Saturday, August 31, 2013

மாயவலை - பகுதி 5 !!!


Share/Bookmark

முதல் பகுதி இரண்டாவது பகுதி மூன்றாவது பகுதி நான்காவது பகுதி ஒரு வருடத்திற்கும் மேலாக அடைத்து வைத்திருந்ததில் கிட்டத்தட்ட மொத்த உடலுமே உருக்குலைந்து போய் கீழ்பாகத்திலுள்ள எழும்புகளை காட்டியிருந்தன.  10 வினாடிகளுக்கு மேல் ஒருவரால் அந்த உருவத்தை பார்க்க முடியாத அளவு கொடூரமான அளவு சேதமடைந்திருந்தது. 30 விநாடிகளுக்கு பிறகே ரவிக்குமார் சற்று நிதானத்திற்கு வந்து அந்த உடலை மீண்டும் உற்று நோக்க, தலைப்பகுதி இருக்க வேண்டிய இடம் வெறுமையாக கழுத்துப்பகுதியோடு துண்டிக்கபட்டிருந்தது. 

5 நிமிடத்தில் துர்நாற்றம் வெளியே பரவ அவரவர்கள் கதவை மூடிக்கொண்டு உள்ளே சென்றனர். ரேவதிக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. கண்ணிலிருந்து தண்ணீர் தாரை தாரையாக வழிய தொண்டை வார்த்தைகளை வெளிவிடாமல் அடைத்தது. மதன் தண்ணீரை கொடுத்து ஆறுதல் படுத்திக் கொண்டிருக்க, சீனிவாச ஐயர் நின்றிருந்த இடம் தெரியாமல் மறைந்திருந்தார். 

புகைப்படங்கள் அனைத்தும் எடுக்கப் பெற்று உடலை அந்த வீட்டிலிருந்து எடுத்துச் செல்லும் போது மணி விடியற்காலை 4. தூக்கமின்மையால் ரவிக்குமாருக்கு கண்கள் கோவைப்பழமாகியிருந்து.

“சார் நீங்க போய் ரெஸ்ட் எடுத்துகிட்டு காலையில வாங்க… நா இங்க இருக்கேன்” என்றார் தங்கதுரை.

“இல்லை தங்கதுரை… பரவாயில்லை. இன்னும் கொஞ்ச நேரம் தானே முடிச்சிட்டே போயிடலாம். “ என கூறி தலையின் இரண்டு புறங்களையும் கைகளால் பிடிக்க

“சார் ஏன் சார் இவ்ளோ அப்செட்டா இருக்கீங்க… நாம இதவிட கொடூரமான எவ்வளவோ பாடிங்கள பாத்துருக்கோம்.. இதுக்கு ஏன் சார் ரொம்ப மூட் அவுட்டா இருக்கீங்க…”

“இல்ல தங்கதுரை… எனக்கு அந்த பாடிய பாத்த அந்த செகண்ட்லருந்து இப்போ வரைக்கும் நீங்க ஸ்டேஷன்ல எங்கிட்ட சொன்ன அந்த வார்த்தை தான் மனசுல ஓடிகிட்டு இருக்கு. உண்மையிலயே இந்த பேயிங்க ஆவிங்கல்லாம் இருக்கா… அந்த பொண்ணு பாத்தது ஒரு வேளை நீங்க சொன்ன அந்த பொண்ணத்தானா… எனக்கு இதுவரைக்கும் இந்த மாதிரி விஷயங்கள்லயெல்லாம் நம்பிக்கை இருந்ததே இல்லை”

“சார்… என்ன சார்…. நா எதோ சும்ம பேச்சு வாக்குல சொன்னேன்.. அதுக்கு போய் இப்புடி ஏன் சார் அப்செட் ஆகுறீங்க… “ என தங்கதுரை நெளிய
“சரி நீங்க இதுக்கு முன்னால இது மாதிரி பேய் சம்பந்தமான கேஸுங்க எதாது பாத்துருக்கீங்களா?”

“ஊர்ல ரெண்டு மூணு பேர பாத்துருக்கேன் சார்…. சிட்டிக்கு வந்ததுக்கு அப்புறம் அந்த நம்பிக்கையெல்லாம் செல்லாம போச்சு சார்…”

“ம்ம்ம்ம்… சரி அந்த கேஸுங்கள பத்தி சொல்லுங்க எனக்கும் போர் அடிக்குது… கொஞ்ச நேரம் கேட்டுத்தான் பாக்குறேன்” என கூறி ரவிக்குமார் சிரிக்க தங்கதுரை அவர் சிறுவயதாக இருந்த போது அவர் கிராமத்தில் பேய் பிடித்து ஆடிய நபர்களின் கதைகளை ஒவ்வொன்றாக சொல்ல ஆரம்பித்தார். 

மணி அதிகாலை 6 ஐ தொட்டிருந்தது. போர்டிக்கோவில் இரண்டு ப்ளாஸ்டிக் சேர்கள் போட்டு உட்கார்ந்திருந்தனர் ரவிக்குமாரும் தங்கதுரையும். சிறிது நேரத்தில் அழுது வீங்கிய முகத்துடன் கையில் இரண்டு காஃபி டம்ளர்களுடன் ரேவதி நெருங்கினாள்.

“ ஏம்மா இதெல்லாம்… ஆமா முகம் அழுதமாதிரி இப்டி வீங்கியிருக்கு…  தூங்கவே இல்லையா” என தங்க துரை கேட்க 

“இல்லை சார்… தூக்கமே வரல.. “ என ரேவதி பதிளலிக்க அவள் வந்ததிலிருந்து அவள் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்த ரவிக்குமார்

“மேடம் கேக்குறேன்னு தப்பா நெனைச்சிக்காதீங்க… உன்மையிலேயே நீங்க அன்னிக்கு ஒரு பொண்ண படிக்கட்டுல பாதீங்களா?” என்றதுதன் தாமதம்.
பொல பொலவென கண்ணீர் கொட்டியது ரேவதியின் கண்களிலிருந்து. 10 விநாடிகளுக்கு மேல் நிற்கமுடியாமல் அந்த இடத்தை விட்டு வேகவேகமாக மாடிக்கு ஓடி கதவை தாழிட்டுக் கொண்டாள். 

கைரேகை பதிவுகள் அனைத்தும் எடுக்கப் பெற்று ஆனந்தின் ஃப்ளாட் மூடப்பட்டு சீல் வைக்கப்படும் போது காலை 8.30.

“தங்கதுரை… இன்னிக்குள்ள போஸ்ட் மார்டம் ரிப்போர்ட் வந்துடும்னு நெனைக்கிறேன். நீங்க வீட்டுக்கு போய் ரெஸ்ட் எடுத்துட்டு ஈவினிங் அத கலெக்ட் பண்ணிட்டு எனக்கு கூப்புடுங்க.. நாம எதுக்கும் ஒரு தடவ ஈவினிங் இந்த ஃப்ளட்டுக்கு வந்து எதாவ்து எவிடென்ஸ் கெடைக்கிதான்னு பாப்போம்” என்றவுடன்

“ஓக்கே சார் “ என கூறிவிட்டு தங்க துரை அரைத் தூக்கத்தில் கூறிவிட்டு வீட்டுக்கு சென்றார். 

