Friday, December 30, 2016

குடிமகன்களின் புத்தாண்டு!!!


Share/Bookmark
சிறு வயதில் தீபாவளியை எதிர் நோக்கும்போது இருக்கும் அதே உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் இப்பொழுது புத்தாண்டு கொண்டாட காத்திருக்கும் பலரிடமும் பார்க்க முடிகிறது.. புத்தாண்டிற்கு அவர்கள் அருந்தப்போகும் unlimited மதுவும் பப்புகளில் இவர்கள் போடக்காத்திருக்கும் ஆட்டங்களுமே இந்த உற்சாகத்திற்குக் காரணமாக இருக்கிறது. கடந்த நாலஞ்சி நாளாவே ரெண்டு பயலுக சேந்தா கேக்குற கேள்வி நியூ இயர் ப்ளான் என்ன பாஸ்ன்னு தான். அதாவது நியூ இயருக்கு எங்க போய் குடிக்கப்போறன்னு? நியூ இயர்ங்குறது அங்கீகரிக்கப்பட்ட குடிகாரர்கள் தினம்ங்குற நினைப்பு எல்லார்க்குள்ளயும் ஊரிப்போய் கெடக்கு.

ஊருக்கு போறதுக்கு ட்ரெய்ன் டிக்கெட் கிடைக்கலன்னு ஃபீல் பன்றது மாதிரி நியூ இயர் அன்னிக்கு  ஹோட்டல்ல மூவாயிரம் நாலாயிரத்துக்கு எண்ட்ரி டிக்கெட் கிடைக்கலன்னு ஃபீல் பன்ற சில நண்பர்களையும் பாக்க முடியிது.  ஆமா அந்த 3000 ரூவாய்க்கு என்ன தருவாய்ங்கன்னு கேட்டா “டான்ஸ் ஃப்ளோர், அண்லிமிட்டட் சோறு.. அண்லிமிட்டட் சரக்காம்”

நியூ இயருக்கு சரக்கடிக்க அலையிற பாதி பேரு மாரி படத்துல வர்ற சனிக்கிழமை ரோபோ சங்கர் மாதிரிதான். நியூ அன்னிக்கு கம்பல்சரியா சரக்கு அடிப்போம். அப்ப மத்த நாள்ல? மத்த நாள்ல கண்டிப்பா சரக்கு அடிப்போம்.

நியூ இயர்க்கு மட்டும் இல்லை. இந்த கம்பெனிலயெல்லாம் டூர் ப்ளான் பண்ணுவானுங்க. அதுல மெயின் அஜண்டாவே குடிதான். அந்த டூர் ப்ளான அவிங்க போடும்போது பாத்தா செம காமெடியா இருக்கும். எந்தெந்த இடத்துக்கு போறதுங்குறதட விட எங்கெங்க சரக்கு வாங்குறோம் அத எங்கெங்க வச்சி குடிக்கிறோம்ங்குற டீட்டெய்லதான் மொதல்ல டிஸ்கஸ் பன்னுவானுங்க.

கிராமங்கள்ல இன்னும் ஒரு நம்பிக்கை இருக்கு. ஊர்ல இருக்க வரைக்கும் புள்ள நல்லா இருப்பான். டவுனுக்கு போன உடனே அங்கருக்க பசங்க அவனுக்கு குடிக்க வச்சி பழக்கி விட்டுருவாய்ங்கன்னு. எந்த நண்பனுமே சரி.. எவ்வளவு உயிர் நண்பனா இருந்தாலும் சரி யாரும் சரக்க வாயத்தொறந்தெல்லாம் ஊத்தி விட மாட்டானுங்க. எதாவது ஒரு பொருள சாப்டா பக்கத்துல இருக்கவனுக்கும் குடுக்குறது நம்ம பண்பாடு.. அந்த courtesy க்கு மச்சி நீயும் சாப்புடு மச்சின்னு சொல்லுவான். “இல்ல மச்சி நா சாப்பிட மாட்டேன்”ன்னு சொன்னா “சூப்பர் மச்சி.. அப்டியே இரு” ன்னு சொல்றவங்கதான் அதிகமே தவற இல்ல இல்ல நீ குடிச்சே ஆகனும்னு யாரும் அடம் புடிக்கிறதில்லை. எல்லாமே நம்ம சொல்ற பதில்ல தான் இருக்கு.

பண்டிகைகள், கொண்டாட்டங்கள் கட்டாயமா வேணும். ஆனா இப்ப கொண்டாட்டம்னாவே அது சரக்க போட்டு மட்டையாகுறதுன்னு மட்டும்தான்னு அர்த்தமாக்கிக்கிட்டு இருக்காங்க.. கொண்டாட்டாம்னா நம்ம மகிழ்ச்சியா இருக்கது. நம்மளையே மறந்து மட்டையாகி கிடக்குறது இல்லை.

நீங்க குடிக்கிற காச சேத்து வச்சிருந்தா இந்நேரம் ஒரு வீடு வாங்கிருக்கலாம். அந்தக் காச ஒரு ஆதரவற்ற குழந்தைகளோட ஒரு நாள் சாப்பாட்டுக்கு குடுக்கலாம்னுல்லாம் நா கருத்து சொல்லல. கொண்டாடுறது சரி. ஆனா இதுதான் கொண்டாட்டமாங்குறது தான் கேள்வி.

எதோ ஒரு புராணக் கதையைச் சொல்லியும் கடவுள் பேரச் சொல்லியும் தீபாவளி பொங்கல் போன்ற பண்டிகைகளை குடும்பத்துடன் கொண்டாடுபவர்களை ஏளணம் செய்யும் அறிவு ஜீவிகள்தான் இந்த புத்தாண்டு கொண்டாட்டங்களில் முதல் ஆளாக நிற்கிறார்கள். 


Saturday, December 24, 2016

கத்தி சண்டை - எம்ஜிஆர் காலத்து சண்டை!!!


Share/Bookmark
படத்துக்கு போற அன்னிக்கு மட்டும் பெரும்பாலும் கம்பெனிக்கு டூவிலர்ல போறது வழக்கம். நேத்து என்னோட வேலை செய்யிற பக்கத்து வீட்டு நண்பர் கார்ல கம்பெனிக்கு அழைச்சிட்டு பொய்ட்டாரு. கம்பெனி முடிஞ்சி சாய்ங்காலம் அவருக்காக வெய்ட் பன்னிக்கிட்டு இருந்தேன். தீடீர்னு கால் பன்னி “டேய்.. கொஞ்சம் வேலை இருக்கு.  இன்னிக்கு லேட் ஆகும்போல தெரியிதுடா… நீ வேணா கம்பெனி பஸ்ல போயிடு”ன்னாரு. யோவ் கம்பெனி பஸ்ஸெல்லாம் போயி பத்து நிமிஷம் ஆச்சுன்னு நினைச்சிக்கிட்டு கடுப்புல நின்னேன். 7 மணி படத்துக்கு இப்பவே கிளம்புனாதான் கரெக்டா போக முடியும். நமக்கு வேற டைட்டில்லருந்து பாக்கலன்னா மூட் அவுட் ஆயிடும் ஒரே படப்பிடிப்புல நிக்கும்போது, அந்த நேரம் பாத்து ஆண்டவன் ஒரு கார அனுப்சான். கையப் போட்டு “திருவொற்றியூர் வரைக்கும் ட்ராப் பன்ன முடியுமா?”ன்னு கேட்க, அவன் “ஹ்ம்ம்” சொல்ல, ஏறி 6:30 க்கு வீட்டுக்கு வந்து ஏழு மணிக்கெல்லாம் படத்துக்கு பொய்ட்டேன்.

படம் பாத்துட்டு பைக்குல திரும்ப வரும்போது யோசிச்சு பாத்தப்பதான் வாழ்க்கையோட ஒரு தத்துவம் புரிஞ்சிது. ஆண்டவன் எல்லா ப்ரச்சனையிலருந்தும் எஸ்கேப் ஆகுறதுக்கு ஒரு வழியக் காட்டுவான். அத கப்புன்னு புடிச்சி எஸ்கேப் ஆயிட்டோம்னா பொழைச்சோம். இல்லைன்னா அவ்ளோதான்னு. படத்துக்கு போக கார் அனுப்பி விட்டது ஆண்டவன் இல்லை நண்பருக்கு வேலையக் குடுத்து லேட் ஆக்குனதுதான் ஆண்டவருன்னு எனக்கு லேட்டாதான் புரிஞ்சிது.

தமிழ் சினிமா காமெடிப் பட ரசிகர்களுக்கு இது ரொம்ப மோசமான காலம். காமெடிக்கு ரொம்ப வறண்டு போன காலமும் கூட. ஃபுல் ஃபார்ம்ல இருந்த வைகைப் புயல, அஞ்சு வருசம் ஊர விட்டு தள்ளி வச்சிட்டாங்க. அத ஓரளவு மேட்ச் பன்னிக்கிட்டு இருந்த சந்தானமும் நடிச்சா ஹீரோசார் நா வெய்ட் பன்றேன்சார்ன்னு பொய்ட்டாரு. விவேக்கோ தமிழ்நாட்ட அமேசான் காடா மாத்தாம விடமாட்டேன்னு ஒரு வெறியோட மரம் நட்டுக்கிட்டு இருக்காரு.

இப்பதைக்கு தமிழக மக்களுக்கு இருக்க ரெண்டே ரெண்டு ஆப்ஷன் சூரியும், சதீசும் தான். இவங்கள காமெடியன்னு படத்துல வச்சிக்கலாம். எப்பாச்சும் தப்பித் தவறி காமெடி கூட பன்னலாம். ஆனா எப்பவுமே அவங்கன்ன என்ன பன்றது? இயக்குனர் சுராஜோட வண்டி ஓடிக்கிட்டு இருந்ததே வடிவேலுவாலயும், விவேக்காலயும்தான். ரெண்டுபேரும் இப்ப இல்லை. அதுக்கப்புறம் அவர் எடுத்த படங்களோட நிலமை என்னன்னு எல்லாருக்குமே தெரியும்.

சில மாதங்களுக்கு முன்னால பணத்தோட மூணு கண்டெய்னர் மாட்டுனது எல்லாருக்கும் தெரியும். நமக்கு தெரிஞ்ச இந்த மேட்டர் சுராஜுக்கு தெரியாம இருக்குமா? அவ்வளவுதான். இதையும் அவர் சமீபத்துல பாத்த ஒரு சில தெலுங்குப் படங்களையும் மிக்ஸ் பன்னி பட்டுன்னு ஒரு படத்த எடுத்து விட்டுட்டாப்ள.. எங்க தலைக்கு எவ்ளோ தில்லு பாத்தியா?

