Strictly படம் பார்த்தவர்களுக்கு மட்டும்
ஹிட் முதல் பாகம் “Hit- The first case” eh சுமார் ரகம்தான். ஆனால் படம் வெற்றி பெற்று ஹிந்தியில் ரீமேக்கும் ஆகியுள்ளது. (முதல் பாகத்தின் விமர்சனம் கீழே )
http://www.muthusiva.in/2020/05/forensic-hit-v1-murder-case.html?m=1
இரண்டாம் பாகம் ஆத்வி ஷேஷ் நாயகனாக நடிக்கிறார் என்றதும் முதல் பாகத்தை விட நிச்சயம் நன்றாக இருக்கும் எனத் தோன்றியது. சமீபகாலமாக ஆத்வி சேஷின் கதைத் தெரிவுகள் அப்படி இருந்தது.
வழக்கமான டெம்ப்ளேட் சீரியல் கில்லர் கதை. ஆரம்பத்திலேயே மூலக்கதையுடன் ஆரம்பித்து, ஹீரோவின் கதாப்பாத்திரத்தை விளக்க ஒரு சிறிய கொலையை துரிதமாகாக் கண்டுபிடிப்பது போலக் காட்டுவது, அடுத்து அவரையே மிரள வைக்கும் கொலை என முறையான ஒரு சீரியல் கில்லர் இன்வெஸ்டிகேஷனாகச் செல்கிறது. பெரிதாக எங்கும் போரடிக்கவில்லை. அதே சமயம் மிகவும் எக்ஸைட்டிங்காகவும் இல்லை. ஏனென்றால் எதுவுமே புதிதாக இல்லை.
புதிதாக இல்லையென்றாலும் இந்த மர்டர் இன்வெஸ்டிகேஷன் கதைகள் எப்பொழுதுமே யார் கொலையாளி என்கிற யூகத்தை நமக்குள் ஓடவிட்டு ஒரு சுவாரஸ்யத்தைக் உண்டாக்கும். அதை நிச்சயம் உண்டாக்குகிறார்கள். பெரும்பாலும் இதுபோன்ற கதைகளில் நிறைய கதாப்பத்திரங்களைக் கொண்டு வந்து, பார்வையாளர்களைக் குழப்புவார்கள். ஆனால் இங்கு அதுவும் இல்லை. எப்படி யூகித்தாலும் இருவர்தான் கொலையாளியாக இருக்கவேண்டும் என்று நமக்குத் தோன்றுகிறது. வேறு ஆப்ஷன்கள் இல்லை. அதே போல அந்த இருவரில் ஒருவர்தான் கொலையாளியாகவும் காட்டுகிறார்கள்.
இதுபோன்ற சஸ்பென்ஸ் படங்களில் முடிச்சு எவ்வாறு அவிழ்க்கப்பட்டிருக்கிறது என்பதைப் பொறுத்தே அந்த முடிச்சிற்கான மதிப்பு. லாஜிக் ரொம்பவே முக்கியம். ஆனால் இந்த ஹிட் இரண்டாம் பாகத்தில் லாஜிக் பல்லைக் காட்டுகிறது. இன்னும் சொல்லப்போனால் அபத்தமாகவும் இருக்கிறது.
படத்தில் எனக்கிருந்த சில கேள்விகள், லாஜிக் மீறல்கள் எனத் தோன்றியவற்றை பதிவிட்டிருகிறேன்.. ஒருவேளை நான் சரியாகக் கவனிக்காமலோ, தவறாகவோ குறிப்பிட்டிருந்தால் நண்பர்கள் சுட்டிக்காட்டவும்.
1. முதன் முதலில் கொலையாகிக் கிடக்கும் ஒரு பெண்ணின் கழுத்தில் யாரோ கடித்தது போன்ற பற்களின் அச்சு இருக்கிறது. அதன் மூலம் கொலையாளிக்கு சிங்கப்பல் இருக்கும் எனக் கணித்து அதை மூலதனமாக வைத்தே விசாரணையைத் தொடங்குகிறார்கள். கடைசியில் கொலையாளி அவனாகக் கடிக்காமல் ஒரு பல் செட்டை வைத்துக் கடிப்பது போன்ற ஒரு மார்க்கை உருவாக்குகிறார். அவர் ஏன் அப்படி ஒரு தழும்பை உருவாக்குகிறார் என்பதற்கு எந்தக் காரணமும் இல்லை? ஒருவேளை அது அவருடைய Signature ah என்றால் அப்படியும் எதுவும் காண்பிக்கவில்லை.
