Saturday, December 22, 2018

சிலுக்குவார்பட்டி சிங்கம் - MUST WATCH!!!


Share/Bookmark

சில மாதங்களுக்கு முன்னர் தமிழ் சினிமாவில் நிலவி வரும் நகைச்சுவை வறட்சி பற்றிய ஒரு பதிவு எழுதியிருந்தேன்.  (தமிழ் சினிமாவில் வறண்டு போன நகைச்சுவை) வடிவேலுவின் ஓய்வும், சந்தானத்தின் கதாநாயகன் ஆசையும் இதற்கு முண்ணனிக் காரணங்களாக இருந்து வருகிறது. அதுமட்டுமில்லாமல் இன்றைய இளம் இயக்குனர்கள் நமக்கு சற்றும் ஒட்டாத மேற்கத்திய ப்ளாக் காமெடி வகைகளை வலுக்கட்டாயமாக நமக்குள் திணிக்க முயல்வதும் இந்த நகைச்சுவை வறட்சிக்கு மிக முக்கியமானதொரு காரணம். கடந்த 5 ஆறு வருடங்களில் தமிழ் சினிமாவில் வெளிவந்த முழு நீள நகைச்சுவைப் படங்களை விரல் விட்டு எண்ணினால் நிறைய விரல்கள் மீதமிருக்கும். அப்படிப்பட்ட சூழலில் தமிழ்சினிமாவில் நகைச்சுவைப் படங்கள் இன்னும் சாகவில்லை என்பதை நமக்கு நினைவூட்ட வெளிவந்திருக்கிறது இந்த சிலுக்குவார்பட்டி சிங்கம்.

வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் பெரும்பாலானோர் பார்த்திருப்பீர்கள்…”அன்னிக்கு காலையில் ஆறு மணியிருக்கும்” காமெடியை முதல் முறை பார்த்த பொழுது கண்ணில் நீர் வர சிரித்தேன். கதையைப் பற்றியெல்லாம் கொஞ்சமும் கவலைப்படாமல் முற்றிலும் நகைச்சுவைக்காட்சிகளால் நிரம்பி வழிந்த படம். ரசிகர்களை வயிறுகுலுங்க சிரிக்க வைத்த படம்.  சூரி, ரோபோ ஷங்கர்களை முறையாக உபயோகித்த படமும் கூட. அதற்கு கதை திரைக்கதை எழுதிய செல்லா அய்யாவு இயக்கியிருக்கும் முதல் படம் இந்த சிலுக்குவார்பட்டி சிங்கம். அந்தப் படத்தைக் காட்டிலும் இரண்டு  மடங்கு அதிகமாக சிரிக்க வைத்திருக்கிறார்.

சிலுக்குவார் பட்டியில் கான்ஸ்டபிளாக, உயர் அதிகாரிகளுக்கு டீ, டிஃபன் வாங்கிக் கொடுக்குத்துக்கொண்டு எதைப்பற்றியும் கவலைப்படாமல் வாழ்க்கையை மிக ஜாலியாக வாழ்ந்து வரும் கதாநாயகன் ஒரு மிகப்பெரிய ரவுடியிடம் எதிர்பாராத விதமாக மாட்டிக்கொள்ளும்போது நடக்கும் காமெடி கலாட்டாதான் இந்த சிலுக்குவார்பட்டி சிங்கம்.

முதலில் படத்தின் casting. யோகிபாபு, ஆனந்தராஜ், சிங்கமுத்து, மன்சூர் அலிகான். கருணாகரன் லொல்லுசபா மனோகர் இவர்களை ட்ரெயிலரைப் பார்க்கும்பொழுதே கண்டிப்பாகப் படம் பார்க்கவேண்டும் என்கிற ஆர்வம் தொற்றிகொள்கிறது. அதேபோல ஒவ்வொருவரையும் எவ்வளவு கச்சிதமாக உபயோகிக்க முடியுமோ அப்படி உபயோகித்திருக்கிறார்.

சிங்கமுத்துவின் சிறந்த நகைச்சுவை என லிஸ்ட் எடுத்தால் கண்டிப்பாக இந்தப் படம் முதல் ஐந்து இடங்களுக்குள் இருக்கும். Pre-Interval ஒரு இருபது நிமிடம் அதகளம் செய்திருக்கிறார். ஆட்டோ சந்திரனாக வரும் லோக்கல் ரவுடி ஆனந்தராஜ்… படத்தில் விஷ்ணுவின் இண்ட்ரோவுக்கு கூட யாரும் கத்தவில்லை. ஆனால் ஆனந்தராஜ் இண்ட்ரோவிற்கு விசில் பறக்கிறது. வில்லனாக பல வருடங்கள் நடித்தும் கிடைக்காத விசில் கைதட்டலெல்லாம் காமெடியனான பிறகு கிடைக்கிறது. ஆட்டோவில் கும்பலாக வந்து லோக்கல் கடைகளில் மாமூல் வசூல் செய்துவரும் ஆனந்த ராஜின்  அந்த கேரக்டரும் கெட்டப்பும் எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கும். படம் முடியும் போது அந்த சஸ்பென்ஸை அவிழ்க்கும்போது செம்ம ஃபீல்.

