Monday, September 13, 2010

எந்திரனை சீண்டாதே!!


Share/Bookmark


"ரஜினி தனது மகள் திருமணத்திற்கு ரசிகர்களை அழைக்காததால் ரசிகர்கள் அதிருப்தி"

"தனது மகள் திருமணத்திற்கு ரசிகர்களை வரவேண்டாம் என கூறிய ரஜினி, எந்திரன் திரைப்படத்திற்கு அவர்களை வரவேண்டாம் என கூறுவாரா?"

இதுதான் போன வாரம் சில முக்கியமான தமிழ் வார இதழ்கள்ல பரபரப்பான செய்தி...என்ன ஒரு அறிவுபூர்வமான கேள்வி? ஏண்டா எந்திரன் படமும், சவுந்தர்யா கல்யாணமும் ஒண்ணாடா??எந்திரன் படத்த 2600 ப்ரிண்ட் போட்டு உலகம் full ah ரிலீஸ் பண்ராய்ங்க. அதே மாதிரி சவுந்தர்யா கல்யாணமும் தமிழ்நாட்டுல உள்ள அத்தனை மண்டபத்துலயும் ஒரே நேரத்துல நடந்து, அதுக்கு எங்க தலைவரு ரசிகருங்கள வரவேண்டாம்னு சொல்லிருந்தா நீங்க கேக்குறது ஓரளவுக்கு நியாயம்...

செரி அத விடுங்கடா.... இப்போ ஆட்சி நடத்திக்கிட்டு இருக்குற அய்யா, அவரோட பையன், பொன்னு,பேரன், பேத்தி, ஒன்னு விட்ட சித்தி பையன் ன்னு இப்புடி பல பேருக்கு கல்யாணம் நடத்திருக்காரு.. இதுவரைக்கும் தொண்டர்களை கூப்புட்டுருக்காங்களா? கட்சி மாநாட்டுக்கு மட்டும், அனைவரும் வாரீர்... அலைகடலென வாரீர்...காட்டற்று வெள்ளம் போல வாரீர்ன்னு கூப்புடுவாங்கல்ல.. அப்பல்லாம் நீங்க எங்கடா போயிருந்தீங்க?

ஆங்ங்ங்ங்... அவியிங்கள கேட்டாதான் பத்திரிக்கை ஆபீஸ எரிச்சிடுவாய்ங்கல்ல... அந்த பயத்துல எவனும் கேட்டுருக்க
மாட்டீங்க... எங்க தலைவர கேள்வி கேக்க மட்டும், பல்ல காட்டிகிட்டு வந்துடுரீங்களேடா.. உங்க பத்திரிக்கை நல்லா ஓடனும்னா அவரு படத்த அட்டைல போட்டு வித்துக்குங்க.. அத விட்டுட்டு ஏண்டா அவர வம்புக்கு இழுக்குறதுலயேகுறியா இருக்கீங்க?...

ஆமா,,,,அது என்ன ரசிகர்கள் அதிர்ப்தி, ரசிகர்கள் ஆவேசம்... நாங்கதானடா அவரு ரசிகருங்க... நாங்க எங்கடா இதுமாதிரியெல்லாம்
கேட்டோம்.. நீங்களே எதாது போட்டுகிட்டு அதுக்கு எங்க பேர use பண்ணிக்க வேண்டியது....இனிமே ரசிகர்கள்னு மொட்டையா
போடாதீங்க... எவன் கேட்டான்னு படத்தோட போடுங்க.. ஏன்னா அவரு ரசிகருங்க யாரும் இது மாதிரி கேனத்தனமா
கேக்கமாட்டங்க.. இந்த மாதிரி அவரு பேர வச்சிகிட்டு ஊருக்குள்ள famous ஆகுறதுக்குன்னு சில பேரு சுத்திகிட்டு இருக்கானுங்க..

எங்களுக்கு அவரு அடிக்கடி படம் நடிச்சி ரிலீஸ் பண்ணா அதுவே போதும்.. இது மாதிரி கல்யாணத்துக்கு கூப்புடல...பேரனோட காதுகுத்துக்கு கூப்புடலன்னு யாரும் நெனக்க மாட்டோம்... இது மாதிரியெல்லாம் எழுதுறது இதுவே கடைசி
தடவையா இருக்கனும்.. ஏன்னா அடுத்த தடவை பேச்சே கெடையாது.. வீச்சு தான்.....

