Sunday, January 28, 2018

நிமிர் - நிமிருதா இல்ல நம்மள நிமுத்துதா??!!


Share/Bookmark
“நான் தீவிர அரசியலில் ஈடுபடுவதற்கான நேரம் வந்துவிட்டது” அப்டின்னு உதயநிதி சொன்னதும் “யய்யா…எங்க வகுத்துல பீர வாத்தைய்யா.. பீர வாத்த.. தயவு செஞ்சி சினிமாவ விட்டுட்டு அரசியலுக்கே போயிரு”ன்னு எல்லாருமா ஒண்ணா சேர்ந்து வழியனுப்பத் தயாரா இருக்கப்போ வந்து நிக்கிது நிமிர்.

“சார் இத்தனை வருஷமா சினிமால இருக்கீங்களே. நீங்க நடிச்ச நல்ல படம் ஒண்ண சொல்லுங்க” அப்டின்னு டக்குன்னு யாராவது கேட்டா உதயநிதிக்கு ஒரு நிமிஷம் தலை சுத்திருக்கும். அப்டித்தான் இருக்கு அவரோட ட்ராக் ரெக்கார்டு. உதயநிதி படங்கள்ல ஓரளவுக்கு நல்ல படம்னு பெரும்பாலவங்க சொல்ற ”மனிதன்” படத்துலயே உதயநிதி சீரியஸா பேசுற பல இடங்கள் சிரிப்பை வரவழைக்கிற மாதிரி தான் இருக்கும். குறிப்பா சொல்லப்போனா அந்தப் பட்த்துக்கு மிகப்பெரிய மைனஸே உதயநிதிதான்.

அப்படிப்பட்ட சூழல்ல ஃபகத் ஃபாஸிலோட மிகப்பெரிய வெற்றிப்படமான மகேஷிண்ட ப்ரதிகாரம் படத்தோட தமிழ் ரீமேக்குல, ”நடிச்சா உதயநிதிதான் நடிக்கனும்”ன்னு இயக்குனர் ப்ரியதர்ஷன் ஒத்தக் கால்ல நின்னதால உதயநிதி இந்தப் படத்துல ஹீரோவாயிருக்காருன்னு சொல்றாங்க. அதுமட்டும் இல்லாம ஃபஹத் ஃபாசில விட உதயநிதி இந்தப் படத்துல நல்லா நடிச்சிருக்காருன்னு படம் ரிலீஸ் ஆகுறதுக்கு முன்னால ப்ரியதர்ஷன் ஒரு போடு போட்டாரு பாருங்க…. “இதெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு?” நம்புனாதான் produce பன்றேன்னு உதயநிதி சொல்லிருக்காரு.. நீங்க எப்டி நம்புறீங்களா இல்லயா?” சரி வாங்க படம் எப்டி இருக்குன்னு பாப்போம்.

ஒரு அழகான கிராமம். அங்க ஃபோட்டோ ஸ்டூடியோ வச்சிருக்க ஒருத்தர்.. அவருடைய அப்பா, அவரோட காதலி, அவரோட எதிரி, அவர் படும் அவமானம்ன்னு இப்படி செல்வம்ங்குற கதாப்பாத்திரத்த சுத்தி நடக்குற சின்னச் சின்ன எதார்த்தமான அழகான விஷயங்கள்தான் இந்த நிமிர்.

படம் பார்க்குற ஆடியன்ஸூக்கு எந்த வித மன அழுத்ததையும் குடுக்காம, ரொம்ப அழகா, சுவாரஸ்யமா எடுக்கப்படுற படங்கள் மிகவும் குறைவு. அப்படிப்பட்ட ஒரு படம்தான் இந்த நிமிர். ஆரம்பத்துலருந்து கடைசி வரை எந்த ஒரு முக சுழிப்பும் இல்லாம முழுமையா படத்தோட ஒண்றி ரசிக்க முடிஞ்சிது. கதை திரைக்கதை, கதாப்பாத்திர அமைப்புகளத் தாண்டி, கதை நடக்குற கிராமமும் அதை வித விதமனா ஷாட்ல ரொம்ப அழகா காமிச்ச கேமாராவும் படத்த ரசிக்க முடியிறதுக்கு மிகப்பெரிய காரணம்.

“பூவுக்கு தாப்பா எதுக்கு.. ஊருக்கு கதவா இருக்கு”ன்னு ஸ்வேதா மோகனோட தேன் சொட்டுற குரலோட ஆரம்பிக்கிற ஒரு அருமையான பாட்டுல கதை நடக்குற கிராமத்தோட அழக காட்டுறாங்க. அதே அழகு படம் முடியிற வரையிலும் தொடருது. ஆனா என்ன ஒண்ணு அன்னக்கிளில ஆடிட்டு ரிட்டயர்டு ஆகியிருந்த ஒரு ஆயாவ கூப்டு வந்த அந்த முதல் பாட்டுக்கு ஆட வச்சதுதான் கொஞ்சம் கடுப்பா இருந்துச்சி.

எந்தப் பாட்டையுமே நா முன்னால கேக்கவே இல்லை. ஆனாலும் படம் பாக்குறப்போ எல்லா பாட்டுமே நல்லா இருந்துச்சி. படத்துல மைனஸ்னு பெருசா எதுவுமே தோணல. க்ளைமாக்ஸ்ல நடக்குற ஒரு சண்டைக் காட்சி முக்கியமான ஒண்ணு. ஆனா அத மழையில நடக்குற மாதிரி படம் பிடிச்சிருக்கது கொஞ்சம் கவனத்த சிதறடிக்கிற மாதிரியும் சுவாரஸ்யத்த குறைக்கிற மாதிரியும் இருந்துச்சி.

