Monday, March 30, 2015

சீரியஸா கொஞ்சம் சீரியல்!!


Share/Bookmark
இன்னிக்கு நிலமைக்கு தண்ணி, தம்ம விட சீரியல பழகிட்டு தான் நிறைய பேர் விடமுடியாம தவிக்கிறாங்க. பொதுவா நாம பேச்சுக்கு பெண்கள்தான் அதிகம் சீரியல் பாக்குறாங்கன்னு சொன்னாலும், அவங்களுக்கு ஈக்குவலா ஆண்களும் இப்போ பாக்க ஆரம்பிச்சிட்டாங்க. எங்க ரூம்ல ஒருத்தனுக்கு எட்டு மணிக்கு சரவணன் மீனாட்சி பாக்கலன்னா கையெல்லாம் நடுங்க ஆரம்பிச்சிடும். எங்க பக்கத்து வீட்டு அக்கா ஒண்ணு, வீட்டுல கரண்டு இல்லைன்னு வெளியூர்ல அவங்க சொந்தக்காரங்களுக்கு ஃபோன் பண்ணி இன்னிக்கு சீரியல்ல என்ன நடந்துச்சின்னு கேட்டு தெரிஞ்சிக்கிட்ட கதையெல்லாம் கூட நா பாத்துருக்கேன். ரெண்டு நாள் பாத்துட்டா போது ஆட்டோமேட்க்கா மூணாவது நாள் டிவி முன்னால உக்கார வச்சிடுது.

அய்யய்யோ சரவணன் மீனாச்சி கதையை நம்மகிட்ட திரும்ப சொல்லி சாவடிக்கப்போறான்னு ஏற்கனவே நாலு பேரு கெளம்பிட்டீங்கன்னு தெரியிது. பயப்படாதீங்க. வருஷம் ஃபுல்லா ஓடுற நம்மூர் சீரியல்கள திரும்ப ஓட்ட என்னால முடியாது. உதாரணத்துக்கு சரவணன் மீனாச்சி மட்டும் 838 எபிசோடு ஓடிருக்கு. அப்போ சன் டிவில ஓடுற சீரியல்களெல்லாம் எத்தனை எபிசோடு ஓடிருக்கும்னு நினைக்கும் போதே கண்ண கட்டுது. அதனால நம்மூர் சீரியல்கள கொஞ்சம் அந்தப் பக்கம் வச்சிட்டு சிலப்பல ஆங்கில சீரியல்களப் பத்தி பாப்போம்.  

DA VINCI DEMONS


லியார்னாடோ டாவின்சியோட கேரக்டருக்கு நிறைய கற்பனைகளை புகுத்தி, எடுக்கப்பட்ட ஒரு அட்வென்சர் சீரியல் இது. டாவின்சிய நம்ம எல்லாருக்கும் ஒரு ட்ராயராத்தான் தெரியும். (யோவ் அந்த ட்ராயர் இல்லய்யா). ஆனா அவரு வின்னுலகமே வியக்கும் வண்ணம் ஒரு புஜபல பராக்ரமசாலியா இருந்தாருன்னும் இந்த சீரியல் சொல்லுது.

இத்தாலியில ஒரு நகரத்துல வாழ்ந்துகிட்டு இருக்க ஒரு ஓவியர், டிசைனர் மற்றும் வாள் வித்தையில் வித்தகரான நம்ம டாவின்சி அந்த ஊர் ஆர்மிக்கு நிறைய advanced weapons ah கண்டுபுடிச்சி குடுத்து உதவுறாரு. அந்த கேப்புல, இறந்துட்டதா நினைச்சிட்டு இருக்க அவரோட அம்மா உயிரோட இருக்க வாய்ப்பு இருப்பதாக ஒரு செய்தியை கேள்விப்படுறாரு. அதோட “Book of Leaves” ங்குற ஒரு முக்கியமான புத்தகத்தையும் தேடி அவரோட பயணத்த தொடங்குறாரு. அந்த பயணத்துல வர்ற தடங்கல்கள் அத அவரு எப்படி சமாளிக்கிறாருங்குறது தான் இந்த DA VINCI DEMONS.

ஒரு component, drawing stage லருந்து material ah convert ஆக எவ்வளவு நாள் ஆகும்னு ஒரு production கம்பெனில வேலை பாக்குறவங்களுக்கு தெரியும். வாரக்கணக்குலருந்து மாசக்கணக்கு வரை ஆகும். ஆனா இங்க எண்ணன்னா, டாவின்சி கையில ஒரு scribbling pad ah வச்சிக்கிட்டு ஒரு வெப்பன்  ட்ராயிங் போடுவாரு. அடுத்த அரை மணி நேரத்துல அதை physical ah செஞ்சி முடிச்சிருவாய்ங்க. யார்ட்ட விட்ரீங்காணும் ரீலூ. எல்லாத்தையும் ஒத்துக்குவேன், ஆனா ஓவர் நைட்டுல ஒரு sub marine ah செஞ்சி முடிச்சிருவாய்ங்க. அங்க தான் நெஞ்சி டப்புன்னு வெடிச்சிருச்சி.

இந்த ஒரு விஷயம் மட்டும் தான் இந்த சீரியல்ல உருத்தலா இருக்கும். மத்தபடி சூப்பர். ரெண்டாவது சீசனெல்லாம் பட்டைய கெளப்பிருக்காய்ங்க. Book of leaves ah தேடி ஒரு தீவுக்கு போய், அங்க நடக்குற விஷயங்கள்லாம் செமயா இருக்கும். இதுவரைக்கும் ரெண்டு சீசன் வந்துருக்கு.. அடுத்த சீசன் அடுத்த வருஷம்.

SPARTACUS


The Gladiator படத்த சீரியலா எடுத்தா எப்படி இருக்கும்? அதே தான் இந்த சீரியல்.  அடிமை வீரர்களை வாங்கி பயிற்சி குடுத்து, அவங்களை நம்ம கிரிக்கெட் மேட்ச் மாதிரி க்ரவுண்டுல எல்லா மக்களும் பாக்குறப்போ சண்டை போட வச்சி அதன் மூலமா சம்பாதிக்கிறத வேலையா பாத்துக்கிட்டு இருக்க ஒருத்தர், ரோமானியர்களால பிடிக்கப்பட்ட ஸ்பார்டகஸ்ங்குற ஒரு வீரன விலை குடுத்து வாங்கிட்டு போய் அவரோட பயிற்சி பள்ளியில சேத்து பயிற்சி குடுக்குறாரு.

ஏற்கனவே அங்க இருக்கவனுங்க எல்லாம் பெரிய  பெரிய அப்பா டக்கருங்க. ஒவ்வொருத்தனுக்கும் மொழாம்பழத்துக்கு மூக்கு வச்சா மாதிரி படு பயங்கராமா இருக்க, ஸ்பார்டகஸ 1st இயர் பையன ராகிங் பண்ற மாதிரி செஞ்சி அசிங்கப் படுத்துறாய்ங்க. கொஞ்சம் கொஞ்சமா ஸ்பார்டகஸ் எப்படி அவங்களோட சேந்து க்ளாடியேட்டரா மாறி, கடைசியில எப்படி அந்த பயிற்சிப் பள்ளியிலருந்து தப்பிக்கிறாங்கங்குறது தான் கதை. நா சொன்னது மொத சீசன் மட்டும். மத்ததெயெல்லாம் நீங்களே பாத்து தெரிஞ்சிக்குங்க.

பொதுவா ஒருத்தன கத்தியால வெட்டும்போது ரத்தம் தெறிக்கிறத பாத்துருக்கோம். கொட கொடன்னு ஊத்துறத பாத்துருக்கோம். ஆனா இந்த சீரியல்ல ஒருத்தன வெட்டுனாய்ங்கன்னா ரத்தம் பம்பு செட்ட தொறந்து விட்ட மாதிரி குபுகுபுன்னு கொப்புளிச்சி ஊத்தும். அதப்பாக்கும் போதெல்லாம் எனக்கு படிக்காதவன்ல விவேக் கிட்ட ஒருத்தன் சொல்லுவானே “பாஸ் மனுஷங்க உடம்புல ஆறு லிட்டர் ரத்தம் தான் பாஸ் இருக்கும்”ன்னு அதான் ஞாபகம் வரும்.

இந்த சீரியல நிறைய பேர் பாத்துருப்பீங்க. இன்னும் சில பேர் இத ஓட்டி ஓட்டி பாக்க வேண்டியத மட்டும் பாத்துருப்பீங்க. ஓட்டி ஓட்டி பாத்துருந்தா கூட, திரும்ப ஒரு தபா முழுசா பாருங்க. ஒவ்வொரு கேரக்டரோட அமைப்பும், அந்த கேரக்டர்களுக்குள்ள bonding ங்கும் ரொம்ப நல்லா இருக்கும். முதல் சீசன்ல வர்ற ஸ்பார்டகஸ் பார்க்க சற்று டொம்மை போல இருப்பாரு. அதனால அடுத்த சீசன்லருந்து வேற ஆள ஸ்பார்டகஸா போட்டுருப்பாய்ங்க. இந்த சீரியல் நாலு சீசனா வந்துச்சி.

SHERLOCK

ஷெர்லாக்கும் மற்றும் அவரோட நண்பர் டாக்டர் வாட்சன் துப்பறியும் டிடெக்டிவ் கதைகளோட தொகுப்பு தான் இந்த சீரியல். ஒவ்வொன்னும் ஒரு படம் மாதிரி. ஒண்ணரை மணி நேர எபிசோட். இது வரைக்கும் ஒன்பது எபிசோட் வந்திருக்கு. எனக்கு ரொம்ப புடிச்ச ஒரு சீரியல். 

Sherlock கேரக்டர்ல நடிச்சிருக்கவரு Benedict Cumberbatch இதுல ஒரே ஒரு எபிசோட் பாத்தாலே இவரோட ஃபேன் ஆயிருவோம். வாயிலயே க்ரைண்டர் ஓட்டுற சுச்சித்ராவ பாத்துருக்கோம். வாயிலயே பஸ் ஓட்டுற RJ பாலாஜியையும் பாத்துருக்கோம். ஆனா இவரு அதுக்கும் மேல. வாயிலயே ட்ரெயின் ஓட்டுறவரு. வக்காளி பேச ஆரம்பிச்சான்னா மூச்சி விடாம பத்து நிமிஷம் பேசுவான். அதும் 80 கிலோ மீட்டர் ஸ்பீடுல பேசுவான். இவன் 10 செகண்ட் பேசுன வசனத்த, வீடியோவ pause பண்ணி வச்சிட்டு, சப் டைட்டில 30 செகண்ட் படிச்சாதான் நமக்கு புரியும். அவ்வளவு வேகம்.

ஒவ்வொரு வித்யாசமான கேஸும், அத நம்மாளு சால்வ் பண்ற விதமும் செம்மையா இருக்கும். அதுக்கும் மேல கொடூர வில்லன் மோரியார்டின்னு ஒருத்தான். இவன் ஸ்க்ரீன்ல வர்றதே ஒரு 20 நிமிஷம் தான் இருக்கும். ஆனா அள்ளு கெளப்பி விட்டுருவான்.

இந்த Sherlock சீரீஸ்ல ரெண்டாவது சீசன்ல “The Hound of the Baskervillesங்குற எபிசோட்தான் என்னோட favorite.. பார்க்காதவங்க கண்டிப்பா இந்த சீரீஸ மிஸ் பண்ணாம பாருங்க.