எங்கள் வழி அவர் வழி...

அவர் வழி தனி வழி.....

Wednesday, September 8, 2010

அந்த நேரம் அந்தி நேரம்-III


Share/Bookmark இதற்கு முந்தைய பகுதிகளை படிக்க கேழே க்ளிக்கவும்
பகுதி 1
பகுதி 2
மறுநாள் 7.30 மணிக்கு அம்ம வந்து எழுப்பும் போது தான் விழிப்பு வந்தது கதிருக்கு. லேசாக ஜுரம் வருவதைப்போன்ற உணர்வு. எழுந்து முகம் அலம்பிவிட்டு பல் துலக்கும் போது யோசித்து பார்த்தான். இரவு நடந்ததெல்லாம் ஒரு கனவு போல தோன்றியது. ஆனால் ஓடி வரும்போது ஒரு சவுக்கு கிளையால் முழங்கையில் வாங்கிய கீரல் அது கனவல்ல என்பதை உணர்த்தியது.

காலை டிபன் சாப்பிடும் போது அம்மாவிடம் கேட்டான்.. "ம்மா... ஊருக்குள்ள எதாச்சும் பரபரப்பான நியூஸ்?"

"அமாடா... பக்கத்து வீட்டு சுகந்திக்கு பொண் கொழந்தை பொறந்துருக்குடா..."

"இது பரபரப்பான நியூஸ்ஸா... ஏம்மா காலைலயே கடுப்ப கெளப்புற... வெற எதாச்சும்?"

"வேற ஒன்னும் இல்லடா.. சீக்கிரம் சாப்டு வயலுக்கு கெளம்பு.. அப்பா காலைலயே போயிட்டாரு.."

"சரி சரி போறேன்.. எப்ப பாரு வயலு, வாய்க்காலுன்னுகிட்டு" என்று மனதுக்குள் திட்டிக்கொண்டே வெளியில் வந்துவண்டியை எடுத்துக்கொண்டு புறப்பட்டான். செல்லும் போது ஒரு யோசனை.. மீண்டும் அங்கு சென்று பார்த்தால் என்ன?
நேரம் ஆனது ஆகிவிட்டது.. அப்படியே சென்று ஒரு எட்டு பார்த்து விட்டு செல்வோம் என்று வண்டியை சவுக்கு தோப்பிற்கு திருப்பினான்.

ஏழெட்டு நிமிடங்கள்....தோப்பை அடைந்து நேற்று நின்ற இடத்தை தேடிப்பிடித்து வண்டியை நிருத்தினான்.சுற்றும், முற்றும் பார்த்தான்.யாரும் இருப்பதாக தெரியவில்லை. இறங்கி தோப்பிற்குள் சென்றான். சுற்றித்தேட, நேற்று அப்படியொரு சம்பவம் நடந்த்ததற்கான அறிகுறியே தென்படவில்லை. ஆனால் அந்த பெண்ணின் முகம் மட்டும் அச்சாக அவன் மனதில் பதிந்த்திருந்தது.
சந்தேகப்பட்டது சரிதான். கொலையாளி அந்த பெண்ணின் சடலத்தை பதுக்கியிருக்க வேண்டும். அப்படியானால் அவன், நேற்று இரவு நான் உள்ளே வருவதை கண்ட பின் எங்காவது சென்றுமறைந்திருக்க வேண்டும். நான் சென்ற பின்பு ஆர அமர சடலத்தை அப்புறப் படுத்தியிருக்க வேண்டும்.. ஒரு வேளை அவன் என் முகத்தை பார்த்திருந்தால் அது எனக்கும் பேராபத்தாயிற்றே.. என எண்ணிக்கொண்டு அந்த இடத்தை விட்டு நகர ஆரம்பித்தான்.

