Monday, June 27, 2022

30 Year Of Annamalai!!!


Share/Bookmark

 


மற்ற நடிகர்களிலிருந்து ரஜினியை வேறுபடுத்திக்காட்டுவது  மற்றவர்களைக் காட்டிலும் ரஜினி மக்களிடத்தில் எவ்வாறு சென்று சேர்ந்திருக்கிறார் என்பதே. அவர் உடலின் ஒவ்வொரு பகுதியுமே ஒரு டெம்ப்ளேட். ரஜினிக்கான அடையாளம் அவரது முகம் மட்டுமல்ல. தலைமுடி முதல் பாதம் வரை ஒவ்வொரு பகுதியிலும் ரஜினியைக் கண்டறிய முடியும்.


முகத்தைக் காட்டாமல், யார் என்று சொல்லாமல் ஒருசில கோடுகளில் அது ரஜினி என்பதை உணர்த்த முடியும்.


சாதாரணமாக முகத்தின் நெற்றிப்பகுதியை நேராக வரையாமல் ஒரு Sine wave வைப் போல வரைந்தால் அது ரஜினி.


அதே நெற்றிப்பகுதியில் இரண்டு கற்றை முடி தொங்குவதைப் போல வரைந்தால் அதுவும் ரஜினி.


வாயில் சிகரெட்டை நேராக வைக்காமல் பக்கவாட்டில் வைத்திருந்தால் அது ரஜினி.


வெறும் கழுத்தில் ருத்ராட்சத்தைக் மட்டும் காண்பித்தால் அது ரஜினி.


கையில் ஒரு செப்புக் காப்பைக் காண்பித்தால் அது ரஜினி.


நான்கு விரல்களை மடக்கி "ஒரு தடவ சொன்னா" என ஒரு விரலைக் காட்டினாலும் ரஜினி. 


மூன்று விரல்களை மடக்கி பாபா முத்திரையைக் காட்டினாலும் ரஜினி. 


ஷூவிற்குள் Pant இன் செய்யப்பட்டிருந்தால் அது ரஜினி. 


ஒரு காலை மடக்கி மற்றொறு காலின் பின்னே வைத்து நின்றால் அது ரஜினி. 


இரண்டு காலயும் லேசாக அகட்டி பாக்கெட்டுக்குள் கை விட்டு நிற்பதைப் போல வரைந்தால் அதுவும் ரஜினி.


தலையை சீப்பால் சீவாமல் கையால் கோதிவிட்டால் அதுவும் ரஜினி. 


அன்றாடம் ரஜினியை மக்களுக்கு ஞாபகப்படுத்த இப்படி ஏராளமான விஷயங்கள் உள்ளன. அதுதான் அவருக்கான மார்க்கெட். மக்களிடத்தில் அவரிடைய ரீச். வேறு எந்த நடிகரையும் இப்படி அடையாளப்படுத்த முடியாது.


அதுமட்டுமல்லாமல் ஒரு திரைப்படத்தில் கதை, திரைக்கதையெல்லாம் தாண்டி கதாநாயகனின் அறிமுகக் காட்சிக்கு முக்கியத்துவம் கொடுக்க வைத்ததும் ரஜினியின் டெம்ப்ளேட் தான். 


திரையரங்கத்தில் உள்ள பார்வையாளர்கள் அனைவரையும் உற்சாகத்தில் கூச்சலிடவைக்க அவரவர் என்னென்னவோ செய்தும் வேலைக்காகல் போகிறது. ஆனால் ரஜினியைப் பொறுத்தவரை அவர் எதுவுமே செய்யத் தேவையில்லை.  அவரின் கை மட்டுமோ அல்லது கால் மட்டுமோ திரையில் காண்பிக்கப்பட்டால் போதும். 


அப்படிப்பட்ட ரஜினியின் டெம்ப்ளேட்டுகளால் உருவான, டெம்ளேட்டுகளை உருவாக்கிய அண்ணாமலையின் 30 ஆண்டு!!! 



Sunday, June 26, 2022

மாயோன் - Maayon !!


Share/Bookmark


 

மாயோன் மலையை ஒட்டி இருக்கும் ஒரு பள்ளி கொண்ட பெருமாள் கோவில். அக்கோவிலில் இருக்கும் ஒரு ரகசிய அறை. ஆறு மணிக்கு மேல் கோவிலுக்குள் சென்றால் சித்தபிரம்மை பிடிக்கும் அல்லது மரணம் நேரிடும் என்ற மர்மதேசப் பாணி நம்பிக்கை. இந்நிலையில் ரகசிய அறையின் செல்வங்களை கொள்ளையடிக்க முயலும் ஒரு கும்பல். இதைச் சுற்றி பிண்ணப்பட்டிருக்கும் கதை தான் இந்த மாயோன். 