GAME OF THRONES



சீரியல்னு பாக்க ஆரம்பிச்சிட்டு, இன்னும் இந்த சீரியல் பாக்காம இருந்தீங்கன்னா வடிவேல் பாணியில “அடப்பாவிகளா தப்பு பண்ணீட்டீங்கடா.. தெய்வ குத்தம் ஆயிப்போச்சுடா” ன்னு தான் சொல்லனும். நம்மள அடிமையாக்கி வைக்கிற அளவு கெப்பாசிட்டி உள்ள ஒரு சீரியல். ஒரே நைட்டுல விடிய காலம் 3 மணி வரைக்கும் 5 எபிசோடெல்லாம் பாத்துருக்கேன்.

ஒரு அரியணைய குறி வச்சி நாலஞ்சி குரூப்புங்க எப்படி அடிச்சிக்கிறாய்ங்ககுறது தான் கதை. இவய்ங்க மட்டும் அடிச்சிக்கிட்டா பரவால்லை. இவய்ங்களுக்கு இடையில White walkers ங்குற பேய் கும்பல் வேற. இவய்ங்களும் அடிச்சிக்கனும், பேயிங்களையும் சமாளிக்கணும்.

நாலஞ்சி parallel ட்ராக் இருக்கதால ஒரு மணிநேரம் செம்ம ஸ்பீடா போயிடும். நம்ம என்ன எதிர்பார்க்குறோமோ அது நடக்காது. நமக்கு எவன ரொம்ப புடிக்கிதோ அவன அடுத்த எபிசோடுலயே போட்டு தள்ளிருவாய்ங்க. ஒவ்வொரு கேரக்டரும் செதுக்கிருப்பாய்ங்க. ஒவ்வொருத்தனும் போட்டி போட்டு பெர்ஃபார்மன்ஸ காட்டுவாய்ங்க. அதுலயும் Tyrion Lannister , Arya starcகேரக்டர்கள்ல வர்றவங்க செம. 

எத மிஸ் பண்ணாலும் இந்த சீரிஸ்ஸ மிஸ் பன்னாதீங்க. ஏற்கனவே நாலு சீசன் முடிஞ்சி அஞ்சாவது சீசன் அடுத்த மாசத்துலருந்து ஸ்டார்ட் ஆக போகுது. பார்காதவங்க இப்போ பாக்க ஆரம்பிச்சா கரெக்டா இருக்கும். 


குறிப்பு : மேல சொன்ன சீரீஸ்கள்ல Sherlock ah தவிற மத்த எல்லா சீரிஸ்லயும் ஜலபுலஜங்க்ஸ் Content அதிகம். அதனால இடம் பொருள் ஏவல் அவசியம். வீடுகளில் அடி வாங்குனா கம்பெனி பொறுப்பாகாது


Sunday, March 22, 2015

மனைவியிடம் அடி வாங்காமல் எஸ் ஆவது எப்படி?!!!


Share/Bookmark
இன்னிக்கு நாம பாக்கப்போறது ஒரு மிகப்பெரிய சமூக ப்ரச்சனை. ஒவ்வொரு வீட்டுலயும் இருக்க ப்ரச்சனை. பெண்கள் அடி வாங்கிய காலம் போயி இப்போ ஆண்கள் அடிவாங்கிக்கிட்டு இருக்க காலம். அண்டர்டேக்கருக்கே வீட்டுக்கு போனா மிரட்டல் அடி விழுகுதாம். அப்படி இருக்க சாதாரண மனிதர்கள் எப்படி இந்த ப்ரச்சனைய சமாளிக்கிறது? அடி வாங்கும்போது லைட்டா கோவம் வந்து, எதிர்த்து மனைவிய நோக்கி கைய தூக்கிட்டாலும், உங்க மேல பாய ஆயிரத்தியெட்டு சட்டம் ரெடியா இருக்கு.  ஒரு வேளை சட்டம் பாயலன்னாலும், கண்ண கசக்கிட்டு பொறந்த வீட்டுக்கு பொய்ட்டாங்கன்னா மச்சானுங்க வீசுற கத்தி உங்க மேல பாயும். இந்த மாதிரி ப்ரச்சனைகள்ல சிக்கி தவிக்கிறவங்களுக்காகவே, இந்த துறையில் பலவருடம் அனுபவம் மிக்க அறிஞர் பெருமக்களைக் கொண்டு ப்ரத்தியேகமா உருவாக்கப்பட்டதுதான்  இந்தப் பதிவு.


1.தப்பு நடக்குறத தடுக்குறது எப்படின்னு பாக்குறதுக்கு முன்னால ஒரு வேளை தப்பு நடந்துட்டா என்ன செய்யனும்ங்குறதுக்கு ஆயத்தமாயிக்கனும். முதல்ல கராத்தே, கும்ஃபூ, களரி ன்னு எதாவது ஒரு தற்காப்புக் கலை தெரிஞ்சி வச்சிக்கனும். இல்லை அதெல்லாம் ரொம்ப ஹைடெக்கா இருக்குன்னு ஃபீல் பண்ணீங்கன்னா, அட்லீஸ்ட் உங்களுக்கு க்ரிக்கெட்டுல டிஃபென்ஸ் ஷாட்டுங்களாவது ஆடத்தெரிஞ்சிருக்கனும். உங்க க்ரிக்கெட் டீம்ல ரொம்ப வேகமா போடக்கூடிய ஒரு பவுலர, ஃபுல் ஸ்பீடுல பந்து போடச்சொல்லி தினமும் கொஞ்ச நேரம் டிஃபென்ஸ் ஷாட் பழகுறது உசிதம். ஏன்னா, எந்த நேரத்துல, எந்த திசையிலருந்து பூரிக்கட்டையோ, இட்லி குண்டானோ, தோசைக் கரண்டியோ உங்க மேல பாயும்னு யாராலயுமே சொல்ல முடியாது. எந்த திசையிலருந்து வந்தாலும் அத தடுக்க உங்களுக்கு தெரிஞ்சிருக்கனும். அட்லீஸ்ட் உள் காயங்களோட தப்பிக்கவாவது தெரிஞ்சிருக்கனும்.

2. ”வாழ்க்கைன்னா சில அடிகள் விழத்தான் செய்யும்”, ”சண்டையில கிழியாத சட்டை எங்கருக்கு” ”அடிகுடுத்த கைப்புள்ளைக்கே இந்த அடின்னா..” போன்ற வசனங்களை மனப்பாடம் பன்னி வச்சிக்கனும். அப்பத்தான் மறுநாள் காலையில ”என்ன சார் மண்டையில லேசா பொடைச்சிருக்கு?”ன்னு எவனாவது கலாய்ச்சா, அந்த மாதிரி வசனங்களை சொல்லிட்டு போயிட்டே இருக்கலாம்.

சரி இனிமே வரும்முன் காக்கும் நடவடிக்கைகளுக்கு வருவோம்.

3. முதல்ல நம்ம சாப்புடுற சாப்பாடு. அதுல சுத்தமா உப்பு, காரம் சேத்துக்கவே கூடாது. தப்பித்தவறி கோவம், சூடு, சுரனை போன்ற விஷயங்கள் உங்களுக்கு வந்துடவே கூடாது. அடி விழுகுறதுக்கு முதல் காரணமே இந்த சூடு சுரணை போன்ற ஐட்டங்கள் தான். அதனான என்ன நடந்தாலும், எதுவுமே நடக்காதது போல “சுமைலிங்” ஃபேஸோட (smiling face) இருக்கனும்.

4. அப்புறம் மனைவிக்கு அப்பப்போ நம்மளால முடிஞ்ச, (சில நேரங்கள்ல முடியாத ) உதவிகளைச் செஞ்சி குடுக்கனும். அதாவது அவங்க சாதம் வச்சிட்டு இருக்கும்போது காய்கறி நறுக்கி குடுக்குறது, அவங்க துணி அலசும் போது, துணிங்களுக்கு சோப்பு போட்டு துவைக்கிறது, சில நேரங்கள்ல வீட்ட பெருக்குறது, அப்பப்போ சாப்பிட்ட பாத்திரங்களை கழுவுறது (சில நேரத்துல அவங்க சாப்பிட்ட பாத்திரத்தையும்), குழந்தைங்களுக்கு ஜட்டி சாக்ஸ் மாட்டி விடுறது, ஆய் கழுவி விடுறது ன்னு முடிஞ்ச உதவிகளை செய்யனும். அப்பதான், உக்கிரம் கொஞ்சம் குறையும்.

5. ஆனா ஒரு தடவ ஒண்ணு செய்ய ஆரம்பிச்சா, அத வாழ்க்கை ஃபுல்லா நீங்க தான் செய்யனும். ஒரு நாள் சமைப்போம்னு அவசரப்பட்டு சமைச்சிட்டு எஸ்ஸாயிடலாம்னு மட்டும் நினைக்காதீங்க. இன்னொரு நாள் “உங்க கையால அன்னிக்கு ஒரு ரசம் வச்சீங்களே.. அது தான் ரசம்.. “ ன்னு ஒரு பிட்ட போட்டு வாழ்க்கை ஃபுல்லா உங்களை ரசம் வைக்க வைத்துவிடும் வாய்ப்பு அதிகாமா இருக்கதால, அந்த மெல்லிய கோட்டுல பயணம் பன்றதுலதான் உங்க திறமையே அடங்கியிருக்கு.

6. என்னிக்காவது நீங்க ரொம்ப பசியோட வீட்டுக்கு வந்து, கிச்சனுக்கு போய் பாத்தா சாப்பிட எதுவுமே இல்லை. மனைவிகிட்ட கேட்டா, “ரொம்ப டயர்டா இருக்குங்க.. அதான் சமைக்கல” ன்னு சொல்றாங்கன்னு வைங்க. உடனே “அதுக்கென்ன நானே சமைக்கிறேன்” ன்னு, சமைக்க ஆரம்பிச்சி கொலைக்கேசுல உள்ள போயிறக்கூடாது. “ரொம்ப டயர்டா இருக்குங்க.. சமைக்கல…” ன்னு வீட்டுக்காரம்மா சொன்னா, “நாயே இன்னிக்கு வீட்டுல சாப்பாடு இல்லை. போய் எனக்கும் சேத்து ஹோட்டல்ல பார்சல் வாங்கிட்டு வா” ன்னு அர்த்தம்

7. கிரிக்கெட், ஃபுட் பால் மாதிரியான விளையாட்டுக்கள டிவில நீங்க அதிகம் விரும்பி பார்ப்பவரா? அப்படி எதாவது கெட்ட பழக்கம் இருந்தா அத அடியோட நிறுத்திக்கனும். “நாதஸ்வரம்” “கெட்டி மேளம்” “அக்கா” “சரவணன் காமாச்சி” போன்ற சீரியல்களப் பாக்க பழகிக்கனும். அப்ப தான் அடிதடி இல்லாம காலத்த ஓட்ட முடியும். இல்லை.. நா 20-20 மேட்ச் பாத்தே தீருவேன்னு ரிமோட்ட எடுத்தீங்க.. உங்களுக்கு பவர் ப்ளே ஸ்டார்ட் ஆயிரும்.

