Tuesday, May 28, 2019
Thursday, May 2, 2019
AVENGERS - END GAME!!!
AVENGERS - END GAME!!!
இந்தியா திரைப்படங்களுக்கான ஒரு மிகப்பெரிய மார்க்கெட். அவற்றை ஆங்கிலப்படங்கள் தற்பொழுது மிகப்பெரிய அளவில் பயன்படுத்திக்கொள்ள ஆரம்பித்திருக்கிறது. ரொம்பவெல்லாம் இல்லை… இந்த அவெஞ்சர்ஸ் தொடரின் ஒவ்வொரு பாகமும் எப்படி இந்தியாவில் வரவேற்பைப் பெற்றது என்று கவனித்தாலே இந்தியாவில் அவர்களில் அசுர வளர்ச்சி தெரியும். அவெஞ்சர்ஸ் முதல் பாகம் வழக்கமாக டப்பிங் செய்யப்படும் Fantastic 4, X-men வகையிலான அளவில் தான் வரவேற்பைப் பெற்றது. அடுத்து age of ultron இன்னும் அடுத்த படியில் இருந்தது. Black Panther, Thor-Ragnarok படங்களைத் தொடர்ந்து வந்த அவெஞ்சர்ஸ் infinity war அதற்கு முன்னர் வந்த எந்த படங்களிலும் இல்லாத அளவிற்கு வரவேற்பைப் பெற்றது. வசூலில் மட்டுமல்லாமல்
நமது மொழியின் சூப்பர் ஹீரோவை எப்படி வரவேற்போமோ அதே போல ஒவ்வொரு சூப்பர் ஹீரோவின் அறிமுகத்திற்கும் அப்படி ஒரு ஆரவாரம் திரையரங்குகளில். தற்பொழுது வெளியான end game அனைத்தையும் தூக்கி சாப்பிட்டு விட்டது. முதல் முறையாக ஒரு வேற்று மொழி திரைப்படத்திற்கு நள்ளிரவுக் காட்சி முதல் 24 மணி நேரமும் தொடர்ந்து காட்சிகள். அத்தனையும் அரங்கு நிறைந்த காட்சிகள். இத்தனை வருட தமிழ் சினிமா வரலாற்றில் ரஜினி, விஜய், அஜித் இவர்களைத் தவிற இந்த நள்ளிரவுக் காட்சிகள், 24 மணி நேரமும் காட்சிகள் என எந்த நடிகரும் பார்த்த்தில்லை.
மிக அரிதாக நடக்கக் கூடிய சம்பவங்களில் ஒண்று இந்த அவெஞ்சர்ஸ் எண்ட் கேம். இத்தனை சூப்பர் ஹீரோக்களை அறிமுகப்படுத்தி, அவர்களை ஒரே கதைக்குள் கொண்டு வந்து, அவர்களை ஒரே படத்தில் நடிக்க வைப்பது என்பது சாதாரண விஷயமில்லை. இன்னும் KGF ராக்கி ஸ்டைலில் சொல்லப்போனால் ”எதோ நாலு சூப்பர் ஹீரோ நடிச்ச படம் இல்லடா.. இந்தப் படத்துல நடிச்ச அத்தனை பேருமே சூப்பர் ஹீரோதாண்டா”. இப்படி இத்தனை சூப்பர் ஹீரோக்களை மறுபடி இன்னும் படத்தில் கொண்டு வருவதற்கு பல வருடங்கள் ஆகலாம். அப்படி ஒரு சம்பவம் நடக்காமல் கூட போகலாம். மார்வெல்லுக்கே இப்படி ஒரு சம்பவத்தை செய்ய கிட்டத்தட்ட பன்னிரெண்டு வருடங்கள் மற்றும் 22 படங்கள் தேவைப்பட்டிருக்கிறது. சரி இந்த Avengers –End game எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.
6 மந்திரக் கற்களையும் எடுத்து, பூமியின் பாதி மக்கள் தொகையை தானோஸ் அழிப்பதோடு முடிந்தது போன பாகம். ஒரு சில சூப்பர் ஹீரோக்கள் மக்களோடு மக்களாக அழிந்து போய்விட மீதமிருப்பவர்கள் எப்படி தானோஸுடன் மோதி உலகத்தை பழையபடி மாற்றுகிறார்கள் என்பது தான் end game.
இதற்கு முந்தைய இன்ஃபினிட்டி வார் பகுதியில், ரெண்டே முக்கால் மணி நேர படம் என்றால் இரண்டரை மணி நேரம் சண்டை மட்டும் தான். முந்தைய பாகங்கள் பார்த்தாலும் பார்க்காவிட்டாலும் திரைப்படத்தைப் பார்த்துவிட்டு வந்துவிடலாம். ஆனால் இந்தப் பகுதி அப்படி அல்ல. மூன்று மணி நேர திரைப்படத்தில் கடைசி அரை மணி நேரம் தவிர்த்து மற்றவை அனைத்தும் வசனங்களுடன் கூடிய காட்சிகள் தான்.