மகேந்திரன், பார்வதி நாயர், நமீதா ப்ரமோத்னு எல்லாருமே அவங்கவங்க கதாப்பாத்திரத்த சிறப்பா செஞ்சிருக்காங்க. ”கருத்து கந்தசாமி” சமுத்திரக்கணி எந்தக் கருத்தும் சொல்லாம படத்துல வசனம் எழுதிருக்கதே மிகப்பெரிய ஆறுதல்.  

யாராவது ஒரு ஆள புடிச்சிட்டா அவர உச்சானிக்கொம்புல தூக்கி வக்கிறதும், அவருக்கு நிகர் யாருமே இல்லங்குறதும், புடிக்கலன்னா பட்டுன்னு தூக்கிப்போட்டு மிதிக்கிறதும்தான் நம்ம ஆளுககிட்ட ஒரு கெட்டப் பழக்கம். நம்ம உலக சினிமா ஆர்வலர்களோட கவனம் கொரியன், ஸ்பானிஷ் படங்கள விட்டு இப்ப மலையாள சினிமா மேல விழுந்துருக்கு. அதுலயும் குறிப்பா ஃபஹத் ஃபாசில் மேல. உலகத்துலயே ஃபஹத் ஃபாசிலுகு ஈடு இணையே இல்லங்குற ரேஞ்சுல கூவல்கள்லாம் விழுது. இருக்கட்டும். அதுக்குன்னு எல்லாரும் அதே மாதிரி பன்னனும்னா எங்க போறது?

இப்டித்தான் மோகன்லால சொல்லுவானுங்க… “அவரு கன்னம் கூட நடிக்கும்டா”ன்னு. அவருக்கு கன்னத்துல சதை கொஞ்சம் ஜாஸ்தி.. டக்குன்னு திரும்பும்போது கன்னத்துல உள்ள சதை கொஞ்சம் எக்ஸ்ட்ராவா ஆடும். உடனே நம்மாளுக கண்ணம் நடிக்கிது காது நடிக்கிதுன்னுலாம் கிளப்பி விடுவாங்க.

இவர்கள்லாம் சிறந்த நடிகர்கள் இல்லைன்னு நா சொல்லவே இல்ல. அதுக்காக அவர்கள கம்பேர் பண்ணி, உதயநிதியத் திட்டு திட்டுன்னு திட்டிக்கிட்டு இருக்கானுங்க. இந்தப் உதயநிதி நடிப்புல மிகப்பெரிய முன்னேற்றத்தயெல்லாம் காமிக்கலன்னாலும் இந்தப் படத்த நிச்சயமா அவர் கெடுத்துடல. நா ஒரிஜினல் வெர்ஷன் பார்க்கல. என்னைப் பொறுத்த அளவு   உதயநிதி இந்தப் படத்துக்கு ஓரளவு நல்ல தேர்வாத்தான் தெரியிறாரு.  

.முதல் பத்தில கேட்டமாதிரி இனிமே உதயநிதிகிட்ட “நீங்க நடிச்ச நல்ல படம் எதாவது சொல்லுங்க”ன்னு கேட்டா காலர தூக்கி விட்டுக்கிட்டு ”நிமிர்”ன்னு திமிரா சொல்லலாம். அதே “நீங்க நல்லா நடிச்ச ஒரு படம் சொல்லுங்க”ன்னு யாராவது கேட்டுட்டா….அவ்ளோதான்.. அதுக்கு இன்னும் ஒரு யுகமே ஆகலாம்.

மொத்தத்துல குடும்பத்துல எல்லாரையும் எதாவது ஒரு படத்துக்கு அழைச்சிட்டு போகனும்னு நீங்க ஒரு ப்ளான் வச்சிருந்தா அதுக்கு இந்தப் படம் மிகச்சரியான தேர்வு. மிஸ் பன்னாம பாருங்க.




Friday, January 19, 2018

தானா சேர்ந்த கூட்டம் – அவ்வளவு கூட்டமாவா தெரியிது?


Share/Bookmark
”என்னய்யா இவன் ஒரிஜினல் படத்துல தெரியாம கேமரால ஒரு ஈ க்ராஸ் ஆகி போனாக் கூட ரீமேக் பன்னும்போது அதயும் எடுத்து வைச்சிருவான் போல” ன்னு ஒரு சில வருஷங்களுக்கு முன்னால ஜெயம் ராஜாவ கிண்டல் அடிக்கிறதுண்டு. அவர் எடுத்த ரீமேக் படங்களுக்கும், அதோட ஒரிஜினல் வெர்ஷனுக்கும் ஆறு நடிகர்களத் தவற, ஆறு வித்யாசம் கண்டுபுடிக்கிறதே மிகப்பெரிய கஷ்டம். அந்த அளவுக்கு ஜெராக்ஸ் எடுத்த மாதிரி எடுத்து வைப்பாரு. நேத்து தானா சேர்ந்த கூட்டம் பாத்தப்போதான் ஜெயம் ராஜாவ நா ரொம்ப மிஸ் பண்ணேன்.அடுத்தவன் எழுதுன திரைக்கதைய அப்டியே ஏத்துக்கிட்டு தன்னுடைய தனித்தன்மைய காட்டனும்னு எதுவும் ஜில்ஃபான்ஸ் வேலைகள் பண்ணி வைக்காம படம் எடுக்கவும் ஒரு பெரிய மனசு வேணும்.

