இந்த லாக் டவுனில் நான் அதிகம் தேடிப் பார்த்தது இன்வெஸ்டிகேஷன்
த்ரில்லர் படங்களைத்தான். அதில் தென்னிந்திய மொழிகளில் வெளியான மூன்று மர்டர் இன்வெஸ்டிகேஷன்
படங்களைப் பற்றித்தான் இந்தப் பதிவில் பார்க்கப்போகிறோம்!
Spoiler Alert:
மலையாளத்தில் வெளியான Forensic, தெலுங்கில் வெளியான HIT,
தமிழில் வெளியான V1 மர்டர் கேஸ் இந்த மூன்று
படங்களை பார்த்திராத, இனிமேல் பார்க்கும் எண்ணமுடையவர்கள் மேற்கொண்டு தொடர வேண்டாம்.
V1 Murder Case :
சமீபத்தில் நான் பார்த்த மோசமான படங்களில் முக்கியமான படமாக
இந்த V1 ஐக் கூறலாம். படத்தின் முதல் பதினைந்து நிமிடத்தைக் கடப்பது மிகப்பெரிய வேலையாகிவிட்டது.
காரணம் அவ்வளவு கன்றாவியான ஹீரோவின் கதாப்பாத்திர அமைப்பும், அதற்கு அந்த ஹீரோவின்
நடிப்பும்.
ஃபோரன்ஸிக் ட்ரெயினராக வருகிறார் ஹீரோ. அவருக்கு இருட்டென்றால்
பயம். இரண்டு கோடி பேர்களில் ஒருவருக்கு வரும் வியாதி இவருக்கு. இருட்டைப் பார்த்தால்
கண்கள் சொக்கி மூச்சடைத்து கீழே விழுந்து மண்ணைக் கவ்வுபவர்.
அவரை ஒரு கேஸை எடுத்துக்கொள்ளச் சொல்லி கெஞ்சுகிறார்கள்.
ஆனால் அவரோ அவ்வளவு பிகு செய்கிறார். அதிகாரிகள் விடுவதாக இல்லை. மறுபடி கெஞ்சுகிறார்கள்.
இவர் “No means No…” என்ற பதிலையே மறுபடி மறுபடி சொல்லிக்கொண்டே போக
”த்தா.. இந்த மூதேவிய அடிச்சி பத்தி விட்டுட்டு வேற யார்டயாச்சும்
கேஸ குடுங்கடா” என படம் பார்க்கும் நமக்கே
கடுப்பு உச்சத்தை தொடுகிறது. ஒருவழியாக கேஸை எடுக்கிறார். இன்வெஸ்டிகேசன் ரூமில் ஒரு
லேடி ஆபீஸர் ஒரு சஸ்பெக்டை விசாரணை செய்ய, அருகில் அமர்ந்திருக்கும் இவர் கையில் ஒரு
பாக்கெட் பிஸ்கெட் பாக்கெட்டை வைத்துக்கொண்டு, அங்கு நடக்கும் விஷயத்துக்கும் அவருக்கும்
எந்த சம்பந்தமும் இல்லாதது போல் பிஸ்கெட் சாப்பிடுகிறார்.
”அதாவது அவரு ரொம்ப கேஸூவல் இருக்காராம்.. அவருக்கு அந்த
கேஸ்மேலயே இண்ட்ரஸ்ட் இல்லையாம். எல்லாரும் ரொம்ப கெஞ்சி கேட்டுகிட்டதால தான் இந்த
இந்த இவெஸ்டிகேஷன்லயே அவர் உக்கார்ந்துருக்காராம்” இதயெல்லாம் முகத்தில் கொண்டு வருவதற்காக
பிஸ்கெட் சாப்பிட்டபடியே ஒரு ரியாக்ஷன் கொடுக்கிறார் பாருங்கள். நேஷனல் அவார்டுக்குப் பரிந்துரை செய்யலாம்.
இந்த முதல் பதினைந்து நிமிடங்களைக் கடப்பதற்குள் பாதி பாட்டில்
கோடாரித் தைலம் காலியாகிவிடுகிறது. அடுத்து
கேஸிற்குள் நுழைகிறார்கள். இவர் க்ரைம் டிபார்மெண்ட்டில் இருந்து ஃபோரன்ஸிக் ட்ரெயினராகச்
சென்றவர். அப்படியென்றால் தடயங்களையெல்லாம் பயங்கரமா கண்டுபிடித்து பயங்கர சுவாரஸ்யமாக துப்பு துலக்கப்போகிறார்
என்றிருந்தேன்.
