"காலைல எட்டு மணிக்கெல்லாம் எழுந்து போய் வண்டிய மொதல்ல சர்வீஸுக்கு விடனும்"னு நெனைச்சிட்டு 7.45 க்கு அலாரம் வச்சிட்டு நேத்து படுத்தேன். வழக்கம்போல அலாரம் அடிக்க, அத நா அடிக்க அது திரும்ப அடிக்க ன்னு காலைல 9 மணிக்குதான் முழிச்சேன். அய்யய்யோ... எட்டு மணிக்கு போனாலே அங்க நமக்கு முன்னாடி 18 பேர் நிப்பாய்ங்க.. இங்கயே 9 மணி ஆயிருச்சா.. வெளங்கிரும்" ன்னு நெனைச்சிட்டு பல்ல லைட்டா வெளக்கிட்டு வண்டிய எடுத்துக்கிட்டு வேகமா போனேன். அது கண்ணுல பட்டுருச்சி.. என்னவா... ஹோட்டல் தான்... சோறா... சொரணையான்னு கேட்ட நமக்கு சோறுதான சோறுதான் முக்கியம். சில பல இட்லிகள அள்ளி போட்டுகிட்டு திரும்ப கெளம்புனேன்.
ஓரளவுக்கு traffic ஆரம்பிச்சிருந்துச்சி... L&T கிட்ட ஒரு U turn ah போட்டு, போரூர நோக்கி ஆக்ஸிலேட்டர முறுக்குனேன், 2,3,4,5 ன்னு கியர் மாற வண்டி செம ஸ்பீடு. "ஈஸியா இருக்குறது" ன்னு நெனச்சி கூட முடிக்கல...திடீர்னு சைடுல பாக்காம ஒரு சனியன் புடிச்சவன் ரோட க்ராஸ் பண்ண... அவன் வண்டியா பாத்துட்டு நின்னுடுவான்னு நெனச்சிகிட்டு நான் அதே வேகத்துல போக, அவன் கடைசி வரைக்கும் ரோடுல யாரு வர்றாங்கன்னே பாக்காமயே ரோட க்ராஸ் பண்ண...... வேற என்ன... நேர கொண்டு போய் அவன் மேல விட்டுட்டேன்.
மில்லி செகண்ட் நேரத்துல DLF க்கு opposite Ä வண்டி நடுவுல, அவன் வண்டிக்கு லெஃப்டுல, நா வண்டிக்கு ரைட் சைடுல விழுந்து கிடந்தோம்.. நல்ல வேளை ரெண்டு பேருக்குமே பெரிய அடி எதுவும் இல்ல.(எனக்கும் என் வண்டிக்கும்) அவனுக்கு அடிபட்டுச்சா என்னன்னு சரியா தெரியல... ரெண்டு பேரும் எழுந்துட்டோம். "யோவ் அறிவிருக்கா.... க்ராஸ் பண்ணும் போது சைடுல எதுவும் பாக்க மாட்டியா...கண்ண எங்க பொறடில வச்சிருக்க" ன்னு இதோட ரெண்டு மூணு சென்சார் பண்ண வேண்டிய வார்த்தைங்களையும்
சேத்து திட்டுனேன்.
"அதான் அந்த செக்யூரிட்டி கை காமிச்சாருல்ல.. நீங்க ஏன் பாக்காம வந்தீங்க" ன்னு அவன் பதிலுக்கு ஆரம்பிக்க
"ஏங்க செக்யூரிட்டி சந்துக்குள்ள நின்னு காமிச்சா எனக்கு எப்புடிங்க தெரியும்?" ன்னு சொல்லிகிட்டே நானும் அந்த செக்யூரிட்டியும் வண்டிய தூக்க, அந்த கேப்புல அவன் எஸ்கேப் ஆயிட்டான்..ரோடு க்ராஸ் பண்ற ஏரியாங்குறதால டக்குன்னு லேசா கூட்டம் கூடுனதுமே, எதிர்பக்க ரோட்டுல நின்ன ட்ராஃபிக் போலீஸ்கார் இந்த பக்கம் வந்துட்டாரு. வண்டிய தூக்கி நிறுத்துனதுமே பக்கத்துல வந்து சாவிய எடுத்துட்டாரு. "இன்னாடா இங்க?" ன்னு சென்னை தமிழ்ல அவரு ஆரம்பிக்க.. "சார்... சிகனல் பண்ணத பாக்காம இவரு வண்டிய விட்டுட்டாரு"ன்னு அந்த செக்யூரிட்டி போட்டு குடுத்துட்டாரு.. "சரி டாக்குமெண்ட்டல்லாம் எத்துகிட்டு அந்தாண்ட வா"ன்னு சொல்லிட்டு ரோட்டோட அந்த பக்கம் போக.. "ஆஹா..சனியன் சடை போட ஆரம்பிச்சிச்சே" ன்னு நெனச்சிட்டே போனேன்.
லைசன்ஸூம் ஆர்,சி புக் ரெண்டும் இருந்துச்சி... ஆனா இன்சூரன்ஸ் expire ஆகி ஆறு மாசம் ஆகி போச்சி, சரி என்ன பண்றது... சமாளிப்போம்னு நெனச்சிகிட்டு எடுத்துக்கிட்டு போணேன்.. அவரு கிண்டி நோக்கி போய்கிட்டு இருந்த வாகனங்களை கைகாட்டி நிறுத்தி, DLF மக்களுக்கு ரோடு க்ராஸ் பண்றதுக்கு உதவி பண்ணிகிட்டு இருந்தாரு. நா இது ரெண்டையும் எடுத்துகிட்டு போய் பம்பிகிட்டே நின்னேன்... ஒரு தடவ ரோடு ஓரமா வந்து லைசண்ஸயும், ஆர்.சி
புக்கையும் வாங்கி பாத்தாரு.
