Sunday, February 18, 2018

நாச்சியார்!!!


Share/Bookmark
நேத்து ஃப்ரண்டு ஒருத்தன் இந்தப் படத்தப் பாத்துட்டு பயங்கர பெணாத்தல். ”பாலா வித்யாசமா படம் எடுத்துருக்காருடா.. பாலா பட்டையக் கெளப்பிருக்காருடா… இதுவரைக்கும் பன்னாத மாதிரி படம் பன்னிருக்காருடா.. ஹேட்டர்ஸ் எல்லாம் சாவுங்கடா”

“சரி ஒரு நிமிஷம் நீ இப்டி வாடா.. என்ன வித்யாசமா படம் எடுத்துருக்காரு?”ன்னு கேட்டேன்.

“க்ளைமாக்ஸ்ல யாரையுமே கொல்லாம படம் எடுத்துருக்காருல்ல.. பாலா கெத்துடா…”ன்னான்.

”இன்னும் கொஞ்சம் பக்கத்துல வா..த்தூ…”


அவனச் சொல்லி குத்தம்மில்ல.. இந்த செகப்பு கலர்ல பேர் போட்டுக்குற டைரக்டர்களோட படம்னாலே நம்ம பயலுக மொதல்ல “சூப்பரப்பு”ன்னு கை தட்டிட்டுத்தான் அப்புறம் படம் எப்டி இருக்குன்னு யோசிப்பானுங்க. மணிரத்னம், மிஷ்கின், பாலான்னு டைட்டில் கார்டுல அவங்க பேர செகப்பு கலர்ல போட்டுக்கிட்டாலே அவங்க ஒரு டெர்ர்ரான டைரக்டர்ஸ்னு நம்ம மைண்டுல பதிஞ்சி போச்சு


வீடியோ விமர்சனத்திற்கு கீழே க்ளிக்கவும்!!


இந்தப் படத்தோட போஸ்டர் வந்த எல்லாருக்குள்ளயும் ஒரு கன்பீசன். க்ளைமாக்ஸ்ல சாகப்போறது ஜிவி ப்ரகாஷா, ஜோதிகாவா இல்லை ஜோதிகா கையில இருக்க குழந்தையான்னு? இந்த மூணு பேருமே சாகலன்னதும் இது ஒரு மிகப்பெரிய வித்யாசமான படமா தெரியிதே தவற மத்தபடி ஒண்ணும் இல்ல.

படத்தோட கதைன்னு பாத்தா “யாருடா மகேஷ்… மகேஷ் who are you?” அப்டின்னு ஒரு படம் வந்துச்சி. அந்தப் படத்தோட கதைதான் இந்தப் படத்தோடதும். அது என்ன கதைன்னு கேக்குறீங்களா? சொல்லக்கூடாது.. அதான் இந்தப் படத்துல பெரிய டுஸ்ட்டே..

ஜோதிகா வர்ற காட்சிகள் கொஞ்சம் பரவால்ல. விஜய் நார்மலா நல்லாருப்பாரு.. ஆனா போலீஸ்  கெட்டப் போட்டா மட்டும் வாய் ஒரு மாதிரி கோணிக்கும். அதே மாதிரி ஜோதிகாவுக்கு படம் முழுக்க வாய் அதே மாதிரி கோணிட்டே இருக்கு. கெத்தா இருக்காங்களாம். வாயில என்னசார் கெத்து? மத்தபடி ஜி.வி.ப்ரகாஷ், இவானா சம்பந்தப்பட்ட காதல் காட்சிகளெல்லாம் அப்டியே வழக்கு எண் 18/9 படத்த ஞாபகப் படுத்துது. ஜி.வி போட்டுருக்க டி ஷர்ட் கூட வழக்கு எண்ல ஸ்ரீ போட்டது மாதிரி இருந்துச்சின்னா பாத்துக்குங்களேன்.