பயங்கரமான Spoiler Alert:

1987 ல மோன் சிங் அப்டிங்குறவன் டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிக்கைல “துடிப்பான, திறமையான, புத்திசாலியான ஆட்கள் உளவுத்துறைக்கும், பாதுகாப்புத் துறைக்கும் தேவை. விருப்பமுள்ளவர்கள் நாளை காலை தாஜ் ஹோட்டலூக்கு இண்டர்வியூக்கு வாங்க” அப்டின்னு ஒரு விளம்பரம் குடுக்க, மறுநாள் ஹோட்டல்ல கூட்டம் அள்ளிருக்கு. அதுலருந்து ஒரு 26 பேர தேர்வு செஞ்சி ”நாளைக்கு காலையில ஒரு Mock raid இருக்கு… எல்லாரும் பல்ல வெளக்கிட்டு பக்காவா வந்துருங்க”ன்னு சொல்லி அனுப்பிருக்கான்.

அதே மாதிரி மறுநாள் எல்லாரும் வர, Tribovandas Beemji & Sons ங்குற நகைக்கடைக்கு ரெய்டுக்கு அழைச்சிட்டு போயிருக்கான். நகைக்கடை ஓனர்கிட்ட “நா CBI லருந்து வந்துருக்கேன்.. இதப் பாருங்க search வாரண்ட்” அப்டின்னு ஒரு வாரண்ட் பேப்பர காமிக்க  அவய்ங்களும் கடைய சோதனை போட ஒத்துக்கிட்டுருக்கானுங்க. இவன் செலெக்ட் பன்ன 26 பேரும் கடைக்கு உள்ளயும் வெளியயும் யாரையும் விடாமயும், எந்த ஃபோன் காலும் வெளில போகாமயும் கடமைய செவ்வனே செஞ்ருக்கானுங்க.

நம்ம மோன் சிங் வடிவேலு அரிசி சாம்பிள் எடுக்குற மாதிரி எல்லா நகையிலயும் கொஞ்சம் சாம்பில் எடுத்து ப்ளாஸ்டிக் பைக்குள்ள எதோ எவிடென்ஸ் மாதிரி போட்டு சீல் பண்ணி எல்லாத்தையும் ஒரு பொட்டிக்குள்ள வச்சி ரெண்டு பேர மட்டும் கொண்டு போய் வண்டிய வச்சிட்டு வர சொல்லிருக்கான். மத்த எல்லார்கிட்டயும் ”கடைய பத்தரமா பாத்துக்குங்க.. கடையிலருந்து ஒரு துரும்பு கூட அசையக் கூடாது… நா இப்ப வந்துடுறேன்”ன்னு சொல்லிட்டு வெளில போனவன் இப்ப வரைக்கும் வரல.

அதுல அவன் ஆட்டையப் போட்ட நகைகளோட மதிப்பு சுமார் 30 லருந்து 35 லட்சமாம். அவனப் புடிக்க கேரளாவுக்கு ஆள் அனுப்புறேன், துபாய்க்கு ஆள் அனுப்புறேன்னு போலீஸ் தரப்புலருந்து ஆள் தான் அனுப்புனானுங்களே தவற இப்ப வரைக்கும் மோன் சிங்க புடிக்க முடியல. இந்த உண்மை சம்பவத்த அடிப்படையா வச்சி, ரொம்ப சுவாரஸ்யமான ஒரு திரைக்கதையோட அக்‌ஷய் குமார் நடிச்சி வெளிவந்த படம் தான் ஸ்பெஷல்26. பெருபாலானவங்க பாத்துருப்பீங்க. அதத் தழுவி எடுக்கப்பட்ட நம்ம தானா சேர்ந்த கூட்டத்த தான் நம்ம எல்லாரும் இப்ப கழுவி ஊத்திக்கிட்டுருக்கோம்.

ஒரிஜினல் வெர்ஷன்ல படத்தோட ஆரம்பம், கதையோட போக்கு, கதாப்பாத்திரங்கள் கதைக்குள்ள ஒவ்வொருத்தரா ஒவ்வொரு இடத்துல சேருற விதம், க்ளைமாக்ஸ் ட்விஸ்ட்ன்னு எல்லாமே ஒரு முறைபடுத்தப்பட்ட வடிவத்துல இருக்கும்.

ஆனா நம்ம விக்னேஷ் சிவன் , என் பங்குக்கு நானும் கொஞ்சம் கதைய சேர்க்குறேன்.. என்னோட திறமையும் காட்டுறேன்னு முன்னாடி பின்னாடி சேர்த்து விட்ட எக்ஸ்ட்ரா ஃபிட்டிங்குகளால தான் படம் சற்று டொம்மையாயிருச்சி.

திரைக்கதையில இருக்க சின்ன சின்ன சுவாரஸ்யங்கள்தான் ஒரு வெற்றிபடத்துக்கான வித்துகளா அமையும். உதாரணமா ஸ்பெஷல் 26 ல ஆரம்பமே ரெய்டுலதான் ஆரம்பிக்கும். ரெய்டு நடந்து முடிஞ்சி எல்லாரும் கிளம்புற வரைக்கும் அது ஒரு உண்மையான ரெய்டுன்னுதான் நமக்குத் தோணும். அந்த அளவுக்கு சீரியஸாவும், நேர்த்தியாவும் அந்த காட்சிய அமைச்சிருப்பாங்க. தமிழ்ல அந்த காட்சி செந்தில் கையில மாட்டுன மேண்டில் மாதிரி ஆகிப்போச்சு.

