அனுபவப் பதிவுகள்
எழுதி நாளாகிவிட்டது. கல்லூரிப் பதிவுகள் எழுதியதும் மறந்தே போய் விட்டது. பழைய நினைவுகளை
ஞாபகப் படுத்த எதோ ஒரு விஷயம் தேவைப்படுகிறது. மற்றவர்களைப் பற்றி தெரியவில்லை. ஆனால்
நான் என்னுடைய நினைவுகளை பாடல்களில் தான் சேமித்து வைத்திருக்கிறேன்.
அந்தந்த தருணங்களில்,
அந்தந்த காலகட்டங்களில் கேட்கும் பாடல்களில் அந்த சம்பவங்களைப் பற்றிய நினைவுகள் சேகரமாகிறது.
இப்பொழுதும் “இளங்காத்து வீசுதே” பாடலைக் கேட்டால்
என்னை அறியாமல் உள்ளுக்குள் ஒரு பயம் தோன்றும். கல்லூரியில் சேர்ந்து முதல் செமஸ்டர்,
முதல் முதலாக முழுவதும் ஆங்கிலத்தில் தேர்வை எதிர்கொள்ளவிருந்த, பள்ளி வரை முதல் மூன்று
இடங்களுக்குள் வந்து , கல்லூரியில் முதல் முறை ஒரு சராசரி மாணவனாக எதிர்கொள்ளவிருந்த
தேர்விற்கான பயம் அது.
அதே போல “அ ஆ”
திரைப்படத்தின் மயிலிரகே பாடலைக் கேட்டால் கல்லூரியின் சுற்றுலா ஞாபகம். Emcee
Jesz இன் ”பச்சைக்கிளி முத்துச்சரம்” பாடலைக் கேட்டால் என்னுடைய முதல் ஆன் சைட் ஞாபகம்,
அல்லு அர்ஜூனின் ரேஸ் குர்ரம் பாரலைக் கேட்டால் நாஸிக்கில் சுற்றிய ஞாபகம் என ஒவ்வொரு
பாடலுக்கும் ஒரு இடம், ஒரு நினைவு. அப்படி எதேச்சையாக இரண்டு நாட்களுக்கு முன்னர் கேட்ட
பாடல் “ஜெய் கங்கே மாதா”. ஹரித்வாரில் கங்கையில் மாலையில் ஆரத்தி காண்பிக்கும் போது
ஒலித்துக் கொண்டிருக்கும் பாடல் ஹரித்வார் நினைவுகளை கிளரி விட்டது.
வேலைக்கு சேர்ந்து
முதல் ஏழரை வருடம் தமிழ்நாட்டில் இருந்ததை விட வெளியூர்களில் தான் அதிகம் இருந்திருக்கிறேன்.
அதன் பிறகு எனக்கு ஏழரை ஆரம்பித்துவிட்டதால், பணியிட மாற்றமாகி தமிழ்நாட்டு எல்லையையே
இப்பொழுதெல்லாம் தாண்ட முடிவதில்லை. சர்வீஸ் எஞ்ஜினியராக இருந்து சுற்றிய சில இடங்களில்
எனக்கு மிகவும் பிடித்த இடம் ஹரித்வார்.
ஹரித்வார் நகரிலிருந்து
சுமார் 35 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்திருந்த பிர்லா டயர்ஸ் கம்பெனிதான் எங்கள் கஸ்டமர்.
கம்பெனி அமைந்திருந்த இடத்தில் தங்கும் வசதி பெரிதாக இல்லாததால், ஹரித்வாரில் உள்ள
ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டிருந்தோம். எங்களுக்கென்று தனியாக ஒரு சுமோ. காலையில் சுமார்
9 லிருந்து 9:15 க்குள் கிளம்பி 10 மணிக்கு கம்பெனியை அடைவோம். மாலையில் 4:30 லிருந்து
5 ற்குள் புறப்பட்டு 5:45 க்குள் ஹரித்வாரை அடைந்து விடுவோம்.
கம்பெனிக்கு
செல்லும் வழியில் பெரிய பெரிய மாந்தோப்புக்கள் அதிகம். திரும்பி வரும் பொழுது மாந்தோப்பில்
கொட்டும் பழங்கள் சாலை ஓரத்திலேயே விற்பனைக்கு இருக்கும். பத்து ரூபாய், இருபது ரூபாய்க்கே
20, 30 சிறிய, இயற்கையாகப் பழுத்த மாம்பழங்கள் கிடைகும். தோப்பிற்கு வெளியே சாலை ஓரத்திலே
ஒரு அடி பைப்பு ஒன்றும் எங்களுக்காகவே போடப்பட்டது போல இருக்கும். மாம்பழங்களை வயிறு
முட்ட தின்று விட்டு, மூஞ்சு கால் கையெல்லாம் கழுவி விட்டு கிளம்ப ஏதுவாக இருக்கும்.