படத்தோட டைட்டில் கார்டுல “அறிமுகம்” ராக்லைன் வெங்கடேஷ்ன்னு போட்டடாய்ங்க. அட நம்ம லிங்கா புரடியூசருல்லன்னு நினைச்சிட்டு படம் ஃபுல்லா தேடிப்பாத்தேன் ஆளையே காணும். அப்புறம் வீட்டுல வந்து நெட்டுல தேடிப்பாத்தாத்தான் தெரியிது சோதிகா கூட வர்ற கட்டை மீசை போலீஸ்காரர்தான் ராக்லைன் வெங்கடேஷூன்னு. அவன் அவன் கெட்டப் சேஞ்ச் பன்ன என்னென்னவோ பன்னிட்டுருக்கானுங்க. ஆனா கெட்டப் மாற மாட்டுது. இங்க அரை இஞ்ச் மீசைய தடிமனா வச்சி ஆளையே அடையாளம் தெரியாம மாத்திட்டானுங்க.

பாலா படம்னு சொன்ன உடனே இளையராஜா கதையெல்லாம் கேக்காம அசிஸ்டண்ட் கிட்ட “நாலு சாவு மியூசிக்க தூக்கிப் போட்டுவிடுய்யா”ன்னு சொல்லிட்டு போய்ட்டாரு போல. படத்துல சோகமே இல்ல.. ஆனா மீசிக்குல ஒரே சோக மயம். அப்ப அதானே?

கள்வனின் காதலி படத்துல சம்பந்தமே இல்லாம அப்பப்ப ஒரு பொண்ணு வந்து “கலத்கா.. மத்கர்”ன்னு சொல்லிட்டு போயிரும். அது ஏன் வருது.. அது யாருண்ணே தெரியாது.. அந்த மாதிரி இந்தப் படத்துல ஒருத்தன் இருக்கான். சோதிகா புருசன். அப்பப்ப வந்துட்டு “சொல்லிட்டியா சொல்லலியா? சொல்ல்லன்னா சொல்லிரு”ன்னு ஜோதிகாட்ட சொல்லிட்டு போயிருவான். கடைசி வரைக்கும் அந்த ஒரே வசனம்தான். அது வேற யாரும் இல்ல.. மீனாக்‌ஷி மிஷன் டாக்டர் குருஷங்கரு. சினிமா ஆசை யார உட்டுச்சு...

க்ளைமாக்ஸ்ல யாரும் சாகலைங்குறத் தவற படத்துல பெரிய விஷயங்கள்லாம் எதுவும் இல்லை. பாலாவோட அதே வழக்கமான பல்லு விளக்காம காரக்க்குழம்பு தலையோட வர்ற ஹீரோ,  சிரிப்பு வராத காமெடிகள், ரொம்ப கடுப்பேத்தாத சுமாரான காதல் காட்சிகள்னு, சுமாரா படம் நகருது.

.முதல் ஓரிரு படங்களுக்குப் பிறகு, க்ளைமாக்ஸ்ல அவர் காட்டும் குரூரங்களைத் தவிர்த்து அவர் படத்தோட மற்ற காட்சிகளப் பாத்தா ரொம்ப ரொம்ப ரொம்ப சுமார் ரகமாத்தான் இருக்கும். ஒரு வசனம் கூட நல்லாருக்காது. நகைச்சுவைக் காட்சிகளுக்கு படத்துல இருக்க கேரக்டர்கள்தான் சிரிக்குமே தவிற நமக்கு சிரிப்பு வராது.  நெகடிவ் க்ளைமாக்ஸ் மக்களுக்கு பிடிக்கலன்னு அவர உணர வைக்கவே நாலு படத்த தொர்ந்து ஊமை குத்தா குத்தி ஃப்ளாப் ஆக்க வேண்டியிருக்கு. இந்தப் பல்லு வெளக்காத ஹீரோ கதைகளை விட்டுட்டு கொஞ்சம் வெளில வந்து எடுத்தாதான் அவரோட கெப்பா குட்டி தெரியும்.