இரண்டு வார விடுமுறை முடிந்து அன்றுதான் மதன் ஆஃபீஸுக்கு கிளம்பிக் கொண்டிருந்தான். 

“மதன் இந்த சிட்சுவேஷன்ல நீ என்ன தனியா விட்டுட்டு போகனுமா… எனக்கு உண்மையிலயே ரொம்ப பயமா இருக்கு. அந்த வீட்ட பாக்கும் போதே எனக்கு எதோ மாதிரி இருக்கு”

“ரேவதி உனக்கே தெரியும் இந்த ரெண்டு வாரம் லீவ் எடுத்ததுக்கே ஆஃபீஸ்லருந்து எவ்வளவு ஃபோன்கால்ஸ் வந்துச்சின்னு. இன்னிக்கும் லீவ் எடுத்தேன்னா அப்புறம் நாளையிலருந்து நா வீட்லயே இருக்க வேண்டியதான். எதுக்கும் பயப்படாத.. கொஞ்ச நேரம் கழிச்சி உனக்கு எதோ மாதிரி இருந்தா கீழ் வீட்டு ஆண்டி கூட பேசிகிட்டு இரு… எல்லாம் சரியாயிடும்” என கூறி நெற்றியில் ஒரு முத்ததையிட்டு வேலைக்கு கிளம்பினான்.

மணி சரியாக மாலை 4 ஐ தொட்டது. தூக்கம் வராமல் வெகுநேரம் புறண்டு புறண்டு படுத்துக் கொண்டிருந்த ரவிக்குமாரின் செல்ஃபோன் அழைக்க மறுமுனையில் தங்கதுரை.

உடம்பை நெட்டி முறித்தபடி “ம்ம்ம்ம்ம்… சொல்லுங்க தங்க துரை… “
“சார் போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் கைக்கு கெடைச்சிருச்சி சார்.. ஆனா”

“சொல்லுங்க… என்ன ஆனா….”

“நீங்க தான் சார் கரெக்ட்….. “ என தங்க துரை மெல்லிய குரலில் இழுக்க
“நான் தான் கரெக்டா.. என்ன சொல்றீங்க தங்கதுரை… எனக்கு ஒண்ணும் புரியல”

“பேய் பிசாசு மேலயெல்லாம் நம்பிக்கையில்லைன்னு சொன்னீங்களே சார் அதுக்கு சொன்னேன்… “

“அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்?  கொஞ்சம் தெளிவா சொல்லுங்க“ என ரவிக்குமார் கேட்டதும்

“செத்தது லேடி இல்லசார்.. 30 வயசுக்குள்ள உள்ள ஒரு ஆண்”
இதயத்திலிருந்த மொத்த ராத்தமும் சட்டென மூளையை நோக்கி பாய ரவிக்குமாருக்கு தூக்கம் பறந்து போனது. விறுவிறுவென கிளம்பி 5 மணிக்கு ப்ளாட்டை அடைய தங்கதுரை ஏற்கனவே அங்கு நின்றிருந்தார்.

“என்ன தங்கதுரை… நா இத கொஞ்சம் கூட எதிர்பார்க்கல… நீங்க சொன்ன அந்த கான்செப்ட் உண்மையா இருந்தா இங்க இன்னொரு லேடி பிணம் எங்கயாது இருக்கனும் தானே”

“சார்… நா தெரியாம சொல்லிட்டேன் சார்… அத மறந்துடுங்க….” என கெஞ்சாத குறையாக தங்கதுரை ரவிக்குமாரை கேட்க, சிரித்தபடி இருவரும் மேலே சென்றனர்.

அரைமணி நேரம் ஃப்ளாட்டினில் சல்லடை போட்டு சலித்ததில் உருப்படியாக எந்த ஒரு ஆதாரமுமே சிக்கவில்லை. ஆனந்தும் அவரது மனைவியும் சேர்ந்திருந்தபடி ஒரே ஒரு கார்ட் சைஸ் ஃபோட்டோ மட்டுமே சிக்கியது. 

“என்ன சார் இது சொதப்பலா இருக்கே… இப்போ இந்த டெட் பாடி யாரோடதுன்னு கண்டுபுடிக்கிறதே பெரிய தொல்லையா இருக்கும் போலருக்கே… அது ஆனந்தோட பாடியா இல்லை வேற யாரோடதுமா… அது ஆனந்தோடதா இருந்த ஒரு வேளை அவரோட மனைவியே கொலை பண்ணிருப்பாங்களா, இல்லை ரெண்டு பேருமே சேந்து வேற யாரையாது கொலை பண்ணிட்டு எஸ்கேப் ஆயிட்டாங்களா.. “ என ரவிக்குமார் புலம்ப

“சார் அங்க பாருங்க” என தங்க துரை கூப்பிட அந்நார்ந்து பார்த்த ரவிக்குமாரின் முகத்தில் சிறு ஒளி. 

அந்த மேசையின் மேல் வைக்கப்பட்டிருந்த ஹெல்மெட்டை நோக்கி சென்ற ரவிக்குமார் “இத பத்திரமா ஒரு டெஸ்ட் பேக்ல எடுத்துக்குங்க.. இதவச்சி கேஸ்ல ஓரளவு க்ளாரிட்டி கொண்டு வந்துடலாம்” என கூற தங்கதுரை கை ரேகை பதியாமல் அந்த ஹெல்மெட்டை ஒரு பெரிய சைஸ் பாலிதின் பைக்குள் நுழைத்தார்.
 
“டொக்… டொக்… டொக்… “ கதவு தட்டும் சத்தம் கேட்டு சுயநினைவுக்கு வந்த ரேவதி கதவை திறக்க வெளியில் ரவிக்குமாரும், தங்க துரையும் நின்றிருந்தனர். 

“உள்ள வாங்க சார்...” என அழைத்து அருகிலிருந்த சோஃபாவில் அமரச்செய்தாள். 

“என்னம்மா நார்மல் ஆயிட்டியா… புதுசா பாக்குறதால உன்னால பொறுத்துக்க முடியல… இதுலயே பழகிட்டதால எங்களுக்கு ஒண்ணும் தெரிய மாட்டேங்குது… கொஞ்சம் தண்ணி குடும்மா… “ என கேட்க
உடனே ஃப்ரிட்ஜிலிந்த ஒரு பாட்டில் தண்ணீரை எடுத்து நீட்டினாள். ரவிக்குமார் அதை வாங்கி தொண்டைக்கு கொடுக்க, “ஏம்மா கூலிங் இல்லாத தண்ணி இல்லை?” என்றார் தங்கதுரை..

“கேன் வாட்டர் தீந்து போச்சு சார்… half an hour முன்னாடி தான் கால் பண்ணி சொன்னேன். இப்போ வந்துடும் சார்.. அஞ்சே நிமிஷம் இருங்க” என கிச்சனுக்குள் நுழைந்தவள் சிறிது நேரத்தில் இரண்டு காஃபி டம்ளர்களுடன் வந்தாள்.

“எங்களால உங்களுக்கு வேற வீண் சிரமம்” என ரவிகுமார் கூட “இதுல என்ன சார் இருக்கு…பரவாலை” என்றாள் ரேவதி.