வெயில் காலம்
என்பதால், ஹரித்வாருக்கு வரும்பொழுதே நல்ல வெளிச்சமாக மாலை வெய்யிலோடுதான் இருக்கும்.
நேராக ஹோட்டலுக்குச் செல்லாமல், வழியில் குறுக்கிடும் கங்கை ஆற்றிலேயே இறங்கிக் கொள்வோம்.
ட்ரைவரிடம் எங்கள் பொருட்களையெல்லாம் ஹோட்டலில் வைத்துவிட்டு வரும்பொழுது துண்டுகளை
எடுத்துவரச் சொல்வோம். “உங்களுக்கெல்லாம் ட்ரைவர் வேலை பாக்குறேன்லடா.. எனக்கு வேணும்டா”
என நினைத்துக் கொண்டே சென்று எடுத்து வருவார்.
40 டிகிரி வெய்யிலில்
வேலை செய்து விட்டு வந்து, எப்பொழுதும் ஜீரோ டிகிரியிலேயே இருக்கும் கங்கை நீரில் இறங்குவதே
ஒரு ஆனந்தம் தான். குறைந்தது அரை மணி நேரம் முதல் ஒரு மணி நேரம் வரை ஆசை தீர குளிப்போம்.
நாங்கள் குளிப்பது கங்கயிலிருந்து பிரித்து விடப்பட்ட நீரோட்டத்தின் ஒரு பகுதி. நீரின்
வேகம் மிக அதிகமாக இருக்கும். நீச்சல் தெரிந்தவர்கள் மட்டும் சங்கிலித் தடுப்புகளைத்
தாண்டி உள்ளே செல்லலாம். அதுவும் நடு ஆற்றிற்கெல்லாம் செல்ல முடியாது. ஆற்றின் நடுவிற்கு
சென்றுவிட்டால், கரையை தொடுவதற்குள் நாம் குறைந்த பட்சம் ஒரு 50 மீட்டராவது படித்துறையிலிருந்து
இழுத்துச் செல்லப்படுவோம்.
அதனால் படித்துறைக்கு
முன்னர் ஒரு நூறு மீட்டர் தொலைவில் ஒரு சில பாலக்கட்டை இருக்கும். அதில் ஏறி குதித்து
நீந்தினால் படித்துறைக்கு வருவதற்கு சரியாக இருக்கும். கண்கள் சிவந்த பின்னர்தான் கரையேறுவோம்.
கரையேற மனது வராது என்பதே உண்மை. இது ஒரு நாள் அல்ல.. ஒவ்வொரு நாளும். கிட்டத்தட்ட
மூன்று மாதங்கள்.
பெரும்பாலும்
எங்கள் வேலை ”போனமா வந்தமா” என்று இருக்காது. அதானாலேயே இடங்களை சுற்றிப்பார்ப்பதற்கு
உடனடியாக ஆர்வம் காட்டுவதில்லை. ”அதான் இங்க தானே இருப்போம்.. பாப்போம்.. பாப்போம்”
என்றே தள்ளிக்கொண்டு போகும். ஆனால் ஒருநாள் இரண்டு நாள் விசிட்டிற்கு வரும் டிசைனரோ,
சேல்ஸ் பர்சனோ அதே வேகத்தில் அங்கிருக்கும் மொத்த இடத்தையும் ஒரே நாளில் சுற்றி விட்டுத்தான்
கிளம்புவார்கள்.
ஹரித்வார் பிர்லா
டயர்ஸ் அப்பொழுத்தான் முதன் முதலாக தொடங்கப்பட்டிருந்தது. அனைத்து டயர் க்யூரிங் மெஷின்களும்
எங்களுடைய கம்பெனியிலிருந்தே அனுப்பப்பட்டிருந்ததால் அத்தனை மெஷின்களூம் நிறுவப்பட்டு,
செயல்பாட்டுக்கு கொண்டுவரும் வரை எங்கள் வேலை. கிட்டதட்ட இரண்டு வருடங்கள் தொடர்ந்து
வேலை இருந்தது.
