Friday, May 27, 2016

கென்னடிக்கு பின்னடி – JFK சம்பவம் -3


Share/Bookmark
முதல்பகுதி இரண்டாவது பகுதி போலீஸ் ஸ்டேஷனுக்குள்ள போன கெழவி போலீஸ் காரங்க ஒவ்வொருத்தரு முன்னாலயா போய் போஸ் கொடுத்துருக்கு.. யாருமே கண்டுக்கல.. கடைசில அதுவே கடுப்பாகி ஒரு போலீஸ்காரர் பக்கத்துல மூஞ்சிய கொண்டுபோயி “என்னைத் தெரியல? என் முகத்த நல்லா உத்து பாருங்க” ன்னுருக்கு. “என்ன கெழவி கண்ணெல்லாம் செவந்து போயிருக்கு… நேத்து நைட்டு ஓவர் சரக்கா?” ன்னு கலாய்ச்சி விட்ருக்கான் அந்த போலீஸ். அப்புறம் அது வாயாலயே “அடேய் நாந்தான்னா நீங்க இவ்வளவு நாளா தேடிக்கிட்டு இருக்க Babushka lady ன்னுருக்கு.  உடனே கெழவியை அழைச்சிட்டு போய் கென்னடி கேஸ் பத்தி ஆராய்ச்சி பன்றவனுங்ககிட்ட விட்டுருக்கானுங்க. இப்ப நாந்தான் தாய்க்கெழவின்னு சொல்லிக்கிட்டு வந்துருக்க ஆயா பேரு பெவர்லி ஆலிவர்.


Gary Shaw ன்னு அப்ப கென்னடி கேஸ் பத்தி ரிசர்ச் பன்னிக்கிட்டு இருந்தவது “சரி நீ தான் தாய்க்கெழவின்னு நாங்க எப்புடி நம்புறது?... எங்க கென்னடி சுட்ட அன்னிக்கு நீ என்ன என்ன பாத்தன்னு கொஞ்சம் வெளக்கு” ன்னுருக்காரு. உடனே கெழவி கென்னடிய சுட்டதப் பத்தி வட சுட ஆரம்பிச்சிருக்கு.

“சார்… அன்னிக்கு நா அங்க தான் சார் இருந்தேன்… என்னோட Yashika Super-8 Zoom  கேமராவ வச்சி அவர படம் எடுத்துக்கிட்டு இருந்தேன்… அப்ப கென்னடியோட கார் வந்துச்சா… டொபீர்னு ஒரு சத்தம் சார்.. கென்னடியோட தலை அப்புடியே வெடிச்சி செதறுச்சி… ஒரு பக்கெட் அளவுக்கு ரத்தம் தெறிச்சிது சார்… “ கெழவி கதை சொல்லிக்கிட்டு இருக்கும்போதே ஆபீசர் Gary Shaw பக்கத்துல இருக்க போலீஸ்க்கு கண்ண காமிச்சிருக்காப்ள. சிங்கம் படத்துல சாஃப்ட்வேர் கம்பெனி லேடின்னு ஒண்ணு சூர்யாகிட்ட கம்ப்ளைண்ட் பன்ன வரும்ல.. அந்த சீன மைண்ட்ல நினைச்சிக்குங்க.

“சரி பாட்டி… நீங்க எடுத்த அந்த வீடியோ கேமரா எங்க”

“அ.. அது சம்பவம் நடந்து ரெண்டு நாள் கழிச்சி ரெண்டு பேர் என் வீட்டுக்கு வந்தாங்க சார்.. அதுல ஒருத்தர் பேரு ரெஜிஸ் கென்னடி. FBI ஏஜெண்டுன்னு சொன்னாரு. இன்னொருத்தரு CIA ன்னு சொன்னாரு. சொல்லி என்னோட வீடியோ கேமரா இன்வெஸ்டிகேஷனுக்கு வேணும்னு வாங்கிட்டு பொய்ட்டாங்க” ன்னு சொல்லி முடிக்கும்போது இவர் கண்ண காமிச்ச இன்னொரு போலீஸ்காரர் பக்கத்துல வந்து இவர் காதுக்குள்ள எதோ சொல்றாரு. உடனே Gary Shaw கெழவிய ஏற இறங்க ஒரு தடவ பாத்துட்டு

“ஏன் கெழவி.. நீ போட்டுருக்க பாடி ஸ்ப்ரேக்கும் உன் பல்லுல இருக்க கறைக்கும் நீ சொல்லுற கதைக்கும் எதாவது சம்பந்தம் இருக்கா… இருக்கா… (ஹை பிட்ச்) ஓடு மீன் ஓட உறுமீன் வரும் வரைக்கும் வாடி இருக்குமாம் கொக்கு” ன்னு ஒரு பஞ்ச் டயலாக்க சொல்லிட்டு கெழவி சொன்ன கதையில உள்ள ஓட்டையெல்லாம் புட்டு புட்டு வச்சிருக்காரு.

“நீ இப்ப சொன்ன கதையில முக்கால்வாசி டீட்டெய்ல் தப்பு… நீ Yashika Super-8 Zoom கேமராவ வச்சி படம் எடுத்ததா சொல்ற.. சம்பவம் நடந்தது 1963.. ஆனா நீ சொன்ன கேமரா மாடல் கண்டுபுடிச்சதே 1967 ல தான். கண்டுபுடிக்காத ஒரு கேமராவ வச்சி உன்னால எப்புடி படம் எடுத்துருக்க முடியும்? கென்னடி சுடப்பட்டப்ப தலை தெறிச்சி பக்கெட் பக்கெட்டா ரத்தம் வந்துச்சின்னு சொன்ன.. தலை பின்னால தெறிச்சது என்னவோ உண்மைதான்.. ஆனா படத்துல காட்டுற மாதிரி கொடூரமால்லாம் தெறிக்கல.. அப்புறம் என்ன சொன்ன, ரெஜிஸ் கென்னடி உன்கிட்ட வந்து கேமரா வாங்குனானா? நீ சொல்ற தேதில அவன் வேற ஒரு ஊர்ல இன்னொருத்தன விசாரிச்சிட்டு இருந்தான். இன்னொருத்தன் CIA ன்னு சொன்னானா? எந்த CIA வும் உன்ன மாதிரி பப்ளிக்கிட்ட தான் ஒரு CIA ஏஜெண்டுன்னு சொல்லிக்க மாட்டான்”

“நீ நைட் க்ளப்புல டான்ஸ் ஆடுறவ.. நீ இப்பவே பாக்க கொஞ்சம் இளமையாதான் இருக்க.. அப்டின்னா சம்பவம் நடந்த ஏழுவருசத்துக்கு முன்னால இன்னும் இளமையாத்தான் இருந்துருப்ப… நாங்க சொல்ற “தாய்கெழவி” ரொம்ப பழைய பீஸு… அது ஆப்ரகாம்  லிங்கன் செட்டு… நீ தாய்க்கெழவியா இருக்க வாய்ப்பே இல்லை. மரியாதையா ஓடிப்போயிரு..” ன்னு அனுப்பி விட்டாய்ங்க… அந்தக் கெழவி வெளில போய் இதே கதையெ டிவி ப்ரஸ்ஸூன்னு எல்லார்கிட்டயும் சொல்லி சீன் போட்டு திரிஞ்சிருக்கு. எப்புடியெல்லாம் ஃபேமஸ் ஆவுறாய்ங்க பாருங்க.

இப்ப வரைக்குமே கென்னடிய உணமையிலயே யாரு சுட்டது? சுட்டது ஒருத்தனா ரெண்டு பேரா? தனியா செயல்பட்டானா இல்லை யாரோட தூண்டுதல்ல செயல்பட்டானாங்குறது சந்தேகத்துக்குரிய கேள்விதான். நம்ம போன பதிவுல சொன்ன மாதிரி Warren Commission ரிப்போர்ட்ல கென்னடியோட கார நோக்கி மூணு ரவுண்ட் சுடப்பட்டதுன்னும், அதுல ஒண்ணு மிஸ்ஸாகி மத்த ரெண்டு புல்லட்தான் கென்னடியையும் கவர்னரையும் தாக்குச்சின்னும் சொல்லிருந்தாங்க. அதுலயும் முதல் புல்லட் கென்னடியோட இடுப்புல பாஞ்சிது. ரெண்டாவது புல்லட்தான் கென்னடியோட கழுத்த துளைச்சிட்டு, அதுக்கப்புறம் அதே புல்லட்தான் கென்னடிக்கு முன்பக்கம் உக்கார்ந்திருந்த கவர்னர் இடுப்புல பாஞ்சி இருப்ப துளைச்சிட்டு மறுபடியும் அவரோட தொடைப்பகுதில பாஞ்சதா சொல்லிருக்காங்க. இதத் தான் Single Bullet Theroy அல்லது Magic Bullet Theroy ங்குறாங்க.

