Showing posts with label திரை விமர்சனம். Show all posts
Showing posts with label திரை விமர்சனம். Show all posts

Monday, June 3, 2019

NGK- நொந்த கோபாலன் குமரன்!!!


Share/Bookmark

ரொம்ப நாளுக்கப்புறம் செல்வா சார் படம். ஹீரோவுல எப்டி சிம்புவோ  அதேமாதிரி டைரக்டர்ல இவுக.. பூஜை போடுவாரு.. போஸ்டர் விடுவாரு.. ஆனா படம் மட்டும் வராது. அதே மாதிரி கமல் படம்லாம் எப்டி 15 வருஷம் கழிச்சி பாத்தா தான் புரியும்னு சொல்லுவாய்ங்களோ அதே மாதிரி செல்வா சார் படம்மெல்லாம் பத்து வருசம் கழிச்சி பாத்தாதான் புரியும்னு அடிச்சி விட ஆரம்பிச்சிட்டாய்ங்க… போன்வாரம்தான் புதுப்பேட்டை நல்ல படம்னு சொல்லிக்கிட்டு இருந்தாய்ங்க… இன்னும் மயக்கம் என்ன, இரண்டாம் உலகம்னு ஏகப்பட்ட படம் லிஸ்டுல வெய்ட்டிங்ல இருக்கு. அநேகமா 2030 ல இந்த 2030 la இந்த NGK ஒரு மிகச்சிறந்த படமாக அமைய நிறையவே வாய்ப்பிருக்கு. சரி வாங்க படம் எப்டி இருக்குன்னு பாப்போம்.

ஒரு கவுன்சிலரோ இல்ல ஒரு அரசியல்வாதியோட அள்ளக்கையோ விரல் நுனியில செய்யிற வேலைய ஒரு சாதாரண மனிதன் செய்யனும்னா எவ்வளவு நேரம் ஆகுது?  So, அரசியல்வாதியாகி ஒரு பவர்ல இருந்தா நாம நினைச்சத மக்களுக்கு செய்யலாம்னு சூர்யாவுக்கு புரிய, அவரும் ஒரு அரசியல்வாதியாக மாறி எப்டி பவருக்கு வர்றாருன்றதுதான் படத்தோட கதை. கேக்குறதுக்கு நல்லாருக்குல்ல. ஆனா சத்தியமா பாக்குறதுக்கு நல்லால..

படத்துல சூர்யா ஒரு இயற்கை விவசாயி. விவசாயம் செய்யிறதுல உள்ள நிம்மதியப் பத்தி ஒரு சீன் பேசுவாறு பாருங்க. “என்னடா வேலை பாக்குறாங்க. காலையில பஞ்ச் அடிச்சிட்டு உள்ள போட்டு சாத்திடுறாங்க. ஒரே சேர தேச்சி தேச்சி உக்காந்துக்கிட்டு மணியடிச்சா சோறப் போட்டு சாயங்காலம் தொறந்து விடுறாங்க. கேக்க ஜெயில் மாதிரியே இருக்குல்ல. ஆனா விசயம் பண்றப்ப மண்ணு வாசனை, கொழம்பு வாசனை, இயற்கை காத்துன்னு நிம்மதியா இருக்குன்னாரு. உடனே வீறு கொண்டு எழுந்து நம்மளும் வேலைய விட்டுட்டு விவசாயம் பன்னப் போயிருவோம்னு எந்திரிச்சிட்டேன். அப்புறம்தான் யோசிச்சி பாத்தேன். நமக்குதான் ஊர்ல விவசாயம் பன்றதுக்கு இடமே இல்லையே..  அப்புறம் எங்க போறது.. சரி மொதல்ல இந்த வேலையப் பாத்து ஒரு இடத்த வாங்குவோம். அப்புறம் போய் விவசாயத்த பாப்போம்னு வேலைய இப்ப கண்டினியூ பன்னலாம்னு இருக்கேன்.

எதுக்கு அண்ணனும் தம்பியும் மாத்தி மாத்தி விவசாயிகளைக் காக்க புடிச்சிட்டு இருக்காங்கன்னு தெரில. இதே மாதிரி ஒரு அபத்தமான காட்சி கடைக்குட்டி சிங்கம் படத்துலயும் வந்துச்சி. அதுக்கு நம்ம என்ன ரிப்ளை குடுத்தோம்னு கொஞ்சம் பாத்துட்டு வரலாம்.