மூன்று மாதத்திற்கு
ஒரு முறை எங்களுக்கு மாற்று ஆட்கள் அனுப்பபடுவார்கள். அதுவும் சைட்டுக்கு போன ரெண்டவது
வாரத்திலிருந்து கெஞ்சினால் தான் மூன்றாவது மாதத்தில் மாற்று ஆட்கள் வருவார்கள்
“சார் ஊருக்கு
கிளம்பலாமா சார்?”
”தம்பி அவங்க
ஒக்கே சொன்னா கெளம்புங்கப்பா” என்பார் எங்கள் பாஸ்
உடனே Minutes
of Meeting ஐ தயார் செய்து, பிர்லா டயர்ஸ் மேனேஜரிடம் செல்வோம். நாங்க கைல பேப்பரோடா
போனாலே அவரு உசாராயிருவாரு. ”ஆஹா கெளம்புறதுக்கு திட்டம் போட்டானுக.. இவனுகள விடக்கூடாதுடா
கைப்புள்ள” என்று அப்போதுதான் பயங்கர பிஸியை காண்பிப்பார்.
நீண்ட நேரம்
காக்க வைத்துவிட்டு ராட்வெல்லர் முகத்துடன் உள்ளே அனுமதிப்பார்கள். உள்ளே சென்றால்
அதுவரை நமக்குத் தெரியாத, இல்லாத பிரச்சனைக்களெல்லாம் சொல்லி, ”
”இவ்ளோ பிரச்சனை
இருக்கு நீங்க ஊருக்கு கெளம்புவீங்களா? இப்பவே உங்க பாஸூக்கு ஃபோன் பன்னிருவேண்டா”
என ஃபோனை கையில் தூக்குவார்.
“எப்புடியும்
அவங்க சொல்லி விடப்போறீங்க… அதுக்கு நீங்களா விட்டதா இருக்கட்டும் சார்” என எதோ ஒரு
படத்தில் சொல்வது போல ”எப்டியோ எங்க சுத்தியும் நம்மள இங்க தங்க வைச்சிருவானுக… அதுக்கு
நாமளா இருக்க மாதிரி இருக்கட்டும்” என முடிவு செய்து அதை உடனேயும் ஒத்துக் கொள்ளாமல்
அவர் ஆயிரம் பிரச்சனை சொல்லும் போது பதிலுக்கு நாமும் “எங்களுக்கு இந்த சப்போர்ட் இல்ல..
அந்த சப்போர்ட் இல்ல…” என ஆரம்பித்தால் கொஞ்சம் கூல் ஆகி
“அதெல்லாம் இருக்கட்டும்பா.. நாளைக்கு கார் தர்றேன்..
எல்லாரும் போய் முசொரிக்கு போய் நல்லா சுத்திப் பாருங்க… ரெண்டு நாள் கழிச்சி வாங்க.
நீங்க கேக்குறதெல்லாம் ரெடியா இருக்கும்” என்பார்
பட் அந்த டீலிங்
எங்களுக்கு ரொம்ப புடிக்கும். அதனால ஒத்துக்குவோம்.
ஹரித்வாரைப்
பொறுத்த வரை தொடர்ந்து அங்கு தங்குவதற்கு இரண்டு ப்ரச்சனைகள் இருக்கும். ஒன்று உணவு.
சுத்தமாக நமக்கு செட் ஆகாது. நான் வெஜ் ஹரித்வாருக்குள் அனுமதி இல்லை. இன்னொன்று ஹிந்தி.
வேலை பார்க்கும்
இடத்தில் பேசும் இண்டஸ்ரியல் ஹிந்தி மிகவும் எளிது. என்னுடைய சீனியர் அண்ணன் ஒருவர்
சொல்லிக் கொடுத்தார். டைட் கரோ, லூஸ் கரோ, கனெக்ட் கரோ, உல்டா கரோ என நாம் உபயோகிக்கும்
ஆங்கில வார்த்தைகளில் கரோவை சேர்த்துக்கொள்வது. அது பெரும்பாலும் ஒர்க் அவுட் ஆகிவிடும்.
மற்ற படி பொது வெளியில் மற்றவர்களுடன் பேசும்
ஹிந்திதான் கொஞ்சம் கடினம்.