எனக்கென்னவோ அர்ஜூன் ரெட்டி ரீமேக்க கூட ஹீரோ காலேஜ்ல கக்கூஸ் கழுவுறவன், ஹீரோயின் க்ளாஸ் ரூம் பெருக்குறவ. இவங்க ரெண்டு பேருக்கும் இடையில வர்ற காதல்ன்னு கதாப்பாத்திரங்கள மாத்தி எடுத்தாலும் எடுத்துருவாரோன்னு பயமா இருக்கு.

வெறுப்பேத்தாத பாலா படம் என்பதைத் தாண்டி ”ஆஹா ஓஹோ” “அல்டிமேட்டுடா அம்பி”ன்னு சொல்ற அளவுக்கெல்லாம் ஒர்த்தான படம் இல்லை. போரடிக்காம ஓடுது. ஒரு தடவ பாக்கலாம். 

  

Wednesday, February 14, 2018

கலகலப்பு 2!!!


Share/Bookmark
ஹீரோக்கள் அமெரிக்க மாப்பிள்ளைகள் மாதிரியும் காமெடியர்கள் ஹீரோக்கள் மாதிரியும் திரைப்படங்கள்ல உலா வருவது பெரும்பாலும் சுந்தர்.சி படங்கள்ல மட்டும்தான். ஒரு மார்க்கெட் இல்லாத ஹீரோ, பீக்ல இருக்க ஒரு காமெடியன் இந்த காம்பினேஷன்ல தான் சுந்தர்.சி படம் பண்ணிட்டு இருக்காரு. இந்த காம்பினேஷன் தொடர்ந்து அவருக்கு வெற்றியையும் குடுத்துக்கிட்டு இருக்கு.

இத்தனை வருஷ தமிழ் சினிமா வரலாற்றுல ரொம்ப நாளா போரடிக்காத ஒரு ஃபார்முலா இருக்குன்னா அது சுந்தர்.சியோட ஃபார்முலாதான். கூட்டுக்குடும்பம், கல்யாணம், ஊர்த்திருவிழா, ஹீரோ காமெடியனுக்கு லவ் பன்ன சொல்லிக்குடுக்குறது, காமெடியன் ஹீரோவுக்கு லவ் பன்ன சொல்லிக்குடுக்குறது.. பெரும்பாலான சுந்தர்.சி படங்கள் இந்த மாதிரி காட்சிகள்தான் சுத்தி சுத்தி வரும். கதை வேணும்னு நினைச்சார்ன்னா எப்பவாச்சும் சேர்த்துக்குவாரு..இல்லன்னா அதயும் டீல்ல விட்டுருவாரு. உள்ளத்தை அள்ளித்தா படத்துல பண்ண அதே காமெடிகளத்தான் இன்னும் செய்யிறாரு. ஆனா இப்பவும் அந்த காமெடிக்கு நம்மள சிரிக்க வைக்கிறாரு. அதான் அவரோட ப்ளஸ்ஸே.. அதே வரிசையில வந்துருக்க அடுத்த படம்தான் கலகலப்பு 2.

கலகலப்பு முதல் பாகத்தோட அதே டெம்ப்ளேட்ல, கிட்டத்தட்ட அதே கதையோட எடுக்கப்பட்ட படம். கடந்த பத்து வருடங்கள்ல மக்களை அதிகம் சிரிக்க வைத்த ஒருசில படங்கள்ல கலகலப்புக்கு முக்கியமான இடம் உண்டு. அப்படிப்பட்ட படத்துக்கு ரெண்டாவது பகுதி எடுக்குறது, அதுவும் முதல் பகுதில இருந்த முக்கிய காமெடியனான சந்தானம் இல்லாமல் எடுக்குறது மிகப்பெரிய சவால்னு தான். சந்தர்.சி அந்த சவால்ல கண்டிப்பா ஜெயிச்சிட்டார்னுதான் சொல்லனும்.