8. தேவையில்லாத விஷயங்கள்ல மூக்கை நுழைக்க கூடாது. அதாவது வீட்டுல எதாவது மாமியார் மருகள் சண்டை நடந்துகிட்டு இருக்கும்போது, சமாதானம் பன்றதா நினைச்சி referee வேலை பாக்க நினைச்சா, கண்டஸ்டண்டுகள விட ரெஃப்ரீக்கு தான் அதிக அடி விழும் அபாயம் இருக்கு. அதனால வெட்டுக்குத்து நடந்தா கூட, யாரோ பக்கத்து வீட்டு பொண்ணும் அவங்க மாமியாரும் சண்டை போட்டுக்குற மாதிரி நினைச்சி, அதுக்கும் நமக்கு எந்த சம்பந்தமும் இல்லாத மாதிரி, chair la உக்காந்து ஸ்நாக்ஸ் சாப்பிட்டுகிட்டே அத வேடிக்கை பாக்குறது உசிதம்.



9. இன்னொரு ரொம்ப முக்கியமான விஷயம், ஆண்டனியப் பத்தி பாஷாகிட்டயோ, இல்லை பாஷாவப் பத்தி ஆண்டனிக்கிட்டயோ பேசிறவே கூடாது. ஏன்னா ஆண்டனியும் பாஷாவும் எதிரிகள். ஆண்டனிய தூக்குறதுதான் பாஷாவோட வேலை. பாஷாவ காலி பண்றது தான் ஆண்டனியோட வேலை. இன்னும் சொல்லப்போனா பாஷாகிட்ட தப்பு செஞ்சா கூட மன்னிப்பு உண்டு. ஆனா ஆண்டனிகிட்ட ம்ஹூம். “Baaad News” ன்னு சொல்லிட்டு துப்பக்கிய எடுத்து போட்டு தள்ளிருவாரு. அட ஆண்டனி யாரு பாஷா யாருன்னு இன்னும் உங்களுக்கு சொல்லவே இல்லையா? என்னங்க உங்க அம்மா தான் பாஷான்னா ஆண்டனி யாருன்னு சொல்லனுமா என்ன?

10.மனைவியோட சொந்தக்காரர்களைப் பத்தி தப்பா பேசவே கூடாது. குறிப்பா “இதக் கொண்டு வந்து என் தலையில கட்டி வச்சிட்டாய்ங்களே” “ இந்த கும்பல்ல என்ன கோர்த்து விட்டுட்டாய்ங்களே” மாதிரியான புலம்பல்கள் வெளியில இருந்தாலும், உங்க மனைவியோட காதுல “இப்புடி ஒரு பொண்ணு கிடைக்க நா குடுத்து வச்சிருக்கனும்” “என்னோட மச்சான் சாதாரன மச்சான் இல்லை.. தெய்வ மச்சான்” ங்குற மாதிரியான வசனங்கள் மட்டுமே கேக்குற மாதிரி பாத்துக்கனும்.

11. திடீர்னு ஒரு நாள் உங்க மனைவி அவங்களே செலக்ட் பன்ன ஒரு ட்ரஸ்ஸ போட்டுகிட்டு வந்து “ஏன்னுங்க மாமா இது எப்புடி இருக்கு?” ன்னு கேப்பாங்க. ”கலராடி இது? கண்ணு அவியிற மாதிரி. கண்றாவியா இருக்கு” ன்னு மனசுல இருக்கத ஓப்பனா சொல்லிரக்கூடாது. ”அம்முளுக்குட்டி இந்த ட்ரெஸ் உனக்குன்னே அளவெடுத்து தச்சா மாதிரி இருக்குடா கண்ணு”ன்னு சொல்லிடனும். இல்லைன்னா உயிருக்கு உத்திரவாதம் இல்லை.

12. உங்க மனைவிக்கு ஒரு செல்லப்பேரு வச்சுத்தான் கூப்புடனும். உங்க மனைவி தண்ணி ஊத்திவைக்கிற ட்ரம்மு மாதிரி இருந்தாலும் ”அம்மு”ன்னும், காஞ்சி போன பஜ்ஜி மாதிரி இருந்தா கூட “புஜ்ஜி”ன்னும் தான் கூப்புடனும். அப்புறம் “லட்டு” “பூந்தி” “மசால்வடை” ன்னு உங்க டேஸ்டுகேத்த மாதிரி எதாவது ஒரு பேர் வச்சித்தான் கூப்புடனும். அப்பதான், உங்களோட க்ரைம் ரேட் அதிகமாகும் போது, அந்த பேர ரெண்டு தடவ சொன்னா, உச்சகட்ட கோவத்துல இருக்க உங்க மனைவி “cool buddy” குமாரா மாறுவாங்க.


13. ஐஸ்வர்யாராயே மனைவியா வந்தாலும், ரோட்டுல நீங்க நடந்து போகும்போது எதிர்த்தாப்புல வர்ற டொம்மை ஃபிகர நீங்க பாத்து சைட் அடிக்கத்தான் செய்வீங்க. மனைவிகளோட கோர்ட்டுல இபிகோ 302 செக்‌ஷன தேர்ந்தெடுக்குற அளவுக்கு இது ஒரு மிகப்பெரிய குற்றம். அப்படி எசகுபிசகா எங்கயாவது பாத்து மாட்டும்போது, “இல்லைடா செல்லம் அந்த ட்ரெஸ்  மாதிரி தான் உனக்கு ஒண்ணு வாங்கனும்னு இருந்தேன்” ங்குற மாதிரி எதாவது சொல்லி எஸ் ஆயிடனும். குறிப்பு: ட்ரெஸ்ஸுன்னா வாங்கி குடுத்திடலாம். கொஞ்சம் அதிகமா கூவுறதா நெனைச்சி “அந்த நெக்லஸ் உனக்கு ரொம்ப எடுப்பா இருக்கும்மா” ன்னு வாய விட்டா வரும் பின் விளைவுகளுக்கு கம்பெனி பொறுப்பாகாது.

14. உங்கள் மனைவியை அடிக்கடி டூவீலர்ல அழைச்சிட்டு போகிறவரா நீங்க? அப்டின்னா நகைக்கடை, ஜவுளிக்கடைகள், ஷாப்பிங் மால்கள் இல்லாத ரூட்டை உபயோகிப்பது உசிதம். இல்லன்னா அந்தக் கடைகள் வரும்போது மின்னல் வேகத்துல வண்டியை ஓட்டுவது மிகஅவசியம். இல்லைன்னா என்ன, அவங்க எதாவது கேக்க, நாம வேணாம்னு தலைய உலுக்க, கடுப்பான அவங்க நம்மள தாக்க, வாங்குன அடியில நம்ம மூஞ்சி வீங்க.. அட விடுங்க.

15. அவசரப்பட்டு அரசியல்வாதிகள் மாதிரி வாக்குறுதிகள அள்ளி தெளிச்சிற கூடாது. மக்கள் வேணா வாக்குறுதிகள மறந்துடுவாங்க. ஆனா மனைவிகள் மறக்கமாட்டாங்க. ”அடுத்தவருசஷம் நாம கொடைக்காணல் போவோம்டா கண்ணு”ன்னு பேச்சுவாக்குல சொல்லிட்டு நீங்க அத தூங்கி எழுந்த உடனே மறந்துடுவீங்க. ஆனா அந்த அடுத்தவருஷம்ங்குறது 5 வருஷம் கழிச்சி வந்தாலும் அவங்க அத மறக்காம உங்ககிட்ட கேப்பாங்க.


16. தப்பு செஞ்சா கப்புன்னு கால்ல விழுக தெரிஞ்சிருக்கனும். குடிச்சிட்டு குடிக்காத மாதிரியே நடிச்சி வாங்கி கட்டிக்கிறத விட, “கன்னுகுட்டி இன்னிக்கு பார்ட்டில ஃப்ரண்ட்ஸ் கம்ப்பல் பண்ணதால லைடடா குடிச்சிட்டேன்” ன்னு உண்மைய ஒத்துக்குறது தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையா குறைக்கும். 

நன்றி : நண்பன் கார்த்தி , 
              நண்பன் அனந்த நாராயணன் 

 குறிப்பு: இந்தப்பதிவு வெறும் நகைச்சுவைக்கே. யார் மனதையும் புண்படுத்துவதற்காக அல்ல


Tuesday, March 17, 2015

பொறுக்க முடியாது குருநாதா…!!!


Share/Bookmark
குறிப்பு : இது ஒரு புலம்பல் பதிவு. வெறியாயிடாதீங்க. பெரும்பாலன பதிவர்களப் போல நானும் பதிவெழுதுறத ஒரு பொழுதுபோக்குகாக தான் செய்றேன். இந்த தளத்தின் மூலமா ஒரு சிலர கொஞ்சம் சிரிக்க வைக்கலாமேன்னு முயற்சி செஞ்சிக்கிட்டு இருக்கேன் அவ்ளோ தான். மத்தபடி இது மூலமா வருமானம் எதுவும் எனக்கு இல்லை. அப்படி ஆசையும் எனக்கு இதுவரைக்கும் வந்ததில்லை. சொல்லப்போனா domain address க்கு வருஷம் 530 ரூபா நா தான் செலவு பன்னிக்கிட்டு இருக்கேன்.

நா எழுதிய நிறைய பதிவுகள் வெவ்வெறு இடங்கள்ல வெளியிடப்பட்டிருக்கு. குறிப்பா, ஃபேஸ்புக்கில் அப்பாடக்கர்ஆவது எப்படி? ங்குற பதிவு அதிக அளவுல யார் யார் பேரெல்லாமோ போட்டு நிறைய தளங்கள்ல போட்டிருந்தாங்க. நா பெருசா எதுவும் கண்டுக்கல. சரி நம்ம எழுதுன பதிவு நாலு பேர் படிச்சா சரின்னு விட்டுட்டேன்.

என்ன சொல்றோம்ங்குறத விட யார் சொல்றாங்கங்குறதுக்கு ரொம்ப முக்கியம். ஒரு பிரபலமான ஆள் ஒரு சாதாரண விஷயத்த சொல்லும்போது அதுக்கு இருக்க மதிப்பு ஒரு சாதாரண ஆள் எப்படிப்பட்ட விஷயத்த சொல்லும் போதும் கிடைக்கிறதில்லைங்குறது தான் உண்மை. அதுவும் பெண்கள் ஒரு விஷயத்த சொல்லும்போது கிடைக்கிற மதிப்பு இருக்கே அப்பப்பா.. “hi good morning” ன்னு ஒரு புள்ளை போட்டுட்டு போன ஸ்டேட்டஸூக்கு 1500 லைக்கு, 650 கமெண்ட் வரும். மூணு நாளுக்கு முன்னால போட்ட குட் மார்னிங்குக்கு நம்மாளுக இப்பவும் ரிப்ளை good morning அனுப்பிக்கிட்டு இருப்பாய்ங்க.

ஒரு தடவ “நடுவுலகொஞ்சம் எதையோ காணும்?” ந்ங்குற ஒரு பதிவு எழுதியிருந்தேன். வழக்கம்போல அத படிச்சிட்டு நம்ம தளத்துல ஒரு அஞ்சாறு பேர் நல்லாருக்குன்னு கமெண்ட் போட்டுருந்தாங்க. அப்புறம் நண்பர் ஒருத்தர் மூலமா அந்தப் பதிவ ஒரு பெண் பதிவர் அவங்களோட தளத்துல போட்டுருக்கதா தெரிய வந்துச்சி. அதே பதிவுக்கு அந்த தளத்துல கிடைச்ச வரவேற்ப பாக்கனுமே.. 