அதுமட்டும் இல்லாம க்ளைமாக்ஸ்ல அந்த ட்விஸ்ட்ட அவிழ்த்து அந்தப் படத்த முடிக்கிற விதம் ரொம்ப அருமையா இருக்கும். The illusionist ன்னு ஒரு படம் இருக்கு. ஹீரோ எல்லாரையும் ரொம்ப சூப்பாரா ஏமாத்திட்டு தப்பிச்சி போயிருவாரு. அவன ஃபாலோ பன்ற போலீஸுக்கு ஹீரோ ஊர விட்டு போனப்புறம்தான் அவன் நம்மள ஏமாத்திட்டாங்குறதே தெரியவரும். “அவன் எப்டியெல்லாம் நம்மள ஏமாத்திருக்கான்”ன்னு ஏற்கனவே நடந்த சம்பவங்கள கோர்வையா ஒவ்வொன்னா நினைச்சி பாத்து, ஹீரோவோட புத்திசாலித்தனத்த நினைச்சும், அவனோட வெற்றிய ஆமோதிக்கிற மாதிரியும் அந்த போலீஸ் ரயில்வே ஸ்டேஷன்லயே நின்னு தனக்குத் தானே நினைச்சி சிரிச்சிட்டு இருப்பாரு. செம சூப்பாரா இருக்கும் அந்த சீன். கிட்டத்தட்ட அதே மாதிரியான ஒரு காட்சியமைப்புதான் ஸ்பெஷல் 26 லயும் வச்சிருப்பாங்க. ஹீரோ கடைய காலிபன்னிட்டு போனப்புறம்தான் அவன புடிக்க வெய்ட் பண்ணிட்டுருக்கா போலீஸூக்கு அவன் நம்மள ஏமாத்திட்டாங்குறதே புரியும். அந்த சீனோட சுவாரஸ்யத்தையும் விக்னேஷ் சிவன் கெடுத்துட்டாரு.

ரொம்ப நாளைக்கு அப்புறம் சுரேஷ் மேனன தமிழ் சினிமாவுல பாக்க நல்லாருந்துச்சி. ஆனா பாருங்க அவருக்கு கவுதம் மேனன் குரல குடுத்து கடுப்ப்பேத்திடாங்க. ஒரு சீன்ல சுரேஷ் மேனன் சூர்யாவ எழுந்து நில்லுன்னு சொல்லுவாரு. “அவர் நின்னுக்கிட்டுதான் சார் இருக்காரு..உங்க பக்கத்துல பாக்கும்போது உக்கார்ந்திருக்க மாதிரி தெரியிது”ன்னு நினைச்சிக்கிட்டேன். இப்டியெல்லாம் ஓட்டுவானுங்கன்னு தெரிஞ்சிதான் க்ளைமாக்ஸ்ல “எவ்வளவு உயரம்ங்குறது முக்கியம் இல்ல.. எவ்வளவு உயருரோம்ங்குறதுதான் முக்கியம்” ஒரு பஞ்ச் வேற பேசிருக்காரு சூர்யா.

படத்துக்கு மிகப்பெரிய ப்ரோமோஷன் சொடக்கு மேல பாட்டு. ஆனா ஆடியோவுல இருக்க வேகம் வீடியோவுல இல்ல. இன்னும் கொஞ்சம் ஸ்பீடா எடிட்டிங் பன்னிருக்கனும். ஹரி படத்து எடிட்டர்கிட்ட குடுத்துருந்தா சிறப்பா செஞ்சு குடுத்துருப்பாரு. அந்த ஒரு பாட்டத் தவற மற்ற பாடல்கள்லாம் ஒரே இரைச்சல்.

ஸ்பெஷல் 26 ல ஒரிஜினல் CBI ஆஃபீசரா வர்ற மனோஜ் பஜ்பாயி பிரிச்சிருப்பாரு. ஆனா இங்க நம்ம நவரசம் ஒரு தேவையில்லாத ஆணி மாதிரி தான் வந்துட்டுப் போகுது. சூர்யா வழக்கம்போல ஆளு செமையா இருக்காரு.  ரம்யாகிருஷ்ணன் சிபிஐயா வர்றப்ப மட்டும் கெத்து. மத்த நேரத்துல “என்னப்பா.. என்னப்பா” ன்னு மொக்க போட்டுக்கிட்டுருக்கு. தம்பி ராமைய்யா ஒரு சீன்ல கலக்கிருக்காரு.

மொத்தப் படத்துலயும் நல்ல சீன்னு தேடி எடுத்தா ஒரு ரெண்டு மூணுதான் தேறும். க்ளைமாக்ஸ்ல சுரேஷ் மேனன நிக்க வச்சி சுத்தி சுடுற சீன் நல்லாருந்துச்சி.

மத்தபடி இன்னும் ரெண்டு படத்தையும் பாக்காதவங்க முதல்ல Special 26 ah பாத்துட்டு அப்புறம் தானா சேர்ந்த கூட்டம் பாக்கலாம்.   




Monday, January 15, 2018

ஸ்கெட்ச் – யாருக்கு?