இது முழுக்க முழுக்க Theoretical assumption தான். 6 வது மாடியிலருந்து சுடப்ட்ட ஆங்கிள், புல்லட்டோட ஸ்பீடு எல்லாத்தையும் கணக்கிட்டு இத யூகிச்சிருக்காங்க. இவங்க சொல்ற கணக்குப்படி அந்த ஒரு புல்லட் கிட்டத்தட்ட 15 அடுக்கு துணியையும், 7 அடுக்கு மனித தோலையும் துளைச்சிருக்கதா சொல்றாங்க. ஆக்சுவலா அந்த கார்ல கென்னடியும் கவர்னரும் உக்கார்ந்திருந்த பொஸிஷனுக்கு இந்த சிங்கில் புல்லட் கான்செப்ட்ட அப்ளை பன்னி பாத்த ரொம்ப காமெடியா இருக்கும். கீழ உள்ள படத்த பாருங்க. அதுல காமிச்சிருக்க புல்லட்டோட் பாதை நடைமுறையில சாத்தியப்படாத ஒண்ணு. ஆனா அதுக்கப்புறம் வந்த சில ஆராய்ச்சிகள்ல அவங்க ரெண்டு பேரோட பொஸிஷன் கொஞ்சம் மாறியிருக்கலாம்னு அனுமானிக்கிறாங்க. அப்டின்னா ஓரளவு இந்தத் தியரி மேட்ச் ஆகும்.



                                                                     


இன்னும் சில பேரு சம்பவம் நடந்த அன்னிக்கு துப்பாக்கி சத்தம் அந்த Book Depository Building லருந்து கேக்கலன்னும், “The Grassy Knoll” ன்னு அழைக்கப்படும் ரோடு ஓரமா இருக்க சின்ன குன்று மாதிரி இடத்துலருந்து தான் சத்தம் கேட்டுச்சின்னும் சொல்றாங்க. அதுமட்டும் இல்லாம கென்னடி சுடப்பட்டதும் போலீஸ்காரங்க முதல்ல அந்த Grassy knoll ah நோக்கிதான் ஓடுனாங்களே தவற அந்த பில்டிங்க நோக்கி இல்லைன்னும் சொல்றாங்க. ஆனா இதயும் சப்போர்ட் பன்றதுக்கு நிறைய ஆதாரங்கள் இல்லை. மொத்தத்துல ஒருத்தனை சிறப்பா சம்பவம் பன்னிட்டாய்ங்க.

சரி இப்ப 11.22.63 ன்னு 2016 ல வந்த மினி சீரிஸ் ஒண்ணு இருக்கு. 2016 ல Dallas நகரத்துல ஒருத்தர் ஒரு Burger shop வச்சிருக்காரு. அந்த பர்கர் ஷாப்புக்குள்ள ஒரு சின்ன சந்து மாதிரி இருக்கு. அந்த சந்துக்குள்ள போனா அது நேரா நம்மள 1960 க்கு கொண்டு போயிருது. அங்க நீங்க எத்தனை நாள் வேணாலும் இருக்கலாம். திரும்பி 2016 வந்தா வெறும் ரெண்டு நிமிஷம் தான் ஆயிருக்கும். (நார்நியா கான்செப் மாதிரி) நீங்க 1960 க்கு போகும்போது அங்க எதாவது செஞ்சிட்டு வந்தா அதோட impact நீங்க 2016 திரும்பி வந்தப்புறமும் இருக்கும். ஆனா once நீங்க 2016 க்கு வந்துட்டு திரும்ப அந்த சந்து வழியா 1960 க்கு போனீங்கன்னா , போன தடவ நீங்க என்ன செஞ்சீங்களோ எல்லாம் reset ஆகிடும். அதாவது ஒவ்வொரு தடவ நீங்க அந்த சந்து வழியா போகும்போதும் அது 1960ல ஒரு குறிப்பிட்ட அதே நாளுக்குதான் அழைச்சிட்டு போகும். இது basic concept.

இப்ப 1960 ங்குறது கென்னடி சுடப்பட்டதுக்கு மூணு வருஷம் முன்னால. கென்னடி சுட்டுக்கொல்லப்படாம இருந்துருந்தா, இன்னும் மக்களோட வாழ்க்கைத்தரம் சிறப்பா அமைஞ்சிருக்கும்னு ஒருத்தர் ஃபீல் பன்றாப்ள. அதனால 2016 லருந்து 1960 க்கு போய் மூணு வருஷம் அங்கயே தங்கியிருந்து கென்னடியோட கொலைய தடுக்க வேண்டிய முயற்சிகள் இன்வெஸ்டிகேஷன்கள் எல்லாம் பன்றாப்ள. அவர் கென்னடிய காப்பாத்துனாரா இல்லையாங்குறத ”டைம் ட்ராவல்” ங்குற சுவாரஸ்யத்தோட சொல்லிருக்க சீரியல் 11.22.63. மொத்தம் 8 எபிசோடுதான். முடிஞ்சா பாருங்க.



பதிவே முடியப்போகும்போது ஏன் இந்த கவர்ச்சிப் படம்னு யோசிப்பீங்க. இருக்கு… இந்தப் படத்துக்கும் பதிவுக்கும் சம்பந்தம் இருக்கு… முடிஞ்சா இன்னொரு பதிவுல அது என்னன்னு பாப்போம்.

நன்றி : நண்பன் பாலவிக்‌னேஷ்




Thursday, May 26, 2016

கென்னடிக்கு பின்னடி – JFK சம்பவம் -2


Share/Bookmark
முதல் பகுதியைப் படிக்க இங்கே க்ளிக்கவும். “இவந்தான் சார் நா சொன்ன ஆளு” ன்னு அந்த Book depository இன்சார்ஜ் சொன்னதுதான் போதும்.. போலீஸ் காரங்களுக்கெல்லாம் என்ன ஒரு  சந்தோஷம். தக தகன்னு குதிச்சி ஓடிவந்து “அப்பாடா இன்னிக்கு பொழுத இவன வச்சே ஓட்டிரலாம்” ன்னு லீ ஹார்வி ஓஸ்வால்ட புடிச்சி விசாரணை பன்றானுங்க. வடிவேலு கையப்புடிச்சி இழுத்த கதை மாதிரி போலீஸ் ஆபிசர்கள் கேள்வி கேட்க கேட்க

“கென்னடிய சுட்டியாடா?”

“என்ன கென்னடிய சுட்டியாடா?”

“போலீஸ் ஆபீசர் டிப்பிட்ட சுட்டியாடா?”

“என்ன டிப்பிட்ட சுட்டியாடா?”

“தம்பி… ஏற்கனவே உன்னோட துப்பாக்கி அந்த ஆறாவது மாடியில கெடைச்சிருக்குப்பா”

“என்ன ஏற்கனவே கெடைச்சிருக்குப்பா?”

“இல்லைப்பா… அந்த ஃப்ளோருக்கு உனக்கு மட்டும்தான் ஆக்ஸெஸ் இருக்காம்ல”

“என்ன ஆக்ஸெஸ் இருக்காம்ல”

ன்னு நம்மாளு கொஞ்சம் கூட சலைக்காம பதில் சொல்லிருக்கான். ஓஸ்வால்ட புடிச்சதுலருந்து கிட்டத்தட்ட பன்னெண்டு மணி நேரம் தொடர்ந்து அவன்கிட்ட கேள்வி கேட்டுருக்கானுங்க. ப்ரஸ் ரிப்போர்டர்ஸயெல்லாம் முன்னால வச்சிக்கிட்டே. ஆனா நம்மாளு நான் கென்னடியையும் சுடல… டிப்பிட்டையும் சுடல.. சும்மா ரோட்டுல போயிட்டு இருந்த என்னை புடிச்சிட்டு வந்துட்டீங்க. நா சோவியத் ரஷ்யாவுல வாழ்ந்தவன்குறதுக்காக வேணும்னே என் மேல பழி போடுறீங்க.. இது ஆளும் கட்சியின் பழிவாங்கும் நடவடிக்கை” ப்ளேட்ட இவனுங்க பக்கமே திருப்பி விட்டுகிட்டு இருந்துருக்கான்.

சரி இவன்கிட்ட பேசியெல்லாம் உண்மைய வரவழைக்க முடியாதுன்னு அவன் சமீபத்துல துப்பாக்கி யூஸ் பன்னிருக்கானா இல்லையான்னு தெரிஞ்சிக்க Paraffin Test ன்னு ஒண்ணு பன்னாங்க. ஓஸ்வால்டோட கையிலயும் வலது கண்ணத்துலயும் இந்த டெஸ்ட்ட பன்னாங்க. அந்த டெஸ்டோட ரிசல்ட் இன்னும் கண்பீசனா வந்துருக்கு. ”கை” ய செக் பன்னப்போ ரிசல்ட் பாஸிடிவ்வாவும், கன்னத்துக்கு ரிசல்ட் நெகடிவ்வாவும் வந்ததால இந்த paraffin டெஸ்ட் முடிவ அவங்க கணக்குல எடுத்துக்கல. ”இவன் விஞ்ஞானத்து கூடவே வீம்பா விளையாடுறான் சார்… இவன்கிட்டருந்து எதையுமே கறக்க முடியல” ன்னு போலீஸ் ஸ்டேஷன்ல வச்சிருந்தவன “Dallas” ஜெயிலுக்கு மாத்திரலாம்னு முடிவு பன்னாங்க.

