Thursday, June 4, 2020

Facebook எனும் நாடகக் கம்பெனி!!!


Share/Bookmark


Facebook கிட்டத்தட்ட ஒரு நாடகக் கம்பெனி போல மாறிவருகிறது. நடிகர்கள் தோற்றுவிடுவார்கள் போல. ஒவ்வொருவரும் தன்னை ஒரு மனிதநேய மஹான்களாகவும், பாஸிடிவ் எனர்ஜினியின் கொடோன்களாகவும் காட்டிக்கொள்வதற்கு ரொம்பவே முயல்கின்றனர்.

சிறிய உதாரணம் நேற்று அண்ணாசிப்பழத்தில் வைத்திருந்த வெடி வெடித்து கருவுற்றிருந்த ஒரு யானை மரணமடைந்தது. உண்மையில் நடந்தது ஒரு மிகப் பெரிய துயரமான சம்பவம். மாற்றுக்கருத்தில்லை. சாதாரணமாக , ஒரு யானை இறந்து கிடக்கும் புகைப்படங்களே மனதை உலுக்கும். அவ்வளவு பெரிய உருவம், நாம் வியந்து பார்க்கும் ஒரு உருவம் உயிரற்று சாய்ந்து கிடப்பது நிச்சயம் நம் மனதை எதோ செய்யும்.

ஆனால் நேற்று நடந்த சம்பவத்திற்குப் பிறகு, நம்மவர்கள் வருந்திய விதம் இருக்கிறதே.. அப்பப்பா.. "ஆணாகப் பிறந்ததற்கு வெட்கப் படுகிறேன் தோழி" பாணியில்

 "மனிதனாகப் பிறந்ததற்கே அவமானமாக இருக்கிறது" 

"மனித இனம்தான் எவ்வளவு கொடூரமானது"

 "நமக்கு கொரோன ஒன்றும் சும்மா வரவில்லை.. இதுபோன்ற பாவங்களினால்தான் வருகின்றது"

"வயித்துல இருந்த அந்தப் பிஞ்சி உசுறு உங்கள என்னடா செஞ்சுச்சி"

 என ஒரு ஈ எறும்பிற்குக் கூட தீங்கு நினைக்காத நம்மவர்கள் கண்ணீர் விடாத குறையாக புலம்பியிருந்தனர். கூடுதலாக கார்டூனிஸ்டுகள் அவரவர்கள் பங்கிற்கு இந்த சம்பவத்தை எவ்வளவு எமோஷனலாக்க முடியுமோ, அப்படி ஆக்க அவர்களது முழுத் திறமையும் பயன்படுத்தியிருக்கிறார்கள்.

அதுமட்டுமல்லாமல் இந்த மஹாபாவத்தை செய்தவர்கள் கடுமையாக தண்டிக்கப்படவேண்டும் என்கிற கோஷமும் எழுந்து, ப்ரியங்கா காந்தி கேரள அரசிடம் இந்த சம்பவத்திற்கு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்குமளவிற்கு சென்றிருக்கிறது.

சமூகவலைத்தளங்கள் கொடுக்கும் இந்த அழுத்தத்தில் நிச்சயம் அடுத்த ஓரிரு நாட்களில் அண்ணாசியில் வெடி வைத்தவர் பிடிக்கப்பட்டு, அவருக்கு தக்க தண்டனை வழங்கப் படலாம்.

முதலில் நடந்தது ஒரு விபத்து என்கிற கோணத்தில் முகநூல்வாசிகள் யாருமே அணுகவில்லை. அப்படியிருந்தாலும் அவர்களுக்கு அது தேவையுமில்லை. ஏனென்றால் அவர்களது இறக்க குணத்தைக் காட்ட, இப்போது இருக்கும் செட்டப் தான் சரியாக உள்ளது.

வேண்டுமென்றே பொழுதுபோகாமல் யாரும் அண்ணாசியில் வெடி வைத்து, ஒரு கருவுற்ற யானையைக் கொல்ல வேண்டும் என்பது யாருடைய எண்ணமாகவும் இருக்காது.

உணவில் வெடி வைத்துஉயிர்களைக் கொல்வது தவறுதான் என்றாலும் நிறைய இடங்களில் பன்றிகளின் அட்டகாசம் தாங்க முடியாத பொழுது விவசாயிகள் இந்த முடிவுக்குத் தள்ளப்படுகிறார்கள்.

பன்றிகளை கையாள்வது சற்று கடினம். இரவு நேரங்களில் கூட்டமாக வந்து பயிரிட்ட வயல்களை அடியிலிருந்து தோண்டி கலப்பையால் உழுதுபோட்டது போல ஆக்கிவிட்டுச் சென்றுவிடும்.

ஒரு கட்டத்திற்கு மேல் பொறுமையிழக்கும் விவசாயிகள் வேறு வழியின்றி இப்படிப்பட்ட ஒரு முடிவெடுக்கத் தள்ளப்படுகிறார்கள். பன்றிகளுக்கு வைக்கப்படும் இதுபோன்ற வெடிகளில் சில சமயம் நாய்கள் சிக்கி உயிரிழப்பதுண்டு.

அதுபோலத் தவறுதலாகத்தான் இந்த விபத்தும் நடந்திருக்கவேண்டும். யோசித்துப் பாருங்கள். அதே அண்ணாசியை, வயிற்றில் பத்து குட்டிகளுடன் ஒரு பன்றி தின்றுவிட்டு இறக்கிறது என வைத்துக்கொள்வோம். இந்தக் கண்ணீரை மக்கள் வடித்திருப்பார்களா? பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும். நாம் சாப்பிடும் மட்டன் பிரியானியில் செத்துக்கிடக்கும் ஆடும், ஃபீப் பிரியாணிகளில் கிடக்கும் மாடும் எதோ ஒரு பெற்றோரிடமிருந்தோ  அல்லது குழந்தையிடமிருந்தோ அவற்றின் சம்மதமில்லாமல் வலுக்கட்டாயமாக பிரித்து கொண்டுவரப்பட்டதுதான்.

அது இருக்கட்டும். பன்றிக்கு வெடி வைப்பது மட்டும் நியாயமா? சத்தியமாக நியாயமில்லை தான். நம்முடைய பார்வையில். நீங்கள் எப்பொழுதும் துணைக்கு அழைக்கும் அந்த ஏழை விவசாயி ஒருவரை நினைத்துக் கொள்ளுங்கள். கஷ்டப்பட்டு ஒரு வயலில் பயிரிட்டு பாதுகாத்து வைத்திருக்கிறார். அவருடைய வருமானம், குடும்பத்திற்கான உணவு அனைத்தும் அந்த ஒரு வயலை நம்பிதான் இருக்கிறது என வைத்துக் கொள்ளுங்கள். ராவோடு ராவாக பன்றிக்கூட்டங்கள் பயிரின் பாதியை அழிக்கிறது. தன்னுடைய கடின உழைப்பு, வருமானம், குடும்பத்திற்கான உணவு அத்தனையும் கண் முன்னே கேள்விக்குறியாக நிற்கும் போது , மீதி இருக்கும் கொஞ்சம் பயிரை காப்பாற்றிக்கொள்ள எந்த முடிவு வேண்டுமானாலும் எடுப்பார். அது பன்றியாக இருந்தாலும் சரி. யானையாக இருந்தாலும் சரி. 

"விலங்குகள் நடமாடும் காட்டை அழித்து வயல்வெளிகளாக்கிவிட்டு  இப்பொழுது விலங்குகளைக் குறை கூறுவதா?" என ஒரு கும்பல். வாய்யா... யோக ராசா.. உன்னத்தான் தேடிகிட்டுருந்தேன். ஏன் காடுகள் அழிக்கப்படுகிறது? ஏன் இயற்கை வளங்கள் கொஞ்சம் கொஞ்சமாக அழிக்கப்படுகின்றன? ஒரு Root Cause Analysis  செய்தால் கடைசியில் நமக்கு கிடைக்கும் ஒரே பதில் மக்கள் தொகைப் பெருக்கம். அத நிறுத்த முடியுமா உன்னால? எது நடக்கிறதோ இல்லயோ அந்த வேலை மட்டும் சரியாக நடந்துகொண்டே இருக்கிறதல்லவா? அப்படியானால் மற்றவற்றையும் ஒன்றும் செய்ய முடியாது.

மறுபடியும் கூறுகிறேன் நடைபெற்றது ஒரு துயரச் சம்பவம். வருத்தப்படுங்கள். அதை விட்டுவிட்டு எமோஷனலாக ஒரு விஷயத்தைப் பெரிதாக்கி  கடைசியாக, நீங்கள் கொடுக்கும் அழுத்தத்தில், சிலரின் வாழ்க்கையை முடித்துவிடாதீர்கள். 

Tuesday, May 12, 2020

FORENSIC, HIT & V1 MURDER CASE – பாம் மூன்று!! வலி ஒன்று!!


Share/Bookmark


இந்த லாக் டவுனில் நான் அதிகம் தேடிப் பார்த்தது இன்வெஸ்டிகேஷன் த்ரில்லர் படங்களைத்தான். அதில் தென்னிந்திய மொழிகளில் வெளியான மூன்று மர்டர் இன்வெஸ்டிகேஷன் படங்களைப் பற்றித்தான் இந்தப் பதிவில் பார்க்கப்போகிறோம்!

Spoiler Alert:

மலையாளத்தில் வெளியான Forensic, தெலுங்கில் வெளியான HIT, தமிழில் வெளியான V1 மர்டர் கேஸ் இந்த  மூன்று படங்களை பார்த்திராத, இனிமேல் பார்க்கும் எண்ணமுடையவர்கள் மேற்கொண்டு தொடர வேண்டாம்.

V1 Murder Case :


சமீபத்தில் நான் பார்த்த மோசமான படங்களில் முக்கியமான படமாக இந்த V1 ஐக் கூறலாம். படத்தின் முதல் பதினைந்து நிமிடத்தைக் கடப்பது மிகப்பெரிய வேலையாகிவிட்டது. காரணம் அவ்வளவு கன்றாவியான ஹீரோவின் கதாப்பாத்திர அமைப்பும், அதற்கு அந்த ஹீரோவின் நடிப்பும்.
ஃபோரன்ஸிக் ட்ரெயினராக வருகிறார் ஹீரோ. அவருக்கு இருட்டென்றால் பயம். இரண்டு கோடி பேர்களில் ஒருவருக்கு வரும் வியாதி இவருக்கு. இருட்டைப் பார்த்தால் கண்கள் சொக்கி மூச்சடைத்து கீழே விழுந்து மண்ணைக் கவ்வுபவர்.