இந்தப் படத்தின் ட்ரெயிலரே ஒரு நம்பிக்கையைக் கொடுக்கும் வண்ணம் இருந்தது. ஓரளவிற்கு அதை படத்திலும் தக்க வைக்க முயன்றிருக்கிறார்கள். இது போன்ற Mythological thriller, treasure hunt திரைப்படங்கள் தமிழில் மிகக் குறைவு. அப்படி ஒரு கதையைத் தேர்ந்தெடுத்து படமாக்கியதற்கு முதலில் வாழ்த்துக்களைக் கூறலாம். 

முதல் பாதி உண்மையிலேயே ஒரு நல்ல உணர்வைக் கொடுத்தது. அதற்கு இரண்டு காரணங்கள். முதலில் அந்த கதைக் களத்திற்கு ஏற்ற மாதிரியான அருமையான visuals.  நிறைய அனிமேஷன்கள். தேவையில்லாமல் நிறைய அனிமேஷன்கள் இருக்கிறது என்றாலும் அது படத்தின் மதிப்பை கொஞ்சம் கூட்டிக் கொடுக்கிறது என்பதில் சந்தேகமேயில்லை. 

அடுத்தது பள்ளி கொண்ட பெருமாள் ஆலயமும், அதிலிருக்கும் பிரம்மாண்ட பெருமாள் சிலையும் அதற்கு இளையராஜாவின் இரண்டு பாடல்களும். நிஜத்தில் தரிசித்த ஒரு உணர்வைத் தருகிறது. பள்ளி கொண்ட பெருமாள் ஆலயத்திற்கான முன் கதை, அதற்கான அனிமேஷன், கந்தர்வ இசை என அனைத்து விஷயங்களும் சேர்ந்து ஒரு நல்ல படத்திற்கான முதல் பாதியை உருவாக்கியிருந்தது.

ஆனால் அது அப்படியே இரண்டாவது பாதியில் சறுக்கிவிட்டது. அதற்கு முக்கியக் காரணம் திரைக்கதை. ஆயிரம் வருடங்களாக இருக்கும் ஒரு மர்மத்தை துப்பறிய வேண்டும். அதற்கு சரியான கால அவகாசம் கொடுத்து மெதுவாக எடுத்துச் செல்லும் போதுதான் அந்த ஆயிரம் வருட மர்மத்திற்கே ஒரு மரியாதை இருக்கும். ஆனால் அப்படியில்லாமல் உள்ளே என்ன இருக்கிறது எப்படி இருக்கப்போகிறது என்றெல்லாம் தெரியாமலேயே ஒரே இரவில் அனைத்து வேலைகளையும் முடித்து விட வேண்டும் என ப்ளான் போட்டு உள்ளே செல்வதெல்லாம் அபத்தத்தின் உச்சமாக இருந்தது. 

முதல் பாதியில் சுமாராக இருந்த கிராஃபிக்ஸ் இரண்டாவது பாதியில் படுசுமாராகிவிட்டது. இரண்டாவது பாதியில் ஒரு கால் மணி நேரம் மாயோன் படம் பார்க்கிறோமா இல்லை அனகோண்டா பார்க்கிறோமா என்கிற குழப்பம் வந்துவிட்டது. 

சிபிராஜ் மற்ற எல்லா படங்களையும் விட இதில் ஆள் பார்க்க நன்றாக இருந்தார்.  அவரால் படத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை. ஆனால் ரொமான்ஸே வராத முகத்தை வைத்து ரொமான்ஸ் காட்சிகளையெல்லாம் வைத்து நம்மை சோதிக்கிறார்கள். ரவிக்குமாரெல்லாம் இருக்கிறார். ஆனால் பெரிய வேலையில்லை. ஒரு சண்டை வைக்க வேண்டுமே என்பதற்காக வலுக்கட்டாயமாக ஒரு ஃபாரின் வில்லன் திணிக்கப்பட்டிருக்கிறார். 