கையில விலங்கெல்லாம் போட்டு ரெண்டு போலீஸ் எஸ்கார்ட்டோட ஓஸ்வால்ட்ட கார்ல ஏத்த கொண்டு வந்தாங்க. எல்லா சேனல்லயும் லைவ்ல ஓடிக்கிட்டு இருக்கு. இப்ப திரும்ப அதே பழைய “டொப்” சவுண்டு… என்னன்னு பாத்தா ஓஸ்வால்டு நெஞ்சுல தக்காளிச்சட்னி தெறிச்சிருக்கு. எதுத்தாப்புல கையில துப்பாக்கியோட ஜாக் ரூபி ன்னு ஒருத்தன். ”ஏண்டா சுட்டு வெளையாடுறதெல்லாம் ஒரு வெளாட்டாடா.. ரெண்டு நாளா ஏண்டா ஆளாளுக்கு இதே பொழப்பா இருக்கீங்க”ன்னு கடுப்பான Dallas போலீஸ்காரங்க இப்ப ஜாக் ரூபியை  அரெஸ்ட் பன்னாங்க.

குண்டடி பட்ட ஓஸ்வால்ட்ட வேக வேகமா ஹாஸ்பிட்டலுக்கு கொண்டு போயிருக்காய்ங்க. கென்னடிய கொண்டு போன அதே ஹாஸ்பிட்டல். “டேய் அவய்ங்க ஷோ தான் நல்லாருக்காதேடா… ஏற்கனவே அந்தாள கொண்டுபோயே அவன காப்பாத்த முடியல.. ஏண்டா திரும்ப என்னையும் அங்க கொண்டு போறீங்க” ன்னு நம்மாளு கத்திருக்கான் கதறிருக்கான். விடலையே.. அதே ஹாஸ்பிட்டலுக்கு கொண்டு போய் சேத்துருக்காய்ங்க. கொஞ்ச நேரம் ஆப்ரேஷன் தியேட்டர்லருந்து டாக்டர் வெளில வர்றாரு.
போலீஸ்காரனுங்கல்லாம் ஆவலா அவர்கிட்ட போய்

“டாக்டர் ஓஸ்வால்டோட நிலைமை?”

“ரெண்டு நாளைக்கு முன்னால நீங்க கென்னடிய கொண்டு வரும்போது என்ன சொன்னோம்?”

“செத்துட்டாருன்னு சொன்னீங்க”

“அதே தான் இவனுக்கும்..தூக்கிட்டு போங்க” ன்னுட்டாய்ங்க.

இவனுங்க உண்மையான டாக்டரா இல்லை டாக்டர் மாதிரி ஆக்ட் பன்னிட்டு இருக்காய்ங்களாங்குற டவுட்டோடவே போலீஸ்காரனுங்க ஓஸ்வால்ட் பாடிய கலெக்ட் பன்னிட்டு வந்துட்டானுங்க. ரெண்டு நாளுக்கு முன்னால கென்னடிய ஓஸ்வால்டு சுட்டு இதே ஹாஸ்பிட்டல்ல பாடியாக்குனான். இன்னிக்கு ஜாக் ரூபி ஓஸ்வால்ட சுட்டு அதே ஹாஸ்பிட்டல்ல பாடியாக்கிட்டான். “தன்வினை தன்னைச் சுடும்” ங்குறது இதானாலே…

ஓஸ்வால்ட சுட்ட ஜாக் ரூபி யாருன்னா ஒரு நைட் க்ளப் ஓனர்.. அவன்கிட்ட ஏண்டா ஓஸ்வால்ட சுட்ட? ன்னு கேட்டதுக்கு அவன் சிம்பிளா ஒரு பதில் சொல்லிருக்கான். “ஓஸ்வால்ட் கென்னடிய சுட்டதால நா ரொம்ப ஃபீல் ஆயிட்டேன்.. நாளைக்கு இவனால கென்னடி மனைவி கோர்ட்டுக்கு வந்து சாட்சி சொல்லனும்… அது அவங்களுக்கு கஷ்டம்.. அதான் கொன்னேன்..” னுருக்கான்.

இந்த பதில கேட்ட போலீஸ்காரங்க அத்தனை பேரும் கலகலப்பு விமல் மாதிரி “ஏங்க இதெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு?” ன்னு கோரஸா கேட்டுருக்காய்ங்க. கடைசில ப்ரஸ்ஸ எல்லாம் சமாளிக்க இத நம்புறதத் தவற வேற வழியில்லைன்னு முடிவு பன்னி நம்பிருக்கானுங்க.

ஓஸ்வால்ட் செத்துட்டதால கென்னடிய உண்மையிலயே எவன் சுட்டான்னு கண்டுபுடிக்க முடியாம போயிருச்சி. இந்த கேஸ FBI ஒருபக்கம் விசாரிக்க, அமெரிக்க அதிபர் ஒரு ஸ்பெஷல் டீம உருவாக்குனாரு. அதுதான் பிந்நாள்ல “Warren Commission” ன்னு அழைக்கப்பட்டுச்சி. இந்த ரெண்டு இன்வெஸ்டிகேஷனோட ரிசல்டும் கொஞ்சம் முன்னப் பின்ன இருந்துச்சி.

FBI யோட ரிப்போர்ட் படி சம்பவம் நடந்த அன்னிக்கு மொத்தம் மூணு “டொப்”… அதாவது மூணு தடவ சுட்டுருக்காங்க. முதல் குண்டு கென்னடிக்கும், ரெண்டாவது குண்டு கவர்னருக்கும், மூணாவது குண்டு மறுபடி கென்னடியோட கழுத்துலையும்  பாஞ்சதா சொல்லிருக்காங்க.

ஆனா Warren Commission மூணு புல்லட்டுன்னு  ஒத்துக்கிட்டாலும், முதல் புல்லட் மிஸ் ஆயிட்டதாகவும், ரெண்டாவது புல்லட் கென்னடி, கவர்னர் ரெண்டு பேரையும் தாக்குனதாகவும், மூணாவது புல்லட் கென்னடி கழுத்துல பாஞ்சதாகவும் conclude பன்னிருக்காங்க. ஒரு வருஷ இன்வெஸ்டிகேஷனுக்குப் பிறகு வாரன் கமிஷன் “லீ ஹார்வி ஓஸ்வால்ட்” தனித்து செயல்பட்டு தான் கென்னடிய கொன்னதாகவும், ஓஸ்வால்ட கொன்ன ஜாக் ரூபியும் யாருடைய தூண்டுதலும் இல்லாம தனித்து தான் செயல்பட்டாருன்னும் ரிப்போர்ட் குடுத்துருக்காங்க. ஆனா பின்னால 1979 ல HSCA (US House Selection Committee of Assassinations) ன்னு இன்னொரு கமிட்டி, ஓஸ்வால்ட் மட்டும் இல்லாம ரெண்டாவதா ஒருத்தனும் அன்னிக்கு கென்னடிய சுட்டுருக்கலாம் (Second Gun Man) னும் கூட இருந்துருக்கலாம்னு சொல்லிருக்காங்க.  

இத்தனை கமிஷன்களும் ஓஸ்வால்டுதான் கொன்னான்னு முடிவு பன்னிருந்தாலும் நிறைய பேருக்கு இது ஒரு திட்டமிட்ட கூட்டு சதியாக இருக்கலாம்ங்குற சந்தேகம் இருந்துட்டே இருக்கு. நிறைய theory ல அப்ப இருந்த Wise president Johnson, க்யூபா ப்ரசிடெண்ட் பிடல் காஸ்ட்ரோ, CIA (Central Intelligence Agency) , இல்லை எதாவது mafia இவங்கல்லாம் கென்னடியோட கொலையில இன்வாவ் ஆயிருக்கலாம்ங்குற சந்தேகம் இருக்கு

இந்த கமிட்டிக்கள்லாம் விசாரணை பன்னும்போது, கென்னடி அன்னிக்கு Dallas தெருவுல வந்தப்போ யார் யார் எல்லாம் ஃபோட்டோ எடுத்தாங்களோ, அவங்கட்டருந்தெல்லாம் கேமராவ வாங்கி, அதுல உள்ள ஃபோட்டோக்களையெல்லாம் டெவலப் பன்னி எதாவது க்ளூ கெடைக்கிதான்னு பாத்துகிட்டு இருந்தாங்க. எந்த ஃபோட்டோக்கள்லயும் இவங்க எதிர்பாக்குற ஆங்கிள் கிடைக்கவே இல்லை.