அவரை ஒரு கேஸை எடுத்துக்கொள்ளச் சொல்லி கெஞ்சுகிறார்கள். ஆனால் அவரோ அவ்வளவு பிகு செய்கிறார். அதிகாரிகள் விடுவதாக இல்லை. மறுபடி கெஞ்சுகிறார்கள். இவர் “No means No…” என்ற பதிலையே மறுபடி மறுபடி சொல்லிக்கொண்டே போக

”த்தா.. இந்த மூதேவிய அடிச்சி பத்தி விட்டுட்டு வேற யார்டயாச்சும் கேஸ குடுங்கடா” என படம்  பார்க்கும் நமக்கே கடுப்பு உச்சத்தை தொடுகிறது. ஒருவழியாக கேஸை எடுக்கிறார். இன்வெஸ்டிகேசன் ரூமில் ஒரு லேடி ஆபீஸர் ஒரு சஸ்பெக்டை விசாரணை செய்ய, அருகில் அமர்ந்திருக்கும் இவர் கையில் ஒரு பாக்கெட் பிஸ்கெட் பாக்கெட்டை வைத்துக்கொண்டு, அங்கு நடக்கும் விஷயத்துக்கும் அவருக்கும் எந்த சம்பந்தமும் இல்லாதது போல் பிஸ்கெட் சாப்பிடுகிறார்.



”அதாவது அவரு ரொம்ப கேஸூவல் இருக்காராம்.. அவருக்கு அந்த கேஸ்மேலயே இண்ட்ரஸ்ட் இல்லையாம். எல்லாரும் ரொம்ப கெஞ்சி கேட்டுகிட்டதால தான் இந்த இந்த இவெஸ்டிகேஷன்லயே அவர் உக்கார்ந்துருக்காராம்” இதயெல்லாம் முகத்தில் கொண்டு வருவதற்காக பிஸ்கெட் சாப்பிட்டபடியே ஒரு ரியாக்‌ஷன் கொடுக்கிறார் பாருங்கள்.  நேஷனல் அவார்டுக்குப் பரிந்துரை செய்யலாம்.

இந்த முதல் பதினைந்து நிமிடங்களைக் கடப்பதற்குள் பாதி பாட்டில் கோடாரித் தைலம் காலியாகிவிடுகிறது.  அடுத்து கேஸிற்குள் நுழைகிறார்கள். இவர் க்ரைம் டிபார்மெண்ட்டில் இருந்து ஃபோரன்ஸிக் ட்ரெயினராகச் சென்றவர். அப்படியென்றால் தடயங்களையெல்லாம் பயங்கரமா  கண்டுபிடித்து பயங்கர சுவாரஸ்யமாக துப்பு துலக்கப்போகிறார் என்றிருந்தேன்.

ம்ஹூம்… துப்பறியும் காட்சிகள் ஏனோதானோவென்று இருக்கிறது. இதுபோன்ற ஒரு கதையில்  கதாப்பாத்திரத்தின் நம்பகத் தன்மையை அதிகரிக்க, பார்ப்பவர்களுக்கு காட்சிகளில் பிடிப்பை ஏற்படுத்த அந்தத்துறை சார்ந்த நிறைய தகவல்களை அளித்திருக்க வேண்டும். ஆனால் என்ன நடந்திருக்கிறதென்றால்

சபரி திரைப்படத்தில் கேப்டன் ஒரு டாக்டராக நடித்திருப்பார். அவர் டாக்டர் என்பதை அடிக்கடி நினைவு படுத்த, அவர் வரும் காட்சிகள் அனைத்திலும் விஜயகாந்த் யாரோ ஒருவரிடத்தில்

“இந்த மருந்த மூணு வேள சாப்டுங்க”

“இந்த ஊசிய் ரெண்டு நாளுக்குப் போடுங்க”

என்று சொல்வது போலவே ஆரம்பிப்பார்கள். அதுபோலத்தான் இங்கும். ஆங்காங்கு ஹீரோ ஒவ்வொரு fact க்களைக் கூறுகிறார். எனக்கு டாக்டர் சபரிதான் ஞாபகம் வந்தார்.

இதையெல்லாம் தாண்டி படத்தை ஓரளவிற்கு உயிர்ப்புடன் வைத்திருப்பது அந்தக் கொலையை யார் செய்தார்கள் என்கிற கேள்வி மட்டும்தான். ஆனால் கொஞ்சம் ஷார்ப்பாக இருந்தால் முதல் பதினைந்து நிமிடத்திலேயே அதையும் கண்டுபிடித்துவிட முடியும்.


HIT :


இது சமீபத்தில் தெலுங்கில் வெளியான ஒரு இன்வெஸ்டிகேஷ்ன் த்ரில்லர். பெரும்பாலும் சூப்பர் ஹீரோ கதாப்பாத்திர வடிவமைப்பில் அவர்களுக்கு எதேனும் ஒரு பழைய நினைவு அடிக்கடி வந்து தொல்லை கொடுப்பது போலவோ அல்லது சாதாரண  மனிதர்கள் போலல்லாமல் அவர்களுக்கு எதோ ஒன்றைப் பார்த்தல் மட்டும் பயம் ஏற்படுவது போலவும் அமைத்திருப்பார்கள். இறுதிக்காட்சியிலோ அல்லது இடையில் ஏதேனும் ஒரு இடத்திலோ வில்லன் ஹீரோவின் அந்த வீக்னஸ்ஸை உபயோகித்து அவரை டாமினேட் செய்வார். அதிலிருந்து ஹீரோ மீண்டு எப்படி வில்லனை அழிக்கிறார் என்பதை காட்சிப்படுத்துவார்கள்.

ஆனால் இன்று பெரும்பாலான போலீஸ் அதிகாரிகள் அதிலும் குறிப்பாக துப்பறியும் போலீஸ் அதிகாரிகளின் கதாப்பாத்திர அமைப்பு இந்த வகையில் தான் அமைக்கப்படுகிறது. அவர்களுக்கு எதோ ஒரு பழைய நினைவு வந்து அடிக்கடி தொல்லை கொடுப்பதும், தூக்கத்திலிருந்து பயந்து அடிக்கடி எழுவதும், எதோ ஒரு சைக்கார்டிஸ்டிடம் ட்ரீட்மெண்ட் எடுத்துக்கொள்வதும் தான் இன்றைய துப்பறியும் கதாப்பாத்திரங்களின் குறைந்தபட்ச தகுதியாக கருதப்படுகிறது. இதுபோன்ற கதாப்பாத்திர அமைப்பு இப்பொழுதெல்லாம் சலிப்பை ஏற்படுத்துகிறது.

மேற்கூறிய V1 லும் சரி, இந்த HIT லும் சரி.. ஹீரோ கதாப்பாத்திரம் நமக்கு சலிப்பைத்தான் ஏற்படுத்துகிறது. இன்வெஸ்டிகேஷன் பகுதிகள் ஓரளவிற்கு நன்றாகவே செல்கின்றன.

கிட்டத்தட்ட இடைவேளை சமயத்தில் ஒரு  முக்கியமான தடயம் ஒரு வீட்டில் கிடைக்கிறது. தீவிர விசாரணையில் அந்தத் தடயம், வேண்டுமென்றே அட்டென்சன் சீக்கிங்கிற்காக உருவாக்கியதாக ஒருவர் ஒப்புக்கொள்கிறார்.
“ஏம்மா… இதெல்லாம் ஒரு காரணமாம்மா…” இன்வெஸ்டிகேஷன் போயிட்டு இருக்கும்போது ஒருவர் தன்னை அனைவரும் கவனிக்க வேண்டும் என்பதற்காக அவரே தடயத்த உண்டாக்குறாராம்.  அதுவும் கொலை கேஸ்ல. மாட்னா பிதுக்கிருவானுங்க.. எந்த லூசாச்சும் இந்த மாதிரி பன்னுமா?தெலுங்கில் இப்படித்தான் ஒருசில அதிகப் பிரசங்கித் தனங்கள் நடக்கும்.

சமீபத்தில் வந்த பெரும்பாலான இன்வெஸ்டிகேஷன் த்ரில்லர்களில் க்ளைமாக்ஸில் ஒரே மாதிரியான ட்விஸ்ட் இருப்பதும் சலிப்பை ஏற்படுத்துகிறது.

“The Body” “Searching” “BROT” “இமைக்கா நொடிகள்” “துருவங்கள் பதினாறு” “kshanam” aka சத்யா இப்போது வந்த HIT என அனைத்திலும் ஒரே ஒற்றுமை.  ஒற்றுமையைச் சொன்னான் இன்னும் மெஹா ஸ்பாய்லர் ஆகிவிடும்.

FORENSIC :


சமீபத்தில் மலையாளத்தில் வந்திருக்கும் மற்றுமொரு இன்வெஸ்டிகேஷ்ன் த்ரில்ல்ர். ஹீரோ ஒரு தடயவியல் வல்லுனர். நல்லவேளை போலீஸா இல்லை. இருந்திருந்தா அவனுக்கும் ஒரு haunting past, தெரபி செஷன்னு நம்ம உசுற எடுத்துருப்பானுங்க.

மேலே இரண்டு படங்களில் கூறப்பட்ட குறைகள் எதுவும் இந்தப் படத்தில் இல்லை. அலட்டல் இல்லாத ஹீரோ கதாப்பாத்திரம், அவர் மிகவும் திறமையானவர் என்பதைக் காட்ட கேஷூவலாக அவரை பிஸ்கெட் சாப்பிட வைக்காமல் காட்சிகளைத் தகவல்களால் நிரப்புகிறார்கள். கதையின் மீதும் கதாப்பாத்திரத்தின் நமக்கு மீதும் நம்பகத் தன்மை அதிகரிக்கிறது.

ஒவ்வொரு முடிச்சாக அவிழ்க்கிறார்கள். ஒரு கட்டத்தில் முடிச்சுகள் எக்ஸ்ட்ராவாகிப் போய் விவேக்கிடம் ஒருவர் சீரியல் கதை சொல்லும் ஒரு காமெடி போல் இருந்தது.



