நாம் குழந்தைகளாக இருந்து வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திற்குச் செல்லும் போதும் நிறைய விஷயங்களை புதிதாகப் பெறுகிறோம், சிலவற்றை இழக்கிறோம். சிலவற்றை மறக்கிறோம். அப்படி வயது ஏற ஏற, நாம் கொஞ்சம் கொஞ்சமாக மறந்துகொண்டிருக்கும் ஒரு விஷயம் இந்த சிரிப்பு. கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். ஒரு நாளில் எத்தனை முறை சிரிப்பதற்கான சந்தர்ப்பங்கள் நமக்கு அமைகிறது? ஒரு நாளுக்கு எத்தனை முறை நாம் சிரிக்கிறோம்?
மேலோட்டமாகப் பார்த்தால் இது ஒரு பெரிய விஷயமாகத் தெரிவதில்லை. அன்றாட வாழ்வில் மகிழ்ச்சியாக இருப்பது போலவே நாம் உணர்கிறோம். ஆனால் எப்பொழுதாவது நம்முடைய பழைய கல்லூரி நண்பர்களையோ, இல்லை பள்ளி நண்பர்களையோ சந்திக்கும் போதே நமக்குப் புரியும், ஒவ்வொரு நாளும் நாம் சிரிப்பதை எவ்வளவு குறைத்திருக்கிறோம் என்று.
நம்மிடம் இருக்கும் சிரிப்பு ஏன் நாளாக நாளாக குறைந்து கொண்டே வருகிறது? பதில் அனைவருக்கும் தெரிந்ததே. சிறுவயதில் எந்தக் கவலைகளும் இல்லாமல் மகிழ்ச்சியாகச் சுற்றித் திரியும் நமக்கு வயது ஏற ஏற சில கடமைகளும், பொறுப்புகளும் வந்து சேர்கின்றன. அவற்றை நிறைவேற்ற காலம் பார்க்காமல் உழைக்க வேண்டியிருக்கின்றது. ஒரு கட்டத்தில் நண்பர்களே உலகம் என்றிருக்கும் நாம் அடுத்த கட்டத்திற்குச் செல்லும் போது குடும்பம் என்ற ஒன்றிலேயே கவனத்தைச் செலுத்தி, நண்பர்களுக்கான முக்கியத்துத்தை குறைத்து விடுகின்றோம். ஆனால் நாம் அதிகமாக சிரிப்பது நண்பர்களோடு இருக்கும் சமயத்தில் மட்டுமே.
நாம் சிரிப்பதைக் குறைத்துக் கொண்டிருக்கிறோம் என்றால் அதைக் காட்டிலும் நம்முடைய கவலைகளும் பிரச்சனைகளும் மேலோங்கி நிற்கின்றன என்றே அர்த்தம். இதுபோன்ற பிரச்சனைகளை நாம் ஒருவரே கட்டிக்கொண்டு அழுவதை விட ஒரு முறை அவற்றை நண்பர்களிடம் பகிர்ந்து சிரியுங்கள். நம் கவலைகளும் குறையும் அவற்றை சரி செய்ய புது வழிகளும் பிறக்கும். மகிழ்ச்சியாக இருப்பது என்பது எந்த பிரச்சனைகளும் இல்லாமல் இருப்பது என்று பொருளல்ல. அவர்கள் சந்திக்கும் சவால்களை இலகுவாக எதிர்கொள்ளும் சக்தி அவர்களிடம் மிகுந்து காணப்படும்.
மேலே இருக்கும் படத்தில் இருப்பவரை நீங்கள் பெரும்பாலான கடைகளிலும் வீடுகளிலும் பார்த்திருக்கலாம். சிரிக்கும் புத்தர் (Laughing Budda or Bhu dhai) என அழைக்கப்படும் இந்த துறவியைப் பற்றிய ஒரு சுவாரஸ்யமான கதை. இவர் செல்லும் இடங்களுக்கெல்லாம் ஒரு மூட்டையை சுமந்து செல்வார். அதில் குழந்தைகளுக்கான இனிப்புகள் மற்றும் பரிசுப் பொருட்கள் நிறைந்து காணப்படும். ஒரு நகரத்தின் மையப் பகுதிக்கு சென்று அங்கு அந்த இனிப்புக்களை குழந்தைகளுக்கு வழங்கிவிட்டு, அவரைச் சுற்றி சிறு கூட்டம் கூடியதும் திடீரென வானத்தை நோக்கி சத்தம் போட்டு குலுங்க குலுங்க சிரிக்க ஆரம்பித்துவிடுவார். சுற்றி எவர் என்ன சொல்கிறார் என்றெல்லாம் மனதில் கொள்ளாமல் சிரித்துக் கொண்டே இருப்பாராம்.