வண்டியில் ஏறி புறப்பட தாயாரகும் போது நண்பன் இளங்கோவின் ஞாபகம் வந்தது. இளங்கோவும் கதிரின் பள்ளித்தோழன்.கதிரின் மீது மிகுந்த பாசம் கொண்டவன். பத்தாம்வகுப்பில் தேர்ச்சி பெறாததால், படிப்பிற்கு முழுக்கு
போட்டுவிட்டு ஊர் சுற்றிக்கொண்டிருந்தவன்.சிறு வயதில் தாத்தா கடையில் மிட்டாய் திருடி தின்ற அவனிடத்தில் அது மட்டும் தொட்டில் பழக்கமாய்
ஒட்டிக்கொண்டது. பின் அப்பாவின் சட்டை பணம், பக்கத்து வீட்டு வெண்கல சொம்பு என கண்ட இடத்தில் கை வைத்து மாட்டிக்கொள்பவன்.கொஞ்ச நாள் ஊர் சுற்றிகொண்டிருந்த அவன், அவனதுஅப்பாவின் புண்ணியத்தால் துபாய் செல்லும் வாய்ப்பை பெற்றான். அங்கு என்ன வேலை செய்தானோ, நல்ல சம்பார்தியம். இரண்டு வருடங்களுக்கு முன்புதான் ஊர் திரும்பினான். வந்தவுடன் திருமணம்..மாமனார் கொடுத்த வயல்காடுகளில் விவசாயத்தை பார்த்துக் கொண்டுு ஊரிலேயெ இருந்தான்.

அந்த சவுக்கு தோப்பு முடியும் எல்லையிருந்து நூறு மீட்டர் தள்ளி, வயலுக்குள் மண் பாதையில் உள்ளே சென்றால் வருவது தான் இளங்கோவின்
பம்புசெட்டுடன் கூடிய தென்னந்தோப்பும்், மாந்தோப்பும். சுருக்கமாக சொன்னால், அந்த மோட்டர் கொட்டகையிலிருந்து பார்த்தால் சவுக்கு தோப்பின்
பின் பகுதி பார்வைக்கு கிடைக்கும். இரவினில் சிலர், தேங்காய்களை திருடி சென்று விடுவதால், இளங்கோ குடும்பதினர் எவரேனும் இரவில்
அங்கு காவலுக்கு இருப்பது வழக்கம். ஒரு வேளை அங்கு இருந்தவர்கள் யாரையாவது பார்த்திருக்க வாய்ப்பு இருக்கிறது. அங்கு சென்று இளங்கோ
விடம் கூறினால் எதாவது விபரம் தெரியலாம் என்று எண்ணிக்கொண்டு, அந்த மண் பாதை வழியாக இளங்கோவின் மோட்டர் கொட்டகையை
அடைந்தான். அங்கு பம்பு செட்டிலிருந்து வந்த நீரை தென்னைமரங்களுக்கு பாய்ச்சிக்கொண்டிருந்தான் ஒருவன்... கதிர் தொடங்னான்

"ஏண்ணே இளங்கோ இல்ல?"

"இல்லையேப்பா... அவுக தம்பிக்கு இன்னும் பத்து நாள்ல கல்யாணம். அதுக்காக யாரோ சொந்தக்காரவுகளுக்கு பத்திரிக்கை குடுக்கனும்னு,
காலைலயேகெளம்பி அவுகளும்அவுக பொஞ்சாதியிம் திருச்சி வரைக்கும் போயிருக்காக" என்றார்.

"ஓ... அப்புடியாண்ணே... சரி அவன் வந்தான்னா நா வந்துட்டு போனேன்னு சொல்லுங்க" என்று சொல்லிவிட்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்தான்.
இனி இதைப்பற்றி பேசுவதும், யோசிப்பதும் நமக்கு தேவையற்ற வேலை.. நேற்று இரவு நடந்ததை ஒரு கனவு போல நினைத்து மறந்துவிட
வேண்டியதுதான் என நினைத்துக்கொண்டு, வழக்கமான வேலைகளில் மூழ்க ஆரம்பித்தான்.

நாங்கு நாட்களுக்கு பிறகு...

வீட்டு ஒட்டு திண்ணையில் அமர்ந்து தேனீர் பருகியபடி எதோ ஒரு தொலைக்காட்சியின் செய்திதொகுப்பை பார்த்துக்கொண்டிருந்தான் கதிர்.