”லதாவுக்கும் ஆனந்துக்கும் கள்ளத் தொடர்பு இருப்பது உண்மைதான்”

“கள்ளத் தொடர்பா?”

”இது லதாவோட புருசன் ராஜேஷூக்கு தெரியாது”

“ராஜேஷா?”

”ஆனா ராஜேஷூக்கும் வசந்திக்கும் ஒரு சின்ன கனெக்‌ஷன் இருக்கு”

“கனெக்‌ஷனா?”

”வசந்தி யாருன்னா ஆனந்தோட காதலி”

“இதுவேறயா?”

”நட்ராஜு அவள ஒன்சைடா லவ் பன்றான்”

”ஒன் சைடாவா?”

”ஆனா ஆனந்து ரேவதிய வச்சிருக்கது வசந்திக்குத் தெரியாது”

இப்படித்தான் இருந்தது ஃபோரன்ஸிக்கில் முடிச்சுகளை அவிழ்த்த விதம். அதுமட்டுமல்லாமல் யாருமே எதிர்பார்க்காத, ஆனால் கதையில் அனைவருக்கும் தெரிந்த ஒரு கதாப்பாத்திரத்தை கொலையாளியாகக் காட்ட வேண்டும். அதற்காக ஒரு கதாப்பாத்திரத்தை ஃபிக்ஸ் செய்துவிட்டு அதன் பிறகு அவரை மெயின் கதையுடன் லிங்க் செய்ய ரொம்பவே மெனக்கெட்டிருக்கிறார்கள். மறுபடி மேலுள்ள விவேக் வசனத்தைப் படிக்கவும்.


மொத்தத்தில்

Forensic > HIT > V1 Murder case


Sunday, May 3, 2020

தடயவியல் – Case 4 ஆவணக் கொலைகள்!!


Share/Bookmark




1985, அக்டோபர் பதினைந்து அன்று காலை ஸ்டீவ் க்ரிஸ்டின்சன் 13 வது மாடியில் உள்ள தனது அலுவலகத்திற்கு வருகிறார். கதவைத் திறந்து உள்ளே  சென்ற சில நொடிகளில் அடுத்த அறையிலி இருந்த ஸ்டீவின் நண்பர் ஒரு மிக்பெரிய சப்தத்தை கேட்கிறார். அவசர அவசரமாக வெளியில் வந்து பார்க்க, ஸ்டீவ் க்ரிஸ்டின்சன் அவருடைய அலுவலகத்தின் கதவுக்கு வெளியே கை, கால் முகம் என அனைத்தும் சேதமடந்து இறந்து கிடக்கிறார்.

தகவலறிந்ததும் காவல்துறை சம்பவ இடத்திற்கு விரைகிறது.  சிதறிக்கிடந்த கதவு, சுவர் துணுக்குகளுக்கிடையே ஸ்டீவ் க்ரிஸ்டின்சன் இறந்து கிடக்கிறார். சிதறிய ஒவ்வொரு பொருட்களையும் சேகரிக்கின்றனர். சிதறிக்கிடந்த பொருட்களில் சேதமடைந்த சில பேட்டரிகள், சிதறிய பைப் துண்டுகள், சிறு சிறு ஒயர் துண்டுகள் மற்றும் ஒட்டும் டேப் ஆகியவற்றை கண்டறிகின்றனர். இந்த குண்டு வெடிப்பு ஒரு பைப் பாமின் மூலம் ஏற்படுத்தப்பட்டது என காவல்துறை கண்டறிவதற்கு வெகுநேரம் ஆகவில்லை. ஒரு பைப் பாம் என்பது கீழ்கண்டவாறுதான் இருக்கும்.



பாம் வெடித்ததில் ஸ்டீவின் ஆஃபீஸ் கதவு ஹிஞ்சுடன் சேர்த்து பெயர்க்கப்பட்டு வெளியே வீசப்பட்டிருந்தது. அதுமட்டுமல்லாமல் ஸ்டீவின் முகம் கை கால்களில் பலத்த காயமும் ஏற்பட்டிருந்தது. இதை வைத்து பாம் வெடித்தது கதவுக்கு மிக அருகில் இருக்கவேண்டும், ஸ்டீவும் பாம் வெடிக்கும்போது மிக அருகில் தான் இருந்திருக்க வேண்டும் எனவும் உறுதிசெய்கின்றனர்.

சிதறிய பொருட்களின் நடுவே, ஸ்டீவ் என்று எழுதப்பட்ட காக்கி வண்ண பேப்பர் கிடப்பதை போலீஸ் கண்டறிந்தது. அந்த காக்கி வண்ண கவர் ஒரு பார்சலின் கவராக இருக்கும் எனவும் போலீஸ் யூகித்தது. அவர்களின் யூகத்தை சரியாக்கும் வண்ணம் இரண்டு மாடி கீழே வசித்த ஒருவர், இது போன்ற பார்சலை தூக்கி வந்த நபரை தான் லிஃப்டில் பார்த்ததாகவும், அவர் சுமார் 5 அடி 8 அங்குல உயரத்தில் இருந்ததாகவும், ஒரு ஓவர் கோட் அணிந்திருந்ததாகவும் தெரிவித்திருந்தார். அதுமட்டுமல்லாமல் சிறிது நேரம் கழித்து அந்தப் பார்சல் ஸ்டீவின்

ஸ்டீவ் க்ரிஸ்டின்சன் நிறைய தொழில்களில் சம்பந்தப்பட்டவர்.அவர் ஒரு அக்கவுண்டண்ட். ஒரு மிகப்பெரிய ரியல் எஸ்டேட் கம்பெனியின் CEO வாக இருந்து சமீபத்தில் தான் அந்தப் பதவியை ராஜினாமா செய்திருந்தார். அந்த ரியல் எஸ்டேட் கம்பெனி மிகப்பெரிய நஷ்டத்தில் போய்கொண்டிருந்தது. அதன் மூலம் பணம் இழந்தவர்களும் அதிகம். அதனால் அந்தக் கம்பெனியின் மூலம் பணம் இழந்தவர்கள் யாரேனும் இந்த பாமை வைத்திருக்கலாம் என போலீஸ் சந்தேகித்தது.

சிதறிய பொருட்களை சோதனையிடும்போது அதில் ஒரு motion sensitive mercury switch இன் பகுதிகளை கண்டறிகிறார்கள். இந்த மோஷன் சென்சிட்டிவ் சுவிட்ச் என்பது ஒரு கண்ணாடி குழாயின் ஒருபுறம் பாதரசம் வைக்கப்பட்டிருக்கும். மற்றொரு புறம் கொஞ்சம் இடைவெளி விட்டு இரண்டு கம்பிகள் இருக்கும். எப்பொழுதும் அந்த கண்ணாடி குழாய் செங்குத்தாக வைக்கப்பட்டிருக்கும். எனவே பாதரசம் அந்தக் கண்ணாடிக்குழாயின் கீழும், கம்பிகள் மேலும் இருக்கும். ஒருவேளை அந்தக் கண்ணாடிக் குழாய் சாயும் பட்சத்தில் கண்ணாடிக்குழாயின் கீழே இருக்கும் பாதரசம் மறுபுறம் இருக்கும் கம்பிகளுக்கு நடுவில் சென்று இரண்டிற்கும் இடையே ஒரு தொடர்பை ஏற்படுத்தும். அந்த இரண்டு கம்பிகளுக்கு நடுவே தொடர்பு ஏற்படும்பொழுது ஒரு சுவிட்ச் போல செயல்பட்டு பாமை வெடிக்கச் செய்யும்.



இதுபோன்ற மோஷன் சென்சிட்டிவ் சுவிட்சின் மூலம் வெடிக்கவைக்கப்படும் வெடிகுண்டுகள் பெரும்பாலும் அந்த வெடிகுண்டு உருவாக்குபவரால் தான்  குறிப்பிட்ட இடங்களில் வைக்கப்படும். ஏனென்றால் வேறு ஒருவர் தெரியமல் பாம் இருக்கும் பெட்டியை திருப்பினால் கூட பாம் வெடித்துவிடும் என்கிற காரணம் தான்.

எனவே ஸ்வீவ் அலுவலகத்திற்கு அந்தப் பார்சலைக் கொண்டு வந்தவர்தான் பாம் செய்தவராகவும் இருக்கவேண்டும் என காவல்துறை முடிவுக்கு வந்தது. ஆனால் அவரைப் பற்றி வேறு எந்தத் தகவலும் காவல்துறையிடம் இல்லை. காவல்துறை ஒரு நிலைபாட்டுக்கு வரும் முன்னரே அவர்களுக்கு அடுத்த அதிர்ச்சி காத்திருந்தது. ஆம். அடுத்த இரண்டு மணி நேரத்தில் ஸ்டீவ் வெடித்து சிதறிய அதே முறையில் இன்னொரு குண்டு வெடிப்பு. இந்த முறை மரணமடைந்தது கேத்தி ஷீட்ஸ் எனும் பெண்.

சம்பவ இடத்திற்கு போலீஸ் விரைந்து சம்பவ இடத்தை அலசுகிறார்கள். முதல் சம்பவத்தில் கிடைத்த அத்தனை தடயங்களையும் இரண்டாவது சம்பவத்திலும் பார்க்கிறார்கள். வெடித்தது ஒரு பைப் பாம். வெடிக்க வைக்கப்பட்டது ஒரு மோஷன் சென்சிட்டிவ் மெர்க்குரி சுவிட்ச்சின் மூலம். கேத்தி ஷீட்ஸின் கணவர் கேரி ஷீட்ஸின் பெயரில் வந்த ஒரு பார்சல் மூலம் பாம் வெடித்திருக்கிறது என அத்தனையும் அதே டெய்லர் அதே வாடகை.

முதல் சம்பவத்தில் கிடைத்த பேட்டரிகள், இரண்டாவது சம்பவத்தில் கிடைத்த பேட்டரிகள் என இரண்டிலும் Tandy எனும் ப்ராண்டின் பெயர் இருக்கிறது. அந்த Tandy brand ஐ விற்பது சிட்டியில் Radio shack எனும் கடை. அங்கு சென்று போலீஸ் விசாரிக்க, அவர்கள் சமீபத்தில் அந்த ஐட்டங்களை வாங்கியவரின் முகவரியைக் கொடுக்கிறார்கள். போலீஸ் அந்த இடத்திற்கு செல்ல, அது ஒரு போலி முகவரி என்பது தெரிகிறது.