நிறைய ஃபோட்டோக்கள்ல ஒரு கிழவி கென்னடி விசிட்ட ஃபோட்டோ எடுக்குற மாதிரி தெரிஞ்சிருக்கு. எல்லா ஃபோட்டோக்கள்லயும் அந்த கெழவி மூஞ்சிக்கிட்ட கேமராவ வச்சிருந்ததால முகம் சரியா தெரியல. ஒரு வேளை அந்த கிழவியோட கேமராவுல உள்ள ஃபோட்டோக்களை டெவலப் பன்னி பாத்தா நம்ம எதிர் பாக்குற ஆங்கிள் கிடைக்கலாம்னு நினைச்சாங்க. அந்தக் கிழவி வெள்ளை ட்ரெஸ் போட்டுக்கிட்டு தலையில எதோ ரஷ்யா பாட்டிகள் மாதிரி உல்மா கட்டிருந்துச்சாம். அதுனால அதுக்கு “Babushka Lady” ன்னு இவனுங்களே ஒரு பேர் வச்சிக்கிட்டாங்க. நம்ம பதிவுல Babushka, Babushka ன்னு எழுதுனா படிக்க ரொம்ப கஷ்டமா இருக்கும்ங்குறதால அதுக்கு நம்ம “தாய்க்கெழவி” ன்னு பேரு வச்சிக்குவோம்.

போலீஸூம் தாய்க்கிழவியை எப்புடியாச்சும் கண்டுபுடிச்சிடலாம்னு முயற்சி பன்னிருக்காங்க. பேப்பர்ல விளம்பரம்லாம் குடுத்தும் கடைசி வரைக்கும் நாந்தான் தாய்க்கிழவின்னு சொல்லிட்டு யாருமே வரவே இல்லை. எல்லா ஆஃபீஸர்களுக்கும் கொஞ்சம் ஏமாற்றமாதான் இருந்துச்சி.


சுமார் ஏழு வருஷத்துக்கு பிறகு…  Dallas போலீஸ் ஸ்டேஷன் முன்னால ஒரு பாட்டி நிக்கிறத பின்னாலருந்து காட்டுறோம்… தொடரும்னு போடுறோம்… 


Tuesday, May 24, 2016

கென்னடிக்கு பின்னடி – JFK சம்பவம்!!!


Share/Bookmark
நா சுத்தி வளைச்சி பேச விரும்பல. இதுவரைக்கும் மொத்தம் நாலு அமெரிக்க அதிபர்கள் சுடப்பட்டு இறந்துபோயிருக்காங்க. முதலாமனவரு நம்ம ஆபிரகாம் லிங்கன். 1865வது வருஷம் ஒரு நாடகம் பாத்துக்கிட்டு இருக்கும்போது ஒருத்தன் இவர சம்பவம் பன்னிட்டான். ஏப்ரல் 14 அன்னிக்கு சுடப்பட்ட இவரு மறுநாள் இறந்துட்டாரு. இவராச்சும் பரவால்ல ஒரு நாள் அவஸ்தையிலயே இறந்துட்டாரு. இன்னொருத்தர் நிலமைதான் ரொம்ப மோசம். ஜேம்ஸ் கார்ஃபீல்டுன்னு ஒருத்தர். 1881 ஜூலை 2ம் தேதி ஒரு ரயில்வே ஸ்டேஷன்ல இவரு நடந்து போயிட்டு இருக்கும்போது பேக் சைடுலருந்து ஒருத்தன் சுட்டுட்டு ஓடிட்டான்.

குண்டடிபட்ட அதிபர வச்சி கிட்டத்தட்ட மூணு மாசம் ஆராய்ச்சி பன்னிருக்காய்ங்க பாருங்க. என்ன ஆராய்ச்சின்னு கேட்டா ஸாக் ஆயிருவீங்க. அவன் சுட்ட குண்டு இவர் உடம்புல எந்த இடத்துல இருக்குன்னே அவிய்ங்களால கண்டுபுடிக்க முடியல. இப்பன்னா டக்குன்னு ஒரு ஸ்கேனப்பன்னி “ கரெக்டா half way between the mid-line Right lateral abdomen ல குத்துனதால “ ன்னு சிவாஜில சொல்ற மாதிரி அக்யூரேட்டா அளந்து சொல்லிருவாய்ங்க. ஆனா அன்னிக்கு இருந்த வசதிகளை வச்சி ஒருவேளை இங்க இருக்குமோ, ஒரு வேளை அங்க இருக்குமோன்னு இவனுங்க பன்ன ஆராய்ச்சில சுமார் மூணு மாசம் கழிச்சி “உங்ககிட்ட இருக்கதுக்கு சாவுறதே மேல்டா” ன்னு  செப்டம்பர் 19 ம் தேதி இன்ஃபெக்‌ஷனாலேயே அவர் மட்டை ஆயிட்டாரு.

அடுத்து இருபது வருஷம் கழிச்சி 1901 வது வருஷம் வில்லியம் மெக்கென்லேங்குற அதிபர் மக்களை சந்திக்கிறப்போ ஒருத்தன் ரொம்ப பக்கத்துல வந்து சுட்டுட்டான். எட்டு நாள் தீவிற சிகிச்சைக்கு அப்புறம் பலனில்லாம இறந்துட்டாரு.  

அடுத்து வர்றவருதான் நம்ம பதிவோட ஹீரோ ஜான்.F..கென்னடி. இவரோட கொலையைப் பத்தியும் அதுல இருக்க கன்பீசன்களப் பத்தியும் நிறைய பேருக்கு தெரிஞ்சிருக்கும். இருந்தாலும் வழக்கம்போல ரைமிங்காவும், டைமிங்காவும் நம்ம பதிவுல ஒருக்கா பாப்போம்.

1961 வது வருஷம் அதிபராக பதவியேற்ற ஜான்.F. கென்னடி அமெரிக்காவோட 35வது அதிபர். 1963 வது வருஷம் நவம்பர் மாசம் Texas நகரத்துக்கு ஒரு விசிட் அடிச்சாரு. மக்களை சந்திச்ச மாதிரியும் இருக்கனும், அடுத்த வருஷம் வரப்போற எலெக்‌ஷனுக்கான ப்ரச்சாரமாவும் இருக்கனும்ங்குற டூ இன் ஒன் விசிட் அது. நவம்பர் 22ம் தேதி Texas, Dallas நகர தெருக்கள் வழியா பயனிக்கப்போறாரு கென்னடி. எல்லா ரேடியோ ஸ்டேஷனும், டிவி சேனலும் அவர் வர்ற வழியெல்லாம் கவர் பன்னாம,  Dallas Trade Mart ல எப்புடியும் இங்க தான் வருவாரு. இங்க வச்சி கவர் பன்னிக்கலாம்னு வெய்ட் பன்னிட்டு இருக்காங்க. 

கென்னடியோட கார் போற வழியானது, அதிகப்படியான மக்கள் இருக்க ஏரியாக்கள கவர் பன்றமாதிரி அமைச்சிருந்தாங்க. இப்ப நம்ம அரசியல்வாதிகள் வர்ற மாதிரி 40, 50 காருங்க இல்லாம, முதல்ல மூணு நாலு மோட்டர் சைக்கிள், அப்புறம் சீக்ரட் சர்வீஸ் ஏஜெண்ட்ஸ் முன்னால பின்னால ஒவ்வொரு கார்ல வர, நடுவுல ஒரு ஓப்பன் டாப் கார்ல கென்னடி, அவரோட மனைவி, டெக்ஸாஸ் கவர்னர், அவரோட மனைவி நாலு பேரும் மக்களைப் பாத்து கை காமிச்சிக்கிடே வர்றாங்க.

கார் டீலே ப்ளாசாங்குற இடத்துல நுழையிது. மதியம் 12:30 மணி. ரெண்டு பக்கமும் மக்கள் சந்தோஷத்துல கை காமிச்சிட்டும், சிலர் ஃபோட்டோ எடுத்துக்கிட்டும் இருக்காங்க. திடீர்னு ”டொப்” ன்னு ஒரு சத்தம். மக்கள் கிட்டருந்து எந்த ரியாக்‌ஷனும் இல்லை. எவனோ கென்னடி வந்த சந்தோஷத்த கொண்டாட வெடி வெடிக்கிறாய்ங்கன்னு நினைச்சி எதுவும் கண்டுக்கல. அடுத்து தொடர்ச்சியா இன்னும் ரெண்டு “டொப்” “டொப்” கேக்க, அப்புறம்தான் புரிஞ்சிருக்கு கென்னடி வந்ததுக்கு வெடி வைக்கல.. கென்னடிக்கே வச்சிட்டாய்ங்கன்னு.

என்ன நடக்குதுன்னு தெரியிறதுக்குள்ள கென்னடிக்கு ரெண்டு இடத்துல குண்டு பாய்ஞ்சிருந்துச்சி. ஒரு குண்டு பின் கழுத்து வழியா தொண்டையில இறங்கிருந்துச்சி. கூட இருந்த கவர்னருக்கு பின் வழியா பாய்ஞ்ச குண்டு இடுப்பு ஓரமா சைடுல ட்ராவல் பன்னி முன் வழியா வெளில போயிருச்சு. ஆனா பயபுள்ள எஸ்கேப் ஆயிருச்சி. குண்டடி பட்டதுமே கார் வேகமா Dallas ல இருந்த ஒரு ஹாஸ்பிட்டலுக்கு போச்சு. ஆனா ஹாஸ்பிட்டல் போய் சேருறதுக்கு முன்னாலயே கென்னடி இறைவனடி சேர்ந்துட்டாரு. கென்னடியோட மரணத்த மதியம் 1:30 க்கு அதிகாரப்பூர்வமா அறிவிச்சிட்டாங்க.