காஃபியை முழுவதும் பருகி முடிக்கையில் மறுபடியும் கதவு தட்டப்படும் சப்தம்.. ரேவதி வேக வேகமாக சென்று கதவை திறக்க கையில் ஒரு 25 லிட்டர் வாட்டர் கேனுடன் 30 வயது மதிக்கத்தக்க ஒருவர் “மேடம் கால் பண்ணிருந்தீங்களே “ என்றார் “ம்ம்… ஆமா … உள்ள வச்சிருங்க” என்றதும் கேனை கிச்சனுக்கு எடுத்துச் சென்று வைத்துவிட்டு empty கேனை எடுத்துக்கொண்டு “மேடம் 35 rupees” என்றார்.

ரேவதி டேபிளின் மேலிருந்த தனது hand bag இல் பணத்த எண்ணிக் கொண்டிருக்க, ரவிக்குமாருக்கு மூளையில் எதோ சுரண்டியது.

“தம்பி உங்க பேர் என்ன?”

“சேகர் சார்” லேசான பயத்துடன் கூறினார் அந்த தண்ணீர் கொண்டு வந்த இளைஞர். 

“ஆமா எல்லார் வீட்டுக்குள்ளயும் கிச்சன் வரைக்கும் தண்ணி கேனை நீ தான் எடுத்துட்டு போய் வைப்பியா?”

“அப்டியெல்லாம் இல்லை சார்… ஜெண்ட்ஸ் வீட்டுல இருந்தாங்கன்னா வெளிலயே வச்சிட சொல்லுவாங்க. லேடீஸ் மட்டும் அவங்களால கேன தூக்க முடியாதுங்கறதால எங்கள கொண்டு வந்து உள்ள வைக்க சொல்லுவாங்க”

“ம்ம்ம்… எத்தனை வருஷமா இந்த வேலை பாத்துகிட்டு இருக்க”

“4 வருஷமா இந்த ஏரியாவுக்கு நாங்க தான் வாட்டர் கேன் சப்ளை பண்றோம் சார்”

“பக்கத்துல ஒரு வீடு இருக்கே அதுக்கும் நீதான் வாட்டர் சப்ளை பண்றியா…”

“நா ஆறு மாசமா இந்த லைன்ல போட்டுகிட்டு இருக்கேன் சார்.. எனக்கு தெரிஞ்ச வரைக்கும் அந்த வீடு பூட்டியே தான் இருக்கு” 

“அதுக்கு முன்னாடி யாரு இந்த ஸ்ட்ரீட்டுக்கு வாட்டர் கேன் சப்ளை பண்ணது. “

“எங்க சித்தப்பா ஜோதிராஜன் தான் பாத்துகிட்டு இருந்தார். இப்போ அவருக்கு உடம்பு சரியில்லாததால  லைனுக்கு வர்றதில்லை. கடையிலயே தான் இருக்காரு”

“எனக்கு அவர உடனே பாக்கனும். போய் அழைச்சிட்டு வா….. தங்கதுரை நீங்களும் கூட போய் கையோட ஜோதிராஜன கூட்டிட்டு வாங்க.” என கூறிவிட்டு ரேவதி வீட்டிலிருந்து கிளம்பி கீழுள்ள போர்ட்டிகோவில் chair போட்டு அமர்ந்தார். அடுத்த 25 நிமிடத்தில் சுமார் 55 வயது மதிக்கத்தக்க கிட்டத்தட்ட பாதி நரைத்த தலையுடனும் மெலிந்த தேகத்துடனுமான ஜோதி ராஜன் முன் நின்றார்.

“ஒரு வருஷத்துக்கு முன்னால இந்த ஏரியாவுக்கெல்லாம் நீங்க தான் வாட்டர் கேன் போட்டுகிட்டு இருந்தீங்களா?”என ரவிக்குமார் கேட்க

“ஆமா சார். “

“மேல லெஃப்ட் சைடு உள்ல ஃப்ளாட்டுக்கு வாட்டர் சப்ளை 
பண்ணிருக்கீங்களா எப்பயாது?”

“பண்ணிருக்கேன் சார்… ஆனா அவங்க ஒரு ரெண்டு மாசம் தான் இருந்துருப்பாங்க.. அப்புறம் எங்கயோ வெளியூர் பொய்ட்டாங்களாம்”

“அந்த வீட்டுல இருந்தவங்கள உனக்கு தெரியுமா… கடைசியா எப்போ அந்த வீட்டுக்கு சப்ளை பண்ணீங்க” 

“அந்த வீட்டுல ஒரு ஹஸ்பண்ட் ஒய்ஃப் இருப்பாங்க சார். ரெண்டு மூணு நாளுக்கு ஒரு தடவ வாட்டர் கேன் போடுவேன்” 

“அந்த ஃப்ளாட்டுல அவங்க ரெண்டு பேர் மட்டும் தான் இருந்தாங்களா இல்லை வேற யராவது வயசானவங்க எதும் இருந்தாங்களா… “ 

“இல்லை சார் எனக்கு தெரிஞ்சி அவங்க ரெண்டு பேரு தான் இருந்தாங்க. ஆனா ஒரே ஒரு நாள் மட்டும் புதுசா ஒருத்தர் இருந்தாரு. நா கடைசியா அந்த வீட்டுல வாட்டர் கேன் போட்டதும் அன்னிக்கு தான்” என ஜோதிராஜன் கூறியதும் ரவிகுமார் சற்று நிமிரிந்து உட்கார்ந்தார்.

“புதுசா ஒருத்தரா… அவர பாத்த உங்களுக்கு அடையாளம் தெரியுமா”
“தெரியும் சார்”

“ஒரு தடவதான் பாத்தேன்னு சொல்றீங்க… எப்டி அடையாளம் கரெக்டா சொல்லுவீங்க.” 

“இல்லை சார் வழக்கமா எப்போ வாட்டர் கேன் கொண்டு வந்தாலும் நா தான் கிச்சன் வரைக்கும் கொண்டு போய் போடுவேன்… அந்த சார் எப்பவும் கம்ப்யூட்டர்ல வேலை பாத்துட்டு இருப்பாரு. அந்த மேடம் என்னையே உள்ள கொண்டு வந்து வைக்க சொல்லுவாங்க. 

அன்னிக்கு மட்டும் கதவ தட்டும் போது ஒருத்தர் திறந்து கேனை வெளிலயே வச்சிட்டு போக சொன்னார். ரெண்டு கேனுக்கு 70 ரூபா பணத்துக்க்கு 500 ரூபா குடுத்தாரு. என்கிட்ட சேஞ்ச் இல்லாததால லைன் முடிச்சிட்டு வந்து தர்றேன்னு சொல்லிட்டு போனேன். லைன் முடிச்சிட்டு திரும்பி போய் பாக்கும் போது வீடு பூட்டியிருந்துச்சி. அப்புறம் ரெண்டு மூணு தடவ போகும் போதும் வீடு பூட்டியே தான் இருந்துச்சி. அப்புறம் கீழ உள்ள சாமி தான் அவங்க வெளியூர் பொய்ட்டதா சொன்னாரு. இன்னும் நா அந்த பேலன்ஸ் குடுக்கவே இல்லை. அதான் அவர் முகம் எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு என கூறி முடிக்க ரவிக்குமார் நடு நெத்தியில் விரலை வைத்து யோசிக்க ஆரம்பித்தார்.