அதே போல இரண்டு சம்பவங்களிலும் சிதறிய கன் பவுடரை ஆய்வு செய்கிறார்கள். அது Hercules Bulls Eye எனும் ப்ராண்டைச் சேர்ந்த கன் பவுடர் என்பது உறுதியாகிறது. இரண்டு கொலைகளும் ஒரே மாதிரி நடத்தப்பட்டிருந்தாலும்,  கொலை செய்யப்பட்ட இருவருக்கும் பெரிதாக ஏந்த தொடர்பையும் காவல்துறை கண்டறியவில்லை. ஆனால் கொலையுண்ட கேத்தியின் கணவர் முன்பொரு காலத்தில் ஸ்டீவின் தொழில் பார்ட்னராக இருந்திருக்கிறார் என்பது தெரிகிறது.

போலீஸ் ஒரு கோணத்தில் விசாரணையை ஆரம்பிக்க இருக்க, மறுநாளே மற்றுமொரு சம்பவம் நடந்தது. அமெரிக்காவின் சால்ட் லேக் நகரில் பார்க்கிங்கில் நிறுத்தப்பட்டிருந்த  மார்க் ஹாஃப்மேன் ( Mark Hofmann) என்பவரின் ஒரு காரில் அதே போல ஒரு குண்டு வெடித்தது.  ஆனால் அதிர்ஷ்ட வசமாக ஹாஃப்மேன் பலத்த காயங்களுடன் உயிர்தப்பினார்.

தோள்பட்டை, முழங்கால் என கடுமையான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிப்பட்ட, ஹாஃப்மேனிடம் போலீஸ் விசாரணை நடந்தி, என்ன நடந்தது என விளக்கச் சொல்கிறது.  தான் ஷாப்பிங் சென்று விட்டு வந்து காரைத் திறக்கும்போது காரில் ஒரு பார்சல் இருந்ததாகவும், கதவைத் திறக்கும்போது அந்தப் பார்சல் நழுவி முன் சீட்டின் கீழே விழுந்ததும் வெடித்ததாகக் கூறுகிறார். 

மார்க் ஹாஃப்மேன் ஒரு பழங்கால ஸ்டாம்புகள், ஆவணங்களை சேகரித்து விற்கும் ஒரு நபர். நூற்றாண்டுகள் பழமையான ஆவணங்களை சேகரிப்பதும், அவற்றை தேவைப்படுபவர்களுக்கு அதிக விலைக்கு விற்பதுமே அவரின் வேலை.

போலீஸ் பாம் வெடித்த காரை ஆய்வு செய்கிறார்கள். ஒரு பைப் பாம் என்பது வெடிக்கும்போது பக்கவாட்டில்தான் முதலில் வெடிக்குமாம். அதாவது பைப்பின் இரண்டு புறங்களும் மூடப்பட்டிருக்கும் மூடிகள்தான் முதலில் வெடித்து பக்கவாட்டில் வெளிப்படும். அப்படி வெடிக்கும்போது பைப் பாமின் ஒரு பக்க மூடிதான் ஹாஃப்மேனின் முட்டியில் பட்டு பலத்த காயத்தை ஏற்படுத்தியிருந்தது. இன்னொரு பக்க மூடி காரின் மறுபக்க கதவில் ஒரு ஓட்டையை ஏற்படுத்தியிருந்தது.



காரை ஆய்வு செய்த அதிகாரிகள் ஹாஃப்மேன் கூறிய கதைக்கும், காரில் பாம் வெடித்திருக்கும் முறைக்கும் இடையே வித்யாசங்கள் இருப்பதைக் கண்டறிகிறார்கள்.  ஹாஃப்மேன் கூறிய முறைப்படி பாம் கீழே விழும்போது வெடித்திருந்தால் ஹாஃப்மேனுக்கு காலில் அடிபட்டிருக்காது, அதேபோல காரிலும் இப்போது உள்ளது போன்ற துளைகள் ஏற்பட்டிருக்காது எனவும், பாம் வெடிக்கும்போது காரின் முன்பக்க இரண்டு சீட்டுகளுக்கு நடுவில்தான் இருந்திருக்க வேண்டும் எனவும் கண்டறிகின்றனர். இதனை அறிவியல் பூர்வமாகவும் சில அறிஞர்களிடம் கேட்டு உறுதிப்படுத்துகின்றனர். ஹாஃபெமேனின் காரில் கிடைத்த கன் பவுடரை முந்தய விபத்துகளில் கிடைத்த கன் பவுடருடன் ஒப்பிட அவையும் ஒத்துப்போயின. எனவே மற்ற இரண்டு குண்டுகளையும் தயாரித்தது ஹாஃப்மேனாகவே இருக்கலாம் என போலீஸ் அனுமானிக்கிறது. ஆனால் ஹாஃப்மேன் எதற்காக இதை செய்யவேண்டும் என்பதற்கு மட்டும் அவர்களுக்கு விடை தெரியவில்லை.



ஹாஃப்மேனைப் பற்றிய முழுமையான விசாரணையில் இறங்குகின்ரனர் போலீஸார். அவரின் தொழில், பழக்கவழக்கங்கள் என ஆராய ஆரம்பித்தனர். ஹாஃப்மேன் ஒரு பழங்கால, மதிப்பு மிக்க ஆவணங்களை சேகரித்து விற்பவர் என்பது தெரியும். குண்டு வெடித்து முதலில் இறந்த ஸ்டீவ், ஹாஃப்மேனிடமிருந்து வெகுநாட்கள் முன்பு சில ஆவணங்கள் வாங்கியிருப்பது தெரியவருகிறது.

ஹாஃப்மேன் குண்டு வெடிப்பில் காயமடைந்த அன்று, உண்மையில் அவர் சால்ட் லேக் சிட்டியில் உள்ள மோர்மொன் (Mormon Church) தேவலயத்தில் ஒரு மீட்டிங்கில் கலந்து கொள்ள அழைக்கப்பட்டிருந்தார். ஹாஃப்மேனிடமிருந்து சில பழங்கால ஆவணங்களை மோர்மொன் தேவாலயம் வாங்க முடிவுசெய்திருந்தது. அதுதொடர்பாக ஒரு மீட்டிங்கிற்குத்தான் ஹாஃமேன் சர்ச்சிற்கு அழைக்கப்பட்டிருந்தார்.

போலீஸ் விசாரணையில் மற்றுமொரு தகவலும் கிடைத்தது. மோர்மொன் தேவாலயத்திற்கு ஹாஃப்மேன் விற்கும் பழங்கால ஆவணங்களை, அவை உண்மையிலேயே பழமை வாயந்த ஆவணங்கள் தானா என உறுதி செய்ய மோர்மொன் தேவாலயம் முதலில் இறந்த ஸ்டீவ் க்ரிஸ்டின்சனை அழைத்திருந்தது தெரியவந்தது. போலீஸிற்கு ஏதோ பொறிதட்டியது.

ஹாஃப்மேன் விற்பதாக இருந்த பழங்கால ஆவணங்களை ஆய்வு செய்ய ஒரு தடயவியல் வல்லுனர் அழைக்கப்படுகிறார். மைக்ராஸ்கோப் மூலம் அந்த ஆவணங்களை ஆய்வு செய்ய, அந்த தாள்களில் பயன்படுத்தப்பட்டிருக்கும் இங்க் தாளின் எல்லா பக்கமும் மெல்லியதாக பரவியிருந்தது தெரிந்தது. ஆனால் வேறு சிலரிடமிருந்து மோர்மொன் சர்ச் வாங்கிய, கிட்டத்தட்ட அதே காலகட்டத்தில் இருந்த பழங்கால ஆவணங்கள் சிலவற்றை ஆராய்ந்த பொழுது அதில் பயன்படுத்தப்பட்டிருந்த இங்க் ஒருபக்கம் மட்டுமே லேசாக பரவியிருந்தது.

ஹாஃப்மென் விற்ற அனைத்து பழங்கால ஆவணங்களிலிலும் பயன்படுத்தப்பட்டிருத இங்க் அதே மாதிரி அனைத்து பக்கமும் மெல்லியதாக பரவியிருந்ததும் கண்டறியப்பட்டது. போலீஸ் ஹாஃப்மேனின் அலுவலகத்தை சோதனையிட முடிவெடுத்தனர். அங்கு அவர்களுக்கு கிடைத்த ஆவணங்கள் போலீஸை திடுக்கிட வைத்தது.

முதலில்  அவர்களுக்குக் கிடைத்தது Iron Gal Ink எனப்படும் எழுதும் இங்க் தயாரிப்பதற்கான ஃபார்முலா. இந்த Iron gal Ink தான் ஐந்தாம் நூற்றாண்டு முதல் 19ம் நூற்றாண்டு வரை ஐரோப்பாவில் எழுதுவதற்கு பயன்படுத்தப்பட்ட இங்க். அந்த ஃபார்முலா ஹாஃப்மேன் வைத்திருந்தது போலீஸாரை ஆச்சர்யப்படுத்தியது.

தடயவியல் வல்லுனர் ஒருவர் அதே ஃபார்முலாவில் ஒரு இங்கைத் தயாரித்து ஒரு வெள்ளைத்தாளில் எழுதினார். பின்னர் அந்த வெள்ளைத்தாளை பழங்கால தாளைப் போல மாற்ற அம்மோனியா கரைசலில் நனைத்தார். பின்னர் அந்த எழுத்துக்களை மைக்ராஸ்கோப்பில் பார்த்த பொழுது அந்த இங்க அனைத்து பக்கங்களிலும் லேசாகப் பரவியிருந்தது.

அடுத்து “Oath of Freeman” என்னும் ஒரு 17ம் நூற்றாண்டைச் சேர்ந்த ஆவணத்தை விற்க ஹாஃப்மேன் சுமார் 1.5 மில்லியன் டாலருக்கு விலைபேசியிருந்தார். இரண்டு நிறுவனங்கள் அந்த ஆவணம் உண்மையானதுதான் என்பதை உறுதிப்படுத்தியிருந்தன. அந்த ஆவணம் தனக்கு ஒரு பழைய புத்தக நிலையத்திலிருந்து கிடைத்தாக ஹாஃப்மேன் கூறியிருந்தார்.