"கடந்த வாரம் தஞ்சையில் கணவன் மனைவி போல்,வந்து வங்கியில் இரண்டி கோடி ரூபாய் கொள்ளையடித்துச் சென்றவர்களை பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை எனவும், அவர்களை பிடிப்பதற்கான நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன எனவும் காவல்துறை ஆய்வாளர் இன்று தெரிவித்தார்." என்ற செய்தியை ஒட்டி வங்கி கேமராவில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று தொலைக்காட்சியில் காண்பிக்கப்பட்டது. முப்பத்தைந்து வயது மதிக்கத்தக்க ஒரு ஆணுடன் நடுத்தர வயதுடைய ஒரு சேலை கட்டிய பெண்மணி உடனிருந்தார்.

கதிரின் முகத்தில் சட்டென ஒரு மாற்றம். இந்த் பொண்ணை எங்கயோ பாத்திருக்கேன்... பரபரவென இயங்கிய மூளை சட்டென தேடிப்பிடித்தது.
ஆம். அன்று சவுக்கு காட்டில் இறந்து கிடந்தவள் இவள் தான். ஒரு வேளை பங்கு பிரிப்பதில் ஏற்பட்ட தகறாரில் அவள் உடனிருப்பவன் தான் அவளை கொன்றிருக்க வேண்டும் என ஊகித்தான்.

இவன் யோசித்துக்கொண்டு இருக்கும் போதே வெளியில் பைக் சத்தம் கேட்டது.. நண்பன் இளங்கோவும் அவனது மனைவியும் கையில் ஒரு பையுடன்
இறங்கினர். அவர்களை பார்த்ததும் கதிர் புரிந்து கொண்டான், தம்பியின் திருமண அழைப்பிற்காக வந்திருப்பதை. அவர்களை உள்ளே வரவேற்று அழைப்பிதழை பெற்ற பின்னர், இளங்கோவின் மனைவி கதிரின் தாயுடனும் தங்கையுடனும் பேசிக்கொண்டிருக்க, இவர்கள் இருவரும் வெளியில் உட்கார்ந்து பழங்கதைகளை பேசத்தொடங்கினர். இளங்கோ ஒரு, சிகரெட்டை பற்ற வைத்துக்கொண்டு தன் துபாய் கதைகளை கூற ஆரம்பித்தான்.இருபது நிமிடங்கள் கரைந்திருந்தன. இளங்கோவின் கையில் மூன்றாவது சிகரெட் புகைந்து கொண்டிருந்தது. "சாந்தி நேரம் ஆச்சு பாரு" என்று உள்ளே குரல் கொடுத்தான். சாந்தி கதிரின் தாய் தங்கையிடம் சொல்லிவிட்டு வெளியில் வர, இளங்கோ கையிலிருந்த மூன்றாவது சிகரட் துண்டை கீழே போட்டான். ஏனோ கதிரின் பார்வை அந்த சிகரெட் துண்டின் மேல் போக, அன்றைய சம்பவம் மனதில் ஓடியது.. "ச்ச.... அந்த கருமத்த எப்புடியாவது மறக்கனும்னு நெனைக்கிறேன்.. எதாவது வந்து அத ஞாபகப்படுத்திடுதே" என நினைத்துக்கொள்ள,

"பொய்ட்டு வர்ரேங்க" என்ற சாந்தியின் குரல் கேட்டு நிமிர்ந்த கதிர் அதிர்ந்தான். சாந்தியின் கழுத்தில் அன்றிரவு இறந்தவள் கழுத்தில் கிடந்த
மீன் டாலர் ச்செயின்...

****************
வண்டியில் இளங்கோவின் பின் அமர்ந்து சென்று கொண்டிருந்த சாந்தி கேட்டாள்
"என்னங்க.. எனக்கு என்னமோ இன்னும் பயமாவே இருக்குங்க... மாட்டிக்குவமோன்னு"

"ச்சீ.. லூசு... அந்த ரெண்டு பேரயும் தான் வெட்டி நம்ம தென்னந்தோப்புக்கு உரமா வச்சாச்சே... இனிமே CBI வந்தா கூட கண்டுபுடிக்க முடியாது..அவங்க கொண்டு வந்த பணமெல்லாம் நம்ம மோட்டர் கொட்டகைல பத்தரமா இருக்கு..கொஞ்ச நாள் போகட்டும்..பாத்துக்குவோம்"

"இல்லீங்க.. அன்னிக்கு யாரோ ஒருத்தன் எறங்கி வந்து பாத்தான்னு சொன்னீங்களே... அவன்?"