ஒருத்தன் “மேடம் வாய்ப்பே இல்லை பின்னிட்டீங்க ங்குறான். இன்னொருத்தான் “what a thinking.. amazing” ன்னு போட்டுருக்கான். எப்படியெல்லாம் ஒருத்தர புகழ முடியுமோ அத்தனையும் பன்னி வச்சிருந்தாய்ங்க அந்த பின்னூட்டங்கள்ல. கிட்டத்தட்ட 50 கமெண்ட் அந்த போஸ்டுக்கு. அந்தக்கா எங்கருந்து அத போஸ்ட் பன்னுச்சிங்குறத அந்த போஸ்டுல போடவே இல்லை. ஓப்பனா சொல்லனும்னா நா போட்ட ஒன் ஆப் த மொக்கை போஸ்டுங்கள்ள அதுவும் ஒண்ணு. ஆனா என்ன.. ஒரு பொண்ணு மூலமா போனதால அதுக்கு அப்படி ஒரு வரவேற்பு


என்னோட பதிவுகள் நிறைய முறை நிறைய இடங்கள்ல courtesy name கூட இல்லாம பகிரப்பட்டிருக்கு. ஒரு சமயம், இங்க போஸ்ட் பண்ற அத்தனையையும் அப்படியே காப்பி பேஸ்ட் பன்னி penmai.com ல ஒருத்தர் போட்டுக்கிட்டு இருந்துருக்காரு. அதுவும் ரொம்ப நாள் கழிச்சி நண்பர் ஒருத்தர் மூலமாத்தான் தெரிஞ்சிது. அந்த admin la பேசின அப்புறம் எல்லா பதிவுலயும் reference website name ah add பண்ணாங்க.

முகம் தெரியாத நபர் ஒருத்தரோட எழுத்துக்கு குடுக்குற மதிப்பு, நம்ம பக்கத்துலயே இருக்கவன் செய்யும் போது கிடைக்கிறது இல்லை. என்னோட அலுவலகத்துல blogger சைட்டு ஓப்பன் ஆகாது. அதனான நண்பர்கள் சில பேருக்கு முழுப்பதிவையும் email la அனுப்புறதுண்டு. பெரும்பாலான பேர் அந்த mail la ஓப்பன் பன்றதே இல்லை. விமர்சனமா இருந்தா ஸ்க்ரோல் பண்ணி கடைசி பாராவ மட்டும் படிச்சிட்டு க்ளோஸ் பன்னிருவாய்ங்க.

இப்டித்தான் போன மாசம்  “நம்ம வீட்டு கல்யாணம்” ங்குற பேர்ல எழுதுன பதிவ எல்லாருக்கும் அனுப்பிருந்தேன். நாலு நாளைக்கு முன்னால அந்த பதிவ என்னோட அலுவலக நண்பர் ஒருத்தர் Whatsapp la அனுப்பி “சிவா உன்னோட post… என்னோட காலேஜ் ஃப்ரண்ட்ஸ் குரூப்புலருந்து எனக்கு வந்துச்சிடா” ன்னு அனுப்பிருந்தாரு. எனக்கு ரொம்ப சந்தோஷமா இருந்துச்சி. அதுக்கப்புறம், அதே wats app மெசேஜ்ஜ இன்னும் சில அலுவலக நண்பர்கள் எனக்கு fwd msg மாதிரி அனுப்பி “இது நல்லாருக்கு படிங்க” ன்னு அனுப்பிருந்தாங்க. அடப்பாவிகளா.. அப்போ நா அனுப்புற மெயில ஒரு பயலும் கண்ணெடுத்து கூட பாக்குறதில்லை. நா எழுதுனத எனக்கு அனுப்புறீங்களேப்பான்னு நினைச்சிக்கிட்டேன்.

சரி இனிமே மெயில் சர்வீஸ கட் பண்ணிட வேண்டியதுதான்னு யோசிச்சிட்டு இருக்கும்போது, திடீர்னு நண்பர் ஒருத்தர் Fb la ஒரு வீடியோவுக்கு ”இது உங்க ஸ்க்ரிப்டு” ன்னு போட்டு tag பன்னி விட்டுருந்தாரு. அந்த வீடியோவ பாத்தப்புறம் தான் தெரிஞ்சிது vikatan tv la ”நம்ம வீட்டு கல்யாணம்” போஸ்ட ஒரு வீடியோவா எடுத்து விட்டுருக்காய்ங்க.

கொடுமை என்னன்னா அத கொஞ்சம் நல்லா எடுத்துருந்தாலும் பரவால்லை. அந்த போஸ்ட எவ்வளவு கொலை பன்ன முடியுமோ அவ்வளவு கொலை பண்ணி கன்றாவியா எடுத்து வச்சிருக்காய்ங்க. எங்கருந்து மேட்டர சுட்டாங்கன்னு எந்த ஒரு courtesy name உம் இல்லாம.  இதான் அந்த வீடியோவோட லிங்க்.



அதவிட உச்ச கட்ட காமெடி அந்த வீடியோவுல தலைப்பு என்னம்மா இப்டி பண்றீங்ளேமான்னு வேற வச்சிருக்காங்க. நா தான் அவங்கள பாத்து கேக்கனும் “என்னம்மா இப்புடி ஆட்டைய போடுறீங்களேமா” ன்னு!!

”மச்சி அறிவுத் திருட்டு தான் மச்சி ரொம்ப மோசமான திருட்டு” என்னோட நண்பர் அடிக்கடி சொல்லுவாரு. நம்ம ஒண்ணும் பெரிய ஆக்கப்பூர்வமான, அபூர்வ போஸ்ட்டெல்லாம் எழுதிட. நம்ம கண்டுபுடிச்ச அனுகுண்டு டெக்னாலஜிய எதுவும் எவனும் திருடல.  ஆனா ஒரளவுக்கு பொழுது போற மாதிரியான பதிவுகள் தான் எழுதுறோம்.

சினிமா விமர்சனங்கள் எழுத மட்டும் தான் அதிக நேரம் ஆகுறதில்லை. அதிகபட்சம் ஒன்னரை ரெண்டு மணி நேரத்துக்குள்ள எழுதிருவேன். ஆனா மத்த பதிவுகளுக்கு, படிக்கிறவங்களுக்கு புடிக்கனும்ன்னு நிச்சயம் அதிக நேரம் எடுத்து தான் எழுதுவேன். படிக்கிறவங்க அத எப்படி பாக்குறாங்கன்னு எனக்கு தெரியலை. ஆனா நா போஸ்ட் பன்றது, பின்னால ஒரு நாள் நானே அத படிச்சா அட்லீஸ்ட் எனக்காவது அது புடிச்சிருக்கனும்னு  ஆசைப்படுறேன்

ஒரு பதிவ எழுதுனப்புறம் படிச்சி பாக்கும்போது எனக்கு புடிக்கலன்னா அத போஸ்ட் பன்றதே இல்லை. அதுமாதிரி கிடப்புல கிடக்குறதே ஒரு பதினைஞ்சி இருபது பதிவுகள் இருக்கும். ஒரு வேளை நா எழுதின பதிவு நல்லாருக்கா நல்லா இல்லையாங்குற கன்ஃபியூசன் எனக்கே இருந்தா நண்பர்கள் சில பேருக்கு அனுப்பி, அவங்க போடலாம்னு சொன்னப்புறம் தான் போஸ்டே பன்னுவேன்.

நல்லா இருக்கோ நல்லா இல்லையோ, நம்ம கொஞ்ச நேரத்த ஒதுக்கி ஒரு விஷயத்த செய்யும் போது, அதோட output ah சில பேர் நோகாம நோம்பு  கும்பிட்டு எடுத்துட்டு போறத பாக்கும் போது கொஞ்சம் கஷ்டமா இருக்கு.. அதனால தான் இந்தப் புலம்பல். 


Thursday, March 12, 2015

அது எப்புடிடா சிரிச்ச மாதிரியே செத்துருக்க?


Share/Bookmark
பயத்துக்கே பயம் காட்டுற ஒரு விஷயம் தான் இந்த மரணம்ங்குறது. எப்பேற்பட்டவனையும் சாவு பயத்த காட்டி மாத்திடலாம். ஆனா இப்போ சாவப்பத்தி ரொம்ப டீட்டெய்லான, சீரியஸான டிஸ்கஷன் எதுவும் தேவையில்லை. உலகத்துல எதிர்பாராத விதமா நடந்த சில, மரணங்களப் பத்தி இந்தப் பதிவுல கொஞ்சம் ஜாலியா பாக்கலாம். சாவுறதுல என்னடா ஜாலி? ஏண்டா செத்து செத்து விளையாடுறது ஒரு விளாட்டாடா ன்னு கேக்குற உங்க மைண்டு வாய்ஸ நா கேட்ச் பன்னிட்டேன்.

நாம என்னவாக நினைக்கிறமோ அதுவாத்தான் ஆகுறோம்னு புத்தர் சொல்லிருக்காரு. அதுக்குன்னு ”நா கூடத்தான் கலெக்டர் ஆகனும்னு நினைச்சேன். இப்போ கல்லொடைச்சிட்டு இருக்கேன்” ன்னு கேக்கக் கூடாது. நினைச்சிட்டே விட்டத்த பாத்துக்கிட்டு படுத்திருந்தா வேலைக்காகாது. கொஞ்ச்ம் டீ டிக்காசனோட உழைக்கனும். சரி அத உடுங்க. இங்க ஒருத்தருக்கு என்ன நினைச்சாரோ அது அப்படியே நடந்துருக்கு. அப்டி என்ன நினைச்சாரு?

“நா எப்ப செத்தாலும் இடி விழுந்து தான் சாகனும்”ன்னு அமெரிக்காவ சேர்ந்த ஒருத்தன் அவனோட நண்பர்கள்கிட்ட சொல்லிட்டு இருந்துருக்கான். அதே மாதிரி ஒரு நாள் அவனோட ஃப்ரண்ட் வீட்டுக்கு வாசப்படிக்கு முன்னால நிக்கும் போது, அந்த வீட்டு chimney ல இடி விழுந்து அந்த அதிர்ச்சிலயே நம்மாளு மர்கயா சாலா. அட இடி விழுந்த இருளாண்டி.. எங்க ஊர்லல்லாம் அடுத்தவன் தலையில இடி விழனும்னு தாண்டா வேண்டிக்குவாய்ங்க. நீ என்னடா புதுசா உன் தலையில இடி விழனும்னு நீயே வேண்டிருக்க?