ஹரித்வாருக்குச்
சென்ற சில நாட்களுக்குப் பின்னர்தான் நண்பன் அசால்ட்டு அசார் ஹரித்வாருக்கு அருகிலுள்ள ரூர்க்கி IIT படித்து
வந்தது தெரிந்தது. அசாரைப் பற்றி சொல்ல வேண்டுமென்றால் நார்த் இண்டியனுக்கு நார்த்
இண்டியன். சவுத் இண்டியனுக்கு சவுத் இண்டியன். ஹிந்தி வாலாக்களைப் பார்த்தாலேயே “அரே
பாய்… ஏ கிதர் ஹே.. ஓ கிதர் ஹே?” என ஹிந்தியில் பிரித்து மேய்வான். எனக்கு ஹிந்தி சுத்தமாகத் தெரியாத வரை அப்படித்தான்
நினைத்திருந்தேன். ஓரளவு ஹிந்தி தெரிந்த பின்னர்தான் புரிந்தது, அவன் நாலு வார்த்தைய
மட்டும் வச்சிகிட்டு எங்கள ஏமாத்திட்டு இருந்துருக்கான்னு.
ஹரித்வாரில்
ஆர்த்தி காட்டும் கங்கை நதி, சண்டி தேவி மலை , மன்சா தேவி மலைகளைத் தவற அருகில் வேறு
இடங்களைச் சுற்றிப்பார்க்கலாம் என நானும் அசாரும் கிளம்பினோம். அங்காங்கு வைக்கப்பட்டிருந்த
அத்தனை சிவன் சிலைகளுடனும் ஃபோட்டோ எடுத்துக்கொண்டு சென்று கொண்டுருந்தோம்.
சுற்றிப்பார்க்க
வேண்டும். ஆனால் எதைப் பார்ப்பதென்று தெரியவில்லை.
“மச்சி.. உன்
ஹிந்தி நாலெட்ஜ வச்சி பக்கத்துல என்னென்ன இடம் இருக்கு பாக்கன்னு அவர்கிட்ட போய் கேளு
மச்சி” என்றதும் அசார் அருகிலிருந்த ஒருவரிம் போய் இரண்டு நிமிடம் கேட்டுவிட்டு திரும்பி என்னிடம் வந்து
“மச்சி அங்க
ஒரு மந்திர் இருக்காம் மச்சி.. வா போவோம்” என்றான்
“அப்டியா வழி
சரியா கேட்டுட்டல்ல.. “
“கேட்டுட்டேண்டா…
வா போவோம்” என ஹரித்வாரின் சில சந்து பொந்துகளுக்குள் அழைத்துச் சென்றான்.
கிராமப் புறங்களிலிருக்கும்
சிறு விநாயகர் கோவில் போல ஒரு சிறிய கோவில் ஒன்று வந்தது.
“மச்சி கும்புட்டுக்கடா…
“ என்றதும் சாமியை கும்பிட்டேன்.
உடனே வந்த வழியே
திரும்ப அழைத்துச் சென்றான். எனக்கு ஒன்றும் புரியவில்லை.
“மச்சி.. இங்க
எதோ மந்திர் இருக்குன்னு சொன்னியேடா… காட்டாமயே அழசிச்சிட்டு போற” என்றேன்
“இப்பதான் கும்புட்டியே
அதான் மந்திர். கோவிலுக்கு ஹிந்தில மந்திர்னு அர்த்தம்”ன்னான்
”அடப்பாவிகளா…
புளியஞ்சாதத்துல முட்டைய வச்சி பிரியாணின்னு ஏமாத்துற மாதிரி இப்டி ஏமாத்திட்டீங்களேடா..
மந்திர்னா கோயில்னு ஏண்டா முன்னாலயே சொல்லல? நானும் மந்திர்ன்னதும் எதோ புதுமையான இடம்
போலன்னு கூடவே வந்தா சந்து சந்தா அழைச்சிட்டு
வந்து மரத்தடி புள்ளையார காமிக்கிற நீ? என்ன விட நாலு வார்த்தை ஹிந்தி அதிகமா தெரிஞ்சி
வச்சிகிட்டு படுவா நீ ஓவரா ஆடுற”
மீண்டும் சந்து சந்தாக அழைத்துச் சென்றான். கடைசியில் எப்பவும் செல்லும் கங்கைக் கரையே வந்து சேர்ந்தது. ”நல்லா சுத்தி காமிச்ச போ” என கங்கையில் கால் நனைத்துவிட்டு, ஒரு கை தண்ணீரை அள்ளி தலையில் தெளித்துக் கொண்டு மீண்டும் ஹோட்டலுக்கு வந்து சேர்ந்தோம்.
- தொடரும்