சரி திரும்ப சுட்ட இடத்துக்குப் போவோம். கென்னடி சுடப்பட்டப்போ எங்கிருந்து சுட்டாங்கன்னு யாருக்குமே அவ்வளவு க்ளியரா தெரியல. போலீஸ் சுத்தி பாக்கும்போது பக்கத்துல இருந்த ஒரு Book Depository ல (பள்ளிப் புத்தங்களுக்கான ஸ்டோர்) ஆறாவது மாடியில ஒரே ஒரு ஜன்னல் மட்டும் பாதி ஓப்பனா இருந்துருக்கு. உடனே அங்க போய் பாத்தா, அங்கருந்து துப்பாக்கியால சுட்டதற்கான சில ஆதாரங்கள் கிடைச்சிது. உடனே பில்டிங்க் இன்சார்ஜ கூப்டு ரெண்டு உலுக்கு உலுக்கிருக்கானுங்க.

உடனே அவன் “சார்.. சார்… செகப்பா குள்ளமா, கட்டையா சுருட்டை முடி வச்சிக்கிட்டு ஒருத்தன் இருப்பான் சார்.. அவனுக்கு தான் இந்த ஃப்ளோருக்கு ஆக்செஸ் இருக்கு. அந்த பக்கிய வேற கொஞ்ச நேரமா காணும் சார்”ன்னு சொல்லிட்டான். உடனே அவன் சொன்ன அடையாளங்கள Dallas சிட்டி ஃபுல்லா இன்ஃபார்ம் பன்னி எல்லா போலீஸையும் தேட சொல்லிட்டாங்க.

ஒரு மணி நேரம் கழிச்சி.. கென்னடி சம்பவம் நடந்த இடத்துலருந்து ஒரு மூணு மைல் தாண்டி டிப்பிட் ன்னு ஒரு போலீஸ் காரரு, ரவுண்ட்ஸ்ல இருந்துருக்காரு. அப்பன்னு பாத்து அந்த பக்கமா அதே செகப்பா குள்ளமா, கட்டையா சுருட்டை முடி வச்சிக்கிட்டு ஒருத்தன் விசில் அடிச்சிக்கிட்டே நடந்து வந்துருக்கான். ஒருவேளை இவன் அவனா இருப்பானோன்னு சந்தேகப்பட்டு “டேய் தம்பி இங்க வாடா” ன்னு ரெண்டு அதட்டு தான் போட்டுருக்காரு.

ன்ன நெனைச்சான்னு தெரியல… பக்கத்துல வந்தவன் பாக்கெட்டுல வச்சிருந்த துப்பாக்கிய எடுத்து, பட்டு பட்டுன்னு நாலுதடவ ஆபீஸர் டிப்பிட்ட பாத்து சுட்டுட்டு புகையா காத்துல போய் மறைஞ்சிட்டான். டிப்பிட் அங்கனக்குள்ளயே சுருண்டு விழுந்து மட்டை ஆயிட்டாரு.

உடனே போலீஸெல்லாம் கென்னடிய கொன்னவன புடிக்கிறதுக்கு முன்னாடி நம்ம டிப்பிட்ட மட்டை பன்னவன புடிச்சாகனும்னு தீவிரமா தேடுதல் வேட்டையில ஈடுபட அடுத்த ஒரு மணி நேரத்துல போலீஸுக்கு ஒரு ஃபோன். ”சார் சார்.. இங்க ஒருத்தனப் பாக்க சந்தேகமா இருக்கு சார்… டிக்கெட் வேற எடுக்காம எங்க தியேட்டருக்குள்ள நுழைஞ்சிட்டான்.. கொஞ்சம் வந்து என்னனு கேளுங்க சார்” ஃபோன் பன்னதும் போலீஸ் தியேட்டருக்கு விரைந்து போயிருக்கானுங்க. அங்க இந்தப் பக்கி ஓரமா பம்பிக்கிட்டு நிக்க, போலீஸ் அவன லபக்குன்னு கவ்வி புடிச்சிட்டானுங்க.

ஆஃபீஸர் டிப்பிட்ட கொன்னதுக்காக அவன அரெஸ்ட் பன்னி ஸ்டேஷனுக்கு கொண்டு போன இடத்துல, கென்னடி சுடப்பட்ட இடத்துல இருந்த Book Depository இன்சார்ஜ் வந்து, “சார் நா காணாம பொய்ட்டான்னு சொன்ன செகப்பா குள்ளமா, கட்டையா சுருட்டை முடி வச்சிக்கிட்டு இருக்கவன் இவன் தான்… இவன் பேரு தான் லீ ஹார்வி ஓஸ்வால்ட்…” ன்னு சொல்லிட்டான்.


உடனே போலீஸ்காரங்கல்லாம் ஸ்லோ மோஷன்ல திரும்பி, லீ ஹார்வி ஓஸ்வால்ட்ட பாக்க…… நம்ம தொடரும்னு போடுறோம்…..

நன்றி : நண்பன் பால விக்னேஷ்

Saturday, May 21, 2016

மருது – அது நம்மள நோக்கிதான் வருது!!!


Share/Bookmark
தெலுங்குல ஜூனியர் NTR  நடிச்ச பாட்ஷான்னு ஒரு படம். அந்தப் படத்துல வர்ற ஒரு காமெடி சீன். “ரிவெஞ்ச் நாகேஸ்வரராவ்” ன்னு ஒரு இயக்குனர் கேரக்டர் வரும். அந்த இயக்குனர்கிட்ட டிவில பேட்டி எடுப்பாங்க. அதுல பேட்டி எடுக்குற பொண்ணு
“சார் உங்க அடுத்த படம் என்ன?”

“Blood Bath part 2 “ ம்பாரு டைரக்டர்

“சார் பார்ட் 1 தான் ஃப்ளாப் ஆயிருச்சில்ல”

“அதுக்குதான் பார்ட் 2 எடுக்குறேன்”

“அப்ப பார்ட் 2 வும் ஃப்ளாப் ஆயிட்டா?”

“பார்ட் 3 எடுப்பேன்” ம்பாறு.  

அந்தப் படத்துல காமெடி சீனா வைச்சதை சீரியஸா நம்மூர்ல பன்னிட்டு இருக்கவருதான் இயக்குனர் முத்தையா.

குட்டிப்புலி எடுத்தாரு. ஓடல. அதனால குட்டிப்புலியவே கார்த்திய வச்சி கொம்பன்னு எடுத்தாரு. சுமாரா போச்சு. இப்ப திரும்ப கொம்பனையே விஷால வச்சி மருதுன்னு எடுத்துருக்காரு. எப்புடியும் இந்தக் கதை ஹிட்டாகுற வரைக்கும் ஓயமாட்டாருன்னு நினைக்கிறேன். ஒண்ணும் கவலப்படாதீங்க சார். இன்னும் ஒரு நாலஞ்சி தடவ இதயே எடுத்துப் பாருங்க. கண்டிப்பா க்ளிக் ஆயிடும். அதுக்கப்புறம் வேற கதைக்கு நாம போவோம்.

எந்த சூழ்நிலையிலும் கதையயோ, கதைக்களத்தையோ, ஹீரோ கேரக்டரையோ மாத்திரவே கூடாதுங்குறதுல நம்மாளு ரொம்பத் தெளிவா இருந்துருக்காரு. அதே மண்டை கட்டிங்…  உள்ள போட்டுருக்க டவுசர் தெரியிற மாதிரி கைலி.. கணவனை இழந்த அம்மா/பாட்டி. பக்கத்து ஊர் பொண்ண அங்க தேடிப்போய் கரெக்ட் பன்றது. பொண்ணுங்கள தாயா மதிக்கிறது (நாங்க மட்டும் என்ன பேயவா மதிக்கிறோம்), எவனா இருந்தாலும் தூக்கிப்போட்டு மிதிக்கிதுன்னு எல்லாமே அதே டெய்லர் அதே வாடகை.

“இங்யாரு… சலிச்சி விட்ருவேன் பாத்துக்க” “கிழிச்சி விட்ருவேன் பாத்துக்க” “அறுத்து விட்ருவேன் பாத்துக்க” ”தட்டி விட்ருவேன் பாத்துக்க” ன்னு அதே பழைய வசனங்களப் பேசிக்கிட்டு நீள நீள கத்தி அருவாளோட template மதுரை வில்லன்கள். ”பொம்பளைக்கு ஒண்ணுன்னாலே புகுந்து அடிப்பேன்.  புடிச்சவளுக்கு ஒண்ணுன்னா புலி மாதிரி அடிப்பேன்” ன்னு கடுப்பேத்துற மாதிரி பில்டப் வசங்கள்.

இவ்வளவு இருந்தாலும் படம் நல்லா தான் இருக்கு. எதிர்பாக்கலைல்ல… இப்டி சொல்லுவேன்னு எதிர்பாக்கலைல்ல… அட உண்மையா படம் நல்லாதான் இருக்கு. குட்டிப்புலியோட upgraded  version கொம்பன். கொம்பனோட upgraded version மருது. அவ்வளவு தான். ஒவ்வொரு படத்துலயும் அதே கதையில ஒண்ணு ஒண்ணா improve பன்னிட்டு வர்றாரு முத்தைய்யா..


