Saturday, March 26, 2022

PAN INDIA MOVIES!!


Share/Bookmark

 


RRR இந்த வாரம் வெளியாகவிருக்கிறது. தமிழ்த்திரையுலகின் ஒரு முன்னணி நாயகரின் நேரடித் தமிழ்ப்படம் எத்தனை திரையரங்குகளில் வெளியாகுமோ அதை ஒத்த அளவிலான திரையரங்குகளை தமிழகத்தில் RRR ஆக்கிரமித்திருக்கிறது.

அடுத்த இரண்டு வாரங்களில் பீஸ்டிற்குப் போட்டியாக களமிறங்குகிறது கன்னடத்து சூராவளி KGF. தமிழ்நாட்டில் பீஸ்டிற்கு KGF ஆல் பெரிதாக எந்த ஆபத்தும் இருக்கப் போவதில்லை என்றாலும் மற்ற மாநிலங்களில் பீஸ்ட் KGF இன் அருகில் கூட நிற்க முடியாது.

KGF ஐயும் சேர்த்தால் கடந்த நான்கு மாதங்களில் தென்னிந்தியாவிலிருந்து புஷ்பா, ராதே ஷியாம், RRR என தமிழ்நாட்டில் வெளியாகும் பான் இந்தியத் திரைப்படங்களின் எண்ணிக்கை மொத்தம் நான்கு.

எங்கோ இருந்த கன்னட திரைத்துரையிலிருந்து ஒரு திரைப்படம், இன்று தமிழ்நாட்டின் முன்னணி நடிகரின் படத்திற்குப் போட்டியாகக் களமிறக்கப்படுகிறது. தெலுங்கின் இரண்டாம் நிலை ஹீரோவான அல்லு அர்ஜூனின் படம் தமிழகத்தில் பட்டையைக் கிளப்புகிறது.

தென்னிந்தியாவிலேயே ஹீரோக்களுக்கு அதிக சம்பளம் கொடுக்கும் தமிழ்த் திரைத்துரையிலிருந்து எத்தனை PAN இந்தியப் படங்கள் வெளியாகியிருக்கின்றன? ரஜினியின் ஒரு சில படங்கள் அப்படிப்பட்ட அந்தஸ்தைப் பெற்றன. ஆனால் அவற்றையும் சரியன தரத்தில் கொடுக்காததால் சமீபத்தில் வெளியான அண்ணாத்தே மற்ற மொழிகளில் வெளியானது கூடத் தெரியாமல் காணாமல் போனது.

PAN இந்தியத் திரைப்படங்கள் என்பவை இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மக்களுக்கும் ஒத்துபோகும்படி எடுக்கப்படும் படங்கள் அல்ல. அத்தனை மக்களையும் கவர்ந்திழுக்கும் தரத்தில் எடுக்கப்படும் படங்கள். அதற்கு ஒரு சிறந்த இயக்குனரும், அதை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் ஒரு பிரபலமான நடிகரும் கட்டாயம் தேவை.

தமிழில் இருக்கும் பிரபல நடிகர்கள் தற்பொழுது ”சின்ன கல்லூ பெத்த லாபம்” என்கிற ஃபார்முலாவிற்கு அடிமையாகிவிட்டனர் அதாவது அவர்களின் சம்பளம் மட்டும் அதிகம். ஆனால் படம் ஒரு அம்பது அறுபது நாள் கால்ஷீட்டில் விரைவாக எடுத்து முடிக்கப்பட வேண்டும். படத்தில் ப்ரொடக்‌ஷன் வேல்யூ இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி. ஹீரோவின் முகத்துக்குத்தான் இங்கு மதிப்பு. அப்படியே விற்றுவிட்டு ஒன்றுக்கு இரண்டாக கல்லா கட்டிவிட்டு அடுத்த சின்ன கல்லூ பெத்த லாபத்திற்கு அடி போடச் சென்று விடுகிறார்கள்.

அடுத்து தமிழ் இயக்குனர்கள். திரையில் பிரம்மாண்டத்தைக் காட்டவும், அடுத்த கட்டத்தில் யோசிக்கவும் இருந்த ஷங்கர் போன்ற ஒருசில இயக்குனர்கள் காலாவதி ஆகிவிட, புதிதாக வந்தவர்களும் புரட்சி போராட்டம் என குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டிக்கொண்டிருக்க நல்ல வணிகத் திரைப்படத்திற்கான இயக்குனர்களுக்கு தற்பொழுது தமிழ் சினிமாவில் பஞ்சம் என்றே சொல்லலாம்.

