Showing posts with label அனுபவம். Show all posts
Showing posts with label அனுபவம். Show all posts

Thursday, June 16, 2022

சிவாஜி நினைவலைகள் - 15 Years of Sivaji


Share/Bookmark



பொறியியல் மூன்றாமாண்டு விடுதி. இரவு எட்டு மணி. மாலை ஏழு மணி முதல் பத்து மணி வரை காமன் ஹாலில் டிவி ஓடிக்கொண்டிருக்கும். பெரும்பாலும் 8 to a8:30 தான் எங்களுடைய இரவு உணவுக்கான நேரம். ஏனென்றால் அப்பொழுதுதான் நியூஸ் ஓடிக்கொண்டிருக்கும். “அத யாருப்பா அசிங்கமா பாத்துகிட்டு” என கும்பலாக எழுந்து சென்றுவிடுவோம். நியூஸ் பார்ப்பதற்காக மட்டுமே காமன் ஹாலிற்கு வருபவர்களும் உண்டு. 


அப்படி சிலர் மட்டும்காமன் ஹாலில் நியூஸ் பார்த்துக் கொண்டிருக்க, நாங்கள் ஹாஸ்டல் மெஸ்ஸில் உணவிற்காக உட்கார்ந்திருந்தோம்.


ஒரு வாய் எடுத்து வைக்கவில்லை.. ”ஹோஓஓஓஓ” என காமன் ஹாலிலிருந்து பயங்கர சத்தம் பின்னாலிருந்த

மெஸ்ஸில் கேட்டது. “வழக்கமா சச்சின் அடிக்கும் போது தான் இந்த மாதிரில்லாம் கத்துவாய்ங்க. இன்னிக்கு மேட்ச் கூட இல்லையே..என்னாச்சு?” என சாப்பிட்டத்தை அப்படியே வைத்துவிட்டு அனைவரும் காமல் ஹாலை நோக்கி ஓடினோம்.


”என்னாச்சு.. என்னாச்சு” என பதற்றமாக உள்ளே நுழைய, உள்ளே இருந்தவர்கள் அத்தனை உற்சாகத்துடன் “டேய் ஷங்கர் ரஜினிய வச்சி படம் எடுக்குறாரம்டா.. ஷங்கர் ரஜினிய வச்சி படம் எடுக்குறாராம்டா” உள்ளே

சென்றவர்களும் ”ஹோஓ”வென கூச்சல் போட காமன் ஹாலே திருவிழாக் கோலமானது. அப்படியே உட்கார்ந்து

விளம்பரத்திற்குப் பிறகு வந்த ஷங்கர்-ரஜினி கூட்டணியைப் பற்றிய முழு செய்தியைப் பார்த்துவிட்டு மட்டற்ற மகிழ்ச்சியுடன் சாப்பிடச் சென்றோம்.  செய்தியில் படத்தின் பெயர் என்ன என்பதயெல்லாம் யாரும் குறிப்பிடவில்லை. நாங்களே டைட்டில் எப்படி இருக்கப்போகிறது என பல யூகங்களை உருவாக்கியிருந்தோம்.


அடுத்த இரண்டாவது நாளில் கல்லூரி டீக்கடையில் ஒரு பேப்பர் செய்தி. ”ஷங்கர்-ரஜினி இணையும் திரைப்படத்திற்கு சிவாஜி என பெயரிடப்பட உள்ளதாகத் தகவல்” என இருந்தது.


“எலே என்னது? சிவாஜியா? என்னலே இத எப்டிப் படிச்சாலும் மாஸா இல்லையேலே” என மிகப்பெரிய ஏமாற்றம். ஆனால் எல்லாம் சில நாட்கள் தான்.


“அருணாச்சலம் டைட்டில மொதல்ல கேக்கும்போது என்னடா இது அருணாச்சலம், வேதாச்சலம்னு ரொம்ப சுமாரான டைட்டிலா இருக்கேன்னு நினைச்சேன். ஆனா அதயே ரஜினிசார் “அருணாச்சலம்”ன்னு கணீர்னு சொன்னப்போ அந்த டைட்டிலே பயங்கர பவர்ஃபுல்லா தெரிஞ்சிது.. அப்டியே ஒத்துக்கிட்டேன்” என சுந்தர்.சி கூறியிருப்பார். அதேபோல சில நாட்களிலேயே சுமாரான சிவாஜி, சூப்பரான டைட்டிலாக மாறிப்போனது.


இரண்டு மூன்று வாரம் கழித்து ஒருநாள் காலை ஆறுமணிக்கெல்லாம் ரூம் மேட் பிரபு ஆழ்ந்த நித்திரையில் இருந்த என்னை “யோவ்.. எந்திரிய்யா..  யோவ் எந்திரிய்யா” என வேக வேகமாக எழுப்பினான்.


என்ன இவன் விடியக்காலமே எழுப்பி விடுறான் என அலுத்துக்கொண்டே எழுந்தால் மடியில் அந்த ஹிந்து பேப்பரைப் வீசினான். பேப்பரில் சிவாஜியின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர். அதுவரை பார்த்திராத வித்யாசமான, சந்திரமுகியைக் காட்டிலும் இளமையான ரஜினி. ச்ச.. செம்மடா... அன்று மட்டும் கிட்டத்தட்ட பத்து பேராவது என்னிடம் பேப்பரைக் கொண்டு வந்து கொடுத்திருப்பார்கள், அந்தப் போஸ்டரை வெட்டி வைத்துக்கொள்வதற்காக. அந்த போஸ்டர்தான் ஃபைனர் இயர் முடியும் வரை என்னுடைய ரூம் சுவற்றில்   முருகனுக்கு அருகில்  ஒட்டப்பட்டிருந்தது. இன்னும் பத்திரமாக உள்ளது.


நான்காமாண்டு முடியும் தருவாயில் கல்சுரல்ஸிற்கு நான்கு நாட்களே இருந்த சமயம். சிவாஜியின் மூன்று பாடல்கள் லீக் ஆனது. அதில் ஒன்றை கல்லூரி ஆர்கெஸ்ட்ராவில் சேர்ந்து விடுவோமா என்று கூட யோசித்தோம். ஆனால் ஏற்கனவே பாடல்களெல்லாம் முடிவு செய்யப்பட்டு விட்டதால், மீண்டும் கேட்டால்  orchestra co-ordinator ரவிக்குமார் கடித்து வைத்து விடுவார் என அதை அப்படியே விட்டுவிட்டோம்.


மற்ற பாடல்கள் ரிலீஸான பொழுது ஊருக்குச் சென்றதால் உடனடியாகக் கேட்க முடியவில்லை. ஆனால் SPB பாடிய பாடல் எப்படி இருக்கிறது எனத் தெரிந்துகொள்ள அவ்வளவு ஆர்வம். நண்பர் Karthick Chandrasekar  ற்கு கால் செய்ய, ஹாஸ்டலில் இருந்த அவருடைய டேப்பில் முழு சத்தத்துடன் அந்தப் பாட்டை ஒலிக்க விட்டு ஃபோனில் கேட்க வைத்தார்.


கல்லூரி முடிவதற்குள் படம் வந்துவிட்டும், ஒன்றாகப் பார்த்துவிட்டு ஊருக்குச் செல்லலாம் என்றிருந்தோம். ஆனால் ரீலீஸ் தள்ளிப் போய், அது நிறைவேறாமல் போனது. ஊருக்குச் சென்றோம்.


கம்பெனியில் சேர்வதற்கான தேதியைக் கொடுத்துவிட்டார்கள். சிவாஜியின் ரிலீஸ் தேதியும் வந்தது. ஜூன் பதினைந்து. பட்டுக்கோட்டை அருண் திரையரங்கில் காலை ஏழு மணிக்காட்சி. அதற்குள் முதல் நாள் இரவு படம் பார்த்த சென்னை நண்பர்கள் புகழ்ந்து தள்ளிக்கொண்டிருக்க அன்றைய இரவு ரொம்பவே மெதுவாகக் கடந்துகொண்டிருந்தது.


காலை ஏழுமணிக்கு காட்சி ஆரம்பம்.  One of the best thalaivar movies. மன நிறைவுடன் மறுநாள் இரவு சென்னைக்கு கிளம்பினேன் முதன் முதலாக வேலையில்  சேர்வதற்காக.

நேற்று நடந்தது போல இருக்கிறது.  பதினைந்து ஆண்டுகள் ஒடிவிட்டது. சிவாஜி வந்தும், நான் வேலைக்கு சேர்ந்தும். நாளை மறுநாளுடன் L&T யில் பதினைந்து ஆண்டுகளை நிறைவு செய்கிறேன்.


-

Wednesday, November 3, 2021

ஒரு இனிய தீபாவளிப் பயணம்!!


Share/Bookmark





வழக்கமாக தீபாவளி பொங்கலுக்கு பேருந்தில் தான் ஊருக்குச் செல்வது வழக்கம். என்னுடைய ஆஸ்தான ராஹத் ட்ராவல்ஸ் சென்ற மாதம் எதோ சிக்கலில் சிக்கியதால் மொத்த பேருந்து சேவையும் முடங்கியிருக்கிறது. இந்த முறை வித்யாசமாக இருக்கட்டுமே என்று இரண்டு வாரம் முன்பு ரயிலில் முன்பதிவு செய்து வைத்திருந்தேன்.வேறு பேருந்துகளில் முன்பதிவு செய்யவில்லை.

வெய்டிங் லிஸ்ட் 50 க்கு மேல் இருந்தது. சரி எதற்கும் நம்முடைய அதிர்ஷ்டம் எப்படி இருக்கிறது எனப் பார்க்கலாம் என்று காத்திருந்தேன். 


நமக்குத்தான் அதிர்ஷ்டம் கிளு கிளுன்னு இருக்குமே. சார்ட் வந்த பிறகு வெய்ட்டிங் லிஸ்ட் 33 இல் வந்து நின்று "வெளியே போங்கடா அயோக்ய ராஸ்கல்களா" என்றது IRCTC.


சரி ரெட் பஸ்ஸில் பேருந்துகளை தேடினேன். வழக்கமாக 500 ரூபாய் டிக்கெட் 1300, 1600, 1900 என ஒவ்வொரு ட்ராவல்ஸூம் அவரவர்களுக்கு ராசியான எண்களை டிக்கெட் தொகையாக நிர்ணயித்திருந்தனர். அதுவும் அனைத்து பேருந்துகளிலும் மீதமிருந்தது கடைசி வரிசையில் நடுவில் இருந்த சீட் மட்டுமே.


அந்த சீட்டில் பிரச்சனை என்னவென்றால் சாயவும் முடியாது முன்னால் கால் வைக்கவும் முடியாது. அசந்து தூங்கிக் கொண்டிருக்கும் போது ஓட்டுனர் கொஞ்சம் அழுத்தி பிரேக்கை மிதித்தால் மாயி வடிவேலுவைப் போல் முன்னால் போய் விழுந்து மூக்கட்டை பெயர்வதற்கான வாய்ப்புகள் மிக அதிகம். அதனாலேயே அந்த சீட்டை பெரும்பாலும் தெரிவு செய்வதில்லை.


ஒரு சில SETC சிறப்புப் பேருந்துகளும் ரெட் பஸ்ஸில் காண்பித்தது. ஆனால் அத்தனையும் ஊர்ப்பக்கம் ஓடும் (3+2) சீட்டர்கள். அதில் செல்லலாம். ஆனால் பத்து மணி நேரம் பயணித்து சென்றால் மறுநால் முதுகை கம்பி கட்டித்தான் நிமிர்த்த வேண்டியிருக்கும் என்பதால் அவற்றைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.


மேலும் தேடியபோது கண்ணில் பட்டது "ஜோதி லட்சுமி ட்ராவல்ஸ்"


"எலே.. என்னது ஜோதி லச்சுமியா... யாரு இவா.. இப்டி ஒரு பஸ்ஸ நாம பாத்ததே இல்லையே" என எனக்குள் இருந்த GP முத்து ஒரு நிமிடம் வெளிப்பட்டார்.


டிக்கெட் விலை 900 ரூபாய். நடுவில் கூட காலி சீட்டுகள் இருந்தது. அதைவிட முக்கியமாக இந்தப் பேருந்தில் சென்றால் வேறு பேருந்திற்கு மாறாமல் வீட்டிற்கு அருகிலேயே இறங்கிக்கொள்ளலாம். ஆனால் 10:15 க்குத்தான் கோயம்பேடில் பேருந்து கிளம்புகிறது.


10:15 க்கு கிளம்பி எப்போ வீட்டுக்குப் போறது. சரி இந்த மழையில் வேறு ஆப்ஷன் இல்லை. ஒரு மணி நேரம் முன் பின் இருந்தாலும் தொல்லையில்லாமல் வீடு போய்ச் சேரலாம் என்று டிக்கெட்டை புக் செய்தேன். போர்டிங் பாய்ண்டாக ஆலந்தூர் மெட்ரோ ஸ்டேஷனை தெரிவு செய்திருந்தேன். 10.40 க்கு ஆல்ந்தூரில் பேருந்து.


இன்னும் மூன்று மணி நேரத்திற்கு மேல் இருந்தது. ஆசுவாசமாகக் ஒன்பது மணிக்கு மேல் கிளம்பி, இரவு உணவை முடித்துவிட்டு மெட்ரோவில் ஏறினேன். சுமார் 50 நிமிடப் பயணத்தில் ஆலந்தூர் வந்தடைந்தேன்.


ஸ்டேஷனுக்கு வெளியில் வந்து மெயின் ரோட்டில் பேருந்துக்காகக் காத்திருந்தேன். "ஈஸ் திஸ் சென்னை? தீபாவளியும் அதுவுமா ரோடு கொஞ்சம் கூட கூட்டமே இல்லாம இவ்வளவு ஃப்ரீயா இருக்கு.. ரிமார்க்கபிள் சேஞ்ச்" என சிவாஜி வசனத்தை நினைத்துக் கொண்டு நின்றிருந்தேன்.


பத்து நிமிடத்திற்கு மேல் ஆனது. எதோ பிசிறு தட்டியது. எனக்கு அருகில் முதுகில் ஆமை ஓடு போல் பையை மாட்டிக்கொண்டு சிலர் நின்றிருந்தாலும் அந்த பத்து நிமிடத்தில் வெளியூர் செல்லும் ஒரு பேருந்து கூட அந்த வழியாக வரவில்லை. 


"ரைட்டு.. இன்னிக்கு நம்மை அலைக்கழிக்கப் போகிறார்கள் " என்பதை போதி தர்மன் உணர்கிறார்.


