… “ ன்னு லேசா சிரிச்சேன். “ஏய்ய்ய்.. என்னடா பல்ல காமிக்கிற? நாங்க உன்ன இப்ப சிரிக்கச் சொன்னோமா? மூடிகிட்டு கேக்குறதுக்கு மட்டும் பதில் சொல்லு” ன்னதும் நா கொஞ்சம் பயந்து போய் “இவரு ரொம்ப பயங்கரமானவரா இருப்பாரோ” ன்னு நினைச்சி படக்குன்னு வாயில ஓப்பன் பன்னிருந்த Door ah க்ளோஸ் பன்னிட்டேன்.  
“என்ன உங்க பசங்களையெல்லாம் ஹாஸ்டலுக்கு வெளியவே காணும்…. ?”
“வெளில வரக்கூடாதுன்னு சொல்லிருக்காங்கண்ணே”

“அவிங்க உங்கள காலையில வெளிக்கு போகக்கூடாதுன்னு கூடத்தான் சொல்லுவாய்ங்க. சொன்னா கேட்டுருவியா?”

“…..” என்ன சொல்றதுன்னு தெரியாம நா பம்பிக்கிட்டே தொடர்ந்து நடந்தேன்.

“சரி எந்த ஊரு..”

“பட்டுக்கோட்டை ண்ணே”

“பட்டுக்கோட்டை யா” ன்னு கேள்வி கேட்டுக்கிட்டு வந்தவன் ஒரு ஜெர்க் அடிச்சான்.

அட நம்மூர் பேரச்சொன்னாலும் இவிங்களுக்கு ஒரு பயம் இருக்கத்தான்யா செய்யிது.. அப்புடியே மெய்ண்டெய்ண் பன்னுவோம்னு மனசுக்குள்ள ஒரு சந்தோஷம்.

“பட்டுக்கோட்டையா பட்டுக்கோட்டைக்கு பக்கத்துலயா…?”

“பட்டுக்கோட்டைக்கு பக்கத்துல மதுக்கூருண்ணே”

என்ன இவ்வளவு விவரமா கேக்குறாரு… நமக்கு எதுவும் லெட்டர் கிட்டர் போடப்போறாரு போலருக்கு .. எதுக்கும் பின்கோடையும் சொல்லி வைப்போம்”னு சொல்ல வாயெடுத்தேன்.

”சரி படிச்சது பட்டுக்கோட்டையா பட்டுக்கோட்டைக்கு பக்கத்துலயா?”
“பட்டுக்கோட்டைக்கு பக்கத்துல நாட்டுச்சாலை ண்ணே…”

நம்மளப் பத்துன ஃபுல் டீட்டெய்ல் கலெக்ட் பண்ணிட்டு தான் களத்துல இறங்கிருக்காய்ங்களோ… ரேகிங் பண்றதுக்கு கூட பேக்ரவுண்ட் ஒர்க் பண்ணுவாய்ங்க போலருக்குன்னு நினைச்சிகிட்டேன். ஆனா அவன் கேள்வி கேக்குறத மட்டும் நிறுத்தவே இல்லை.

”ஆமா ஃபிசிக்ஸ் யார்கிட்ட ட்யூஷன் படிச்ச?” “CG கிட்ட”

“அப்போ கெமிஸ்ட்ரி ரதன குமார்கிட்டயா?” ”ஆமா…”

“சரி சீனியர் யாரையாவது  தெரியுமா?”

“தெரியும்ணே.. எழில் வேந்தன்னு எங்க ஊர்க்காரரு இங்க தான் படிச்சிட்டு இருக்காரு” ன்னு தைரியமா நா சொல்ல, கேள்வி கேக்காம கூட வந்தவன் கெக்க புக்கன்னு சிரிக்க ஆரம்பிச்சிட்டு

“டேய் எழில் வேந்தன நீ பாத்துருக்கியா?”  “பாத்தது இல்லைண்ணே…”