இருநூறு கோடி பட்ஜெட்டில் உருவாவதக் கூறப்படும் தமிழ் திரைப்படத்தின் Production Value  வெறும் ஐம்பது கோடி பட்ஜெட்டில் உருவாகும் தெலுங்குத் திரைப்படத்தின் Production Value  விற்கு அருகில் கூட வருவதில்லை.

ஒரு காலத்தில் தமிழ்த்திரைப்படங்கள் ஆந்திராவில் பட்டையைக் கிளப்பிய காலங்கள் போய் கடைசியாக அண்டை மாநிலங்களில் நன்றாக ஓடிய தமிழ்ப் படம் என்ன என்பதே இப்பொழுது மறந்து விட்டது.

காரணம் சினிமாவின் அடுத்த கட்டம் என நம் இயக்குனர்கள் கொரியன் படங்களை நகலெடுத்துக் கொண்டிருந்த அதே காலத்தில் அவர்கள், அவர்கள் மொழிப்படங்களின் technical aspects இல் கவனம் செலுத்தி அதை மேம்படுத்திக் கொண்டிருந்தனர். தமிழ் சினிமாவில் அதைத் தவறவிட்டுவிட்டனர்.

ஒருசிலர் மட்டுமே இதைக் கூறிவந்த நிலையில், OTT க்களின் அசுர வளர்ச்சியால் இன்று இது வெட்ட வெளிச்சமாகிவிட்டது.  பெரும்பாலானோர் இப்பொழுது  ”நம்ம படத்த விட இவங்க படம் நல்லாருக்கேப்பா” என்கிற கருத்தைக் கூற ஆரம்பித்துவிட்டனர்.  

தமிழில் குறைந்த பட்ஜெட்டில் படு நேர்த்தியான கலைப்படங்களைக் கொடுக்க நிறைய திறமையான இயக்குனர்கள் இருக்கிறார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் வணிக ரீதியிலான தரமான படங்களைக் கொடுப்பதற்கு நிச்சயம் நம்மிடம் தரமான இயக்குனர்களை இல்லை அல்லது அவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கபடவில்லை.

சில வருடங்களுக்கு முன், தமிழ்ப்படங்கள் வெளியாவதால் கன்னடப் படங்களின் வசூல் பாதிக்கப்படுகிறது என கர்நாடகாவில்  ஒரு போராட்டம் நடந்தது. இதே நிலை தொடர்ந்தால் கூடிய விரைவில் தமிழ்நாட்டில் கூட இதே போல ஒரு போராட்டம் நடக்கலாம். அது நடைபெறாமல் இருக்க முன்னணி நடிகர்களிடமும், இயக்குனர்களிடமும் நிச்சயம் ஒரு பெரிய மாற்றமும் ஒரு பரந்த மனப்பான்மையும் தேவை.



Thursday, March 17, 2022

கடைசி விவசாயி!!


Share/Bookmark

 



எதார்த்தத்தை, நடைமுறையை எந்த ஒரு வெளிப்பூச்சும் இல்லாமல் இவ்வளவு சுவாரஸ்யப்படுத்த முடியும் என்றால் உண்மையில் அது இயக்குனர் மணிகண்டனுக்கு  மட்டுமே சாத்தியம். எந்த ஒரு வட்டத்திற்குள்ளும் தன்னை அடைத்துக் கொள்ளாமல், வாய்ப்பு கிடைக்கிறதே என்பதற்காக போராளியாகவும் மாறாமல் இயல்பான, அதே சமயம் டாக்குமெண்டரி மாதிரியான சலிப்பையும் ஏற்படுத்தாமல், ஒரு திரைப்படத்திற்கான மரியாதையும், பார்வையாளர்களுக்குண்டான மரியாதையும் கொடுக்கும் மணிகண்டன் ஒவ்வொரு படத்திலும் வியக்கவைக்கிறார்.

காக்கா முட்டை கொடுத்த உணர்வு அதற்கு முன் எந்தத் தமிழ்த்திரைப்படமும் கொடுக்காத ஒரு உணர்வு. அதன்பிறகு வந்த குற்றமே தண்டனையில் Tunnel Vision பிரச்சனையால் விதார்த் பாதிக்கப்பட்டிருப்பார். அதாவது ஒரு சிறிய வட்டத்திற்குள் மட்டுமே அவருக்கு பார்வை தெரியும். சுற்றி இருட்டாக இருக்கும். ஒரு காட்சியில் விதார்த்  மருத்தவரிம் சென்றிருப்பார்.

“சின்ன வயசுலருந்து இந்தப் பிரச்சனை இருக்குன்னு சொல்றீங்க… ஏன் இவ்வளவு நாளா இத கவனிக்காம இருந்தீங்க” என்று கேட்பதற்கு விதார்த்

“எல்லாருக்குமே இப்படித்தான் தெரியும்னு நினைச்சிகிட்டு இருந்தேன் டாக்டர் “ என்பார். ஆச்சர்யமாக இருந்தது எப்படி இப்படி எழுதமுடிகிறதென்று.