அந்த ட்ராவல்ஸை தொடர்பு கொள்ளவும் ஓட்டுனர் நம்பர் எதுவும் SMS வரவில்லை. அடுத்த 5 நிமிடத்தில் ஒரு எண்ணிலிருந்து அழைப்பு வந்தது. 


"அண்ணே எங்கியன்ணே இருக்கிய?"


"ஆலந்தூர் மெட்ரோவுக்கு வெளில நம்ம பஸ்ஸூக்காகத்தான் காத்துட்டு இருக்கேன்ணே" என்றேன்.


"அண்ணே ஒரு பிரச்சனை ஆயிப்போச்சு.. பஸ்ஸ மடக்கிட்டாங்க. சிட்டிக்குள்ள போகக்கூடாதம். கோச்சிக்கிடாம கொஞ்சம் கோயம்பேடுக்கு வந்தர்ரியலா?" என்றார்.


"கோயம்பேடா.. என்னண்ணே?!! இப்பதான் இங்க வந்தேன்..."


"அப்ப இன்னொன்னு பன்னுங்க.. வண்டலூருக்கு அடுத்து உள்ள ஊரப்பாக்கத்துக்கு வந்துருங்க"


"டேய் ஊரப்பாக்கத்துக்கு அங்குட்டு பத்து நிமிஷம் நடந்தா எங்க ஊரே வந்துரும்டா.." என நினைத்துக்கொண்டு பரவால்லண்ணே நா கோயம்பேடுகே வந்துடுறேன். விட்டுட்டு மட்டும் போயிடாதீங்க என்றேன்.


"நீங்க வந்தா தாண்ணே பஸ்ஸ எடுப்போம். மெதுவா வாங்க" என்றார்.


"எது மெதுவா வாங்கவா? இன்னிக்கு பஸ் எடுக்கிற ஐடியா இருக்கா இல்லையா இவனுங்களுக்கு" என நினைத்துக் கொண்டே மறுபடி மெட்ரோ ஸ்டேஷனுக்குள்ளே சென்றேன்.


"இறங்குன ட்ரெயின்லயே மறுக்கா எத்தி விடுறீங்களேடா" என் மறுபடி கோயம்பேடை நோக்கி புறப்பட்டு 10:50 க்கு அங்கு சென்று சேர்ந்தேன். 


மெட்ரோ ஸ்டேஷனுக்கு வெளியே ஜோதி லட்சுமி ரெடியாக நின்றது. அங்கு வரவேண்டிய கடைசி ஆள் நானும் வந்துவிட்டதால் உடனே ஜோதி லட்சுமின்புறப்பட்டது.


சரியாக 11:40 க்கெல்லாம் வண்டலூரை அடுத்த ஊரப்பாக்கம் சிறப்பு பேருந்து நிலையத்தை அடைந்தது. தீபாவளி நேரத்தில் பன்னிரெண்டு மணிக்குள் சிட்டியைத் தாண்டுவது என்பதே நல்ல அச்சீவ்மெண்ட் தான். மோசமில்லை. எப்படியும் காலை எழு மணிக்குள் வீட்டில் இருக்கலாம் என்கிற நினைபுடன் மொபைலை பாக்கெட்டில் வைத்துவிட்டு, கர்ச்சீப்பை எடுத்து கண்ணில் கட்டிக்கொண்டு நித்திரையில் ஆழ்ந்தேன்.


பஸ் தாறுமாறாக ஓடிக்கொண்டிருந்தது அரை தூக்கத்தில் தெரிந்தது. எங்கும் சூசூ போவதற்கு நிறுத்தினார்களா என்று தெரியவில்லை. நான் தூக்கத்திலேயே இருந்தேன். வழக்கமாக காலை ஆறுமணிக்கு அடிக்கும் அலாரம் வைப்ரேனுடன் அலற ஆரம்பித்தது.


கன்ணில் கட்டியிருக்கும் கர்ச்சீப்பை அவிழ்க்காமலேயே கையால் ஃபோனை அழுத்தி விட்டுவிட்டு, "மணி ஆறாகிவிட்டது.. எப்படியும் வண்டி கும்பகோணத்தைத் தாண்டி மன்னார்குடியை நெருங்கியிருக்க வேண்டும்" நினைத்துக்கொண்டேன்


எனக்கு பின் சீட்டில் இருந்தவதுக்கு ஃபோன் வந்தது. 


"ஆமா வந்துட்டுருக்கேன்.. இப்பதான் விருத்தாச்சலம் வரப்போகுது என்றார்"


 "எதேய்ய்ய்ய்? விருத்தாச்சலமே இப்பதான் வரப்போகுதா?"


அரைகுறைத் தூக்கம் முழுவதும் கலைந்தது. இருந்தாலும் மனதைத் தேற்றிக்கொண்டு, கண் மூடியபடியே இருந்தேன்.


அடுத்த அரைமணி நிமிடத்தில் பஸ்ஸின் டயர்களில் எதோ கட முட சத்தம். பஸ் இஞ்சின் நிறுத்தப்பட்டது. அப்போதுதான் பலரும் கண்ணை லேசக விழித்துப் பார்க்க ஆரம்பித்திருந்தனர். விடிந்தும் விடியாத மசண்டை இருட்டு. மழை கொட்டிக்கொண்டிருக்கிறது.


இரண்டு மூன்று நிமிடம் ஏன் பேருந்து நின்றத்உ யாருக்கும் எதுவும் தெரியவில்லை. சரி ட்ரைவரிடம் சென்று கேட்கலாம் என முன்னிருந்த ஒருவர் எழுந்து செல்ல, ட்ரைவர் இருக்கையில் ஆள் இல்லை.


மாறாக ட்ரைவரும், அட்டெண்டரும் பஸ்ஸை அம்போவென விட்டுவிட்டு வேறு திசையில் ஓடிக்கொண்டு இருந்தனர்.


ஆம். சைக்கிளில் வந்த் முதியவர் ஒருவர் ஜோதி லட்சுமியில் அடிபட்டு தூக்கியெறியப்பட்டிருக்கிறார் என்பது அப்போதுதான் அனைவருக்கும் புரிந்தது.


சாலையில் மறுபுறம் கொட்டும் மழையில் புற்களுக்கு நடுவே அந்தப் பெரியவர் அசைவுகளின்றிக் கிடந்தார். சம்பவத்தைப் பார்த்த இரண்டு பேர் பெரியவர் அருகே சென்றனர்.  அவரைத் தொடவில்லை. 


அடுத்த மூண்று நிமிடத்தில் ஒரு பெண் ஓடிவந்து வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டு "அப்பா.. அப்பா.."என அழ ஆரம்பித்தார். அவர்களுக்கு இன்றைய பொழுது இப்படி விடிந்திருக்கக் கூடாது.


இருபது முப்பது பேர் கொண்ட கூட்டம் கூடியது. ஆம்புலன்ஸிற்கு அழைக்க வேண்டும் என பேசிக்கொண்டிருந்தார்கள். 


பேருந்திலிருந்த அனைவரும் பைகளை

எடுத்துக்கொண்டு கீழே இறங்கினோம்.


அதுவரையும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த ஒருவர் "ஏங்க பஸ்ஸ எடுக்கமாட்டாங்களா இப்ப?" எனப் பரிதாபமாக் கேட்டுக்கொண்டிருந்தார்.


"ஜாக்கிங் போன ட்ரைவர் வந்தோன எடுத்துருவாங்க" 


சாலையில் பெரியவரைச் சுற்றி நின்ற கூட்டத்துற்கு கொஞ்சம் தள்ளி கொட்டும் மழையில் நின்றுகொண்டிருந்தோம்.


இது எந்த ஊர் என்று தெரியவில்லை. எதாவது பேருந்து வருகிறதா எனப் பார்த்தபடி நின்றிருந்தோம். நின்ற பொழுது ஒருசிலர் அவரவர்களுக்குள் அறிமுகம் செய்துகொண்டிருந்தனர். 


" நீங்க எங்க போறீங்க?"


"பட்டுக்கோட்டை"


"அய்யோ நானும் பட்டுக்கோட்டைதாங்க போறேன்"


ஆமா.. ஜெர்மெனி ஏர்போர்ட்ல ஊர்காரங்க ரெண்டு பேரு தற்செயலா மீட் பன்னதுல எக்ஸைட் ஆயிட்டாங்க. ஏண்டா பட்டுக்கோட்டை போற பஸ்ல பட்டுக்கோட்டைகாரனுக தானடா போவானுக.. உசுற வாங்காம நில்லுங்கடா   எனத் தோன்றியது.


அடுத்த சில நிமிடங்களில் கும்பகோணம் செல்லும் தனியார் பேருந்து ஒன்று வரவும் அனைவரும் ஏறிப் புறப்பட்டோம்


பஸ்ஸில் ஏறிய பின்னர் அடிபட்ட பெரியவரை தான் பார்த்ததாகவும், லேசாக அசைவு இருந்ததாகவும் ஒருவர் கூறினார். கொஞ்சம் ஆறுதலாக இருந்தது.


நடத்துனர் வந்தார்.


"அண்ணே கும்பகோணம் இங்கருந்து எவ்வளவு தூரம்ணே..?"


"எப்புடியும் 45 கிலோமீட்டருக்கு மேல வரும்"


வெளங்கும்... எட்டு பதினைந்துக்கு கும்பகோணம். அங்கிருந்து மறுபடி மன்னார்குடி ஒரு மணி நேரம். அங்கிருந்து மறுபடி பட்டுக்கோட்டை ஒன்னே கால் மணி நேரம். 


இன்னும் பஸ்ஸில் சென்றுகொண்டு தான் இருக்கிறேன். மதிய சாப்பாட்டிற்குள் வீட்டிற்குச் சென்றுவிடுவேன் என்று நினைக்கிறேன்.


வாழ்த்துங்க ஃப்ரண்ட்ஸ்!!

Wednesday, May 26, 2021

ஹரித்வார் டைரிஸ் - பகுதி 1


Share/Bookmark

 


அனுபவப் பதிவுகள் எழுதி நாளாகிவிட்டது. கல்லூரிப் பதிவுகள் எழுதியதும் மறந்தே போய் விட்டது. பழைய நினைவுகளை ஞாபகப் படுத்த எதோ ஒரு விஷயம் தேவைப்படுகிறது. மற்றவர்களைப் பற்றி தெரியவில்லை. ஆனால் நான் என்னுடைய நினைவுகளை பாடல்களில் தான் சேமித்து வைத்திருக்கிறேன்.

அந்தந்த தருணங்களில், அந்தந்த காலகட்டங்களில் கேட்கும் பாடல்களில் அந்த சம்பவங்களைப் பற்றிய நினைவுகள் சேகரமாகிறது. இப்பொழுதும் “இளங்காத்து வீசுதே” பாடலைக்  கேட்டால் என்னை அறியாமல் உள்ளுக்குள் ஒரு பயம் தோன்றும். கல்லூரியில் சேர்ந்து முதல் செமஸ்டர், முதல் முதலாக முழுவதும் ஆங்கிலத்தில் தேர்வை எதிர்கொள்ளவிருந்த, பள்ளி வரை முதல் மூன்று இடங்களுக்குள் வந்து , கல்லூரியில் முதல் முறை ஒரு சராசரி மாணவனாக எதிர்கொள்ளவிருந்த தேர்விற்கான பயம் அது.

அதே போல “அ ஆ” திரைப்படத்தின் மயிலிரகே பாடலைக் கேட்டால் கல்லூரியின் சுற்றுலா ஞாபகம். Emcee Jesz இன் ”பச்சைக்கிளி முத்துச்சரம்” பாடலைக் கேட்டால் என்னுடைய முதல் ஆன் சைட் ஞாபகம், அல்லு அர்ஜூனின் ரேஸ் குர்ரம் பாரலைக் கேட்டால் நாஸிக்கில் சுற்றிய ஞாபகம் என ஒவ்வொரு பாடலுக்கும் ஒரு இடம், ஒரு நினைவு. அப்படி எதேச்சையாக இரண்டு நாட்களுக்கு முன்னர் கேட்ட பாடல் “ஜெய் கங்கே மாதா”. ஹரித்வாரில் கங்கையில் மாலையில் ஆரத்தி காண்பிக்கும் போது ஒலித்துக் கொண்டிருக்கும் பாடல் ஹரித்வார் நினைவுகளை கிளரி விட்டது.

வேலைக்கு சேர்ந்து முதல் ஏழரை வருடம் தமிழ்நாட்டில் இருந்ததை விட வெளியூர்களில் தான் அதிகம் இருந்திருக்கிறேன். அதன் பிறகு எனக்கு ஏழரை ஆரம்பித்துவிட்டதால், பணியிட மாற்றமாகி தமிழ்நாட்டு எல்லையையே இப்பொழுதெல்லாம் தாண்ட முடிவதில்லை. சர்வீஸ் எஞ்ஜினியராக இருந்து சுற்றிய சில இடங்களில் எனக்கு மிகவும் பிடித்த இடம் ஹரித்வார்.

ஹரித்வார் நகரிலிருந்து சுமார் 35 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்திருந்த பிர்லா டயர்ஸ் கம்பெனிதான் எங்கள் கஸ்டமர். கம்பெனி அமைந்திருந்த இடத்தில் தங்கும் வசதி பெரிதாக இல்லாததால், ஹரித்வாரில் உள்ள ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டிருந்தோம். எங்களுக்கென்று தனியாக ஒரு சுமோ. காலையில் சுமார் 9 லிருந்து 9:15 க்குள் கிளம்பி 10 மணிக்கு கம்பெனியை அடைவோம். மாலையில் 4:30 லிருந்து 5 ற்குள் புறப்பட்டு 5:45 க்குள் ஹரித்வாரை அடைந்து விடுவோம்.

கம்பெனிக்கு செல்லும் வழியில் பெரிய பெரிய மாந்தோப்புக்கள் அதிகம். திரும்பி வரும் பொழுது மாந்தோப்பில் கொட்டும் பழங்கள் சாலை ஓரத்திலேயே விற்பனைக்கு இருக்கும். பத்து ரூபாய், இருபது ரூபாய்க்கே 20, 30 சிறிய, இயற்கையாகப் பழுத்த மாம்பழங்கள் கிடைகும். தோப்பிற்கு வெளியே சாலை ஓரத்திலே ஒரு அடி பைப்பு ஒன்றும் எங்களுக்காகவே போடப்பட்டது போல இருக்கும். மாம்பழங்களை வயிறு முட்ட தின்று விட்டு, மூஞ்சு கால் கையெல்லாம் கழுவி விட்டு கிளம்ப ஏதுவாக இருக்கும்.