கொம்பனும் குட்டிப்புலியும் ஒண்ணுதான். ஆனா ராஜ்கிரனால கொம்பன் படம் தப்பிக்கும். கொம்பன்ல ராஜ்கிரன் இல்லாத சீனயெல்லாம் பாத்தா கண்றாவியா இருக்கும். தம்பிராமைய்யாவ வச்சிக்கிட்டு காமெடிங்கிற பேர்ல கத்திய எடுத்து கழுத்துல சொருகுவாய்ங்க. ஆனா மருதுல சூரியோட காமெடி ஓரளவுக்கு நல்லாவே எடுபட்டுருக்கு. முதல் சீன்ல சூரி பேசுற வசனங்களப் பாத்தா அடுத்த கஞ்சா கருப்போன்னு தோணுச்சி. ஆனா போகப் போக காமெடி ஓரளவுக்குப் பரவால்ல.

ஸ்ரீதிவ்யா தங்கம் மாதிரி பாத்துக்கிட்டே இருக்கலாம் போல இருக்கு. செம அழகு. RK சுரேஷ் (தாரை தப்பட்டை வில்லன்) பயங்கரமா இருக்காரு. வில்லத்தனத்துல புதுசா எதுவும் இல்லை. ஆனா ஆளப் பாக்கவே பயமா இருக்கு. யாரு அவங்க வேலைய ஒழுங்கா செஞ்சாலும் செய்யலன்னாலும் ஒரே ஒருத்தர் அவர் வேலைய கரெக்ட்டா பாத்துக்கிட்டு இருக்காரு. நம்ம இமான் அண்ணாச்சி தான். அட “எலே மிஸ்பன்னிறாதிய.. அப்புறம் வருத்தப்படுவிய” அவரு இல்லப்பா.. நம்ம D. இமான். எல்லா பாட்டுமே நல்லா போட்டுருக்காரு. குறிப்பா எனக்கு ரொம்ப புடிச்சது intro songum ”ஒத்த சடை ரோசாவும்”

அநியாயத்தக் கண்டா பொங்குறது, பொண்ணுங்களே தெய்வமா மதிக்கிறது போன்ற முதன்மை வேலைகளோட, மூட்டை தூக்குறத சைடு வேலையா பாக்குறவரு விஷால். அப்புடியே மூட்டை தூக்குறவங்க மாதிரியே இருக்காரு. ஒரு அழுக்கு பனியன். முட்டிக்கு மேல ஏத்திக்கட்டுன கைலியோட கரு கரு காலோட பெரும்பாலான சீன்ல அப்டியே பாத்துரமாவே தெரியிறாரு. பொதுவா ஹீரோக்கள் இந்த மாதிரி கேரக்டர் பன்றது ஒண்ணும் புதுசு இல்லை. ஆனா இந்தமாதிரி ரோல் பன்னும்போது நடை உடை பாவனைன்னு ஹீரோ மட்டும் அந்தக் கூட்டத்துல தனியாத் தெரிவாரு. ஆனா முதல் பாட்டுல மூட்டை தூக்குறவங்கல்லாம் சேர்ந்து டான்ஸ் ஆடுவாங்க. அதுல விஷால் எங்க இருக்காருன்னு கண்டுபுடிக்கவே எனக்கு ரொம்ப நேரம் ஆச்சு. எந்த வித ஸ்பெஷல் காஸ்டியூமோ மேக்கப்போ இல்லை. விஷால் ஸ்க்ரீன் ப்ரசன்ஸூம் செம.

விஷால் ஹைட்டுக்கு சம்பந்தமே இல்லாம மூணடியில விஷாலோட பாட்டி. ரொம்ப தைரியமான பாட்டி. ஓரளவுக்கு நடிக்கவும் செஞ்சிருக்கு. அடிக்கடி விஷாலு “ஆத்தா நீ என் சாமி ஆத்தா” ம்பாறு. அப்பவே நமக்கு தெரிஞ்சிரும் ஆத்தாவ சீக்கிரம் சாமிக்கிட்ட அனுப்பிருவாங்கன்னு. அத இண்டர்வல்ல அனுப்புறாய்ங்களா இல்லை க்ளைமாக்ஸ்ல அனுப்புறாய்ங்களான்னுதான் டவுட்டு. ஸ்டண்டு முந்தைய ரெண்டு படத்துல இல்லாத அளவுக்கு இதுல நல்லா இருக்கு.

ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தப் பத்தி மட்டும் படமெடுக்குறார்ன்னு முத்தையா மேல ஏற்கனவே ஒரு குற்றச்சாட்டு இருக்கு. இந்தப்படத்துலயும் அது கண்டிப்பா தொடரும். நம்ம இதப்பத்தி ரொம்ப உள்ள பூந்து தொலாவத் தேவையில்லை. பெரும்பாலும் பெண்களை மதிப்பது, பெண்கள் பாதுகாப்பு, பெண்களோட வீரம் இதை மட்டுமே மையமா வச்சி படம் எடுக்குற முத்தைய்யா குட்டிப்புலி படத்துல இரண்டு பெண்கள் சேர்ந்து வில்லன் கழுத்த கத்தியால துண்டா வெட்டி எடுத்துட்டு வர்ற மாதிரி ஒரு கொடூரமான காட்சி வச்சிருந்தாரு

இங்க இன்னும் ஒருபடி மேல போய் ரெண்டு பெண்களை இந்தப் படத்துல கொடூரமாக வில்லன்கள் கொல்றது மாதிரியான காட்சிகள் வருது.. படத்துக்கு U/A சர்டிஃபிகேட் வந்ததுக்கு இதுதான் காரணமா இருந்துருக்கனும். நிச்சயம் இந்தக் காட்சிகள தவிர்த்துருக்கலாம். ஒரு ஆம்பளைய நடுரோட்டுல வெட்டிக்கொல்ற காட்சிகள ஏராளம் பாத்துருக்கோம். அதயே ஒரு பொண்ணை நடுரோட்டுல நாலு பேரு அமுக்கி புடிச்சி கழுத்தை அறுத்துக் கொல்றது மாதிரியான ஒரு காட்சி வைக்கும்போது ரொம்ப ஒரு மாதிரி இருக்கு.


விஷால் வெள்ளத்தின் போது எதுவுமே பன்னல.. அவன் படத்தையெல்லாம் யாரும் பாக்காத்தீங்கன்னு ஒரு குரூப்பு ப்ரச்சாரம் பன்னிக்கிட்டு திரியிது. இவய்ங்கல்லாம் என்ன ரகம்னே தெரியலை. இவய்ங்க இருக்க ஃபோர்ஸ பாத்தா வெள்ளத்துல உதவி பன்ன சித்தார்த் படத்தையெல்லாம் இனிமே கண்டிப்பா 100 நாள் ஓட்டுவாய்க்க போல. 

என்னைப் பொறுத்த அளவு மருது வோட முதல் பாதி நல்ல பாட்டு, நல்ல காமெடின்னு கொம்பன விட நல்லா இருந்துச்சி. செகண்ட் ஹாஃப் கொஞ்சம் ஆவரேஜ் தான். ஆனா ஓவராலா படம் நல்லா தான் இருக்கு. என்னைப் பொறுத்த வரை மருது கொம்பனை விட  கொஞ்சம் பெட்டர்னுதான் தோணுச்சி. 



Saturday, May 7, 2016

24 – பூனைக்கு மணி!!!


Share/Bookmark
நடைமுறையில நடக்குறதுக்கு ஒரு சதவீதம் கூட வாய்ப்பு இல்லாத ஒரு விஷயம் டைம் ட்ராவல். ஆனா இந்த டைம் ட்ராவல் கான்செப்ட் மாதிரி இண்ட்ரெஸ்டிங்கானது எதுவுமே இல்லைன்னு சொல்லலாம். இந்த கான்செப்ட்ட ஒழுங்கா தெளிவா கையாண்டா, படம் பாக்குறவங்கள ஆச்சர்யத்தோட உச்சத்துக்கே கொண்டு போற அளவுக்கு ஸ்கிரிப்ட் எழுத முடியும். இத எத்தனையோ ஹாலிவுட் படங்கள் ப்ரூவ் பன்னிருக்கு. ஹாலிவுட்ல மூன்று நான்கு decades ah இந்த கான்செப்ட்ல படம் வந்துக்கிட்டு இருந்தாலும் தமிழ்ல இப்பதான் ஒண்ணு ரெண்டு படங்கள் எட்டிப்பாக்குது. ஏன் தமிழ்ல்ல இவ்வளவு நாள் இந்த டைம் ட்ராவல் கான்செப்ட்ட வச்சி படம் எடுக்காம இருந்தாங்கன்னு யோசிச்சா, ஒரே ஒரு முக்கியமான காரணம் என்னவா இருக்க முடியும்னா மக்களுக்கு இத எப்படி புரிய வைக்கிறதுங்குற குழப்பமாத்தான் இருந்துருக்கனும்.