“இவன் தாண்டா எழில் வேந்தன்” ன்னு இவ்வளவு நேரம் என்ன நோண்டி நோண்டி கேள்வி கேட்டவன காமிச்சி அவன் கூட வந்தரு சொன்னாரு. (இப்ப எதுக்கு அவர அவுர் இவுர்ன்னு சொல்றேன்னு பின்னால தெரியும்)
அடப்பாவி… எவனாச்சும் ரேகிங் பண்ணா உன் பேர சொல்லலாம்னு பாத்தா கடைசில நீயே வந்து என்னைய மெரட்டிக்கிட்டு இருக்கியேய்யான்னு மனசுக்குள்ள நினைச்சிட்டு, இம்சை அரசன் வடிவேலு டைப்புல ஒரு அசட்டு சிரிப்ப சிரிச்சிட்டு “ரொம்ப சந்தோசம்ணே” ணேன். “யாரு ரத்ன குமார் தான நா இங்க படிக்கிறத சொன்னாரு?”  “ஆமாண்ணேன்” ன்னு சொன்னது தான் தாமதம்.

“காலங்கத்தால நம்மாத்துல தான் டிப்பன்னு சொல்லிருப்பாரே.. இந்த காலெஜ்ல சீட்டு கிடைச்சது லக்குன்னு சொல்லிருப்பாரே… அங்க நம்ம சீனியரெல்லாம் இருக்காங்க எதுக்கும் பயப்படாதன்னு சொல்லிருப்பாரே”
“ஆமாண்ணே..”

என்கிட்டயும் சொன்னானுவளே.. இங்க ஒண்ணும் பன்ன முடியாது. உனக்கு எதாவது வேணும்னா தயவுசெஞ்சி 2nd year ஹாஸ்டல் பக்கம் வந்துடாத.. எவன் கைலயாவது மாட்டுனா மாவாட்டிருவானுங்க. அதனால நானே அப்பப்ப உன்ன ஹாஸ்டல்ல வந்து பாக்குறேன்” அவர் சொன்னதும்தான் கொஞ்சம் ஆறுதலா இருந்துச்சி. எழில் வேந்தன் நம்ம ஊர்க்காரரா இருந்ததால டக்குன்னு செட் ஆயிட்டாரு. ஆன அவர் பக்கத்துல ஒருத்தார் வந்தாருன்னு சொன்னேனே.. அவர் மட்டும் சிரிக்கவே இல்லை.

அதுக்கப்புறம் ஒரு நாலஞ்சி இடத்துல நானும் பாத்து “ஐ.. நமக்குத் தெரிஞ்ச அண்ணன்னு சிரிப்பேன்…. ஆனா அவர் மொறைச்சிக்கிட்டே “பல்லக் காட்டாதடா” ம்பாறு. அதுக்கப்புறம் நாலு வருஷத்துல ஒரு அஞ்சாறு தடவ தான் அவர பாத்துருப்பேன். காலேஜ் முடிக்கிறதுக்குள்ள அடிச்சி புடிச்சி ஒரு வேலைய  வாங்கியாச்சி.

 கம்பெனில ஜாய்ண் பன்ற முதல் நாள். அதே மாதிரி புது இடம். புது ஃபீலிங்.. காலையில ஃபுல்லா ஓரியண்டேஷன்னு கம்பெனி எஸ்டிடிக்கள சொல்லி தூங்க வச்சிட்டு மத்தியானம் கம்பெனி கேண்டீனுக்கு சாப்பிட அழைச்சிட்டு போனாங்க. கேண்டீனுக்குள்ள நுழையும்போது அங்க சாப்பிட்டுகிட்டு இருந்த ஒருத்தர் என்னை பாக்க, நா அவரப் பாக்க “இவர எங்கயோ பாத்துருக்கோமே.. இது அது இல்ல?” ன்னு நினைக்க, அவரு அதுக்குள்ள எழுந்து வந்து என்னப்பாத்து “டேய்… என்னடா இந்தப்பக்கம்?” சிரிச்சிட்டே கேக்க, பதிலுக்கு நா சிரிக்கிறதா வேணாமான்னு யோசனையிலயே நின்னுக்கிட்டு இருந்தேன். சிரிச்சா ஒரு வேளை “என்னடா பல்லக் காட்டுற?” ன்னு கேட்டாலும் கேட்டுருவாரோன்னு. 