                SPOILER ALERT (இது ஓரு கேடு)

இந்த தெலுங்கு படத்துலயெல்லாம் பாத்தோம்னா ஹீரோ வில்லன நேரடியா நெருங்க மாட்டாப்ள. வில்லன்கிட்ட போகனும்னா மொதல்ல வில்லனோட தங்கச்சிய கரெக்ட் பன்னனும்னு ஒரு லாஜிக் வச்சிருப்பாய்ங்க. 1st half முழுசும் அந்தப் புள்ளைய இவரு எப்டி கரெக்ட் பன்றாருங்குறதத் தான் காட்டுவாய்ங்க. என்னக் கதையா இருந்தாலும் இதான் 1st half. அதத்தான் இங்கயும் போட்டு அறுக்குறாய்ங்க. அதுவும் பூர்வ ஜென்மம், அது இதுன்னு தலை துண்டாவுற வரைக்கும் அறுக்குறாங்க.

சூரி அதுக்கும் மேல. “வந்துட்டியான்” “நின்னுட்டியான்” “செஞ்சிட்டியான்” ன்னு அந்த ஸ்லாங்க எப்ப மாத்தித் தொலைவார்னு தெரில. அருக்குது. இதுல லேடீஸ் கெட்டப் வேற. சில இடங்கள்ல அருவருப்பா வருது. ஒரு சில இடங்கள்ல ஓரளவு சிரிக்க வைக்கிறாரு. மகாபலிபுரத்துல நடக்குற காமெடி சீக்குவன்ஸ் மட்டும் நல்லாருந்துச்சி. இதே கேரக்டர்ல வடிவேலுவோ விவேக்கோ நடிச்சிருந்தா எல்லா சீனுக்குமே சிரிக்க வச்சிருக்கலாம்.  படிக்காதவன் விவேக் கேரக்டரத்தான் லைட்டா டிங்கரிங் பன்னி இதுல சூரிய நடிக்க வச்சிருக்காங்க.

படம் ஒடிக்கிட்டு இருக்கும்போதே திடீர்னு மெட்டி ஒலி திருமுருகன் ஸ்கிரீனுக்குள்ள வந்தாரு. தியேட்டர்ல ஒரே விசில் சவுண்டு. என்னய்யா மெட்டிஒலி திருமுருகனுக்கு இவ்வளவு ஃபேனா? ஆமா அந்தாளு ஏன் இங்க வந்தாருன்னு நல்லா உத்து பாத்தா… அட நம்ம வைகை புயலு. என்னன்ணே இப்புடி ஆயிட்டீங்க. மூஞ்சி அவரு மாதிரி ஆயிருச்சி. ஃபீல்ட் அவுட் ஆனதுலருந்து பாடிய மெய்ண்டன் பன்றதயும் விட்டுட்டீங்க.

”வடிவேலு திரும்ப வருவார்… நம்மை மீண்டும் சிரிக்க வைப்பார்” ன்னு ஆயிரத்தில் ஒருவன் பார்த்திபன் மாதிரி நம்பிக்கிட்டு இருந்தோம். ஆயிரத்தில் ஒருவன் பார்த்திபனுக்கு நடந்த அதே க்ளைமாக்ஸ்தான் நமக்கும்..  அவ்வளவு சிறப்பா இல்லை. அதிகபட்சம் ரெண்டு மூணு இடங்கள்ல லைட்டா சிரிப்பு வந்துச்சி. அவ்வளவுதான்.

காமெடி சீன்லயும் காப்பி. வெங்கடேஷ் நடிச்ச் shadow ன்னு ஒரு படத்துல வெங்கடேஷ் தண்ணி அடிச்சிட்டு ப்ரம்மானந்தத்த அடிக்கிற மாதிரி ஒரு பெரிய காமெடி சீக்குவன்ஸ் இருக்கும். (ஆனா காமெடியா இருக்காது) அத அப்டியே இங்க இறக்கி விட்டுருக்காங்க.

வில்லன்கள்கிட்ட கோடி கோடியா கொள்ளையடிச்சி ஊருக்கு நல்லது பன்ற கதைய இன்னும் எத்தனை படத்துல பாக்கப்போறோம்னு தெரியல. விஷால் ஒண்ணும் சொல்லிக்கிற மாதிரி பெர்ஃபார்மன்ஸ் இல்லை. ஃபைட்டுல பறந்து பறந்து பின்றாப்ள. செகண்ட் ஹாஃப் ல விஷால் படத்துல இருக்காரான்னு தேட வேண்டியிருக்கு.

ஹிப்ஹாப் தமிழாவோட பாட்டெல்லாம் காதுல பொக்லைன் வச்சி நோண்டி விடுற மாதிரி இருக்கு. அதுலயும் எல்லா பாட்டையும் அவரே பாடுவேன்னு அடம் புடிக்கிறாரு. அந்தத் தம்பிக்கு தெரிஞ்சவங்க யாராவது இருந்தா சொல்லுங்கய்யா… ஒரு பாட்டு பாட்டு பாடுறதோட நிறுத்திக்கச் சொல்லி. நான் கொஞ்சம் கறுப்புத்தான் பாட்டத்தவற மத்த எல்லாம் ரொம்ப சுமார் ரகம். தம் அடிக்கிற பழக்கமே இல்லாதவன் கூட வெளிய போய் தம் அடிப்பான் போல.

போன வருஷம் ரிலீஸான ஸ்ரீமந்துடு படத்துல ராஜேந்திர ப்ரசாத்துக்கு வர்ற சில காட்சிகள அப்படியே சுட்டு இந்தப் படத்துக்கு ஃப்ளாஷ்பேக்கா போட்டு விட்டாய்ங்க. அதும் படம் முடியப்போகும் போது. இந்த ஆக்‌ஷன் படத்துக்கு கிளைமாக்ஸ்ல அட்லீஸ்ட் ஒரு அம்பது பேரயாவது அடிக்கிற ஒரு ஃபைட்டு வப்பாங்கன்னு பாத்தா, நெஞ்சினிலே விஜய் மாதிரி பேசியே வில்லன்கள திருத்துராப்டி.

புரட்சித்தளபதி ஸ்க்ரீன்ல சீரியஸா நம்மூர் அரசியல்வாதிகளுக்கு அட்வைஸ் பன்னிக்கிட்டு இருக்காரு. நம்ம பயலுக என்னன்னா அத கொஞ்சம் கூட மதிக்காம தியேட்டர விட்டு எந்திரிச்சி போயிட்டு இருக்காய்ங்க.. ஏன்யா பெரிய மனுசனுக்குன்னு ஒரு மட்டு மரியாதை வேணாமா?

தமன்னா அழகு. தமன்னா சம்பந்தப்பட்ட சீன்ஸெல்லாம் பாக்குறப்போ அப்டியே படிக்காதவன்ன் படத்த பாத்த ஃபீல். ரிப்பீட்டு. இந்த ஹீரோயின்கள்ட்ட உள்ள கெட்டப் பழக்கம் என்னன்னா “அப்பா அப்பா”ன்னு பாசத்த பொழியும்ங்க. ஹீரோ ஒரு ஃப்ளாஷ்பேக் சொன்ன உடனே சனியனுங்க ரெண்டு நிமிஷத்துல அப்டியே மாறி ஹீரோ பக்கம் நின்னுக்கிட்டு “எங்கப்பாவ விட்டுடாத.. தப்பு செஞ்சவங்க தப்பிக்கவே கூடாது”ன்னும்ங்கஜகபதிபாபு ஆளு சூப்பரா இருக்காரு. ஹீரோ லெவல் பில்ட் அப் குடுத்து இண்ட்ரோவெல்லாம் வச்சி செகண்ட் ஹாஃப்ல அள்ளக்கை மாதிரி வந்து போறாரு.


நம்ம Facebook ல அடிக்கடி சொல்லுவோம்ல “That வாய்க்கு வந்தத அடிச்சி விடு moment’ன்னு அந்த மாதிரி தான் இந்தப் படமும். மொத்தத்துல இந்த வருஷம் நம்மள வச்சி செஞ்சதுலயே சிறப்பான சம்பவம் கத்தி சண்டைதான். 

Wednesday, December 21, 2016

நம்ம TOP 14 தமிழ் சினிமா -2016!!!


Share/Bookmark
கடந்த சில வருடங்கள ஒப்பிட்டு பாக்கும் பொழுது இந்த வருஷம் strike rate ரொம்பவே அதிகம். நிறைய படங்கள் எனக்கு புடிச்ச மாதிரி வந்துருக்கு. புடிச்ச மாதிரின்னு சொல்றத விட கடுப்பேத்தாத மாதிரி வந்துருக்கு. எல்லா வருஷத்தயும் போல இந்த வருஷம் 10 படங்களுக்குள்ள புடிச்ச படங்கள அடக்க முடியாதுன்னு நினைக்கிறேன். அதனால ஒரு நாலு எக்ஸ்ட்ரா.

ந்த முறையும், ஒரு படம் எனக்கு என்ன தாக்கத்தை ஏற்படுத்தியதோ அதன்படி வரிசைப் படுத்தியிருக்கிறேன். வழக்கம்போல பலருக்கும் உடன்பாடு இருக்காது என ஆணித்தனமாக நம்புகிறேன்


14. ரெமோஇதப்பாத்தோன நிறைய பேருக்கு வெறி வரும். ஆனா என்னைப்பொறுத்த வரை ஒருசில லாஜிக் ஓட்டைகளைத் தவிர்த்து, மற்றபடி படம் முழுவதும் சிரிக்க வைத்த சினா கானாவின் one man show. 


13. ரஜினி முருகன்சிவா-பொன்ராம் கூட்டணியில்  கிட்டத்தட்ட வருத்தப்படாத வாலிபர் சங்கத்தோட பார்ட் டூ மாதிரி, இன்னும் சொல்லப்போனா அதவிட improved எண்டர்டெய்னர். ராஜ்கிரன் தாத்தா கூடுதல் பலம்

12. ஆண்டவன் கட்டளைஅயல்நாட்டு மோகம் கிராமத்து இளைஞர்களை படுத்தும் நிஜத்தை, நகைச்சுவை கலந்து சொல்லப்பட்ட படம். இரண்டாவது பாதில வர்ற கோர்ட் sequence மட்டும் ரொம்ம்ம்ம்ம்ப நீளமா பொய்ட்ட ஒரு ஃபீல். 

11. தில்லுக்கு துட்டு


இந்த வருஷம் தியேட்டர்ல நா பயங்கரமா சிரிச்சி ரசிச்ச ஒரு படம். கொஞ்சம் கூட போர் அடிக்காம கிட்டத்தட்ட எல்லா சீனுமே வயிறு குலுங்க சிரிக்க வச்ச படம்.10. இறுதிச் சுற்று


ரித்திகாவுக்கு மட்டும் இல்லை. மாதவனுக்கும் இது இறுதி சுற்று. இன்னொரு சுத்து பெருத்தார்னா வெடிச்சிருவாப்ள. கதைக்களத்துலயும், உருவாக்கத்துலயும் ஹி்ந்திப் பட வாடை கொஞ்சம் தூக்கலா இருந்துச்சி. 09. தோழாஇரண்டு பெரிய ஹீரோக்களை முறையா பயன்படுத்தி கொடுக்கப்பட்ட ஒரு முழுமையான படம். அதிலும் நாகர்ஜூன் கேரக்டரும் ஆக்டிங்கும் செம. 