ம்ஹூம்… துப்பறியும் காட்சிகள் ஏனோதானோவென்று இருக்கிறது.
இதுபோன்ற ஒரு கதையில் கதாப்பாத்திரத்தின் நம்பகத்
தன்மையை அதிகரிக்க, பார்ப்பவர்களுக்கு காட்சிகளில் பிடிப்பை ஏற்படுத்த அந்தத்துறை சார்ந்த
நிறைய தகவல்களை அளித்திருக்க வேண்டும். ஆனால் என்ன நடந்திருக்கிறதென்றால்
சபரி திரைப்படத்தில் கேப்டன் ஒரு டாக்டராக நடித்திருப்பார்.
அவர் டாக்டர் என்பதை அடிக்கடி நினைவு படுத்த, அவர் வரும் காட்சிகள் அனைத்திலும் விஜயகாந்த்
யாரோ ஒருவரிடத்தில்
“இந்த மருந்த மூணு வேள சாப்டுங்க”
“இந்த ஊசிய் ரெண்டு நாளுக்குப் போடுங்க”
என்று சொல்வது போலவே ஆரம்பிப்பார்கள். அதுபோலத்தான் இங்கும்.
ஆங்காங்கு ஹீரோ ஒவ்வொரு fact க்களைக் கூறுகிறார். எனக்கு டாக்டர் சபரிதான் ஞாபகம் வந்தார்.
இதையெல்லாம் தாண்டி படத்தை ஓரளவிற்கு உயிர்ப்புடன் வைத்திருப்பது
அந்தக் கொலையை யார் செய்தார்கள் என்கிற கேள்வி மட்டும்தான். ஆனால் கொஞ்சம் ஷார்ப்பாக
இருந்தால் முதல் பதினைந்து நிமிடத்திலேயே அதையும் கண்டுபிடித்துவிட முடியும்.
HIT :
இது சமீபத்தில் தெலுங்கில் வெளியான ஒரு இன்வெஸ்டிகேஷ்ன் த்ரில்லர்.
பெரும்பாலும் சூப்பர் ஹீரோ கதாப்பாத்திர வடிவமைப்பில் அவர்களுக்கு எதேனும் ஒரு பழைய
நினைவு அடிக்கடி வந்து தொல்லை கொடுப்பது போலவோ அல்லது சாதாரண மனிதர்கள் போலல்லாமல் அவர்களுக்கு எதோ ஒன்றைப் பார்த்தல்
மட்டும் பயம் ஏற்படுவது போலவும் அமைத்திருப்பார்கள். இறுதிக்காட்சியிலோ அல்லது இடையில்
ஏதேனும் ஒரு இடத்திலோ வில்லன் ஹீரோவின் அந்த வீக்னஸ்ஸை உபயோகித்து அவரை டாமினேட் செய்வார்.
அதிலிருந்து ஹீரோ மீண்டு எப்படி வில்லனை அழிக்கிறார் என்பதை காட்சிப்படுத்துவார்கள்.
ஆனால் இன்று பெரும்பாலான போலீஸ் அதிகாரிகள் அதிலும் குறிப்பாக
துப்பறியும் போலீஸ் அதிகாரிகளின் கதாப்பாத்திர அமைப்பு இந்த வகையில் தான் அமைக்கப்படுகிறது.
அவர்களுக்கு எதோ ஒரு பழைய நினைவு வந்து அடிக்கடி தொல்லை கொடுப்பதும், தூக்கத்திலிருந்து
பயந்து அடிக்கடி எழுவதும், எதோ ஒரு சைக்கார்டிஸ்டிடம் ட்ரீட்மெண்ட் எடுத்துக்கொள்வதும்
தான் இன்றைய துப்பறியும் கதாப்பாத்திரங்களின் குறைந்தபட்ச தகுதியாக கருதப்படுகிறது.
இதுபோன்ற கதாப்பாத்திர அமைப்பு இப்பொழுதெல்லாம் சலிப்பை ஏற்படுத்துகிறது.
மேற்கூறிய V1 லும் சரி, இந்த HIT லும் சரி.. ஹீரோ கதாப்பாத்திரம்
நமக்கு சலிப்பைத்தான் ஏற்படுத்துகிறது. இன்வெஸ்டிகேஷன் பகுதிகள் ஓரளவிற்கு நன்றாகவே
செல்கின்றன.
கிட்டத்தட்ட இடைவேளை சமயத்தில் ஒரு முக்கியமான தடயம் ஒரு வீட்டில் கிடைக்கிறது. தீவிர
விசாரணையில் அந்தத் தடயம், வேண்டுமென்றே அட்டென்சன் சீக்கிங்கிற்காக உருவாக்கியதாக
ஒருவர் ஒப்புக்கொள்கிறார்.