Friday, February 20, 2015

முருகப்பா ஹாலில் ஒரு கெஸ்டு பெர்ஃபார்மன்ஸ்!!!


Share/Bookmark
ஒருத்தனுக்கு நிறைய சந்தோஷத்தையும் நிறைய கவலையும் ஒரே நேரத்துல குடுக்குறது காலேஜ் ஃபைனல் இயரோட கடைசி ரெண்டு மாதங்கள் தான். காலேஜ விட்டு வரும்போது நமக்கு கண்ணுல ஒரு சொட்டு கண்ணீராவது வரும். அடுத்தவங்க பாத்தா அண்ணனோட கெத்து போயிரும்டா” ன்னு பேக்சாட்ல திரும்பி நின்னு “உனக்கு எதோ ட்ரான்ஸராம்லம்மா..” ங்குற மாதிரியாவது கண்டிப்பா எல்லாரும் அழுதுருப்பாய்ங்க. அப்டி இல்லைன்னா  நிச்சயம் நாம எதையோ மிஸ் பண்ணிட்டோம்னு தான் அர்த்தம். அப்படிப்பட்ட கல்லூரி வாழ்க்கையோட கடைசி சில பக்கங்கள்ள எழுதப்பட்ட வரலாறத்தான் இன்னிக்கு கொஞ்சம் திருப்பி பாக்கப்போறோம்.

”மச்சி, காலேஜ் முடிய இன்னும் ரெண்டு மாசம்தான் இருக்கு செம்மையா எஞ்ஜாய் பண்றோம்.. எஞ்ஜாய் பண்றோம்.. வாங்கஜி.. வாங்கஜீ” ன்னு ஒருபக்கம் ஒருத்தன் சொல்லிட்டு இருக்கும் போதே இன்னொருத்தன் சைடுல “மச்சி இன்னும் ரெண்டு மாசம்தான் இருக்கா?” ம்பான். மொத்த கூட்டமும் சைலண்ட் ஆயிரும். திடீர்ன்னு இன்னொருத்தன் சொல்லுவான். “மச்சி.. காலேஜ் முடிஞ்சா என்ன மச்சி. நாம சென்னையில வார வாரம் மீட் பண்றோம். ஊர் சுத்துரோம்… படத்துக்கு போறோம்.. ஜாலி பண்றோம்” ம்பான். அதாவது அவரு நம்மள சோகத்துலருந்து மீட்டு சமாதானப்படுத்தி ஜாலியாக்குறாராம்.

அப்புடி வார வாரம் மீட் பண்றோம்னு சொன்ன பல பேர நாம கடைசியா காலேஜ் முடியிற அன்னிக்கு தான் பாக்கமுடியும். அதுக்கப்புறம் கொஞ்ச நாள் அவன் ஆள் அட்ரஸே இருக்காது. அப்பப்போ ஃபேஸ்புக்குல மட்டும் அமெரிக்காவுல ஸ்நோவ கையில அள்ளிக்கிட்டு நிக்கிற மாதிரி சிலப்பல ஃபோட்டோக்களை பாக்கலாம்.  

சில வருஷங்களுக்கு அப்புறம் திடீர்னு அவன்கிட்டருந்து நமக்கு ஒரு ஃபோன் வரும். உடனே “அடேய் நண்பா.. எங்கேயடா இருந்தாய் என் செல்வமே.. பாசத்துல என்னை மிஞ்சினவனா இருக்கியே” அப்டின்னு நாம பாசத்துல பொங்கிரக்கூடாது. ரொம்ப நாளுக்கு அப்புறம் நம்ம கல்லூரி நண்பன் ஃபோன் பன்னான்னா, அவனுக்கு வீட்டுல ஒரு நல்ல பொண்ணா பாத்துருக்காய்ங்க. அதுக்கு கல்யாணத்துக்கு நம்மள கூப்டத்தான் ஃபோன் பண்ணிருப்பான்னு நாமளா மேட்டர கவ்விக்கனும். அப்டி நடந்தா டக்குன்னு ஃபோன எடுத்து “எப்ப மச்சி கல்யாணம்?”ன்னு தைரியமா கேக்கலாம்.