நாம் பார்க்கும் உலகம் நமக்கு எப்படித் தெரிகிறதோ அப்படித்தானே மற்றவர்களுக்கும் தெரியும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். பிறப்பிலிருந்து ஒரு பிரச்சனை இருக்கும்போது அவனால் அதை உணர முடியாது என்பதை அதற்குப் பிறகுதான் யோசிக்க வேண்டியிருக்கிறது.

இப்பொழுது கடைசி விவசாயி. கார்ப்பரேட் கம்பெனிகளைத் திட்டி மக்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் வில்லன்களாக அவர்களைச் சித்தரிக்காமல் எடுத்த முதல் விவசாயப் படம் என்பதற்காகவே இந்தப் படத்தைப் பாராட்டலாம்.

எந்தக் கருத்தையும் வலிய திணிக்கவில்லை. ”இந்த மண்ணிலேயே அத்தனையும் இருக்கிறது. அதை நீரூற்றி பாதுகாத்தால் மட்டுமே போதும். நமக்குத் தேவையானவை அனைத்தையும் அது தரும்” என்பதை அழுத்தமாகப் பதிவுசெய்திருக்கும் திரைப்படம்.

விஜய் சேதுபதி, யோகிபாவுவைத் தவிற அனைவருமே புதுமுகங்கள். அப்படியே அந்த கிராமத்தில் இரண்டு மணிநேரம் இருந்துவிட்டு வந்ததைப் போன்றதொரு உணர்வைத் தருகிறார் மணிகண்டன். எதிர்மறையான பாத்திரங்கள் என யாருமே இல்லை. போலீஸ்காரர்கள்  கொஞ்சம் அப்படிக் காட்டப்பட்டாலும், வயலில் தண்ணி பாய்ச்சி விட்டு “இந்த ரெண்டு மணிநேரம் தான்யா கொஞ்சம் நிம்மதியா இருக்கேன்” என அந்த அதிகாரி சொல்லும்போது அவர்கள் மீது இருந்த மொத்தக் கோபமும் மறைந்து பரிதாபத்தை வரவழைக்கிறது.

மாயாண்டியாக வாழ்ந்திருக்கும் தாத்தாவின் யதார்த்தமான வசன உச்சரிப்புகளும், அவரின் வெகுளித்தனமான நடிப்பும் அட்டகாசம்.

கோர்ட்டில் வழக்கில் நடந்துகொண்டிருக்கும் போதே ”இருங்க நா தோட்டம் வரைக்கும் பொய்ட்டு வந்துடுறேன்” எனக் கிளம்புவது விவசாயத்தின் மீதான அவர்களின் பிடிப்பை ஆழமாகச் சொல்லும் ஒரு காட்சி. உண்மையில் ஆடு மாடு வைத்திருப்பவர்கள், விவசாயம் செய்பவர்களால் அவற்றை விட்டுவிட்டு ஒரு நாள் கூட இருக்கமுடியாது. எந்த ஊருக்குச் சென்றாலும் ”ஆடு  மாடு தனியா இருக்கும்.. வயலுக்கு தண்ணி கட்டனும்” என எப்படியாவது வீடு வந்து சேர்ந்து விடுவார்கள்.  அந்த பஞ்சாப் விவசாயிகள் எல்லாம் எப்படி மாசக்கணக்குல விட்டு விட்டு  இருந்தார்கள் என்று தெரியவ்ல்லை

கடைசியில் வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு மாயாண்டி வயலுக்குள் இறங்கும் காட்சி, மாஸ் ஹீரோக்களின் அறிமுகக் காட்சியைத் தாண்டிய மாஸ்.

இளையராஜா ஏன் விலகினார் என்று தெரியவில்லை. ஒருவேளை இளையாராஜா இசையமைத்திருக்கும் பட்சத்தில் இரண்டு மூன்று இடங்களில் நம்மை அழவிட்டுருப்பார்.

படம் முடிந்த பிறகு எண்டு கார்டில் நடிகர்கள் பெயரைப் பார்க்கும்போது படத்தில் நடித்த நிறைய பேர் ஏற்கனவே இறைவனடி சேர்ந்துவிட்டனர். நல்லாண்டி தாத்தாவே இறந்துவிட்டார் என்பது வருத்தமாக இருந்தது.

படத்தில் ஆங்காங்கு பெரியாரையும், அம்பேத்காரையும் காட்டியிருந்தால் படம் மிகப்பெரிய அளவில் கொண்டாடப்பட்டிருக்கும். ஆனால் பாவம் முருகனும், மயிலும் வந்து செல்வதால் நிறைய பேர் கண்களில் படம் இன்னும் படவில்லை.