சமீபத்துல LKG ன்னு ஒரு படம் வந்துச்சி. எத்தனை பேர் பாத்துருப்பீங்கன்னு தெரில.. பாக்காதவங்க பாருங்க. கண்டிப்பா ஒரு தடவ பாக்கலாம். அந்தப் படத்தோட கேவலமான வெர்ஷந்தான் இந்த NGK. உண்மையிலயே அந்தப் படத்தோட கதையும் இந்தப் படத்தோட கதையும் கிட்டத்தட்ட ஒண்ணுதான். ஆனா அந்தக் கதையிலயும் திரைக்கதையிலயும் இருந்த தெளிவு சத்தியமா இந்தப் படத்துல கொஞ்சம் கூட இல்ல.

இந்த NGK படத்தோட ட்ரெயிலர் வந்தப்போ இத அடுத்த புதுப்பேட்டைங்குற அளவுக்கு பில்ட் அப் குடுத்துக்கிட்டு இருந்தோம். ஆனா படம் பாத்தப்புறம் புதுப்பேட்டைல ஒரு சீன் குடுத்த தாக்கத்த கூட இந்த முழுப்படமும் தரலன்னு தெரியிது.

"என் பேரு நந்த கோபலன் குமரன். என்ன எல்லாரும் NGK ன்னு கூப்டுவாங்க…"ன்றாரு. நானும் படம் முழுக்க தேடிட்டேன்.. யாராச்சும் NGK ன்னு கூப்டுவாங்களான்னு.. ஒரு பய கூப்டல.. நமக்கு நாமே மாதிரி இவரே சொல்லிக்கிட்டு திரியிறாப்ள.

சாய் பல்லவி, ரகுல் ப்ரீட் சிங்னு ரெண்டு ஹீரோயின். போலீஸ்ல மோப்ப நாய்க்கு எதுவும் உடம்பு சரியில்லன்னா சாய் பல்லவிய அழைச்சிட்டு போகலாம். நல்லா மோப்பம் புடிக்கிது. ரகுல் ப்ரீட் சிங் LKG ல ப்ரியா ஆனந்த் பன்ன அதே ரோல். பல ஸ்டேட்டுல ஆட்சிய கவுத்து விட்டவங்க. பல ஸ்டேட்டுல ஆட்சிய புடிச்சி குடுத்தவங்க. என்னடா எதோ பைப்புல தண்ணி புடிக்கிற மாதிரி சொல்றீங்க.

சூர்யாவோட நோக்கம் என்ன அவரு எத நோக்கி போறாருன்றதெல்லாம் யாருக்குமே தெரியாத புதிர். தடி மாடு மாதிரி உடம்ப வச்சிக்கிட்டு இளவரசுகிட்ட போய் கக்கூஸ் கழுவி, கூல கும்புடு போட்டு வேலை பாக்குற மாதிரியெல்லாம் காட்சி எடுத்துருக்கது பாக்கவே ரொம்ப அபத்தமா இருக்கு.

படத்துல நிறைய முன்ணனி நட்சத்திரங்கள் நடிச்சிருக்காங்க. ஆனா அத்தனையும் சும்மா டம்மியா வந்துட்டுப்போறாங்க. வேல ராமமூர்த்தியெல்லாம் நல்ல screen presence உள்ளவரு. அவருக்கு படத்துல அள்ளக்கைக்கு ஒரு கடைசி அள்ளக்கை இருந்தா என்ன முக்கியத்துவம் இருக்குமோ அதுகூட இல்லை.  தலைவாசல் விஜய்க்கும் அதே கதி தான்.
வழக்கமா எல்லா படத்துலயும் comeback குடுக்குற யுவனோட இசையில ஒரு பாட்டு மட்டும் நல்லாருக்கு. மத்தபடி ரொம்ப ஆவரேஜ் தான்.

முதல் பாதிகூட எதோ பரவால்லாம ஓடுது. ரெண்டாவது பாதியெல்லாம் ச்சை… எந்த வகையில அதெல்லாம் சேக்குறதுன்னே தெரியல. படத்துல சூர்யா மட்டும் பாக்க ஆளு செமையா இருக்காரு. மத்தபடி உருப்படியா எதும் இல்ல.

மொத்தத்துல மேல சொன்ன மாதிரி 2030 வாக்குல இந்த NGK ஒரு நல்ல படமாக வர்றதுக்கு வாய்ப்பிருக்கே தவற இப்பதைக்கு இத பாக்குறது வேஸ்ட்.