இவய்ங்க கூட பராவால்ல. இன்னும் ஒரு கேட்டகிரி இருக்காய்ங்க. திடீர்னு ஒரு நாள் ஆஃபீஸ் வாழ்க்கையை வெறுத்து, மல்லாக்க படுத்துக்கிட்டு விட்டத்த பாத்து ”காலேஜ்ல நாம எப்டியெல்லாம் இருந்தோம். இங்க நம்மள இப்டி வேலை பாக்க சொல்றாய்ங்களே”ன்னு பழைய நினைவுகளை கரண்டிய வச்சி கிண்டும்போது, திடீர்ன்னு நம்ம பழைய நண்பனோட நினைப்பு வந்து கால் பண்ணுவோம்.

அப்போ அவன் கேப்பான் பாருங்க ஒரு கேள்வி. “என்ன மச்சி காலேஜ் முடிச்சப்புறம் கண்டுக்கவே மாட்டேங்குற. இப்பதான் எங்க நினைப்பெல்லாம் வருதா?” ம்பான். “இப்ப கூட அந்த நாயிக்கு நாம தான் கால் பண்ணிருப்போம். ஆனா அது நம்மள என்ன மச்சி காலே பண்ணலன்னு கேக்கும். அதாவது அவரு நம்ம நினைப்பாவே இருந்தா மாதிரியும் நம்ம கால் பண்ணாததால தான் அவரு இவ்வளவு நாளா பேசாத மாதிரியும் தான் ஒரு சீனப் போடுவய்ங்க. சரி.. நண்பர்கள் பலவிதம்.

கல்லூரியோட கடைசி நாட்களை எண்ணிக்கிட்டு இருக்கும்போது தான் வந்துச்சி அந்த கல்ச்சுரல்ஸ். வழக்கமா அடுத்தவய்ங்க நடத்துவாய்ங்க. நாம போய் உரண்டை இழுப்போம். இப்போ நாமதான் சீனியராமே.. நம்மதான் நடத்தனுமாமே. இதுல கொடுமை என்னன்னா காலேஜோட கல்சுரல் co-ordinator நம்ம அபிநய சரஸ்வதி சம்பந்தம். எங்க சீனியருங்களுக்கே பர்மிஷன் குடுக்க மாட்டேன்னு அடம்புடிச்சி, அதுக்கப்புறம் அவனுங்க ரெண்டரை நாள் கெஞ்சி வாங்கி கல்ச்சுரல்ஸ நடத்துனாய்ங்க.

அவங்களுக்கே இந்த கதின்னா, நம்ம பயலுக போன வாரம் நடந்த sports meet la தான் ”சூடான பருத்திப்பால்.. சூப்பரான ஆட்டுப்பால்”னு ரைமிங்கா அவர அசிங்க அசிங்கமா திட்டிக்கிட்டு வந்தாய்ங்க. அதுமட்டும் அந்தாளுக்கு கேட்டிருந்தா, பர்மிஷன் கேட்டு போறவிங்கள செருப்புலஅடிச்சி பத்தி விட்டுருவாரே. என்ன செய்யலாம்? ”saar… want money saar… saar help saar” ன்னு மரியான் தனுஷ் பாணியில “சார் last year saar.. கடைசி 20 days saar.. இதுக்கப்புறம் வாழ்க்கையில no fun saar… pls help saar” ன்னு ஏதேதோ சொல்லி பசங்க பர்மிஷன் வாங்கிட்டாய்ங்க.

