ஸ்கூல்
படிக்கிற காலத்துல இருந்தே நாட்டைப் பத்தி யாராவது பேசும்பொழுது, ”மாற்றம் வேணும்னா
இளைஞர்கள் அரசியலுக்கு வரவேண்டும்”, ”நாடு முன்னேறனும்னா இளைஞர்கள் நாட்டை ஆள வேண்டும்”,
”படித்தவர்கள் வரவேண்டும்” இப்படித்தான் சொல்லிக்கிட்டு இருந்தாங்க. இப்பவரைக்கும் சொல்லிக்கிட்டு இருக்காங்க. முன்னால
அரசியல் பற்றிய ஆர்வம் வெகுசிலருக்கே இருந்ததாலும், அரசியல் பற்றிய தனிமனித நிலைபாடுகள்
டீக்கடை பெஞ்சுகளோடு போய்விட்டதாலும் அதுமாதிரி சொல்லியிருக்கலாம். ஆனா இன்னிக்கு கிட்டத்தட்ட
இளைஞர்கள் நேரடியாக அரசியலுக்கு உள்ள இறங்கலன்னாலும், சமூகவலைத்தளங்கள் மூலம் அவங்களுடைய
அரசியல் பற்றிய நிலைபாடு என்னங்குறத தெளிவா சொல்லிக்கிட்டு தான் இருக்காங்க. இந்த நிலைபாடுகளைப் பாக்கும்போது, ”இளைஞர்கள்
வந்தா மாற்றம் வரும்” ங்குற நம்பிக்கை சுத்தமா போயிருச்சி.
பெரும்பாலும் இணையதளங்கள்ல அரசியல் பேசுறவியிங்க, 1925 லருந்து மொத்த இந்திய
அரசியல் வரலாற்றையும் கரைச்சி குடிச்சா மாதிரிதான் பேசுவாய்ங்க. “காந்தி ஏன் நேருவ பிரதமரா போட்டாரு தெரியுமா?” “இந்திரா காந்திய
ஏன் சுட்டாங்க தெரியுமா?” “பெரியார் இன்னா சொல்லிருக்காரு தெரியுமா?” “1975ல டில்லில
என்ன நடந்துச்சின்னு தெரியுமா?” ன்னு ஒட்டுமொத்த இந்திய அரசியலும் அவிய்ங்க கைக்குள்ள இருக்க மாதிரிதான் நினைச்சிக்கிட்டு
சுத்துறாய்ங்க. உண்மை என்னன்னு பாத்தா நாயி மொத்தமாவே ஒரு நாலு புத்தகத்த அங்கங்க மேஞ்சிட்டு
வந்து இங்க பீலா விட்டுக்கிட்டு இருக்கும்.
ஒரு கட்சி எலெக்ஷன்ல ஜெயிச்சி ஆட்சியப் புடிச்சிட்டா, மற்ற கட்சிகளோட பார்வையில
அடுத்த அஞ்சி வருஷத்துக்கு அவங்க செய்யிற அனைத்துமே தப்பாகத் தெரியிது. எதிர்கட்சியா
இருந்தாலுமே நல்ல திட்டங்களைச் செயல்படுத்தும்போது பாராட்டவும், சரியில்லாத திட்டங்களை
விமர்சிக்கவும் செய்யனும். ஆனா இங்க ஆளுங்கட்சி எதுசெஞ்சாலும் மற்றவர்கள் பார்வையில அது தவறு. சுருக்கமா
சொல்லனுமா “அதெல்லாம் எங்களுக்குத் தெரியாது.. வார்டன்னா அடிப்போம்” கதைதான்.
எது நல்லது கெட்டதுங்குறதத் தாண்டி இது எங்களால நடந்துச்சா இல்லை உங்களால நடந்துச்சாங்குறதுலான்
எல்லாரும் குறியா இருக்காய்ங்க. ஒவ்வொரு கட்சிக்கும் அவியிங்க பன்றத நியாயப்படுத்தவும்
அடுத்தவன கிழிச்சி தொங்கவிடவும் சொந்தமா ஒரு டிவியும் ஒரு நியூஸ் பேப்பரும்.