08. பிச்சைக்காரன்  சசி ரொம்ப சின்சியரா சீரியஸா படம் எடுக்கக்கூடியவரு… ஆனா நம்மாளுங்க அத அவ்வளவு சீரியஸா எடுத்துக்க மாட்டாய்ங்க. இந்த தடவ அப்படி இல்லாம மிகப்பெரிய ஹிட்ட குடுத்துருக்காங்க. “அடக்க நாயகன்” விஜய் ஆண்டனிக்கு இந்தப் படத்தால மிகப்பெரிய ரசிகர் கூட்டமே சேர்ந்துருக்கு.  இதே கதை திரைக்கதைய வேறு ஒரு மாஸ் ஹீரோ செஞ்சிருந்தா படத்தோட ரேஞ்சே வேற.

07. கொடிஅரசியல் களத்தில் தனுஷ் முதன் முறையாக வேடங்களில் நடிச்ச படம். வேலையில்லா பட்டதாரிக்கப்புறம் மிகப்பெரிய வெற்றிக்காக காத்திருந்த தனுஷூக்கு கைகொடுத்த படம். 06. தெறி


பழக்கப்பட்ட கதை, திரைக்கதை அமைப்பாக இருந்தாலும் ரசிக்க வைத்த கமர்ஷியல் எண்டர்டெய்னர். 

05. குற்றமே தண்டனைஎனக்கு என்னவோ ஆண்டவன் கட்டளையை விட மணிகண்டனின் குற்றமே தண்டனை ஒரு படி மேல இருந்தது மாதிரிதான் தோணுச்சி. சில நடிகர்கள் கதைக்கு ஏத்த மாதிரி நடிப்பாங்க. விமல் மாதிரி சில நடிகர்களுக்கு அவங்களுக்கு என்ன நடிப்பு வருதோ அதுக்கேத்த மாதிரி நாம கதையெழுதிக்கனும். விதார்த்தும் கிட்டத்தட்ட அந்த சங்கத்த சேர்ந்தவருதான். விதார்த்த அந்த ரோலுக்கு பொருத்தி, அவர அந்த கேரக்டரா மாத்துனதே பெரிய விஷயம்.


04. விசாரணைஇதுக்கு முன்னால ரத்த சரித்திரம்-2 பாக்கும்போதுதான் இந்த சீட்டு நுனியில உக்கார வைக்கிறதுன்னா என்னன்னு தெரிஞ்சிது. ஸ்லோமோஷன் காட்சிகளோட அந்தப் படத்தோட க்ளைமாக்ஸ் சீன் எடுத்த விதம் படு பயங்கரமா படம் பாக்குறவங்களுக்கு ”எவனுக்கு என்ன ஆகப்போகுதோ.. எவன் எப்ப சாகப்போறானோ”ங்குற ஒரு ஃபீல குடுக்கும். கிட்டத்தட்ட அதே மாதிரி feel ah குடுத்த படம்03. ஜோக்கர்கழிவரை வசதி எவ்வளவு முக்கியம், அடித்தட்டு மக்களுக்கு அது எப்படி ஒரு கனவாக இருக்கிறது. அதைக் கட்டிக்கொடுக்க அரசு கொடுக்கும் உதவித்தொகையையும் புடுங்கித் திங்கும் அரசியல் வாதிகள் மற்றும் அரசு அதிகாரிகள் அதனால் சுயநினைவிழக்கும் மனைவி. மனமுடைந்து ஏதும் செய்ய முடியாமல் ஜனாதிபதியாகவே தன்னை நினைத்து வாழத் தொடங்கும் நாயகன். சமூக சீர்கேடுகளை எதிர்த்து குரல்கொடுக்கும் கதைக்குள்ளும் ஒரு அழகான காதல்.  ராஜூ முருகனின் தரமான படைப்பு. 

02. அப்பாசமூக அக்கரையுள்ள படங்களை கடுப்பேத்தாம குடுக்குறதுங்குறது பெரிய விஷயம். சமுத்திரக்கனி அத இந்தப் படத்துல செஞ்சிருக்காரு. வெற்றிப்படம்தான். இருந்தாலும் கபாலி சீசனில் இல்லாமல் வேற ஒரு நேரத்துல வெளியிடப்பட்டிருந்தால் மிகப்பெரிய வெற்றியடைஞ்சிருக்கும்

01. இறைவி


கார்த்திக் சுப்பராஜின் இன்னொரு தரமான படைப்பு. எஸ்.ஜே.சூர்யா, விஜய் சேதுபதியின் சிறப்பான பெர்ஃபார்மன்ஸ். பீடா வாயன்  பாபி சிம்ஹா கேரக்டரயும், அந்த குடும்பத்துக்குள் குழப்ப சீக்வன்ஸயும் கொஞ்சம் முகம் சுழிக்கிற மாதிரி இருந்துச்சி இந்த லிஸ்டு மட்டும் இல்லாம மருது, மாப்ள சிங்கம் , காதலும் கடந்து போகும், வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன், இருமுகன் ஆகிய படங்களும் எனக்கு ஒவ்வொரு வகையில் பிடித்த படங்கள்

Friday, December 2, 2016

சைத்தான் – மண்டைக்குள் மத்தாப்பு!!!


Share/Bookmark
இயக்குனரை சார்ந்து இல்லாம ஒரு நடிகர் தன்னுடைய படங்களுக்கு, தன்னுடைய பெயருக்காக மட்டும் கூட்டத்தை இழுப்பது சாதாரண விஷயம் இல்லை. அதுக்கு நிறைய வெற்றிகளைக் குடுக்கனும். நிறைய காலம் காத்திருக்கனும். ஆனா அத ரொம்ப குறுகிய காலத்துலயே சாதிச்சவர் விஜய் ஆண்டனி. இன்னிக்கு வார நாள்…. வெள்ளிக்கிழமை கூட இல்ல வியாழக் கிழமை.. அப்படியிருந்தும் இத்தனை திரையரங்குகள் ஹவுஸ் ஃபுல்லா இருக்குன்னா கண்டிப்பா அதுக்கு காரணம் விஜய் ஆண்டனியும், அவருடைய கதைத் தெரிவும், திரைப்படங்களில் அவருடைய அடக்கமான நடிப்புமே காரணம். நிறைய மக்களுக்கு பிடித்த நடிகராயிட்டாரு. தமிழ்நாட்டுல மட்டுமில்லாம ஆந்திராவிலும் கூட. இந்த வருஷம் ஆந்திராவுல அதிக நாட்கள் ஓடிய படங்கள் வரிசையில “பிச்சைக்காரனோட தெலுங்கு பதிப்பான “பிச்சகாடு”வும் ஒண்ணு. வித்யாசமான கதைக்களங்களைத் தெரிவு செய்யும் விஜய் ஆண்டனியின் மற்றுமொரு வித்யாசமான முயற்சி இந்த சைத்தான்.

The Prestige படத்தோட முதல் காட்சில மைக்கல் கெய்ன் சின்ன பையன் ஒருத்தனுக்கு புறாவ வச்சி மேஜிக் செஞ்சி காமிச்சி ஒரு வசனம் சொல்லுவாரு. 

Making something disappear is not enough. You have to bring it back. That's why every magic trick has a third act, the hardest part, the part we call "The Prestige". 

அது மாதிரி தான் ஒரு கதைய எத்தனை முடிச்சுகள் வேணும்னாலும் போட்டு சுவாரஸ்யமாக்கிக்கிட்டே போகலாம். ஆனா அந்த முடிச்சுகள எப்படி கடைசில அவிழ்க்குறோம்ங்குறதுலதான் அந்தக் கதையோட வெற்றி அடங்கி இருக்கு.

விஜய் ஆண்டனி படம் என்பது ஒரு பக்கம் எதிர்பார்ப்பை ஏற்படுத்த, இன்னொரு பக்கம் படத்தோட சூப்பரான ட்ரெயிலர் இன்னும் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியிருந்துச்சி. அந்த எதிர்பார்ப்புக்கு படம் பூர்த்தி செஞ்சிதா இல்லையான்னு பாப்போம்.படம் பார்க்காத, பார்க்கும் எண்ணத்தில் இருப்பவர்கள் அப்டியே ஸ்கிப் பன்னி கடைசி பாராவுக்கு போயிருங்க. படம் பார்த்தவர்கள் தொடரலாம். 
   

                              SPOILER ALERT

சென்னையில் ஒரு  பெரிய சாஃப்ட்வேர் கம்பெனியில எந்த ப்ரச்சனை வந்தாலும் சால்வ் பன்னக்கூடிய ,  எந்நேரமும் வேலையப் பத்தியே நினைச்சிட்டு இருக்கக்கூடிய சின்சியரான வேலைக்காரர் விஜய் ஆண்டனி. மேட்ரிமோனில பாத்து ஒரு புள்ளையையும் கல்யாணம் பன்னிக்கிறாரு. கொஞ்ச நாள்ல “3” படத்துல தனுஷுக்கு வர்ற ப்ரச்சனை மாதிரி விஜய் ஆண்டனிக்கும் மண்டைக்குள்ள யாரோ பேசுற மாதிரி குரல் கேக்குது. அதுவும் பாருங்க காலகேயர்கள் பேசுற மாதிரி புரியாத பாஷையில கேக்குது.

இந்தாளு “உஸுமலரசே யஸூமலரசே” ”மக்கயால மக்கயாலா காய காவுவா” ந்னு புரியாத வார்த்தையெல்லாம் வச்சி ட்யூன்  போடும்போதே நினைச்சேன். பின்னால இப்புடியெல்லாம் மண்டைக்குள்ள நடக்கும்னு. இப்ப நடந்துருச்சி பாருங்க. கூடிய சீக்கிரம் ஹாரிஸ் ஜெயராஜூக்கும் இதே வியாதி வரும்னு எதிர்பார்க்கலாம்.