மொத்தப்படமுமே கிட்டத்தட்ட ஒரு திருவிழா மாதிரி இருக்கு. அவ்வளவு முண்ணனி நடிகர்கள். இன்னிக்கு சூழல்ல வடிவேலு, சந்தானம், விவேக், சூரி இந்த நாலு பேரத்  தவற, மற்ற எல்லா காமெடியன்களும் படத்துல இருக்காங்க. இவ்வளவு பேரயும் இனிமே ஒட்டுமொத்தமா ஒரே படத்துல பாக்குற வாய்ப்பு மிகக் குறைவுதான்.

முதல் பாதி போர் அடிக்காம அதே சமயம் ரொம்பவும் சிரிக்க வைக்காம சுமாரான காமெடிகளோட நகருது. முதல் பாதியப் பொறுத்த அளவு  கதாப்பாத்திரங்களையும், அவங்களோட தன்மையையும் நமக்கு அறிமுகப்படுத்தி, ரெண்டாவது பாதியில நம்மள நான் ஸ்டாப்ப சிரிக்க வைக்கிறதுக்கான ஒரு வார்ம் அப் தான்.

ஆனா  அத ஈக்குவல் பன்ற மாதிரி ரெண்டாவது பாதி ஆரம்பிச்சதுலருந்து  முடியிற வரைக்கும் நம்மள சிரிக்க வைச்சிருக்காங்க. முதல் பாதி பெரிய அளவுல நம்மள ஈர்க்கத்தற்கு காரணம் ஜீவா. என்னைப்பொறுத்த அளவு ஜீவா ஒரு ஹீரோ மெட்டிரியலே இல்ல. கதை சற்று டொம்மையாக இருந்தாலும் சில ஹீரோக்கள் திரையில அந்த குறை இல்லாம பாத்துக்குவாங்க. உதாரணமா சமீபத்துல வந்த ஸ்கெட்ச். ரொம்ப சுமாரான க்ளீஷேயான காட்சிகள்தான் படம் முழுக்க., அதுல விக்ரமுக்கு பதில வேற ஒரு சுமார் ஹீரோ நடிச்சிருந்தா பத்து நிமிஷம் கூட உக்கார்ந்திருக்க முடியாது.

ஜீவாவுக்கு அந்த கெப்பாகுட்டி ரொம்ப ரொம்பக் குறைவு. ஜீவாவால இந்தப் படத்துக்கு எந்த ஒரு value addition உம் இல்ல. கலகலப்பு முதல் பாகத்துல நடிச்ச விமலே பரவால்லன்னு தோணுச்சி. விமலுக்கு காமெடி வராதுன்னாலும் விமல வச்சி காமெடி பண்ணிக்கலாம். என் கூட படம் பாத்த ஒருத்தர் படம் ஆரம்பிச்சி ஒருமணி நேரத்துக்கப்புறம் ஹீரோ எப்பங்க வருவாருன்னு கேட்டுக்கிட்டு இருக்காரு. மிர்ச்சி சிவா ஃபேன் போல.


படத்துக்கு பெரிய ப்ளஸ் சிவா. சிவாவுக்கு ப்ளஸ் அவரோட டயலாக் டெலிவரி. சீரியஸான டயலாக்க அவர் பேசுனா கூட செம்ம காமெடியா இருக்கும். கலகலப்பு 1ல வில்லன்கிட்ட “நீ அந்த வைரத்த குடுத்ததாதான் எனக்கு கல்யாணம் ஆகும். எனக்கு கல்யாணம் ஆகனும்னு உனக்கு ஆசையில்லை” அப்டின்னு மூஞ்ச செம சீரியஸா வச்சிட்டு கேப்பாரு. இந்தப் படத்துலயும் அவர் பேசுற நிறைய அசால்ட்டு வசன்ங்கள் சிரிக்க வைக்கிது 
  