முதல் முதலா போன வருஷம் “இன்று நேற்று நாளை” ன்னு ஒரு படம் வந்துச்சி. ஆனா அது எத்தனை பேருக்கு போய் சேந்துச்சின்னு தெரியல. விஷ்ணுவ எனக்கு புடிக்காதுங்குற ஒரே காரணத்துக்காக நானே இன்னும் அந்தப் படம் பாக்கல. அதுக்கப்புறம் வெகுஜனங்களுக்கு இந்த கான்செப்ட் சென்றடையிற மாதிரி முதல் முதலா ஒரு பெரிய ஹீரோவ வச்சி டைம் ட்ராவலுக்குள்ள தமிழ் சினிமா நுழைஞ்சிருக்கு. இந்தப் படம் நல்லா இருக்கோ இல்லையோ. ஆனா இது தமிழ்/தெலுங்கு சினிமாவுல  டைம் ட்ராவல் கான்செப்ட்ல நிறைய படங்கள் வர்றதுக்கு ஒரு முக்கியக் காரணமா இருக்கும்ங்குறதுல சந்தேகமே இல்லை.

மிஸ்டர் பீன் எபிசோடுகள்ல ஒரு விஷயம் நோட் பன்னிருப்பீங்க. ரோவன் அட்கின்சன் கிறிஸ்மஸ் அன்னிக்கு ஒரு கிரீட்டிங் கார்டு வாங்கி கவருக்குள்ள வச்சி  அவர் வீட்டுக்குள்ள போட்டுருவாரு. கொஞ்ச நேரம் கழிச்சி திரும்பி வீட்டுக்குள்ள வந்து அந்தக் கவர வேற யாரோ அவருக்கு அனுப்புன மாதிரி நினைச்சி ஆச்சர்யமா பிரிச்சி பாத்து அவரே சர்ப்ரைஸ் ஆகிக்குவாரு. ஆனா அந்த மாதிரி நம்மளால இருக்க முடியாது. நமக்கு ஏற்கனவே பரிட்சையமான ஒரு விஷயத்த புதுசா பாக்குற மாதிரி பாத்து ஆச்சர்யப்பட முடியாது. அதனால ஏற்கனவே ஒருசில டைம் ட்ராவல் படங்களைப் பாத்த எனக்கு இந்தப் படம் என்ன இம்பேக்ட குடுத்துச்சின்னு தான் இதுல பாக்கப்போறோம். முதல் தடவ பாக்குறவங்களுக்கு இந்தப் படம் என்ன சர்ப்ரைஸ் குடுத்துச்சின்னு என்னால யூகிக்க முடியாது. எனவே படம் பாக்குற ஐடியாவுல இருக்கவங்க அப்புடியே ஸ்கிப் பன்னி கடைசி பாராவுக்கு போயிடலாம்.

விக்ரம் கே. குமாருக்கு இந்த அமானுஷ்யம், பூர்வ ஜென்மத்து மேலயெல்லாம் ரொம்ப இண்ட்ரெஸ்ட் போல. இவர் சிம்புவ வச்சி எடுத்த அலை மட்டும் மரண மட்டை. யாவரும் நலத்துக்கு அப்புறம் தெலுங்குல நிதின் ah வச்சி எடுத்த Ishq செம ஹிட்.  யாவரும்நலம் பாத்த எக்ஸ்பீரியன்ஸ இன்னும் என்னால மறக்க முடியல. படம் ஆரம்பத்துலருந்து கடைசி வரைக்கும் கொஞ்சம் கூட பிசிறாம எங்கேஜ் பன்னிவச்சிருந்த படம். அதே மாதிரி தான் “மனம்” ஒரு மாஸ்டர் பீஸ். அப்படிப்பட்டவரு ஒரு டைம் ட்ராவல் படம் எடுக்குறாருன்னு நினைக்கிறப்போ உண்மையிலே நா ரொம்ப எதிர் பாத்தேன். ஆனா படத்துல அவர் குடுத்த ஆச்சர்யங்களை விட ஏமாற்றங்கள் தான் அதிகம்னு சொல்லலாம்.

டைம் ட்ராவல் நடைமுறையில சாத்தியமில்லைன்னாலும் அது நடந்தா எப்படி நடக்கும்குறதுக்கு தியரி நிறைய இருக்கு. அதுல ஒண்ணு ரெண்ட படிச்சிப் பாத்தாவது நம்மாளு கொஞ்சம் டைம் மிஷினப் பத்தி டீட்டெய்லிங் பன்னிருக்கலாம். ஆனா அவரு படத்துல பன்னிருக்கது என்னனா அட்டகாசம் அஜித் மாதிரி “கண்ணாடியத் திருப்புனா வண்டி ஓடும்” டைப் தான்.

ஒவ்வொரு சீனும் ஓவ்வொரு ஷாட்டும் ஒண்ணுக்கொண்ணு ரிலேஷன் இருக்க மாதிரியோ இல்லை ஸ்க்ரீன்ல காமிக்கிற ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு பர்ப்பஸ் இருக்குற மாதிரியோ சீன்ஸ் வச்சிருக்காரு. ஒண்ணு ரெண்டுன்னா பரவால்ல. எல்லா பொருளையுமே அப்டி காமிக்கிறது ரொம்ப ஆர்டிஃபீஷியலா இருக்கு.  Bubble gum துப்புறது அதுல சாவி ஒட்டிக்கிட்டு வர்றது, கரண்ட் ஷாக் அடிக்கிறது அது மூலமா வாட்ச் சார்ஜ் ஆகுறதுன்னு இந்த மாதிரி இன்னும் நிறைய.

முதல் கால் மணி நேரத்துல கதைக்கான ஆரம்பத்தையும், வில்லன் சூர்யா எவ்வளவு கொடூரமானவங்குறதையும் காமிக்கிறாங்க. லொக்கேஷனும் வில்லன் சூர்யா கெட்டப்பும் சூப்பர். சைண்டிஸ்ட் சூர்யா அப்படியே “ஹாய் மாலினி.. நா இத சொல்லியே ஆகனும்” கெட்டப்புல இருக்காரு. பேசுறது கூட அதே ஸ்லாங்கு. சகிக்கல.

வில்லன் சூர்யாவத்தவற ஆர்டினரி சூர்யாகிட்ட இருக்கது ரெண்டே வேறியேஷன் தான். ஒண்ணு “நீங்கல்லாம் பெருமையா சொல்லிக்கலாம்….” டைப். இன்னொன்னு வாரணம் ஆயிரம் படத்துல வர்ற மாதிரி “ப்பா.. I need this paa… I need this paa” டைப். அடிக்கடி சூர்யா பேசும்போது இந்த ரெண்டு வசங்களும் அதுல அவர் பேசுன ஸ்லாங்கும் தான் ஞாபகம் வருது.

டைம் மெஷின் சூர்யா கைக்கு கிடைச்சப்புறம்… ச்ச அத டைம் மிஷின்னு சொல்லவெ ஒரு மாதிரி இருக்கு. அந்த வாட்ச் சூர்யா கைக்கு கிடைச்சதும், சூர்யா டைம் ட்ராவல செக் பன்னி பாக்குறதெல்லாம் பாபா படத்துல தலைவர் பட்டம் விட்டு செக் பன்னுவாரே.. அந்த ரேஞ்சு.

படத்த பெருமளவு மொன்னையாக்குறது சமந்தா தான். தமிழ் சினிமாவும், தெலுங்கு சினிமாவும் இந்த சமந்தாவ என்னிக்கு விடப்போறாய்ங்கன்னு தெரியலயே. குருநாதா.. இதுக்கு மேலயும் என்னால இதுக்கு மேல பொறுக்க முடியாது குருநாதா… சூர்யா சமந்தா காதல் காட்சிகள் வழ வழ கொழ கொழ மட்டும் இல்லாம ரொம்ப நீளமான சீன்ஸ் எல்லாம்.

சில இடங்கள்ல படத்துல எனக்கு சிரிப்பே வந்துருச்சி. வாட்ச் ரிப்பேர் பன்றவனால டைம கன்ரோல் பன்ன முடியும்னு ஒரு புது கான்செப்ட கொண்டு வந்துருக்காய்ங்க பாருங்க.. ஸ்டன் ஆயிட்டேன். கமல் சொல்ற மாதிரி தூக்கம் வரலன்னா கொட்டாவி விட்டா தூக்கம் வந்துருமாடா? என்னங்கடா உங்க லாஜிக்கு? டைம் ட்ராவலுக்கும் வாட்ச்சுக்கும் என்னடா சம்பந்தம்? அவங்க அப்பா என்னன்னா அவர் ஒரு வாட்ச் கம்பெனில வேலை பாத்துட்டு, சயிண்டிஸ்டாயி டைம் ட்ராவல் பன்ற வாட்ச கண்டுபுடிக்கிறாரு. புள்ளை என்னடான்னா சவுக்கார் பேட்டை சந்துல வாட்ச் மெக்கானிக்..  அவரு பன்றது அதுக்கும் மேல.