அடுத்ததும் அதே அமெரிக்காவுல தான். ஒரு வக்கீலு என்னா பண்ணிருக்கான் ஒரு மர்டர் கேஸ கோர்ட்ல வாதாடிருக்கான். அது என்ன கேஸூன்னா ஒருத்தன் குண்டடி பட்டு செத்துட்டான். அவன சுட்டதா சொல்லி ஒருத்தன கைது பண்ணிட்டாய்ங்க. இப்போ நம்மாளு வாதாடுறது அந்த அரஸ்ட் ஆனவனுக்காகத்தான். என்ன சொல்லி வாதாடிருக்காப்ள பாருங்க. “ கணம் கோர்ட்டார் அவர்களே.. எனது கட்சிக்காரர் செத்தவர சுடல. அவரே துப்பாக்கிய எடுக்கும் போது கைதவறி சுட்டுக்கிட்டு செத்துட்டார்” ன்னு வாதாடிருக்காப்ள

வாதாடுனதோட மட்டும் இல்லாம “இப்ப பாருங்களேன் எப்டின்னு செஞ்சி காமிக்கிறேன்” என்னு ஒரு துப்பாக்கிய வச்சி செய்முறை விளக்கம் குடுக்க ட்ரை பண்ணிருக்காப்ள. ப்யூட்டி என்னன்னா அந்த வக்கீலு செய்முறை விளக்கம் குடுக்கும்போது, அவர் கையில வச்சிருந்த துப்பாக்கி வெடிச்சி கோர்ட்டுல அந்தாளே இறந்துட்டாரு. கேஸ் என்னாச்சின்னு கேப்பீங்களே? அவர் வாதாடுன கேஸ் ஜெயிச்சிருச்சி. இதப்பாத்தும் ஜட்ஜ் வேற தீர்ப்பு சொல்லுவாரா என்ன? ஏண்டா தன்வினை தன்னை சுடும்னு சொல்லுவாய்ங்களே அது இந்த ”சுடும்”தானாடா?

சிரிப்பு தான் நிறைய வியாதிக்கு மருந்துன்னு சொல்லுவாங்க. சிரிப்ப தான் மனுஷங்களோட ஸ்பெஷாலிட்டின்னு சொல்லுவாங்க. காமெடி சென்ஸ் ஒரு மனுஷனுக்கு இருக்க வேண்டியது தான். அதுக்குன்னு? இங்கிலாந்துல காமெடி சென்ஸ் அதிகமா இருந்த ஒருத்தன், ஒரு டிவி ஷோவ பாத்து 25 நிமிஷம் கெக்க புக்கன்னு விடாம சிரிச்சிட்டு இருந்துருக்கான். அரைமணி நேரம் கழிச்சி பொண்டாட்டி வந்து “ஏனுங்மாமா சிரிச்சா மாதிரியே வாய வச்சிருக்கீங்க” ன்னு கேக்கும் போதும் பதில் சொல்லாம சிரிச்சிட்டே இருந்துருக்கான். அப்புறம் தான் தெரிஞ்சிருக்கு நாயி சிரிச்சிட்டே வாயப் பொளந்துருச்சின்னு. ஓவரா சிரிச்சதுல இதயத்துக்கு ஆக்ஸிசன் பத்தாம இறந்துபொய்ட்டானாம்.


”இந்த சாப்பாட்ட சாப்பிட்டுக்கிட்டே செத்துப்போயிரலாம்”ன்னு சொல்றபடி சமைக்கிற மனைவிகளும் இருக்காங்க. “இவ சமைக்கிற சாப்பாட்ட வாயில வச்சாலே நுரை தள்ளி செத்துரவேண்டியது தான்” ன்னு சொல்ல வைக்கிற மாதிரி சமைக்கிற மனைவிகளும் இருக்காங்க. இங்க ஒருத்தனோட மனைவி ரொம்ப உடம்பு சரியில்லாம ஹாஸ்பிட்டல்ல இருந்துருக்காங்க. அதனால அவனுக்கு paranoia ன்னு ஒரு வியாதி வந்து , ஹாஸ்பிட்டல்ல இருக்க என்னோட பொண்டாட்டி வந்து சமைச்சா தான் நா சாப்புடுவேன். இல்லைன்னா சாப்பிடவே மாட்டேன்னு அடம் புடிச்சே, சாப்டாம இருந்து செத்துட்டானாம்.

இந்த மாதிரி உண்ணா விரதம் இருக்கது தப்பில்லை. ஆனா உண்ணாவிரதம் எப்படி இருக்கனும்னு எங்க ஊர் அரசியல் தலைகள்ட வந்து கத்துக்கிட்டு போய்யா.. ஒரு மணி நேர உண்ணாவிரதம், இரண்டு மணி நேர உண்ணாவிரதம்னு வகை ஸ்டாக் வகையா வச்சிருக்கோம். சரி எதோ “paranoia” ன்னு புதுவிதமான வியாதி சொல்லிருக்காய்ங்களேன்னு விக்கீபீடியாவுல தேடுனா ” Paranoia is a thought process believed to be heavily influenced by anxiety or fear, often to the point of irrationality and delusion” ன்னு சொல்லுச்சி. இது புரியிறதுக்குள்ள சேகர் செத்துருவாம்போலயேன்னு “It is an unwanted statement irrelevant to the current situation” ன்னு சொல்லி படக்குன்னு அத க்ளோஸ் பன்னிட்டேன்.

அடுத்து ஒருத்தனுக்கு விதி எப்புடி விளையாண்டுருக்குன்னு பாருங்க. டொரண்டோவுல உள்ள டொமினியன் செண்டர்ங்குற பில்டிங்கு வர்ற விசிட்டர்ஸுக்கு எல்லாம் “இந்த பில்டிங்குல உள்ள க்ளாஸ் (Glass) எதுவுமே உடையாது” ன்னு சொல்லி டெமோ காட்டுற வேலைய ஒருத்தன் பாத்துக்கிட்டு இருந்துருக்கான். அதாவது ஜன்னல்ல பிக்ஸ் பன்னிருக்க க்ளாஸ்ல வேகமா போய் உடம்பால மோதி, க்ளாஸ் உடையாது”ன்னு காமிப்பான். 

அதுவரைக்கும் நிறைய பேர்கிட்ட அந்த மாதிரி க்ளாஸ் மேல போய் வேகமா மோதி உடையாதுன்னு டெமோ காமிச்சிருக்கான்.  அதே மாதிரி ஒருநாள் 24 வது மாடியில வச்சி ஒரு குரூப்புக்கு டெமோ காமிக்க வேகமா போய் ஜன்னல்ல மோதிரிருக்கான். ஜன்னல் க்ளாஸ் உடைஞ்சி கீழ போய் விழுந்து செத்துருப்பான்னு தானே நினைக்கிறீங்க. அதான் இல்லை. மொத்த ஜன்னல் ஃப்ரேமே கழட்டிக்கிட்டு, 24 வது மாடியிலருந்து கீழ விழுந்து செத்துட்டான். மேட்டர் என்னன்னா கடைசி வரைக்கும் அந்த ஜன்னல் கண்ணாடி உடையவே இல்லை.

ரஷ்யாவுல ஒருத்தன் என்ன பண்ணிருக்கான், ஃபுல்லா குச்சிட்டு, மடிக்கிற மாதிரியான ஒரு ஸ்பிரிங் bed la (folding couch) படுத்துக்கிட்டு பொண்டாட்டி கூட சண்டை போட்டுட்டு இருந்துருக்கான். வாய்த்தகரறாரு முத்திப்போய், பொண்டாட்டி கோவமா வீட்ட விட்டு கிளம்பி போகும்போது இந்த ”நாய சூ ன்னு விரட்டிட்டு போற” மாதிரி கடுப்புல அவன் படுத்துருந்த ஸ்ப்ரிங்க் பெட்டோட கால உதைச்சிட்டு போயிருச்சி. மூணு மணி நேரம் கழிச்சி வந்து பாத்தப்போ, அந்த ஸ்பிங்க் பெட்டுக்குள்ள நசுங்கி ஆத்துக்காரர் அப்பளாமாயிருந்துருக்காரு. இந்தப்புள்ள உதைச்ச ஸ்பீடுல, அந்த bed டக்குன்னு மடிஞ்சிகிருச்சி. நம்மாளு உள்ள மாட்டிகினாரு.

ஆஸ்திரேலியாவுல ஒரு தாத்தா, தாடிக்கு ரொம்ப ஃபேமஸு. அவரோட தாடியோட நீளம் மட்டும் நாலரை அடி. அவரு எங்க போனாலும் அந்த தாடியப் பாக்குறதுக்காகவே அவ்ளோ கூட்டம் இருக்குமாம். ஆனா என்ன செய்யிறது? ஒரு தடவ ஒரு பில்டிங்குக்குள்ள தீப்பிடிச்சோன எல்லாரும் தெறிச்சி ஓடிருக்காய்ங்க. நம்ம தாத்தாவும் ஓட ட்ரை பண்ணிருக்காரு. ஓடுறவரு தாடிய அள்ளி கையில வச்சிட்டு தானே ஓடிருக்கனும். பதட்டத்துல தாடிய அள்ள மறந்து அப்படியே ஓட, தாடியிலயே கால் தடுக்கி கீழ விழுந்து கழுத்தெழும்பு உடைச்சி, கதம் ஆயிட்டாரு.

அடுத்து வர்றதுதான் ஒரு செம கேஸூ.  ரொனால்டு ஓபஸ்ங்குறவன், ஒரு அபார்ட்மெண்ட்டோட பத்தாவது மாடியிலருந்து தற்கொலை பன்னிக்கிறதுக்காக குதிச்சிருக்கான். குதிச்சி on the way la ஏர்ல ட்ராவல் பண்ணிட்டு இருக்கும்போது, ஒம்பதாவது மாடியிலருந்து அவன யாரோ துப்பாக்கியால சுட்டுருக்காங்க. So, கீழ விழுந்து உயிர் போறதுக்கு முன்னால ஏர்லயே மட்டை ஆயிட்டான். ஆனா மேட்டர் என்னன்னா, எட்டாவது மாடிக்கு கீழ ஒரு வலை கட்டி இருந்துருக்கு. அதனால இவன் தற்கொலை பன்னிக்கிறதுக்கு குதிச்சிருந்தா கூட, அந்த வலையில மாட்டிகிட்டு சாகாம இருந்துருப்பான். இப்போ அவன யாரோ சுட்டதால தான் செத்துருக்கான். ஆகவே இது கொலை தான்னு கேஸ் ஃபைல் பண்ணி கோர்ட்டுல நடந்துகிட்டு இருந்துருக்கு.

அப்புறம் இன்வெஸ்டிகேஷன்ல தான் தெரிஞ்சிருக்கு, அவன சுட்ட புல்லட் அவங்க அப்பாவோட Short gun லருந்து வந்ததுன்னு. அவருக்கு ஒரு பழக்கமாம். லோட் பண்ணாத துப்பாக்கிய வச்சி, சண்டை வரும்போது அவரோட மனைவிய சுட்டுருவேன் சுட்டுருவேன்னு மிரட்டுவாராம். அவர் பையன சுடும்போது கூட, துப்பாக்கி empty ன்னு நினைச்சி தான் சும்மா சுட்டாராம். அப்புறம் யாரு அந்த துப்பாக்கில load பண்ணது? Further இன்வெஸ்டிகேஷன்ல, அந்த புல்லட்ட லோட் பண்ணது செத்துப்போன ரொனால்டு ஓபஸ்ன்னு தெரிய வந்திருக்கு.