அப்ப விஜய் ஆண்டனிய ஒரு சைக்கார்டிஸ்டுக்கிட்ட அழைச்சிட்டு போறாங்க. சைக்கார்டிஸ்டுன்னாலேதான் உடனே படுக்க வச்சி மூஞ்சில மாவு பெனைஞ்சி ”இப்ப நா உங்க ஆழ் மனசுக்கு போகப்போறேன்…. இப்ப உங்களுக்கு வயசு 15” ன்னு ஆரம்பிச்சிருவாய்ங்க. அதுவும் கொஞ்சம் கூட மாறாம அதே வசனம். இப்பல்லாம் இந்த மாதிரி ஹிப்னடைஸ் பன்ற காட்சிகள பாக்கும்போது தலைநகரம் படத்துல வடிவேலுவ மனோபாலா ஹிப்னாடைஸ் பன்றதுதான் பட்டுன்னு ஞாபகம் வருது. இப்ப உனக்கு பத்து வயசு. என்ன பன்னிக்கிட்டு இருந்த?  நானா… ஊர்ல மாடு மேச்சிக்கிட்டு இருந்தேன்”

ஒருத்தன கண்ண மூடச் சொல்லி “இப்ப இழுத்து மூச்சு விடுங்க… இப்ப அப்டியே உங்க கடந்த காலத்துக்கு போகப்போறீங்க… ஈஸி… ஈஸி” ன்னு சொல்றத மட்டும்தான் ஆதிகாலத்துலருந்து இப்ப வரைக்கும் தமிழ் படத்துல சைக்கார்டிஸ்ட் டாக்டருங்க சொல்லிக்கிட்டு இருக்காங்க. Insidious படத்துல ஒரு கிழவி ஹீரோவ ஹிப்னாடைஸ் பன்னும் பாருங்க. ”கண்ண மூடு…. இப்ப நீ ஒரு தியேட்டர்ல உக்கார்ந்துருக்க.. அந்தத் தியேட்டர்ல உன்னத்தவற யாருமே இல்ல. சுத்தி ஒரே இருட்டு… இப்ப அந்த வெள்ளை ஸ்க்ரீன் மட்டும் தான் உன்னோட கண்ணுக்கு தெரியிது. அந்த ஸ்கீரினயே உத்துப் பாரு….இன்னும் நல்லா பாரு” ன்னு சொல்லியே அவன் மைண்டுக்குள்ள போகும். அத imagine பன்னா நமக்கே மைண்டு எங்கயோ போவும்.

ஒரு பத்து வருஷம் பின்னால போங்க.. இன்னும் பத்து வருஷம் பின்னால போங்க.. இன்னும் ஒரு பத்து வருஷம் பின்னால போங்க... அடேய் எனக்கு மொத்தமே 27 வயசுதாண்டா ஆகுது.

சென்னை 28 ல சொல்ற மாதிரி இதுக்கு மேல பின்னால போகனும்னா வெளில நின்னு கை தான் தட்டனும். 

நுங்கம்பாக்கம் இண்டர்வியூக்கு போறதுக்கு டேக் டைவர்ஷன்ல ஆந்த்ராவுக்கு போற மாதிரி 27 வயசு விஜய் ஆண்டனி மைண்டுக்குள்ள, பத்து பத்து வருஷமா பின்னால போயி இதுக்கு முந்துன ஜென்மத்தோட நினைவு வர்ற அளவுக்கு மாவு பெனைஞ்சிடுறாங்க. அடப்பாவிகளா… கிணறு தோணுடுறேன் கிணறு தோண்டுறேன்னு பூமியோட அடுத்த பகுதிக்கே வந்துட்டீங்களேடா….

போன ஜென்மத்துல விஜய் ஆண்டனி ஒரு ஆக்‌ஷன் அன்லிமிட்டடா இருப்பாருன்னு தானே நினைக்கிறீங்க? நெவர். ரொம்ப சாஃப்ட்டான தமிழ் வாத்தியாரு… சிலப்பல ஜலபுல ஜங்க்ஸ்களால கொலை செய்யப்படுறாரு. அப்ப செத்ததுக்கு இப்ப பழி வாங்க சாஃப்ட்வேர் இஞ்ஜினியர் விஜய் ஆண்டனி உடம்புல வர்றாரு. அதுலருந்து அம்பி, அண்ணியன் மாதிரி அப்பப்ப போன ஜென்ம கேரக்டராவும், அப்பப்ப ரியல் கேரக்டராவும் இருக்காப்ள.

க்ளைமாக்ஸ்ல ஒரு சீன்ல விஜய் ஆண்டனிய சங்கிலியால கட்டி வச்சிருக்கப்ப படக்குன்னு போன ஜென்ம கேரக்டரு உள்ள வருது. “யானைப் பலமிது யாக்கையில் வர…” ந்ங்குற மாஸ் சாங்க போடுறாங்க. அடேய் இருங்கடா… நல்லா பாருங்கடா வந்துருக்கது தமிழ் வாத்தியாருடா… அவரு ஃப்ளாஷ்பேக்குலயே யாரயும் அடிக்கல… இப்ப எதுக்குடா அவருக்கு மாஸ் சாங்கு?

ஒரு படத்த பொறுத்த அளவு அதுல இருக்க ஹீரோ எப்படிப்பட்டவர் அவரால அடிக்க முடியுமா இல்ல அடிக்க முடியாதா? எத்தனை பேர அடிக்கிற கெப்பாசிட்டி இருக்கு போன்ற விஷயங்களையெல்லாம் முன்னாலயே காட்டிரனும். அட்லீஸ்ட் முதல் பாதிலயாவது காட்டனும். கடைசிவரைக்கும் எதுவுமே காட்டாம க்ளைமாக்ஸ்ல பல பேர அடிக்கிறதெல்லாம் ஏற்றுக்கொள்ளும்படியே இருக்காது. 

படத்தோட டைட்டில் கார்டுல, “இந்தப் படத்தின் ஒரு பாதி சுஜாதாவோட நாவல தழுவியது” ன்னு போடுறாங்க. தழுவுனதுதான் தழுவுனீங்க… முழுசா தழுவிருக்கலாம்ல. ஆரம்பத்துல போட்ட முடிச்சுகள அவுக்குறதுக்கு பின்னால ரொம்ப கஷ்டப்பட்டு, தெளிவில்லாம எங்கெங்கயோ போய் முடிச்சிருக்காங்க.

பூர்வ ஜென்ம கதைகள வச்சி மக்கள சுவாரஸ்யத்தோட உச்சத்துக்கே கொண்டு போக முடியும். ”நெஞ்சம் மறப்பதில்லை” படத்தையெல்லாம் இப்ப பாத்தாலும் கொடூரமா இருக்கும். மஹாதீரா, யாவரும் நலம் படங்களெல்லாம் இந்த பூர்வ ஜென்ம கதைக் களங்கள்லதான் மாபெரும் வெற்றியடைஞ்சிது. அனேகன் படத்தோட ஒரு பகுதி கூட அப்டித்தான்.

பூர்வ ஜென்ம ஞாபகம் அப்டிங்குறது ஒரு instinct ah காமிக்கப்படும்போது ரொம்ப சுவாரஸ்யமா இருக்கும். ஆனா அதுக்கே அறிவியல் சாயம் பூசி, அத செயற்கையா தூண்டுவது மாதிரி காண்பித்திருப்பது கொஞ்சமும் ஒட்டவில்லை. சுஜாதாவின் ஒரிஜினல் கதை எப்படியோ தெரியல… ஆனால் இங்கு முடிவு மஹா சொதப்பல்.

படம் முதல்ல ரொம்ப ஸ்லோவாதான் பிக் அப் ஆகுது. கிட்டத்தட்ட இண்டர்வலுக்கு முந்தைய பிந்தைய கால் மணி நேரங்கள் நல்ல சுவாரஸ்யம். மற்றபடி ரொம்ப ஆவரேஜாதான் படம் நகருது. அநேகன் படத்துல க்ளைமாக்ஸ்ல அது உண்மையா இல்ல imagination ah ன்னு ஒரு முடிவுக்கே வர முடியாத மாதிரி ஒரு குழப்பு குழப்புவாய்ங்க. அதே குழப்பம் இங்கயும்.

விஜய் ஆண்டனி வழக்கம்போல் அலட்டல், ஆர்ப்பாட்டம் இல்லாத அமைதியான நடிப்பு. பாடல்கள் அவ்வளவு சிறப்பா இல்லை. “யானைப் பலமிது” மட்டும் நல்லாருக்கு. மத்ததெல்லாம் ரொம்பக் கஷ்டம். ஹீரோயினா வர்ற புள்ள செம அழகா இருக்கு. குறிப்பா அதோட லிப்ஸ்டிக் கலர் சூப்பர். அந்த புள்ளைக்கு டப்பிங் வாய்ஸூம் அருமை. அந்தக் குரல எங்கயோ கேட்ட ஞாபகம். அநேகமா சதுரங்க வேட்டைல ஹீரோயினுக்கு வர்ற குரலா இருக்கலாம். படம் பாத்தவங்க அந்தக் குரல வேற எந்தப் படத்துலயாவது கேட்டிருந்தா சொல்லுங்க.

மொத்தத்தில் முந்தைய விஜய் ஆண்டனி படங்கள் அளவுக்கு இது நம்மள impress பன்னல. அதே சமயம் ரொம்ப அருவைன்னும் சொல்ல முடியாது. வேற நல்ல படம் எதுவும் ரிலீஸ் ஆகாத காரணத்தால பாக்க முயற்சி பன்னலாம்.


Wednesday, November 23, 2016

அரசியல் வியாதிகள்!!!


Share/Bookmark
ஸ்கூல் படிக்கிற காலத்துல இருந்தே நாட்டைப் பத்தி யாராவது பேசும்பொழுது, ”மாற்றம் வேணும்னா இளைஞர்கள் அரசியலுக்கு வரவேண்டும்”, ”நாடு முன்னேறனும்னா இளைஞர்கள் நாட்டை ஆள வேண்டும்”, ”படித்தவர்கள் வரவேண்டும்” இப்படித்தான் சொல்லிக்கிட்டு இருந்தாங்க. இப்பவரைக்கும் சொல்லிக்கிட்டு இருக்காங்க. முன்னால அரசியல் பற்றிய ஆர்வம் வெகுசிலருக்கே இருந்ததாலும், அரசியல் பற்றிய தனிமனித நிலைபாடுகள் டீக்கடை பெஞ்சுகளோடு போய்விட்டதாலும் அதுமாதிரி சொல்லியிருக்கலாம். ஆனா இன்னிக்கு கிட்டத்தட்ட இளைஞர்கள் நேரடியாக அரசியலுக்கு உள்ள இறங்கலன்னாலும், சமூகவலைத்தளங்கள் மூலம் அவங்களுடைய அரசியல் பற்றிய நிலைபாடு என்னங்குறத தெளிவா சொல்லிக்கிட்டு தான் இருக்காங்க. இந்த நிலைபாடுகளைப்  பாக்கும்போது, ”இளைஞர்கள் வந்தா மாற்றம் வரும்” ங்குற நம்பிக்கை சுத்தமா போயிருச்சி.