Friday, January 11, 2019

பேட்ட – ரஜினி படம்..!! ரஜினி மட்டுமே படம்!!!


Share/Bookmark

”மாறாததெல்லாம் மண்ணோடு.. மாறுவதெல்லாம் உயிரோடு” கோச்சடையானில் வரும் ஒரு பாடல் வரி. காலத்துக்கு ஏற்ப மாறாத விஷயங்கள் விரைவில் காணாமல் போய்விடும். ஒருவர் ஒரு துறையில் நாற்பது ஆண்டுகள் அசைக்கமுடியாத ஒரு சக்தியாக திகழ்கிறார் என்றால் ஒவ்வொரு காலகட்டத்திற்கும் ஏற்ப மாற்றங்களை உள்வாங்கிக்கொண்டு அதற்காக தன்னை தயார்படுத்திக் கொண்டதுதான் முக்கியக் காரணம். அதுபோக ஒரு நடிகர் எந்த வித குறுக்கீடும் இல்லாமல் தன்னை முழுமையாக ஒரு இயக்குனரிடம் ஒப்படைக்கும்பொழுதே அந்த நடிகனின் முழுத் திறமையும் வெளிப்படுகிறது. இதைத் அன்றிலிருண்டு இன்றுவரை கடைபிடிப்பவர் திரு.ரஜினிகாந்த்.

அதே போல ஒரு மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கும் ஒரு நடிகரை இயக்கும் இயக்குனர், அவருடைய ரசிகனின் பார்வையிலிருந்து அவரை ரசித்து இயக்கும்போதே மிகப்பெரிய ஆச்சர்யங்கள் நிகழ்கிறது. “நான் ரஜினியின் மிகப்பெரிய ரசிகன். நான் அவரை எப்படியெல்லாம் பாக்கனும்னு ஆசைப்பட்டேனோ அதை மனசுல வச்சி உருவாக்கியிருக்கது தான் இந்த சிவாஜி திரைப்படம்” இது சிவாஜி திரைப்பட உருவாக்கத்தின் போது ஷங்கர் சொன்னது. அவர் சொன்னது போலவே பட்த்தின் அவுட் புட்டும். ஒவ்வொரு ரசிகனும் ரஜினியை எப்படி பார்க்க நினைத்தானோ அப்படி இருந்தது திரைப்படம்.

அதே மாதிரியான ஒரு அற்புதத்தைதான் மீண்டும் கார்த்திக் சுப்பராஜ் நிகழ்த்தியிருக்கிறார். “அட.. இப்டி தலைவரப் பாக்காத்தானே நாங்கல்லாம் ஆசப்பட்டோம்” என படம் பார்த்துவிட்டு இப்பொழுது கூறாதவர்கள் இல்லை. நாடி நரம்பு ரத்தம் சதை புத்தி அத்தனையிலயும் ரஜினிவெறி ஊறிப்போன ஒரு ரசிகனுக்கு அவர் படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தால் அதன் வெளிப்பாடு இப்படித்தான் இருக்கும்.

பேட்ட ஆடியோ லாஞ்ச் ஃபங்க்‌ஷன்ல கார்த்திக் சுப்பராஜ் பேசும்போது “நாங்க தலைவர எந்தெந்த ஆங்கிள்ல காமிக்கனும்.. அவரு எப்டி வரனும்.. எப்டி நிக்கனும்னுலாம் உக்கந்து பேசிக்கிட்டே இருப்போம்” என்றார். உண்மையில் அது ஒவ்வொரு ஃப்ரேமிலும் அப்பட்டமாகத் தெரிகிறது. பொதுவாக ஒரு படத்தின் காட்சியில் நடிகர் ஒண்றிரண்டு ஃப்ரேம்களில் அழகாகத் தெரிவார். ஆனால் பேட்டயில் ஒவ்வொரு ப்ரேமிலுமே தலைவர் அவ்வளவு அழகாக  இருக்கிறார். 