ரொனால்டு ஓபஸ்க்கு அவங்க அம்மா செலவுக்கு காசே தரமாட்டாங்களாம். நிறைய தடவ சண்டை வந்துருக்கு. அதானால அம்மா மேல கடுப்பான ரொனால்டு ஓபஸ், அப்பா மிரட்டுறதுக்காக வச்சிருக்க துப்பாக்கிய லோட் பண்ணி விட்டுட்டான். ஒரு வேளை அப்பா சும்மா சுட்டா கூட அம்ம இறந்துடுவாங்க. சொத்து எல்லாத்தையும் ஜாலியா அனுபவிக்கலாம்ங்குற எண்ணத்துல இப்டி செஞ்சிருக்கான். ஆனா கடைசில அவன் லோட் பண்ண புல்லட் அவனையே காலி பண்ணிருச்சி. இதுல இன்னொரு செமையான விஷயம் என்னன்னா, சும்மா இருந்த துப்பாக்கில ரொனால்ட் ஓபஸே புல்லட்ட லோட் பண்ணி, அதுனாலயே அவன் செத்துப் பொய்ட்டதால இந்தக் கேஸ் கோர்ட் தற்கொலைன்னு டிக்லார் பண்ணி அவங்க அப்பாவ ரிலீஸ் பண்ணி விட்டுட்டாய்ங்க. 

குறிப்பு : மேல சொன்ன அத்தனையும் உண்மை சம்பவங்களே.. மசாலா மட்டும் நம்ம போட்டது

Thursday, March 5, 2015

கடலின் அக்கரை போனோரே - டைட்டானிக் சம்பவம்!!!


Share/Bookmark
கப்பல்ன்னு ஒரு வார்த்தையை கேட்டவுடனே நமக்கு முதல்ல நினைவுக்கு வர்றது டைட்டானிக் தான். ஒரு விஷயத்த பெரும்பாலான மக்கள்கிட்ட கொண்டு போய் சேர்க்க திரைப்படத்தை தவிற வேற ஒரு எஃபெக்டிவ் மீடியம் இருக்க முடியாது. டைட்டானிக் சம்பவத்தை பெரும்பாலானவங்ககிட்ட கொண்டு சேர்த்த பெருமை நம்ம கேமரூனுக்கு உண்டு. இன்னிக்கு நிலமையில டைட்டானிக்குன்ன உடனே, ரோஸூம் ஜாக்கும் தான் நம்ம கண்ணு முன்னாடி நிக்கிறாங்க. ஆனா, உண்மையிலயே இந்த டைட்டானிக் கப்பல் தண்ணிக்குள்ள முழுந்துனப்போதான் நிறைய பேர் முழிச்சிக்கிட்டாங்க. கப்பல் போக்குவரத்துல, மிகப்பெரிய மாற்றங்கள்லாம் ஏற்பட்டதுக்கு இந்த டைட்டானிக் சம்பவம்தான் ஒரு முக்கியமான காரணம். ஏற்கனவே இந்த கதைய எல்லாரும் கேட்டிருந்தாலும், ரைமிங்கா கொஞ்சம் டைமிங்கா இன்னொருக்கா ஓட்டுவோம் வாங்க.

1912ல லண்டன்லருந்து நியூயார்க்கு புறப்பட்ட ஒரு பேசஞ்சர் கப்பல் தான் நம்ம டைட்டானிக். அன்னிக்கு நிலமையில உலகத்துலயே பெரிய பேசஞ்சர் கப்பல் டைட்டானிக் தான். 268 மீட்டர் நீளமும் 29 மீட்டர் அகலமும் கொண்ட டைட்டானிக்க முழுசா கட்டி முடிக்க சுமார் மூணு வருசம் ஆயிருக்கு. அன்றைய நிலமையில டைட்டானிக்க கட்டி முடிக்க ஆன செலவு தோராயமா 45 கோடி. டைட்டானிக்கோட மொத்த எடை சுமார் 46,500 டன். மொத்தம் ஒன்பது  அடுக்குகளைக் (deck) கொண்ட டைட்டானிக்க பாக்குறதும், ஒரு பதினொரு மாடி கட்டிடத்த பாக்குறதும் ஒண்ணு.

டைட்டானிக் 3547 பேர் பயணம் செய்யிற மாதிரி கட்டப்பட்டிருந்துச்சி. நல்ல வேளை, அன்னிக்கு  2228 பேர் தான் அதுல பயணம் செஞ்சாங்க. காரணம், கப்பல்ல போறதுங்குறது கொஞ்சம் காஸ்ட்லியான ஒரு விஷயம். அதுனால, டைட்டானிக்குல ட்ராவல் பன்ன பெரும்பாலனவங்க ரொம்ப வசதியானவங்க தான். White star line ங்குற கம்பெனிக்கு சொந்தமான டைட்டானிக், 1912 ஏப்ரல் 10ம் தேதி முதல் முதலா பயணத்த தொடங்குனிச்சி. எல்லாரும் உலகத்தோட மிகப்பெரிய கப்பலோட முதல் பயணத்துல கலந்துக்குறோம்ங்குற சந்தோசத்தோட பயணத்தை தொடங்குனாங்க.

நாலு நாள் வண்டி  நல்லாத்தான் போய்க்கிட்டு இருந்துச்சி. புறப்பட்ட இடத்துலருந்து, 375 கிலோமிட்டர் பயணம் செஞ்சி, ஏப்ரல் 14ம் தேதி ராத்திரி வண்டி ஃபுல் ஸ்பீடுல போய்க்கிட்டு இருக்கு. டைட்டானிக்கோட அதிகபட்ச வேகம் 25 knots. கிட்டத்தட்ட 46 km/hr (1 knot = 1.856 km). போய்க்கிட்டு இருக்கும்போதே, கப்பல்ல இருக்க wireless operators ல நிறைய முறை ஐஸ் பாறைகள் இருப்பதற்கான வார்னிங்க குடுத்துருக்கு. ஆனா நம்ம கேப்டன்  Edward smith அதக்கொஞ்சம் கூட கண்டுக்காம, புது பைக் வாங்குனவன் தாறுமாற ஓட்டிப் பழகுறது மாதிரி மேக்ஸிமம் ஸ்பீடுல கப்பல ஓட்டிக்கிட்டு இருந்துருக்காரு.  

அப்போதான் திடீர்னு பாத்துருக்காய்ங்க வழியில ஐஸ் பாறைங்க இருக்குறத. ஒரு ஒரு கிலோமீட்டர் முன்னாலயே பாத்துருந்தா கூட பரவால்ல. அவிங்க ஐஸ் பாறைய பாக்கும்போது கப்பலுக்கும், பாறைக்கும் இடைப்பட்ட தூரம் வெறும் 250 மீட்டருக்குள்ள தான் இருக்கும். என்ன பன்றது? நம்ம பல்சரா இருந்தா படக்குன்னு டிஸ்க் ப்ரேக்க அமுக்கி நிறுத்திருக்கலாம். பாவம் கப்பல்ல டிஸ்க் ப்ரேக் வேற இல்லை. பதட்டமானவிங்க, உடனே ஃபுல்லா கப்பல ரிவர்ஸ் mode க்கு போட்டு முடிஞ்ச வரைக்கும் திருப்ப பாத்துருக்காய்ங்க. ஆனா, தூரம் ரொம்ப கம்மிங்குறதால, ஐஸ் பாறையில மோதுறத தவிர்க்க முடியாம, சரியா ராத்திரி 11.40க்கு கப்பலோட வலதுபக்கம் போய் ஐஸ் பாறை மேல மோதிருச்சி.

அட என்னப்பா.. ஐஸ் தான.. கப்பல் முழுசும் இரும்புல செஞ்சது? அந்தப் பாறை சின்ன பாறை என்ன பன்னிருக்க முடியும்னு சிலபேருக்கு தோணலாம். இந்த ஐஸ் பாறைகளைப் பொறுத்த வரைக்கும், தண்ணிக்கு மேல நம்மோட கண்ணுக்கு தெரியிறது அதோட மொத்த சைஸுல நால்ல ஒரு பங்கு தான். மிச்ச மூணு பங்கு தண்ணிக்குள்ள தான் இருக்கும். அதனால ஐஸ் பாறைகள்னு சாதரணமா சொல்லிட முடியாது.
கப்பல் மோதுன வேகத்துல, hull ன்னு அழைக்கப்படுற கப்பலோட வெளிப்பகுதி, சுமார் 300 அடி நீளத்துக்கு உள்பக்கமா வளைஞ்சி தண்ணிய உள்ள விட ஆரம்பிச்சிருச்சி. இந்த அடியால டைட்டானிக்குல இருந்த மொத்தம் 16 வாட்டர் டைட் கம்பார்ட்மெண்ட்ல, 5 வாட்டர் டைட் கம்பார்ட்மெண்டுக்குள்ள தண்ணி உள்ள பூந்துருச்சி. கொஞ்சம் கொஞ்சமா தண்ணி உள்ள புகுந்து கப்பல் மூழ்க ஆரம்பிச்சிருச்சி.

மரண பயத்துல எல்லாரும் தத்தளிக்க, life boat மூலமா ஆட்களை காப்பாத்துற பணி ஆரம்பமாச்சு. டைட்டானிக்குல இருந்ததே மொத்தம் 20 life boat தான். அதுல மொத்தமா 1178 பேர் தான் போக முடியும். ஆனா கப்பல்ல பயணம் செஞ்சவங்க 2228 பேர். அவசர அவசரமா, பதட்டத்துல செயல்பட்டதால, பெரும்பாலன life boat ah போதுமான ஆட்கள ஏத்துறதுக்கு முன்னாலயே இறக்கிட்டாய்ங்க. அதுவும், முதல்ல குழந்தைகளையும், பெண்களையும் இறக்கி விட்டதால அந்த விபத்துல இறந்தது பெரும்பாலும் ஆண்கள் தான். பாருங்க சார் இந்த ஆம்பளைங்க எவ்வளவு பாவம்னு.

ராத்திரி 11.40 க்கு மோதுல கப்பல் கொஞ்சம் கொஞ்சமா 45 டிகிரி வாக்குல உள்ள இறங்க ஆரம்பிச்சி, ஒரு கட்டத்துல பின்னால இருக்க ப்ரொப்பெல்லர் எல்லாம் வெளில தெரியிற அளவு முன்பக்கம் தண்ணிக்குள்ள போய் பின்பக்கம் மேல தூக்கிட்டு வர ஆரம்பிச்சிருச்சி.  இப்டி சாய்ஞ்சாமாதிரி உள்ள இறங்கவும், பின்னால வெய்ட்டு தாங்காமா கப்பலோட நடுவுல விரிசல் விட்டு, சுமார் ஒரு 1.30 மணிக்க்கு ரெண்டு பாதியா உடைஞ்சி உள்ள போக ஆரம்பிச்சிருச்சி. 2228 பேர் பயணம் செஞ்சதுல 705 பேர மட்டுமே காப்பாத்த முடிஞ்சிது.