"எங்கடா இன்சூரன்ஸ்" ன்னு கேட்க..
"சார் அது வீட்டுல இருக்கு சார்.. எடுத்து வர மறந்துட்டேன்"
"அப்புடியா...பத்தரமா இருக்கட்டும்... அப்ப ஓவர் ஸ்பீடு,,, இன்சூரன்ஸ் இல்ல... கேஸ் வாங்கிக்க... 1100 ரூவா பைன் கட்டிட்டு போ:"
"எத்தன தடவடா இதே மாதிரி ஆரம்பிப்பீங்க" ன்னு சிவாஜி ரஜினி ஸ்டைல்ல மனசுக்குள்ள நானே கேள்வி கேட்டுகிட்டேன்.
"எங்கடா வேலை பாக்குற" ன்னாரு
"இங்க தான் சார்.." ன்னு பக்கத்துல இருந்த எங்க கம்பெனிய காமிச்சேன்...
"ஏண்டா பச்சிகிறல்ல... கை காட்டுனா ஸ்டாப்புன்னு தெரியாது உனக்கு"
"சார்... என் மேல தப்பு இல்ல சார்...அவரு தான் ரோட பாக்காம நேர வந்து வண்டில விழுந்துட்டாரு"
:"சிக்னல் பண்ணா பாக்க மாட்டியா நீயி"
"சார் அவர் அந்த முக்குல நின்னு காமிச்சிருக்காரு சார்.. எனக்கு எப்டி சார் தெரியும்" ன்னு நா பதிலுக்கு பதில் சொல்லிட்டே இருக்க
"அதெல்லாம் தெரியாது. SI வருவாரு.. கேஸ் வாங்கிக்க... 1100 ரூவா பைன் கட்டு.."
நம்மளோட பவர் தெரியாம இந்த ஆளு இவளோ நேரம் பேசிட்டு இருக்காரு... நம்ம ஆயுதத்த உபயோகிச்சிட வேண்டியது தான்ன்னு முடிவு பண்ணி ......
கெஞ்ச ஆரம்பிச்சேன் பாருங்க....
"சார் சார்... அர்ஜெண்ட்டா போகனும் சார்.. கொஞ்சம் பாத்து விடுங்க சார்."
"அதெல்லாம் எனக்கு தெரியாது... நீ பைன கட்டிட்டு போ" ன்னு திரும்பவும் பஸ்ஸ் நிறுத்த பொய்ட்டாரு...
ஒரு அரை மணி நேரம் பொய்ட்டு பொய்ட்டு வந்து மனப்பாடம் பண்ண அந்த "SI வருவாரு கேஸ் வாங்கிக்க" ங்கற டயாலாக்கையே ஒப்பிச்சிட்டு இருந்தாரு... நாஅங்கனக்குள்ளயே கைய கட்டிக்கிட்டு நின்னேன்... திரும்ப வந்தவரு
"டேய் கை கட்டாதடா.. யாராது பாத்தா இன்னா நெனைப்பாங்கோ.."
"சாரி சார்.. என் மேல தப்பு இல்ல சார்"
"அதெல்லாம் தெரியாது... SI வருவாரு அவராண்ட சொல்லு."
"சார்.. SI ல்லாம் வேணாம் சார்... நீங்களே கொஞ்சம் பாத்து விடுங்க சார்"
"நா இன்னாடா பாக்குறது,, நீ தான் சொல்லனும்.... எதாது பாத்து பண்ணிட்டு கெளம்பு" ன்னு லைசன்ஸயும் ஆர்.சி புக்கையும் கைல குடுத்துட்டு திரும்ப
வண்டிய நிறுத்த பொய்ட்டாரு..
சரி வேற என்ன பண்ணித் தொலைக்கிறதுன்னு நெனைச்சிகிட்டு பர்ஸ்லருந்து ஒரு நூறு ரூவாய வெளிய எடுத்தேன்.... அத ரோட்லருந்து பாத்த அவரு பதட்டத்துல "டேய் பண்த்த மறிடா (மறைடா) பண்த்த மறிடான்னு" வாய மூடிக்கிட்டே சொன்னாரு.. சரின்னுஅந்த நூறு ரூவாய front pocket la வச்சிகிட்டேன்..அடுத்த ரெண்டு நிமிஷத்துல ஓரமா வந்த அவரு
"டேய்... எங்க அந்த டாக்குமெண்ட்ட காமி" ன்னு சொன்னதும் ஆர்.சி புக்குக்கு கீழ அந்த நூறு ரூவாய வச்சி நீட்டுனேன்... அதுலருந்து அவருக்கு வேண்டிய அந்த "டாக்குமெண்ட்ட" மட்டும் எடுத்துக்கிட்டு ஆர்.சி. புக்க என்கிட்டயே திருப்பி தந்துட்டு
"டேய் சீக்கிரம் இன்சூரன்ஸ் எடுடா,, இப்புடியெல்லாம் வண்டி ஓட்டாத,, ரொம்ப ரிஸ்க்... இன்னா... " ன்னு வழக்கமா மாமூல் வாங்குன அப்புறம் அட்வைஸ் பண்ற ட்ராஃபிக் கான்ஸ்டபிள்ஸ் மாதிரியே இவரும் அட்வைஸ ஆரம்பிக்க
"இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா" ன்னு நெனைச்சிகிட்டு அங்கருந்து கெளம்பி போரூர் ஹீரோ ஹோண்டா சர்வீஸ் சென் டர்ல 31 வது ஆளா இன்னிக்கு சர்வீஸ் விட்டேன்..