“ஏம்மா… இதெல்லாம் ஒரு காரணமாம்மா…” இன்வெஸ்டிகேஷன் போயிட்டு
இருக்கும்போது ஒருவர் தன்னை அனைவரும் கவனிக்க வேண்டும் என்பதற்காக அவரே தடயத்த உண்டாக்குறாராம். அதுவும் கொலை கேஸ்ல. மாட்னா பிதுக்கிருவானுங்க..
எந்த லூசாச்சும் இந்த மாதிரி பன்னுமா?தெலுங்கில் இப்படித்தான் ஒருசில அதிகப் பிரசங்கித்
தனங்கள் நடக்கும்.
சமீபத்தில் வந்த பெரும்பாலான இன்வெஸ்டிகேஷன் த்ரில்லர்களில்
க்ளைமாக்ஸில் ஒரே மாதிரியான ட்விஸ்ட் இருப்பதும் சலிப்பை ஏற்படுத்துகிறது.
“The Body” “Searching” “BROT” “இமைக்கா நொடிகள்” “துருவங்கள்
பதினாறு” “kshanam” aka சத்யா இப்போது வந்த HIT என அனைத்திலும் ஒரே ஒற்றுமை. ஒற்றுமையைச் சொன்னான் இன்னும் மெஹா ஸ்பாய்லர் ஆகிவிடும்.
FORENSIC :
சமீபத்தில் மலையாளத்தில் வந்திருக்கும் மற்றுமொரு இன்வெஸ்டிகேஷ்ன்
த்ரில்ல்ர். ஹீரோ ஒரு தடயவியல் வல்லுனர். நல்லவேளை போலீஸா இல்லை. இருந்திருந்தா அவனுக்கும்
ஒரு haunting past, தெரபி செஷன்னு நம்ம உசுற எடுத்துருப்பானுங்க.
மேலே இரண்டு படங்களில் கூறப்பட்ட குறைகள் எதுவும் இந்தப்
படத்தில் இல்லை. அலட்டல் இல்லாத ஹீரோ கதாப்பாத்திரம், அவர் மிகவும் திறமையானவர் என்பதைக்
காட்ட கேஷூவலாக அவரை பிஸ்கெட் சாப்பிட வைக்காமல் காட்சிகளைத் தகவல்களால் நிரப்புகிறார்கள்.
கதையின் மீதும் கதாப்பாத்திரத்தின் நமக்கு மீதும் நம்பகத் தன்மை அதிகரிக்கிறது.
ஒவ்வொரு முடிச்சாக அவிழ்க்கிறார்கள். ஒரு கட்டத்தில் முடிச்சுகள்
எக்ஸ்ட்ராவாகிப் போய் விவேக்கிடம் ஒருவர் சீரியல் கதை சொல்லும் ஒரு காமெடி போல் இருந்தது.
”லதாவுக்கும் ஆனந்துக்கும் கள்ளத் தொடர்பு இருப்பது உண்மைதான்”
“கள்ளத் தொடர்பா?”
”இது லதாவோட புருசன் ராஜேஷூக்கு தெரியாது”
“ராஜேஷா?”
”ஆனா ராஜேஷூக்கும் வசந்திக்கும் ஒரு சின்ன கனெக்ஷன் இருக்கு”
“கனெக்ஷனா?”
”வசந்தி யாருன்னா ஆனந்தோட காதலி”
“இதுவேறயா?”
”நட்ராஜு அவள ஒன்சைடா லவ் பன்றான்”
”ஒன் சைடாவா?”
”ஆனா ஆனந்து ரேவதிய வச்சிருக்கது வசந்திக்குத் தெரியாது”
இப்படித்தான் இருந்தது ஃபோரன்ஸிக்கில் முடிச்சுகளை அவிழ்த்த
விதம். அதுமட்டுமல்லாமல் யாருமே எதிர்பார்க்காத, ஆனால் கதையில் அனைவருக்கும் தெரிந்த
ஒரு கதாப்பாத்திரத்தை கொலையாளியாகக் காட்ட வேண்டும். அதற்காக ஒரு கதாப்பாத்திரத்தை
ஃபிக்ஸ் செய்துவிட்டு அதன் பிறகு அவரை மெயின் கதையுடன் லிங்க் செய்ய ரொம்பவே மெனக்கெட்டிருக்கிறார்கள்.
மறுபடி மேலுள்ள விவேக் வசனத்தைப் படிக்கவும்.
மொத்தத்தில்
Forensic > HIT > V1 Murder case