டைட்டானிக் உள்ள போன இடத்துல ஆழம் ரொம்பல்லாம் இல்லை. ஒரு மூணு கிலோமீட்டர் தான். ரெண்டா உடைஞ்ச டைட்டானிக் ஏப்ரல் 15 அதிகாலை மூணு மணிக்கெல்லாம், தண்ணிக்குள்ள பயணம் செஞ்சி, கடலோட தரையை அடைஞ்சிருச்சி. சுமார் 1500 பேர பலி கொடுத்ததுக்கு அப்புறம் தான் உலகத்துல கப்பல் துறைய சேந்த நிறைய பேர் முழிச்சாங்க. இனிமே இதுமாதிரி கொடூரங்கள் நடந்துடஉக்கூடாது எந்த கப்பலும் மூழ்கிடக்கூடாதுன்னு, 1914 ல ஒண்ணு கூடி நிறைய மாறுதல்களையும், சட்டங்களையும் கொண்டுவந்தாங்க. அதுதான் SOLAS (Safety of Life at Sea) ன்னு சொல்றாங்க. கப்பல் தயாரிக்கும் நிறுவனங்கள், அதுல பயணம் செய்யிற உயிர்களை காப்பத்துவதற்கான, சில குறைந்தபட்ச பாதுகாப்பு வசதிகளை ஏற்படுத்தியிருக்கனும்ங்குறது தான் அந்த SOLAS. அதன் பிறகு கட்டப்பட ஒவ்வொரு கப்பலும் இந்த SOLAS விதிகளுக்கு உட்பட்டே கட்டப்பட்டிருக்கனும்.



டைட்டானிக்கிலருந்து கத்துக்கிட்ட பாடத்திலிருந்து மாற்றப்பட்ட சில விதிகள் இதோ:

 1.  ஒரு கப்பல்ல எத்தனை பயணிகள் பயணம் செய்யிறாங்களோ, அத்தனை பேரயும் காப்பாற்ற தேவையான, life boat நிச்சயம் இருக்கனும். டைட்டானிக்குல இன்னும் கொஞ்சம் life boat இருந்திருந்தா நிச்சயம் இன்னும் சில பேரோட உயிர காப்பாத்திருக்கலாம். டைட்டானிக்க கட்டுனவிங்க Harland and Wolff, ங்குற கம்பெனி. அவிங்க டைட்டானிக்க கட்டிக்கிட்டு இருக்கும்போதே, கப்பலோட ஓனரான White star line கம்பெனிக்கிட்ட “Davit ங்குற பெரிய சைஸ் life boat ah யூஸ் பண்ணுங்க அதுல  நிறைய பேர் உக்காரலாம்”ன்னு ஒரு suggestion குடுத்துருக்காய்ங்க. ஆனா கப்பல் ஓனரான White star line அவிங்ககிட்ட ”நீ அந்த ஆனியெல்லாம் புடுங்க வேணாம். சாதா boat ah வச்சே குடு போதும்” ன்னு சொல்லி அவிங்க வாய அடைச்சிருக்காய்ங்க.

2.  அடுத்து கப்பலோட ரேடியோ கம்யூனிகேஷன 24 மணி நேரமும் இயங்க வைக்கனும். ஒரு வேளை பவர் சப்ளை பொய்ட்டா கூட off ஆகாத மாதிரி secondary power source ஒண்ணு வச்சிக்கனும்னு சட்டம் போட்டாங்க. அது மட்டும் இல்லாம, ஒரு கப்பல் பயணத்துல இருக்கும்போது, அதுக்கு அருகாமையில பயணிக்கிற மத்த கப்பல்கள் கூடவும், பக்கத்துல உள்ள ஹார்பர் கண்ட்ரோல் கூடவும் தொடர்ந்து தொடர்புல இருக்கனும்னு சட்டம் போட்டாங்க.

3. டைட்டனிக் மூழ்கிட்டு இருக்கும்போது, உதவி கேட்டு, கப்பல்லருந்து சிகப்பு கலர் ராக்கெட்டுங்கள வானத்துல வெடிச்சி சிக்னல் குடுத்துருக்காய்ங்க. அத பக்கத்து shore la இருக்க சில பேர் பாத்தும் இருந்துருகாய்ங்க. ஆனா அந்த ராக்கெட்ட எதுக்காக, வெடிச்சாய்ங்கன்னு அர்த்தம் புரியாததால யாரு ம் உதவிக்கு வரல. அதனால, அந்த சம்பவத்துக்கு பிறகு, கப்பலருந்து சிகப்பு கலர் ராக்கெட் வெடிக்கப்பட்டா, அது Emergency signal லுக்காக மட்டும்னு ஒரு standard practice ah கொண்டு வந்தாங்க.

4.  அப்புறம், கப்பலோட physical structure la சில டிசைன் மாற்றங்கள்லாம் செஞ்சாங்க. வழக்கமா கப்பலோட அடிப்பாகம் double bottom ன்னு சொல்லப்படுற இரண்டு ப்ளேட் கொண்டதா இருக்கும். அதாவது அடிப்பகுதில ஏதாவது ஓட்டை விழுந்துட்டா கூட கப்பலுக்கு எதுவும் ஆகாது, அந்த ரெண்டாவது plate கப்பல் தொடர்ந்து பயணம் செய்யிறதுக்கு உதவும். டைட்டானிக் சம்பவத்துக்கு அப்புறம், அந்த double bottom concept ah அடிப்பகுதிக்கு மட்டும் இல்லாம, கப்பலோட சைடுலயும் யூஸ் பண்ண ஆரம்பிச்சாங்க. அதாவது கப்பலோட side wall உம் ரெண்டு அடுக்கு கொண்டதா இருக்கும். ஒரு ப்ளேட் எதுலயாவது மோதி உடைஞ்சா கூட உள்ள இருக்க இன்னொரு ப்ளேட் தண்ணி உள்ள போகாம பாத்துக்கும்.  

5.  டைட்டானிக் மோதின உடனே உடைஞ்சதுக்கு, அதோட poor material selection உம் ஒரு காரணம். டைட்டானிக்கோட hull செய்யப்பட்ட மெட்டீரியலுக்கு low temperature la உடையிற தன்மை ரொம்ப அதிகமா இருந்துருக்கு. அதான் ஐஸ் பாறையில மோதுன உடனே படார்னு வாயப் பொளந்துருச்சி. So, அதுக்கப்புறம் material செலெக்‌ஷன்லயும் நிறைய மாறுதல்களைக் கொண்டுவந்தாய்ங்க.




தப்பிச்ச 705 பேரத்தவிற, மத்த எல்லாரும் கப்பலோட கடலுக்குள்ள முழ்கிட்டாங்க. சுமார் 73 வருசத்துக்கப்புறம், Robert D. Ballard ங்குற அமெரிக்க நேவி ஆஃபீசர் டைட்டானிக்க தேடுற வேலயில ஈடுபட்டாரு. ஒரு மனுஷனால தண்ணிக்குள்ள ஒரு அளவு ஆழத்துக்கு தான் போக முடியும். அதுக்கு மேல போனா அழுத்தம் அதிகமாகி வெடிச்சிருவோம். நீர்மூழ்கி கப்பல் கூட அதிகபட்சமா அரைகிலோமீட்டர் வரைக்கும் தான் தண்ணிக்குள்ள போகமுடியும். அதுக்கு மேல உள்ள போன மொத்த கப்பலும் வெடிச்சிரும். அப்படியிருக்க, டைட்டானிக்க ரொம்ப ஆழத்துல போய் தேட ஒரு advanced under water robot தேவைப்பட்டுச்சி. ஆனா அதோட விலை அதிகமா இருந்தாதால முதல்ல அரசாங்கம் அத வாங்க சம்மதிக்கல.

ஆனா அந்த சமயம் நேவிய சேந்த ரெண்டு நீர்மூழ்கி கப்பல்கள் உடைஞ்சி காணாம போயிட, அதக் கண்டுபுடிக்க அந்த robot ah வாங்குனாங்க. நம்ம Balllard அந்த ரெண்டு நீர்முழ்கி கப்பலோட part ah யும் கண்டுபுடிச்சி குடுத்தப்புறம் அந்த ரோபோட்ட டைட்டனிக்க தேட உபயோகிச்சிக்கிட்டாரு.


1985 செப்டெம்பர் மாசம், அந்த ரோபோட் கடலுக்கு அடியில 2.5 கிலோமீட்டர் தூரத்துல உடைஞ்சி போன சில கப்பலோட பாகங்களை கண்டுபுடிச்சிது. அப்புறம் அதை ஆராய்ச்சி செஞ்சதுல அது தான் டைட்டானிக்கோட parts ன்னு confirm பண்ணாங்க. டைட்டானிக்கோட முன் பகுதியும், ப்ரொப்பெல்லர் உள்ள பின்பகுதியும் கிட்டத்தட்ட அரைகிலோ மீட்டர் இடைவெளியில கிடந்துச்சு. அதுக்கப்புறம் தான் டைட்டானிக் இரண்டு பாதியா உடஞ்சி தான் உள்ள போயிருக்குன்னு முழுசா ஊர்ஜிதம் பன்னிக்கிட்டாங்க.


நாம தமிழ்ப்புத்தாண்டா கொண்டாடுற ஏப்ரல் 14ம் தேதியிலதான் டைட்டானிக்குல பயணம் செஞ்ச 1503 பேர், உறையில குளிர்ல தண்ணியில மூழ்கி இறந்து போனாங்கங்குறத கொஞ்சம் ஞாபகம் வச்சிப்போம். 


Monday, March 2, 2015

PREDESTINATION – எங்கருந்துடா கிளம்புறீங்க?!!!


Share/Bookmark
நிறைய முறை சில ஆங்கிலப் படங்களைப் பாத்து ”என்னடா இவிங்க இப்டி இருக்காய்ங்க…” ன்னு வாயப் பொளந்ததுண்டு. பிரம்மாண்டம்ங்குறது ஒரு பக்கம் இருந்தாலும் இப்படியெல்லாம் கூட யோசிக்கமுடியுமான்னு யோசிக்க வச்ச படங்களே நிறைய இருக்கு. அந்த வகையில, டைம் ட்ராவலைப் பற்றிய படங்களுக்கு முக்கியமான பங்கு இருக்கு. நேத்து நைட்டு என்னோட தூக்கத்த கெடுத்த ஒரு டைம் ட்ரவால் பற்றிய ஒரு படம்தான் இந்த Predestination.

முதல்லை இந்தப் படத்தைப் பற்றி விளக்க வேண்டுமேயானால் தசாவதாரம் ஸ்டைல்ல சில நூற்றாண்டுகள் பின்னோக்கி செல்வது அவசியமாகிறது. ஆங்கிலப்படங்கள்ல ஊறிக்கிடக்குறவங்க இங்கு ஏராளாம். அதனால சிலருக்கு என்னடா இந்தப் இவன் இப்பதான் இங்கயே வர்றானான்னு இந்த பதிவ படிக்கும்போது சிரிப்பு கூட சிரிப்பு வரலாம். எதோ நமக்கு எட்டுனது வரைக்கும் எழுதுவோம்.

2009 ல Moon ன்னு ஆங்கிலப்படம் வந்துச்சி. ஒரே ஒருத்தர் மட்டும் நடிச்ச படம். லூனார் இண்டஸ்ட்ரிஸ்ங்குற கம்பெனி மூலமா, நிலவுல இருக்க பவர் ரியாக்டரோட operations எல்லாத்தையும் தனியா கவனிச்சிக்குற வேலையில ஒருத்தர், நிலவுல தங்கி இருப்பாரு. மூணு வருஷ காண்ட்ராக்ட் முடிஞ்சி இன்னும் ரெண்டு வாரத்துல பூமிக்கு கிளம்புறதுக்காக காத்திருப்பாரு. மனைவி மற்றும் குழந்தையப் பாக்கப்போற சந்தோஷத்துல அவங்க வீடியோ, அவங்க பேசுன ஆடியோ எல்லாத்தையும் போட்டு கேட்டுக்கிட்டு ஹாப்பியா இருப்பாரு. அங்க அவருக்கு துணைன்னு பாத்தா ஒரே ஒரு பேசுற மிஷின் மட்டும் தான். ஒருநாள் ஒரு ரியாக்டர்ல எதோ ப்ரச்சனைன்னு வண்டிய எடுத்துட்டு போறவரு அங்க ஒரு விபத்துல மாட்டிக்கிறாரு.