திடீரென பைக் சத்தம் கேட்டது. மதன் ஆஃபீஸிலிருந்து வந்துகொண்டிருந்தான். பைக்கை போர்ட்டிகோவில் நிறுத்திவிட்டு ரவிக்குமாரையும் தங்கதுரையும் பார்த்து லேசாக புண்ணகைத்துவிட்டு படியேறி மேலே செல்ல, ஜோதிராஜன் மெல்ல குனிந்து ரவிக்குமார் காதருகே

“சார்…. அன்னிக்கு அந்த வீட்டுக்குள்ள இருந்தது இப்ப மேல போறாரே அவரு தான் சார்” என்றதும் ரவிக்குமாருக்கு தூக்கி வாரிப்போட்டது. 

அடுத்த பகுதியில் முற்றும் 
 

Friday, August 30, 2013

மாயவலை - பகுதி 4 !!!


Share/Bookmark

முதல் பகுதி இரண்டவது பகுதி மூன்றாவது பகுதி. தங்கதுரை கூறியதை உன்னிப்பாக கேட்டுக்கொண்டிருந்த ரவிக்குமார் சிறிது நேர மெளனத்திற்குபிறகு  “அந்த ஃப்ளாட்ல ஆனந்த்த நல்லா தெரிஞ்சவங்க யாரு?”

“கீழ் ஃப்ளாட்ல இருக்க இன்னொரு ஃபேமிலி 6 மாசம் முன்னாடி தான் வந்துருக்காங்க சார். அதே மாதிரி மே ஃப்ளாட்ல நம்மகிட்ட கம்ப்ளைண்ட் பண்ணவங்களூம் வந்து ஒரு வாரம் தான் சார் ஆச்சி. அந்த ப்ளாட்லயே ஆனந்த நல்லா தெரிஞ்சவரு சீனிவாச ஐயர் தான் “

“அந்தாள இன்னும் அரை மணி நேரத்துல ஸ்டேஷனுக்கு வர சொல்லுங்க”

“ஓக்கே சார்”

காவல் நிலையத்திலிரிந்து போன் செய்த அடுத்த 20 வது நிமிடத்தில் பேந்த பேந்த விழித்தபடி சீனிவாச ஐயர் ஸ்டேஷனில் ரவிகுமாருக்கு முன்னால் இருந்தார். 

“மிஸ்டர் ஐயர்.. உங்களுக்கு எவ்ளோ நாளா ஆனந்த தெரியும்.”

“ஒரு ரெண்டு மாச பழக்கம் தான் சார். அவர் புதுசா அந்த ஃப்ளாட்ட வாங்கிட்டு போன வருஷம் தான் வந்துருந்தார். ரெண்டு வாரத்துலயே நல்லா பேசி பழகிட்டார். அவருக்கு பேரண்ட்ஸ் யாரும் கெடையாது. ஊர்ல இருக்க நிலத்தையெல்லாம் வித்துட்டு இந்த ஃப்ளாட்ட வாங்கிருக்கதா சொன்னார்” 

“அவர் U S கெளம்பிட்டதா சொன்னீங்களே.. உங்களுக்கு எப்டி தெரியும்?”

“அவர் தான் சொல்லிண்டுருதார். அவரும் அவரோட ஒயிஃபும் U S போக போறதா சொன்னார். அப்புறம் ஒரு தடவ பாக்கும் போது இன்னும் ஒன் வீக்ல கெளம்பிடுவோம்னார். ரெண்டு நாள்லயே நாங்க கும்பகோணம்  என் ஆத்துக்காரி வீட்டுக்கு போய் நவகிரக தரிசனம் முடிச்சிட்டு ten days கழிச்சி வர்றச்சே வீட்டு பூட்டியிருந்தது. அதான் அவர் கெளம்பிட்டாருன்னு சொன்னேன்”

“ஹ்ம்ம்ம்ம்… அப்போ அவர் U S போனதுக்கு எந்த சாட்சியும் இல்லை. சரி அவர் போயி ஒண் இயர் ஆயிடுச்சே அவர் பேருக்கு எதாது லெட்டர், கிரெடிட்கார்ட் பில்ஸ்…etc இதுமாதிரி எதாது வந்துருக்கா.. இல்ல அவர தேடிட்டு யாராது வந்தாங்களா?”

“நேக்கு தெரிஞ்சி அந்த மாதிரி எதும் வரலை. யாரும் தேடிண்டும் வரலை” 

“சரி நீங்க போகலாம்” என்ற உடன் தப்பித்தோம் பிழைத்தோமென காற்றாக வீட்டுக்கு பறந்தார் ஐயர். 

“தங்கதுரை… இது என்னவோ ரொம்ப க்ரிட்டிகல் கேஸ் மாதிரி தெரியிது. நீங்க இன்னும் கொஞ்சம் டீப்பா இறங்கி சில டீடெய்ல்ஸ் எடுக்கனும். அப்பதான் நாம அந்த வீட்டுக்குள்ள போக பர்மிஷன் வாங்க முடியும். நீங்க முக்கியமா பண்ண வேண்டியது ஆனந்தோட பாங்க் டீடெய்ல்ஸ், பாஸ்போட்ர்ட் ID டீடெய்ல்ஸ் எப்டியாவது அவங்க கம்பெனிலயோ இல்ல ஃப்ரண்ட்ஸ்கிட்டயோ கலெக்ட் பண்ணுங்க.  அவர் அக்கவுண்ட் வழியாவோ இல்ல ஏடிஎம் கார்டு மூலமாவோ ரீசண்ட்டா எதாவது transactions இருக்கான்னு செக் பண்ணுங்க. 

அந்த பாஸ்போர்ட் டீடெய்ல வச்சி கடைசியா எந்த கண்ட்ரில செக் இன் ஆயிருக்குன்னு பாருங்க. சீனிவாச ஐயர்கிட்ட அவங்க கும்பகோணம் போன டேட்ஸ வாங்கிட்டு அந்த டைம் பீரியட்ல US க்கு ஆனந்த் ட்ராவல் பண்ணிருக்காரான்னு பாருங்க. எவ்ளோ சீக்கிரம் நீங்க டீட்டெய்ல் கலெக்ட் பண்றீங்களோ அவ்ளோ நல்லது. இந்த டீடெய்ல்ஸ் கலெக்ட் பண்றதுல எதாவது ப்ராப்ளம் இருந்தா உடனே என்ன காண்டாக்ட் பண்ணுங்க.” என மூச்சுவிடாமல் ரவிகுமார் பேசி முடிக்க

“ஓக்கே சார்… ஒரு ரெண்டு நாள்ல மொத்த டீட்டெய்ல்ஸும் கலெக்ட் பண்ணிடுறேன் சார். “ என கூறி விட்டு தங்கதுரை வேலையை ஆரம்பித்தார்.