வெயில் காலம் என்பதால், ஹரித்வாருக்கு வரும்பொழுதே நல்ல வெளிச்சமாக மாலை வெய்யிலோடுதான் இருக்கும். நேராக ஹோட்டலுக்குச் செல்லாமல், வழியில் குறுக்கிடும் கங்கை ஆற்றிலேயே இறங்கிக் கொள்வோம். ட்ரைவரிடம் எங்கள் பொருட்களையெல்லாம் ஹோட்டலில் வைத்துவிட்டு வரும்பொழுது துண்டுகளை எடுத்துவரச் சொல்வோம். “உங்களுக்கெல்லாம் ட்ரைவர் வேலை பாக்குறேன்லடா.. எனக்கு வேணும்டா” என நினைத்துக் கொண்டே சென்று எடுத்து வருவார்.

40 டிகிரி வெய்யிலில் வேலை செய்து விட்டு வந்து, எப்பொழுதும் ஜீரோ டிகிரியிலேயே இருக்கும் கங்கை நீரில் இறங்குவதே ஒரு ஆனந்தம் தான். குறைந்தது அரை மணி நேரம் முதல் ஒரு மணி நேரம் வரை ஆசை தீர குளிப்போம். நாங்கள் குளிப்பது கங்கயிலிருந்து பிரித்து விடப்பட்ட நீரோட்டத்தின் ஒரு பகுதி. நீரின் வேகம் மிக அதிகமாக இருக்கும். நீச்சல் தெரிந்தவர்கள் மட்டும் சங்கிலித் தடுப்புகளைத் தாண்டி உள்ளே செல்லலாம். அதுவும் நடு ஆற்றிற்கெல்லாம் செல்ல முடியாது. ஆற்றின் நடுவிற்கு சென்றுவிட்டால், கரையை தொடுவதற்குள் நாம் குறைந்த பட்சம் ஒரு 50 மீட்டராவது படித்துறையிலிருந்து இழுத்துச் செல்லப்படுவோம்.

அதனால் படித்துறைக்கு முன்னர் ஒரு நூறு மீட்டர் தொலைவில் ஒரு சில பாலக்கட்டை இருக்கும். அதில் ஏறி குதித்து நீந்தினால் படித்துறைக்கு வருவதற்கு சரியாக இருக்கும். கண்கள் சிவந்த பின்னர்தான் கரையேறுவோம். கரையேற மனது வராது என்பதே உண்மை. இது ஒரு நாள் அல்ல.. ஒவ்வொரு நாளும். கிட்டத்தட்ட மூன்று மாதங்கள்.

பெரும்பாலும் எங்கள் வேலை ”போனமா வந்தமா” என்று இருக்காது. அதானாலேயே இடங்களை சுற்றிப்பார்ப்பதற்கு உடனடியாக ஆர்வம் காட்டுவதில்லை. ”அதான் இங்க தானே இருப்போம்.. பாப்போம்.. பாப்போம்” என்றே தள்ளிக்கொண்டு போகும். ஆனால் ஒருநாள் இரண்டு நாள் விசிட்டிற்கு வரும் டிசைனரோ, சேல்ஸ் பர்சனோ அதே வேகத்தில் அங்கிருக்கும் மொத்த இடத்தையும் ஒரே நாளில் சுற்றி விட்டுத்தான் கிளம்புவார்கள்.

ஹரித்வார் பிர்லா டயர்ஸ் அப்பொழுத்தான் முதன் முதலாக தொடங்கப்பட்டிருந்தது. அனைத்து டயர் க்யூரிங் மெஷின்களும் எங்களுடைய கம்பெனியிலிருந்தே அனுப்பப்பட்டிருந்ததால் அத்தனை மெஷின்களூம் நிறுவப்பட்டு, செயல்பாட்டுக்கு கொண்டுவரும் வரை எங்கள் வேலை. கிட்டதட்ட இரண்டு வருடங்கள் தொடர்ந்து வேலை இருந்தது.  

மூன்று மாதத்திற்கு ஒரு முறை எங்களுக்கு மாற்று ஆட்கள் அனுப்பபடுவார்கள். அதுவும் சைட்டுக்கு போன ரெண்டவது வாரத்திலிருந்து கெஞ்சினால் தான் மூன்றாவது மாதத்தில் மாற்று ஆட்கள் வருவார்கள்

“சார் ஊருக்கு கிளம்பலாமா சார்?”

”தம்பி அவங்க ஒக்கே சொன்னா கெளம்புங்கப்பா” என்பார் எங்கள் பாஸ்

உடனே Minutes of Meeting ஐ தயார் செய்து, பிர்லா டயர்ஸ் மேனேஜரிடம் செல்வோம். நாங்க கைல பேப்பரோடா போனாலே அவரு உசாராயிருவாரு. ”ஆஹா கெளம்புறதுக்கு திட்டம் போட்டானுக.. இவனுகள விடக்கூடாதுடா கைப்புள்ள” என்று அப்போதுதான் பயங்கர பிஸியை காண்பிப்பார்.

நீண்ட நேரம் காக்க வைத்துவிட்டு ராட்வெல்லர் முகத்துடன் உள்ளே அனுமதிப்பார்கள். உள்ளே சென்றால் அதுவரை நமக்குத் தெரியாத, இல்லாத பிரச்சனைக்களெல்லாம் சொல்லி, ”

”இவ்ளோ பிரச்சனை இருக்கு நீங்க ஊருக்கு கெளம்புவீங்களா? இப்பவே உங்க பாஸூக்கு ஃபோன் பன்னிருவேண்டா” என ஃபோனை கையில் தூக்குவார்.

“எப்புடியும் அவங்க சொல்லி விடப்போறீங்க… அதுக்கு நீங்களா விட்டதா இருக்கட்டும் சார்” என எதோ ஒரு படத்தில் சொல்வது போல ”எப்டியோ எங்க சுத்தியும் நம்மள இங்க தங்க வைச்சிருவானுக… அதுக்கு நாமளா இருக்க மாதிரி இருக்கட்டும்” என முடிவு செய்து அதை உடனேயும் ஒத்துக் கொள்ளாமல் அவர் ஆயிரம் பிரச்சனை சொல்லும் போது பதிலுக்கு நாமும் “எங்களுக்கு இந்த சப்போர்ட் இல்ல.. அந்த சப்போர்ட் இல்ல…” என ஆரம்பித்தால் கொஞ்சம் கூல் ஆகி

 “அதெல்லாம் இருக்கட்டும்பா.. நாளைக்கு கார் தர்றேன்.. எல்லாரும் போய் முசொரிக்கு போய் நல்லா சுத்திப் பாருங்க… ரெண்டு நாள் கழிச்சி வாங்க. நீங்க கேக்குறதெல்லாம் ரெடியா இருக்கும்” என்பார்

பட் அந்த டீலிங் எங்களுக்கு ரொம்ப புடிக்கும். அதனால ஒத்துக்குவோம்.

ஹரித்வாரைப் பொறுத்த வரை தொடர்ந்து அங்கு தங்குவதற்கு இரண்டு ப்ரச்சனைகள் இருக்கும். ஒன்று உணவு. சுத்தமாக நமக்கு செட் ஆகாது. நான் வெஜ் ஹரித்வாருக்குள் அனுமதி இல்லை. இன்னொன்று ஹிந்தி.

வேலை பார்க்கும் இடத்தில் பேசும் இண்டஸ்ரியல் ஹிந்தி மிகவும் எளிது. என்னுடைய சீனியர் அண்ணன் ஒருவர் சொல்லிக் கொடுத்தார். டைட் கரோ, லூஸ் கரோ, கனெக்ட் கரோ, உல்டா கரோ என நாம் உபயோகிக்கும் ஆங்கில வார்த்தைகளில் கரோவை சேர்த்துக்கொள்வது. அது பெரும்பாலும் ஒர்க் அவுட் ஆகிவிடும்.  மற்ற படி பொது வெளியில் மற்றவர்களுடன் பேசும் ஹிந்திதான் கொஞ்சம் கடினம்.

ஹரித்வாருக்குச் சென்ற சில நாட்களுக்குப் பின்னர்தான் நண்பன் அசால்ட்டு அசார்  ஹரித்வாருக்கு அருகிலுள்ள ரூர்க்கி IIT படித்து வந்தது தெரிந்தது. அசாரைப் பற்றி சொல்ல வேண்டுமென்றால் நார்த் இண்டியனுக்கு நார்த் இண்டியன். சவுத் இண்டியனுக்கு சவுத் இண்டியன். ஹிந்தி வாலாக்களைப் பார்த்தாலேயே “அரே பாய்… ஏ கிதர் ஹே.. ஓ கிதர் ஹே?” என ஹிந்தியில் பிரித்து மேய்வான்.  எனக்கு ஹிந்தி சுத்தமாகத் தெரியாத வரை அப்படித்தான் நினைத்திருந்தேன். ஓரளவு ஹிந்தி தெரிந்த பின்னர்தான் புரிந்தது, அவன் நாலு வார்த்தைய மட்டும் வச்சிகிட்டு எங்கள ஏமாத்திட்டு இருந்துருக்கான்னு.

ஹரித்வாரில் ஆர்த்தி காட்டும் கங்கை நதி, சண்டி தேவி மலை , மன்சா தேவி மலைகளைத் தவற அருகில் வேறு இடங்களைச் சுற்றிப்பார்க்கலாம் என நானும் அசாரும் கிளம்பினோம். அங்காங்கு வைக்கப்பட்டிருந்த அத்தனை சிவன் சிலைகளுடனும் ஃபோட்டோ எடுத்துக்கொண்டு சென்று கொண்டுருந்தோம்.

சுற்றிப்பார்க்க வேண்டும். ஆனால் எதைப் பார்ப்பதென்று தெரியவில்லை.

“மச்சி.. உன் ஹிந்தி நாலெட்ஜ வச்சி பக்கத்துல என்னென்ன இடம் இருக்கு பாக்கன்னு அவர்கிட்ட போய் கேளு மச்சி” என்றதும் அசார் அருகிலிருந்த ஒருவரிம் போய் இரண்டு நிமிடம் கேட்டுவிட்டு  திரும்பி என்னிடம் வந்து

“மச்சி அங்க ஒரு மந்திர் இருக்காம் மச்சி.. வா போவோம்” என்றான்

“அப்டியா வழி சரியா கேட்டுட்டல்ல.. “

“கேட்டுட்டேண்டா… வா போவோம்” என ஹரித்வாரின் சில சந்து பொந்துகளுக்குள் அழைத்துச் சென்றான்.

கிராமப் புறங்களிலிருக்கும் சிறு விநாயகர் கோவில் போல ஒரு சிறிய கோவில் ஒன்று வந்தது.

“மச்சி கும்புட்டுக்கடா… “ என்றதும் சாமியை கும்பிட்டேன்.

உடனே வந்த வழியே திரும்ப அழைத்துச் சென்றான். எனக்கு ஒன்றும் புரியவில்லை.

“மச்சி.. இங்க எதோ மந்திர் இருக்குன்னு சொன்னியேடா… காட்டாமயே அழசிச்சிட்டு போற” என்றேன்

“இப்பதான் கும்புட்டியே அதான் மந்திர். கோவிலுக்கு ஹிந்தில மந்திர்னு அர்த்தம்”ன்னான்

”அடப்பாவிகளா… புளியஞ்சாதத்துல முட்டைய வச்சி பிரியாணின்னு ஏமாத்துற மாதிரி இப்டி ஏமாத்திட்டீங்களேடா.. மந்திர்னா கோயில்னு ஏண்டா முன்னாலயே சொல்லல? நானும் மந்திர்ன்னதும் எதோ புதுமையான இடம் போலன்னு கூடவே வந்தா சந்து சந்தா அழைச்சிட்டு வந்து மரத்தடி புள்ளையார காமிக்கிற நீ? என்ன விட நாலு வார்த்தை ஹிந்தி அதிகமா தெரிஞ்சி வச்சிகிட்டு படுவா நீ ஓவரா ஆடுற”

மீண்டும் சந்து சந்தாக அழைத்துச் சென்றான். கடைசியில்  எப்பவும் செல்லும் கங்கைக் கரையே வந்து சேர்ந்தது.  ”நல்லா சுத்தி காமிச்ச போ” என கங்கையில் கால் நனைத்துவிட்டு, ஒரு கை தண்ணீரை அள்ளி தலையில் தெளித்துக் கொண்டு மீண்டும் ஹோட்டலுக்கு வந்து சேர்ந்தோம்.


- தொடரும்

Tuesday, August 23, 2016

நா ஆல் பேங்க் மேனேஜர் பேசுறேன்!!!


Share/Bookmark
”சார் ICICI பேங்குலருந்து பேசுறேன்… கிரெடிட் கார்டு எதாவது யூஸ் பன்றீங்களா? “
“ஏற்கனவே நாலு கார்டு இருக்கு”

“இதுல புது ஆஃபர் இருக்கு சார்”

“டேய் நாலு கார்டுக்கே நாக்கு தள்ள வேலை பாக்க வேண்டியிருக்கு விட்ருங்கடா”
------------
“சார்.. பர்சனல் லோன் எடுக்குற ஐடியா எதாவது இருக்கா?”