Share/Bookmark
ஒவ்வொரு ஹீரோவுக்கும் ஒரு இமேஜ் உருவாக்கி வச்சிருக்கோம். விக்ரம பொறுத்த அளவு அவர் படம்னாலே வித்யாசமான படங்களா இருக்கும். ரொம்ப கஷ்டப்பட்டு உடல வருத்திக்கிட்டு மற்ற ஹீரோக்களக் காட்டிலும் தன்னோட படங்கள வித்யாசப்படுத்த எதாவது செய்வாரு அப்டிங்குற நம்பிக்கை நிறைய பேர்கிட்ட இருக்கு. விக்ரம எந்த கெட்டப் சேஞ்சும் இல்லாம நார்மலா பாக்குறதுக்கே இப்பல்லாம் நமக்கு அப்நார்மலா இருக்கு. அந்த நம்பிக்கைய இந்த ஸ்கெட்ச் காப்பாத்திருக்கா இல்லையான்னு பாப்போம்.

போன வருஷம் கவுதம் கார்த்திக் நெப்போலியன் நடிப்புல முத்துராமலிங்கம்னு ஒரு படம் வந்தத அவ்வளவு சீக்கிரம் யாரும் மறந்துருக்க மாட்டீங்க. அது ஒரு சீன்ல போலீஸ் ஊருக்குள்ள வந்து நெப்போலியன்கிட்ட “உங்க பையன் தானே முத்துராமலிங்கம்?”ன்னு கேப்பானுங்க. அதுக்கு உடனே நெப்போலியன் “ இந்த ஊர்ல பொறந்த எல்லாருக்குமே முத்துராமலிங்கம்னா சிங்கம்னு தெரியும்……. ஆமா என் பையந்தான் முத்துராமலிங்கம்”ன்னு சொல்லுவாறு. ஏன்யா அந்தாளு கேட்ட்துக்கும் நீ சொல்றதுக்கும் எதாவது சம்பந்தம் இருக்கா? உன் பையனான்னு கேட்டா ஆமா இல்லைன்னு சொல்றத விட்டுபுட்டு வெறிநாய் கடிச்ச மாதிரி பேசிக்கிட்டு இருக்கன்னு தோணுச்சி.

அதே மாதிரி ஒரு கண்றாவியான சிரிப்பு வரவழைக்கக் கூடிய ஒரு வசனத்த தான் இந்த ஸ்கெட்ச் படத்துல விக்ரமுக்கு பஞ்ச் டயலாக்கா வச்சிருக்காங்க. ”இந்த ஸ்கெட்ச்சு ஸ்கெட்ச்சு பன்னா ஸ்கெட்ச்சு மிஸ்ஸே ஆகாது. அப்டி மிஸ்ஸானா மட்டும் சொல்லு பிசிறே இல்லாம செஞ்சி தர்றேன்” இதான் அந்த உலக மஹா பஞ்ச். ஒரு வேலை சினிமாவுல இல்லாம நிஜத்துல விக்ரம் அவரோட ஓனர்கிட்ட போய் இந்த வசனத்த சொல்றாருன்னு வைங்க.. என்ன நடந்துருக்கும்? கீழ பாருங்க.

விக்ரம் :இந்த ஸ்கெட்ட்சு ஸ்கெட்ச்சு போட்டா ஸ்கெட்ச்சு மிஸ்ஸே ஆகாது

ஓனர் : அப்டி மிஸ்ஸாச்சுன்னா?

விக்ரம் : மிஸ்ஸாச்சுன்னா சொல்லுங்க பிசிறே இல்லாம செஞ்சி தர்றேன்.

ஓனர் : அப்ப மொத தடவ ஏன் பிசிறே இல்லாம செய்யல..

விக்ரம் : இல்லங்க.. பிசிறு இல்லாம தான் செஞ்சேன். ஆனா மிஸ்ஸாயிருச்சி

ஓனர் : அப்ப உனக்கு ஒழுங்கா ஸ்கெட்ச்சு போட தெரியல… 

விக்ரம் : அட.. இந்த ஸ்கெட்ச்சு ஸ்கெட்ச்சு பன்னா மிஸ்ஸே ஆகாதுங்க…

ஓனர் : அப்புறம் ஏண்டா மிஸ்ஸாச்சு.

விக்ரம் : அட மிஸ்ஸாச்சுன்னாதான் பிசிறே இல்லாம செஞ்சி தர்றேன்னு சொல்றேன்ல..

ஓனர் : அப்ப ஏன் மொத தடவயே பிசிறே இல்லாம செய்யல…
(திரும்ப முதலிலிருந்து படிக்கவும்)  

கண்டிப்பா இதே மாதிரி நேர்ல ஒருத்தன்கிட்ட சொன்னா பேசிப் பேசி கடைசில வெட்டுகுத்துல முடிஞ்சி போகும்.

”ஸ்கெட்ச்” அப்டிங்குற டைட்டில் ரிலீஸான உடனே , ”சரி பயங்கரமா எதோ ப்ளான் பன்னப்போறாரு.. இது ஒரு பிரில்லியண்ட் மூவி போல”ன்னு நினைச்சிட்டு இருந்தேன். படத்தோட பாட்டு ரிலீஸாச்சு. “தவுலோட் வண்டி. மெட்டா வண்டி கில்பர்ட் வண்டி ஆனாலும் ஸ்கெட்ச்ச போட்டு ஸ்கெட்ச்ச போட்டு ஸ்கெட்ச்ச போட்டு தூக்குவோம்”ன்னு பாடல் வரிகள். சரி விக்ரம் வண்டி தூக்கப்போறாரு போல. அத செமையா ப்ளான் பண்ணி பன்னுவாருன்னு ஓரளவுக்கு ஆர்வம் இருந்துச்சி.