ஒரு வழியாக மதனும் ரேவதியும் ஒரு நாள் ஊடலுக்கு பிறகு சமாதானம் ஆகியிருந்தனர். ரேவதி இன்னும் ஒரு வித பயத்திலேயே இருக்க அவ்வப்போது மதன் எதாவது பேசி டைவர்ட் செய்து கொண்டிருந்தான். 

சரியாக இரண்டு தினங்கள்.. மதியம் இரண்டு மணிக்கு தங்க திரை நெத்தி வியர்வையை துடைத்துக் கொண்டே ஸ்டேஷனுக்குள் வந்தார்.
எதிர்பார்த்து காத்திருந்த ரவிகுமார்

 “என்ன சார்… எதாவ்து டீடெய்ல்ஸ் கலெக்ட் பண்ணீங்களா? எனிதிங் யூஸ் ஃபுல்?”

“கிட்டத்தட்ட எல்லா டீடெய்லுமே கலெக்ட் பண்ணிட்டேன் சார். “
“ம்ம்… சொல்லுங்க”

“சார் முதல் விஷயம் ஆனந்தோட பாஸ்போர்ட் டீடெய்ல்ஸ் செக் பண்ணி பாத்தப்போ இதுவரைக்கும் ஒரு தடவ கூட எந்த ஃபாரின் எண்ட்ரிஸூம் இல்லை… அதனால அவரு US பொய்ட்டாருங்கரது முதல் பொய்… கண்டிப்பா இந்தியாவ கடந்து அவரு எங்கயுமே போகல.. அவர் ஒயிஃபோட டீடெய்ல்ஸ் எதுவும் கிடைக்கல…

“ம்ம்ம்”

“அப்புறம் கடந்த ஒரு வருஷமா அவரோட பேங்ல எந்த ட்ரான்ஸாக்ஷனுமே நடக்கல. ஆனா அதுக்கு முன்னால அவரோட ட்ரான்ஸாக்ஷன கொஞ்சம் செக் பண்ணி பாக்கும் போது ஒரு விஷயம் நெருடலா இருக்குது சார். அவர் US கெளம்புனதா சொல்லப்பட்ட அந்த நாட்களுக்கு சுமார் ஆறு மாசத்துகு முன்னாலருந்து அவரோட அக்கவுண்ட்ல ஒவ்வொரு மாசமும் கம்பெனி சம்பளம் இல்லாம பத்து பத்து லட்ச ரூபாயா 50 லட்ச ரூபா 5 மாசத்துல கிரெடிட் ஆயிருக்கு. ஆனா அது கிரெடிட் ஆன 2 மூணு நாள்லயே அப்படியே வித்ட்ராவலும் பண்ணப்பட்டுருக்கு.” 

“குட்.. இது போதும் அந்த வீட்டுக்குள்ள போக… மத்த டீடெய்ல் எல்லாமே நமக்கு அங்கயே கெடைச்சிடும். உடனே இத ஒரு ஸ்டேட்மெண்ட்டா ரெடி பண்ணி உடனே அந்த வீட்டுக்குள்ள போக அப்ரூவல் வாங்குங்க. இன்னிக்கே… ”

“ஓக்கே சார்… சார் அப்புறம் என்னோட ட்வுட் என்னன்னா…”

“ம்ம்ம்… சொல்லுங்க… “

“ரேவதி மேடம் எதோ பொண்ணு படில உக்காந்துருந்தது பாத்தேன்னு சொல்றாங்க… அநேகமா ஆனந்த் அவரு ஒயிஃப் எதாது பண்ணிட்டு…. அந்த வீட்டுலருந்து எஸ்கேப் ஆயிருக்க சான்ஸ் இருக்கு சார்..”

ரவிகுமார் லேசாக சிரித்துக் கொண்டே “என்ன சார்… அப்போ அன்னிக்கு அவங்க அந்த படிக்கட்டுல பாத்தது ஆனந்த்தோட ஒயிஃப் ஆவின்னு சொல்ல வர்றீங்களா… என்ன சார்… நாமல்லாம் போலீஸ்காரங்க.. இதுமாதிரி பேசக்கூடாது… போய் அப்ரூவலுக்கு ரெடி பண்ணுங்க”

“இல்ல சார்…என் மனசுல தோணுனத சொன்னேன். “ என்று சொல்லிவிட்டு திரும்பி சீட்டுக்கு சென்று வேலையை தொடர்ந்தார்.. தங்கதுரை… 

மணி சரியாக இரவு ஒன்பது.  பொலேரோவில் வீட்டுக்கு சென்றுகொண்டிருந்த ரவிக்குமாரின் செல்போன் அழைத்தது. மறுமுனையில் தங்கதுரை.

“சொல்லுங்க தங்கதுரை”

“சார் அந்த வீட்டுக்குள்ள போய் search பண்ண ஆர்டர் வாங்கியாச்சு சார். காலையில போயிடலாம் சார்… “

“என்னது காலையிலயா… நோ நோ… உடனே… இன்னிக்கு நைட்டே கெளம்புறோம். எனக்கு எதோ தப்பா படுது நா வீட்டுல டின்னர் முடிச்சிட்டு ஒன் ஹவர்ல வந்துடுறேன்.. நீஙகளும் சாப்பிட்டு ரெடியா இருங்க… இன்னும் ரெண்டு பேர கூட ரெடி பண்ணிக்குங்க. எதுக்கும் லோக்கர் ரிப்போர்ட்டர் ஒருத்தருக்கும் இன்பார்ஃம் பண்ணிடுங்க. “

“ஓக்கே சார்” 

ரவிகுமார், தங்கதுரை மற்றும் இரண்டு போலீஸ்காரர்கள் அந்த ஃப்ளாட்ஸை அடைந்திருந்த போது மணி இரவு 10.30. ரிப்போர்ட்டர் ஒருவர் ஏற்கனவே வந்து வெளியில் காத்திருந்தார். பூட்ஸ் சத்தங்கள் சீனிவாச ஐயரையும், மதன் ரேவதியையும் வீட்டுக்குள்ளிருந்து வெளிக் கொணர்ந்தன. 

சீனிவாச ஐயர் மாடிப்படிக்கட்டில் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க மதனும் ரேவதியும் அவர்கள் வீட்டு வாசற்படியிலேயே நின்று ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டிருந்தனர்.
காவலாளி ஒருவர் கையில் வைத்திருந்த பெரிய இரும்புக்கம்பியால் அந்த ஃப்ளாட்டின் கிரில் கேட்டில் தொங்கிக் கொண்டிருந்த பூட்டின் தலையில் மடார் மடாரென நான்கு போடு போட வலி தாங்காமல் வாயை பிளந்தது. அதற்கு பின்னிருந்த ஃப்ளாட்டின் மெயின் கதவை ஒரு பெரிய கடப்பாரையை வைத்து நெம்ப பத்து நிமிட போராட்டத்திற்கு பிறகு சுவற்றின் ஒரு சிறு சில்லை பேர்த்துக் கொண்டு திறந்து கொண்டது. 