எந்தக்கட்சியா இருந்தா என்ன? தப்புன்னா தப்புன்னு சொல்றதும், ரைட்டுன்னா ரைட்டுன்னு
ஒத்துக்கிற மனப்பான்மையும் எப்ப வளருதோ அப்பதான் எதாவது முன்னேற்றத்துக்கான வழி தெரியும்.
இப்ப இருக்க எல்லா இணையதள அரசியல்
பீரங்கிகளுமே, அதே சாக்கடையில் ஏற்கனவே இருக்கும் பன்றிகளுக்கு இடையில தங்களையும் நுழைச்சிக்கிட்டு
அதே நாற்றத்தில் வாழ்ந்துகிட்டு அடுத்தவன் மேல அதே சாக்கடையை வாரி இறைக்கும் பணியைத்தான்
செஞ்சிக்கிட்டு இருக்காய்ங்க. அவர்களால் எந்த வித பயனும் இருக்கப்போவதில்லை
இப்ப கடந்த ரெண்டு வாரங்களா ”வரிசையை பார்த்தீர்களா?” “சாமானியரை பார்த்தீர்களா?”
ந்ன்னு தம் கட்டி demonetization ஐ எதிர்ப்பவர்கள் யார் யாருன்னு அவனுங்க வரலாற கொஞ்சம் பாத்தா, மோடி
என்பவரை, அவரது கட்சி ரீதியாகவும், கொள்கை ரீதியாகவும் எதிர்த்துக் கொண்டிருந்தவர்கள்.
நானும் அப்படி எதிர்ப்பவர்கள், இந்த திட்டத்தில் எதேனும் நல்லது இருக்கிறது என கூறுவார்களா
என ஒவ்வொரு முறையும் பாத்துக்கிட்டே இருக்கிறேன்.
பாதமான விஷயங்கள் இருப்பவற்றை ஊதி ஊதி பெரியதாக்கிக் காட்டுக்கிறார்களே தவிற, திட்டத்தின்
பலன்களை ஒப்புக்கொள்ள யாருக்கும் மனது வரவில்லை.
”எல்லையில் ராணுவ வீரர்கள்” ன்னு எவனோ ஒருத்தன் ஆரம்பிச்சி விட்டத கிண்டல் பன்றவனுங்க
யாருன்னு பாத்தா “2002 ல குஜராத் கலவரத்துல என்ன நடந்துச்சி தெரியுமா?” ன்னு கேக்குற
குரூப்பா இருக்கானுங்க. இங்க இருக்க ஒவ்வொரு அரசியல்வாதியோட வரலாறயும் அதே மாதிரி பின்னோக்கிப் பாத்தா, இன்னிக்கு
ஐயான்னும் எவனும் சொல்லமாட்டான், அம்மான்னும் எவனும் சொல்லமாட்டான். ஒவ்வொருத்தன் ஃப்ளாஷ்பேக்கும்
அவ்வளவு நாத்தம்
இதுல எல்லா கட்சியும் ஒண்ணு சேந்து ஆளும்கட்சியோட முடிவ எதிர்த்து போராட்டம்.
“நல்ல திட்டம் தான்… ஆனா கொஞ்சம் கஷ்டம்”ன்னு முதல் நாள் பூசி மொழுகிய கட்சிகள் இப்ப
முழு எதிர்ப்பு. ஈழத்தில் மக்கள் செத்துக்கிட்டு இருந்தப்ப, காங்கிரஸ கழுவி கழுவி ஊத்துனவியிங்க
இன்னிக்கு பல்ல காட்டிக்கிட்டு சொம்பு தூக்கிட்டு இருக்காய்ங்க. இதுல இன்னொரு மெண்டலு
நாட்டோட ப்ரச்சனை தீரனும்னா “ராகுல் காந்தி ப்ரதமர் ஆக வேண்டும்”ன்னு சொல்லுது. அந்தக்
கொழந்தைக்கு என்னய்யா தெரியும்?