சிறிது நேரத்தில் சுற்றி இருப்பவர்களும் இவருடன் சேர்ந்து சிரிக்க ஆரம்பித்து விடுவார்களாம். கொஞ்ச நேரம் அனைவருடனும் சிரித்து விட்டு பையை எடுத்துக் கொண்டு வேறு ஒரு நகரத்திற்குச் சென்று அங்கும் இதே போலச் செய்வாராம். வாழ்நாள் முழுவதையும் இந்த செயலை மட்டுமே செய்துகொண்டிருந்தவர் இந்த சிரிக்கும் புத்தர். அவருடைய இந்த செய்கையால் பலரும் தங்களுடைய மன பாரங்களிலிருந்தும் விடுபட்டதாகக் கூறப்படுகிறது. ஒருவருடைய மன பாரங்களையும் கவலைகளையும் போக்கும் சக்தி சிரிப்பிற்கு உண்டு என உணர்த்தும் வகையில் சிரிப்பு வைத்தியத்தை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே செய்துவந்தவர் இந்த சிரிக்கும் புத்தர்.
ஒரு முறை ஒருவர் அவரைப் பார்த்து “நீங்கள் ஏன் இதுபோல குழந்தைகளுக்கு பரிசுகளையும் இனிப்புகளையும் வழங்குகின்றீர்கள்?” எனக் கேட்டதற்கு அவர் “நாம் எந்த அளவு கொடுக்கிறோமோ அது இருமடங்காக நமக்கு வந்து சேரும்… அதுவும் குழந்தைகள் கள்ளங் கபடம் இல்லாதவர்கள். பொறாமை குணமற்றவர்கள். எந்நேரமும் சிரித்துக் கொண்டே இருப்பவர்கள். அவர்களுக்கு கொடுப்பது நேரடியாக இறைவனுக்கே கொடுப்பதாக உணர்கிறேன்.. மேலும் அவர் மனிதர்களிடையே காணப்படும் பிரச்சனைகளையே நான் மூட்டையாக தான் சுமக்கிறேன்” என்றும் கூறினார்.
நமக்கு ஒரு பிரச்சனை வரும்போது, நம்மைத் தவிற அனைவரும் மகிழ்ச்சியாக இருப்பது போலவும், கடவுள் நமக்கு மட்டும் ஏன் இவ்வளவு சோதனைகளைத் தருகிறார் எனவும் நினைக்கிறோம். ஆனால் இதில் ஒரு நகைச்சுவை என்னவென்றால் நமக்கு பிரச்சனை என நினைக்கும் ஒரு விஷயத்தை மற்றொருவர் நம்மிடம் கொண்டு வருவாரேயானால் அவருக்கு நாம் அதை சரி செய்ய நூறு யோசனைகள் சொல்வோம். ஆனால் அதே நமக்கு எனும் போது பிரச்சனையை எதிர்கொள்வதை விட்டுவிட்டு கவலையில் மூழ்கிவிடுகிறோம்.
கவலைகளோ பிரச்சனைகளோ நம்மை ஆட்கொள்ளும் போது அவற்றைக் கண்டு அச்சம் கொள்ளாமல் ஒரு முறை அவற்றை நோக்கி சிரித்துப் பாருங்கள். அடுத்த முறை நம்மை நெருங்கவே அவற்றுக்கு பயம் வந்துவிடும்.
சரி.. சிலருக்கு சிரிக்க வாய்ப்பு இருக்கிறது. அவர்கள் சிரித்துக் கொள்கிறார்கள். ஆனால் எனக்கு அப்படி இல்லையே. நீங்கள் கூறுவது போல் என்னால் சிரிக்க சூழ்நிலைகள் அமைவதில்லை என்று நீங்கள் கூறினால் அது உங்களுடைய தவறேயன்றி வேறில்லை.\
மகிழ்ச்சியான தருனங்களை அதிகப் படுத்துவதற்கு சில வழிகள்:
1) பொதுவாக ஒரு மனிதன் அதிகம் சிரிப்பது என்பது குழுக்களாக இருக்கும் போது தான். அப்படி குழுக்களாக சேர்ந்து சிரிக்கும் சந்தர்ப்பம் சில சமயங்களிலேயே நமக்கு அமைகிறது. உதராணமாக நண்பர்களின் திருமணம். முடிந்த வரையில் அதுபோன்ற சந்தர்ப்பங்களில் ஏதேனும் காரணங்களைக் கூறி தட்டிக் கழிக்காமல் சென்று வாருங்கள். நாம் அலுவலகங்களில் சிடுமூஞ்சிகளாகவும், அரக்கர்களாகவும் பார்க்கும் சிலரது உண்மையான நல்ல முகங்களை இதுபோன்ற விழாக்களிலேயே காணமுடியும்.