அவெஞ்சர்ஸில் நிறைய சூப்ப்ர ஹீரோக்கள் வந்து சண்டையிட்டாலும், கதையின் பின்னணி Captain America மற்றும் Thor இரண்டு படங்களைச் சார்ந்து தான் நிகழும். அதுவும் இந்த End game இல் thor மற்றும் Captain America வின் முந்தைய பகுதிகளோட தொடர்புடைய காட்சிகள் நிறைய இருப்பதால் அந்தப் படங்கள் பார்க்காமல் இந்த End game பார்ப்பவர்களுக்கு கொஞ்சம் சலிப்பும், எங்கெங்கு காட்சிகள் நடைபெறுகின்றன என்பதில் நிறைய குழப்பமும் இருக்கலாம்.
முதல் இரண்டு மணி நேர திரைப்படம் சொல்லப்போனால் பெரிய அளவில் எந்த ஈர்ப்பும் இல்லாமல், எந்த ஒரு பெரிய ஸ்டண்டும் இல்லாமல் ஏனோ தானோவென்று செல்கிறது. ஏற்கனவே பல முறை பார்த்து சலித்த டைம் ட்ராவல் கான்செப்டிலும் கொஞ்ச நேரம் படம் பயணிப்பது பெரிய அளவில் எடுபடவில்லை. தூக்கம் லேசாக கண்ணைக் கட்டும்போது சூடு பிடிக்கிறது படம். கடைசி அரை மணி நேரம். தாறு மாறு…
அத்தனை சூப்பர் ஹீரோக்களும் ஒன்றாக வந்து நிற்கும் அந்தக் காட்சியிலும், Thor ன் பழைய சுத்தியல் கேப்டன் கைக்கு செல்லும் அந்தக் காட்சியிலும் புல்லரிக்கிறது.
Hulk இன் கேரக்டர் infinity war இலும் சரி இந்த end game மிலும் சரி சற்று டொம்மையாக்கப் பட்டிருக்கிறது. முதல் இரண்டு பகுதிகளில் hulk தான் பட்டையைக் கிளப்புவார். அவர் எப்பொழுது மாறுவார் என்பதைப் பார்ப்பதே ஒரு சுவாரஸ்யமானதாக இருக்கும். ஆனால் கடந்த இரண்டு பகுதிகளிலும் hulk கேரக்டர் பெரிதாக எடுபடவில்லை.
தானோஸ் மிகப்பெரிய வில்லனாக சித்தரிக்கப்பட்டாலும் அவர் உருவ அமைப்பு பார்க்க பரிதாபமாக இருக்கிறது. அதுவும் தோட்டத்தில் பழம் பறித்துக் கொண்டிருப்பவரை இவர்கள் மொத்தமாக சென்று சுற்றி வளைத்து கொல்லும் காட்சியில் தானோஸ் மேல் பரிதாபம் தான் வந்தது. கடைசி காட்சியில் பூமியில் மொத்தமாகச் சேர்ந்து அவரை அடிக்கும் போதும் "நாலு பேரா சேந்து வந்து அடிக்கிறவன்லாம் ரவுடி இல்லடா..ஒத்தையா நின்னு அடிவாங்குறான் பாரு அவன்ந்தான் ரவுடி" என்பது போல முகத்தைப் பார்க்க பாவமாக இருந்தது.
ஸ்பைடர் மேன், ஆண்ட் மேன், கேப்டன் மார்வெல் போன்ற தேவையில்லாத ஆணிகள் அவ்வப்போது வந்து செல்கின்றன. படத்தில் இருக்கும் அத்தனை பேருமே முக்கியமான கதாப்பாத்திரங்கள் என்பதால் அனைவருமே கொஞ்ச கொஞ்ச நேர காட்சிகள்.
இந்த மார்வெல் சீரிஸின் 22 படங்களில் அவெஞ்சர்ஸ் தவிர்த்து எனக்கு மிகவும் பிடித்த படங்கள் Thor-Ragnarok, Captain America- Civil war, Doctor strange, Black Panther. நேரமிருப்பவர்கள் பார்க்கலாம். வரிசையாகப் பார்ப்பது நலம். தனித் தனியாகப் பார்த்தாலும் ஒருசில லிங்குகள் புரியாதே தவிற சுவாரஸ்யமாகவே இருக்கும்.
மொத்ததில் ஒரு மிகப்பெரிய சினிமாத் தொடருக்கான நல்லதொரு முடிவுப் பகுதி. கொஞ்சம் பொறுமையும் அவசியம்.
Subscribe to:
Posts (Atom)