படத்துக்கு போய் உக்காந்தா டியூ கட்டாத வண்டிய சீஸ் பன்ற வேலை. ”யோவ்.. ஓனர் வண்டிய நிறுத்திட்டு ஒண்ணுக்கு போறப்ப பொத்துனாப்புல போய்  வண்டிய எடுத்துட்டு வர்றதுக்குதான் “ஸ்கெட்ச்சு” “ஸ்கெட்ச்சு”ன்னு பில்டப் பண்ணீங்களா? டைட்டிலுக்கு உண்டான மரியாதையே போச்சேடா உங்களால. ஸ்கெட்ச்சுன்னு பேர் வச்சதுக்காவது ஆசைக்கு ஒரு ஸ்கெட்ச்சாவது போடுவார்னு நினைச்சேன். படம் முடியும்போதுதான் தெரிஞ்சிது… “தம்பி… ஸ்கெட்ச் வில்லன்களுக்கு இல்ல.. உங்களுக்குத்தான்” அப்டின்னு ஜிகர்தண்டா பாபி சிம்ஹா மாதிரி ஆடியன்ஸ பாத்து சொல்ற மாதிரி இருந்துச்சி.

சரி ரொம்ப லெந்த்தா போகுது.. மத்தபடி படம் எப்டி இருக்குன்னு பாப்போம். ரொம்ப லைட்டான , பெரிய அளவுல எந்த இம்பேக்ட்டயும் குடுக்காத திரைக்கதை. நல்லாருக்குன்னு சொல்ல முடியாட்டாலும் மொக்கையா இருக்குன்னு சொல்லாத அளவுக்கு டீசண்டா போரடிக்காம படம் நகருது.  விக்ரம் கூட வர்ற “இடிதாங்கி”யோட ஒரு சில ஒன் லைன் காமெடி நல்லா ஒர்க் அவுட் ஆயிருக்கு.

பழைய படங்கள்ல பாத்தோம்னா சண்டைக் காட்சிகள் வைக்கிறதுக்கு சீன் இல்லைன்னா அத ஃபுல்ஃபில் பன்ற மாதிரி ஒரு டெம்ளேட் சீன் இருக்கு. ரோட்டுல போற ஒரு புள்ளைய நாலு ரவுடிங்க கிண்டல் பன்னுவாங்க. உடனே ஹீரோவுக்கு கோவம் வந்து அவனுங்கள பொறட்டி எடுத்து நாலு அட்வைஸூம் பண்ணி அனுப்புவாறு. அப்ப அடிவாங்குறவனுங்களுக்கும் கதைக்கும் எந்த சம்பந்தமும் இருக்காது. ஹீரோவுக்கு சண்டை போடத் தெரியும்னு நம்மளுக்கு காட்டுறதுக்காக வாலண்டியரா வந்து அடிவாங்கிட்டு போறவனுங்க. இந்தப் படத்துலயும் அதே பழைய ஃபார்முலாவ வச்சி சண்டைக்காட்சிகள வலுக்கட்டாயமா புகுத்திருக்காங்க.

ஹீரோயின் தமன்னா வெள்ளைகே வெள்ளையடிச்ச மாதிரி அவ்வளவு வெள்ளையா இருக்காங்க. வழக்கமா ஹீரோயின அழகா காட்ட ஒரு டம்மி பீஸ ஹீரோயினுக்கு பக்கத்துல எப்பவும் சுத்த விட்டுருப்பாங்க. (இது படத்துல மட்டும் இல்லை. நிஜத்துலயும் புள்ளைங்க யூஸ் பன்ற டெக்னிக்தான்) ஆனா இந்தப் படத்துல அது கொஞ்சம் உல்டாவாகிருச்சி. தமன்னாவ விட தமன்னாவுக்கு தோழியா வர்ற புள்ளைச் செம்மை அழகா இருக்கு. உண்மையிலயே அத ஹீரோயினா போட்டுருக்கலாம். ஒரு தமன்னா ஃபேனா இருந்து இத சொல்ல என் இதயம் கொஞ்சம் வலிக்கத்தான் செய்யிது. இருந்தாலும் உண்மைய சொல்லித்தானே ஆகனும்.

ரொம்ப லைட்டா போற திரைக்கதை ரெண்டாவது பாதில கொஞ்சம் சூடு பிடிச்சி ஒரு த்ரில்லர் கதையா மாறுது. கடைசில யாருமே எதிர்பாக்காத நேரத்துல பட்டுன்னு ஒரு கருத்த சொல்லி படத்த முடிச்சிடுறாங்க. கொஞ்சம் நம்ம அசந்தா கழுத கருத்த சொல்லிப்புறானுங்களே.