பெரும்பாலும் இணையதளங்கள்ல அரசியல் பேசுறவியிங்க, 1925 லருந்து மொத்த இந்திய அரசியல் வரலாற்றையும் கரைச்சி குடிச்சா மாதிரிதான் பேசுவாய்ங்க. “காந்தி ஏன் நேருவ பிரதமரா போட்டாரு தெரியுமா?” “இந்திரா காந்திய ஏன் சுட்டாங்க தெரியுமா?” “பெரியார் இன்னா சொல்லிருக்காரு தெரியுமா?” “1975ல டில்லில என்ன நடந்துச்சின்னு தெரியுமா?” ன்னு ஒட்டுமொத்த இந்திய அரசியலும் அவிய்ங்க கைக்குள்ள இருக்க மாதிரிதான் நினைச்சிக்கிட்டு சுத்துறாய்ங்க. உண்மை என்னன்னு பாத்தா நாயி மொத்தமாவே ஒரு நாலு புத்தகத்த அங்கங்க மேஞ்சிட்டு வந்து இங்க பீலா விட்டுக்கிட்டு இருக்கும்.

ஒரு கட்சி எலெக்‌ஷன்ல ஜெயிச்சி ஆட்சியப் புடிச்சிட்டா, மற்ற கட்சிகளோட பார்வையில அடுத்த அஞ்சி வருஷத்துக்கு அவங்க செய்யிற அனைத்துமே தப்பாகத் தெரியிது. எதிர்கட்சியா இருந்தாலுமே நல்ல திட்டங்களைச் செயல்படுத்தும்போது பாராட்டவும், சரியில்லாத திட்டங்களை விமர்சிக்கவும் செய்யனும். ஆனா இங்க ஆளுங்கட்சி எதுசெஞ்சாலும் மற்றவர்கள் பார்வையில அது தவறு. சுருக்கமா சொல்லனுமா “அதெல்லாம் எங்களுக்குத் தெரியாது.. வார்டன்னா அடிப்போம்” கதைதான்.

எது நல்லது கெட்டதுங்குறதத் தாண்டி இது எங்களால நடந்துச்சா இல்லை உங்களால நடந்துச்சாங்குறதுலான் எல்லாரும் குறியா இருக்காய்ங்க. ஒவ்வொரு கட்சிக்கும் அவியிங்க பன்றத நியாயப்படுத்தவும் அடுத்தவன கிழிச்சி தொங்கவிடவும் சொந்தமா ஒரு டிவியும் ஒரு நியூஸ் பேப்பரும்.

எந்தக்கட்சியா இருந்தா என்ன? தப்புன்னா தப்புன்னு சொல்றதும், ரைட்டுன்னா ரைட்டுன்னு ஒத்துக்கிற மனப்பான்மையும் எப்ப வளருதோ அப்பதான் எதாவது முன்னேற்றத்துக்கான வழி தெரியும். இப்ப இருக்க எல்லா இணையதள அரசியல் பீரங்கிகளுமே, அதே சாக்கடையில் ஏற்கனவே இருக்கும் பன்றிகளுக்கு இடையில தங்களையும் நுழைச்சிக்கிட்டு அதே நாற்றத்தில் வாழ்ந்துகிட்டு அடுத்தவன் மேல அதே சாக்கடையை வாரி இறைக்கும் பணியைத்தான் செஞ்சிக்கிட்டு இருக்காய்ங்க. அவர்களால் எந்த வித பயனும் இருக்கப்போவதில்லை

இப்ப கடந்த ரெண்டு வாரங்களா ”வரிசையை பார்த்தீர்களா?” “சாமானியரை பார்த்தீர்களா?” ந்ன்னு தம் கட்டி demonetization ஐ எதிர்ப்பவர்கள்  யார் யாருன்னு அவனுங்க வரலாற கொஞ்சம் பாத்தா, மோடி என்பவரை, அவரது கட்சி ரீதியாகவும், கொள்கை ரீதியாகவும் எதிர்த்துக் கொண்டிருந்தவர்கள். நானும் அப்படி எதிர்ப்பவர்கள், இந்த திட்டத்தில் எதேனும் நல்லது இருக்கிறது என கூறுவார்களா என ஒவ்வொரு முறையும்  பாத்துக்கிட்டே இருக்கிறேன். பாதமான விஷயங்கள் இருப்பவற்றை ஊதி ஊதி பெரியதாக்கிக் காட்டுக்கிறார்களே தவிற, திட்டத்தின் பலன்களை ஒப்புக்கொள்ள யாருக்கும் மனது வரவில்லை.

”எல்லையில் ராணுவ வீரர்கள்” ன்னு எவனோ ஒருத்தன் ஆரம்பிச்சி விட்டத கிண்டல் பன்றவனுங்க யாருன்னு பாத்தா “2002 ல குஜராத் கலவரத்துல என்ன நடந்துச்சி தெரியுமா?” ன்னு கேக்குற குரூப்பா இருக்கானுங்க. இங்க இருக்க ஒவ்வொரு அரசியல்வாதியோட  வரலாறயும் அதே மாதிரி பின்னோக்கிப் பாத்தா, இன்னிக்கு ஐயான்னும் எவனும் சொல்லமாட்டான், அம்மான்னும் எவனும் சொல்லமாட்டான். ஒவ்வொருத்தன் ஃப்ளாஷ்பேக்கும் அவ்வளவு நாத்தம்

இதுல எல்லா கட்சியும் ஒண்ணு சேந்து ஆளும்கட்சியோட முடிவ எதிர்த்து போராட்டம். “நல்ல திட்டம் தான்… ஆனா கொஞ்சம் கஷ்டம்”ன்னு முதல் நாள் பூசி மொழுகிய கட்சிகள் இப்ப முழு எதிர்ப்பு. ஈழத்தில் மக்கள் செத்துக்கிட்டு இருந்தப்ப, காங்கிரஸ கழுவி கழுவி ஊத்துனவியிங்க இன்னிக்கு பல்ல காட்டிக்கிட்டு சொம்பு தூக்கிட்டு இருக்காய்ங்க. இதுல இன்னொரு மெண்டலு நாட்டோட ப்ரச்சனை தீரனும்னா “ராகுல் காந்தி ப்ரதமர் ஆக வேண்டும்”ன்னு சொல்லுது. அந்தக் கொழந்தைக்கு என்னய்யா தெரியும்?

இவனுங்க சமாளிக்கிறதுக்காக வச்சிருந்த சாமானியர்கள் அத்தனை பேரும் கையில இருந்த பணத்த பேங்குல டெபாசிட் பன்னிட்டாங்க. இப்ப நீங்க சொன்ன சாமானியர்கள் வங்கிகளிலும், ATM களில் வரிசையில் நிற்பது, டெபாசிட் பன்னத எடுப்பதற்கு தானே தவிற கட்டுக்கட்டாக பழைய நோட்டுகளை வைத்துக்கொண்டு அல்ல. அப்படி இருக்க இப்ப இவய்ங்க யாருக்காக திட்டத்த திரும்ப பெற சொல்லி கேக்குறானுங்க?

தெலுங்குல Rana Daggubati நடிச்ச  ”Leader” ன்னு ஒரு படத்துலருந்து ஒரு காட்சி ஞாபகம் வருது. எதிர்பாராத சூழல்ல ராணா முதலமைச்சர் ஆயிருவாரு. மக்களுக்கு எதாவது நல்லது செய்யனும்னு Anti-Corruption Force ன்னு ஒரு டீம் உருவாக்கி எல்லா மக்களையும்,  MLA, MP ன்னு கூட  பாக்காம அவங்க கண்ட்ரோல்ல கொண்டு வந்து கருப்பு பணம் வச்சிருக்கவங்கள உடனடியா தண்டிக்கிறதுன்னு ஒரு திட்டத்த propose பன்னுவாரு. உடனே Assembly ல எல்லாரும் கத்த ஆரம்பிச்சிருவாங்க. “இது வேலைக்காது”ம்பான் ஒருத்தன். இதுல ஓட்டை இருக்கும்பான் இன்னொருத்தன். மொத்தத்துல இந்த திட்டம் வரவே கூடாதுன்னு கோரஸா சொல்லுவானுங்க. Assembly கொஞ்ச நேரம் ஒத்தி வச்சிருவாங்க.

வெளில வர்ற ராணா, கட்சியோட மூத்த தலைவர் ஒருத்தர்கிட்ட “என்ன சார்… கருப்பு பணம், லஞ்சத்த ஒழிக்கிறதுக்கு சட்டத்த கொஞ்சம் strict பன்ன விடமாட்டேங்குறாங்களே?” ம்பாரு

உடனே அந்த மூத்த தலைவர் “அதெல்லாம் பன்னக்கூடாதுப்பா.. அப்புறம் நம்ம எப்புடி அரசியல் பன்றது? நம்ம எப்படி ஊழல் பன்றது?” ன்னு கூலா சொல்லுவாரு
“ஏன் சார்…மக்கள் எப்பவுமே இப்படித்தான் இருப்பாங்களா? அவங்க திடீருனு ஒருநாள் திருந்தி இதையெல்லாம் எதிர்த்து கேள்வி கேட்டா அவங்களுக்கு என்ன பதில் சொல்றது?”

அதுக்கு அந்த மூத்த தலைவர் “ தம்பி… கேள்வி கேக்குறதுக்கு நேரமெல்லாம் மக்கள் கிட்ட இல்லைப்பா… இப்ப கஷ்டப்பட்டு வேலை செஞ்சி சிக்கன் பிரியாணி சாப்புடுற ஒருத்தன்கிட்டருந்து சிக்கன நாம புடுங்கிட்டோம்னா அவன் அப்புறம் பருப்பு சாதம் சாப்புட பழகிக்குவான். அப்புறம் பருப்பையும் புடுங்கிட்டோம்னா வெறும் சாதத்த சாப்புட பழகிக்குவான். கொஞ்ச நாள்ல அந்த வெறும் சாதம் கூட அவனுக்கு கிடைக்காம செஞ்சிட்டோம்னா அவன் என்ன செய்யிறதுன்னு தெரியாம பதட்டத்துல சுத்திக்கிட்டு இருப்பான். அப்ப நாம “அரிசி இலவசம்”ன்னு ஒரு அறிவிப்ப விட்டோம்னா அப்ப நாம தான் அவனுக்கு கடவுள்.. நமக்கே ஓட்டு போட்டுருவாங்க.. இதான் நம்ம அரசியல் பன்ற முறை.. இப்டி செஞ்சாதான் அவன் நமக்கு ஓட்டு போடுவான் ”ன்னு சிரிச்சிக்கிட்டே பெருமையா சொல்லுவாரு.