கதையாக ஒரு நல்ல ஒன்லைன். ஆனால் அதன் திரைக்கதை வடிவம் இன்னும் சிறப்பாக எழுதப்பட்டிருக்கலாம். மொத்தத்தில் வித்யாசமான கதைக்களத்தில் வந்த, நன்றாக வந்திருக்க வேண்டிய ஒரு சுமாரான திரைப்படம். 


Thursday, June 16, 2022

சிவாஜி நினைவலைகள் - 15 Years of Sivaji


Share/Bookmark



பொறியியல் மூன்றாமாண்டு விடுதி. இரவு எட்டு மணி. மாலை ஏழு மணி முதல் பத்து மணி வரை காமன் ஹாலில் டிவி ஓடிக்கொண்டிருக்கும். பெரும்பாலும் 8 to a8:30 தான் எங்களுடைய இரவு உணவுக்கான நேரம். ஏனென்றால் அப்பொழுதுதான் நியூஸ் ஓடிக்கொண்டிருக்கும். “அத யாருப்பா அசிங்கமா பாத்துகிட்டு” என கும்பலாக எழுந்து சென்றுவிடுவோம். நியூஸ் பார்ப்பதற்காக மட்டுமே காமன் ஹாலிற்கு வருபவர்களும் உண்டு. 


அப்படி சிலர் மட்டும்காமன் ஹாலில் நியூஸ் பார்த்துக் கொண்டிருக்க, நாங்கள் ஹாஸ்டல் மெஸ்ஸில் உணவிற்காக உட்கார்ந்திருந்தோம்.


ஒரு வாய் எடுத்து வைக்கவில்லை.. ”ஹோஓஓஓஓ” என காமன் ஹாலிலிருந்து பயங்கர சத்தம் பின்னாலிருந்த

மெஸ்ஸில் கேட்டது. “வழக்கமா சச்சின் அடிக்கும் போது தான் இந்த மாதிரில்லாம் கத்துவாய்ங்க. இன்னிக்கு மேட்ச் கூட இல்லையே..என்னாச்சு?” என சாப்பிட்டத்தை அப்படியே வைத்துவிட்டு அனைவரும் காமல் ஹாலை நோக்கி ஓடினோம்.


”என்னாச்சு.. என்னாச்சு” என பதற்றமாக உள்ளே நுழைய, உள்ளே இருந்தவர்கள் அத்தனை உற்சாகத்துடன் “டேய் ஷங்கர் ரஜினிய வச்சி படம் எடுக்குறாரம்டா.. ஷங்கர் ரஜினிய வச்சி படம் எடுக்குறாராம்டா” உள்ளே

சென்றவர்களும் ”ஹோஓ”வென கூச்சல் போட காமன் ஹாலே திருவிழாக் கோலமானது. அப்படியே உட்கார்ந்து

விளம்பரத்திற்குப் பிறகு வந்த ஷங்கர்-ரஜினி கூட்டணியைப் பற்றிய முழு செய்தியைப் பார்த்துவிட்டு மட்டற்ற மகிழ்ச்சியுடன் சாப்பிடச் சென்றோம்.  செய்தியில் படத்தின் பெயர் என்ன என்பதயெல்லாம் யாரும் குறிப்பிடவில்லை. நாங்களே டைட்டில் எப்படி இருக்கப்போகிறது என பல யூகங்களை உருவாக்கியிருந்தோம்.


அடுத்த இரண்டாவது நாளில் கல்லூரி டீக்கடையில் ஒரு பேப்பர் செய்தி. ”ஷங்கர்-ரஜினி இணையும் திரைப்படத்திற்கு சிவாஜி என பெயரிடப்பட உள்ளதாகத் தகவல்” என இருந்தது.


“எலே என்னது? சிவாஜியா? என்னலே இத எப்டிப் படிச்சாலும் மாஸா இல்லையேலே” என மிகப்பெரிய ஏமாற்றம். ஆனால் எல்லாம் சில நாட்கள் தான்.


“அருணாச்சலம் டைட்டில மொதல்ல கேக்கும்போது என்னடா இது அருணாச்சலம், வேதாச்சலம்னு ரொம்ப சுமாரான டைட்டிலா இருக்கேன்னு நினைச்சேன். ஆனா அதயே ரஜினிசார் “அருணாச்சலம்”ன்னு கணீர்னு சொன்னப்போ அந்த டைட்டிலே பயங்கர பவர்ஃபுல்லா தெரிஞ்சிது.. அப்டியே ஒத்துக்கிட்டேன்” என சுந்தர்.சி கூறியிருப்பார். அதேபோல சில நாட்களிலேயே சுமாரான சிவாஜி, சூப்பரான டைட்டிலாக மாறிப்போனது.