விக்ரம் ஆள் சூப்பரா இருக்காரு. நடிப்புக்கெல்லாம் பெரிய ஸ்கோப் இல்லை. அசால்ட்டா பண்ணிட்டு போயிடுறாரு. இந்தப் படத்துல விக்ரம் நடிச்சதும் ஒண்ணுதான் விக்ரம் ப்ரபு நடிச்சாலும் ஒண்ணுதான். அந்த மாதிரியான ஸ்க்ரிப்ட். விக்ரமுக்கான தேவையே இந்த ஸ்க்ரிப்டுல இல்ல. சமீபத்துல வந்த நெருப்புடா படத்துக்கும் இந்தப் பட்த்துக்கும் கூட சில ஒற்றுமைகள் இருக்குன்னா பாத்துக்குங்களேன். கேமாரா ரொம்ப நல்லாருந்துச்சி. இயக்குனர் விஜய் சந்தரோட முதல் முயற்சில ஓரளவுக்கு தேறிருக்கார். திரைக்காதைய இன்னும் சுவாரஸ்யமா அமைச்சிருக்கலாம். 

தமனோட இசையில இண்ட்ரோ சாங் சூப்பர். தியேட்டர் எஃபெக்டுல அந்த பாட்ட கேக்க சூப்பரா இருந்துச்சி. மற்ற படி பெருசா எங்கயுமே கவரல. “ஸ்கெட்ச் போட்டா… ஸ்கெட்ச்சு போட்டா”ன்னு ஒரு தீம் மியூசிக். ”சரி ஸ்கெட்ச் போட்டா சொல்லி அனுப்புங்கடா.. வந்து பாத்துட்டுப் போறோம்”னு நினைச்சிட்டு இருந்தேன்.   


மற்றபடி எங்கயுமே படம் பெருசா போரடிக்கல. டீசண்டவே போகுது. பண்டிகை காலத்துல குடும்பத்தோட ஜாலியா ஒரு டைம் பாத்துட்டு வரலாம். 

Friday, January 12, 2018

பவன் கல்யாணின் Agnyaathavaasi !!!


Share/Bookmark
வழக்கமா தேவி மல்டிப்பள்க்ஸ்ல உள்ள போகும்போதே செக்யூரிட்டி செக் பண்ணி எந்தப் படம்னு கேட்டு  மேல போங்க, கீழ போங்க , சைடுல போங்கன்னு வழி சொல்லுவாங்க. தெலுங்குப் படங்களா இருந்தா பெரும்பாலும் படம் பேர சொல்லாம “தெலுங்குப் படமா?”ன்னு கேட்டு வழி சொல்லுவாங்க. நேத்து உள்ள போகும்போது தெலுங்குப் படமான்னு கூட கேக்கல.. மூஞ்ச ஒரு மாதிரி வச்சிக்கிட்டு “பவர் ஸ்டாரா? இப்டி சைடுல போங்க”ன்னு சொல்லிக்கிட்டு இருந்தாங்க. யோவ் என்னய்யா எதோ நம்ம ஊரு பவர் ஸ்டார சொல்ற மாதிரி மூஞ்ச இவ்வளவு சுழிச்சிக்கிற… சரி அவரு ரேஞ்சு இவங்களுக்கு தெரிய வாய்ப்பில்ல” ன்னு நினைச்சிக்கிட்டு உள்ள போனேன்.

உள்ள போய் சீட்டுல உக்காந்தேன்.  திடீர்னு பக்கத்து சீட்டுல எதோ சத்தம். பக்கத்துல உக்காந்திருந்தவன் கழுத்துல கைய வைச்சிக்கிட்டு “ஹாங்,….” ஹாங்… “ “ஹாங்…” ன்னுட்டுருந்தான். அய்ய்ய்யொ வலிப்பு வந்துருச்சி போலயேன்னு பதறிப்போயி சாவி கொத்த அவன் கையில வச்சி திணிச்சேன். உடனே நிறுத்திட்டு “யோவ் என்ன பன்ற?”ன்னான். “டேய் உனக்கு வலிப்பு வந்து இழுத்துக்கிட்டு இருந்த… காப்பாத்தலாமேன்னு கையில சாவிக்கொத்த வச்சேன்”ன்னேன். “Yo bro.. இது பவன் கல்யாணோட மேனரிசம் ப்ரோ.. நா அவரோட டை ஹார்டு ஃபேன்.. அதான் அவர மாதிரி செஞ்சி பாத்துக்கிட்டு இருந்தேன்”ன்னான். சொல்லிட்டு பன்னுங்கடா.. டக்குன்னு பாத்தா கழுத்து வலியோட கக்கா போக முக்குற மாதிரியே இருக்குன்னு சொல்லிட்டு படம் பாக்க ஆரம்பிச்சேன்.  

பொதுவா சில இயக்குனர்கள் ஒரு மிகப்பெரிய வெற்றிப்படத்த கொடுத்தப்புறம், அந்த வெற்றிப்படம் கொடுத்த தாக்கத்துலருந்து மீண்டு  வர்றதுக்கு அவங்களுக்கு ரொம்ப நாள் ஆகுது. பாட்ஷா எடுத்து இத்தனைவ் வருஷம் ஆகியும் சுரேஷ் கிருஷ்ணாவால அதுலருந்து இன்னும் மீள முடியல. பாட்ஷாவுக்கப்புறம் அவர் எடுத்த பெரும்பாலான படங்கள்ல பாட்ஷாவின் அதே தாக்கம்.