ஆனால் ஹாஃப்மேனின் வீட்டில் சோதனையிட்ட பொழுது, இந்த Oath of Freeman ஆவனத்தை தயார் செய்யும் ஒரு ப்ரிண்ட் ப்ளேட் கிடைத்தது.  அந்த ப்ரிண்ட் ப்ளேட் வேறு ஒரு நிறுவனத்திடமிருந்து ஹாஃப்மேனின் தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி வாங்கப்பட்டிருந்ததை போலீஸ் கண்டறிந்தனர்.  எனவே 1.5 மில்லியன் டாலர் விலைபேசப்பட்ட அந்த ஆவணத்தின் மேலும் போலீஸூக்கு சந்தேகம் வலுத்தது.


அந்த ஆவணமும் மைக்ராஸ்கோப்பில் ஆய்வு செய்யப்பட்ட, அதில் இருந்த ‘M’ என்ற எழுத்தில்  மட்டும் ஒரு மெல்லிய இடைவெளி அனைத்து இடங்களிலும் இருப்பது கண்டறியப்பட்டது. அந்த இடைவெளி நாட்கள் கடந்ததாலோ அல்லது ப்ரிண்ட் செய்யும்போது ஏற்பட்ட கோளாரோ அல்ல. அது ஒரு photographic process இன் மூலம் ஏற்பட்டது எனவும், அந்த Photographic process முறை பழங்காலத்தில் கண்டறிப்படவில்லை எனவும் கண்டறிந்தனர். எனவே ஹாஃப்மேன் 1.5 மில்லியனுக்கு விற்பதாக இருந்த “Oath of Freeman” ஆவணமும் போலி என நிரூபணமானது.

இப்போது ஸ்டீவ் க்ரிஸ்டின்சனை மார்க் ஹாஃப்மேன் கொல்வதற்கான காரணமும் விளங்கியது. ஹாஃப்மேன் விற்ற ஆவணங்கள் போலி என்பதை க்ரிஸ்டின்சன் அறிந்திருந்தார். அதனை மோர்மொன் தேவாலயத்தில் குறிப்பிடும் பட்சத்தில் ஹாஃப்மேனின் அனைத்து ஆவணங்களும் போலி என்கிற உண்மையும் தெரிந்துவிடும். அதனால் பைப் பாமின் மூலம் ஸ்டீவ் கொல்லப்பட்டார். போலீஸின் கவனத்தை திருப்புவதற்காக ஸ்டீவின் முன்னால் தொழில்முறை பார்ட்னருக்கும் பாம் அனுப்பியிருந்தார் ஹாஃப்மேன். ஆனால் எதிர்பாராத விதமாக அவர் மனைவி அதில் சிக்கி இறந்துவிட்டார்.

ஹாஃப்மேன் வாழ்க்கையில் விற்ற அனைத்து ஆவணங்களும் போலியானது என நிருபனமானது. இரண்டு கொலைகளுக்காகவும், ஏமாற்று வேலைக்காகவும் ஹாஃப்மேன் வாழ்நாள் முழுவதும் சிறையில் தள்ளப்பட்டார்.


வேறு ஒரு சுவாரஸ்யமான சம்பவத்துடன் அடுத்த பதிவில் சந்திப்போம்!!

Saturday, May 2, 2020

தடயவியல் – Case 3 சாட்சி சொல்லிய மரம்!!!


Share/Bookmark




முதல் பகுதியில் கூறியதைப் போல, ஒரு குற்றம் நடக்கும்போது சுற்றியிருக்கும் உயிருள்ள உயிரற்ற பொருட்கள் அனைத்துமே சாட்சிகள் தான். உயிரற்ற பொருட்களிடமிருந்து செய்தியைப் பெற, அவற்றுடன் வேறு ஒரு மொழியில் பேச வேண்டும். அந்த மொழியைப் பேசுபவர்கள்தான் இந்த தடயவியல் துறையினர். இதனை நிரூபிக்கும் விதமாக நிகழ்ந்த ஒரு சம்பவத்தைத்தான் இந்தப் பதிவில் பார்க்கப்போகிறோம்.

1992, அமெரிக்காவின் அரிசோனா மாஹானத்தின் ஃபீனிக்ஸ் நகரத்திற்கு வெளியே ஆள் நடமாட்டம் இல்லாத ஒரு பகுதியில் நிர்வாணமாக ஒரு பெண்ணின் சடலம் கிடப்பதாக அந்த வழியே இரு சக்கர வாகனத்தில் சென்ற ஒருவர் தகவல் தெரிவிக்கிறார்.  காவல்துறை சம்பவ இடத்திற்கு விரைகிறது.

புதர்களுக்கு நடுவே கிட்டத்தட்ட நிர்வாணக் கோலத்தில் ஒரு பெண்ணின் சடலம் குப்புறக் கிடக்கிறது.  இரண்டு கால்களையும் சேர்ந்து மெல்லி ஒரு கம்பி சுற்றியிருக்கிறது. குரவளையைச் சுற்றி ஒரு டீ-ஷர்ட். அநேகமாக அந்தப் பெண் அணிந்திருந்த டீ-ஷர்ட்டாக இருக்கலாம். அதை வைத்துத்தான் அவள் கழுத்து நெறிக்கப்பட்டிருக்கிறது என யூகிக்கிறது காவல்துறை. கொலை நடந்த இடத்தை சுற்றி வேறு ஏதேனும் தடயங்களுக்காக தேடுகிறது காவல்துறை. ஓரே ஒரு சிரிஞ்ச் மட்டும் கிடைக்கிறது. மேலும் தேடுதல் வேட்டை நடந்திக்கொண்டிருந்த பொழுது கேட்டது அந்த சத்தம்.

“கினிங்..கினிங்..கினிங்”


சத்தம் வந்த இடத்தை நோக்கி சென்ற போலீஸார், புற்களுக்குள் ஒரு பேஜர் விழுந்து கிடப்பதை பார்த்து அதனை கைப்பற்றுகின்றனர். இவ்வளவுதான் கிடைத்த ஆதாரம்.

கொலையான பெண் அடையாளம் காணப்படுகிறாள். அவள் பெயர் டென்னிஸ் ஜான்சன். இரண்டு குழந்தைகளின் தாய்.  அவளைப் பற்றி விசாரிக்கும் பொழுது அவ்வளவு நல்ல விதமாக யாரும் கூறவில்லை. அவளுக்குப் போதை மருந்து விற்பவர்களுட பழக்கம் இருக்கிறது. தவறான நண்பர்களுடன் அவள் பழகிவந்தாள் என்பன போன்ற தகவல்கள் காவல்துறைக்கு கிடைக்கிறது.

டென்னிஸ் ஜான்சனை யார் கொன்றிருக்கலாம் என்கிற விசாரணையை ஆரம்பிக்கிறது காவல்துறை. அவர்களிடம் இருக்கும் ஆதாரம் ஒன்றே ஒன்றுதான். கொலை நடந்த இடத்திற்கு அருகே கிடந்த பேஜர். அந்த பேஜருக்கு சொந்தக் காரர் யார் என்று விசாரிக்கும்போது அது மார்க் போகன் என்பவருக்கு சொந்தமான பேஜர் எனத் தெரிகிறது.

போலீஸார் மார்க் போகனை விசாரிக்கிறார்கள். டென்னிஸ் ஜான்சனைத் தெரியுமா? உங்களுடைய பேஜர் எப்படி கொலை நடந்த இடத்திற்கு வந்தது எனக் கேட்கிறார்கள்.



அதற்கு மார்க் போகன் கொலை நடந்த அன்று இரவு, தான் ஒரு டெலிஃபோன் கால் செய்ய, காரை நிறுத்தி விட்டு கீழே இறங்கியதாகவும், அப்பொழுது டென்னிஸ் ஜான்சன் தனக்கு லிஃப்ட் கொடுக்குமாறு கேட்டு காரில் ஏறியதாகவும் கூறினார். ஏறிய பின்னர் காரில் ஏறியதும் டென்னிஸ் ஜான்சன் சற்று எல்லை மீறி நடந்து கொண்டதாகவும், தானும் அதற்கு உடன் பட்டதாகவும் கூறினார். தன்னை கட்டிப்பிடித்துக் கொண்டிருக்கும் போதே தன் காரின் டேஷ் போர்டில் இருந்த தன்னுடைய பர்ஸை அவள் எடுப்பதைப் பார்த்து விட்டு அவளை வெளியேறச் சொன்னதாகவும், அதனால் கோபமடைந்து அவள் வெளியே சென்று விட்டதாகவும் கூறுகிறார். பின்னர் வீட்டுக்கு வந்த பின்னர்தான் தன்னுடைய பேஜர் காணாமல் போனதை உணர்ந்து உடனடியாக, பேஜர் கம்பெனியைத் தொடர்பு கொண்டு புகார் அளித்ததாகவும் கூறுகிறார்.

இது போலீஸிற்கு நம்பும் விதமாகவும், மேற்கொண்டு மார்க் போகனை குற்றம் சாட்ட வேறு எதுவும் போலீஸிடம் இல்லாததாலும் அப்படியே விடுகிறார்கள். ஆனால் விசாரணையின் போது மார்க் போகனின் முகத்தில் ஒரு கீரல் இருப்பதை கண்டறிகிறார்கள். ஒருவேளை டென்னிஸ் ஜான்சனின் ப்ரேதப் பரிசோதனையில் அவள் நக இடுக்குகளில் ரத்தமோ சதையோ கண்டறியப்பட்டால் அதை வைத்து மார்க் போகனை குற்றம் சாட்டலாம் என காத்திருக்கின்றனர். ஆனால் ப்ரேதப்பரிசோதனையில் டென்னிஸ் ஜான்சனின் நகங்களில் சதையோ, ரத்தமோ இல்லை. மேலும் அவள் ரத்ததில் கொகைன் கலந்திருப்பதையும் பரிசோதனையில் கண்டறிகிறார்கள்.