அப்ப ராணா அந்த மூத்தவரு கைய புடிச்சி “நீங்க எப்ப சார் சாவீங்க? உங்களுக்கு ஒரு 85 வயசு இருக்கும். இந்த கையால நீங்க காந்திய தொட்டுருப்பீங்க.. உங்க கண்ணால நேருவ பாத்துருப்பீங்க.. இவ்வளவு தெளிவு, இவ்வளவு அனுபவம்லாம் எதுக்கு சார்? அதானல மக்களுக்கு நயா பைசா ப்ரயோஜனம் இருக்கா சார்? அப்டி இருக்கப்ப நீங்க இருந்தா என்ன செத்தா என்ன?” ம்பாறு.  அந்தாளுக்கு செருப்புல அடிச்சா மாதிரி இருக்கும். (ஆனா நிஜத்துல செருப்பால அடிச்சா கூட திருந்தாத ஜென்மங்கள் எத்தனையோ இருக்கு)

கொஞ்ச நேரம் ஃபீல் பன்னிட்டு ராணாவோட திட்டத்த எல்லாரயும் ஒத்துக்க வைக்க ஒரு சின்ன ஐடியா சொல்லி குடுப்பாரு. திரும்ப assembly கூடுன உடனே ராணா அதே திட்டத்த கொஞ்சம் மாத்தி சொல்லுவாப்ள. என்னன்னா அதே Anti Corruption Force செயல்பாடுகள்ல MLA, MP க்களுக்கு மட்டும் விலக்கு. அவங்க வீட்டுல வருமான வரி சோதனை செய்ய மாட்டாங்கன்னு மட்டும் சொல்லுவாரு. அவ்வளவு தான். மொத்த அசம்ப்ளியும் கைதட்டி திட்டத்த ஒத்துக்குவானுங்க.
இப்ப நம்மூர்ல நடக்குறதும் அதே கதைதான். அங்க கொடி புடிச்சிக்கிட்டு எதிர்ப்பு தெரிவிக்கிறவன் சாமானியர்களுக்காக நிக்கிறான், அவங்களுக்காகத்தான் எதிர்க்கிறான்னு நினைச்சோம்னா நம்மள விட முட்டாள் வேற யாரும் இருக்க முடியாது.

நம்ம அரசியல்வாதிகள் பிணத்தை வைத்து கூட அரசியல் செய்துகொண்டிருப்பவர்கள். ஊடங்கள் அதற்கும் மேல். விவசாயிகள் தற்கொலை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. மறுப்பதற்கில்லை. அவர்கள் உணமையில் எத்தனை விவசாயிகள் விவசாயம் செய்ய முடியாததால் மரணித்தார்கள் என்பது எத்தனை பேருக்கு தெரியும்? ஒரு சிறிய உதாரணம். எங்கள் ஊரில் நண்பர் ஒருவரின் தந்தை குடும்ப ப்ரச்சனைகளால் தற்கொலைக்கு முயன்று விஷம் அருந்தி அரசு மருத்துவமனையில் இறந்து விட்டார்.


மறுநாள் காலை செய்தித்தாளில் ”விவசாயி தற்கொலை” என வந்தது. உண்மையில் அவர் விவசாயியோ அல்லது விவசாயம் செய்யத்தெரிந்தவரோ அல்ல. ஆனால் விவசாயிகளின் தற்கொலைக் கணக்கில் இப்போது அதுவும் ஒன்று . அதே போலத்தான் தற்பொழுது கணக்கில் கொள்ளப்படும் மரணங்களின் எண்ணிக்கைகளும் இருக்கக்கூடும். வரிசையில் நிற்பது மட்டும் ஒருவருக்கு மரணத்தை ஏற்படுத்துமா என்பதையும் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். 


(இந்தப் பதிவில் முதலில் வரும் சில பத்திகள் ஏற்கனவே நமது தளத்தில் ஒரு பதிவில் வெளியிடப்பட்டது)

Thursday, November 17, 2016

பணம் பிறந்த கதை - பகுதி 2


Share/Bookmark
முதல் பகுதியை படிக்க இங்கே க்ளிக்கவும். 1700 கள் ல போன பதிவுல சொன்ன மாதிரி  இன்னொரு நகை வியாபாரியும், மக்களோட தங்கத்த வச்சிக்கிட்டு ரசீது கொடுத்து, வட்டிக்கும் கொடுக்கும் தொழில் பன்னிக்கிட்டு இருந்தாரு. அவர் வீட்டு கதவுல ஒரு ஷீல்டு மேல ரோமானியக் கழுகு உட்கார்ந்து இருப்பது மாதிரி வச்சிருப்பாராம். அதுக்க்கு ஜெர்மன்ல Rothschild ன்னு பேராம். அதனால அவர எல்லாரும் Rothschild ன்னு கூப்பிடுவாங்களாம். காலப்போக்குல அந்த நகைவியாபாரியோட பையன் தன்னோட பேரயே Rothschild ன்னு மாத்தி வச்சிக்கிட்டான். ஒரு கட்டத்துல மக்களுக்கு கடன் குடுக்குறத  விட அரசாங்கத்துக்கு கடன் குடுக்குறதுதான் நல்ல வருமானம்னு கண்டுபுடிச்சிருக்கானுங்க. ஏன்னா, மக்களுக்கு கொஞ்ச கொஞ்சமா குடுக்குறத விட ஒரு பெத்த அமவுண்ட்டா அரசாங்கத்துக்கு குடுத்துடலாம். மக்கள் வரிப்பணம் மூலமாத்தான் அத திருப்பி குடுப்பானுங்கங்குறாதால அந்தப் பணத்துக்கு செக்யூரிட்ட்யும் இருந்ததால அரசாங்கங்களுக்கு கடன் குடுக்குறதயே இந்த Rothschild விரும்புனானுங்க. 

அந்த Rothschild  க்கு மொத்தம் அஞ்சு பசங்க. அஞ்சு பேரயும் art of finance ல நல்லா ட்ரெயின் பன்னி அஞ்சு வெவ்வேற பகுதிகளுக்கு அனுப்பி வச்சான். அவனுங்க மூலமாத்தான் உலகத்தோட பெரும்பான்மையான பகுதிகளோட பேங்கிங்க அவனுங்க கண்ட்ரோல்ல கொண்டு வந்தானுங்க. பல டகால்ட்டி வேலைகளும் பாத்துதான் இவனுங்க உலக மார்க்கெட்ட புடிச்சிருக்கானுங்க. என்ன பன்னான்னு பாக்குறதுக்கு முன்னால…

அதே காலகட்டத்துலதான் Bank of England உருவானத பாத்தோம். தொடர்ந்து நாலு போர்களால, இங்கிலாந்து அவனுங்க கிட்ட சுமார் 14 கோடி பவுண்ட் கடன் வாங்கியிருந்தானுங்க. அந்த காலத்துல இது மிகப் பெரிய தொகை. அதனால அந்தக் கடன கட்டுறதுக்கு இங்கிலாந்தோட அமெரிக்க காலனிகள்லருந்து வரி வசூல பன்னலாம்னு ஒரு ஐடியா பன்னிருந்துருக்கானுங்க.

இப்ப அந்த அமெரிக்க காலனிகள்ல காசு (coin) அடிக்கிறதுக்கு போதுமான தங்கமோ வெள்ளியோ இல்லாததால, Colonial Script எனப்படுகிற பேப்பர் பணத்த அச்சடிக்க ஆரம்பிச்சாங்க. இந்த பேப்பர் பணம் நாம போன பதிவுல சொன்ன மாதிரி எந்த தங்கத்தோட மதிப்பையோ, வெள்ளியோட மதிப்பையோ சார்ந்து இல்லாம அவங்களே அச்சடிச்சிக்கிற மாதிரி இருந்துச்சி. மார்க்கெட்டுல அந்த பணம் நல்ல ரீச்சும் ஆச்சு. 

ஒரு தடவ Bank of England ப்ரதிநிதி, அமெரிக்க போனப்போ, பெஞ்சமின் ஃப்ராங்க்ளின்கிட்ட இது எப்படி ஒர்க் அவுட் ஆகுதுன்னு கேட்டதுக்கு, அவர் “இந்தப் பணத்த சந்தை பரிவர்த்தனைகளைப் பொறுத்து அச்சடிச்சி வெளியிடுறோம். இந்தப் பணத்தை பெறுபவர்கள் அதற்காக வட்டின்னு எதுவும் செலுத்த தேவையில்லை. அதுமட்டும் இல்லாம ஒவ்வொரு பேப்பர் பணத்தோட மதிப்பையும், அதாவது அதோட purchase value ah நாங்களே நிர்ணயிச்சி அத எங்களோட கட்டுக்குள் வச்சிருக்கோம். அதனாலதான் இது சாத்தியப்படுகிறது” என பதிலளித்திருக்கிறார்.

இந்த Colonial script  பாத்த பேங்க்காரய்ங்க, சந்தோஷமா இருக்க புருஷன் பொண்டாட்டிய பாத்து செந்தில் “சந்தோசமா இருக்கியா… இனிமே இருக்கக்கூடாதே” ன்னு பிரிச்சி விடுற மாதிரி ஊருக்கு போய் நல்லா சோலி பாத்து விட்டுட்டாய்ங்க. என்னன்னா  ஆளாளுக்கு சொந்தமால்லாம் இனிமே பணம் அடிச்சிக்கல்லாம் கூடாது. இனிமே இங்கிலாந்துக்கு குடுக்க வேண்டிய வரி அனைத்தையும் தங்கமாவோ வெள்ளியாவோ மட்டும்தான் குடுக்கனும்னு சட்டம் போட்டுட்டானுங்க.

அமெரிக்க காலனிகள்ல புலக்கத்தில் இருந்த அந்த பணம், செல்லாம பொய்ட்டதால பல ப்ரச்சனைகளுக்கு ஆளானாங்க. தங்கம் இல்லைன்னுதான் இப்டி காசு அடிச்சாய்ங்க. இப்ப தங்கமாதான் குடுக்கனும்னா எங்க போவானுங்க. இந்த சட்டத்தால ஒருவருஷ காலத்தில் எல்லாமே மாறி ஊருக்குள்ள வேலையில்லா திண்டாட்டம் அதிகமாயிட்டதா ஃப்ராங்க்ளின் அவரோட Auto Biography ல தெரிவிச்சிருக்காராம்.இப்படியே மாறி மாறி மாறி ஒவ்வொன்னா  நடக்க , இந்த Rothschild குரூப்பு ஒரு பக்கம் பேங்கிங்ல பெரிய லெவல்ல டெவலப் ஆகிட்டு வந்தானுங்க. முன்னாலயே சொன்ன மாதிரி ஒரு நாட்டுக்கே கடன் கொடுக்கும் அளவுக்கு வளர்ந்திருந்தானுங்க. அதுமட்டும் இல்லாம சண்டைகள் (War ) நடக்கும் போது போரிடும் ரெண்டு நாடுகளுமே கடன் வாங்கிதான் செலவு பன்னும்.  பெரிய காமெடி என்னன்னா ரெண்டு பேருமே ஒரே ஆளுகிட்டருந்து தான் கடன் வாங்குவானுங்க. அதுல ஒரு டீலிங் என்னன்னா, போர்ல தோக்குற நாடு வாங்குன கடன, போர்ல ஜெயிக்கிற நாடுதான் குடுக்கனும்னு ஒரு கண்டிஷன். அதனால எப்டிப்பாத்தாலும் பணம் குடுக்குறவன் சேஃப் தான். 