பர்மிஷன் வாங்கியாச்சு. இனிமேதான் மெயின் ஆப்பே இருக்கு. நம்ம வேற ஃபைனல் இயரு. இதுக்கு முன்னால ஃபைனல் இயர் டீமோட கல்சுரல் பர்மார்மன்ஸ பாத்தவிய்ங்க, நம்மக்கிட்ட பெர்பார்மன்ஸ் வேற ஹெவியா எதிர்பார்ப்பாய்ங்க. நம்ம சோ தான் நல்லாருக்காதேடா.. அய்யயோ… அமைச்சரே நன்றாக மாட்டிக் கொண்டோமைய்யா… ஜூனியர் பசங்க ஆடுறதையும் பாடுறதையும் பாக்கும்போது அவய்ங்க எதோ நல்ல மாஸ்டர்கிட்ட டான்ஸ் கத்துக்கிட்டு இருப்பாய்ங்க போலருக்கு.

ஆனா நம்ம இயர்ல எப்புடித்தேடுனாலும் கடைசில நம்ம லியோபால் மாஸ்டரோ இல்லை ACP பரத் குமார் மாஸ்டரோதான்  நம்ம பசங்களுக்கு கொரியோகிராஃப் பன்னுவாய்ங்க. இவய்ங்கள நம்பி காம்பெடிஷன்ல இறங்குனா அடி பின்னிருவாய்ங்களே. இந்த மாதிரி ஃபைனல் இயரோட கெளரவத்தை பாதிக்கிற சில காரணிகளை ஆரய்ஞ்சி  பாத்தப்புறம் சங்கம் ஒரு முடிவெடுத்துச்சி. அந்த முடிவுப்படி “ஃபைனல் இயர் பசங்க எல்லா பர்மார்மென்ஸூம் குடுப்பாங்க. ஆனா எங்களுக்கு பரிசுகள் மேல் ஆசை இல்லை.  அந்தப் பரிசுகளையெல்லாம் எங்களோட தம்பிகளான எங்கள் ஜுனியர் பசங்களுக்கே பிரிச்சி குடுத்துருங்க. நாங்க குடுக்குறது எல்லாமே கெஸ்ட் அப்பியரன்ஸ் மட்டும்தான்” அப்டின்னு ஒரு அறிக்கைய விட்டோம்.

எதாவது ஒண்ணு ரெண்டு கெஸ்ட் அப்பியரன்ஸ்னா பசங்க நம்புவாய்ங்க. ஆனா பண்ற எல்லாமே கெஸ்ட் அப்பியரன்ஸ்னா எவனாச்சும் நம்புவானா.. சரி சமாளிப்போம். கல்சுரல்ஸூம் ஆரம்பிச்சிச்சி. சம்பந்தம் ஏற்கனவே ஒரு எச்சரிக்கை விட்டுருந்தாரு. (பின்வரும் வாக்கியத்தை காட்ஃபாதர் அஜித் ஸ்டைலில் படிக்க) ”இதோ பாருங்கையா… கல்சுரல்ஸ் எந்த ப்ரச்சனையும் இல்லாம நடக்கனும். எதாவது ப்ரச்சனை நடந்தா உடனே நிறுத்திருவோம்” ன்னு. கல்ச்சுரல்ஸ நிறுத்துறது இருக்கட்டும் முதல்ல நீ இந்த அபிநயம் புடிக்கிறத நிறுத்துய்யா.

வழக்கமா கல்ச்சுரல் நடக்கும்போது கலவரம் பன்றது, பாதியில எதாவது ப்ரச்சனைய கெளப்பி மொத்தமா எந்திரிச்சி போறதுன்னு நம்மதான இந்த மாதிரி காவாளித்தனத்த இதுவரைக்கும் பன்னிட்டு இருந்தோம். இப்போ நம்மளே ஃபங்ஷன நடத்தும்போது யார் ப்ரச்சனை பன்னப்போறதுன்னு எல்லாரும் அத ஒரு பொருட்டாவே மதிக்கல. ஆனா ஆண்டவன் எங்கெங்க ஆப்பு வப்பான்னு நமக்குத் தெரியாது.