2. ஒருவேளை காவல்துறையைக் குழப்புவதற்காக என்று வைத்துக்கொண்டாலும், அவர் ஏன் காவல்துறையைக் குழப்ப வேண்டும் என்பதற்கும் எந்தக் காரணமும் காட்டப்படவில்லை. இல்லை அவர் காவல்துறையிலிருந்து தப்பிக்க வேண்டுமென்றால் அவர் கொலை செய்த பெண்களின் உடல்களை அவரே முழுவதும் மறைத்தே வைத்திருக்கலாம். ஏன் அதைக் காவல்துறையின் கண்களில் படுமாறு வைக்கிறார் என்பதற்கும் எந்தக் காரணமும் இல்லை. கொலையாளியின் டார்கெட் குறிப்பிட்ட சில நபர்கள் என்றால் கூட சரி எனலாம். ஆனால் அவர் பழி வாங்குவது குற்றத்துடன் நேரடித் தொடர்பில்லாத ஒரு சமூகத்தை. அப்படியிருக்கும் போது அவருடைய டார்கெட் என்பது முடிவில்லாத ஒன்று. பிறகு ஏன் காவல்துறக்கு “இங்க பாருங்கண்ணே நா எத்தனை கொலை பண்ணிருக்கேன்னு” எனக் காண்பிக்க வேண்டும்?
3. முதல் பாதியில் கிடைக்கும் ஒரு தடயத்தைக் கொண்டு ஒருவனைத் தவறுதலாக காவல்துறை கைது செய்கிறது. அவன் வீட்டில் கிடைத்த தடயத்தை உருவாக்கியதே கொலையாளிதான். அதே கொலையாளி காவல்துறை அவனைக் கைது செய்தபின்னர், அவன் உண்மையான கொலையாளி இல்லை என காவல்துறைக்கு அனானிமஸ் ஐடியிலிருந்து தகவல் கொடுக்கிறான்? எலே செத்தப் பயலே என்னலே வேணும் உனக்கு? “ நீ என் மேல காட்டுன இண்ட்ரெஸ்ட் எனக்குப் பிடிச்சிருந்துச்சி. அதனாலதான் உனக்கு தகவல் சொன்னேன்” என ஒரு வரியில் காரணம் சொல்கிறார்கள். ஆனால் அது எதையுமே விளக்கவில்லை என்பது தான் உண்மை.
4. உதாரணமாக டெக்ஸ்டரில் கொலையாளி கதாநாயகனின் கவனத்தைப் பெற வேண்டும் என்கிற காரணத்திற்காக கதாநாயகனுக்க்குத் தெரியவேண்டும் என்றே சில தடயங்களை விட்டுச் செல்வார். இங்கு கொலையாளியின் நோக்கம் என்ன? தான் பாதிக்கப்பட்டதற்காகப் பெண்களைப் பழி வாங்குவது மட்டுமா? காவல்துறையில் சிக்கிக் கொள்ளாமல் பழி வாங்குவதா? காவல்துறையின் கவனத்தைப் பெறுவதா அல்லது காவல்துறையின் கண்களில் விரல்விட்டு ஆட்டிக்கொண்டே பழிவாங்குவதா? அப்படி காவல்துறையிடம் சவால் விட்டுச் செய்வதென்றால் அதற்கான காரணம் என்ன என எந்தத் தகவலும் இல்லை.
மேக்கிங்கெல்லாம் நன்றாகத்தான் இருந்தது. படம் போரடிக்கவும் இல்லை. ஆனால் அந்தக் கிளைமாக்ஸ் அதுவரை படத்தின் மீதிருந்த மதிப்பை முற்றிலுமாகக் குறைத்துவிட்டது.
-அதிரடிக்காரன்.
#hitthesecondcase #hitseries #hit