இதனால பாதிக்கப்பட்ட ஒரு ஆள்ல நெப்போலியனும் ஒருத்தர். அட நம்ம “மாடசாமி” நெப்போலியன் இல்லப்பா. மாவீரன் நெப்போலியன். மொதல்ல நெப்போலியனும் இந்த மாதிரியான பேங்க்குகள்ல கடன் வாங்குறது நல்லதில்லைன்னு தான் சொல்லிக்கிட்டு இருந்தாப்ள. அதாவது ”ஒரு நாடு ஒருவரிடம் கடன் வாங்கும்போது , கொடுப்பவர் சூப்பர் பவராகவும், வாங்குபவர் அவருக்கு பணிந்து நடப்பவராகவும் மாற நேரிடும். இது ஒரு நாட்டுக்கு உகந்ததல்ல” ன்னு பில்ட் அப்பெல்லாம் குடுத்துக்கிட்டு, பேங்குல கடன் வாங்குறத அசிங்கமா நினைச்சி தன்கிட்ட இருந்த ஒரு மிகப்பெரிய நிலப்பரப்ப (Mississippi) அமெரிக்கக்காரம் ஒருத்தன்கிட்ட 3 மில்லியன் டாலர் மதிப்புள்ள தங்கத்துக்கு வித்துட்டு அதுல வந்த காச வச்சி, மிகப்பெரிய படைய திரட்டி பல நிலப்பரப்புக்க்களை புடிச்சான்.

இப்படி கெத்தா போயிட்டு இருந்த நெப்போலியன வெல்லிங்க்டன்ல நடந்த ஒரு போர்ல ஊமை குத்தா குத்தி அனுப்பி விட்டாய்ங்க. உசுறு பொழைச்சா போதும்னு தப்பிச்சி போயி ஒரு தீவுல பதுங்கியிருந்தான். மொதல்ல யார்கிட்டயும் கடன் வாங்க மாட்டேன்னு வீராப்பா திரிஞ்சவன் “அய்யா… கப்பல்ல வேலைன்னு ஒரு பன்னி சொன்னத நம்பி உங்கள தப்பா பேசிட்டேன்யா.. கப்பல்ல வேலை இல்லைன்னு தெரிஞ்சப்புறம் அந்த நாயி திரும்ப உங்ககிட்டயே வந்துருச்சிங்கய்யா” ன்னு கவுண்டர் சொன்ன மாதிரி யூரோப்புல ஒரு பேங்குல லம்ப்பா ஒரு அமவுண்ட்ட கடனா வாங்கி ஒரு 74000 வீரர்கள திரட்டி திரும்ப திரும்ப பாரிஸ்ல அட்டாக் பன்ன ப்ளான் பன்னிருக்கான். அவனுக்கு எதிரா அதே பலத்தோட சுமார் 67000 ப்ரிட்டீஷ் படை வீரர்களும், சொச்ச ஐரோப்பிய படைகளும் சண்டையிட தயாரா இருந்தாங்க.

இங்கதான் Rothschild நிக்கிறான். அந்த சமயத்துலயே இங்கிலாந்துல இருந்த பெரும்பாலான கம்பெனிகள் ஷேர் மார்கெட் முறை இருந்துச்சி. அதாவது கம்பெனியோட பங்குகள்ல அதிக பங்குகள் வச்சிருக்கவர் முதலாளியாக இருப்பார். மத்த எல்லாம் பங்குதாரராக இருப்பாங்க.

இப்ப நெப்போலியனுக்கும் வெல்லிங்டன் படைகளுக்கும் இடையே போர் நடக்குல இடத்துக்கு பக்கத்துல நம்ம Rothschild ஒரு Spy  ah வச்சிருந்தான். அதாங்க ஒட்டுக்கேட்டு வந்து போட்டுக்குடுக்குறவன். போன தடவ ஊமை குத்தா வாங்கிட்டுப் போன நெப்போலியன் இந்த தடவ இன்னும் நல்லா வகையா வந்து மாட்டுன உடனே மூத்தர சந்துக்குள்ள வச்சி கும்முற மாதிரி கும்மி எடுத்துட்டாய்ங்க.

இந்த Spy என்ன பன்னான்னா நெப்போலியன் தோத்துப் போறது லைட்டா தெரிஞ்ச உடனேயே வேக வேகமா வந்து இங்கிலாந்துல இருந்த நம்ம Rothschild கிட்ட சொல்லிட்டான். அதாவது official news இங்கிலாந்துக்கு ரீச் ஆகுறதுக்கு முன்னாலயே. இந்த இடந்தான் த்ரிலிங்கான இடம். மனச திடப்படுத்திக்குங்க… பயந்துடாதீங்க. என்ன புலி குட்டி போட்டுருச்சா?” இல்லை இல்லை.

மேட்டர் தெரிஞ்ச உடனே நம்ம Rothschild என்ன பன்னான், மூஞ்ச சோகமா வச்சிக்கிட்டு, தலைய தொங்க போட்டுக்கிட்டு ப்ரிட்டீஷ் அரசாங்கத்தோட Bonds ah எல்லாம் மொத்த மொத்தமா விக்க ஆரம்பிச்சான். இதப் பாத்தவனுங்களுக்கு அய்யய்யோ போர்ல இங்கிலாந்து படைகள் தோத்துருச்சி போலருக்குன்னு ஷேர் வச்சிருந்த எல்லாருமே மிகக் குறைவான விலையில எல்லா ஷேரயும்  விக்க ஆரம்பிச்சிட்டானுங்க.. ஏன்னா நெப்போலியன் ஜெயிச்சிட்டான்னா இப்ப இருக்க financial சிஸ்டத்தயே காலி பன்னாலும் பன்னிடுவான்னு கெடைச்ச வரைக்கும் லாபம்னு கையில இருந்த எல்லா ஷேரயும் விக்க ஆரம்பிச்சிட்டானுங்க.

அப்ப காட்டுனான் நம்மாளு பர்ஃபார்மன்ஸ…. அழுகுற மூஞ்ச கொஞ்சம் கொஞ்சமா சிரிச்ச மூஞ்சாக்கி வேதாளம் அஜித் மாதிரி பல்ல காட்டிக்கிட்டே, அவனுங்க வித்த எல்லா ஷேரயும் இவன் ஒருத்தனே பல மடங்கு கம்மியான விலையில வாங்குனான். மறுநாள்தான் எல்லாருக்கும் தெரிஞ்சிது போர்ல ஜெயிச்சது நெப்போலியன் இல்லை இங்கிலாந்து படைகள்தான்னு. இப்ப இங்கிலாந்துல இருந்த அனைத்து ஷேர்களும் நம்மாளூ கையில. அல்டிமேட்டா மொத்த இங்கிலாந்துமே அவன் கையில வந்த மாதிரி.

நெப்போலியன் வாழ்நாள் முழுசும் பிடிச்ச ஏரியாவ விட, இந்த Rothschild சில மணி நேரங்கள்ல பிடிச்ச பகுதிகள் அதிகம்னு சொல்றாங்க. எல்லாம் வெசம் வெசம் வெசம் வெசம். அப்பலருந்து இப்ப வரைக்கும் உலகத்தோட முக்கால்வாசி பேங்கிங் மற்றும் பண பரிவர்த்தனைகள் இந்த Rothschild குருப்போட கண்ட்ரோல்லதான் இருக்கு.

தனக்கு லாபம் வரனும்ங்குறதுக்காகவும், தன்னோட கண்ட்ரோல்ல இருக்கனும்ங்குறதுக்காகவும் எந்த அளவு வேணாலும் இறங்கக் கூடியவனுங்க. அதுக்கு சிறந்த உதாரணம் சென்ற வருடம் காணாமல் போன மலேசிய விமானம். அதற்கும் இந்த குருப்புக்கும் மிகப்பெரிய சம்பந்தம் இருப்பதாக சில கருத்துக்கள் உலவுது. அது நம்பும்படியும் இருக்கு. அதைப் பற்றி மற்றுமொரு பதிவில் பார்ப்போம்.


நன்றி : தோழர் பாலவிக்னேஷ்


Tuesday, November 15, 2016

அம்பானி வரிசையில் நின்னாதான் கருப்பு பணம் ஒழியுமா?!!!


Share/Bookmark
பழைய ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டு கிட்டத்தட்ட ஒருவாரம் ஆன நிலையில், வங்கிகளில் இன்னும் கூட்டம் குறைந்தபாடில்லை. மக்கள் அவதிக்கு உள்ளாகியிருக்கின்றர். ஒரு சில உயிரிழப்புகள். பழைய நிலமை திரும்ப இன்னும் ஒரிரு வாரங்கள் ஆகும் என்கிறனர். வெறும் 6% கறுப்பு பணத்தை ஒழிக்க அனைத்து மக்களையும் அவதிப்படுத்துவதா? என ஆளாளுக்கு அரசைத் சரமாரியாகத் தாக்கி வருகிறார்கள். கள்ளப்பண ஒழிப்பு மற்றும் கருப்புப் பண ஒழிப்பு ஆகியவை இந்தத் திட்டத்தோட நோக்கமாகக் கூறப்பட்டிருக்கிறது.

வெறும் 400 கோடி கள்ளப்  பணத்தை ஒழிக்க, 17 லட்சம் கோடி பணத்தை முடக்குவதான்னு ப.சிதம்பரம் கொதிச்சிருக்காரு.  வங்கிகள்ல இதுவரைக்கும் சுமார் 56000 கோடி முதலீடு செய்யப்பட்டிருக்கு. இந்த 56000 கோடியுமே நேர்மையான வழியில சம்பாதிச்சி, சரியா வரி கட்டிக்கிட்டு இருக்கவங்களோட பணம்னு வச்சிக்குவோம்.

இந்தத் திட்டத்தை கடுமையாக எதிர்க்கிற பலருடைய குமுறல் என்னன்னா, பேங்குல அம்பானியோ அதானியோ நிக்கல. ஏழை மக்கள்தான் நிக்கிறாங்க. பின்ன எப்படி இதால கருப்புப் பணம் ஒழியும்னு சொல்றீங்கன்னு தான். அவர்களுக்கும் சரி அவர்களைப் போல சந்தேகம் இருக்கும் பலருக்கும் சரி என்னுடைய புரிதலில் ஒரு சின்ன விளக்கம்.