“லோன் எடுக்குற ஐடியா இருக்கு… ஆனா திருப்பி கட்டுறதுக்கு தான் ஐடியா இல்லை…”

“டொய்ங்ங்ங்ங்”
----------
“சார்.. நாங்க sun Shine க்ளப்புலருந்து பேசுறோம்.. குறைஞ்ச விலையில லைஃப் டைம் மெம்பர்ஷிப் கார்டு தர்றோம்…”

”அடுத்த வேளை சோத்துக்கே சிங்கி அடிச்சிட்டு இருக்கோம்.. இதுல லைஃப் டைம் மெம்பர்ஷிப் கார்டு.. அதுவும் கிளப்புல… “

----------------

“சார் நாங்க Save the Children organization லருந்து பேசுறோம்… ஒரு பத்து வயசு குழந்தைக்கு ஹார்ட் ஆப்ரேசனுக்காக உங்களால முடிஞ்சத குடுத்தா கொஞ்சம் ஹெல்ப்ஃபுல்லா இருக்கும் சார்…”

“ஃபேஸ்புக்குல 1like = 100 prayers ன்னு போட்டு அந்த குழந்தைக்காக ஒரு 50 லைக் வேணா வாங்கித்தர்றேம்மா… இப்பதைக்கு வேற எதுவும் முடியாது”

இப்டி ஒவ்வொரு நாளும் எதாவது ஒரு வகையில கொடச்சல் குடுத்துக்கிட்டு தான் இருக்காய்ங்க. அவங்களுக்கு பதில் சொல்றதுக்குன்னே நமக்கு கொஞ்சம் தனி பொறுமை தேவைப்படுது. அதுவும் எனக்கெல்லாம் ரொம்ப மோசம். டெய்லி ஆக்ஸிஸ் பேங்குலருந்து கால் பன்னி கார்டு வேணுமான்னு கேப்பானுங்க. தினமும் அட்டெண்ட் பன்னி “நேத்து  தான் ஃபோன் பன்னீங்க.. நா வேணாம்னு சொன்னேன். ஏன் திரும்ப திரும்ப கால் பன்றீங்க… தயவு செஞ்சி நம்பர உங்க data base லருந்து delete பன்னிருங்க” ம்பேன். ப்ரபா ஒயின்ஸாப் வடிவேலு மாதிரி “சாரி பார் த டிஸ்டர்பன்ஸ்” ன்னு சொல்லி நல்லவய்ங்க மாதிரி வைப்பாய்ங்க. ஆன மறுநாள் மறக்காம கால் பன்னுவாய்ங்க.

”டேய் நேத்து தானடா கால் பன்னீங்க” 

“அது வேற ப்ராஞ்ச்லருந்து பன்னிருப்பாங்க சார்”

“நீங்க எங்கருந்து பேசுறீங்க ?”

“டி நகர்”

”நேத்து ஃபோன் பன்னவனும் டி நகர் ப்ராஞ்சுன்னு தான் சொன்னான்”

“இல்ல சார்… இது டி நகர்ல இருக்க வடபழனி ப்ராஞ்ச்”

அடேய்.. ஒவ்வொரு ப்ராஞ்ச்லருந்து ஒவ்வொரு நாளுக்கு கால்பன்னீங்கன்னா நாங்க என்னடா பன்றது?

True caller வந்ததுலருந்து பெரும்பாலான நம்பர்களை அவனே காட்டிக்குடுத்துருவான். அதனால நம்பர பாத்த உடனே கட் பன்னி வச்சிருவேன். ஆனாலும் சில சமயம் அவனே  யார் நம்பருன்னு கண்டுபுடிக்க திணரும்போது அட்டண்ட் பன்னி பேச வேண்டியதாயிடும். பெரும்பாலான சமயங்களில் அவய்ங்ககிட்ட பொறுமையாதான் பேசுவேன். ஆனாலும் சில சமயம் நம்ம கடுப்புல இருக்கும்போது இந்த மாதிரி கால் வர்றப்போ என்னையும் அறியாம அவனுங்களுக்கு கண்ட மேனிக்கு திட்டு விழுறதுண்டு.


மேல சொன்னதெல்லாம் இல்லாம இப்ப புதுசா ஒரு டிசைன்ல கெளம்பிருக்காய்ங்க. கால் வரும். அட்டெண்ட் பன்னோம்னா

“ சார்…. உங்களோட ATM கார்டு ப்ளாக் ஆயிருக்கு. வெரிஃபிகேஷனுக்காக உங்க கார்டு நம்மர சொன்னீங்கன்னா ப்ளாக்க ரிலீஸ் பன்னி விட்டுறலாம்” ம்பானுங்க.

”என்னடா சாக்கடையில அடைப்பெடுத்து விடுறேங்குற மாதிரி சொல்றீங்க. என் கார்டு தான் ப்ளாக்கே ஆகலயே நல்லா ஒர்க் ஆயிட்டு இருக்கே..”

“இல்ல சார் ப்ளாக் ஆயிருக்கு”

“சரி நீ எந்த பேங்க்லருந்து பேசுறீங்க?”

“நா HDFC லருந்து பேசுறேன்”

”நா HDFC கார்டே வச்சில்லையே.. AXIS கார்டு தான் வச்சிருக்கேன். இல்லாத கார்டு எப்டி ப்ளாக் ஆகும்”

“இல்லை சார்… உங்க AXIS  கார்டு தான் ப்ளாக் ஆயிருக்கு… நம்பர் சொன்னீங்கான்னா ப்ளாக் ரிலீஸ் பன்னிரலாம்”

“சார் நீங்க HDFC லருந்து பேசுறேன்னு சொன்னீங்க… AXIS கார்டு ப்ளாக் ஆனா நீங்க எப்டி எடுப்பீங்க…”


“இல்லை சார்.. ஆல் பேங்குக்கும் நா தான் மேனேஜர். இந்த மாதிரி கார்டு ப்ளாக் ஆகுற கம்ளைண்டெல்லாம் நாங்கதான் டீல் பன்னிகிட்டு இருக்கும்”
அடிங்கொய்யால டப்ஸா கன்னா… ஆல் பேங்கு மேனேஜரா நீயி ஓடிரு.. கொஞ்சம் விட்டா ரிசர்வ் பேங்குக்கு கூட நீதான் மேனேஜர்னு சொன்னாலும் சொல்லுவ.. ஓடிரு…

இந்த மாதிரி ஆல் பேங்க் மேனஜர்கள் நம்ம கார்டு நம்பர நம்மக்கிட்டயே கேட்ட சம்பவங்கள் கடந்த ஒரு மாசத்துல ரெண்டு தடவ நடந்துருக்கு.
இன்னிக்கு காலையில அதே மாதிரி ஒரு ஃபோன். பேசுனது ஒரு பொண்ணு

“வணக்கம் சார்… …”

“சொல்லுங்க மேடம்..”

“நீங்க SBI credit கார்டு வச்சிருக்கீங்கல்லியா? அதுல உங்களுக்கு ஒரு upgradation package வந்துருக்கு ”

“நா SBI கார்டே வச்சில்லயே மேடம். அப்புறம் எப்புடி upgradation  வரும்”

அந்த பொண்ணு பேசுன முதல் வார்த்தையிலயே இது ஒரு டுபாகூர் கால்ன்னு என்னோட மைண்டுல ஃபிக்ஸ் ஆகி, அதுக்கப்புறம் அந்த பொண்ணு கேட்ட எல்லா கேள்விக்குமே என்கிட்டருந்து ஒரு மாதிரி எகத்தாளமான பதில்தான் வந்துச்சி.

“இல்ல சார் நீங்க HDFC கார்டு தான் வச்சிருக்கீங்க… இதுவரைக்கும் நீங்க purchase பன்னதுக்கு உங்களுக்கு கிரெடிட் பாய்ண்ட்ஸ் இருந்துச்சி. அத நீங்க யூஸே பன்னாதாதால இனிமே நீங்க பன்ற ஒவ்வொரு பர்ச்சேஸூக்கும் 20% cash back தர்ற மாதிரி upgradation வந்துருக்கு” ன்னு சொல்லுச்சி.

இந்த மாதிரி upgradation , offer ன்னு எது ஆரம்பிச்சாய்ங்கன்னாலும் கடைசில நம்மகிட்டருந்து இன்னும் கொஞ்சம் extra பணம் புடுங்குற ஐடியாவாத்தான் இருக்கும். எல்லாத்தையும் சொல்லிட்டு கடைசில இந்த offer ah avail பன்னனும்னா நீங்க ஒரு 2000 ரூபா கட்டுற மாதிரி இருக்கும்சார்னு சொல்லுவாய்ங்க. அதனாலயே அந்த பொண்ணு சொன்ன ஆஃபர்ங்குறது என்னோட காதுலயே ஏறல. திரும்ப திரும்ப என்னோட மைண்டுல இது ஒரு ஃபேக் கால்ங்குற நினைப்பு தான் ஓடிக்கிட்டு இருந்துச்சி.

“மேடம் நீங்க யாரு மேடம்… நீங்க ஏன் இதெல்லாம் சொல்றீங்க.. சரி நீங்க என்னோட கார்டு நம்பர சொல்லுங்க” ன்னேன்.

”சார் நா எப்டி சார் கார்டு நம்பர சொல்ல  முடியும். அது சீக்ரெட் information. நீங்க யார்னு தெரியாம கார்டு நம்பரல்லாம் நாங்க சொல்லக்கூடாது சார்”

“ஏங்க என்கிட்ட நீங்க என்னோட கார்டு நம்பர் சொல்ல மாட்டீங்க.. ஆனா நா மட்டும் நீங்க சொல்றத நம்பனும்… சரி நா என்ன கார்டு வச்சிருக்கேன்னாவது சொல்லுங்க..” ன்னேன்.

பேரயும் நா எந்த பேங்க்ல கார்டு வச்சிருக்கேங்குறதயும் கரெக்ட்டா சொன்னுச்சி. அப்பவே அந்த பொண்ணு வாய்ஸ்ல கோவமும் ஏண்டா இவனுக்கு கால் பன்னோம்ங்குற நினைப்பும் தெரிஞ்சிது. நா ஃப்ரண்ட்ஸோட பேசிகிட்டு இருந்த சமயத்துல அந்த ஃபோன் வந்ததாலயும் ஏற்கனவே இந்த மாதிரி ரெண்டு பேரு ஏமாத்த முயற்சி செஞ்சதாலயும் அந்த பொண்ணுக்கு நா ஒழுங்கான response உம் குடுக்கல. அந்த பொண்ணு சொல்ல வந்ததயும் முழுசா சொல்ல விடல. இன்னும் கொஞ்ச எடக்கு முடக்கு பதில்களுக்கு அப்புறம்

“ஹலோ மேடம்… உங்களுக்கு இப்ப என்ன ப்ரச்சனை.. என்ன வேணும்?”

“ஒண்ணும் இல்லை சார்… தயவு செஞ்சி லைன கட் பன்னுங்க” ன்னு கொஞ்சம் தளுதளுத்த குரல்ல சொல்லுச்சி. அப்பதான் எனக்கு செருப்புல அடிச்ச மாதிரி இருந்துது.. அந்த பொண்ணு ஃபோன கட் பன்னுச்சான்னு தெரியல. ஆன நா கட் பன்னிட்டேன்.

நான் நிறைய பேரோட நிறைய தடவ சண்டை போட்டுருக்கேன். சண்டை போடும்போது ரொம்ப hurt பன்ற மாதிரி பேசிருவேன். ஆனா அதுக்கப்புறம் அவங்க எப்டி ஃபீல் பன்றாங்களோ.. எனக்கு நினைச்சி ரொம்ப மனசு கஷ்டமா இருக்கும். அவங்களுக்காக இல்லைன்னாலும் என்னோட மனசு திருப்திக்காகவாது, யாரா இருந்தாலும் மன்னிப்பு கேட்டுருவேன். மன்னிப்பு கேக்குறதுக்கு நா வெக்கப்பட்டதே இல்லை.

ஃபோன் பேசி வச்ச அடுத்த ஒரு மணி நேரம் ரொம்ப சங்கடமா போச்சு. ஏன் அப்டி பேசுனோம்னு ரொம்ப அசிங்கமா இருந்துச்சி. பேச புடிக்கலன்னா எப்பவும்போல கட் பன்னிட்டு பேசாம இருந்துருக்கலாம். ஆனா அப்டி இல்லாம அந்த புள்ளைய ரொம்ப கஷ்டப்படுத்திட்டோமோன்னு உறுத்திக்கிட்டே இருந்துச்சி.

ஒரு நாள் காலையில ஆஃபீஸ்ல யாராவது ஒருத்தன் நம்மள டென்ஷன் ஆக்கி விட்டுட்டாலும் அன்னிக்கு பூராவுமே கடுப்பா இருக்கும். அப்டி இருக்கும்போது இந்த மாதிரி க்ரெடிட் கார்டுகளுக்காகவும் பர்சனல் லோன்களுக்காகவும் கால் பன்ற பொண்ணுங்களையும் பசங்களையும் நினைச்சி பாத்தா, ஒரு நாளைக்கு எத்தனை பேரு அவங்களுக்கு ஒழுங்க respond பன்னுவாங்க? இன்னிக்கு நா பன்ன மாதிரி ஒரு நாளுக்கு எத்தனை பேர அவங்க பாப்பாங்க. எத்தனை பேர் கிட்ட திட்டு வாங்குவாங்க.

யாரோ ஒரு பாஸ் குடுக்குற டார்கெட்ட achieve பன்றதுக்காகவும், குடும்பத்த காப்பாத்த கிடைச்ச வேலைய விட்டுட முடியாமலும் என்னை மாதிரி எத்தனை பேர் என்ன சொன்னாலும் சகிச்சிக்கிட்டு திரும்ப திரும்ப எல்லாருக்கும் கால் பன்னித்தான ஆகனும். நம்ம பாக்குற வேலைதான் கஷ்டம்னு ஒவ்வொருத்தரும் நினைச்சிட்டு இருப்போம். ஆனா இவங்கள நினைச்சி பாக்கும்போது  கண்டிப்பா இல்லை.

ஒரு மணி நேரமாகியும் எனக்கு இன்னும் மனசு உறுத்திக்கிட்டேதான் இருந்துச்சி. சரி வழக்கம்போல நம்மளே மன்னிப்பு கேட்டுடலாம்னு முடிவு பன்னி அந்த நம்பருக்கு ஃபோன் பன்னேன். கிட்டத்தட்ட அரை மணி நேரம் பிஸி. அதுக்கப்புறம் அந்த நம்பர்லருந்து திரும்ப கால் வந்துச்சி.

“சொல்லுங்க சார்”

“மேடம் கொஞ்ச நேரத்துக்கு முன்னால எனக்கு ஃபோன் பன்னீங்கல்ல… நா கொஞ்சம் கோவமா பேசிட்டேன் மேடம் மன்னிச்சிருங்க” ன்னேன்

“உங்க பேர் என்ன சார்” ன்னு. கேட்டதும் பேர சொன்னேன். 

“உங்களுக்கு நா கால் பன்னல சார்… வேற representative பன்னிருப்பாங்கன்னு நினைக்கிறேன்” ன்னுச்சி.

பரவால்ல மேடம் அவங்ககிட்ட நா மன்னிப்பு கேட்டேன்னு சொல்லிருங்கன்னு சொன்னதும் “சார் நா அவங்களையே உங்களுக்கு கால் பன்ன சொல்றேன்” ன்னு சொல்லிட்டு வச்சிருச்சி..