"யார்னு தெரியலடி... என்னையும் அவன் பாத்துருக்க வாய்ப்பு இல்ல.. அத விடு... தஞ்சாவூர்ல கொள்ளையடிச்ச பணத்த நம்ம ஊர்ல கொண்டு வந்து பதுக்கி வப்பாங்களாம்... விடுவமா நம்ம... " என்று சொல்லி இளங்கோ சிரிக்க உள்ளுக்குள் பயத்துடன் சாந்தியும் சிரித்தாள்.

Thursday, September 2, 2010

அந்த நேரம் அந்தி நேரம்- II


Share/Bookmark

இந்த பதிப்பு சென்ற பதிப்பின் தொடர்ச்சியே...முதல் பகுதியை படிக்க இங்கே க்ளிக்கவும்.. பகுதி I

இதயம் உச்சகட்ட படபடப்பிற்கு சென்றது கதிருக்கு. சிறிது நேரம் செய்வதறியாது திகைத்து நின்றான்.உடல் லேசான நடுக்கத்திற்குட்பட்டது. ஒருபுறம் பயம் முழுமையும் ஆட்கொண்டிருந்தாலும், இன்னொரு முறைஅந்த ஒலி கேட்குமா என எதிர்பார்த்தான். ஆனால் கேட்கவில்லை.

கேட்டது ஒரு வேளை பிரம்மையா? கண்டிப்பாக அப்படி இருக்க வாய்ப்பில்லை. பெண் ஓலமிடும் சத்தம் கேட்டதே. ஏதாவது விலங்கினகளின் சத்தமா? காட்டுப்பூனை, நாய், நரியை தவிற வேறு எந்த விலங்கினங்களும் இங்கு இருக்க
வாய்ப்பே இல்லை. காட்டுப்பூனை சில சமயம் குழந்தை அழுவதைப்போன்ற சத்தமிடும். ஆனால் இது குழந்தையின் சத்தமும் இல்லை. வேறு என்னவாக இருக்கும்? நொடிப்பொழுதில் பல கேள்விகள் அவன் மூளையை குதறின.

வண்டியில் ஏறி உக்கார்ந்து கிக்கரை உதைத்தான். எஞ்ஜின் உயிர் பெற்றது. லேசான வெளிச்சத்துடன் ஹெட்லைட் எரிய ஆரம்பித்தது.இருப்பினும் போக மனதில்லை. என்னதான் அது என பார்த்துவிட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு
பயத்தை விட மேலோங்கி நின்றது. வண்டியை சவுக்கு காட்டு பக்கம் திருப்பி வைத்துவிட்டு, இஞ்ஜினை அணைக்காமல்,ஹெட் லைட் வெளிச்சத்தில் தோப்புக்குள் இறங்க ஆரம்பித்தான்.

ரோட்டு பகுதியை விட்டு சற்று பள்ளமான இடத்தில் அமைந்திருந்தது அந்த தோப்பு. ரோட்டின் சரிவல் பகுதியில் மெல்ல இறங்கி கால் வைக்கும் போது ஏதோ ஒரு வித்தியாசமான உணர்வு, ஐஸ்கட்டி கரைக்கப்பட்ட நீரில் கால் வைத்ததைப் போல. ஆம் அவன் கால் வைத்தது, ஆற்றிலிருந்து பாசனத்திற்காக ஊருக்குள் பிரித்து விடப்பட்ட வாய்க்காலில். சத்தமின்றி சென்றுகொண்டிருந்த அந்த நீரின் வெப்பநிலை மார்கழி குளிரால் ஒற்றை இலக்கத்தை அடைந்திருந்தது. மெதுவாக வாய்க்காலை கடந்து அந்த தோப்புக்குள் சத்தம் வந்த பகுதியை நோக்கி குத்து மதிப்பாக நடந்தான்.