நல்லாத்தான் போயிட்டு இருந்துச்சி ஒண்ணரை நாள். நம்ம பயலுக ஜட்ஜ்மெண்டுக்கு அப்பாற்பட்ட பல கெஸ்ட் அப்பியரன்ஸ்கள குடுத்து கொன்னுக்கிட்டு இருந்தாய்ங்க. ரெண்டாவது நாள் மதியானம். ஒரு மூணுமணி இருக்கும். முருகப்பா ஹால் நிரம்பி வழியிது. நிறைய பேருக்கு உக்காரவே இடம் இல்லை. நம்ம வேற ஃபைனல் இயரு. நம்ம நடத்துற ஃபங்ஷன்ல நம்மளே உக்காரலாமான்னு மத்தவங்களை சீட்டுல உக்கார வச்சிட்டு ஃபைனல் இயர்ல பாதி பசங்க ஹாலுக்கு நடுவுல இருக்க  walk way ல ஒருத்தன் மடியில ஒருத்தன் சாஞ்சா மாதிரி படுத்துக்கிட்டு,  நிகழ்ச்சிகள ரசிச்சிட்டு இருந்தோம்னு நினைக்காதீங்க. எந்த இயர் புள்ளைங்க நல்லா இருக்குன்னு பாத்துக்கிட்டு இருந்தோம். அதுவும் ஒருவித ரசனை தானே… அவ்வ்..

எப்பவுமே காலேஜ்ல immediate சீனியருங்க மட்டும் பசங்களுக்கு ஆகாது. ஏன்னா அவிங்க தான் வாங்குன மொத்த அடிய திருப்பி குடுக்கனும்னு புதுசா வர்றவிங்கள ragging அது இதுன்னு கொடுமைப் படுத்துவாய்ங்க. ஆனா double seniors கூட எப்பவுமே பசங்களுக்கு ஒரு நல்ல rapport இருக்கும். அதே மாதிரி தான் நாங்க ஃபைனல் இயர் படிக்கும்போது இருந்த 2nd year பசங்க கூட ஒரு understanding இருந்துச்சி. எங்க இயர் பேரு VVS 007 (வருத்தப்படாத வாலிபர் சங்கம் 007) அவிங்க, அவனுங்க ”நாங்க VVS juniors” ன்னு சொல்லுவாய்ங்க

அன்னிக்கு பசங்க வரிசையில முதல் ரெண்டு மூணு வரிசையில professorங்க உட்காந்திருந்தாங்க. அப்புறம் First year பசங்க, அதுக்கு பின்னால செகண்ட் இயர் பசங்க அதுக்கு பின்னால 3rd year பசங்க. கடைசில ஃபைனல் இயர் பசங்க. திடீர்னு அந்த 3rd year பசங்களும் 2nd year பசங்களும் உக்கார்ந்துருக்க இடத்துல, நல்லா இருந்த தேன்கூட கலைச்சி விட்டா மாதிரி எதோ கலைய ஆரம்பிச்சாய்ங்க.

எண்டான்னு பாத்தா 3rd year குரூப்புலருந்து ஒருத்தன் ஒரு ப்ளாஸ்டிக் chair ah எடுத்து, 2nd year பசங்க மேல வீசுனான். கொஞ்சம் கூட தாமதிக்காம அதுக்கு பதிலுக்கு 2nd year சைடுலருந்து ரெண்டு இரும்பு சேர இவிங்க மேல தூக்கி வீசுனாய்ங்க. அடாப் பாவிகளா.. ஆரம்பிச்சிட்டீங்களாடா.. அய்யய்யோ.. இத்தாண்டா அந்தாளு அன்னிக்கே சொன்னாரு. Walk way la உக்காந்துருந்த மொத்த ஃபைனல் இயர் பசங்களும் அவிங்கள நோக்கி போய் கையில கிடைக்கிறவன சமாதானப்படுத்தி உக்கார வைக்க முயற்சி பன்னோம்.