இதுவரை பார்க்காதவர்கள் கட்டாயம் பார்க்கவும்!!

சோனி லைவில் இருக்கிறது.

Monday, March 14, 2022

எதற்கும் துணிந்தவன் விமர்சனம் (ET)


Share/Bookmark

 


Bheemla Nayak (2022) Review


Share/Bookmark

 


வலிமை (Valimai ) - விமர்சனம்!!


Share/Bookmark

 


Thursday, March 3, 2022

BANGARRAJU (2022)


Share/Bookmark



மனைவிக்கு அதிக முக்கியதுவம் கொடுக்காமல் வேலை வேலை என்றிருக்கும் மகனின் உடம்பிற்குள் ரொமாண்டிக் ஹீரோவான அப்பாவின் ஆவி புகுந்து மகனை ரொமான்ஸ் வேலைகளில் ஈடுபடச் செய்து, அவர்களின் இல்லற வாழ்க்கையில் ஒளிவிளக்கேற்றி வைக்கும் அற்புதமான ஒரு கதைக்களத்தைக் கொண்ட Soggade Chinni Nayana திரைப்படத்தின் இரண்டாம் பாகமாக வெளிவந்திருக்கிறது இந்த பங்கார் ராஜூ.

SOGGADE CHINNI NAYANA விமர்சனத்திற்கு க்ளிக்கவும்

மகன் மருமகள் இடையே அன்யொன்யத்தைப் பெருக்க மகனின் உடம்பிற்குள் ஒரு நிமிடம் புகுந்து மருமகள் இடுப்பைக் கிள்ளி விட்டு மீண்டும் வெளியே வந்து விடுவது போல ஒருசில சல்லித்தனமான காட்சிகள் இருந்தாலும் அருமையான பாடல்களுடன், கலர்ஃபுல்லான, ஜாலியான கிராமத்துக்கு கதைக்களத்தில் பயணிக்கும் soggade chinni nayana வெற்றியும் பெற்றது.

அந்த வெற்றிதான் இந்த இரண்டாம் பாகத்திற்கு வித்திட்டிருக்கிறது. முதல் பாகத்தில் மகனின் உடம்பிற்குள் புகுந்து அவருக்கு உதவிய பங்கார்ராஜூவின் ஆவி இந்த முறை பேரனைக் காதல் வலையில் விழவைக்க அவர் உடம்பிற்குள் புகுந்து… நீங்க நினைக்கிற மாதிரில்லாம் ஒண்ணும் இல்ல. சும்மா உதவி செய்கிறார்.

பங்கார்ராஜூவின் பேரனாக சிரிப்பழகன் நாக சைதன்யா. நாயகியாக பேபம்மா க்ரித்தி ஷெட்டி. பூமியில் ப்ளேபாயான பங்கார்ராஜூ இறந்த பின்னரும் மேலே சென்று ரம்பா, மேனகா ஊர்வசியையெல்லாம் கரெக்ட் செய்து டூயர் ஆடிக்கொண்டிருக்கிறார்.

சென்ற முறை நாகர்ஜூனா மட்டும் பூமிக்கு ஆவியாக வந்தார். இந்த முறை ரம்யா கிருஷ்ணனும் இறந்து, அவருடைய ஆவியும் சேர்ந்து குடும்ப சகிதமாக வந்து பேரனுக்கு உதவி செய்கிறார்கள்.

ஆஹா ஓஹோ என்றெல்லாம் இல்லையென்றாலும் பெரிய அளவில் அருக்காமல் நீட்டாகச் செல்கிறது. விஷூவல்ஸ் அருமை. அதுவும் சொர்க்கத்தில் நடப்பது போன்ற காட்சிகள் கண்ணுக்கு விருந்து . அவ்வளவு அழகு. அனூப் ரூபன்ஸ் இசையில் பாடல்கள் அனைத்துமே ஒக்கே ரகம்.

நாகர்ஜூனா, ரம்யா க்ருஷ்ண்ன் ஜோடி கொள்ளை அழகு. அதுவும் நாகர்ஜூனாவிற்கு வயதே ஆகாது போல. என்னதான் சொன்னாலும், தாத்தா, பாட்டியின் ஆத்மாக்கள் அருகிலேயே இருந்து பேரனுக்கு உதவி செய்யும் காட்சிகளில் ”ச்சா உண்மைலயே இப்டில்லாம் இருந்தா நல்லாருக்கும்ல” என நினைக்க வைக்கின்றன.

ZEE5 இல் இருக்கிறது.

ரொம்பவும் எதிர்பார்க்காமல், ஜாலியாக பொழுதைப் போக்க நினைப்பவர்கள் பார்க்கலாம்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...