2) உங்களது அலுவலக மேலாளர் உங்களை திட்டுகிறாரா? உங்கள் மேல் எரிந்து விழுகிறாரா? அதை உங்களுக்குள்ளேயே வைத்திருந்தால் தான் உங்களுக்குக் கவலை. அதைப்பற்றி நண்பர்களிடம் பகிர்ந்து சிரியுங்கள். அடுத்த முறை உங்களுக்கு அது போன்ற சந்தர்ப்பங்களில் உங்களுக்கு கோபத்தை விட சிரிப்பே முதலில் வந்து நிற்கும். கோபப்படுவதாலோ அல்லது சிரிப்பதாலோ ஒரு விஷயம் மாறப் போவதில்லை எனும்போது எதற்கு நாம் கோபப் பட்டு நம் உடலைக் கெடுத்துக் கொள்ள வேண்டும். சிரித்துவிட்டுப் போவோமே.
3) அதே போல் சிரிப்பதற்கான சூழ்நிலைகளை உருவாக்குதல் அவசியம். நாம் நண்பர்களுடன் மகிழ்ச்சியாக இருப்போம் என்று நமக்கு நன்றாகத் தெரிந்தால் அவர்களை விழாக்களில் மட்டும் சந்திக்க வேண்டும் என்ற எந்த கட்டாயமும் அல்ல. வாரமொருமுறையோ அல்லது மாதமொருமுறையோ நமக்கு விருப்பமான நண்பர்களைச் சந்திக்க நாமே ஏற்பாடு செய்துகொள்ளலாம்.
4) நண்பர்களைத் தெரிவு செய்தல் என்பதும் மிக முக்கியமானது. சிரிப்பு என்ற ஒரு விஷயத்திற்கு மூலதனம் ரசனை. ஒருவரை முழுமையாக நமக்குப் பிடிக்காவிட்டால் அவர் செய்யும் எந்த விஷயமும் நமக்குப் பிடிப்பதில்லை. இதற்கு மனிதர்களுக்கிடையே காணப்படும் wavelength matching எனப்படும் அலைவரிசை ஒற்றுமை மிகவும் முக்கியமானது. எனவே நம்முடைய அலைவரிசையில் இருப்பவர்களை நட்பாக்கிக் கொள்ளுதல் நம்முடைய சிரிப்பின் அளவை அதிகப்படுத்தும்.
5) நம்மை சுற்றி நடக்கும் விஷயங்களில் இருக்கும் சிறு சிறு நகைச்சுவையைக் கூட உணர்ந்து சிரிக்க வேண்டும். சிறு குழந்தைகளை உற்று கவனித்து அவர்கள் சிறு சிறு விஷயங்களுக்கு கூட எப்படி ஆச்சர்யப்படுகின்றனர் எப்படி நகைச்சுவையாகப் பார்க்கின்றனர் என்பதை நாமும் உணர்ந்து ரசிக்க வேண்டும்.
6) தேநீர் இடைவேளையைப் போல தினமும் கொஞ்ச நேரம் நகைச்சுவை இடைவேளை எடுத்துக் கொண்டு நண்பர்களுடன் அன்று நடந்த நகைச்சுவையான விஷயங்களைப் பகிர்ந்து கொள்ளலாம். நம்மை சோகத்தில் ஆழ்த்தும் விஷயங்களை மற்றும் செய்திகளை விவாதிப்பதை கூடுமான வரை தவிர்க்கலாம்.
7) நாம் யாருடன் இருந்தால் மகிழ்ச்சியாக இருப்போமோ அவருடன் அதிக நேரத்தை செலவிட வேண்டும். ஒருவர் நம் மகிழ்ச்சியை குலைத்துவிடுவார் எனத் தெரிந்தால் அவரிடமிருந்து முடிந்தவரை விலகியும் இருக்க வேண்டும்.
இயன்றவரை நாமும் மகிழ்ச்சியாக இருந்து மற்றவர்களையும் மகிழ்ச்சியாக வைத்திருக்க முயல்வோம்