மத்தபடி எல்லா காமெடியன்களுமே நல்லா பண்ணிருக்காங்க. முனீஷ்காந்த்துக்கு இன்னும் நல்ல ஸ்கோப் குடுத்துருக்கலாம். யோகிபாபு, சிங்கமுத்து காம்பினேஷன் செம. ராதாரவிக்கு பதிலா அவரோட ரோல் ஆனந்தராஜ் பண்ணிருந்தா பட்டைய கிளப்பிருக்கும். ஜெய் ஒரு தேவையில்லாத ஆணிதான். பெரிய அளவுல ஸ்கோப் இல்லை. ஹீரோயின்கள் எப்பவும்போல பாட்டுக்கு மட்டும். 

பாடல்கள் ஹிப்ஃஹாப் தமிழா. எல்லா பாடல்களுமே கேக்குற மாதிரி போட்டுருக்காரு. படத்துல மொத்தம் 5 பாட்டு. அஞ்சி பாட்டுலயுமே ரெண்டு ஹீரோவும் ரெண்டு ஹீரோயினும் டான்ஸ் ஆடுறாங்க. டபுள் ஹீரோ சப்ஜெக்ட்னா ரெண்டு ஹீரோவுக்கும் ஈக்குவல் இம்பார்டன்ஸ் குடுக்கனும்னு சொல்லுவாங்க. ஆன இந்த அளவுக்கு பாட்டுல கூட துண்டு விழுகாம ரெண்டு ஹீரோவுக்கும் சமமா பிரிச்சி குடுத்து டீல் பன்றத நா இப்பதான் பாக்குறேன். அந்த மூணாவது ஹீரோ எங்கன்னுதானே கேக்குறீங்க..? அவர் இண்டர்வல்ல வர்றதால செகண்ட் ஹாஃப்ல வர்ற ரெண்டு பாட்டுல அவரும் ஜாய்ண்ட் அடிச்சிக்குவாரு.


மொத்தத்துல அரண்மனை 2 ல விட்டத கலகலப்பு 2 ல சுந்தர்.சி புடிச்சிட்டாரு. சத்யம் தியேட்டர்லயே சத்தம் போட்டு சிரிக்கிறாய்ங்கன்னா பாத்துக்குங்க. குடும்பத்தோட கண்டிப்பா பார்த்து சிரிக்கவேண்டிய படம். 


Monday, February 5, 2018

ஒரு நல்ல நாள் பாத்து சொல்லுறேன் – கொல்லுறேன்னு வச்சிருக்கனும்!!!


Share/Bookmark
”விஜய் சேதுபதி மாதிரி ஒரு நல்ல மனுஷனப் பாக்க முடியாதுப்பா… ஃப்ர்ண்ட்ஸ் போய் கேட்டா இல்லைனு சொல்லாம உடனே படம் நடிச்சி குடுப்பாருப்பா…. இது அவர் நட்புக்காக நடிச்சி குடுத்த படம்ப்பா… அதான் அவ்வளவு நல்லா இல்லை.. “ விஜய் சேதுபதியின் மொக்கை படங்கள் ரிலீஸாகும் போதெல்லாம் இது போன்ற பல வசனங்கள் காதுல வந்து விழவது இப்பல்லாம் சகஜமாகிப் போச்சு. எதோ இவருக்கு மட்டும்தான் நண்பர்கள் இருக்க  மாதிரியும் மத்தவங்கல்லாம் யாருமே இல்லாம அத்துவிட்டு திரியிற மாதிரியும்.

ஒரு பையன் டீச்சர் கிட்ட “மிஸ்… இன்னிக்கு நா ரெண்டு பேருக்கு உதவி பண்ணிருக்கேன்”ன்னாம்.

உடனே டீச்சர்.. “அப்டியா.. சூப்பர்.. யார் யாருக்கு உதவி செஞ்ச?”ன்னு கேட்டதும்

“வழில ஒரு கிளி பறக்க முடியாம பாவமா விழுந்து கிடந்துச்சி…  அது வண்டில எதுவும் அடிபட்டுறக் கூடாதுன்னு காப்பாத்துனேன்”

 “சரி ரெண்டாவது உதவி ?