நா என்கிட்ட சிக்குன ஒரு 3rd இயர் பையன புடிச்சி “டேய் தம்பி.. கொஞ்ச நேரம் உக்காருங்கடா.. வெளில போய் விளையாடலாம்.. சும்மாவே அந்தாளுக்கு எங்களக்கண்டா ஆவாது. இதுல நீங்க வேறயாடா?” ன்னதுக்கு, உடனே அவன் கைய மடக்கி நடுவிரலை எங்கிட்ட காட்டி “அண்ணேன் எங்களப் பாத்து அவன் இப்புடி கைகாமிக்கிறான்னே” ன்னு வெறித்தனமா கத்துனான். “அதுக்கு ஏண்டா நீ என்கிட்ட அந்த மாதிரி காமிக்கிற… இதெல்லாம் ஒரு மேட்டராடா.. இங்கிலீஷ் படத்த பாருங்கடா.. எல்லாரும் எல்லாரையும் பாத்து இப்டித்தாண்டா ஜாலியா கை காமிப்பாங்க… அவன் சும்மா ஒண்ணுக்கு போறதுக்கு தெரியாம விரல மாத்தி காமிச்சிருப்பாய்ங்கடா” ன்னு தம்கட்டி சொல்லியும் அவன் “விடுங்கன்னே.. நாங்க கிளம்புறோம்” ன்னு கிளம்பி வெளிய பொய்ட்டான். 

(நா கேட்ட அந்த 3rd year பையனோட FB profile name Kannan Maadhu. இந்த சம்பவம் அவனுக்கு ஞாபகம் இருக்கான்னு தெரியல. ஆனா எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு)

“நம் ராஜ தந்திரங்கள் அனைத்தும் வீணாகி விட்டதே. இன்னும் பயிற்சி வேண்டுமோ” ன்னு யோசிக்கும் போதுதான் நம்ம பசங்க பிரம்மாஸ்திரத்த உபயோகிச்சாய்ங்க. கால் மணி நேரம் கழிச்சி குடுக்க வேண்டிய ஸ்நாக்ஸ அப்பவே ஓப்பன் பண்ணி வச்சிட்டாய்ங்க. சண்டை போட்டு வெளில போன பசங்கல்லாம் சரி போறது போறோம் அப்டியே ஸ்நாக்ஸ போட்டுக்கிட்டே போவோம்னு ஸ்நாக்ஸ்ல கைவைக்க, “Five star சாப்டுங்க… டேஸ்ட்ல மறந்து போயிருங்க” ங்குற மாதிரி வெளில சண்டை போட்டுக்கிட்டு போன பாதி பேரு ஸ்நாக்ஸ் டைம் முடிஞ்சி வரும்போது “டேய் ரமேஷ்.. டேய் சுரேஷ்” ன்னு பேசிக்கிட்டே திரும்ப உள்ள வந்து உக்காந்துட்டாய்ங்க. 

ஆனா மெயின் கலவரத்துல ஈடுபட்ட சில பேரு மட்டும் வெளிநடப்பு செய்ய, கேப் விழுந்த இடத்த நம்ம பயலுகள வச்சி ஃபில் பண்ணியாச்சு. தலைக்கு வந்தது, தக்காளிச்சட்னியோட போச்சிங்குற மாதிரி அன்னிக்கு வச்ச கட்லட்டும் தக்காளி சாஸூம் நடக்க இருந்த பெரும் கலவரத்த தடுத்து நிறுத்துச்சி.

அந்த செகண்ட் இயர் பசங்கள பாக்கும்போது அப்டியே ரெண்டு வருஷத்துக்கு முன்னால எங்க பசங்கள பாக்குற மாதிரி இருந்துச்சி. காவாளிப்பயலுகளா.. நாங்க தான் இப்டி ஆயிட்டோம்னா நீங்களும் ஏண்டா. போய் படிங்கடா.. நாங்க நடத்துன அந்த  கல்ச்சுரல்லருந்து, ஒரே ஒரு விஷயம் தெளிவா புரிஞ்சிக்கிட்டோம். 

“கத்தி எடுத்தவனுக்கு கத்தியாலதான் சாவு… ஆனா கட்லட் இருந்தா தப்பிச்சிடலாம்” ங்குறதான் அது. 

தொடர்புடைய இன்னும் சில வரலாற்றுப் பக்கங்கள்

என்னது செமஸ்டர் ரிசல்ட் வந்துடுச்சா!!!

தம்பி ப்ரச்சனை பண்ணாதீங்கப்பா- காரைக்குடி கலவரம்!!!






LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...