உண்மை என்னன்னா கருப்பு பணம் வச்சிருக்கவங்க  பேங்குல வந்து நின்னு, அவங்க கையில இருக்க பணத்த வரி கட்டி பேங்குல டெபாசிட் பன்னாதான் கருப்புப் பணம் ஒழியும்னு இல்லை. அவங்க பேசாம இருந்தாலே போதும் அரசாங்கத்துக்கு எல்லாம் லாபம் தான். இந்தப் பதிவில் சொல்லப்போகும் சில அடிப்படை விவரங்கள் பெரும்பாலானோருக்கு தெரிந்திருக்கலாம். தெரியாத சிலருக்காக.

ஒரு அரசாங்கம் அதுக்கு வேணும்ங்குற அளவு பணத்தை அச்சடிக்க முடியாதுன்னு எல்லாருக்குமே தெரியும். ஏன் அப்படி? வேணும்ங்குற பணத்த அடிச்சி கடனெல்லாம் குடுத்துடலாமே? ஏழைகளுக்கு குடுத்து பணக்காரனாக்கிடலாமே? அதான் முடியாது. ஒரு சின்ன உதாரணம்.

ஒருத்தர்கிட்ட 100 தங்கக் காசு இருக்குன்னு வச்சிக்குவோம். அவருக்கு 5 குழந்தைங்க. அந்த 5 பேருக்கும் இருபது இருபது தங்கக்காசா பிரிச்சி  குடுக்குறாரு. தங்கக் காச கையில குடுக்குறதுக்கு பதிலா 5 ரசீது அடிச்சி அதுல 20 ன்னு ப்ரிண்ட் பன்னி குடுக்குறாரு. அதாவது ஒரு ரசீதோட மதிப்பு 20 தங்கக் காசு. இப்ப 5 குழந்தைகள்கிட்டயும் உள்ள மொத்த தங்கக் காசோட மதிப்பு 100. கொஞ்ச நாள்ல அந்த 5 பேரும் கல்யாணம் பன்னிக்கிரானுங்க.  இப்ப 5 பேரா இருந்த குடும்பம் 10 பேர் ஆயிருச்சி. புதுசா வந்த 5 பேருக்கும் செலவுக்கு காசு வேணும்.

இப்ப புதுசா வந்தவங்க செலவுக்காக அதே மாதிரி இன்னொரு 5 ரசீத அடிச்சி குடுத்திட முடியாது. ஏன்னா நம்மாளுக்கிட்ட இருக்கதே 100 தங்கக் காசுதான். ஏற்கனவே அந்த நூறுக்கான ரசீத அச்சடிச்சிட்டோம். இப்ப புதுசா வந்த 5 பேருக்கும் காசு குடுக்கனும்னா இன்னொரு 5 ரசீத அடிச்சி குடுக்கலாம். ஆனா முன்னால 20 தங்கக்காசா இருந்த ஒரு ரசீதோட மதிப்பு இப்போ வெறும் 10 தங்கக் காசாத்தான் இருக்கும். ஆக அவர்கிட்ட இருக்க தங்கக் காசுக்கு ஏத்த மாதிரியான ரசீதத் தான் அடிக்க முடியுமே தவிற, அவர் அடிக்கிற ரசீதுக்கு ஏத்த மாதிரி தங்கக் காசு அதிகமாயிடாது.

அதே மாதிரிதான் ஒரு நாட்டோட மதிப்பை பொறுத்துதான் அந்த நாட்டுக்கு எவ்வளவு ரூவா நோட்டு அடிக்கலாம்ங்குற வரைமுறை. ஒரு நாட்டோட மதிப்புங்கறது அந்த நாட்டுல உள்ள தங்கம் அல்லது பெட்ரோல் போன்ற வளங்களைப் பொறுத்து அமையும். இத யார் decide பன்றது, நோட்டு அடிக்க யார்கிட்ட பர்மிஷன் வாங்கனும்ங்குறதெல்லாம் வேற கதை. பேசிக் மேட்டர் இது தான்.

இப்ப நம்ம மேட்டருக்கு வருவோம். மொதல்ல கருப்பு பணத்தால என்ன பாதிப்பு? ஒரு நாட்டுல பணப் புழக்கம்ங்குறது ரொம்ப முக்கியம். விலைவாசி ஏற்றம் வரி ஏற்றம் போன்ற பல காரணிகளைப் பாதிப்பது இந்தப் பணப் புலக்கம் தான்.

ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு மதிப்பு இருக்கு. அதன்படி தான் வியாபாரம் செய்யனும். அப்படி வியாபாரம் செஞ்ச பொருளுக்கு வரி கட்டனும். இதுதான் சட்டம். உதாரணமா அரசாங்கம் ஒரு பத்து ”ஒரு ரூபா” நாணயங்களை அடிச்சி புழக்கத்துல விடுதுன்னு வச்சிக்குவோம். எல்லாரும் வியாபாரம் பன்றாங்க ஒவ்வொருத்தர்கிட்டயா அந்த ஒரு ரூபா சுத்திக்கிட்டு இருக்கு. இப்ப இந்த பத்து பேர்ல ஒருத்தன் எதோ ஒரு பொருளுக்கு விலை ஏத்தி வித்து, ஒரு ரூபா வரவேண்டிய இடத்துல அவனுக்கு ரெண்டு ரூபா கிடைச்சிருது. இப்ப எக்ஸ்ட்ராவா வந்த ஒரு ரூபாய்க்கு அவன் வரி கட்டனும் அல்லது எப்படி அந்த ஒரு ரூபா வந்துச்சின்னு சொல்லனும். வரி கட்டி அந்த ஒரு ரூபாயில கால்வாசிய இழக்க விரும்பல.  அதனால என்ன பன்றான் எக்ஸ்ட்ராவா வந்த ஒரு ரூபாய முழுசா எடுத்து பத்தரமா பீரோவுல வச்சிடுறான்.

இப்ப என்னாகுது மார்க்கெட்டுல 10 ரூபா சுத்திக்கிட்டு இருந்த இடத்துல இப்ப 9 ரூபாதான் சுத்துது. இதே மாதிரி இன்னும் ரெண்டு பேர் ஒவ்வொரு ரூபா பதுக்குறான்னு வச்சிக்குவோம். 10 ரூபா புழங்க வேண்டிய இடத்துல வெறும் 7 ரூபாதான் புழங்கும். 3 ரூபா யாருக்கும் பயன்படாம பீரோக்குள்ள தூங்கும். அந்த மூணு ரூபாய எந்தக் காலத்துக்கும் லீகலான விஷயத்துக்கு அவன் பயன்படுத்த மாட்டான். அவன்கிட்டருந்து இன்னொருத்தனுக்கு போகும் போது, அவன்கிட்டயும் அது கணக்குல வராத பணமாதான் இருக்கும். அப்படி கணக்குல வர்ற சமயத்துல அது கருப்பு பணமா இருக்காது.

இப்ப என்னாகுது அரசாங்கத்தோட மதிப்பு 10 ரூபா. ஆனா மார்க்கெட்டுல புழக்கத்துல இருக்கது வெறும் 7 ரூபா. 3 ரூபா எங்க போச்சுன்னே தெரியல. அதுக்கான வரியும் வரல. வர வேண்டிய வரி வரததால அரசாங்கத்துக்கு நிதி பத்தாம வரி விகிதங்கள அதிகப்படுத்தினாதான் நிலமைய சமாளிக்க முடியும்ங்குற நிலை வருது. பொருட்களோட விலைவாசியும் ஏறுது.

சரி இப்ப இந்த  500/1000 ரூபா நோட்டுகள் செல்லாதுன்னு அறிவிச்சதால கருப்பு பணம் எப்படி அரசாங்கத்துக்கு முழுமையா சேரும்? உதாரணமா நம்ம நாட்டுல புலங்குற 500 மற்றும் 1000 ரூபாயோட மதிப்பு சுமார் ஒரு லட்சம் கோடி வச்சிக்குவோம். அதுல ஒரு பத்தாயிரம் கோடி கருப்புப் பணமா பதுக்கப்பட்டிருக்குன்னு வச்சிக்குவோம்.

இப்போ அரசாங்கம் பழைய  ஒரு லட்சம் கோடி ரூபாயையும் செல்லாதுன்னு அறிவிச்சாசிட்டு அதே ஒரு லட்சம் கோடிக்கு புதிய 2000 மற்றும் 500 ரூபா நோட்டுக்கள் அடிக்கிறாங்க. மேல சொன்னபடி நம்ம மார்க்கெட்டுல பழைய ஒருலட்சம் கோடில 90,000 கோடிதான் புழக்கத்துல இருக்கு. அதயெல்லாம் நேரடியா பேங்குல குடுத்து புது நோட்டா வாங்கிருவாங்க. இப்ப பதுக்கப்பட்ட கருப்புப் பணம் பத்தாயிரம் கோடிய என்ன செய்யனும்? ஒண்ணு பதுக்கியிருக்கவங்க அத வங்கியில குடுத்து அதற்காக வரியை அரசாங்கத்துக்கு  செலுத்திட்டு, வெள்ளையாக்கலாம். அப்படி செஞ்சா ஒருலட்சம் கோடியும் மறுபடி மார்க்கெட்டுல புலக்கத்துக்கு வந்துடும்.

அப்படி இல்லாம அந்த பத்தாயிரம் கோடிய வெளில கொண்டு வந்து ஏன் மாட்டிக்கனும். நாம இருக்க இடம் தெரியாம இருந்துடுவோம்னு நினைச்சா கூ ஒண்ணும் ப்ரச்சனை இல்லை. அரசாங்கத்தால அச்சடிக்கப்பட்ட ஒரு லட்சம் கோடியில, 90 ஆயிரம் கோடி பணம் மக்களுக்கு விநியோகிக்கப்பட்டு மிச்சம் இருக்க பத்தாயிரம் கோடி அரசாங்கத்திடமே இருக்கும். நேரடியாக அரசாங்க நிதியில அது சேர்ந்துடும். அம்பானியோ அதானியோ வரிசையில வந்து நிக்க வச்சிதான் கருப்பு பணத்த வெளில கொண்டு வரனும்னு இல்லை. அவனுங்க வந்தாலும் சரி வராட்டியும் சரி. அரசாங்கத்துக்கு லாபம் தான்.


அப்படி  அரசுக்கு கிடைக்கும் கருப்பு பணங்களை முறையா பயன்படுத்துதா, இல்ல அடுத்தவன் ஆட்டைய போடுறானாங்குறது அடுத்த விஷயம். ஆனா இப்ப கொண்டு வந்த இந்தத் திட்டம் சிலர் கிளப்புவதைப் போல பயனற்ற திட்டமாக வாய்ப்புகளே இல்லை. மக்களுக்கு சில நாட்களுக்கு இடையூறே தவிற, திட்டத்திற்கான பலன் நிச்சயம் உண்டு. 


LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...