திரும்ப அடுத்த ரெண்டு நிமிஷத்துல அதே நம்பர்லருந்து கால். அட்டெண்ட் பன்னதும் “சொல்லுங்க சார்… ”

என்னோட பேர சொல்லி “மேடம் கொஞ்ச நேரத்துக்கு முன்னால நீங்க எனக்கு கால் பன்னிருந்தீங்க.. அப்ப நா கொஞ்சம் கோவமா பேசிட்டேன். மன்னிச்சிருங்க மேடம். கொஞ்சம் டென்ஷனா இருந்ததால அப்டி பேசிட்டேன்” ன்னு சொன்னேன்.

“பரவால்ல சார்… நானும் கொஞ்சம் ஒரு மாதிரி பேசிட்டேன் சாரி” ன்னு சொன்னுச்சி. திரும்பவும் இன்னொரு தடவ மன்னிச்சிருங்க மேடம்னு சொல்லிட்டு அதுக்கு மேல எதுவும் பேசுனா தப்பான எண்ணதுல எதுவும் கால் பன்னிருக்கமோன்னு அந்த சகோதரி  தப்பா நினைச்சிருவாங்கன்னு அதோட கட் பன்னிட்டேன்.

அதுக்கப்புறம்தான் ஓரளவு மனசுக்கு ஓக்கே.. ஆனாலும் மொத தடவ பேசும்போது  அது சொல்ல வந்த கிரெடிட் கார்டு ஆஃபர பத்தி திரும்ப முழுசா சொல்ல சொல்லி அத கவனமா கேக்குற மாதிரி நடிச்சிருந்தாலாவது அந்த பொண்ணுக்கும் கொஞ்சம் நிம்மதியாக இருந்திருக்க வாய்ப்பு இருந்துருக்கும். அது சொன்ன “பரவால்லை” க்கு அர்த்தம் ”மன்னிச்சிட்டேன்” ங்குறது இல்லைன்னு மட்டும் எனக்கு நல்லா தெரிஞ்சிது.

பல சமயங்களில் இந்த மாதிரி ஃபோன் கால்கள் உச்சக்கட்ட கடுப்புகளையும், கோபங்களையும் தான்  வரவழைக்கிது. ஆனா நம்ம கோவத்த அவங்க மேல கொட்டுறதுக்கு முன்னால அவங்க நிலமையிலயும் கொஞ்சம் இருந்து பாத்தா அவங்களுக்கும் வேற வழி இல்லைன்னு தான் தோணும். 




Sunday, November 1, 2015

தாஜ்மஹாலில் ஒரு தக்காளி சட்னி!!!


Share/Bookmark
சென்னைக்கு வேலைக்கு கிட்டத்தட்ட எட்டு வருஷத்துக்கும் மேல ஆச்சு. சர்வீஸ் எஞ்ஜினியர் வேலை.  எங்க டீம்ல ஒரு பதினாறு. எங்களுக்கு பயமே கிடையாது அப்டின்னெல்லாம் தப்பா நினைச்சிடாதீங்க. நல்லாவே பயப்படுவோம். டயர் செய்யிற மிஷின இங்க உள்ள ஃபாக்டரில டெஸ்ட் பன்னி, அத சைட்டுல போய் இன்ஸ்டால் பன்னி ரன் பன்னி குடுத்துட்டு வர்றதுதான் எங்க வேலை. நடுச்சாமத்துல கஸ்டமர் எவனாவது ஃபோன் பண்ணி “டேய் உங்க மிஷின் ஓடலடா.. நின்னு போச்சு” ம்பாய்ங்க. “லேட் பிக்கப்புடா நீயி.. எங்ககிட்ட மிஷின் வாங்குனா எப்புடிடா ஓடும்” ன்னு மனசுல நினைச்சிக்கிட்டு, சும்மா ஒரு ஃபார்மாலிட்டிக்காச்சும் “அந்த பட்டன அமுக்குங்க சார்.. இந்த ஒயர டைட் பன்னுங்க சார்”ன்னு எதாவது சொல்வோம். சத்தியமா அவனுக்கு புரியாது. வெறியாயி மறுநாள் நம்ம பாஸூக்கெல்லாம் மெயில் அனுப்பிருவான்.  

கஸ்டமர் எவனாவது கடுப்புல இருந்தாய்ங்கன்னாலே அவங்க அடிச்சி கோவத்த தணிச்சிக்கிறதுக்கு எங்கள்ல ரெண்டு பேர உடனே சைட்டுக்கு அனுப்பி வைச்சிருவாய்ங்க. அவனுங்களால எவ்வளவு முடியுமோ அவ்வளவு அடிச்சி வெறிய தீத்துக்கிட்டதுக்கு அப்புறம் தான் திரும்ப ஊருக்கு அனுப்பி வைப்பாய்ங்க.  போற சைட்டுல வேலை ஒழுங்கா பாக்குறமோ இல்லியோ, போற ஊர்க்கு பக்கத்துல உள்ள நல்ல நல்ல சைட்டுகளையெல்லாம் (அந்த சைட்டு இல்லைப்பா) நல்லா சுத்திப்பாத்துட்டு வந்துருவோம்.

ஒரு தடவ அந்த மாதிரி ஹரித்வார் சைட்டுல உள்ள ஒரு ப்ராஜெக்ட்டுக்காக கிளம்பி போயிட்டு இருந்தோம். மொதல்ல ஹரித்வார் கிளம்பி போறதே மிகப்பெரிய ப்ராஜெக்ட் தான். மொதநாள் சாய்ங்கலாம் க்ராண்ட் ட்ரங்க் எக்ஸ்ப்ரஸையோ இல்லை தமிழ்நாடு எக்ஸ்ப்ரஸ்ஸையோ புடிக்கனும். அவன் ஒரு ஒண்ணறை நாள் மூச்சு தெணற தெணற ஓட்டி ரெண்டாவது நாள் காலையில நியூ டில்லில கொண்டு போய் விடுவாய்ங்க. அங்கணக்குள்ளயே ஒரு ரூம போட்டு குளிச்சி ஃபேஸ ப்ரஷ் ஆக்கிக்கிட்டு ஹரித்வார் பஸ் ஏற கஷ்மீரி கேட்டுங்குற இடத்துக்கு ஆட்டோ புடிச்சி போகனும்.

டில்லில ஆட்டோக்காரய்ங்கல்லாம் ஒரு திணுசானவியிங்க. நம்மூர் ஆட்டோக்காரங்களாச்சும் நமக்கு நெஞ்சு வெடிக்கிற மாதிரி அமவுண்ட்டா இருந்தாலும் டைரக்டா கேப்பாய்ங்க. ஒரு தடவ க்ரோம்பேட்டையிலருந்து பெருங்களத்தூருக்கு ஒரு LED டிவிய ஆட்டோல எடுத்துட்டு போனேன்.. அந்த ஆட்டோக்காரன் என்கிட்ட 300 ரூவா வாங்குனான். அடப்பாவிகளா மூணு குலோ மீட்டருக்கு 300 ரூவாயா. நல்லாருக்குடா உங்க டீலிங்கு. மேல இன்னொரு 300 ரூவா போட்டு குடுடா.. இந்த டிவிய உன்கிட்டயே குடுத்துட்டு போயிடுறேன்னே நினைச்சேன். ஆனாலும் நேரடியா கேட்ட அந்த டீலிங் எனக்கு புடிச்சிருந்துச்சி.

ஆனா டில்லி ஆட்டோக்காரய்ங்க வேற மாதிரி ஒரு டீலிங்க் பன்னுவானுங்க. நா மொத மொதல்ல போனப்போ என் ஃப்ரண்டு ஒருத்தரு அவய்ங்களப் பத்தியும் அவய்ங்க நம்மகிட்ட சொல்ற ஒரு கதையப் பத்தியும் சொல்லித்தான் அனுப்சாரு. ஆனா எனக்கு அவ்வளவா நம்பிக்கை இல்லை. ”ச்ச எப்பவாச்சும் ஒருத்தன் அப்டி பன்னிருப்பான். எல்லாருமா அப்டி இருப்பாய்ங்க” ன்னு நினைச்சிட்டு ஆட்டோ ஸ்டாண்டுக்கு போனோம். ஒரு ஆட்டோக்காரன்கிட்ட போய் “கஷ்மீரி கேட் ஜானாஹே… கித்னா ஹே” ன்னு எனக்குத் தெரிஞ்ச இங்கிலீஷ்ல கேட்டேன். “சோ ருபய்ய்” ன்னு நம்ம கந்தசாமி காமெடில வர்ற “ஆர் ருபய்” ஸ்லாங்குல சொன்னான். அட நூறுரூவா தானா. பரவால்லையேப்பா.. அதுக்கு குறைஞ்சி யாரு வரப்போறான்னு படக்குன்னு ஏறி உக்காந்துட்டோம். வண்டி கிளம்பிருச்சி.

நா கூட என்கிட்ட ஆட்டோக்காரனுங்களப் பத்தி warn பன்ன பையன மனசுக்குள்ளயே திட்டிக்கிட்டு வந்தேன். இவ்வளவு நல்லவனுங்களா இருக்கானுங்களே.. இவனுங்கள எப்புடி குறை சொன்னான்னு நினைச்சிட்டு இருக்கும்போதே சடார்ன்னு ஆட்டோக்காரரு ப்ரேக்க போட்டு எங்க பக்கம் திரும்புனாரு. ஆட்டோகாருக்கு அர்ஜெண்ட்டா எதுவும் வந்துருச்சோன்னு  நாங்க நினைக்க அவரு எங்க கிட்ட “சார்.. இந்தப் பக்கம் போகமுடியாது.. நேத்து ராத்திரி இந்த ரூட்டுல உள்ள ஒரு ஹோட்டல்ல ரெண்டு டெரரிஸ்ட அரஸ்ட் பன்னிட்டாங்களாம். அதனால இந்த ரூட்ட ப்ளாக் பன்னிட்டாங்க. அதுனால சுத்தி தான் போகனும்” னான். “சரி போ” அப்டின்னோம். “போறதப் பத்தி ஒண்ணும் இல்லை.. ஆனா அந்த ரூட்டு கொஞ்சம் தூரம்.. ஒரு 250 ரூவா ஆகும் அப்டின்னான்” 

“ங்கொய்யால.. இதே கதைய சொல்வாய்ன்னுதாண்டா என்கிட்ட ஒருத்தன் சொல்லி அனுப்சான். கொஞ்ச நேரத்துல அவனத் தப்பா நெனைச்சிட்டேனேடா. எவ்வளவு நல்லவன் மாதிரி ஆக்ட் குடுத்துட்டான்யா” ன்னு நமக்கு தெரிஞ்ச “இதர் ஆவோ” ஹிந்திய வச்சி சண்டை போட்டு ஆட்டோ விட்டு இறங்குனப்புறம் ஒரு வழியா கொண்டு போய் விட்டான். இதுவும் ஒரு தடவ இல்லை. அதுக்கப்புறம் நா ஒரு நாலஞ்சி  தடவ போயிருப்பேன். அத்தனை தடவையும் “அதே டெயலர் அதே வாடகை” கதை தான். கொஞ்சம் கூட மாத்தாம.

சரி ஹரித்வார்ல லேண்ட் ஆயாச்சு. ஒவ்வொரு ஞாயித்து கிழமையும் ஹரித்வார், ரிஷிகேஷ்னு எல்லா சுத்தி பாக்க வேண்டிய இடமெல்லாம் காலியாருச்சி. ஆனா ஞாயித்து கிழமை மட்டும் இன்னும் நிறைய வந்துட்டே இருக்கு. எங்க… ஊருக்கு வர விட்டாதானே.. அங்கயே ஊரவச்சி அடிச்சா இப்டித்தான். அப்ப நாங்க ஒரு மூணு பேர் இருந்தோம். சரி இந்த வாரம் பக்கத்துல உள்ள தாஜ்மஹாலுக்கு பொய்ட்டு வந்துட்டா என்னன்னு ஒருத்தன் சொன்னான்? என்னது பக்கத்துலயா.. அடப்பாவிகளா.. தாஜூமஹாலுக்கும் ஹரித்துவாருக்கும் 500 குலோ மீட்டருடா.. அதுவும் உத்தர்காண்டு பஸ்ஸுல ஏறுனா ரெண்டு நாள் ஓட்டுவாய்ங்களேடா.. ”இது ஆவுறதில்லை” ன்னு தோணுனாலும் “சரி இப்ப போகலன்னா வேற எப்ப போகப்போறோம்னு ப்ளான போட்டு கிளம்பியாச்சு.

மொத நாள் நடு ராத்திரில ஹரித்வார்ல பஸ் ஏறி டில்லிக்கு வந்தாச்சு. டில்லிலருந்து ஆக்ராவுக்கு போற ட்ரெய்ன் டைமிங்க் எதுவும் நமக்கு செட் ஆகல. அதனால பஸ்லயே ஆக்ரா போக முடிவு பண்ணியாச்சு. அந்த டைம்ல ஒரு ப்ரைவேட் பஸ்ஸு ”தாஜ்மஹால் தாஜ்மஹால்”னு கூவிகிட்டு இருந்தாய்ங்க. தமிழ்நாட்ட தாண்டுனா, online la புக் பண்ணி போற private பஸ்ஸூங்களத் தவற, பஸ் ஸ்டாண்டுல கூவி கூவி கூப்டுற ப்ரைவேட் பஸ்ஸூங்களப் பாத்தாலே எனக்கு ஒரு அலர்ஜி. ஒருதடவ இதே மாதிரி, டில்லிலருந்து ஹரித்வாருக்கு கவர்மண்ட் பஸ்ஸூல ஏறாம “இப்ப எடுத்துருவோம் சார். பஸ்ஸூ ரெடியா இருக்கு” ன்னு ஒருத்தன் சொன்னத நம்பி ஒரு ப்ரைவேட் பஸ்ஸூல ஏறுனேன். காலையில ஏழே முக்காலுக்கு என்ன ஏத்திட்டு, மதியம் பன்னண்டே முக்காலுக்கு தான் டில்லிலருந்தே பஸ்ஸ எடுத்தாய்ங்க. அன்னிக்கு வெறியானவந்தான். அதுக்கப்புறம் எந்த ஊருக்கு போனாலும் உள்ள வச்சி நசுக்குனாலும் பரவால்லன்னு கவர்மண்ட் பஸ்ஸுல மட்டும்தான் ஏறுவேன்.

