அருள்நிதி ஏன் அனைத்துப் படங்களிலும் ஒரு மாதிரி சைக்கோ கேரக்டர்களில் சிரிக்காமலேயே நடிக்கிறார் என்கிற கேள்வி அடிக்கடி எனக்கு எழுவதுண்டு. அதற்கான விடை D block இல் கிடைத்தது. முதல் பாதியில் முதலாமாண்டு கல்லூரி மாணவராக அடிக்கடி சிரிப்பவராக நடித்திருந்தார். அவர் சிரிக்காமல் நடிப்பது தான் படம் பார்க்கும் நமக்கு நல்லது என்பதை அதன் பின்னர் புரிந்து கொண்டேன்.
சிறுபிள்ளைத் தனமான கதை. அமெச்சூரான மேக்கிங். காட்டுக்குள் கட்டப்பட்டிருக்கும் காலேஜ். ஒன்பது மணிக்கு மேல் யாரும் வெளியே வரக்கூடாது, மொட்டை மாடிக்கு போகக்கூடாது என என்னென்னவோ சொல்கிறார்கள். ஆனால் கொஞ்சம் கூட லாஜிக்கிற்கு மெனக்கெடவில்லை. எதயாவது எடுத்து வைப்போம் என்பதைப் போல எடுத்திருக்கிறார்கள்.
மொட்டை மாடிக்கு போகக் கூடாது என்றால் கண்டிப்பாக அங்கே ஒரு பெண் போக வேண்டும் என்பது தானே உலக வழக்கம். அப்படி ஹாஸ்டல் மொட்டை மாடிக்கு செல்லும் ஒரு பெண் மறு நாள் வேறு ஒரு இடத்தில் முகத்தில் காயங்களுடன் இறந்து கிடக்கிறாள். சிறுத்தை அடித்துவிட்டது என்கிறார்கள்.
பிரின்சிபாலிடம் பெண் மரணத்திற்கு நியாயம் கேட்கச் செல்கிறார்கள் அருள்நிதி குழுவினர். அதற்கு பிரின்சிபால்
“மொட்டை மாடிக்கு போகக்கூடாதுன்னு நாங்க எவ்வளவு சொல்லியும் அந்தப் பொண்ணு அங்க போச்சுல்ல. அதான் சிறுத்தை அடிச்சிருச்சி” என்கிறார்.
”ஏண்டா கொன்னப்பயலே மொட்டை மாடிய என்ன சிறுத்தைக்கு வாடகைக்காடா விட்டுருக்கீங்க? மொட்டை மாடிக்கு எப்டிடா சிறுத்தை வரும்?” என படம் பார்க்கும் நமக்கே கேட்கத் தோன்றும். ஆனால் துப்பறியும் புலி அருள்நிதிக்கோ அல்லது அந்த கல்லூரியில் படிக்கும் எந்த மாணவ மாணவியருக்கோ இந்த சந்தேகம் வரவே இல்லை. இதைப்போல இன்னும் பலப் பல அபத்தங்கள்.
பெரியார் பேரன் கரு பழனியப்பன் படத்தின் ஆரம்பம் முதல் கடைசிவரை கல்லூரியில் படமாகத் தொங்குகிறார். பின் ஒரே ஒரு காட்சியில் எண்ட்ரி கொடுத்து சந்திரமுகி பாம்பை ஒரு கோல் வித்யாசத்தில் வெற்றி பெறுகிறார்.
மொத்ததில் எருமைச்சாணி விஜய்யின் இயக்கத்தில் உருவான இப்படமும் அவர்கள் சேனலின் பெயரைப் போலத்தான் இருக்கிறது.
-அதிரடிக்காரன்
#Dblock #Athiradikkaran