இவனுங்க சமாளிக்கிறதுக்காக வச்சிருந்த சாமானியர்கள் அத்தனை பேரும் கையில இருந்த
பணத்த பேங்குல டெபாசிட் பன்னிட்டாங்க. இப்ப நீங்க சொன்ன சாமானியர்கள் வங்கிகளிலும்,
ATM களில் வரிசையில் நிற்பது, டெபாசிட் பன்னத எடுப்பதற்கு தானே தவிற கட்டுக்கட்டாக
பழைய நோட்டுகளை வைத்துக்கொண்டு அல்ல. அப்படி இருக்க இப்ப இவய்ங்க யாருக்காக திட்டத்த
திரும்ப பெற சொல்லி கேக்குறானுங்க?
தெலுங்குல Rana Daggubati நடிச்ச ”Leader”
ன்னு ஒரு படத்துலருந்து ஒரு காட்சி ஞாபகம் வருது. எதிர்பாராத சூழல்ல ராணா முதலமைச்சர்
ஆயிருவாரு. மக்களுக்கு எதாவது நல்லது செய்யனும்னு Anti-Corruption Force ன்னு ஒரு டீம்
உருவாக்கி எல்லா மக்களையும், MLA, MP ன்னு
கூட பாக்காம அவங்க கண்ட்ரோல்ல கொண்டு வந்து
கருப்பு பணம் வச்சிருக்கவங்கள உடனடியா தண்டிக்கிறதுன்னு ஒரு திட்டத்த propose பன்னுவாரு.
உடனே Assembly ல எல்லாரும் கத்த ஆரம்பிச்சிருவாங்க. “இது வேலைக்காது”ம்பான் ஒருத்தன்.
இதுல ஓட்டை இருக்கும்பான் இன்னொருத்தன். மொத்தத்துல இந்த திட்டம் வரவே கூடாதுன்னு கோரஸா
சொல்லுவானுங்க. Assembly கொஞ்ச நேரம் ஒத்தி வச்சிருவாங்க.
வெளில வர்ற ராணா, கட்சியோட மூத்த தலைவர் ஒருத்தர்கிட்ட “என்ன சார்… கருப்பு
பணம், லஞ்சத்த ஒழிக்கிறதுக்கு சட்டத்த கொஞ்சம் strict பன்ன விடமாட்டேங்குறாங்களே?”
ம்பாரு
உடனே அந்த மூத்த தலைவர் “அதெல்லாம் பன்னக்கூடாதுப்பா.. அப்புறம் நம்ம எப்புடி
அரசியல் பன்றது? நம்ம எப்படி ஊழல் பன்றது?” ன்னு கூலா சொல்லுவாரு
“ஏன் சார்…மக்கள் எப்பவுமே இப்படித்தான் இருப்பாங்களா? அவங்க திடீருனு ஒருநாள்
திருந்தி இதையெல்லாம் எதிர்த்து கேள்வி கேட்டா அவங்களுக்கு என்ன பதில் சொல்றது?”
அதுக்கு அந்த மூத்த தலைவர் “ தம்பி… கேள்வி கேக்குறதுக்கு நேரமெல்லாம் மக்கள்
கிட்ட இல்லைப்பா… இப்ப கஷ்டப்பட்டு வேலை செஞ்சி சிக்கன் பிரியாணி சாப்புடுற ஒருத்தன்கிட்டருந்து
சிக்கன நாம புடுங்கிட்டோம்னா அவன் அப்புறம் பருப்பு சாதம் சாப்புட பழகிக்குவான். அப்புறம்
பருப்பையும் புடுங்கிட்டோம்னா வெறும் சாதத்த சாப்புட பழகிக்குவான். கொஞ்ச நாள்ல அந்த
வெறும் சாதம் கூட அவனுக்கு கிடைக்காம செஞ்சிட்டோம்னா அவன் என்ன செய்யிறதுன்னு தெரியாம
பதட்டத்துல சுத்திக்கிட்டு இருப்பான். அப்ப நாம “அரிசி இலவசம்”ன்னு ஒரு அறிவிப்ப விட்டோம்னா
அப்ப நாம தான் அவனுக்கு கடவுள்.. நமக்கே ஓட்டு போட்டுருவாங்க.. இதான் நம்ம அரசியல்
பன்ற முறை.. இப்டி செஞ்சாதான் அவன் நமக்கு ஓட்டு போடுவான் ”ன்னு சிரிச்சிக்கிட்டே பெருமையா
சொல்லுவாரு.
