Facebook கிட்டத்தட்ட ஒரு நாடகக் கம்பெனி போல மாறிவருகிறது. நடிகர்கள் தோற்றுவிடுவார்கள் போல. ஒவ்வொருவரும் தன்னை ஒரு மனிதநேய மஹான்களாகவும், பாஸிடிவ் எனர்ஜினியின் கொடோன்களாகவும் காட்டிக்கொள்வதற்கு ரொம்பவே முயல்கின்றனர்.
சிறிய உதாரணம் நேற்று அண்ணாசிப்பழத்தில் வைத்திருந்த வெடி வெடித்து கருவுற்றிருந்த ஒரு யானை மரணமடைந்தது. உண்மையில் நடந்தது ஒரு மிகப் பெரிய துயரமான சம்பவம். மாற்றுக்கருத்தில்லை. சாதாரணமாக , ஒரு யானை இறந்து கிடக்கும் புகைப்படங்களே மனதை உலுக்கும். அவ்வளவு பெரிய உருவம், நாம் வியந்து பார்க்கும் ஒரு உருவம் உயிரற்று சாய்ந்து கிடப்பது நிச்சயம் நம் மனதை எதோ செய்யும்.
ஆனால் நேற்று நடந்த சம்பவத்திற்குப் பிறகு, நம்மவர்கள் வருந்திய விதம் இருக்கிறதே.. அப்பப்பா.. "ஆணாகப் பிறந்ததற்கு வெட்கப் படுகிறேன் தோழி" பாணியில்
"மனிதனாகப் பிறந்ததற்கே அவமானமாக இருக்கிறது"
"மனித இனம்தான் எவ்வளவு கொடூரமானது"
"நமக்கு கொரோன ஒன்றும் சும்மா வரவில்லை.. இதுபோன்ற பாவங்களினால்தான் வருகின்றது"
"வயித்துல இருந்த அந்தப் பிஞ்சி உசுறு உங்கள என்னடா செஞ்சுச்சி"
என ஒரு ஈ எறும்பிற்குக் கூட தீங்கு நினைக்காத நம்மவர்கள் கண்ணீர் விடாத குறையாக புலம்பியிருந்தனர். கூடுதலாக கார்டூனிஸ்டுகள் அவரவர்கள் பங்கிற்கு இந்த சம்பவத்தை எவ்வளவு எமோஷனலாக்க முடியுமோ, அப்படி ஆக்க அவர்களது முழுத் திறமையும் பயன்படுத்தியிருக்கிறார்கள்.
அதுமட்டுமல்லாமல் இந்த மஹாபாவத்தை செய்தவர்கள் கடுமையாக தண்டிக்கப்படவேண்டும் என்கிற கோஷமும் எழுந்து, ப்ரியங்கா காந்தி கேரள அரசிடம் இந்த சம்பவத்திற்கு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்குமளவிற்கு சென்றிருக்கிறது.
சமூகவலைத்தளங்கள் கொடுக்கும் இந்த அழுத்தத்தில் நிச்சயம் அடுத்த ஓரிரு நாட்களில் அண்ணாசியில் வெடி வைத்தவர் பிடிக்கப்பட்டு, அவருக்கு தக்க தண்டனை வழங்கப் படலாம்.
முதலில் நடந்தது ஒரு விபத்து என்கிற கோணத்தில் முகநூல்வாசிகள் யாருமே அணுகவில்லை. அப்படியிருந்தாலும் அவர்களுக்கு அது தேவையுமில்லை. ஏனென்றால் அவர்களது இறக்க குணத்தைக் காட்ட, இப்போது இருக்கும் செட்டப் தான் சரியாக உள்ளது.
வேண்டுமென்றே பொழுதுபோகாமல் யாரும் அண்ணாசியில் வெடி வைத்து, ஒரு கருவுற்ற யானையைக் கொல்ல வேண்டும் என்பது யாருடைய எண்ணமாகவும் இருக்காது.
உணவில் வெடி வைத்துஉயிர்களைக் கொல்வது தவறுதான் என்றாலும் நிறைய இடங்களில் பன்றிகளின் அட்டகாசம் தாங்க முடியாத பொழுது விவசாயிகள் இந்த முடிவுக்குத் தள்ளப்படுகிறார்கள்.