யோகிபாபு இவர்களுக்கெல்லாம் மேல். அநாயஸ்யாமான வசன உச்சரிப்பிலும் counter களிலும் பிரித்து மேய்கிறார். கவுண்டரும் வடிவேலும் கலந்த சரியான கலவை யோகிபாபு. அடுத்த ஒருசில வருடங்களுக்கு தமிழ் சினிமாவின் நகைச்சுவைப் படங்கள் இவரை நம்பித்தான் இருக்கப்போகிறது. அதிலும் அவர் அணிந்து வரும் டீஷர்ட்டில் உள்ள வாசங்கள் தாறுமாறு “அக்கா மகளே இந்து” “ஏக் காவ்மே ஏக் கிசாத் ரஹதாத்தா” “ஃபீல்டிங்கா பவுலிங்கா” “தூக்கி அடிச்சிருவேன் பாத்துக்க” என்று இன்னும் ஏராளம்.

தமிழ் சினிமாவில் தற்போதுள்ள இயக்குனர்களில் நகைச்சுவைப் படங்களுக்கென பெயர் போனவர் சுந்தர்.சி. அவர் படங்களில் அனைத்தையும் மறந்து சிரிக்கக் காரணம் என்ன என்று பார்த்தால், அவர் படங்களில் காட்சிகள் பார்வையாளர்கள் மேல் எந்த ஒரு அழுத்தத்தையும் ஏற்படுத்தாது.

அழுத்தம் என நான் கூறுவது சூரியன் திரைப்படத்தில் மனோரமாவை ராஜன்.P.தேவ் நீரில் அழுத்திக் கொல்லும்போது நமக்குள் ஒரு பயமும் பதற்றமும் இருக்குமல்லவா. அதுதான். சுந்தர்.சி படங்களில் அது சுத்தமாக இருக்காது. வில்லன்கள் இருப்பார்கள்.. ஆனால் அவர்களைப் பார்த்து ரசிகர்களுக்கு பயம் வராது. ஹீரோவுக்கு ப்ரச்ச்னைகள் வரும். ஆனால் அவை மிக எளிதாக சரி செய்யக்கூடியவையாக இருக்கும். காதலிக்காமல் முரண்டு பிடிக்கும் கதாநாயகி இருப்பார். அவளைக் காதலிக்க வைப்பதிலும் நகைச்சுவைதான் விரவியிருக்குமே தவிற பார்வையாளர்களுக்கு அழுத்தம் தருவது போல் எதுவும் இருக்காது. ஒரு நகைச்சுவைப் படத்திற்கான முதல் தகுதி இதுதான். பார்வையாளர்களை comfortable லாக வைத்து  ஜாலியான ஒரு மனநிலையை உருவாக்குவது. அந்த பாணியை அப்படியே பிடித்திருக்கிறார் இயக்குனர் செல்லா அய்யாவு.  

பெரும்பாலான காட்சிகளும் , கதை ஓட்டமும் அப்படியே சுந்தர்.சியின் ஆரம்பகால படங்களைப் பார்க்கும் உணர்வைத் தருகிறது. Pre-Interval ஒரு பாரில் ஆரம்பித்து அதை தொடர்ந்து நடக்கும் ஒரு இருபது நிமிடமும், இரண்டாவது பாதியில் ஒரு கல்யாண மண்டபத்தில் நடக்கும் ஒரு 10 நிமிட காட்சியும் அதகளம். கல்யாண மண்டப காட்சி இன்னும் ஒரு பத்து நிமிடம் கூட சேர்ந்து எடுத்திருக்கலாம்.  படத்தின் அத்தனை நகைச்சுவை நடிகர்களையும் ஒரே காட்சியில் கொண்டு வந்து பார்வையாளர்களை வயிறு வலிக்க சிரிக்க வைத்திருக்கிறார்கள்.

விஷ்ணு விஷால்.. இப்பொழுதுதான் மிக சீரியஸான ஒரு போலீஸாக நடித்து ராட்சசன் என்கிற சூப்பர் ஹிட் படத்தைக் கொடுத்தார். அந்த கதாப்பாத்திரத்திற்கு நேர் மாறாக மிக ஜாலியான ஒரு போலீஸாக வலம் வருகிறார். படத்திற்கு படம் ஆள் செம ஸ்மார்ட்டாகிக்கொண்டே செல்கிறார். ரெஜினா கஸாண்ட்ரா இன்னும் அழகு. அதிலும் அவரது காஸ்ட்யூம் செம்ம. இன்னும் ஓரிரு மாதங்களில் “96” திரிசாவின் சுடிதார் போல் ரெஜினாவின் புடவைகளும் ஃபேமஸ் ஆகிவிடும்.

மொத்தம் நான்கு பாடல்கள்.. அதில் இரண்டு montage. தேவையில்லாத இடைச்சொருகல் எதுவும் இல்லாம இருப்பதே மிகப்பெரிய ஆறுதல். Dio rio dia பாடலும், மயக்காத பாடலும் அருமை.  மற்ற இரண்டும் ஓகே ரகம். ஓவியா ஒரு பாடலுக்கும் இரண்டு மூன்று கொசுறு காட்சிகளுக்கும் வருகிறார். பிண்ணனி இசை இன்னும் கொஞ்சம் சிறப்பாக செய்திருக்கலாம்.
.
வசங்கள், காட்சியமைப்பு, கதாப்பாத்திர அமைப்பு என ஒரு தேர்ந்த இயக்குனருக்கான அத்தனை அம்சங்களையும் செல்லா அய்யாவு காட்டியிருக்கிறார்.

மொத்ததில் கலகலப்பு முதல் பாகத்திற்குப் பிறகு ஆரம்பம் முதல் கடைசி வரை வயிறு வலிக்க சிரிக்க வைத்த படம் . கண்டிப்பாக குடும்பத்துடன் தவறாமல் பார்க்க வேண்டிய படம் .  

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...