அந்த வரிசையில ஒரு இயக்குனர்தான் திரிவிக்ரம். 2013 ல அவரோட இயக்கத்துல பவன் கல்யாண் நடிச்ச ”அத்தாரிண்டிக்கி தாரெதி” (அத்தை வீட்டுக்கு வழி எது?) தாறுமாறான ஹிட். தென்னிந்திய திரைப்பட வசூல் சாதனைகள் பலவற்றை தகர்த்தெரிஞ்ச படம். அந்தப் படத்துக்கப்புறம் அவர் எடுத்திருக்க மூணாவது  படம் இந்த அக்ஞாதவாசி. கிட்டத்தட்ட அதே அத்தாரிண்டிக்கி தாரெதி படத்துல ஒருசில கேரக்டர்கள் மட்டும் மாத்தி அதயே திரும்ப எடுத்ததுதான் இந்த அக்ஞாதவாசி.

இந்த அத்தாரிண்டிக்கி தாரெதி படத்த கிட்டத்தட்ட ஒரு பதினைஞ்சி இருவது தடவ பாத்துருப்பேன். சும்மா சாப்பிடும்போது ஒரு சீன் பாப்போம்னு போட்டா அப்டியே தொடர்ந்து படம் முடியிற வரைக்கும் பாக்க வச்சிடும். அந்த அளவுக்கு சூப்பாரான ஸ்க்ரிப்ட், காமெடி, வசனங்கள்ன்னு எல்லாமே பர்ஃபெக்ட்டா கலந்த படம். ஆனா இந்த அக்ஞாதவாசி அப்டியே பேங்ளூருக்கு நேர் எதிர்த்தாப்ள உள்ள ஏர்காடு மாதிரி. ஒரு சீன் கூட நல்லா இல்லை. ஒரு காமெடிக்கு கூட சிரிப்பு வரல. இதுல பவன் கல்யாணுக்கு அம்மா குஷ்பூன்னு காமிச்ச உடனே எனக்கு டபீர்னு வெடிச்சிருச்சி. அப்புறம் அம்மா இல்ல சின்னம்மான்னு சொல்லி தண்ணி தெளிச்சி எழுப்புனாங்க.

நம்மல்லாம் ball ah வச்சித்தான் பவுலிங் போடுவோம். ஆனா தெலுங்கு ஹீரோக்கள்லாம் ஆளவச்சே பவுலிங்க் போடுவாங்க. ஓங்கி ஒரு அடி அடிச்சா அடி வாங்குனவன் அப்டியே தரையில ஒரு பிட்ச் குத்தி பவுண்ஸ் ஆகி அந்தப் பக்கம் போய் விழுவான். அது மட்டும் இல்லாம இன்ஸ்விங், அவுட் ஸ்விங்குன்னு அடிக்கிற ஆளப் பொறுத்து  ஆளுங்க வித விதமா விழுவானுங்க.

மத்த தெலுங்கு ஹீரோக்களோட படங்கள விட பவன் கல்யாணோட படம் கொஞ்சம் வித்யாசப்பட்டு தான் இருக்கும். மொரட்டுத்தனமால்லாம் போட்டு ஆளுங்கள அடிக்க மாட்டாரு. ஃபைட்டெல்லாம் கொஞ்சம் ஸ்டைலிஷா தான் இருக்கும். இந்தப் படத்துலயும் அப்டித்தான். ஆனா நிறைய பெசல் அய்ட்டங்கள் இருக்கு. ஒருத்தன் வாயில குத்துவாரு.. அவன் பல்லு தெறிச்சி வெளில வந்து இவரோட கத்தில பட்டு ரெண்டு பாதியா போகும்.

தெலுங்கு படங்கள் மொக்கையா இருந்தாலும் பாட்டுங்கல்லாம் எப்பவும் நல்லா எடுப்பாங்க. ஆனா இதுல மீசிக்கு நம்ம ரூத்து.  பாட்டு பாடச் சொன்னா அவர் பாட்டுக்கு எதோ பாடிக்கிட்டு இருக்காரு. என்னக் கருமம்டா இதுன்னு தோணுச்சி. இதுல இந்த ஆல்பம் வேற செம ஹிட்டாம். வருத்தப்படாத வாலிபர் சங்கத்துல சூரி சொல்றமாதிரி “இப்பதான் மாப்ள புதுசா கேக்குறாய்ங்க... போகப் போக கேட்டுட்டுச் செத்துருவாய்ங்க” ன்னு நினைச்சிக்கிட்டேன்.

படம் முடிஞ்சி கெளம்பப் போறப்போ திரும்பவும் எதோ சத்தம். என்னன்னு பாத்தா அந்தப் பக்கத்துல இருந்தவன் அதே மாதிரி கழுத்துல கைய வச்சிக்கிட்டு “ஹாங்…” “ஹாங்” ன்ன்னுட்டுருந்தான். “டேய் இன்னும் உன் மேனிரிசம் முடியலயா… எந்திரிச்சி போடா”ன்னு சொல்ல திரும்பிப்பாத்தா வாயில நொறை தள்ளுற அளவுக்கு வெட்டுது.  

காது ரெண்டயும் கவுண்டர் மாதிரி பொத்துனாப்புல புடிச்சிக்கிட்டு வெளில வந்தா, “பவர்ஸ்டார் படமா”ன்னு எகத்தாளமா கேட்ட செக்யூரிட்டி எதிர்க்க நின்னு லேசா ஒரு சிரிப்பு சிரிசாரு… ”தெய்வம்ணே நீங்க” அப்டின்னு ஒரு கும்புடப்போட்டுட்டு திரும்பிப் பாக்காம வீடு வந்து சேந்தேன்.



Wednesday, January 10, 2018

சென்ற வருடம் அதிகம் சிரிக்க வைத்த ஒருசில மீம்கள்!!!


Share/Bookmark


























LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...