போலீஸ் விசாரணை எந்தக் கோணத்தில் மறுபடி தொடர்வது என புரியாமல் நின்றது. அந்த சூழலில் டிடெக்டிவ் சார்லி மார்டின் கொலை நடந்த இடத்தை மறுபடி ஆய்வு செய்ய ஆரம்பிக்கிறார். சம்பவ இடத்தை அங்குலம் அங்குலமாக அலச எந்த ஒரு தடயமும் கிடைத்த பாடில்லை. திடீரென ஒரு விஷயம் கண்ணில் பட்டது. சம்பவம் நடந்த இடத்திற்கு அருகில் இருந்த ஒரு palo verde மரத்தின் ஒரு சிறு கிளையில் எதோ உரசியதைப் போல மரத்தின் மேல் தோல் உரிந்திருந்தது. அந்த palo verde மரத்தில் நமது கருவேல மரங்களில் காய்ப்பதை போல பீன்ஸ் மாதிரியான காய்கள் காய்த்து தொங்கிக் கொண்டிருந்தன.

அந்த மரக் கிளையில் ஏற்பட்டிருக்கும் உரசல் ஒருவேளை கொலை நடந்த அன்று ஏற்பட்டிருக்கலாம் என டிடெக்டிவ் யூகிக்கிறார். நம்முடைய சந்தேக லிஸ்டில்  இருப்பது மார்க் போகன் ஒரே ஒருவன் தான். எனவே அவனுடைய காரை சோதனை செய்கின்றனர். மார்க் போகனின் வாகனம் பின்புறம் பொருட்கள் ஏற்றிச் செல்வது போலான  ஜீப் மாதிரியான வெள்ளை வண்ட். சோதனையில் காரிலிருந்து எந்த ஒரு கைரேகையோ, முடியோ எதுவும் சிக்கவில்லை. ஆனால் காரின் பின்புறம் சோதனையிடும்போது இரண்டு பீன்ஸ் மாதிரியான பொருட்கள் கிடைகின்றன. ஆம்.. palo verde மரத்தில் காய்க்கும் காய்கள் தான் அவை.  டென்னிஸ் ஜான்சனை  கொன்றுவிட்டு வரும்வழியில் மரத்தில் மோதியதால் இந்தக் காய்கள் விழுந்திருக்கலாம் என போலீஸ் யூகிக்கிறது.

ஆனால் இந்தக் பீன்ஸ் காய்களை மட்டும் வைத்து எப்படி நிரூபிப்பது. அரிசோனா மாஹானம் முழுவதும் பல்லாயிரக்கணக்கான palo verde மரங்கள் இருக்கின்றன. வேறு எதேனும் மரத்திலிருந்து கூட அவை மார்க் போகனின் காருக்குள் விழுந்திருக்கலாம். ஆனால் தற்பொது போலீஸிடம் இருப்பது இந்த ஒரே ஒரு ஆதாரம் மட்டுமே. வேறு வழி எதுவும் இல்லை.

டிடெக்டிவ் சார்லி மார்ட்டின் மரங்களின் DNA வை பரிசோத்து, இந்த பீன்ஸ் காய்கள் கொலை நடந்த இடத்தில் இருந்த மரத்தின் காய்கள் தான் என நிரூபிக்க முடியுமா என சில டாக்டர்களிடம் கேட்கிறார். அவரின் இந்த யோசனையைக் கேட்டு பலரும்  நகைக்கின்றனர். ஏனென்றால் இதுவரை மனிதர்களுக்கு மட்டுமே DNA சோதனை செய்யப்பட்டிருக்கிறது. மரங்களுக்கு இந்தச் சோதனையைச் செய்ய யாரும் முயன்றதில்லை.

டிடெக்டிவ் சார்லி மார்ட்டின் அணுகிய பெரும்பாலான மருத்துவர்கள் அவரின் இந்தக் கோரிக்கையை நிராகரிக்கிறார்கள். முப்பதுக்கும் மேற்பட்டோரை அணுகிய பின்னர் யுனிவர்சிட்டி ஆஃப் அரிசோனாவில் அவரின் கோரிக்கை ஏற்கப்படுகிறது. ஆனால் அவர்கள் மூன்று மாதம் இந்த மரத்தின் DNA வை எப்படி பிரித்தெடுப்பது என்கிற யோசனையிலேயே இதனை கிடப்பில் போடுகிறார்கள். இறுதியில் ஒரு வழிமுறையைக் கண்டறிகின்றனர்.

இந்த பீன்ஸ் காய்களை திரவ நைட்ரஜனில் உறைய வைத்து அதனைப் பொடியாக்கி, சில வழிமுறைகளைப் பயன்படுத்தி அதிலிருந்து DNA வைப் பிரிக்கின்றனர். மார்க் போகனின் காரிலிருந்து எடுக்கப்பட்ட காய்களின் DNA மற்றும் கொலை நடந்த இடத்திற்கு அருகே சேதாரமடைந்த மரத்தின் காய்களின் DNA இரண்டும் சோதனை செய்யப்படுகிறது.  இரண்டும் நூறு சதவிகிதம் ஒத்துப் போகிறது.

மேலும் பத்து வெவ்வேறு palo verde மரங்களின் காய்களும் DNA சோதனைக்கு உட்படுத்தப் படுகின்றன. சோதனை முடிவில் மனிதர்களைப் போலவே ஒவ்வொரு மரமும் ஒரு தனித் தன்மையான DNA வடிவைக் கொண்டிருப்பது தெரிகிறது. இந்த சோதனை முடிவுகளை வைத்து மார்க் போகன் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்படுகிறார்.



எதிர்தரப்பு இந்த DNA சோதனை  முடிவை ஏற்க மறுக்கிறது. பல ஆயிரம் மரங்கள் இருக்கும் இடத்தில் வெறும் பத்து மரங்களின் சோதனை முடிவை மட்டும் ஏற்க முடியாது. மேலும் நூறு மரங்களுக்கு சோதனை செய்து ஒவ்வொன்றும் தனித்தன்மையானது என நிரூபிக்க வேண்டும் என்று வாதிடுகின்றனர். வெறும் நேரத்தைக் கடந்த மட்டுமே இதுபோன்ற கோரிக்கை வைக்கப்படுகிறது என அனைவருக்கும் தெளிவாகத் தெரிகிறது. மேலும் பத்து மரங்களுக்கு DNA சோதனை செய்து ஒவ்வொன்றும் தனித்தன்மையானது என்கிற ஆதாரத்தை சமர்ப்பிக்க நீதிமன்றம் இந்த DNA சோதனை முடிவை  ஆதாரமாக ஏற்கிறது.

அதுமட்டுமல்லாமல் கொலை நடந்த அன்று இரவு 1:30 மணியளவில் வெள்ளை காரை அந்த சாலையில் பார்த்ததாக ஒருவர் வாக்கு மூலம் அளிக்கிறார். கொலை நடந்த இடத்திலிருந்து மார்க் போகன் சுமார் 18 நிமிட பயண தொலைவில் வசிக்கிறார். கொலை நடந்த அன்று மார்க் போகன் இரவு சுமார் 2 மணியளவில் வீட்டிற்கு வந்ததாகவும், அவர் வரும்போது சத்தம் கேட்டு தான் விழித்ததாகவும் மார்க் போகனின் மனைவியே சாட்சியளித்திருந்தார். அனைத்தும் மார்க் போகன் தான் இந்தக் கொலையை செய்திருப்பார் என்கிற அனுமானத்தை உண்டாக்கியது.

மேலும் மார்க் போகனின் நண்பர்கள் சிலரிடம் விசாரித்த பொழுது அவர் புணர்தலின் போது பெண்களின் கை , கால்களை ஒருவித மெல்லைய கம்பியால் கட்டுவது வழக்கம் என்பது தெரிகிறது. அது மட்டுமல்லாமல் டென்னிஸ் ஜான்சன் கால்களில் கட்டப்பட்டிருந்த அதே மாதிரி கம்பியை மார்க் போகனின் வாகனத்தில் சில நாட்கள் முன்பு பார்த்ததாக ஒரு பெண் வாக்கு மூலம் அளித்திருந்தார்.

போலீஸின் பார்வையில் உண்மையில் நடந்தது:

மார்க் போகன் தொலைபேசியில் பேசிவிட்டு வரும்போது டென்னிஸ் ஜான்சன் லிஃப்ட் கேட்டிருக்கிறார். வழியில் இருவருக்கும் இடையே நல்ல புரிதல் ஏற்பட காரை நகரத்தை விட்டு வெளியே ஒதுக்குப்புறமான இடத்தில் நிறுத்தி இருவரும் புணர்தலில் ஈடுபட ஆரம்பித்திருக்கிறார்கள். அப்பொழுது மார்க் போகன் தன்னிடமிருந்த மெல்லிய கம்பியால் டென்னிஸ் ஜான்சனின் கால்களை கட்ட முயல, அது பிடிக்காமல் அவர் இறங்கியிருக்கிறார். மார்க் போகன் அவளைத் துரத்த, இருவருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட, மார்க் போகன் அவள் போட்டிருந்த டீ ஷர்ட்டாலேயே அவள் கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு, காரை எடுத்துக்கொண்டு வேகமாக செல்லும்போது palo   verde மரத்தின் கிளையில் மோதி கிளை லேசாக சேதமடைந்திருக்கிறது. அதே சமயத்தில் மரத்திலிருந்த இரண்டு காய்கள் காரில் விழுந்திருக்கிறது.
மார்க் போகன் சம்பவம் நடந்த மறுநாள் தன்னுடைய காரை கழுவியதாகவும் விசாரணையில் ஒப்புக்கொண்டார். எனவேதான் வேறு எந்த தடயமும் போலீஸாருக்கு சிக்கவில்லை.

இத்தனை ஆதாரங்களையும் வைத்து, மார்க் போகன் குற்றவாளி என தீர்ப்பளித்து, ஆயுள் முழுவதும் அவரை சிறையில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் குறைந்தது 25 வருடங்களுக்கு அவருக்கு பெயில் வழங்கக் கூடாது எனவும் தீர்ப்பளித்திருந்தது.

இந்த வழக்கில் மார்க் போகன் காரிலிருந்து எடுக்கப்பட்ட பீன்ஸ் காய்கள்தான் முக்கிய சாட்சி. எனவே அதனை போலீஸார் வேண்டுமென்றே மார்க் போகனின் காரில் போட்டிருக்கலாம் என எதிர்தரப்பு வாதாடியது. அதற்கு போலீஸ் தரப்பிலிருந்து சிம்பிளாக ஒரு பதில் கூறப்பட்டது.