முதலில் ரவிக்குமார் வீட்டுக்குள் வலதுபக்க இடுப்போரம் இருந்த பிஸ்டலில் கை வைத்தபடி காலடி எடுத்து வைக்க, தங்க துரையும் மற்ற இரண்டு போலீஸ்காரர்களும் பின் தொடர்ந்தனர். மதன், ரேவதி ஐயர் மூவரும் கதவோரமாக நின்று எட்டி எட்டி பார்த்துக் கொண்டிருந்தனர்.
ரவிகுமார் ஒவ்வொரு அடியாக மெல்ல மெல்ல எடுத்து வைத்து கைக்கு கிடைத்த ஒரு ஸ்விட்ச் போர்டில் இரண்டை அமுக்க பளீரென வெளிச்சத்தை கக்கியது ஒரு மின்விளக்கு. 

வீடுமுழுக்க கால் வைத்தால் அச்சு பதியும் அளவிற்கு சிறு சிறு மணல் குப்பைகள். ஆங்காங்கு கலைத்து போடப்பட்ட சிறு சிறு பொருட்கள் என ஒரு வருடத்திற்கு முன்பு பயன்படுத்தப் பட்ட வீடு என்பதை சொல்லாமலேயே நிருப்பித்திருந்தது. லேசாக பழைய புத்தகதிலிருந்து வரும் வாசனையை போல நெடியேறியது. இரண்டு பெட்ரூம் மற்றும் கிச்சனுடைய அந்த வீட்டை 5 நிமிடத்தில் இன்ச் இன்சாக அளந்தனர் நால்வரும். சமீபத்தில் ஆள் நடமாட்டம் இருந்ததற்கான எந்த அறிகுறியையும் அந்த வீடு காட்டவில்லை. மேலும் ரேவதி கேட்ட அந்த சத்தம் வந்ததற்கு வீட்டின் எந்த பகுதியும் உடைக்கப் படாமல் அழகாகவே இருந்தது. 

வீடுமுழுவதும் சுற்றிவிட்டு ஏமாற்றமே மிஞ்சி மேல்நோக்கி பார்த்த ரவிக்குமாருக்கு கண்ணில் அது பட்டது. பெட்ரூமில் ப்ளைவுட் கதவுகள் போட்டு பூட்டப்பட்டிருந்த லாஃப்டே அது. வெளியூர் செல்லும் அனைவரும் லாஃப்டுகளுக்கு பூட்டு போட்டு பூட்டிச் செல்வது புதிதல்ல. சற்று பார்வையை லாஃப்ட் கதவுகள் மேல் பதியச் செய்ய சட்டென ரவிக்குமாரின் முகம் மாறியது. அந்த ப்ளைவுட் கதவுகளின் இடுக்குகள் அனைத்தும் செல்லோ டேப்புகள்ளால் காற்று புகாதவாறு அடைக்கப்பட்டிருந்தது. 

“தங்கதுரை… அந்த லாஃப்ட்ட ஒப்பன் பண்ண சொல்லுங்க” என்றவுடன் அருகிலிருந்த இருவரும் ஒரு ஸ்டுலில் ஏறி கம்பியால் லாஃப்ட் கதவுகளின் பூட்டுகளை ஒரு நிமிடத்தில் தகர்த்தனர்.

“அத ஓப்பன் பண்ணுங்க” என ரவிகுமார் சொன்னவுடன் ஒரு காவலாளி லாஃப்டின் ஒரு கதவை மெல்ல திறந்ததுதான் தாமதம்.. 

“குப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்” என வீசியது அந்த நாற்றம். கன நேரத்தில் வீடுமுழுவதும் துர்நாற்றம் பரவ மற்றொரு காவலாளி இரவு சாப்பிட்டத்தை அந்த இடத்திலேயே கக்கினார்.

வேக வேகமாக கர்சீப்பை எடுத்து மூக்கிற்கு கொடுத்து பாக்கெட்டில் வைத்திருந்த டார்ச்சை எடுத்து மெல்ல லாஃப்டின் உள்ளே அடிக்க, அவர் கண்ட காட்சி முகத்துக்கு ரத்தஓட்டத்தை நிறுத்தி வெளிர் நிறமாக்கியது.
கிட்டத்தட்ட முழுமையாக அழுகிவிட்ட ஒரு உருத்தெரியாத மனித உடல் லாஃப்டின் உள்ளே மடிந்து காணப்பட்டது. 

அடுத்த பதிவில் தொடரும்.

Wednesday, August 28, 2013

மாயவலை - பகுதி 3 !!!


Share/Bookmark

முதல் பகுதியைப் படிக்க இங்கே க்ளிக்கவும். இரண்டாவது பகுதியை படிக்க இங்கே க்ளிக்கவும். இரண்டு நிமிடத்திற்கு மேல் ரேவதியால் அங்கு நிற்க முடியவில்லை. கால்களில் லேசான நடுக்கம் வேறு தொற்றிக்கொண்டது. மெல்ல பெட்ரூமிற்கு சென்று “மதன்…. மதன்…” என மெல்லிய குரலில் எழுப்ப மதன் “ம்ம்ம்ம்ம்ம்…” என முனகிவிட்டு மறுதூக்கத்திற்கு சென்றுவிட்டான். உடனே அறைகதவை நன்கு தாழிட்டு போர்வையை இறுக போர்த்திக்கொண்டு மதனுக்கு மிக அருகில் படுத்து உறங்க முயற்சி செய்தாள்.

காலை 9 மணி…. ரேவதி நடந்ததை கூற மதன் ஒன்றும் புரியாமல் விழித்துக் கொண்டே “என்ன ரேவதி… அந்த வீட்ல இருக்கவங்க U S போயி ஒரு வருஷம் ஆச்சாம். வெளியில தொங்குற பூட்ட நீயும் தான பாக்குற. இப்போ இதுமாதிரி பூட்டின வீட்டுக்குள்ளருந்து சத்தம் வருதுன்னா யாரு நம்புவாங்க சொல்லு… நீ எதோ நல்லா பயந்துருக்கன்னு நெனைக்கிறேன்”

“என்னங்க… சத்யமா நா கேட்டேங்க… கிட்டத்தட்ட 5 நிமிஷம் நின்னு சுவத்துல காது வச்சி கேட்டேன். அது எதேச்சையா கேட்ட சத்தமோ இல்லை வேற எங்கிருந்து வந்த சத்தமோ இல்லை… நிச்சயமா அந்த வீட்டுக்குள்ளருந்து தான்.. எனக்கென்னவோ அந்த வீட்டுல எதோ தப்பு இருக்க மாதிரியே தோணுதுங்க”

“சரி ஒண்ணு பண்ணுவோம்… அந்த பூட்டின வீட்டுக்கு நேர் கீழதான் சீனிவாசன் சார் வீடு இருக்கு. ஒரு வேளை அந்த வீட்டுக்குள்ளருந்து யாராவது உடைச்சிருந்தா நமக்கு கேட்டத விட அவங்க வீட்டுக்கு தான் அதிகமா சத்தம் கேட்டுருக்கும்.. ஏன் டவுட்டு… இரு அவரையே கேட்டுடலாம்…” என்று கூறிவிட்டு வேக வேகமாக படியிறங்கி சீனிவாச ஐயர் வீட்டு காலிங் பெல்லை அழுத்தினான். 