பன்றிகளை கையாள்வது சற்று கடினம். இரவு நேரங்களில் கூட்டமாக வந்து பயிரிட்ட வயல்களை அடியிலிருந்து தோண்டி கலப்பையால் உழுதுபோட்டது போல ஆக்கிவிட்டுச் சென்றுவிடும்.
ஒரு கட்டத்திற்கு மேல் பொறுமையிழக்கும் விவசாயிகள் வேறு வழியின்றி இப்படிப்பட்ட ஒரு முடிவெடுக்கத் தள்ளப்படுகிறார்கள். பன்றிகளுக்கு வைக்கப்படும் இதுபோன்ற வெடிகளில் சில சமயம் நாய்கள் சிக்கி உயிரிழப்பதுண்டு.
அதுபோலத் தவறுதலாகத்தான் இந்த விபத்தும் நடந்திருக்கவேண்டும். யோசித்துப் பாருங்கள். அதே அண்ணாசியை, வயிற்றில் பத்து குட்டிகளுடன் ஒரு பன்றி தின்றுவிட்டு இறக்கிறது என வைத்துக்கொள்வோம். இந்தக் கண்ணீரை மக்கள் வடித்திருப்பார்களா? பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும். நாம் சாப்பிடும் மட்டன் பிரியானியில் செத்துக்கிடக்கும் ஆடும், ஃபீப் பிரியாணிகளில் கிடக்கும் மாடும் எதோ ஒரு பெற்றோரிடமிருந்தோ அல்லது குழந்தையிடமிருந்தோ அவற்றின் சம்மதமில்லாமல் வலுக்கட்டாயமாக பிரித்து கொண்டுவரப்பட்டதுதான்.
அது இருக்கட்டும். பன்றிக்கு வெடி வைப்பது மட்டும் நியாயமா? சத்தியமாக நியாயமில்லை தான். நம்முடைய பார்வையில். நீங்கள் எப்பொழுதும் துணைக்கு அழைக்கும் அந்த ஏழை விவசாயி ஒருவரை நினைத்துக் கொள்ளுங்கள். கஷ்டப்பட்டு ஒரு வயலில் பயிரிட்டு பாதுகாத்து வைத்திருக்கிறார். அவருடைய வருமானம், குடும்பத்திற்கான உணவு அனைத்தும் அந்த ஒரு வயலை நம்பிதான் இருக்கிறது என வைத்துக் கொள்ளுங்கள். ராவோடு ராவாக பன்றிக்கூட்டங்கள் பயிரின் பாதியை அழிக்கிறது. தன்னுடைய கடின உழைப்பு, வருமானம், குடும்பத்திற்கான உணவு அத்தனையும் கண் முன்னே கேள்விக்குறியாக நிற்கும் போது , மீதி இருக்கும் கொஞ்சம் பயிரை காப்பாற்றிக்கொள்ள எந்த முடிவு வேண்டுமானாலும் எடுப்பார். அது பன்றியாக இருந்தாலும் சரி. யானையாக இருந்தாலும் சரி.
"விலங்குகள் நடமாடும் காட்டை அழித்து வயல்வெளிகளாக்கிவிட்டு இப்பொழுது விலங்குகளைக் குறை கூறுவதா?" என ஒரு கும்பல். வாய்யா... யோக ராசா.. உன்னத்தான் தேடிகிட்டுருந்தேன். ஏன் காடுகள் அழிக்கப்படுகிறது? ஏன் இயற்கை வளங்கள் கொஞ்சம் கொஞ்சமாக அழிக்கப்படுகின்றன? ஒரு Root Cause Analysis செய்தால் கடைசியில் நமக்கு கிடைக்கும் ஒரே பதில் மக்கள் தொகைப் பெருக்கம். அத நிறுத்த முடியுமா உன்னால? எது நடக்கிறதோ இல்லயோ அந்த வேலை மட்டும் சரியாக நடந்துகொண்டே இருக்கிறதல்லவா? அப்படியானால் மற்றவற்றையும் ஒன்றும் செய்ய முடியாது.
மறுபடியும் கூறுகிறேன் நடைபெற்றது ஒரு துயரச் சம்பவம். வருத்தப்படுங்கள். அதை விட்டுவிட்டு எமோஷனலாக ஒரு விஷயத்தைப் பெரிதாக்கி கடைசியாக, நீங்கள் கொடுக்கும் அழுத்தத்தில், சிலரின் வாழ்க்கையை முடித்துவிடாதீர்கள்.