கட் பன்னி ஓப்பன் பன்னா பெட்ல படுத்துருக்காரு. அந்த மெஷின் அவர் கிட்ட “ஒரு சின்ன மயக்கம் போட்டு விழுந்துட்டீங்க.. வேற ஒண்ணும் இல்லை”ன்னு சொல்லுது. இவர் கொஞ்சம் நார்மல் ஆகி திரும்ப அந்த ரியக்டர் பக்கம் போகும்போது, யாரோ ஒருத்தர் அங்க கார்ல மாட்டிக்கிட்டு இருக்கது தெரியிது. யாருன்னு பாத்தா, அங்க ஆக்ஸிடெண்ட்ல மாட்டியிருக்கதும் அவரே. அவர காப்பத்தி ட்ரீட்மெண்ட் குடுக்குறாரு. 


பின்னால அவங்களுக்குள்ளயே யார் ஒரிஜினல்ங்குற பிரச்சனை வர, அப்புறம் தான் தெரியிது அவங்கள மாதிரியே பல க்ளோனிங்க் உடல்கள் அந்த ஸ்பேஸ் ஸ்டேஷன்ல இருக்கது. யாராவது ஒருத்தர் இறந்துட்டா, அந்த பேசுற மிஷின் ஆட்டோமேட்டிக்கா அடுத்த க்ளோன ஆக்டிவேட் பன்னி வேலைய பாக்க வச்சிடும். கடைசில அந்த ஸ்பேஸ் ஸ்டேஷன்லருந்து எப்படி அவர் தப்பிச்சி வீட்டுக்கு வர்றாரு, வர்றவருக்கு ஊர்ல என்ன சர்ப்ரைஸ் காத்துருக்க்குங்குறது தான் அந்தப் படம். இந்தப் படத்தோட அப்பட்டமான காப்பிதான் 2013 la டாம் க்ரூஸ் நடிச்சி வந்த Oblivion. என்ன இது கொஞ்சம் ஹைடெக்கா எடுத்துருப்பாய்ங்க.

அடுத்து 2000 ல வந்த Frequency ங்குற ஒரு படத்த பத்தி கொஞ்சம் பாக்கலாம். 1999 ல ஒரு கொலைகேஸ கண்டுபுடிக்க முடியாம கஷ்டப்படுறாரு ஒரு டிடெக்டிவ். அதுக்கு parallel ah முப்பது வருஷத்துக்கு முன்னால 1960s இருக்க ஒரு அப்பா, பையனோட ட்ராக்கும் ஓடுது. அந்த அப்பா ஒரு fire fighter. பையன் ஸ்கூல் படிச்சிட்டு இருப்பான். திடீர்ன்னு ஒருநாள் அந்த அப்பா ஒரு ரேடியோவுல எதோ ட்யூன் பன்னும்போது யாரோ ஒரு ஆள் பேசுறாங்க. யாருன்னு அவரு விசாரிக்கும்போது தான் தெரியிது, பேசுறது 1999 ல இருக்க அந்த டிடெக்டிவ்னு. அந்த டெடிக்டிவ் வேற யாரும் இல்லை அவரோட சொந்த பையன் தான்.


30 வருஷத்துக்கு அப்புறம் இருக்க அவரோட பையனோட, தினமும் 1969 ல இருக்க அப்பா பேசிட்டு இருப்பாரு. இப்படி அந்த ரேடியோவுல பேசி, பேசி 1969 ல இருக்க அப்பாவோட உதவியால அந்த சீரியல் கில்லர கண்டுபுடிக்கிறாரு டிடெக்டிவ். நா இந்தக் கதையை செம்ம மொக்கையா சொல்லிருக்கேன். ஆனா உண்மையிலயே படம் செமையா இருக்கும். அப்பாவுக்கு 1969 ல கிடைச்ச ஒரு எவிடென்ஸ 1999 ல இருக்க பையனுக்கு குடுக்கனும். எப்படி குடுக்குறது. அதுக்கு ஒரு சீன் வச்சிருப்பாய்ங்க பாருங்க செம.

அடுத்து 2012 ல வந்த looper ன்னு ஒரு படம். டைம் ட்ராவல் கான்செப்ட செம எஃபெக்டிவ்வா யூஸ் பன்னி வெளிவந்த ஒரு செம்மை படம். அந்த படத்த பாத்துட்டு நாட்டாமை பட கவுண்டமணி மாதிரி “நா ஒரு செம படம் பாத்துட்டேண்டோய்… அந்தக் கதைய நா இப்ப யார்கிட்டயாவது சொல்ல வேணும் டோய்.. அத சொல்லலன்னா என் மண்டை வெடிச்சி போயிரும்டோய்” ங்குற ரேஞ்சில அலைஞ்சேன். அந்தக் கதைய அடுத்தவங்ககிட்ட சொல்லவே எனக்கு அவ்வளவு புடிக்கும். உங்களுக்கு ஒருக்கா சொல்றேன். வெறிக்காதீங்க. நா சொல்லப்போறது படத்தோட முதல் பத்து நிமிஷ கதையத் தான்.

2075 ல டைம் ட்ராவல் மிஷின் கண்டுபுடிப்பாய்ங்க. 2075 ல யாரையாவது படக்குன்னு கொன்னுட்டா, அங்க பாடிய டிஸ்போஸ் பன்றது ரொம்ப கஷ்டமாயிடும். அதனால இந்த கேங்ஸ்டர்களெல்லாம், யார் யாரை கொல்லனுமோ, அவங்களையெல்லாம் அந்த டைம் மிஷின்ல 2044 க்கு அனுப்பிருவாங்க. 2044 ல இருக்க loopers ங்குற paid killers அவிங்கள கொன்னு பாடிய டிஸ்போஸ் பன்னிடுவாங்க. இந்த loopers குரூப்புக்கு head, 2075 லருந்து 2044க்கு வந்த ஒருத்தன்.   டைம் மிஷின் 2075 கண்டுபிடிச்சதால, 2075 லருந்து 2044 க்கு ஆளுங்க வர முடியும். ஆனா 2044 ல டைம் மிஷின் கண்டுபுடிக்காததால இங்கருந்து யாரும் அங்க போக முடியாது.


2044 ல இருக்கவிங்களுக்கு யாரை கொல்லப்போறோம்னு தெரியாது. முகத்த மூடி தான் அனுப்புவாய்ங்க. கொன்னதுக்கு அப்புறம் செத்தவன் முதுகுக்கு பின்னால சில்வர் பார் இருக்கும். அதான் இந்த loopers க்கு சம்பளம். சில சமயம், செத்தவனுக்கு பின்னால சில்வர் பிஸ்கெட்டுக்கு பதிலா தங்க பிஸ்கெட் இருந்தா சேகர் செத்துட்டான்னு அர்த்தம். அவனை அவனே கொன்னுட்டான்னு அர்த்தம். அதாவது 2044 ல இருக்க looper, அவனோட 2075 ல இருக்க உடலை கொன்னுட்டான்னு அர்த்தம். அப்டி நடந்தா loop closed ன்னு சொல்லுவாய்ங்க.

உடனே அவன சங்கத்துலருந்து விடுவிச்சி, அந்த தங்ககட்டியெல்லாம் எடுத்துக்கிட்டு மிச்சம் இருக்க காலத்த ஜாலியா இருக்க சொல்லிருவாய்ங்க. சப்போஸ், அவனோட loop ah கொல்லாம தப்பிக்க விட்டுட்டா, அந்த loopers குரூப்புல உள்ளவிங்க ரெண்டு பேரையும் கொன்றுவாய்ங்க. இதான் படத்தோட முதல் பத்து நிமிஷம். இப்போ ஹீரோ அவனோட loop ah சுடும்போது, 2075 லருந்து வந்த அவனோட லூப் எஸ்கேக் ஆயிருது. ஏன் எஸ்கேப் ஆகுது. ரெண்டு பேரும் எப்படி எஸ் ஆவுறானுங்கன்னு நாம மூக்குல விரல் வைக்கிற மாதிரி சொல்ற படம் தான் இந்த Looper.


இப்போ வர்றோம் நம்ம மெயின் பிக்சருக்கு. இந்த looper ah எல்லாம் தூக்கி சாப்புடுற மாதிரி வந்துருக்க படம் தான் இந்த Predestination. தேடினேன் வந்தது படத்துல கவுண்டர் ஒரு வசனம் சொல்லுவாரு “இவரு பையன் என் பையன் மாதிரி.. என் பையன் இவுரு பையன் மாதிரி… நானே இவருக்கு பையன் மாதிரி… இவரே எனக்கு பையன் மாதிரி” ன்னு. இந்தக் காமெடிய ஆஸ்திரேலியாவுல எவனோ ஒருத்தன் பாத்துட்டு, அத ஒன் லைனா வச்சி எடுத்த படம் தான் இந்த predestination. மொதல்ல கவுண்டர்கிட்ட சொல்லி அவிங்க மேல கேஸ் போட சொல்லனும்.

சத்தியமா இந்த படத்த பாத்துட்டு நைட்டு ரொம்ப நேரம் தூக்கமே வரல. “யார்ரா நீங்க.. எங்க உக்காந்துடா யோசிக்கிறீங்க”ன்னு நினைச்சிட்டே படுத்துருந்தேன். Looper eh ஒரு ரேஞ்சுன்னா, இது அதுக்கும் மேல. பின்னி பெடலெடுத்துருக்காய்ங்க. முதல் நாப்பது நிமிஷம் எதோ நார்மலா போற மாதிரி தான் இருக்கும். ஆனா அப்புறம் குடுக்குறாய்ங்க பாருங்க சர்ப்ரைஸூ.. மிரட்டல்.

மேல சொல்லிருக்க Frequency, Looper படங்களைப் பாக்காதவங்க அதப் பாத்துட்டு அப்புறம் இந்த predestination ah பாத்தா நல்லது. இல்லைன்னு மொதல்ல இதப் பாத்துட்டு அந்தப் படங்களை பாத்தா, “த்தூ.. இவ்ளோதானா” ன்னு அந்தப் படங்கள் மேல மதிப்பு கம்மி ஆயிடும். மொதல்ல சொல்லியிருக்க MOON படம் டைம் ட்ராவல் பற்றிய கதை இல்லை. ஆனா அதுக்கும் இந்த predestination க்கும் ஒரு சின்ன ரிலேஷன் இருக்கு அதான் கொஞ்சம் உள்ள இழுத்துப் போட்டேன்.


சர்ப்ரைஸ் உங்களுக்கு ரொம்ப பிடிக்கும்னா கண்டிப்பா இந்த படத்த மிஸ் பண்ணாம பாருங்க. மிரண்டுருவீங்க.. எனக்கு இந்த படத்த suggest பன்ன, நண்பர் கரிகாலன் அன்பரசுக்கு நன்றிகள் பற்பல. 


LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...