மூன்று முறை விட்டு விட்டு அழுத்திய பின்னர் அரை தூக்கத்தில் தண்ணீர் ஊற்றி எழுப்பி விட்டதை போல கண்ணை கசக்கிக் கொண்டே கதவை திறந்து

“என்ன சார்… காலங்காத்தாலையே… ஃப்ளாட்ல ஜலம் வர்லியா… நேத்து நைட்டே டாங் ஃபுல் பண்ணிதானே வச்சிருந்தேன்” என்க

“சார் அது இல்லை சார்… ஒரு முக்கியமான விஷயம்… அதான்..” என்றான் மதன்.
“சத்த இருங்கோ” என்று உள்ளே சென்றவர் சரியாக 5 நிமிடத்தில் முகம் அலம்பிவிட்டு அரைகை பணியனுக்கு மாறி பார்க்கிங்கிற்கு வந்து “சொல்லுங்கோ சார்… என்ன சமாஜாரம்? என்றார்.

சார் கேக்குறேன்னு தப்பா நெனைச்சிக்காதீங்க… “நேத்து மிட் நைட்ல என் ஒயிஃப் கிச்சனுக்கு தண்ணி குடிக்க போகும் போது பக்கத்து வீட்டுல எதோ சத்தம் கேட்டதா சொல்றா… அதான் உங்களுக்கு எதாவது அப்டி கேட்டுச்சான்னு கேக்கலாம்ன்னு வந்தேன்…”

“என்ன உளருரேல்… அந்த ஆத்துலதான் ஒரு வருஷமா மனுஷாலே இல்லையேன்னோ… பூனை கீனை எதும் உள்ள போறதுக்கு கூட எந்த ஓப்பனிங்குமே இல்லை… எல்லா விண்டோஸுமே க்ளோஸ்டா தான் இருக்கு… “

“சார்… அது மட்டும் இல்லை நேத்து மிட் நைட்ல நாங்க படம் பாத்துட்டு வரும்போது படில கூட யாரோ உக்கார்ந்துருந்த மாதிரி என் ஒயிஃப் பாத்துருக்காங்க சார்… அதான் ஒரு டவுட்… “

“சார் நீங்க சொல்றதெல்லாம் நேக்கு ரொம்ப புதுசா இருக்குறது. நான் இங்க பதினைஞ்சி வருஷமா நாங்க இந்த ஆத்துலதான் இருக்கோம். இதுவரைக்கும் எந்த ப்ராப்ளமும் வந்ததில்லை”

“சார் நானும் 7 வருஷமா இன்னொரு ஃப்ளாட்லதான் தான் இருந்துட்டு வரேன். நானும் இது மாதிரி யார்கிட்டயும் போய் சொல்லிகிட்டெல்லாம் இருந்ததில்லை. இங்க நாங்க வந்த டே ஒன்லருந்து எதேதோ ப்ராப்ளம் வருது. அதான் கேட்டுட்டு போலாம்னு வந்தேன். சார்.. அந்த வீட்டோட கீ எதாவது உங்ககிட்ட இருக்கா? ஜஸ்ட் கன்ஃபார்ம் பண்ணிக்கிரதுக்காக ஒரு தடவ ஓப்பன் பண்ணி பாக்கலாமா?” என மதன் கேட்க

பதட்டத்துடன் “சார்… என்ன சார் இப்டி கேக்குறேள்… என்கிட்ட அவா கீ எல்லாம் கொடுத்துட்டு போகலை… இதுமாதிரியெல்லாம் கேட்டு என்ன வம்புல மாட்டி விட்டுடாதீங்க சார். “ என சொல்லிக் கொண்டிருக்கையில் வீட்டு வாசலில் சயரன் வைத்த ஒரு பொலேரோ வந்து நின்றது. 

உள்ளிருந்து இரண்டு காவல்துறை அதிகாரிகள் இறங்கி வந்து
“இங்க மிஸ் ரேவதிங்கறது யாரு?” 

மதன் பயம் கலந்த பதற்றத்துடன் ‘எ…. என்னோட ஒயிஃப் தான் சார்… என்ன விஷயம்?” 

“இல்லை இன்னிக்கு காலையில அவங்க ஸ்டேஷனுக்கு கால் பண்ணி இங்க பக்கத்து ஃப்ளாட்ல எதோ ப்ராப்ளம் இருக்கதா சொன்னாங்க. அதான் விசாரிச்சிட்டு போகலாம்னு வந்தோம்” என்ற இன்ஸ்பெக்டர் ரவிகுமார். சிவப்பான தோற்றத்துடன் தொப்பையை தொலைத்து ஆரம்ப கால சரத்குமாரை ஞாபகப் படுத்தினார்

“சா… சார் … அதெல்லாம் ஒண்ணும் பெரிய ப்ராப்ளம் இல்லை சார். இப்ப தான் புதுசா குடி வந்துருக்கோம்… கொஞ்சம் டிஸ்டர்ப் ஆயிருக்காங்க அவ்ளோதான் “ என மதன் சமாளிக்க முயல..

“சாரி மிஸ்டர்.. உங்க நேம் என்ன?”

“மதன் சார்”

“மிஸ்டர் மதன் உங்க மனைவி எதோ ரொம்ப நாளா ஐடிலா இருக்க ஒரு வீட்டுக்குள்ளருந்து சத்தம் கேக்குதுன்னு கம்ப்ளைண்ட் பண்ணிருக்காங்க. போனமாசம் ஹைதராபாத்ல நடந்த டெரரிஸ்ட் அட்டாக் ஞாபகம் இருக்குல்ல. தீவிரவாதிங்க இந்த மாதிரியான ஒரு வீட்டுக்குள்ள தான் ரொம்ப நாள பதுங்கி இருந்துருக்காங்க. அதனால மேலிடத்துலருந்து இந்த மாதிரி ஐடில் ஹோம்ஸ் எது இருந்தாலும் ஸ்பெஷல் இம்பார்ட்ன்ஸ் குடுக்க சொல்லிருக்காங்க. அதான்.. உடனே வந்தோம். அந்த ஃப்ளாட் எங்க இருக்கு..” என கேட்க 

“சார் என் பேர் சீனிவாச ஐயர்… 15 வருஷமா இந்த ஃப்ளாட்ஸ்லதான் இருக்கேன்… மெயிண்டனன்ஸ் மொத்தமும் நா தான் பாத்துண்டுருக்கேன். இவா சொல்ற ப்ராப்ளம் இதுவரைக்கும் இங்க நாங்க ஃபேஸ் பண்ணதே இல்லை” என வழவழக்க

“சார்… அந்த ப்ளாட் எங்கன்னு காமிங்க சார்” என்று கொஞ்சமும் அவர் பேச்சை காதில் வாங்கிக்கொள்ளாமல் ரவிகுமார் முன்னே செல்ல காண்ஸ்டபிள் தங்கதுரை பின் தொடர்ந்தார். தங்கதுரை பார்த்த மாத்திரத்தில் நம்மூர் போலீஸென அடையாளம் கண்டுகொள்ளும் வகையில் டிபிகல் தொப்பையுடனும் கருப்பு வெள்ளை கலந்த நரை முடியுடனும் லேசாக வி.கே.ராமசாமியை ஞாபகப்படுத்தினார். 