இரண்டு மூன்று வாரம் கழித்து ஒருநாள் காலை ஆறுமணிக்கெல்லாம் ரூம் மேட் பிரபு ஆழ்ந்த நித்திரையில் இருந்த என்னை “யோவ்.. எந்திரிய்யா..  யோவ் எந்திரிய்யா” என வேக வேகமாக எழுப்பினான்.


என்ன இவன் விடியக்காலமே எழுப்பி விடுறான் என அலுத்துக்கொண்டே எழுந்தால் மடியில் அந்த ஹிந்து பேப்பரைப் வீசினான். பேப்பரில் சிவாஜியின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர். அதுவரை பார்த்திராத வித்யாசமான, சந்திரமுகியைக் காட்டிலும் இளமையான ரஜினி. ச்ச.. செம்மடா... அன்று மட்டும் கிட்டத்தட்ட பத்து பேராவது என்னிடம் பேப்பரைக் கொண்டு வந்து கொடுத்திருப்பார்கள், அந்தப் போஸ்டரை வெட்டி வைத்துக்கொள்வதற்காக. அந்த போஸ்டர்தான் ஃபைனர் இயர் முடியும் வரை என்னுடைய ரூம் சுவற்றில்   முருகனுக்கு அருகில்  ஒட்டப்பட்டிருந்தது. இன்னும் பத்திரமாக உள்ளது.


நான்காமாண்டு முடியும் தருவாயில் கல்சுரல்ஸிற்கு நான்கு நாட்களே இருந்த சமயம். சிவாஜியின் மூன்று பாடல்கள் லீக் ஆனது. அதில் ஒன்றை கல்லூரி ஆர்கெஸ்ட்ராவில் சேர்ந்து விடுவோமா என்று கூட யோசித்தோம். ஆனால் ஏற்கனவே பாடல்களெல்லாம் முடிவு செய்யப்பட்டு விட்டதால், மீண்டும் கேட்டால்  orchestra co-ordinator ரவிக்குமார் கடித்து வைத்து விடுவார் என அதை அப்படியே விட்டுவிட்டோம்.


மற்ற பாடல்கள் ரிலீஸான பொழுது ஊருக்குச் சென்றதால் உடனடியாகக் கேட்க முடியவில்லை. ஆனால் SPB பாடிய பாடல் எப்படி இருக்கிறது எனத் தெரிந்துகொள்ள அவ்வளவு ஆர்வம். நண்பர் Karthick Chandrasekar  ற்கு கால் செய்ய, ஹாஸ்டலில் இருந்த அவருடைய டேப்பில் முழு சத்தத்துடன் அந்தப் பாட்டை ஒலிக்க விட்டு ஃபோனில் கேட்க வைத்தார்.


கல்லூரி முடிவதற்குள் படம் வந்துவிட்டும், ஒன்றாகப் பார்த்துவிட்டு ஊருக்குச் செல்லலாம் என்றிருந்தோம். ஆனால் ரீலீஸ் தள்ளிப் போய், அது நிறைவேறாமல் போனது. ஊருக்குச் சென்றோம்.


கம்பெனியில் சேர்வதற்கான தேதியைக் கொடுத்துவிட்டார்கள். சிவாஜியின் ரிலீஸ் தேதியும் வந்தது. ஜூன் பதினைந்து. பட்டுக்கோட்டை அருண் திரையரங்கில் காலை ஏழு மணிக்காட்சி. அதற்குள் முதல் நாள் இரவு படம் பார்த்த சென்னை நண்பர்கள் புகழ்ந்து தள்ளிக்கொண்டிருக்க அன்றைய இரவு ரொம்பவே மெதுவாகக் கடந்துகொண்டிருந்தது.


காலை ஏழுமணிக்கு காட்சி ஆரம்பம்.  One of the best thalaivar movies. மன நிறைவுடன் மறுநாள் இரவு சென்னைக்கு கிளம்பினேன் முதன் முதலாக வேலையில்  சேர்வதற்காக.

நேற்று நடந்தது போல இருக்கிறது.  பதினைந்து ஆண்டுகள் ஒடிவிட்டது. சிவாஜி வந்தும், நான் வேலைக்கு சேர்ந்தும். நாளை மறுநாளுடன் L&T யில் பதினைந்து ஆண்டுகளை நிறைவு செய்கிறேன்.


-

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...