“வழில வந்துகிட்டு இருக்கும்போது ஒரு பூனை பசியோட இருந்துச்சி.. அந்தப் பூனைக்கு நா காப்பாத்துன கிளிய சாப்புடக் குடுத்தேன்” ன்னானாம். விஜய் சேதுபதி செய்யிற உதவியும் அப்டித்தான். சேதுபதி சார்.. உதவி செய்யிங்க.. வேணாம்ங்கள..  நீங்க உதவி செய்யிறதுக்கு ஏன் உங்கள நம்பி படம் பாக்க வர்ற எங்க உசுற எடுக்குறீங்க?

விஜய் சேதுபதி படம்னா யார் இயக்குனர்னுலாம் பாக்காம “விஜய் சேதுபதி படம்னா நல்லாருக்கும்யா”ன்னு நம்பி வர்றவன “இனிமே வருவியா.. வருவியா”ன்னு கழுத்தாம்பட்டையிலயே சாத்து சாத்துன்னு சாத்துற படம் தான் ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்.

Spoiler Alert லாம் போட்டு spoiler alert க்கு உள்ள மரியாதைய நா கெடுக்க விரும்பல.

நகைச்சுவைப் படம் எடுக்குறது ஒண்ணும் அவ்வளவு ஈஸி இல்ல. என்ன சொன்னாலும் சிரிக்கிறதுக்கு நம்மாளுக முட்டாள்களும் இல்லை. என்னதான் நகைச்சுவைப் படங்களுக்கு லாஜிக் தேவை இல்லைன்னாலும் கதை திரைக்கதையில சில அடிப்படைகளையாவது பின்பற்றியாகனும். அது எதுவுமே இல்லாம ஏனோதானோன்னு எடுக்கப்பட்ட ஒரு அரை வேக்காடு தான் இந்தப் படம்.

”கதைக்களம்” மற்றும் ”கதாப்பாத்திர அமைப்புகளில் தெளிவு” இது ரெண்டும் ஆடியன்ஸ படத்தோட ஒன்றச் செய்யிறதுல மிக முக்கியமான பங்கு வகிக்கிது.  ஆனா இங்க இந்த ரெண்டுலயுமே எந்தத தெளிவும் இல்ல. விஜய் சேதுபதி காட்டுக்குள்ளருந்து ஊருக்குள்ள திருட வந்து, மாறுவேடங்கள்ல போய்த் திருடுறாரு. அதுக்கு ஒரு விக் வச்சி விட்டுருக்காங்க பாருங்க… போக்கிரி பாடி சோடா கெட்டப்பெல்லாம் தோத்துரும். அந்த மண்டையோட ஒருத்தன் ஒரு இடத்துக்கு போனாலே மண்டையில நெருப்ப கொளுத்திப் போட்டு அனுப்பிருவானுங்க. இவரு அந்த கெட்டப்ல பல இடங்கள்ல திருடுறாரு.

அடுத்து அவரோட பழக்கவழக்கமும் பேச்சும். தமிழ் லோக்கல் பாஷையில பேசுறாரு.. தெலுங்குல பேசுறாரு.. திடீர்னு இங்க்லீஷ்ல பேசுறாரு. அதுவும் அவர் கூட இருக்க ரெண்டு அள்ளக் கையிங்க.. அடடா அபாரம்.. Sneak Peak ஒரு சீன் பாத்திருந்தாலே தெரிஞ்சிருக்கும். ”அண்ணேன் நாங்க காரு… நீங்க சாவி” அதுதான் படத்துல இருக்கதுல கொஞ்சம் பரவால்லாத மொக்கன்னா பாத்துக்குங்க..