அப்ப ராணா அந்த மூத்தவரு கைய புடிச்சி “நீங்க எப்ப சார் சாவீங்க? உங்களுக்கு
ஒரு 85 வயசு இருக்கும். இந்த கையால நீங்க காந்திய தொட்டுருப்பீங்க.. உங்க கண்ணால நேருவ
பாத்துருப்பீங்க.. இவ்வளவு தெளிவு, இவ்வளவு அனுபவம்லாம் எதுக்கு சார்? அதானல மக்களுக்கு
நயா பைசா ப்ரயோஜனம் இருக்கா சார்? அப்டி இருக்கப்ப நீங்க இருந்தா என்ன செத்தா என்ன?”
ம்பாறு. அந்தாளுக்கு செருப்புல அடிச்சா மாதிரி
இருக்கும். (ஆனா நிஜத்துல செருப்பால அடிச்சா கூட திருந்தாத ஜென்மங்கள் எத்தனையோ இருக்கு)
கொஞ்ச நேரம் ஃபீல் பன்னிட்டு ராணாவோட திட்டத்த எல்லாரயும் ஒத்துக்க வைக்க ஒரு
சின்ன ஐடியா சொல்லி குடுப்பாரு. திரும்ப assembly கூடுன உடனே ராணா அதே திட்டத்த கொஞ்சம்
மாத்தி சொல்லுவாப்ள. என்னன்னா அதே Anti Corruption Force செயல்பாடுகள்ல MLA, MP க்களுக்கு
மட்டும் விலக்கு. அவங்க வீட்டுல வருமான வரி சோதனை செய்ய மாட்டாங்கன்னு மட்டும் சொல்லுவாரு.
அவ்வளவு தான். மொத்த அசம்ப்ளியும் கைதட்டி திட்டத்த ஒத்துக்குவானுங்க.
இப்ப நம்மூர்ல நடக்குறதும் அதே கதைதான். அங்க கொடி புடிச்சிக்கிட்டு எதிர்ப்பு
தெரிவிக்கிறவன் சாமானியர்களுக்காக நிக்கிறான், அவங்களுக்காகத்தான் எதிர்க்கிறான்னு
நினைச்சோம்னா நம்மள விட முட்டாள் வேற யாரும் இருக்க முடியாது.
நம்ம அரசியல்வாதிகள் பிணத்தை வைத்து கூட அரசியல் செய்துகொண்டிருப்பவர்கள். ஊடங்கள்
அதற்கும் மேல். விவசாயிகள் தற்கொலை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. மறுப்பதற்கில்லை.
அவர்கள் உணமையில் எத்தனை விவசாயிகள் விவசாயம் செய்ய முடியாததால் மரணித்தார்கள் என்பது
எத்தனை பேருக்கு தெரியும்? ஒரு சிறிய உதாரணம். எங்கள் ஊரில் நண்பர் ஒருவரின் தந்தை
குடும்ப ப்ரச்சனைகளால் தற்கொலைக்கு முயன்று விஷம் அருந்தி அரசு மருத்துவமனையில் இறந்து
விட்டார்.
மறுநாள் காலை செய்தித்தாளில் ”விவசாயி தற்கொலை” என வந்தது. உண்மையில் அவர் விவசாயியோ
அல்லது விவசாயம் செய்யத்தெரிந்தவரோ அல்ல. ஆனால் விவசாயிகளின் தற்கொலைக் கணக்கில் இப்போது
அதுவும் ஒன்று . அதே போலத்தான் தற்பொழுது கணக்கில் கொள்ளப்படும் மரணங்களின் எண்ணிக்கைகளும்
இருக்கக்கூடும். வரிசையில் நிற்பது மட்டும் ஒருவருக்கு மரணத்தை ஏற்படுத்துமா என்பதையும்
கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்.
(இந்தப் பதிவில்
முதலில் வரும் சில பத்திகள் ஏற்கனவே நமது தளத்தில் ஒரு பதிவில் வெளியிடப்பட்டது)