சிறிது தூரத்திற்கு பிறகு வண்டியின் வெளிச்சம் பொருட்களை காட்ட மறுக்க, பாக்கெட்டிலிருந்து செல் போனை எடுத்து டார்ச்சை ஆன் செய்து இன்னும் சற்று உள்ளே சென்றான்.தரை முழுதும் சவுக்கு இலைகளால் மூடப்பட்டு இருந்ததால்
காலடிச்சத்தம் எதும் கேட்கவில்லை.அங்கிருந்து ஒரு பத்தடி தூரம் சென்றிருப்பான். அதன் பின் காடு மிக அடர்ந்திருப்பதால் செல்வது ஆபத்து என நின்றுவிட்டான்.

அதன் பின் டார்ச்சை அவனை சுத்தி ஒரு முறை அடித்து ஏதேனும் தென்படுகிறதா என நோட்டம் விட்டன். ஏதும் அகப்படவில்லை.சரி இது நமக்கு வேண்டாத வேலை கிளம்பலாம் என முடிவு செய்தபோது அது அவன் கண்ணில் பட்டது. தரையில் ஒரு சிறிய மின்மினி பூச்சி போன்றதொரு ஒளிப்புள்ளி. டார்ச்சையும் பார்வையயும் அதன் மீது செலுத்தி, குனிந்து பார்த்த போது தெரிந்தது..அது ஒரு அணைக்கப்படாத சிகரட் துண்டு.

இதில் ஏதோ விபரீதம் இருக்கிறது. கண்டிப்பாக இங்கு இருப்பது தவறு என உணர்ந்து திரும்பும் போது, தரையில் ஏதோ இழுபடுவது போன்ற சத்தம் கேட்டது. உன்னிப்பாக கேட்டன். ஆம் கண்டிப்பாக ஏதோ சத்தம் கேட்கிறது. மனதை இரும்பாக்கிகொண்டு சத்தம் வந்த பகுதியை நோக்கி டார்ச்சை அடித்துக்கொண்டு மெல்ல அடி எடுத்து வைத்தான்... சில அடிகள் நகர்ந்திருப்பான்...

அங்கு அவன் கண்ட காட்சி, அவன் ரத்த அழுத்ததை நொடிப்பொழுதில் உயரச்செய்தது. ஒரு பெண்ணின் உடல் கை, கால்களை தரையில் அடித்துக்கொண்டு உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது, கசாப்பு கடையில் கழுத்து அறுக்கப்பட்ட கோழி இறுதியில் உயிருக்கு போராடுவதைப்போல.. அன்று குடித்த 5 லிட்டர் தண்ணீரில் ஒரு லிட்டர் அப்போதே வியர்வையாக வெளிவந்தது கதிருக்கு. மெதுவாக அந்த உடலின் மேல் டார்ச் வெளிச்சத்தை செலுத்தினான். ஜீன்ஸ், டாப்ஸ் அணிந்திருந்த அந்த பெண்ணின் உடலில் ஏதும் காயம் இருப்பதாக தென்படவில்லை.. மெதுவாக வெளிச்சத்தை சற்று மேலேற்றினான். கழுத்தில் ஆழமான ஒரு வெட்டு இருப்பதை கழுத்துப்பகுதியை முழுதும் நனைத்திருந்த ரத்தம் சொன்னது.. அவள் அணிந்திருந்த மீன் டாலர்
கோர்த்த அந்த ச்செயின் அவள் தாடைப்பகுதியில் தங்கி இருந்தது.

வெளிச்சம் முகத்தில் அடித்தபோது, அவள் கண்கள் இடப்புறமும், வலப்புறமும் இரண்டு முறை சென்று வந்து, பின் கதிரை நோக்கி பார்த்து அப்படியே நிலை குத்திப்போய் நின்றது. கை, கால்களின் அசைவும் நின்றிருந்தது. ஒரு விதமான பயம், அழுகை இரண்டும் சேர்ந்து அவனுக்கு நடுக்கத்தை ஏற்படுத்தியது.. திரும்பி பைக்கை நோக்கி செல்ல ஆரம்பித்தன். இந்த முறை நடக்கவில்லை
ஓடினான்..

அடுத்த பதிப்பில் முற்றும்....

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...