அரை கிரவுண்ட் இடத்துல போடப்பட்ட ஒரு கண்றாவியான செட்டுல, கருப்பு ட்ரஸ் போட்ட ஒரு நாப்பது பேர் அங்கயும் இங்கயும் சுத்தவிட்டா அதான் விஜய் சேதுபதியோட மலை கிராமம். லோ பட்ஜெட்ல படம் எடுக்க வேணாம்னு சொல்லல.. பட்ஜெட்டே இல்லாம படம் எடுக்காதீங்கன்னுதான் சொல்றோம். விஜய் சேதுபதியின் கிராமம் சம்பந்தப்பட்ட காட்சிகள்லாம் கிட்டத்தட்ட ZEE டிவி டப்பிங் சீரியில் பாக்குற எஃபெக்ட்ட தான் குடுக்குது.

ஹீரோயின் பாக்குற மாதிரி இருக்கு. “ஃப்ரண்டு ஃபீல் ஆயிட்டாப்ள” டேனியல் தான் ஒரளவுக்கு ஆறுதல். அவரும் காமெடிங்குற பேர்ல நிறைய சீன்ல கத்தி கத்தி காது ஜவ்வ கிளிச்சி விட்டுட்டாரு.

இந்தக் கொடுமையெல்லாம் ஒரு பக்கம்னா கவுதம் கார்த்திக் இன்னொரு பக்கம். அடிக்கடி மூஞ்ச மூஞ்ச காட்டி ஒரே இம்சை. அவர ஹீரோயின் பக்கத்துல வச்சி பாக்குறப்போ யார் ஹீரோ யார் ஹீரோயின்னு கண்டுபுடிக்கிறதே நமக்கு பெரிய சவால்.

“கீழ ஒரு கிராமம்.. மேல ஒரு கிராமம்” இந்த கான்செப்ட் நல்லா இருந்துச்சி. இத மெயினா வச்சி இது தொடர்பான சுவாரஸ்யமான காட்சிகள முதல்ல குடுத்துட்டு பொண்ண தூக்குற மேட்டர சைடாக்கிருந்தா  ஒரு வேளை சுவாரஸ்யமா இருந்தாலும் இருந்திருக்கலாம்.

விஜய் சேதுபதி தலையில கொம்பு வச்ச கிரீடம் வச்சிட்டு வரும்போது, நீளமான முடி வச்சிருக்க கெட்டப்புல வரும்போதெல்லாம் அவரப் பாக்க பாவமாத்தான் இருந்துச்சி. இதெல்லாம் தெரிஞ்சிதான் பன்றாரா இல்ல கமிட் ஆயிட்டோமேன்னு கடனுக்கு எதாவது செய்வோம்னு செய்றாரா இல்ல உண்மையிலயே எதுவும் தெரியாம இதயெல்லாம் சீரியஸா செய்றாரான்னு ஒண்ணும் புரியல. ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்.

நா எத வேணாலும் பொறுத்துக்குவேன். ஆனா படம் முடியும்போது ரெண்டாவது பார்ட்டுக்கு டைரக்டர் ஒரு லீடு குடுக்குறாரு பாருங்க… அத மட்டும் என்னால பொறுத்துக்கவே முடியல. பட் அந்த confidence ah பாராட்டியே ஆகனும். ”அந்த ஓட்டக் கண்ணாடியப் போட்டுக்கிட்டு எப்புடித்தான் துணிஞ்சி முன்னால நிக்கிறியோ..”
  

இன்னும் கழுவி ஊத்த நிறைய இருந்தாலும் மூடு இல்லாத காரணத்தால இதோட முடிச்சிக்குவோம்.


மொத்தத்துல இந்தப் படம் பாக்கப்போற மூணு மணி நேரத்துல காலு ரெண்டயும் கதவுக்கு முட்டுக்குடுத்து, மல்லாக்கப் படுத்து விட்டத்தப் பாத்து கொரட்டை விட்டு நல்லா தூங்குறது மேல்…

    
   

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...