அதற்கேற்றார்போல் கதை நடக்கும் இடம் மலைப்பிரதேசம். அந்த லொக்கேஷனுக்கும் அவருடைய காஸ்ட்யூமிற்கும் பார்த்துக்கொண்டே இருக்கலாம் போலிருக்கிறது. அதுவும் ஹாஸ்டலுக்குள் வந்து மாணவர்களை ஒழுங்கு படுத்தும் ஒன்றிரண்டு காட்சிகளையும் , இண்டர்வல் ப்ளாக்க்கில் ”உள்ளே போங்கடா” என்று அரட்டுவதையும் சிங்கத்தின் கர்ஜனையுடன் ஒப்பிட்டால் அது சற்று குறைவாகத்தான் இருக்கும்.  அவ்வப்போது தலைவர் வைத்திருக்கும் ரேடியோவில் ஒலிக்கும் பழைய பாடல்கள் காட்சிகளை இன்னும் அழகாக்குகின்றன. ஸ்டண்ட் அதகளம். அதுவும் இண்டர்வல் ப்ளாக்கிற்கு முந்தைய பில்ட் அப் சீன் வெறித்தனம்.

பேட்ட ஒரு தனி திரைப்படமாக இல்லாமல் ஒரு ரஜினி ரசிகனின் ஒட்டுமொத்த ரஜினி சார்ந்த அனுபவங்களையும், இன்றைய ட்ரெண்டில் மூண்று மணிநேரத்தில் ரீவைண்ட் செய்து பார்க்கும் ஒரு அனுபவமாகத்தான் இருக்கிறது. மணல் மாஃபியா, RSS, டம்மி பீஸ் சிங்காரம் என படம் முழுவதும் நிஜத்தில் பார்க்கும் பல கதாப்பாத்திரங்களை உலவ விட்டு ஊமை குத்தாக குத்தி விட்டிருக்கிறார்.

ஒரு ரஜினி ரசிகனாகவும் ஒரு சினிமா ரசிகனாகவும் படத்தில் எனக்கு சில வருத்தங்கள் உண்டு. வழக்கமாக தலைவர் படங்களில் அந்த படத்திற்கான ட்ரேட் மார்ட் ரஜினி ஸ்டைல் என்று ஒண்று இருக்கும். பாட்ஷா “ஒருதடவ சொன்னா” , படையப்பா “சல்யூட்” , பாபா முத்திரை, சிவாஜியின் கூல் வசனம், எந்திரனில் டாட்.. அதுபோல பேட்டைக்கென்ற ஒரு ட்ரேட் மார்க் மூவ்மெண்டோ, பஞ்ச்சோ இருந்திருக்கலாம்.

அதேபோல ஹீரோ எந்த அளவிற்கு கெத்தானவர் என்பது வில்லன் எந்த அளவிற்கு பவர்ஃபுல்லானவர் என்பதைப் பொறுத்தே அமையும். அந்த வகையில் வில்லனின் கதாப்பாத்திரம் இன்னும் சிறப்பாக அமைக்கப்பட்டிருக்கலாம். நவாஸுதீன் கடைசி வரை கதாநாயகனுக்கு பயந்த ஒரு வில்லனாகத்தான் காண்பிக்கப்படுகிறார். அதுமட்டுமல்லாமல் அவர் எந்த அளவிற்கு பவர்ஃபுல்லானவர், அவர் செல்வாக்கு எப்படி என்பதெல்லாம் காண்பிக்கப்படவில்லை. விஜய் சேதுபதியை இன்னும் சிறப்பான வில்லனாக உபயோகித்திருக்கலாம்.

படம் வெளியாவதற்கு முன்பு அஜித் ரசிகர்களின் பெரும்பாலான பதிவுகள் “பேட்டயில் ரஜினியுடன் நிறைய கதாப்பாத்திரங்கள் நடித்திருக்கிறார்கள். தல அவர்களை ஒற்றை ஆளாக எதிர்க்கிறார்” என்பது போல இருந்தது. ஆனால் அதை அப்படியே மாற்றிக் கூற வேண்டும். படத்தில் அத்தனை பேர் இருந்தாலும் தலைவரின் கதாப்பாத்திரத்திற்கு அடுத்து படத்தில் அடுத்த வெய்ட்டான கதாப்பாத்திரம் யார் என்று கேட்டால் நிச்சயம் ஒருவரை குறிப்பிட்டு கூற முடியாது. ஆரம்பம் முதல் கடைசி வரை ரஜினி மட்டுமே கதையில் நிறைந்திருக்கிறார். மற்ற எந்த கதாப்பாத்திரமும் மெருகேற்றப்படவில்லை. சிம்ரன் கொஞ்ச நேரம், திரிசா கொஞ்ச நேரம், மேகா ஆகாஷ் கொஞ்ச நேரம் என பல கதாப்பாத்திரங்கள் கொண்டு வரப்பட்டு அப்படியே அத்துவிடப்படுகின்றன. (தலைப்பே இன்னொரு முறை படிக்கவும்)