மதன் விறுவிறுவென மேலே அவர்களுக்கு முன்னரே மேலே சென்று ரவிகுமார் படியேறிக்கொண்டிருக்கும் போதே பூட்டு தொங்கிக் கொண்டிருந்த அந்த கதவை நோக்கி கையை நீட்டி “இது தான் சார் அந்த ப்ளாட்” என்றான். ஒரு நிமிடம் அந்த வாயிற் கதவை மேலும் கீழுமாக பார்த்துவிட்டு “தங்கதரை…” என கூப்பிட்டு வெளிநோக்கி ஒரு கண்ணசைவை காட்டினார்.

“ஓக்கே சார்” என கூறிவிட்டு தங்கதுரை படியிறங்கி கீழே செல்ல இன்ஸ்பெக்டர் ரவிகுமார் ரேவதியை அழைத்து விபரங்களை கேட்டறிந்தார். ரேவதி சுட்டிக்காட்டிய அந்த சத்தம் கேட்ட இடத்தையும் பார்வையிட்டு வெளிப்புறமும் பார்வையை ஓடவிட்டுக் கொண்டிருந்தார். சரியாக ஐந்து நிமிடத்தில் தங்கதுரையின் குரல் கேட்டது. 

“சார் ப்ளாட்ட சுத்தி பாத்துட்டேன் சார். ஃபுல்லா sealed சார்.. முன்பக்கத்துல இருந்தோ இல்லை சைடுலருந்தோ இந்த ஃப்ளாட்குள்ள யாரும் போக முடியாது. பின் பக்கம் மட்டும் சிட் அவுட் மாதிரி ஒரு இடத்துல க்ரில் போட்டு லாக் பண்ணிருக்கு. ரயில்வே ட்ராக் பக்கம் இருந்து யாராது உள்ள போக முயற்சி பண்ணலாம். ஆனா அதும் அவ்ளவு ஈஸி இல்லை. Well trained ஆளுங்க மட்டும் தான் முடியும். இப்ப இருக்க கண்டிஷன்ல அந்த வழியா யாரும் உள்ள போனதுக்கான எந்த தடயமும் இல்லை. “ என ஐந்து நிமிடத்தில் தான் வெளியிலிருந்து அலசியதை ரவிகுமாரிடம் ஒப்புவித்தார். 

“குட்… so, உள்ள ஒரு வேளை ஆளுங்க நடமாட்டம் இருந்தா அவங்க வெளியிலருந்து வர வாய்ப்பே இல்லை. இந்த மெயிண் டோர் வழியாதான் போகனும். இந்த டோர் கீ உங்க யார் கிட்டயாது இருக்கா? இந்த ஃப்ளாட்டோட ஓனர் யாரு? இப்போ எங்க இருக்காரு?” என மற்றவர்களை பார்த்து கேட்க 

“சார் இந்த ஹவுஸ் ஓனர் பேரு ஆனந்த். அவரும் அவரு ஒயிஃபும் இங்க இருந்தங்க. ஒன் இயர் முன்னால அவர கம்பெனிலருந்து யு.எஸ் அனுப்பிட்டாங்க” என்றார் சீனிவாச ஐயர்.

“அவரோட இப்பவும் டச்ல இருக்கீங்களா? உங்களுக்கு ஃபோன் பன்னுவாரா?”

“இல்ல சார். ஒருமுறை கூட பண்ணதில்லை.. நம்பர் எதுவும் நேக்கு தெரியலை. ஒரு வேளை அவரு கம்பெனில கேட்டா தெரிய வாய்ப்பு இருக்கு”

“அவர் எந்த கம்பெனில ஒர்க் பன்றார்” 

“ “ ன்னு ஒரு கம்பெனி சார் என கூற
“தங்கதுரை நீங்க உடனே அந்த கம்பெனிக்கு போய் ஆனந்த் காண்டாக்ட் டீடெய்ல்ஸ் , ஃபோன் நம்பர் எதாது கெடைக்குதான்னு பாருங்க.” என்றார் ரவிகுமார்.

“ஓக்கே சார்” 

“ஓக்கே நாங்க அவரோட காண்டாக்ட் பண்ணி பேசிட்டு எதாது ஆப்ஷன் இருக்கானு பாக்குறோம். அவரோட பர்மிஷன் இல்லாம வீட்டுக்குள்ள நாம போறது சட்டப்படி தப்பு… “ என கூறிக்கொண்டே ரவிகுமாரும், தங்கதுரையும் கீழிறங்கி பொலேரோவில் புறப்பட்டது தான் தாமதம்.

“ரேவதி உனக்கு கொஞ்சமாது அறிவு இருக்கா… உன்ன யாரு போலீஸ்க்கெல்லாம் போக சொன்னது… இப்போ பாரு அந்த கீழ்வீட்டு ஐயரு ஓவரா பேசுறாரு” என பொறிந்தான் மதன்.

“இல்லீங்க நேத்து ஸ்டேஷன் போகும்போது அங்க இருந்த ஒரு மேடம் தான் என்ன ப்ராஃப்ளம்னாலும் உடனே கால் பண்ணுங்கன்னு நம்பர் குடுத்தாங்க. விஷயம் ரொம்ப சீரியசானதால தான் நான் நீங்க எழுந்திரிக்கிறதுக்கு முன்னாலயே அவங்களுக்கு கால் பண்ணி சொல்லிருந்தேன். 

மதன் கோவமான முகத்துடன் டவளை எடுத்துக்கொண்டு பாத்ரூமிற்குள் சென்று கதவை படார் என சாத்தினான்.

டிவிஎஸ் எக்ஸெலை நிறுத்திவிட்டு தங்கதுரை ஸ்டேஷனுக்குள் நுழையும் போது மணி மாலை 5. நேராக இன்ஸ்பெக்டர் ரவிகுமார் டேபிளுக்கு சென்று 

“சார் அந்த கம்பெனில விசாரிச்சிட்டு வர சொன்னீங்கல்ல சார்”

“ஆமா… என்னாச்சி… அவர் காண்டாக்ட் நம்பர் எதாது கெடைச்சிதா?”

“சார் ஒரு சின்ன ப்ராப்ளம்… “ என தங்கதுரை இழுக்க

“ப்ராப்ளமா என்ன ப்ராப்ளம்?”

“சார் ஆனந்த்த பத்தி விசாரிச்சதுல கம்பெனி மேனேஜ்மெண்லருது எந்த சரியான தகவலும் இல்லை… ஸ்டாஃப்ஸ் சில பேருகிட்ட பர்ஸனலா விசாரிச்சி பாத்ததில ஒரு விஷயம் சொன்னாங்க… ஆனந்த்த கம்பெனிலருது U S க்கு அனுப்பவே இல்லையாம். அவர் மேல எதோ பெரிய கம்ப்ளைண்ட் இருந்ததால அவர ஒரு வருஷத்துக்கு முன்னாலயே கம்பெனிய விட்டு தூக்கிட்டாங்களாம் சார்” என தங்க துரை கூறிக் கொண்டிருக்க இன்ஸ்பெக்டர் ரவிகுமாரின் முகம் மெல்ல மாறத் தொடங்கியது. 

அடுத்த பதிவில் தொடரும்

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...