“ஏன்யா.. நாங்களே எவிடென்ஸ் வைக்கிறதுன்னா ஈஸியா கண்டுபுடிக்கிற மாதிரிதான வச்சிருப்போம். இதுவரைக்கும் யாருமே கண்டுபுடிக்காத DNA மேட்ச் பண்ணி கண்டுபுடிக்கிற மாதிரி இவ்வளவு கஷ்டமான எவிடென்ஸயா வச்சிருப்போம்” என்றார்கள். அவர்களின் விளக்கமும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

ஆனால் இன்று வரை மார்க் போகன் டென்னிஸ் ஜான்சனை கொலை செய்த குற்றத்தை ஒப்புக்கொள்ளவில்லை. இன்று வரை மெல் முறையீடு செய்துகொண்டுதான் இருக்கிறாராம்.

மற்றுமொரு சம்பவத்துடன் அடுத்த பதிவில் சந்திப்போம்.!!


Friday, May 1, 2020

தடயவியல் – Case 2 லிஸ்ட் கொலைகள்!!


Share/Bookmark



உலகில் ஒவ்வொரு மனிதருக்கும் ஒவ்வொரு தனித்திறமை இருக்கிறது. அப்படிப்பட்ட தனித்திறமைகள் நிறைய இடங்களில் நிறைய நேரங்களில் பல வழக்குகள துப்பறிய காவல்துறைக்குப் பயன்பட்டிருக்கிறது. மிகச் சிறிய ஒரு உதாரணம் கூற வேண்டுமென்றால் படம் வரையும் கலைஞர்கள். இன்று கண்கானிப்பு கேமரா உதவியுடன் குற்றவாளியின் முகத்தை எதோ ஒரு கோணத்தில் பிடித்து குற்றவாளி எப்படி இருப்பான் என்பதை காட்டிவிடுகிறார்கள். ஆனால் சில வருடங்களுக்கு முன் குற்றவாளி எப்படி இருப்பான் என்பதை அறிய படம் வரைபவர்கள் உதவி நிறையவே தேவைப்பட்டிருக்கிறது.

குற்றவாளியை பார்த்த ஒருவரை வைத்து அவர் எப்படி இருப்பார், அவரின் கண்கள் எப்படி இருக்கும், மூக்கு,  வாய் எப்படி இருக்கும் என்ற குறிப்புகளையெல்லாம் கேட்டு, குற்றவாளியின் முகத்தை வரைந்து கொடுத்தார்கள் இந்த கலைஞர்கள். இன்றும் அது தொடர்கிறது என்றாலும், கணிணி வந்தபிறகு கையால் வரைவதில்லை. அத்தனை வகையான கண்களும், காதுகளும், மூக்குகளும் கணிணியில் இருக்க, ஒவ்வொன்றாக எடுத்து பொருத்திக் காட்டி சில நிமிடங்களில் வேலையை முடித்து விடுகிறார்கள்.

இன்று நாம் பார்க்கப்போவதும் அதே போன்ற ஒரு தனித்திறமை கொண்ட ஒருவரால் முடித்துவைக்கப்பட்ட ஒரு வழக்கைப் பற்றித்தான். முற்றிலும் அழுகிய நிலையிலோ அல்லது எலும்புக்கூடுகள் மட்டுமோ கிடைக்கும் பட்சத்தில் அந்த கொலை செய்யப்பட்ட நபர் யார் என்பதை காவல்துறையால் கண்டறிய இயலாது. ஃப்ராங்க் பெண்டர் என்பவர் தடவியல் துறைக்கு  உதவி வரும் ஒரு சிற்பி. அவரின் வேலை சிதைவுற்ற நிலையில் இருக்கும் ஒரு முகத்தை வைத்தோ, அல்லது வெறும் மண்டை ஓடுகளை வைத்தோ ஒருவரின் முகம் எப்படி இருக்கும் என்பதை களிமண் சிலையாக வடித்துக் கொடுப்பவர். இதனை Forensic Sculpting என்கிறார்கள். ஒருவரின் மண்டை ஓடு மட்டும் கிடைக்கும் பட்சத்தில் அவருடைய முகத்தில் எவ்வளவு தடிமனில் சதை இருக்கும் என்பதை கணக்கிட இறந்தவரின் வயது, பாலினம், கருப்பரா வெள்ளையரா போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட ப்ரத்யேகமான ஒரு அட்டவணையை பயன்படுத்துகிறார்.

ஒருமுறை போலீஸாருக்கு முற்றிலும் சிதைவுற்ற நிலையில் ஒரு எலும்புக்கூடு மட்டும் கிடைக்கிறது. அது யார் என்று தெரியவில்லை. போலீஸ் ஃப்ராங்க் பெண்டரின் உதவியை நாடுகிறார்கள். பெண்டர் அந்த மண்டை ஓட்டை வைத்து, அவரிடம் இருக்கும் அட்டவணையின் உதவியுடன் , அதற்கு  ஒரு உருவம் கொடுக்கிறார். அது சில மாதங்களுக்கு முன் காணாமல் போன ஒரு இளம்பெண்ணின் புகைப்படத்துடன் ஒத்துப்போக, சோதனை செய்து பார்க்கையின் அது அந்தப் பெண்ணின் மண்டை ஓடுதான் என்பதை போலீஸ் உறுதிப்படுத்துகிறது. பெண்டர் உருவாக்கிய களி மண் சிலையும், காணாமல் போன பெண்ணின் புகைப்படமும் இதோ.





சரி இப்பொழுது நம்முடைய சம்பவத்திற்கு வருவோம். அமெரிக்காவின் நியூஜெர்சி மாஹானத்தில் ஜான் லிஸ்ட் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்தார். ஜான் லிஸ்டிற்கு ஒரு மகள், இரண்டு மகன்கள். தனது தாய், மனைவி, குழந்தைகளுடன் ஜான் லிஸ்ட் ஒரு மிகப்பெரிய பங்களாவில் வசித்து வந்தார். ஜான் லிஸ்ட் வங்கி கணக்காளராக பணிபுரிய, அவரின் குழந்தைகள் அதே பகுதியில் பள்ளிப் படிப்பை தொடர்ந்து வர லிஸ்ட் குடும்பம் ஓரளவிற்கு ஆடம்பர வாழ்க்கையைத்தான் வாழ்ந்து வந்தனர்.

1971ம் வருடம், சில நாட்கள் ஜான் லிஸ்ட் பங்களாவில் நடமாட்டம் ஏதுமில்லாமல் இருக்க, அவர்கள் எதோ ஒரு உறவினரைப் பார்க்கச் சென்றிருப்பதாக செய்தி பரவியிருந்தது. நாட்கள் கடந்தன. ஒருமாதமாகியும் லிஸ்ட் குடும்பம் திரும்பியதாகத் தெரியவில்லை. அதுமட்டுமல்லாமல் எதோ அழுகிய வாடை அடிப்பதாகவும் அக்கம் பக்கத்தினர் புகார் தெரிவிக்க  காவல்துறை ஜான் லிஸ்ட் வீட்டிற்குள் சென்று பார்க்க முடிவெடுத்தது.

வீட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தவர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. ஜான் லிஸ்டின் மனைவி, மகள், இரண்டு மகன் ஆகிய நால்வரும் தலையில் சுடப்பட்டு கொல்லப்பட்டிருந்தனர். அதுமட்டுமல்லாமல் நால்வரது சடலமும் ஒருவர் பக்கத்தில் ஒருவராக அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. சோதனையின் போது வீட்டின் வெவ்வேறு இடங்களி அவர்கள் சுடப்பட்டு அங்கிருந்து இழுத்து வரப்பட்டு இங்கு போடப்பட்டிருப்பதாக ரத்தத் சுவடுகள் கூறின.

போலீஸ் வீடு முழுவதையும் அலசியது. மூன்றாவது மாடிக்கு சென்ற போது அவர்களுக்கு  இன்னுமொரு அதிர்ச்சி. ஜான் லிஸ்டின் வயதான தாயும் அதே போல தலையில் சுடப்பட்டு இறந்து கிடந்தார். அனைவரும் கொல்லப்பட்டு ஒரு மாதத்திற்கு மேல் இருக்கும் என்பது சடலங்களின் சிதைவிலிருந்து தெரிந்தது.

மேலும் வீட்டைச் சோதனை போடும்போது கிடைத்தது அந்தக் கடிதம். ஜான் லிஸ்ட் அவர் கைப்பட எழுதிய கடிதம். “தனக்கு வேலை போய் விட்டதாகவும், செல்வச் செழிப்பிலிருந்த குடும்பம் இனி வறுமைக்கு தள்ளப்படும் எனவும், தன்னுடைய குடும்பத்தை தன்னால் இனி சரி வர பார்த்துக்கொள்ள முடியாது எனவும், அதனால் அவர்கள் நிம்மதியாக இருக்க வேண்டும் என்பதால் அவர்களைக் கொன்றேன் என்றும் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

அதுமட்டுமல்லாமல் ஒவ்வொருவரையும் எப்படிக் கொன்றார் என்பதைப் பற்றிய விளக்கத்தையும் அந்தக் கடிதத்தில் ஜான் லிஸ்ட் குறிப்பிட்டிருந்தார். முதலில் மனைவியை சமையலறையில் சுட்டுக்கொன்று விட்டு, மகன் மகளுக்காக காத்திருந்ததாகவும், அவர்கள் பள்ளியிலிருந்து வந்த பின்பு அவர்களையும் சுட்டுக் கொன்றதாகவும், பின்னர் மூன்றாவது மாடிக்குச் சென்று தாயையும் கொன்றதாகவும் எழுதியிருந்தார். மூன்றாவது மாடியிலிருந்து தாயின் சடலத்தை இழுத்து வர முடியவில்லை என்பதால் அதனை அங்கேயே விட்டுவிட்டேன் எனவும், தான் செய்த குற்றத்திற்கு மன்னிப்பே கிடையாது எனவும் அந்தக் கடிதத்தில் ஜான் லிஸ்ட் குறிப்பிட்டிருந்தார்.

இதன் பிறகு டேப் ரெக்கார்டரில் ஒரு பாடலை நல்ல சத்துடன் ஒலிக்க விட்டுவிட்டு ஜான் லிஸ்ட் வீட்டை விட்டு கிளம்பிப் போயிருக்கிறார். ஜான் லிஸ்ட் கடவுள் நம்பிக்கை அதிகம் உள்ளவர். வாரம் தவறாமல் அருகிலிருக்கும் தேவாலயத்திற்கு குடும்பத்துடன் செல்பவர்.