உலகம் சுற்றும் வாலிபன் படத்தோட முதல் சீன். வெளில இடி பயங்கரமா  இடிச்சிட்டு இருக்கும். புரட்சி தலைவரு ரூமுக்குள்ள உக்காந்து ஜன்னல் வழியா இடி இடிக்கிறத கண்ணால பாத்துக்கிட்டே ஒண்ணாப்பு பையன் நோட்டுல வீட்டுப்பாடம் எழுதுற மாதிரி வேகவேகமா என்னவோ எழுதுவாரு. திடீர்னு கண்துபுஸ்தேன்… கண்துபுஸ்தேன்னு கத்துவாரு (கண்டுபுடிச்சிடேன் கண்டுபுடிச்சிட்டேன்). என்னத்தடா கண்டுபுடிச்சாருன்னு பாத்தா இடி இடிக்கும்போது மின்னலோட சக்தில பத்துல ஒரு பங்க புல்லட்டுல எப்புடி சேமிக்கிறதுங்குறத கண்டுபுடிச்சிட்டேன்ம்பாரு. எப்புடி? ரூமுக்குள்ள உக்காந்து கண்ணால இடியப்பாத்தே..

அதப்பாக்கும்போது எவ்வளவு சிரிப்பு வந்துச்சோ அதவிட அதிகமா இங்க ஒரு சீன்ல சிரிச்சேன். அப்பா சூர்யா கண்டுபுடிக்கிற டைம் ட்ராவல் பன்ற வாட்ச் ah வச்சிக்கிட்டு ஒரு நாள் முன்ன இல்லை பின்ன தான் டைம் ட்ராவல் பன்னலாம். ரொம்ப நாள் பின்னால போக முடியாது. இதக் கேள்விப்பட்ட சூர்ய ஒரு நாள் நைட்டு வாட்ச வச்சிட்டு உக்காருவாரு. பிரிப்பாரு. அதுக்குள்ள என்னவோ சேப்பாரு. சேத்துட்டு “ப்பா.. நீங்க மணிக்கனக்குல ட்ராவல் பன்றதுக்கான ஆப்ஷன் மட்டும் தான் குடுத்துருக்கீங்க. நா அதுல நாட்கள் ட்ராவல் பன்ற மாதிரி சின்ன மாடிஃபிகேஷன் பன்னிருக்கேன்… இப்ப நீங்க பல நாட்கள் கடந்து போகலாம்.. வருஷங்கள் கடந்து போகலாம்” ந்ன்னு சொல்லுவாரு பாருங்க. அடேய்…. என்னடா வாட்ச் கடையில பழைய பேட்டரிய கழட்டிட்டு புது பேட்டரி மாத்துற மாதிரி சாதாரணமா சொல்லிக்கிட்டு இருக்கீங்க.. இது டைம் ட்ராவல்டா… கொஞ்சமாவது மதிங்கடா.

அதுலயும் 1990 லயே அவங்க அப்பா அந்த வாட்ச்ல நம்ம ஆண்ட்ராய்டு ஃபோன் ரேஞ்சுக்கு பல அப்ளிகேஷன்கள இன்ஸ்டால் பன்னி குடுத்துருப்பாரு. Flight mode , Silent mode மாதிரி Freeze mode ன்னு ஒண்ணு….. இது ஒண்ணு ரெண்டு சீன்ல கொஞ்ச நல்லா இருந்தாலும், தோத்துப்போன க்ரிக்கெட் மேட்ச ஜெயிக்க வைக்கிறது, தோணிக்கிட்ட போய் ஃபோட்டோ எடுக்குறதெல்லாம் மிடில.

ரெண்டு விதமான டைம் ட்ராவல் கான்செப் இதுவரைக்கும் சினிமாவுல யூஸ் பன்னிருக்காங்க. ஒண்ணு நீங்க டைம் ட்ராவல் பன்னி 10 வருஷம் பின்னால போனா, பத்து வருஷம்  முன்னால நீங்க எப்டி இருந்தீங்களோ அப்டி ஆயிருவீங்க. அதாவது உங்க வாழ்க்கை பத்துவருஷம் பின்னால போகும். அவ்வளவுதான். ரெண்டாவது கான்செப்ட்ல டைம் ட்ராவல் பன்னி 10 வருஷம் பின்னால போனீங்கன்னா, அங்க நீங்களும் இருப்பீங்க.. உங்கள விட பத்து வயசு குறைவான உங்களோட younger version னும் இருப்பான். அதாவது ரெண்டு பேர் இருப்பீங்க. (புரியலன்னா இந்த பாராவ திரும்ப ஒருக்கா படிங்க… நா எழுதுனது எனக்கே புரியல) இதுல முதல் கான்செப்ட்ட விட ரெண்டாவது கான்செப்ட் தான் ரொம்ப சக்ஸஸ்ஃபுல். ரெண்டாவது கான்செப்ட்ட தான் நல்லாவும் எடுக்கலாம். ஆனா நம்ம விக்ரம் கே.குமார் 24 படத்துல உபயோகிச்சிருக்கது முதல் விதம். சற்று டொம்மையா தான் இருக்கு.

வில்லன் சூர்யா தான் படத்துக்கு பெரிய பலம். அவருக்கான காட்சிகள், கெட்டப் எல்லாமே செம. நல்லாவும் நடிச்சிருக்காரு. மத்த ரெண்டு கெட்டப்புமே மட்டை. க்ளைமாக்ஸ் பயங்கராமா எதிர்பாத்தேன்.. மொத்தம் நாலு சூர்யா க்ளைமாக்ஸ்ல இருக்க போறாங்க.. செமையா இருக்கப்போவுதுன்னு பாத்தா அல்வா தான் மிச்சம்.

பாட்டெல்லாம் ஓக்கே. “புன்னகையே” ந்ன்னு ஒரு பாட்டு சூப்பரா இருந்துச்சி.. ஆனா படத்துல அது வரல. பாட்டுக்கெல்லாம் choreographer இல்லாம இவய்ங்களே எடுத்துருப்பாய்ங்க போல.. சும்மா நடந்துக்கிட்டும் ஓடிக்கிட்டும் கப்பித்தனமா இருக்கு. அதுலயும் சமந்தாவுக்கு ட்ரெஸ் ப்ரமாதம்.. ஆம்பள மாதிரி இருக்கு.

சமீபத்துல வந்த Looper, Presdestination படத்தல்லாம் கம்பேர் பன்ன வேணாம். ரொம்ப advanced.  30 வருசம் முன்னால வந்த Back to the Future படத்துலயே பட்டைய கெளப்பிருப்பாய்ங்க. ரெண்டாவது பார்ட் க்ளைமாக்ஸ். டைம் ட்ராவல் மெஷின கண்டுபுடிச்ச சயிண்டிஸ்டும், அவரோட ட்ராவல் பன்ற ஹீரோவும் இருப்பாங்க. க்ளைமாக்ஸ்ல சயிண்டிஸ்டோட மெஷின் எதோ மால் ஃபங்ஷன் பன்னி டைம் ட்ராவல் ஆகி எங்கயோ போயிடுவாரு. ஹீரோ மட்டும் தனியா என்ன பன்றதுன்னு தெரியாம முழிச்சிட்டு இருப்பான். அப்ப ஒரு கார் அந்த இடத்துக்கு வரும். அதுலருந்து ஒருத்தன் இறங்கி வந்து ஹீரோகிட்ட ஒரு லெட்டர குடுப்பான். லெட்டர பிரிச்சி பாத்தா, கொஞ்ச நேரத்துக்கு முன்னால டைம் ட்ராவல் பன்னி காணம போன சயிண்டிஸ்ட் இவனுக்கு 1885 ல எழுதுன லெட்டர். 1885 க்கு ட்ராவல் பன்னி போன சயிண்டிஸ்ட் ஹீரோ இன்னிக்கு மாட்டிக்கிட்டு முழிப்பான்னு தெரிஞ்சி, ஒரு லெட்டர் எழுதி அத கரெக்ட்டா இந்த டைமுக்கு இவன்கிட்ட கிடைக்கிற மாதிரி செஞ்சிருப்பாரு. (இதுவும் உங்களுக்கு புரிஞ்சிருக்காது. எனக்கும் புரியல) தயவுசெஞ்சி Back to the future பாக்கதவங்க பாருங்க. புல்லரிக்கும் அந்த சீன்.

ஆனா இங்க கமர்ஷியல் ஐட்டங்களை சேர்க்குறேன்னுட்டு நிறைய இடங்கள்ல ட்ராக்குலருந்து விலகிருச்சி படம். ஒரு சில சீன்கள்ல சூர்யாவ பாக்கும்போது இது இளைய தளபதி விஜய் நடிக்க வேண்டிய படமோன்னு கூட தோணுச்சி.


மொத்தத்துல முதல் முதலா டைம் ட்ராவல் படம் பாக்குறீங்கன்னா உங்களுக்கு படம் சுவாரஸ்யமா இருக்கலாம். ஆனா ஏற்கனவே பரிட்சையமானவங்களுக்கு 24 ஒண்ணும் அவ்வளவு சுவாரஸ்யமா இருக்காது. 


LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...