இப்ப வேற வழியில்லை. வண்டி ஸ்டார்ட் பண்ணி ரெடியா இருக்காய்ங்க. மூணு பேரும் ஓடிப்போய் ஏறிட்டோம். கொஞ்ச நேரத்துலயே வண்டி ஸ்டாண்டுலருந்து கிளம்பிருச்சி. பஸ்ஸுல போனா ஆக்ராவுக்கு ஒரு அஞ்சி மணி நேரத்துல போயிடலாம்னு யாரோ சொல்லிருந்தாய்ங்க. நாங்க ஏறுனது காலையில ஒன்பது மணி. “சரி அப்டின்னா வண்டி ரெண்டு மணிக்கு ஆக்ரா போயிரும். ரெண்டு மணி நேரம் தாஜ்மஹால சுத்துறோம். என்ஜாய் பன்றோம். அஞ்சி மணிக்கு ரிட்டன் பஸ் ஏறுறோம். பத்து மணிக்கு டெல்லிலருந்து ஹரித்வாருக்கு பஸ் ஏறுறோம். விடியகாலமெல்லாம் ஹரித்வார் ஹோட்டலுக்கு போய் கொஞ்ச நேரம் தூங்கிட்டு கம்பெனிக்கு போறோம். பக்கா ப்ளான்” ன்னு நினைச்சிக்கிட்டு ட்ராவல ஸ்டார் பன்னோம்.

அது வாங்கி பத்து வருஷமான, கடைசி கால கட்டங்கள்ல இருந்த ஒரு பழைய ப்ரைவெட் பஸ்ஸு. சில புஷ் பேக் ஒர்க் ஆகுது. சில பேரு புஷ் பன்னி பேக்குல போன சீட்டு திரும்ப வர மட்டேங்குது. சில புஷ் பேக் ஹேண்டில் கையோட வந்துடுது. ஆனா வண்டி ஃபுல்லு. டில்லிய தாண்டுனது தான் போதும். எங்க மூணு பேருக்கும் நடுவுல சீட் கிடைச்சிருந்துச்சி. ட்ரைவர் ஃபுல் ஃபோர்ஸூ. ஆக்ஸிலேட்டர்ல ஏறி நிக்கிறாரு. ப்ரேக்குன்னு ஒண்ணு இருக்கதையே மறந்துட்டாரு. செம ஸ்பீடு. “ஆஹா.. இந்த வேகத்துல போனா பன்னண்டு மணிக்கெல்லாம் போய் சேந்துடலாமே” ன்னு எங்களுக்கு ஒரே ஜாலி.

ரோட்டுல குண்டு, குழி, பள்ளம், மேடுன்னு எதையுமே கண்டுக்காகம NFS ல நாம கார் ஓட்டுற மாதிரி மின்னல் வேகத்துல வண்டி போயிட்டு இருக்கு. போயிட்டே இருக்கப்போ அதே ஸ்பீடுல ஒரு ஸ்பீடு பிரேக்கர் விட்டு ஏத்துனாறு பாருங்க… எல்லாரும் உக்காந்தவனத்துக்கே கிட்டத்தட்ட பஸ்ஸோட ரூஃப போய் தொட்டுட்டு வந்தோம். நல்லவேளை சேஃப் லேண்டிங்க் தான். அப்பாடா.. ஒண்ணும் ஆகலன்னு நினைக்கும் போது தான் பின் சீட்டுலருந்து எவனோ சத்தம் போட்டான்.


திரும்பி பாத்தா… ஒருத்தன் தலையிலருந்து தக்காளிச்சட்னி ஒழுகி கழுத்து வரைக்கும் ஊத்திருந்துச்சி. ”இய்ங்க பாருய்யா.. இட்லிய வாங்கி வண்டிலயா திம்பாய்ங்க.. கடையிலயே திண்ணுட்டு வர வேண்டியது தானே.. இப்ப பாரு சட்னி தெறிச்சி மூஞ்செல்லாம் எப்டி ஆயிருச்சின்னு” நினைச்சா சட்னி பம்பு செட்டுமாதிரி ஊத்திக்கிட்டே இருக்கு. அடப்பாவிகளா.. மண்டை பொளந்துருச்சா.. ஸ்பீடு ப்ரேக்கர்ல விட்டப்போ இவன் ரொம்ப ஸ்பீடா போய் மேல உள்ள கம்பில இடிச்சிக்கிட்டான் போல. மேல ஓப்பன் ஆயிருச்சி. தலையில கைய வச்சிக்கிட்டே எழுந்து வந்து ட்ரைவரையும் கண்டக்டரையும் நம்ம சீமான் மாதிரி “த்தா.. ம்மா” ன்னு ஹிந்தில திட்டுறான். மதிக்கவே இல்லையே.. ட்ரைவரும் ஆக்ஸிலேட்டர்ல வச்ச கால் வச்சபடியே இருக்கு. வண்டி அதே ஸ்பீடுல போயிட்டு இருக்கு. கண்டக்டர் அப்டி ஒரு சம்பவம் நடந்த மாதிரியே ரியாக்சன் குடுக்காம ரெகுலராப் போ ரெகுலராப் போன்னு போய்ட்டே இருக்கான்.

இவனும் சத்தம் போட்டு பாத்துட்டு மண்டையப் புடிச்சிக்கிட்டே உக்காந்துட்டான். ஒரு ரெண்டரை மணி நேரம் போனப்புறம் ஒரு கடையில ஒதுக்குப் புறமா நிறுத்துனாய்ங்க. என்னய்யா இன்னும் அரை மணி நேரத்துல தாஜ் மஹாலே வந்துரப்போகுது இப்ப எதுக்கு ஹால்ட்டுன்னு எங்களுக்கு ஒரே கடுப்பு. சரின்னு இறங்கி அங்க ரெண்டு மூணு ஃபோட்டோவ எடுத்துகிட்டு வெய்ட் பண்ணோம். அப்பவே வானம் சற்று மேக மூட்டத்துடன் காணப்பட்டது. கிட்டத்தட்ட ஒரு இருபது நிமிஷம் அங்கயே நிறுத்தி போட்டாய்ங்க. இந்த கேப்புல மண்டை ஓப்பன் ஆனவன் பக்கத்துல எதோ ஒரு ஆஸ்பிட்டல் போய் கட்டு போட்டுகிட்டு வந்துட்டான்.

மறுக்கா பஸ்ஸ எடுத்து ஓட்ட ஆரம்பிச்சாய்ங்க. பாரபட்சம் பாக்காம அதே ஓட்டு. எங்களுக்கு சைடுல உள்ள ரெண்டு சீட்டுல ஒரு அம்மா ரெண்டு குழந்தைங்கள வச்சிட்டு உக்காந்துருந்துச்சி. பொண்ணுக்கு 5 வயசு இருக்கும் பையனுக்கு ரெண்டு வயசு கூட இருக்காது. அந்த பொண்ணு பஸ்ஸுலயே முன்னாடி சீட்டுல உக்கார்ந்திருந்த அவங்க அப்பாட்ட போறது திரும்பி வாராததுன்னு விளையாண்டுகிட்டு இருந்துச்சி. இந்தம்மா அந்த ரெண்டு வயசு குழந்தையை மடில வச்சிக்காம அது ஒரு சீட்டுல உக்கார்ந்துகிட்டு அந்த சின்னக் குழந்தைய இன்னொரு சீட்டுல உக்கார வச்சிருந்துச்சி. கையை அணைச்சி புடிச்சிக கூட இல்லை.

பத்து நிமிஷம் இருக்கும். நம்ம ஓட்டுனர் அடுத்த ஸ்பீடு ப்ரேக்கர்ல விட்டு ஏத்த, தனியா உக்கார்ந்திருந்த குழந்தை சீட்டுலருந்து தவறி குப்புற கீழ விழுந்துச்சி. தூக்குனா மூக்குலருந்து கொட கொடன்னு ரத்தம் கொட்டுது. குப்புற விழுந்துல மூக்கு எழும்பு உடைஞ்சிருச்சி போல.  ஆத்தாடி என்னய்யா ஒரே ரத்தக்காவலா வாங்குது. முழுசா தாஜ்மஹால் போகமுடியாது போலயேன்னு அப்பத்தான் அடிவயிற்றில எங்களுக்கு சிறிய மாற்றம் ஏற்பட்டுச்சி. அடுத்த ஸ்டாப் வந்தவுடனே அந்த குழந்தைய இறக்கிட்டு அவங்க இறங்கிட்டாங்க.

மழை புடிச்சிது. சாதாரணமா பெய்யல. பேய் மழைன்னு சொல்லுவாய்ங்களே.. அப்பிடி பெய்யிது. எதுக்க என்ன வருதுன்னு தெரியாத அளவு. வைப்பர வச்சி கண்ணாடிய தொடச்சா, வைப்பர் ரெண்டாவது ரவுண்ட்டு வர்றதுக்குள்ள தண்ணி ரொம்பிடுது. ஆனாலும் எங்காளு நிறுத்தலையே… அதே ஸ்பீட மெய்ண்டெய்ண் பண்ணான். ரைட்டு இன்னிக்கு நமக்கு “தாத்தா தெரிஞ்சிருவாரு போல” ன்னு உட்கார்ந்திருந்தோம். வண்டி போகுது போகுது போகுது போய்ட்டே இருக்கு. டேய் எங்கடா போறீங்க. இன்னும் ரெண்டு குலோ மீட்டர்ல எங்க ஊரே வந்துருமேடா. இன்னும் தாஜ்மஹால காணுமே. அந்த அஞ்சி மணி நேரத்துல தாஜ்மஹால் போயிடலாம்னு சொன்னவன் அப்ப கெடைச்சிருந்தான்னா கும்மிருப்பேன்.

காலையில ஒன்பது மணிக்கு ஏறுன எங்கள சாயங்காலம் அஞ்சி மணிக்கு ஆக்ராவுல கொண்டு போய் இறக்கி விட்டாய்ங்க. வேக வேகமா உள்ள போனோம். ஆ..ஆ தாஜ்மஹாலு.. தாஜ்மஹாலு… நம்மளும் வந்துட்டோம். நாம தாஜ்மஹால பாத்தோம்ங்குறத விட நம்ம தாஜ்மஹால பாத்துட்டோம்னு அடுத்தவன நம்ம வைக்கிறது தான நமக்கு முக்கியம். வரலாறுல அத பதிக்கனுங்குறதுக்காக அங்கனையே நின்ன ஒரு ஃபோட்டோ கிராஃபர வச்சி ஆளுக்கு ஒரு தனி ஃபோட்டோ எடுத்துக்கிட்டு, அத ப்ரிண்ட் போட்டு வாங்கிக்கிட்டு ஒன்பது மணிக்கு தான் அங்கருந்து கிளம்புனோம்.


விடியக்காலம் திரும்ப ஹரித்துவாருக்கு வந்துடலாம்ன்னு நாங்க போட்ட ப்ளானு சிறப்பா வேலை செஞ்சதால, மறுநாள் மதியம் பதினொரு மணிக்கு தான் திரும்பி வர முடிஞ்சிது. 


Tuesday, April 14, 2015

பாலிருக்கீ.. பழமிருக்கீ!!!


Share/Bookmark
வழக்கம்போல அன்னிக்கும் நாலு தடவ அலாரத்த மாத்தி மாத்தி வச்சி புரண்டு புரண்டு படுத்து அப்பிடி இப்புடின்னு ஏழு மணிக்கு கண்ணத்தொறந்து தமன்னா முகத்துல முழிச்சி எழுந்தேன். என்னாடா வாழ்க்கை இது டெய்லி பல்லு வெளக்கனும் குளிக்கனும்னு, ஆபீஸ் போகனும்ன் சலிச்சிக்கிட்டே பல்ல வெளக்கிட்டு பாத்ரூம் பக்கம் போனேன். ஃபாரின் போகும்போது லைட்டா கலர் கொஞ்சம் தூக்கலா இருந்துச்சி. “சென்னை சரியான சூடு” ன்னு நினைச்சிகிட்டே குளிச்சேன். சரி ஆபீஸ் போறதுக்கு முன்னால சூட்டை கொஞ்சம் குறைச்சிட்டு போவோம்னு ஒரு கை வெந்தையத்த எடுத்து கையில வச்சி, ”சரிக்க் கமப்ப் பதந்நீசே… கபக் கபக் கப ஜலசே” ன்னு DSP பாட்ட பாடிக்கிட்டே கபக்குன்னு வாயில போட்டு தண்ணிய குடிச்சிட்டு கிளம்புனேன்.

டூவிலர எடுத்துகிட்டு கரெக்டா ”ஏழரை” மணிக்கு வீட்டுலருந்து ஃஆபீஸூக்கு கிளம்புனேன். (நோட் த டைம் யுவர் ஹானர்). திருவொற்றியூர்லருந்து ஆஃபீஸ் கரெக்டா 18 கிலோமீட்டர். அதிகபட்சம் அரை மணி நேரத்துல போயிடலாம். அதுவும் பர்மா நகர்லருந்து எண்ணூர் வரை போற பீச் ரோட்டுல வண்டி ஓட்டுற சுகமே தனி. Roadrash ல கடல் ஓரத்துல போற  மாதிரி ஒரு track இருக்கும். எனக்கு ஒவ்வொரு தடவ பீச் ரோட்டுல எண்ணூர் போகும் அதே ஞாபகம் தான் வரும். அதுவும் சாயங்காலம் வரும் போது, கடல் அலை அடிச்சி அந்த சாரல் பைக் ஓட்டிக்கிட்டு போற நம்ம மேல படுறதும், கடல் view வும் செம்ம சூப்பரா இருக்கும். 

“வந்த நாள் முதல் இந்த நாள் வரை வானம் மாறவில்லை” ன்னு பாட்ட பாடிக்கிட்டே வண்டில போய்கிட்டு இருக்க, லேசா இடுப்ப பின்னாலருந்து யாரோ புடிச்சி கிள்ளுற மாதிரி இருந்துச்சி. எவண்டா பையன் இடுப்ப புடிச்சி கிள்ளுறதுன்னு திரும்பி பாத்தா யாரையும் காணும். என்ன இது அடி வயிற்றிலே சிறிய மாற்றம்? காலைக்கடனெல்லாம் சிறப்பா செலுத்திட்டோமே அப்புறம் என்னன்னு யோசிக்கும் போதே கிள்ளுறது அதிகமாயிருச்சி. மொத நாள் கண்டதுகடியத திண்ணுட்டா மறு நாள் லேசா வயித்த வலிக்கும். ஆனா கொஞ்ச நேரத்துல சரியாப் போயிறும். 