காவல்துறை ஜான் லிஸ்டை தேட ஆரம்பித்தது. ஆனால் அவர் கிடைத்த பாடில்லை. சில நாட்கள் கழித்து லிஸ்டின் காரை ஒரு விமான நிலையத்திற்கு அருகில் கண்டுபிடித்தனர். ஆனால் ஜான் லிஸ்ட் எந்த ஒரு விமானத்திலும் சென்றதாக தகவல் எதுவும் இல்லை. போலீஸ் தேடுதலை ஆரம்பிப்பதற்கு ஒருமாதத்திற்கு முன்னர், யாருக்கும் எந்த சந்தேகமும் இல்லாத சமயத்திலேயே ஜான் லிஸ்ட் வெளிக்கிளம்பியிருந்ததால் ஒரு மாதத்திற்குப் பிறகு அவரைத் தேடுவதில் போலீஸிற்கு மிகுந்த சிரமமாக இருந்தது. 

நாட்கள் கடந்தன. மாதங்கள் கடந்தன. ஜான் லிஸ்ட் தொடர்பான எந்த ஒரு தகவலும் போலீஸிற்குக் கிடைக்கவில்லை. குடும்பத்தை கொன்றுவிட்டு அதே விரக்தியில் தானும் தற்கொலை செய்துகொண்டிருப்பார் என்று போலீஸ் தரப்பில் ஒரு கருத்து நிலவியது. ஆனால் அதனை உறுதிப்படுத்த எந்த ஒரு சடலமும் இதுவரை கிடைக்கவில்ல.

மாதங்கள் வருடங்கள் ஆகியது. இருந்தாலும் போலீஸ் வருடா வரும் செய்தித்தாளில் ஜான் லிஸ்டைப் பற்றி விளம்பரம் கொடுப்பது, தேடப்படுபவர்கள் பட்டியலில் அவரை சேர்ப்பது என காவல்துறை ஜான் லிஸ்ட் வழக்கை உயிர்ப்புடன் வைத்திருந்தது.

பதினெட்டு வருடங்கள் உருண்டோடியது. ஜான் லிஸ்ட் வழக்கு இன்னுமும் விடை தெரியாத கேள்வியாகத்தான் இருந்தது. அப்பொழுது அமெரிக்காவில்  “America’s Most Wanted” என்கிற தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது. அந்த நிகழ்ச்சியில் தேடப்படும் குற்றவாளிகளைப் பற்றிய செய்தித் தொகுப்பையும், அவர்களது புகைப்படத்தையும் வெளியிடுவார்கள். நிகழ்ச்சியைப் பார்க்கும் மக்கள் அவர்களுக்கு எதாவது துப்பு கிடைக்கும் பட்சத்தில் அதை காவல்துறைக்கு தெரிவிக்கலாம். FBI நிறைய குற்றவாளிகளை இந்த நிகழ்ச்சியைப் பயன்படுத்தி பிடித்திருந்தனர். இறுதியாக ஜான் லிஸ்டைப் பற்றியும் இந்த நிகழ்ச்சியில் வெளியிடலாம் என்று முடிவெடுத்தனர்.

ஆனால் அந்த நிகழ்ச்சியில் வெளியிட வேண்டுமானால் ஜான் லிஸ்டின் சமீபத்தைய புகைப்படம் வேண்டும். ஆனால் காவல்துறையிடம் இருப்பதோ 18 வருட பழைய புகைப்படம். அப்பொழுதுதான் காவல்துறை ஃப்ராங்க் பெண்டரை அனுக முடிவெடுக்கிறது.

ஆனால் தற்பொழுது ஃப்ராங் பெண்டருக்கான வேலை சற்று கடினம். ஒருவரின் புகைப்படத்தை மட்டும் வைத்து அவர் பதினெட்டு வருடம் கழித்து எப்படி இருப்பார் என்பதை கொண்டு வரவேண்டும். தற்பொழுது ஃப்ராங்க் பெண்டருக்கு அவரிடமிருக்கும் அட்டவணை மட்டும் போதவில்லை. இன்னும் நிறைய தகவல்கள் தேவைப்படுகிறது. ஜான் லிஸ்ட் தொடர்பான அனைத்து விபரங்களையும் படிக்கிறார். அவரின் உறவினர்களுடன் விவாதிக்கிறார். ஜான் லிஸ்ட் எப்படிப்பட்டவர், அவரின் குணம் என்ன, அவர் தன்னை மற்றவர்கள் முன்னால் எப்படி வெளிப்படுத்திக்கொள்வார் என பல தகவலகளை திரட்டுகிறார்.

ஜான் லிஸ்டின் அப்பா, தாத்தாவின் புகைப்படங்களைப் அடிப்படையாக வைத்து ஜான் லிஸ்டிற்கு எந்த அளவு முடி , எந்த பேட்டர்னில் கொட்டி இருக்கும், ஜான் லிஸ்டின் வலது காதுக்கு கீழே இருந்த அறுவை சிகிச்சை தழும்பு எப்படி இருக்கும் என்கிற தகவல்களையெல்லாம் சேகரித்து ஜான் லிஸ்டின் 18 வருடத்திற்கு பிறகான தோற்றத்தை உருவாக்குகிறார் பெண்டர்.



அடுத்து பெண்டருக்கு இன்னொரு சவால். ஜான் லிஸ்ட் கண்ணாடி அணிபவர். அவர் தற்பொழுது என்ன மாதிரியான ஃப்ரேம் கொண்ட கண்ணாடி அணிந்திருப்பார் என்பதை நிறைய காரணிகளைக் கொண்டு ஆய்வு செய்கிறார் பெண்டர். இறுதியாக தன்னுடைய கடந்த கால கறுப்புப் பக்கங்களை மறைக்க தடிமனான ஃப்ரேம் கொண்ட  கண்ணாடியைத்தான் ஜான் லிஸ்ட் அணிந்திருக்க வேண்டும் என்று முடிவு செய்து ஒரு கண்ணாடியத் தெரிவு செய்கிறார். பதினெட்டு வருடம் வயதான ஜான் லிஸ்ட் ரெடி.



America’s Most Wanted நிகழ்ச்சியில் அஞ்சு கொலை ஆறுமுகமாக ஜான் லிஸ்ட்டைப் பற்றிய செய்தித் தொகுப்பு ஒளிபரப்பாகிறது. இறுதியில் பெண்டர் உருவாக்கிய ஜான் லிஸ்டின் உருவமும் ஒளிபரப்பப் படுகிறது. காவல்துறையின் இத்தனை முயற்சியும், கடின உழைப்பும் வீண் போகவில்லை.  டென்வர் நகரில் நிகழ்ச்சியை பார்த்த ஒரு குடும்பம் ஜான் லிஸ்டின் முகத்தைப்  பார்த்து அவர்களுக்கு தெரிந்த ஒருவரைப் போல இருப்பதாக நினைக்கிறார்கள். உடனடியாக காவல்துறையைத் தொடர்புகொண்டு அது சில மாதங்களுக்கு முன்னர் தங்களுடைய அண்டை வீட்டில் வசித்த பாப் க்ளார்க் என தெரிவிக்கிறார்கள். நிகழ்ச்சியில் காட்டப்பட்ட உருவத்தின் கண்ணாடியும், காதுக்கு கீழே இருந்த தழும்புமே தங்களை அவ்வாறு நினைக்க வைத்தது எனவும் கூறுகின்றனர்.

காவல் துறை விசாரணையில் பாப் க்ளார்க் நியூ விர்ஜினியாவிற்கு இடம் பெயர்ந்து விட்டதாகத் தெரிகிறது. நியூ விர்ஜினியாவில் பாப் க்ளார்க்கை தேடிச் சென்று , கண்டும் பிடித்துவிட்டனர். அவரின் “நீங்கள்தான் பாப் க்ளார்கா ?” என்றிருக்கிறார்கள் . அவர் ஆம் என்றிருக்கிறார். நீங்கள் தானே ஜான் லிஸ்ட் எனக் கேட்டிருக்கிறார்கள். அவர் இல்லை என்றிருக்கிறார்.

அவரை அலேக்காகத் தூக்கி காவல் நிலையத்திற்கு கொண்டுவந்திருக்கிறார்கள். ஜான் லிஸ்டின் கைரேகையை பாப் க்ளார்க்கின் கைரேகையுடன் ஒப்பிட அது 100% ஒத்துப்போனது. லிஸ்ட் சிறையில் தள்ளப்பட்டார். இதில் ஆச்சர்யப்படக்கூடிய ஒன்று என்னவென்றால் ஜான் பெண்டர் என்ன மாதிரியான கண்ணாடியைத் தெரிவு செய்தாரோ அதே மாதிரியான ஃப்ரேம் கொண்ட கண்ணாடியைத்தான் ஜான் லிஸ்ட் அணிந்திருக்கிறார்.

நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கையில் ஃப்ராங்க் பெண்டர் உருவாக்கிய ஜான் லிஸ்ட் உருவத்தையும், கைது செய்யப்பட்ட ஜான் லிஸ்ட் புகைப்படத்தையும் அருகருகே போட்டு முதல் பக்கத்தில் ஃப்ராங்க் பெண்டரைப் பாராட்டி செய்தி வெளியிட்டிருந்தது.




ஜான் லிஸ்ட் வேறு பெண்ணை திருமணம் செய்து கொண்டு அமைதியான வாழ்க்கையைத்தான் மேற்கொண்டிருக்கிறார். இரண்டாவது திருமணத்தில் அவருக்கு குழந்தைகள் எதுவும் இல்லை. அவரின் இரண்டாவது மனைவியால் அவர்தான் ஐந்து கொலைகளைச் செய்த குற்றவாளி என்பதை நம்பவே முடியவில்லை

1989, வழக்கு விசாரனையில் ஜான் லிஸ்ட் 5 கொலைகளை செய்த குற்றவாளி என்பதை உறுதிப்படுத்தி, அவரை ஆயுள் முழுவதும் சிறையில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

மற்றுமொரு சம்பவத்துடன் அடுத்த பதிவில் சந்திப்போம்.


LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...