அடுத்து இதற்கு முந்தைய பல பதிவுகளில் குறிப்பிட்டது போல, புறாவை மறைய வைப்பது பெரிய விஷயமில்லை. மறைந்த புறாவை திரும்ப கொண்டுவருவதில் தான் அடங்கியிருக்கிறது prestige. மொத்தக் கதையும் பின்னப்பட்டிருப்பது அந்த ப்ளாஷ்பேக்கை சுற்றித்தான். அப்படியிருக்க அந்த ஃப்ளாஷ்பேக் எவ்வளவு அழுத்தமாக அமைக்க முடியுமோ அப்படி அமைக்கப்பட்டிருக்க வேண்டும். பேட்டயின் ஃப்ளாஷ்பேக் இன்னும் சிறப்பாக செய்யப்பட்டிருக்கலாம். ரொம்ப அவசர அவசரமாக ப்ளாஷ்பேக் ஓடி முடிந்ததைப் போல இருந்தது மட்டுமல்லாமல், சசிகுமார், திரிசா கதாப்பாத்திரங்களெல்லாம் மனதில் ஒட்ட மறுக்கின்றன. 

அதே போல பேட்டவேலனின் அடாவடிகளை எதிர்பார்த்து காத்திருந்த நமக்கு சட்டென ஃப்ளாஷ்பேக் முடிந்ததும் ஒரு ஏமாற்றம். ஃப்ளாஷ்பேக் காட்சிகளை இன்னும் கொஞ்சம் இழுத்து பிந்தைய பகுதி ரிவெஞ்ச் காட்சிகளை கொஞ்சம் சுருக்கியிருக்கலாம்.

பின்னணி இசையில் அனிரூத் கலக்கியிருக்கிறார். கடந்த சில படங்களில் இல்லாத அளவுக்கு பாடல்கள் பேட்டயில் அதகளம். ஐந்து பாடல்களையும் முழுவதுமாக உபயோகித்திருக்கலாம். ஆஹா கல்யாணமும், பேட்ட பராக்கும் முழுவதுமாக இல்லாதது வருத்தமளித்தது.

ஒரே ஒரு பாட்ஷா தான். அதை யாராலும் உடைக்க முடியாது. நானே நினைச்சாலும் அந்த மாதிரி படம் எடுக்க முடியாது என தலைவர் முன்பொரு முறை சொல்லியிருந்தார். நூறு சதவிகித உண்மை. ஆனால் பேட்டயில் ஃப்ளாஷ்பேக்கும் வில்லனும் இன்னும் கொஞ்சம் மெருகேற்றப்பட்டிருந்தால் கண்டிப்பாக இதை அடுத்த பாட்ஷா என்றே கூறலாம்.

பேட்டயின் ட்ரெயிலரைப் பார்த்து உற்சாகமான நண்பர் ஒருவர் “நண்பா… நம்ம தலைவரு ஃப்ளாஷ்பேக்குல தலைவர் ரசிகராவே வந்தா எப்டி இருக்கும்.. முரட்டுக்காளை படத்துக்கு தலைவர் முதல் நாள் அளப்பரையா போய் படம் பாக்குற மாதிரி சீன் வச்சா செமையா இருக்கும்ல…”ன்னாரு… மெரண்டுட்டேன். உண்மையிலயே செம மேட்டர்.. அப்படி காட்சி அமைக்கப்பட்டால் உங்களுக்கு ட்ரீட் வைக்கிறேன் நண்பான்னு சொல்லியிருந்தேன். நானும் அப்படி இருக்காதா என எதிர்பார்த்துதான் காத்திருந்தேன். சிறிய ஏமாற்றம்.

”இதான்யா ரஜினி படம்.. அவர வச்சி இப்டித்தான் எடுக்கனும்” என்கிற வாசங்களை படம் பார்த்துவிட்டு வெளியில் வரும்போது கேட்ட முடிகிறது.  அதேபோல படம் முடிந்து வெளியில் வரும் அனைவர் முகத்திலும் பல நாட்களுக்கு முன் தொலைத்த எதோ ஒண்று மீண்டும் கிடைத்துவிட்ட திருப்தியும் மகிழ்ச்சியும் காண முடிகிறது. கண்டிப்பாக சிவாஜிக்குப் பிறகு முழுக்க முழுக்க ரஜினி படமாக வெளிவந்திருக்கும் இந்த பேட்ட அத்தனை பேருக்கும் பிடித்த படமாக இருக்கும்.
  

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...