அதுமாதிரி தான் இதுவும்னு நினைச்சி வண்டிய நிறுத்தாம ஓட்டிக்கிட்டே இருக்க, ஒரு கிலோமீட்டர் கூட தாண்ட முடியல. தாழக்குப்பம் ஓரமா வண்டிய நிறுத்திட்டு, வயித்த புடிச்சிக்கிட்டே ஒரு பெட்டிக்கடை ஓரமா உக்காந்துட்டேன். நிமிர்ந்து கூட நிக்க முடியல. ஒரு வார்த்தை பேச கூட முடியல. அவ்வளவு வலி. ஒரு மாதிரி கஷ்டப்பட்டு அந்த பெட்டிக்கடை அண்ணன்கிட்ட “அண்ணேன் இங்க பக்கத்துல ஹாஸ்பிட்டல் எதாவது இருக்கா” ன்னு கேட்க, “அடுத்த பில்டிங்கே ஹாஸ்பிட்டல்தான்பா” ன்னாரு.

வெறும் இருபது அடி நடந்தா ஹாஸ்பிட்டலுக்குள்ள போயிடலாம். ஆனா என்னால ரெண்டு அடி கூட எடுத்து வைக்க முடியல. ரோடு ஓரமா உள்ள அந்த கடை திண்டுலயே உக்காந்துகிட்டு, என்னோட ரூம்மேட்டுக்கு கால் பண்ணேன். கால அவன் எடுக்கல. ஆனா ஆண்டவன் புன்னியத்துல அவன் எனக்கு பின்னாலதான் பைக்குல வந்துருக்கான். நா ஓரமா உக்காந்துருக்கத பாத்து வண்டிய நிறுத்திட்டு “என்னாச்சி சிவா” ன்னு கேக்க என்னால “வயித்து வலி” ன்னு முழுசாக் கூட சொல்ல முடியல. கைத்தாங்கலா அந்த ஹாஸ்பிட்டல் உள்ள அழைச்சிட்டு போனான்.

ஹாஸ்பிட்டல் உள்ள போனதும் ரெண்டு நர்ஸ் இருந்தாங்க. அவங்ககிட்ட வயித்து வலின்னு சொன்னதும், “முன்னால மட்டும் வலிக்குதா இல்லை வலி பின்னால வரைக்கும் போகுதா?” னாங்க. பின்னால வரைக்கும் போகுதுங்கன்னேன். சரி படுங்கன்னு சொல்லிட்டு டாக்டர கூப்பிட பொய்ட்டாங்க. அதுக்குள்ள வலி எக்கச்சக்கமாகி என்னை அறியாமையே “அய்யோ அம்மா” ன்னு கத்த ஆரம்பிச்சிட்டேன். டாக்டரம்மா வந்து பாத்துட்டு, ஸ்டோன் மாதிரி இருக்கும்னு நினைக்கிறேன்னு நர்ஸுங்கள பாத்து எதோ ரெண்டு பேர் சொல்ல, ரெண்டு நிமிஷத்துல ரெண்டு ஊசிய போட்டாங்க. ட்ரிப்ஸ் போட்டா கொஞ்சம் பெட்டரா இருக்கும்னு டாக்டரம்மா சொல்ல, ட்ரிப்சையும் மாட்டி ஏத்த ஆரம்பிச்சாங்க.

வலி கொஞ்சமும் குறைஞ்சபாடில்ல. போதாக்குறைக்கு ட்ரிப்ஸ் ஏறிக்கிட்டு இருக்கும்போதே அதுல ரெண்டு ஊசிய சேத்து வேற போட்டாங்க. ஒண்ணும் வேலைக்கு ஆகல. 8 மணிக்கு ஹாஸ்பிட்டல் உள்ள வந்த எனக்கு, 9 மணி ஆகியும் வலி கொஞ்சமும் குறையல. “அய்யயோ.. எதாவது மயக்க ஊசி இருந்தா போடுங்களேன்.. அய்யயோ தூக்க ஊசி இருந்தா அதையாச்சும் போடுங்களேன்” ன்னு என்னென்னவோ கத்துனேன். வானத்துல செல்லாத்தாவும், நாரதரும் கைகுலுக்கிட்டு போறது கண்ணுல தெரிய ஆரம்பிச்சிருச்சி. இன்னிக்கு உனக்கு க்ளைமாக்ஸ்தாண்டின்னு உள்ளுக்குள்ள நினைச்சிக்கிட்டேன்.

“சார்.. எங்ககிட்ட இருக்க எல்லா pain கில்லரும் போட்டாச்சி. இதுக்கு மேலயும் வலி நிக்கலன்னா நீங்க ஸ்கேன் பன்னி தான் பாக்கனும்னு ஸ்கேனுக்கு எழுதிக்குடுத்தாங்க. அதுவும் பக்கத்துலயெல்லாம் ஸ்கேன் பண்ணக்கூடாதாம். அவங்க செட்டிங்க் போட்டு வச்சிருக்க ராயபுரம் ibeam ல தான் ஸ்கேன் பன்னனும்னு வேற சொல்லிட்டாங்க. அப்புறம் ஹாஸ்பிட்டல் வெளியவே  இருந்த ஆட்டோ எடுத்துகிட்டு ஆட்டோவுலயே படுத்துக்கிட்டு ராயபுரம் போய் சேர மணி பதினொன்னு. போனா 12 மணிக்கு தான் ஸ்கேன் பன்ன முடியும்னு சொல்லி ஓரமா படுக்க வச்சிட்டாய்ங்க. வலி ஒரு இம்மி கூட குறையல. என்னோட பயமெல்லாம் ஒரு வேளை அப்பண்டிக்ஸா இருக்குமோ? வலி தாங்கமுடியலையே ஒரு வேளை அப்பண்டிக்ஸ் வால்வு பெருசாகி வெடிச்சிருக்குமோன்னு தான்.

ஒரு மணிக்கு ஸ்கேன் பண்ணி முடிச்சி, அந்த ரிப்போர்ட்ட எடுத்துகிட்டு திரும்ப பேங்ளூருக்கு நேர் எதிர இருக்க எண்ணூருக்கு போனா விடிஞ்சிரும்னு நினைச்சிகிட்டு, பக்கத்துலயே அவங்க சொன்ன இன்னொரு யூராலஜி டாக்டர்கிட்ட போனோம். ரிப்போர்ட்ட பாத்த உடனே “இது ஸ்டோனுங்க.. 5mm. சின்னதா தான் இருக்கு. கரைச்சிடலாம்” ன்னாரு. “ஐ சின்ன கல்லு பெத்த லாபம்”. அப்புரம்தான் அப்பாடா சேகர் பொழைச்சிருவாண்டா ன்னு எனக்கு ஓரளவு நம்பிக்கையே வந்துச்சி. அந்த ஹாஸ்பிட்டல்ல திரும்ப 2 ட்ரிப்ஸும், 5 இன்ஞ்ஜெக்‌ஷனும் போட்டப்புறம் லேசா வலிய மறந்து தூங்குனேன். காலையில 7.45 க்கு வந்த வலி கிட்டத்தட்ட மதியம் 3 மணிக்கு தான் நின்னுச்சி.

அப்புறம் ரெண்டு வாரத்துக்கு மருந்து மாத்திரைங்கள வாங்கிக்கிட்டு ஒரு வாரம் வீட்டுல ரெஸ்ட போட்டுட்டு இப்பதான் ஆஃபீஸ் வந்துருக்கேன். கல்லு கரைஞ்சிதா இல்லை கல்லு மாதிரி அசையாம அங்கயே இருக்கான்னு அடுத்த ஸ்கேன் எடுத்து பாத்தாதான் தெரியும்.
இந்த கல்லு பெரும்பாலும் ஆண்களுக்கு தான் அதிகம் வருதாம். ஒழுங்கான உணவு முறை இல்லாததாலயும், தண்ணி கொஞ்சமா குடிக்கிறதாலயும் வர்ற எஃபெக்ட்டு தான் இது. வலது பக்க முன் வயிற்று பக்கத்துலருந்து பின் பக்கம் வரைக்கும் வலிச்சா கண்டிப்பா அது இந்த கல்லோட வேலையாத்தான் இருக்கும். இல்லை அடிக்கடி இடுப்ப ஒட்டி முதுகு பக்கமா லேசா வலிக்கிற மாதிரி இருந்தா, அதுவும் இந்த கல்லோட அறிகுறிதான். உடனே செக் பண்ணிக்கிறது உசிதம்.

அதுவும் இந்த சம்மர் சீசன் தான் இந்த கல்லுக்கு சீசன் போல. நிறைய பேருக்கு வருதாம். அதனால நிறையா தண்ணியடிங்க ச்சீ தண்ணிகுடிங்க. வாழைத்தண்டு, முள்ளங்கிய அதிக அளவுல சாப்பாட்டுல சேர்த்துகுங்க. இல்லைன்னா நீங்களும் “பாலிருக்கீ.. பழமிருக்கீ.. என் கிட்னீல கல் இருக்கீ” ன்னு பாட்டுப் பாட வேண்டிய நிலமை வந்தாலும் வந்துடும்.

ஒரு வேளை வந்துட்டா, ஒண்ணும் பெரிய விஷயம் இல்லை. சின்னதா இருந்தா மாத்திரை, பெருசா இருந்தா லேசர்ன்னு ட்ரீட்மெண்ட் நிறைய இருக்கு. ஆனா மொத மொதல்ல வலி வர்றப்போ நரகத்த கண்ணு முன்னால கொண்டு வந்து நிறுத்திடும். இந்த பதிவ இவ்வளவு லென்த்தா சொன்னது கொஞ்சம் அருக்குற மாதிரி இருந்துருக்கும். ஆனா அந்த வலி வந்தா எவ்வளவு கடியா இருக்கும்னு சொல்லத்தான் எல்லாத்தையும் வெளாவாரியா எழுதுனேன். யாருக்காவது ரத்தம் வந்திருந்தா மன்னிச்சிடுங்க.


அதனால நா இன்னா சொல்ல வந்தேன்னா, “கொஞ்சம் உசாரா இருங்க நண்பர்களே!!!”. 


Friday, November 28, 2014

பாக்ஸர் மனோகரன்!!!


Share/Bookmark
மூன்று மாதம் முன்பு  ஷிரிடி சாய் பாபாவின் தரிசனத்திற்காக நானும் என் அலுவலக நண்பர் ஒருவரும் வரிசையில் நின்றுகொண்டிருந்தோம். வரிசை நகராமல் நிற்கவே நாங்கள் வெகுநேரம் அலுவலகக் கதைகளைப் பற்றி பேசிக்கொண்டிருந்தோம், சற்று நேரம் கழித்தே உணர்ந்தோம் எங்களை அருகிலுருக்கும் வரிசையிலிருந்த நபர் நெடுநேரமாக கவனித்துக் கொண்டிருக்கிறார் என்று. நாங்கள் பேச்சை நிறுத்திவிட்டு அவரை பார்க்க, “என்ன சார் எந்த ஊரு நீங்க?” என்று அவர் கேட்க குதூகலமானோம். அட நம்மூருதான். ”நாங்க சென்னைலருந்து வர்றோம். நீங்க எந்த ஊர்?” என்றவுடன்

நா வேலூர் சார். இப்போ பெங்களூருல செட்டில் ஆயிட்டேன். இந்திய பாக்ஸிங் டீம் கோச்சா இருக்கேன்என்று அவர் சாதாரணமாகச் சொன்னாலும் எங்களுக்கு டக்கென்று தூக்கிவாரிப்போட்டது.

இந்தியன் டீமுக்கா? ”என்று கேட்டு வியந்த எங்களுக்கு சிறிது நேரம் அவரிடம் பேசக்கூட எங்களுக்கு மனதில்லை. பிறகு அவர் அவுரங்காபாத் கேம்பிலிருந்து மாணவர்களுடன் கோவிலிற்கு வந்திருப்பதாக கூறி பின்னாலிருந்து 19 மாணவர்களை அறிமுகம் செய்தார். சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்த போது வரிசை நகர ஆரம்பித்தது. அவரின் அலைபேசி எண்ணையும், இரவில் ஒரு இருபது நிமிடம் பேச அனுமதியையும் பெற்றுக்கொண்டு நகர்ந்தேன். அன்று இரவு அவருடன் நடந்த தொலைபேசி உரையாடலின் எழுத்து வடிவம் இதோ.

முதலில் மனோகரன் அவர்களைப் பற்றிய ஒரு சிறிய முன்னுரை:

வேலூர் மாவட்டத்தில் பிறந்த மனோகரன் அவர்கள் சிறுவயதிலேயே இந்திய ராணுவத்தில் சேர்ந்தார். மனோகரன் அவர்களின் தந்தையும் ஒரு ராணுவ வீரர் என்பது குறிப்பிடத்தக்கது. ராணுவத்தில் சேர்ந்த மனோகரன், ராணுவ வீரர்களுக்கிடையே நடைபெறும் பாக்ஸிங் எனப்படும் குத்துச்சண்டை போட்டிகளில் கலந்து கொண்டு தீவிரப் பயிற்சியில் சிறந்த பாக்ஸிங் வீரரானார். பல்வேறு பதக்கங்களைக் குவித்தார். தொடர்ந்து 5 முறை பாக்ஸிங்கில் இந்திய அளவில் சாம்பியனாகத் திகழ்ந்தார். இந்திய அளவிலான போட்டிகளில் மட்டுமல்லாது, உலக அரங்கில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளிலும் கலந்து கொண்டு பதக்கத்தைக் குவித்தவர்1984ம் ஆண்டு விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதுகளில் ஒன்றான அர்ஜூனா விருதைப் குடியரசுத் தலைவர் ஜியானி ஸாயில் சிங் அவர்களிடமிருந்து பெற்றார். கிரிக்கெட் வீரர் திலீப் வெங்சர்கார் அவர்களும் அதே ஆண்டில் அர்ஜூனா விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

1987ம் ஆண்டு இந்த பாக்ஸிங் அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட மனோகரன், தொடர்ந்து 28 ஆண்டுகளாக பயிற்சியாளராகத் தொடர்கிறார். “இந்திய அணியின் சிறந்த பயிற்சியாளர்களில் ஒருவர்என பலராலும் பாராட்டப்பெற்ற மனோகரன், 2000மாவது ஆண்டில் ராணுவத்திலிருந்து ஓய்வு பெற்றார். இந்திய ஆடவர் மற்றும் மகளிரணி பயிற்சியாளராக விளங்கிய மனோகரன் கடந்த சில வருடங்களாக இந்திய அணியின் 19 வயதிற்குட்பட்ட ( under 19) வீர்ர்களின் பயிற்சியாளராக தொடர்கிறார்.
அர்ஜூனா விருது உள்ளிட்ட நான்கு உயரிய விருதுகளை வென்ற மனோகரன் இந்த வருடம் பயிற்சியாளர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதானதுரோனாச்சார்யாவிருதிற்கு பரிந்துரைக்கப் பட்டிருக்கிறார்
(பதிவின் நீளம் கருதி மனோகரன் அவர்களைப் பற்றி வெகு குறைவாகவே கூறியிருக்கின்றேன்The Hindu நாளிதழ் மனோகரன் அவர்களை பற்றி விரிவான ஒரு பக்கக் கட்டுரை ஒன்றை ஒரிரு மாதங்களுக்கு முன் வெளியிட்டுள்ளது)

மனோகரன் அவர்களிடம் கேட்கப்பட்ட சில கேள்விகளும் அதற்கு அவரின் பதிலும் இதோ.

1. பாக்ஸிங்ல உங்களுக்கு எப்படி ஆர்வம் வந்தது? பாக்ஸிங் வீரராக வேண்டும் என்ற எண்ணம் எப்போது உதித்தது?
உண்மைய சொல்லனும்னா நா ஆர்மில சேர்றதுக்கு முன்னால வரைக்கும் வாலிபால் பாத்தது கிடையாது, ஹாக்கி ஸ்டிக் பாத்தது கிடையாது  ஏன் Foot Ball கூட பாத்தது கிடையாது. எங்களுக்குத் தெரிஞ்ச ஒரே விளையாட்டு இந்த ஸ்கூல்ல ரிங் வச்சி ஆடுறது தான். ஆர்மில சேர்ந்தப்புறம் தான் ஒவ்வொன்னா கத்துகிட்டேன். அப்போ மத்த விளையாட்டுக்கள விட பாக்ஸிங் எனக்கு ரொம்ப பிடிச்சிருந்துச்சி. என் கவனத்த முழுசா பாக்ஸிங்ல திருப்பிட்டேன்.

2. உங்களுக்கு இந்திய அணிக்கு பயிற்சியாளரா ஆகுற வாய்ப்பு எப்படி கிடைத்தது?
NIS (Certificate Course in Sports Coaching) ன்னு ஒரு கோர்ஸ் இருக்கு .கோச் ஆகனும்னா கண்டிப்பா அந்த கோர்ஸ் முடிச்சாகனும்அந்த கோர்ஸ்ல நமக்கு நிறைய விஷயம் கத்துக்கொடுப்பாங்க. ஒரு ஒண்ணுமே தெரியாத புது ப்ளேயருக்கு எப்படி பயிற்சியளிக்கனும், நல்லா சீசனான ஒரு ப்ளேயருக்கு எப்படி பயிற்சியளிக்கனும், வீர்ர்களுக்கு எதாவது அடி பட்டுட்டா நாம என்ன செய்யனும், நெருக்கடியான தருணங்கள எப்படி சமாளிக்கனும்னு நிறைய சொல்லித் தருவாங்க. அது மட்டுமில்லாம நம்மோட performance, நம்மால வீர்ர்களுக்கு ஒழுங்கா பயிற்சி குடுக்க முடியுமா? நம்முடைய பழைய ரெக்கார்ட்ஸெல்லாம் என்ன? இப்படி ஒவ்வொரு விஷயத்தையும் பாத்து தான் தேர்ந்தெடுப்பாங்க. என்னைப் பொறுத்தவரைக்கும் நா அந்தக் கோர்ஸ் முடிச்ச மூணாவது நாளே நா இந்திய அணி பயிற்சியாளராக தேர்வு செய்யப்பட்டேன்

3. நீங்க இதுவரைக்கும் எந்தெந்த நாட்டுக்கு போயிருக்கீங்க? எந்த நாட்டுல பாக்ஸிங்குக்கு ஆதரவு அதிகம்?
நான் கிட்டத்தட்ட எல்லா நாடுகளுக்குமே போயிருக்கேன். பாக்ஸிங்குக்கு ஆதரவு அதிகம்னு பாத்தா க்யூபா தான். அங்க பாக்ஸிங் தான் மெயின் விளையாட்டே.

4.உங்களால பயிற்றுவிக்கப்பட்ட மாணவர்கள் இதுவரை இண்டர்நேஷனல் லெவல்ல எத்தனை பதக்கங்கள் வாங்கியிருப்பாங்க?
சார் உண்மைய சொல்லனும்னா எனக்கே கவுண்ட் மறந்து போச்சு கிட்டத்தட்ட எல்லா tournament லயும் பதங்களை ஜெயிச்சிருக்காங்க. இண்டர்நேஷனல் லெவல்ல ஒரு 150 பதக்கங்களுக்கு வாங்கிக் கொடுத்திருக்கேன் என்று அவர் கூறியதைக் கேட்டதும் எனக்கு தலை ஒரு நொடி கிர்ர்ர் என்றது.



5. உங்களுடைய மாணவர்களை அதாவது இந்திய அணிக்கான வீர்ர்களை எப்படி தேர்வு செய்கிறீர்கள்?
ஒவ்வொரு வருஷமும் தேசிய அளவிலான போட்டிகள் மாநிலங்களுக்கிடையே நடக்கும். அதுல செலக்ஷன் கமிட்டில ஒரு மூணு பேர் இருப்பாங்க. அதுல நானும் ஒருவர். அந்த போட்டிக்கள்ல ஜெயிக்கிற நான்கு பேர் அதாவது தங்கம் ஒருவர், வெள்ளி ஒருவர், வெண்கலம் இருவர் என்று பதக்கங்கள் வெல்லும் நால்வரும் இந்திய அணிக்கான பயிற்சிக்கு தெரிவு செய்யப்படுவாங்க. இது மாதிரி 10 ரவுண்டுலருந்து மொத்தம் 40 மாணவர்களை பயிற்சிக்கு தேர்ந்தெடுப்போம். பதக்கம் வாங்குறவங்க மட்டுமில்லாம, எங்களுடைய பார்வையில் வேறு யாராவது சிறப்பாக விளையாடியிருந்தால் அவர்களையும் கூட பயிற்சிக்கு தெரிவு செய்வோம்

6. நீங்க பயிற்சிக்காக தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்கள் வருடத்தில் எத்தனை நாட்கள் பயிற்சி எடுத்துக் கொள்ள வேண்டும்?
அரசாங்கம் ஒரு வருஷத்துக்கு ஒரு வீர்ருக்கு 180 நாட்கள் பயிற்சி நாட்களாக ஃபிக்ஸ் பண்ணி வச்சிருக்கு. ஒரு வேளை அதிகப்படியான tournament இல் கலந்து கொள்ள வேண்டியிருந்தா, ஒரு 20 நாட்கள் அதிகமாக பயிற்சி எடுத்துக் கொள்ள அனுமதி வாங்கிக் கொள்ளலாம்.

7. பயிற்சி எடுத்துக்கொள்ளும் வீரர்களுக்கு ஏதேனும் மாதாந்திர ஊதியம் வழங்கப்படுகிறதா?

இது ஒரு நல்ல கேள்வி. சம்பளம்னு எதுவும் தனியா வீரர்களுக்கு கொடுக்கப் படுவதில்லை. ஆனால் ஒரு வீரர் Asian boxing la ஒரு மெடல் எடுத்தா ஒரு குறிப்பிட்ட தொகையை மத்திய அரசாங்கம் அந்த வீர்ருக்கு வழங்கும்அதே போல ஒலிம்பிக்ஸ்ல ஒரு மெடல் எடுத்தா ஒரு தொகை அந்த வீரருக்கு வழங்கப்படும். வீரர்கள் வெல்லும் போட்டிகளுக்கேற்ப மத்திய மாநில அரசுகளிடமிருந்து பணப்பரிசு கிடைக்கிறதுஅதுமட்டுமில்லாம அரசு வேலை வாய்ப்புகள்ல குறிப்பா ரயில்வே துறை, காவல் துறை தபால் துறைகள்ல வீரர்களுக்கு அரசாங்கம் முன்னுரிமை அளிக்கிது.

8. சரி சார். ஆனா எல்லா வீரர்களும் மெடல் எடுப்பாங்கன்னு சொல்ல முடியாது. மேலும் கிட்டத்தட்ட ஆறு முதல் எட்டு மாதங்கள் பயிற்சிக்காகவே வீர்ர்கள் செலவளிக்கிறார்கள். அந்த சமயங்கள்ல அவர்களுக்கோ அல்லது அவர்களின் குடும்பங்களைப் பார்த்துக் கொள்ளவதற்கோ எதேனும் மாதாந்திர ஊதியம் கொடுக்கப் படுகிறதா?

அப்படி எதுவும் இல்லை. வீரர்களோட உணவு, தங்கும் வசதி போக்குவரத்தை அரசாங்கம் கவனித்துக் கொள்ளும். மற்றபடி சம்பளமெல்லாம் எதுவும் இல்லை.

9. உங்களையும் வீரர்களையும் அரசாங்கம் எப்படி பார்த்துக் கொள்கிறது? அதாவது உங்கள் பயிற்சிக்கு தேவையான வசதிகளை செய்து தருகிறதா?
நாங்க பயிற்சி எடுப்பதற்காகவே மஹாராஷ்டிர மாநிலம் அவுரங்காபாத்ல அனைத்து வசதிகளுடன் கூடிய தனி இடத்தை அரசாங்கம் ஒதுக்கியிருக்கிறது. வீரர்களுக்குத் தேவையான practice kits, playing kits அனைத்தும் அரசாங்கம் கொடுத்திருக்கிறது. அதுமட்டுமில்லாம குளிர்சாதன வசதியுடன் கூடிய தங்குமிடம் மற்றும் போக்குவரத்திற்கு வீர்ர்கள் ரயிலில் 2nd AC யில் பயணம் செய்து கொள்ள அனுமதியும் அளிக்கப்பட்டிருக்கிறது..

 10. உங்களுடைய வாழ்க்கையில் மறக்க முடியாத தருணம் அல்லது நீங்கள் அடிக்கடி நினைத்து பெருமைப்படக் கூடிய தருணம் என்று எதாவது இருக்கிறதா?
1981ல் ஆஸ்திரேலியாவில் பிரிஸ்பெயின் நகரில் நடந்த போட்டியில, எனக்கு கையில பலமா அடிபட்டு இருந்தப்போ கூட நா கோல்டு மெடல் ஜெயிச்சிட்டு வந்தேன். மாஸ்கோ ஒலிம்பிக்ஸ்ல குவார்ட்டர் ஃபைனல் வரைக்கும் பொய்ட்டு லாஸ் ஆயிட்டேன். இது ரெண்டும் தான் இப்பவும் நா அடிக்கடி நினைச்சி பாக்குற சம்பவங்கள்

11. நம்ம மக்கள்கிட்ட இந்த பாக்ஸிங் அப்டிங்குற விளையாட்டு எந்த அளவு ரீச் ஆயிருக்கு சார்?
முன்னால இருந்தத விட இப்போ சவுத் சைடுல பெரும்பாலான கிராமங்கள்ல கூட பாக்ஸிங்ன்னா என்னன்னு தெரியிது. பாக்ஸிங் விளையாடுறதில்லை, அந்த விளையாட்டப் பத்தி அதிக அறிவு இல்லையின்னாலும் பாக்ஸிங்ன்னா என்னன்னு மக்களுக்கு இப்போ தெரியிது. பஞ்சாப், ஹரியானா மாதிரியான மாநிலங்கள்ல நிறைய க்ளப்புகள் (clubs) நடத்தி, நிறைய டோரணமெண்டுகள் நடத்தி நிறைய வீரர்களை உருவாக்குறாங்க. தென் மாநிலங்கள்ல இந்த மாதிரியான க்ளப்புகளெல்லாம் இல்லை. அதானல இன்னும் பெரிய அளவுல வீரர்கள் உருவாவதில்லை.

12. சார் அப்புறம் நம்ம ஊரப் பொறுத்த அளவில கிரிக்கெட்டுக்கு கொடுக்கிற முக்கியத்துவத்தை மற்ற விளையாட்டுக்களுக்கு கொடுக்கிறதில்லைன்னு ஒரு பரவலான கருத்து இருக்கு. இதப்பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க?
கிரிக்கெட்டும் ஒரு நல்ல விளையாட்டு தான். ரொம்ப டஃப்பாவும் இருக்கு ரொம்ப இண்ட்ரஸ்டிங்காவும் இருக்கு. அதானால மக்களும் அதை ரொம்ப விரும்புறாங்க. கிரிக்கெட்டுக்கு கிடைக்கிற வசதிகள் மத்த விளையாட்டுக்களுக்கும் கிடைச்சா மத்த விளையாட்டுக்களும் நல்ல ரீச் ஆகும்

13. வசதிகள்னா என்ன மாதிரி வசதிகள சொல்றீங்க?
உதாரணத்துக்கு ஸ்பான்ஸர்ஸ் (sponsors). கிரிக்கெட்டுக்கு ஸ்பான்சர்ஸ் அதிகம். அதனால அந்த விளையாட்டு அதிகமா விளம்பரமும் படுத்தப்படுது. கிரிக்கெட் வீரர்களுக்கு எதாவது அடிபட்டா கூட மருத்துவ செலவுங்களை அந்த ஸ்பான்ஸரே எடுத்துக்குவாங்க. ஆனா எங்களுக்கு அப்படி இல்லை. பாக்ஸிங் இண்டிவிஜூவல் கேம்னு சொல்லி ஸ்பான்ஸர்ஸ் எங்களுக்கு அதிகம் கிடைக்கிறதில்லை. எங்க பையன் ஒருத்தன் கை உடைஞ்சி கிடந்தா கூட அவன் சொந்த செலவுல தான் பாத்துக்கனும். இப்பதான் கொஞ்ச கொஞ்சமா எங்களுக்கு ஸ்பான்ஸர்ஸ் கிடைக்க ஆரம்பிக்குது. அதுவும் ரொம்ப நல்லா விளையாடுற வீரர்களுக்கு மட்டும் தான் கிடைக்குது. இது மேலும் வளரனும். கிரிக்கெட் மாதிரி பாக்ஸிங்கும் மக்கள் கிட்ட நல்லா ரீச் ஆகனும்கறது தான் என்னோட ஆசை


என்று முடித்து விட்டு Under 19 ஒலிம்பிக்ஸிற்காக சீனாவிற்கு புறப்பட்ட அவருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டு , அவரின் பொன்னான நேரத்தை ஒதுக்கியமைக்கு நன்றியையும் தெரிவித்துக் கொண்டு முடித்துக் கொண்டேன்


LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...